இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 30-03-2024

Total Views: 19828

பகுதி 12 

விசுவநாதன் நந்தனா திருமணம் கோலாகலமாக நடந்தது. மகளின் திருமணத்தில் குறை வந்துவிட கூடாது என்று கவனமாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருந்தார் கோவர்தனம்.

பம்பரமாக சுழன்ற மீனாவை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டு இருந்தனர் அபிராமியும் அவர் அண்ணன் மனைவியும்.

"நான் தான் அன்னைக்கே சொன்னேனே. மீனா நல்ல பொண்ணு அப்படினு. இப்போ பாருங்க நீங்க நிம்மதியா இருக்கீங்க அவளே எல்லாம் பார்த்துக்குறா."

"அப்படியா சொல்றீங்க?"

"அண்ணி ஒரு குடும்பம் உடையாம இருக்க வர்ற மருமக அதுலயும் மூத்த மருமக எல்லாரையும் அரவணைச்சு போகணும். மீனா அதுல கில்லாடியா இருக்கா. மத்தவங்க பங்கும் இருக்கு அப்படினாலும் குடும்பத்துல ஒருத்தர் ரெண்டு பேராவது மீனா மாதிரி இருந்தா பிரச்சனைகள் கம்மியா இருக்கும். வாழ்க்கையும் நிம்மதியா இருக்கும். உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன? நீங்க மீனாவை அமரனுக்கு கட்டலைனா நானே நரேனுக்கு கட்டியிருபேன். அதுவும் அவங்க அம்மாவும் இல்லை அப்படினதும் எனக்கு ரொம்பவே ஆசையா தான் இருந்துது இப்படி ஒரு பொறுப்பான மருமக வேணும் அப்படினு. ஆனா சட்டுனு முடிச்சுட்டிங்க." என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.

"ஏன் அண்ணி அப்படி சொல்றீங்க? உங்க மருமக நல்லா படிச்சு அழகா இருக்கா. அவளுக்கு அம்மா வீடும் பெரிய இடம் நல்லா செஞ்சாங்களே." புரியாமல் கேட்டார் அபிராமி.

"எல்லாம் இருந்தும் மனசு இல்லையே அண்ணி. எங்களையெல்லாம் இப்போவே பாரமா பாக்குறா. இன்னும் வயசாகி அவங்களை சார்ந்து நாங்க வாழணும்னு நினைச்சா பயமா இருக்கும். நான் இவர் கிட்ட சொல்லிட்டு இருக்கேன். முதியோர் இல்லம் மாதிரி இல்லாம இப்போ வயசானவங்க குடியிருப்பு மாதிரி வருதே. அதுல எதுலயாவது ஒரு வீடு வாங்கிட்டு போய்டலாம்னு. கடைசி காலத்துல மரியாதையாவது மிஞ்சும்."

"அப்படி எல்லாம் இல்லை அண்ணி. உங்கள அப்படி நாங்க விட்டுருவோமா?"

"அம்மா அங்க உன்னை அப்பா தேடிட்டு இருக்கார்." தேவா வந்து அழைக்கவும் வேலையை பார்க்க சென்றனர் இருவரும். ஆனால் அண்ணி சொன்ன வார்த்தைகள் அபிராமியின் மனதில் ஓடிக் கொண்டே இருந்தன.

மருமகள்கள் விஷயத்தில் மீனாவும் சரி பார்கவியும் சரி அப்படி இல்லை. நந்தனாவும் அப்படி இருப்பாள் என்று தோன்றவில்லை. இன்று பெண்ணும் மாப்பிள்ளையும் வந்ததும் மூன்று ஜோடிகளுக்கும் முதியவர் யாரையாவது வைத்து சுற்றி போட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். ஊர் கண் அத்தனையும் அவர் குடும்பத்தின் மீது இருப்பது போல தோன்றியது. இத்தனை சந்தோஷமும் நிம்மதியும் ஏதோ ஒரு பெரிய புயலுக்கு முன்னோடி போலவும் இருந்தது அபிராமிக்கு.

************

விசு நந்தனா திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. நந்தனா ஒரு வார விடுமுறைக்கு தாய் வீடு வந்திருந்தாள்.

"நந்து உன் கிட்ட நான் என்ன சொன்னேன்? வாரா வாரம் இப்படி இங்கே வந்து போக சொன்னேனே? இப்போ தான் நீ வந்து இருக்கே." குறை படித்தார் அவள் பாட்டி அம்பிகா.

"என்ன பாட்டி செய்ய? அங்க கூட்டு குடும்பம். வார நாளுல வேலைக்கு போறதுல யாரோடவும் பேச முடியறது இல்லை. சனி ஞாயிறு தான் கிடைக்குது. அதுவும் இல்லாம விருந்து வேற நிறைய போக வேண்டியது இருந்துது. விசுவும் என் கூட இருக்க ஆசை படுவான் இல்லையா? நாங்க சரியா பேசிக்குறதே ஞாயிற்றுக்கிழமை தான்."

"அதனால என்ன நீ வரும் போது மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வந்திடு. இங்க உங்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. நிம்மதியா இருக்கலாம்." என்று தாய் ராஜேஸ்வரி சொன்னார்.

"அங்க எனக்கு என்ன இடைஞ்சல் இருக்கு?" புருவத்தை தூக்கியபடி நேர் பார்வையுடன் கேட்டாள் நந்தனா. அவளுக்கு அவள் தாய் சொல்ல வருவது புரிந்தது. ஆனால் இது போன்ற பேச்சுகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிப்படையாகவே கேட்டாள்.

