இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 30-03-2024

Total Views: 16320

காதலொன்று கண்டேன்!

தேடல்  12

அவனுக்காக..


"க்விக்கா பினிஷ் பண்ணுங்க.." அவனின் அதட்டலான குரலைக் கேட்டதும் மீண்டும் புரையேறி நாசியில் அடித்து ஒரு வழியாகி விட்டிருந்தாள்,யாழினி.

நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமியவளின் செயலில் அவனுக்கும் மனிதாபிமானம் எட்டிப் பார்த்தாலும் லாவகமாய் அதை மறைத்துக் கொண்டான்,பையன்.

அவன் இன்னும் ஏதோ பேச வரும் முன் கை நீட்டி மறுப்பாய் சைகை செய்து விட்டு வெளியேறியவளை பார்த்து தோளை குலுக்கிக் கொண்டு தன் வேலையைத் துவங்கினான்,அவனும்.

நால்வரும் வர வேலைகள் தொடங்கினாலும் யாழினியின் பார்வை அடிக்கடி அவனைத் தீண்ட முயல வெகு பிரயத்தனப்பட்டு தன்னை தடுத்துக் கொண்டிருந்தாள்,அவள்.

கண்கவரும் தோற்றத்தில் அவன் இல்லையென்று மற்றையவர்கள் சொன்னாலும் அவள் விழிகளுக்கு அவன் அழகாய்த் தெரிந்ததன் மாயம் தான் என்ன..?

ஆம்,அவள் விழிகளுக்கு அவன் அழகாய்த் தான் தெரிந்து தொலைக்கிறான்.அதை மறுக்கும் எண்ணமும் இல்லை,பெண்ணவளுக்கு.

பொதுவாகவே அழகை இரசிக்கும் பழக்கம் அவளுக்கு உண்டு.ஆணாயினும் பெண்ணாயினும் அவள் விழிகளுக்கு அழகாய்த் தோன்றி விட்டால் அதை தாயிடமும் தோழியரிடமும் பகிர்ந்து கொள்ளவும் செய்வாள்.

தவறான கண்ணோட்டம் இல்லை என்பதால் அதை மறைக்க வேண்டிய அவசியமும் இருந்ததில்லை.அழகை ரசிக்கும் பழக்கம் உண்டென்றாலும் இது வரை யாரையும் சைட் அடித்ததில்லை.

ஒரு தடவை பார்ப்பாள்.தன் மனதில் ஏற்பட்ட இரசனையை பகிர்வாள்.மீண்டும் மீண்டும் பார்த்தது எல்லாம் இல்லை.
ஒற்றைப் பார்வையுடன் அனைத்தும் முடிந்து விடும் என்பதால் அதற்கு சைட் என்ற பெயர் சூட்டவும் அவள் விரும்பியதில்லை.

சலனம் தட்டாத பார்வையில் வெறும் இரசிப்புத் தன்மை மட்டுமே நிறைந்திருக்க அந்தப் பெயர் பொருந்தாது அல்லவா..?

ஆனால்,கார்த்திக்கை அடிக்கடி பார்க்கச் சொல்லி மனம் கட்டளையிட மனதுக்கும் புத்திக்கும் இடையில் கருமணிகள் அல்லாடிக் கொண்டிருந்தது.

கார்த்திக்கின் விடயத்தில் தன் மனதில் ஏற்படும் மாற்றம் புரியத்தான் செய்தது.சலனம் என்று உணர்ந்தும் விட்டாள்.

அவள் மனதில் சலனமில்லை,வெறும் இரசிப்பான பார்வை தான் எனக் கூறி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள அவள் தயாராயில்லை.

சலனம் என்று ஒப்புக் கொண்டு அதில் இருந்து மீண்டு வருவதற்கான உத்திகளை அவள் யோசித்துக் கொண்டிருக்க அந்த சலனம் தான் அவளை காதல் எனும் சுழலுக்குள் இழுத்து விடப்போவதை அவள் அறிந்திடும் சாத்தியம் இல்லையே.

