இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 30-03-2024

Total Views: 26397

அனைவருக்கும் வணக்கம்,


பாவையின் ரகசியம் கதையின் முதல் அத்தியாயம் இதோ 👇



திருமணம் என்ற பந்தத்தில் ஒன்றாக இரு உள்ளங்கள் இணைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ சபதம் செய்கின்றனர். நாட்கள் கடக்க ஒன்றாக வாழும் இரு நெஞ்சங்களும் அன்பால் பிணைக்கப்பட்டு பொன்னான தருணமாக மாறுகிறது.

காதலோடு வாழ்ந்த நாட்கள் அனைத்திற்கும் அடித்தளமாக மாறி புதிய அத்தியாத்தை தொடங்கப் போகிறது தான் திருமணம் என்ற பந்தம்.

கடல் அலையைப் போன்று சக்தி வாய்ந்ததாகவும், வானத்தை போன்று எல்லையற்றதாகவும் இருக்கும் திருமணம் மாயை என்றானால் பின் என்னாகும் ?

தெர்மாக்கோல் பஞ்சால் வர்ணங்களில் எழுதிய ரகுநந்தன் வெட்ஸ் அஞ்சனா என்ற பெயர் மலர்களைச் சுற்றி அலங்கரித்து அனைவரையும் வரவேற்றது. காதலர்களாகிய இருவரும் இப்போது மணவறைக் கண்ட தம்பதிகளாக மாறினர்.

மண்டபவம் முழுவதும் ஆட்கள் நிரம்பி வழிய. அனைவருமே ரகுநந்தனின் சொந்தமாக இருந்தனர். வாசலில் அவனின் பெற்றவர்கள் நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

தம்பதிகளாக புன்னகை முகமோடு மனோகரியும், வாசுதேவனும் நின்றிருந்தனர். சற்று உள்ளே தள்ளி சந்தனம், குங்குமம் தட்டில் இருக்க பன்னீர் தெளிப்பனோடு இளநகை பூத்து வரவேற்றாள் ரகுநந்தனின் தங்கை தீப்தி.


இவர்களின் வரவேற்ப்பை மனதார ஏற்று உள்ளே வந்தால் பட்டு வேஷ்டி சட்டையில் காவல் அதிகாரி என்ற பகட்டே இல்லாது இன்முகமாக வரவேற்று இருக்கைப் பார்த்து அமர வைத்தான் ரகுநந்தனின் அண்ணன் நிதின்.

மணமேடையில் நடுவில் அமர்ந்திருந்த ஐயர் தன் முன்னிருந்த ஹோமகுண்டத்தை தயாரித்து நெருப்பினை மூட்டிக் கொண்டிருக்க, அவருக்கு என்னென்ன தேவையெனக் கேட்டு அதனைச் செய்தாள் நிதினின் மனைவி கவிநயா.

நேரம் சென்று நல்ல நேரமும் நெருங்க, சுற்றார், உற்றார், நெருங்கிய உறவினர் என்று அனைவருமே வந்து விட்டனர்.

“மாப்பிள்ளையும், பொண்ணையும் அழைச்சிட்டு வாங்கோ “ ஐயர் கூற, சரியெனக் கூறி நிதின், கவிநயா இருவருமே மாடி நோக்கிச் சென்றனர்.

மணமகன் அறைக்குள் நிதின் நுழைய அங்கே பட்டு வேஷ்டி சட்டையில் நண்பர்களின் கேலி, கிண்டலோடுப் புன்னகை முகமாக அமர்ந்திருந்தான் ரகுநந்தன்.

அவனின் அந்த புன்னகைக்கு முழுக் காரணமும் அவன் உயிரான காதலி அஞ்சனா தான். ஒரு காலத்தில் காதல் என்ற வார்த்தையை கண்டாலே கசந்து தூசி தட்டிச் சென்றவனுக்கு இன்று காதல் திருமணம். காரிகையவளோ மாற்றி விட முழுமையாக மாறியும் விட்டான் காளையவன்.

“டேய் கிளம்பிட்டியா ?” உள்ளே வந்த நிதின் கேட்க, அண்ணனைக் கண்டு எழுந்து நின்றான்.


“மாலையைப் போட்டு விடுங்கடா. கீழே ஐயர் கூப்பிடுறாடு “ என்க, அங்கே இருந்த மணமாலையை எடுத்து மாப்பிள்ளையான நந்தன் கழுத்தில் போட்டு விட்டனர்.

பின் அவனை அழைத்துக் கொண்டு வெளியேற அதே நேரம் இங்கே மணமகளை அழைக்க உள்ளே வந்தாள் கவிநயா.