"இல்லை கண்ணம்மா. நீ இங்கே தனியாக இருந்து பழகியவன். அங்கே எல்லோரோடும் உனக்கு ஒத்து போகுதோ இல்லையோ என்ற கவலையில் தான்...." தயக்கத்துடன் இழுத்தார் ராஜேஸ்வரி. குழந்தை தனமாக இருந்தாலும் நந்தனா படு சூட்டிகை. சரி இல்லை என்று பட்டால் தாயாக இருந்தாலும் யோசிக்காமல் திட்டி விடுவாள்.

"எனக்கு ஒத்து போகவில்லை என்று நான் சொல்லவே இல்லையே?" கூர்மையாக வந்தது அடுத்த கேள்வி.

"உன் அம்மா உன் நல்லதுக்கு தானே பேசுகிறாள். இதோ பார். ஒரே ஊரில் இருக்கும் அம்மா வீடு வரவே உனக்கு ஒரு மாதம் ஆகிறது. அதற்கு கூட உனக்கு அங்கே சுதந்திரம் இல்லையே. அதனால் தான் உன் சந்தோஷத்தை மனதில் வைத்து தான் அம்மா பேசுகிறாள். அவளை வாட்டாதே." கண்டித்தார் அம்பிகா.

"அங்கே எனக்கு சுதந்திரம் இல்லை என்று நான் சொன்னேனா? இங்கே வர வேண்டாம் என்று யாரும் என்னை சொல்லவில்லை. எனக்கு எப்போது என்ன செய்ய தோணுதோ அதை செய்யும் சுதந்திரம் அங்கே எனக்கு நிறையவே இருக்கு. நீங்களா எதையாவது கற்பனை செஞ்சுக்காதீங்க." 

"சரி சரி விடு நந்து. நாம வேற பேசலாம். ஆமாம் உன் சம்பளத்துல நகை சீட்டு கட்டி கல்யாணத்துக்கு நகை எடுத்தியே அதை திரும்பவும் ஆரம்பிச்சியா?" என்று வேறு பேச முயன்றார் ராஜேஸ்வரி.

"இல்லை மா இனிமே நகை சீட்டு கட்ட போறது இல்லை. அது..." என்று நந்தனா வேறு சொல்லும் முன் "ஏன்? சம்பளத்தை அப்படியே உங்க மாமியார் கிட்ட கொடுத்திட்டியா? அதானே பார்த்தேன்." என்று நொடித்தார் அம்பிகா.


"ப்ச் நீங்களா கற்பனை செஞ்சு பேசுறதை நிறுத்துறீங்களா? எந்த காலத்துல இருக்கீங்க? அதுவும் இல்லாம அவங்கள என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க?" பொரிய ஆரம்பித்தாள் நந்தனா.

"நந்து கொஞ்சம் பொறுமையா பேசு. நீ ஏமாந்து நிக்க கூடாதுனு தான் பாட்டி சொல்றாங்க."

"யாருமா ஏமாத்தினது?" கோபம் அடங்காமல் கேட்டாள் நந்தனா.

"அப்படி இல்லைம்மா. கூட்டு குடும்பத்துல வரவு எல்லாம் பொதுவுல வச்சு அதுல இருந்து தானே செய்வாங்க? நீ உன் சம்பளம் மொத்தத்தையும் கொடுத்துட்டா உனக்கான சேமிப்பு இருக்காதேன்னு சொன்னேன். அதுக்கு பாய்ஞ்சிக்கிட்டு வர?" அங்கலாய்த்தார் அம்பிகா.

"நீங்க சொல்றது இங்க நடக்கலை. செலவு மொத்தமும் கடையில இருந்து வர்ற காசுல தான். விசு சொன்னான். தேவா மச்சான் கல்யாணம் முடிஞ்ச உடனே தன் பங்குக்கு ஒரு தொகை தர்றதா சொன்னாராம். அப்போவே மாமாவும் அமர் மச்சானும் வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். எப்படியும் கடை குடும்ப சொத்து. அதுல இவங்க ரெண்டு பேரும் வரலைனா அவங்களுக்கான பங்கை கொடுத்து தானே அமர் மச்சான் அதை எடுத்துக்க முடியும். அதனால அதுக்கு பதிலா கடை வருமானத்துல வீட்டு செலவு எல்லாம் இருக்கட்டும்னு சொல்லிட்டாங்களாம். எங்களோட தனிப்பட்ட செலவு மட்டும் தான் எங்க சம்பளத்துல இருந்து செய்யறோம். நான் நகை சீட்டு கட்டுறதை நிறுத்தினத்துக்கு காரணம் விசு ஒரு இடம் வாங்க காசு சேர்த்துக்கிட்டு வரான். இப்போதைக்கு எனக்கு நகை எதுவும் எடுக்க வேண்டியதும் இல்லை. அதனால நானும் அந்த சேமிப்புல பங்கு எடுத்துக்குரேன். ரெண்டு பேரா சேர்த்தா சீக்கிரமா சேர்க்கலாம்ல. உடனே அவன் பேருலயா அப்படினு ஆரம்பிக்காதீங்க. அவன் மட்டுமே சேர்த்துக்கிட்டு இருந்தப்போ கூட எங்க ரெண்டு பேர் பேருலயும் தான் வாங்குறதா இருந்தான். போதுமா?" பட பட வென்று பேசிவிட்டு முகம் திருப்பி உட்கார்ந்துகொண்டாள் நந்தனா.

அம்பிகாவும் ராஜேஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் நினைத்தது போல இல்லை இந்த குடும்பம். அப்படியானால் நந்தனா விசுவை இங்கே அழைத்து வந்து இவர்களோடு வைத்துக் கொள்வது நடக்காது போலவே!!!!


Leave a comment


Comments


Related Post