இப்போது கூட அவளின் மனம் அவனைப் பார் என்று கட்டளையிடத் தான் செய்தது.அதற்கென்று உடனே அதை செய்து விடவில்லை.அவளுக்கும் மனக் கட்டுப்பாடு இருக்கிறதே.

சலனத்தின் முடிவு காதலாகி நின்றால் என யோசிக்கும் போதே தலை வலிக்க தாயின் முகம் தான் கண் முன்னே வந்து நிற்க மனம் பாரமாகியது.

அவள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை அளப்பறியது.அவளுக்கு காதல் என்றொன்று முளைத்தால் தாயானவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியாதே.அதனாலோ என்னவோ அந்தக் காதலில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளவே விழைகிறது,அவள் மனம்.

ஆனால்,யாரைத் தான் விட்டது இந்தக் காதல்..?

"யாழினி..மிஸ்.யாழினி.." அவனின் அதட்டலான குரலில் திரும்பியவளுக்கு முறைத்துக் கொண்டிருந்தவனைக் கண்டதுமே பக்கென்றானது.

"இப்டியா டி அவரு பேசுறது கூட கேக்காத அளவு யோசிச்சிகிட்டு இருப்ப..?" மானசீகமாய் தனக்குத் திட்டிக் கொண்டு அவனைப் பார்க்க அவனின் விழிகளில் அனல் தெறித்தது.

"வேல நேரத்துல வேலைல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணனும் மிஸ்.யாழினி..காட் இட்.." ஆட்காட்டி விரல் நீட்டி அவன் எச்சரிக்க மேலும் கீழும் தலையை ஆட்டினாலும் அவனின் செய்கை அச்சுப் பிசகாமல் அவள் மனதில் ஒட்டிக் கொண்டது,என்னவோ உண்மை.

"புரியுதா..?"அவன் விழிகள் அவளை கூறு போட்ட படி சொல்ல அந்த விழிகளை நேருக்கு நேர் பார்த்தவளுக்கு உயிருக்குள் ஏதோ ஆகிப்போனதே.

"புரியுது சார்..லைட்டா புரியல.." அவனின் கேள்விக்கும் அவளின் மனதின் போக்கு புரியாமல் இருப்பதற்கும் சேர்த்து தனக்குமே சத்தமாய் பதில் சொல்ல கார்த்திக்கிற்கு அவளின் செய்கை முரணாய் இருந்தாலும் தவறாய் எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லை.

"வாட்ட்ட்ட்..?"

"என்ன சார் கேக்கறீங்க..?" ஏற்கனவே ஆட்டம் கண்டு கொண்டிருப்பவளுக்கு தான் உளறிக் கொட்டியது உரைக்கவில்லை. அவனின் கேள்வியில் மொத்தமாய் குழம்பியிருக்க திருதிருவென விழித்தவளுக்கு ஏதோ ஒன்றுக்குள் சிக்கித் கொண்டிருக்கும் உணர்வு தான்.

"புரிஞ்சுச்சான்னு கேட்டேன்.." அழுத்தமாய் தீர்க்கமாய் வந்து விழுந்த பையனின் வார்த்தைகளில் அவளுக்கு மண்டை காய்ந்தது.

"சார் திட்டாம திரும்ப ஒரு தடவ சொல்றீங்களா..?" பாவமாய் கேட்டவளின் தொனியில் ருத்ரா சிரித்து விட பையனின் செந்தணல் விழிகள் அவளை எரித்திடாவிடின் தானே அதிசயம்.

"வேல நேரத்துல வர்க்ல மட்டுந்தான் கவனம் இருக்கனும்..புரியுதா..?" இழுத்துப் பிடித்த பொறுமையுடன் பையன் கேட்கவே தான் அவனிடம் உளறி நின்றது,சுரீரென உரைத்தது மண்டைக்குள்.