மணப்பெண்ணாய் தயாராக அஞ்சனா காத்திருந்தாலும் அவனின் மனம் முழுவதும் தகிக்க நெஞ்சமோ வலித்தது. உடனிருந்து இதுவரைப் பேசிக் கொண்டிருந்த குட்டிப் பெண்ணான சின்மயி வார்த்தைகள் கூட அவளுக்குள் இறங்கவில்லை.

காதலவனோடு இன்று திருமணமே என்றாலும் முழுமையாக மனதால் ஏற்க முடியவில்லை. நிகாரிக்க முடியாத இக்கட்டில் தான் அவளின் நெஞ்சம் சஞ்சலம் கொண்டு குழம்பியது. தன் வாழ்க்கையை இந்த விதி சரியானப் பாதையில் தான் கொண்டு செல்கிறதா ?


“அஞ்சனா “ தான் உள்ளே வந்தது கூட தெரியாது அப்படியே கண்ணாடியில் வெறிக்கப் பார்த்தவாறு இருந்தவளின் முதுகில் கரம் வைத்து குலுக்கினாள்.

அதன் பின்னே நிதானத்திற்கு வந்து திரும்பி நிமிர, “என்னாச்சு  அஞ்சனா ? என்ன யோசிக்கிற ? நான் கூப்பிட்டே வந்தது கூட உனக்கு தெரியல.” என்று சகோதிரி ஆகப் போறவளிடம் கேட்டாள்.

“ஒன்னுமில்லைக்கா “ வெளிவரத் துடித்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள,

“உனக்கு யாருமே இல்லைன்னு தானே நினைக்கிற ? ஒரு பொண்ணோட மனசை புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லை அஞ்சனா. கவலைப்படாதே எல்லாமே சரியாகிரும். இனி உனக்கு வர்ற போற இந்த புது உறவை என்னைக்கும் நீ இழக்க கூடாது. நிரந்திரமா வச்சிக்கணும். நீ இத்தனை நாள் பட்ட ஏக்கங்கள் எல்லாத்தையும் இனிமே ஆத்திக்கோ “ என்று அவளின் மெல்லியக் கரங்களை பற்றி ஆறுதலாய் கூறினாள்.

வெற்றுப் புன்னகை ஒன்றை வீசியவளுக்கு தனக்கு ஆறுதல் சொல்லிய கவிநயாவின் மனம் புரிய, மெல்ல அவளை அணைத்துக் கொண்டாள்.

“சாரிக்கா “ என்க,

புரியாது குழம்பியவளோ மெல்ல விலகி மங்கையின் முகம் பார்த்து, “எதுக்கு அஞ்சனா என் கிட்ட சாரி கேட்குற ?” என்றாள்.

“கேட்கணும் தோணுச்சி அதான் “

“எதையும் நினைக்காதே. உனக்காக உன் காதலன் சாரி !சாரி ! இனி உன் கணவன் காத்துக்கிட்டு இருக்கான். வா போகலாம் “ எனக் கூறி அழைத்துச் செல்ல, அவர்களோடு ஆடிக் கொண்டே மகிழ்வோடுச் சென்றாள் நிதின் மற்றும் கவிநயாவின் செல்ல புதல்வி சின்மயி.

முதலில் வந்து மணமேடையில் அமர்ந்த நந்தன் தன் மனையாளுக்காக காத்திருக்க, மாடியிலிருந்து இறங்கி வந்தாள் அஞ்சனா. அங்கிருந்த அனைவரும் பார்வையும் அஞ்சனாவை தான் தீண்டியது.

ஜரிகை பட்டுடுத்தி குனிந்த தலை நிமிராமல், வெட்கத்தால் முகம் சிவக்க, அந்த வெட்கத்தில் சொர்க்கத்தைக் கண்டான் நந்தன்.

மற்றவர்களோ அவளின் வதனத்தின் அழகினையும், அலங்காரத்தையும் காண, நந்தனோ நடைபயிலும் குழந்தையென எட்டு வைத்து நடப்பவளின் கொலுசொலி சத்தம் முதல் அவளின் நெற்றியில் முத்தாய் தொங்கிய நெத்திசூடி வரை காதலோடுக் கண்டான்.

மணமேடை ஏறி நிமிர்ந்து அனைவரையும் கண்டு கரம் குவித்து வணங்கி, தன்னவனின் அருகில் வந்து அமர்ந்தாள்.

படபடக்கும் இதயத்தோடு நந்தன் இருக்க, குற்றவுணர்வோடு தலை குனிந்தே தன்னவனைக் கூட காணாது அமர்ந்திருந்தாள் அஞ்சனா.


‘திருமணம் பந்தம் என்றால் என்ன ?’  என்று மந்திரம் மூலம் இருவருக்கும் உணர்த்தி அவர்களையும் அதனைக் கூற வைத்து நெருப்பின் முன் அக்னிபகவானிடம் சத்தியம் பெற்றுக் கொண்டனர்.

அனைவரிடம் சென்று ஆசிர்வாதம் பெற்று வந்த மஞ்சள்வேர்தனில் மின்னும் பொன் தாலியை எடுத்து நந்தனின் கரங்களில் கொடுத்தார் ஐயர்.


“கெட்டிமேளம் ! கெட்டிமேளம் !” என்க, இன்னிசை வாத்தியங்கள் ஒலிக்க, தேவலோகத்தில் வாழும் முக்கோடி தேவர்களும் ஆசிர்வதிக்கத் தயாராகினர்.

“கடவுளை வேண்டிக்கிட்டு தாலியைக் கட்டுங்கோ “ ஐயர் கூற, நிமிர்ந்து தன்னவனின் முகம் கண்டாள்.

அவனின் அந்த புன்னகையைக் கண்டவாறு விழிகள் இரண்டையும் மூடி இந்த ஜென்மத்தில் முதலும் கடைசியுமாக நடக்க கூடிய இந்த உறவினை ஏற்க, தனக்கு கடவுளாக இருப்பவர்களை நினைத்துக் கொண்டாள்.

அடுத்த நொடி அவளின் நெஞ்சம் எனும் மஞ்சத்தில் சுகமாய் வந்து காதலில் அடையாளமாக வலுப்பெற்ற உறவாக வந்து உரசியது.

அனைவரும் அர்ச்சதை தூவி வாழ்த்த இனிதாக ஆரம்பமானது அவர்களின் வாழ்க்கை.

முதலும், முடிவும் ஒன்றாகவே பயணிக்குமா என்ன ?

விழி திறந்து அதனைக் காண தன்னோடு அணைத்து கரம் சுற்றி நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து விட்டான். பின் மாங்கல்யத்திலும் வைத்து விட்டு மென்மையாய் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

நண்பர்களின் விசில் கெட்டிமேள சத்தத்தையே தோற்கடித்து விட, மற்றவர்களோ மணமகனின் செயலை எண்ணி மகிழ்ச்சி சிரித்தனர்.

அவர்கள் இருவரைப் பொறுத்தவரை இந்த திருமணம் அஸ்திவாரம் மட்டுமில்ல. அவர்களின் காதலுக்கு கிடைத்த வெற்றி. அதனாலே எல்லையில்லா மகிழ்ச்சியில் மற்றவர்களின் இருக்கிறார்கள் என்றும் பாராது தன் நேசத்தை வெளிப்படுத்தினான் நந்தன்.

அந்த ஒற்றை முத்தம் அவளுக்கோ என்ன நேர்ந்தாலும் தன்னோடுப் பயணிப்பான் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. இன்று நந்தன் வெற்றியை அடைந்து விட்டான். ஆனால் தான் இன்னுமில்லையே !

தன் வெற்றிக்கு உறுதினையாக நிற்ப்பான் என்ற எண்ணத்தில் நிமிர்ந்து கணவனைக் காணவே, “ஐ லவ் யூ அஞ்சு “ குறுநகை பூத்துக் கூறவே, வெட்கத்தில் தலை குனிந்தாள்.

பின் அக்னியை வலம் வரக் கூற எழுந்து இருவரும் கரம் பற்றி மூன்று முறை வலம் வந்தனர். அங்கிருந்து அம்மியில் அஞ்சனாவின் பொற்பாதங்கள் வைத்து அந்த மிஞ்சினைப் போட்டு விட்டான்.

அஞ்சனாவின் கால் விரல்களின் பட்ட நொடியே அவளை அது பற்றிக் கொள்ள, சிறு பொறாமை கொண்டான் நந்தன்.

எந்தநொடியும் அவளோடு இது இருக்கப் போகிறது என்பதால் தன் மொத்த அன்பையும் அதில் வைத்து மென்மையாய் வருடி விட, கூச்சமோடு தன் பாதங்களை விலக்கிக்கொண்டாள். 

கணவனின் மொத்த காதலை அவன் கொடுத்த நெற்றி முத்தம் பறை சாற்றி விட்டது போதாதது. பாதம் தொட்டு மெட்டி போட்டு வருடி விட்ட செயலுமே முழுதாக காதலில் ஆழத்தை உணர்த்தியது.

‘அவனின் இந்த காதலுக்கு என்றும் தான் உண்மையாக இருக்க வேண்டும் ? ‘ விழி மூடி மனதோடு வேண்ட,

‘ஒரு வேலை உன் காதலில் இருக்கும் பிழையை அவன் கண்டு பிடித்து நிராகரித்தால் என்ன செய்வாய் பெண்ணே ? ‘ மனசாட்சியே கேள்வி கேட்க கண்ணீர் சிந்தினாள்.

“ஹே ! அஞ்சு “ பதறிய நந்தன், வேகமாய் அவளின் கன்னம் தாங்கி கண்ணீர் துடைக்க, பட்டென விழி திறந்துக் கொண்டாள்.

“என்னை என்னைக்கும் விட்டிட்டுப் போக மாடீங்களே நந்தன் ?” உதடுகள் துடிக்க கேட்க,

“விட்டிட்டுப் போகணும் நினைச்சா எதுக்கு இப்போ கல்யாணம் பண்ணப் போறேன் சொல்லு. லூசு மாதிரி பேசாதே வா “ என்று கரம் பற்றி அழைத்துப் பெற்றவர்களின் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டான்.

“நூறு வருஷம் ரெண்டு பேரும் நல்லாயிருங்க “ தம்பதிகாக இருந்து வாசுதேவன், மனோகரி இருவரும் ஆசிர்வதித்தனர்.

பின் அவர்களின் அருகிலே நின்ற நந்தனின் அண்ணன், அண்ணி இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். தன் தம்பியை  மெல்ல அணைத்து விடுவித்தான் நிதின்.

நந்தனின் கட்டளையால் ஒவ்வொரு காட்சிகளையும் ரசனையோடு பதிவு செய்துக் கொண்டிருந்தனர் போட்டோகிராபர். நேரமாகவே வந்தவர்கள் அனைவரும் வாழ்த்து கூற ஆரம்பித்தனர்.

மணமேடையில் ஜோடியாக இருவரும் நிற்க, பரிசினை கொடுத்து வாழ்த்து கூறி புகைப்படம் எடுத்துச் சென்றனர். நந்தனின் நண்பன் கூட்டம் வந்து கேலி கிண்டல் என்று செய்யவே சற்று தெளிந்தான்.


“எப்படி தங்கச்சி மொரட்டு சிங்கிளா இருந்த எங்க நடப்பை காதல் வலையில விழ வச்சீங்க ? முதல்ல காதலை சொன்னது யாரு ?” என்க, அவளோ நிமிர்ந்து தன்னவனின் முகம் கண்டாள்.

“அதானே, இந்த லூசுப்பையன் கிட்ட கேட்டா சொல்ல மாட்டிக்கான். நீங்க சொல்லுங்க சிஸ்டர். எங்களுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும்ல “

“ஆமாம்மா. என்ன உதவி கேட்டாலும் உன் முகரகட்டைக்கு எந்தப் பொண்ணும் செட்டாகாதுடா “ என்று ஒருவரை ஒருவர் மாறி மாறி கிண்டலடித்துக் கொண்டனர்.

“அப்பறம் நட்பே ! ஹனிமூன் எங்க போறதா பிளான் “

“டேய் விட்டா, பஸ்ட் நைட் எப்படி கொண்டாடுவேன்னு கேட்பே போல ?” என்று இன்னொருவன் கூற,

“ஆமா இதை மறந்துட்டேன். மச்சான் எல்லா தெரியும்மா ? தெரியாம போய் அவமானப்பட்டுறாதே “ என்று மெல்ல அவனின் செவியருகே வந்துக் கூற, அருகில் இருந்த அஞ்சனாவிற்கு கேட்டு விட்டது.

அவளோ தலைகுனிந்து மெல்லச் சிரிக்க, “டேய் ! மனாத்தை வாங்காதீங்க, போய் தொலைங்கடா ” பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.

அவன் சொன்னால் அவர்கள் சென்று விடுவார்களா என்ன ?

“எப்படி மச்சான் ஒரே ஆபிஸ்ல எங்க கூடவே இருந்துக்கிட்டு அஞ்சனாவுக்கு ரூட் போட்டே ? எனக்கு என்னமோ நீ தான் ஏதோ பண்ணிட்டேன்னு தோணுது. அஞ்சனாவை பார்த்தா அமைதியா சந்தமான பொண்ணால இருக்கு ?” என்க,

“காதல்ன்னு வந்தால் எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும். விடுங்கடா “ தப்பிக்க முயல, நேரம் சென்று அவனை பாடாய்படுத்தி எடுத்தே விடுவித்தனர்.

தனியாக மண்டபம் வெளியே அலங்கரித்திருந்த இடத்தில் ஜோடிகாக நின்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

உணவருந்தி வந்தவர்கள் சென்றவாறு இருக்க அவர்களை வழியனுப்பி வைக்க வாசலில் நின்ற வாசுதேவனிடம் வந்தார் ஒருவர்.

“என்ன வாசுதேவா, பொண்ணோட சொந்தம்ன்னு யாருமே இல்லை போல ? “ என்க,

“அதான் நாங்க இருக்கோம்ல சார் “ என்று தந்தையின் அருகில் வந்து நின்றான் நிதின்.

“அது சரி தான். நான் கேள்விப்பட்டேன்னே இது காதல் கல்யாணம்ன்னு. பொண்ணு வீட்டுல ஒத்துக்கலையோ ? கோடி கணக்குல சொத்து இருக்குற உன் வீட்டுல பொண்ணு தர ஒத்துக்கலையா ?” சந்தேகம் தீர்ந்தால் தான் செல்வேன் என்பது போல் வந்தவர் கேட்க,

“பொண்ணு அனாதை அவளுக்கு யாருமேயில்லை. இதை சொல்லி அவளோட காதுக்குப் போனா கஷ்டப்படுவாளேன்னு தான் யார் கிட்டயும் சொல்லிக்கிடல “ என்கவே,

“அப்போ பொண்ணு புத்திசாலி தான் “ எனக் கூறிக் கொண்டே சென்று விட, நிதினும் உள்ளேச் செல்ல, மற்றவர்களை வழியனுப்பி வைத்தார்.

எப்படியோ காத்து வாக்கில் மணப்பெண் அனாதை என்ற செய்தி பரவ, அவளை எண்ணி பரிதவிப்பாய் காணாது ஏளனமாக கண்டனர் அனைவரும்.

மணமக்களை உணவருந்த அழைத்துச் செல்ல, ரெஸ்ட் ரூம் சென்று வருதாக கூறிய அஞ்சனா விலகி நடத்துச் சென்றாள்.

அப்போது நந்தனுக்கு தன் பொண்ணைக் கட்ட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த ஒரு பெண்மணி, அவளின் முன்னே வந்து நின்றார்.

“வாழ்த்துக்கள்ம்மா. என் வீட்டுக்காரரும், உன் மாமானாரும் தொழில்ல பாட்னரா வேலைப் பார்க்குறாங்க “

“சரிங்க ஆண்ட்டி. தேங்க்ஸ். கொஞ்சம் வழி விடுறீங்களா ?”

“கில்லாடி தாம்மா நீ ? இனி உன் வாழ்க்கை செட்டில் தான். என் பொண்ணோட இடத்தை நீ பறிச்சிட்டே. நல்லாயிரு “ என கூறிச் செல்லவே அவரோ வாழ்த்தியது போல் அவளுக்கு தெரியவில்லை.

ரெஸ்ட் ரூம் சென்று வெளியே வர அப்போதே அதே பெண்மணி இன்னொருவரிடம் தன்னைக் கண்டு ஏளனமாக பேசுவதை கண்டாள், அங்கே நில்லாததுச் சென்று விட, அதற்கு திமிர் பிடித்தப் பெண் என்று பட்டம் சூட்டினர்.

அஞ்சனாவின் மனமோ அங்கிருந்த அனைவரின் மீது சினமோடு தான் சுற்றி வந்தது.

‘தான் அனாதை என்று இவர்கள் கண்டார்களா ? தன் ஒழுக்கத்தைப் பற்றி பேச இவர்கள் யார் ? காதலித்தேன் திருமணம் செய்துக் கொண்டேன். இதனால் என் ஒழுக்கம் கெட்டு விட்டதா ? அப்படியென்றால் எத்தனையே பேர்கள் தவறு செய்தும் நடமாட அவர்களை என்ன செய்வதாம் ?’  மனதிற்குள்ளே புலம்ப,

“என்னாச்சு அஞ்சு ? சாப்பிடு “ இலையில் இருந்த உணவினை எடுத்து ஒரு வாய் அவளுக்கு ஊட்ட, அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அவளுமே அதை போல் செய்ய, பின் செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் செய்வதற்கு புகுந்த வீடுச் செல்ல பயணித்தார்.

தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நந்தன் பயணிக்க, இன்னும் முதல் கட்டத்திலே தான் நின்றுக் கொண்டிருந்தாள் அஞ்சனா.


தொடரும்...



கதை பற்றிய உங்களின் கருத்துக்களையும், எழுத்துப் பிழைகள் இருந்தால் அதையும் மறக்காமல் பதிவு செய்யவும்.


🙏🙏🙏



Leave a comment


Comments


Related Post