"உனக்கு நீயே சத்தமா பதில் சொல்லிகிட்டியே.." நொந்தவளாய் அவனின் முகம் பார்க்க ஐயோவென்றானது.

"இல்ல சார்.."

"வாட்ட்ட்ட்ட்ட்ட்..?" விட்டால் அடித்து விடும் கடுப்பு பையன் முகத்தில்.

"இல்ல சார் தவறுதலா அப்டி நடந்துகிட்டேன்..புரிஞ்சிருச்சி சார் னு சொல்ல வந்தேன் சார்..இனிமே வேல நேரத்துல கவனமா இருக்குறேன் சார்.." கோர்வையின்றி பேசி முடித்தவளைக் கண்டு பையனுக்குத் தான் நெற்றியில் அறைந்து கொள்ளலாம் போல தோன்றிற்று.

"செக் திஸ் பைல்.."

"சாரி..ச்ச்சூ.."

"வாட்ட்ட்ட்ட்ட்..?"

"சாரி சாரி சார்.."

"ஆர் யூ மேட்..?"

"சார் சரின்னு சொல்ல வந்தது சாரின்னு ஸ்லிப் ஆயிடுச்சு..அதுக்கு தான் சாரி கேட்டேன்.." அழும் முகத்துடன் கூறியவளின் கூற்றில் பொய்யேதும் இல்லை.

"செக் பண்ணிட்றேன் சார்.."பவ்யமாய் மொழிந்தவளை கண்டு ருத்ராவுக்கும் சவிதாவுக்கும் தான் வித்தியாசமாய்த் தோன்றியது.இப்படி தடுமாறும் ரகம் இல்லையே இவள் என்பதே பெரும் யோசனையாய்.

"ம்ம்.."கடுப்புடன் கூறிய படி அதை அவளின் கையில் கொடுக்க மறுபுறம் திரும்பியவளோ பெரு மூச்சு விட்ட படி வேலையில் ஆழ்ந்தாலும் அவள் இயல்பாய் இல்லை.

இரவு எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது.

"சரி..சரி..ஒரு லட்சம் ப்ரைஸ்னா நா எழுத மாட்டேனா...நா எழுதி அனுப்புரேன்.." கூறிய படி அழைப்பைத் துண்டித்தவளுக்கு ஒரு வித என்னவென்று ஊகிக்க முடியாத மனநிலை.

கவலையும் இல்லை..
சந்தோஷமும் இல்லை..
நிறைவும் இல்லை..
வெறுமையும் இல்லை..
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட கனமான உணர்வொன்று.

அலைபேசியை கையில் ஆட்டிய படி குறுக்கும் நெடுக்கும் நடந்தவளுக்கு எந்த ஒரு விடயத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

யோசித்துப் பார்த்தவளோ சமயலறைக்கு செல்ல பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த தாயாரோ சத்தம் கேட்டு அவளைப் பார்த்திட அவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

மகள் ஏதோ ஒரு விடயத்தில் குழம்பியிருப்பதை அவளின் முகமே தெள்ளத் தெளிவாய் காட்டியதே.

"என்ன யாழினி..என்னமோ யோசனைல இருக்க.."

"அம்மா இதுக்கு முன்னாடி நா பசங்க அழகா இருக்காங்கன்னு உன் கிட்ட சொல்லுவேன்ல..அப்போ எல்லாம் நா நார்மலா தான் இருப்பேன்..ஆனா.."

"ஆனா.."

"ஆனா இப்ப அப்டில மா..நா தப்பு பண்ற மாதிரி எனக்கு தோணுது..உங்கள எல்லாம் ஏமாத்துற மாதிரி.."

"ஏன் யாராச்சும் பையன பாக்கும் போது திரும்ப திரும்ப பாக்கனும் போல இருக்கா..?" மகளின் நிலை புரிந்தவராய் கேட்க அவளின் விழிகள் பெரிதாய் இருந்தன.

"எ..எப்டிம்மா..?" திக்கலுடன் அவள் கேட்க பதிலாய் அவரின் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டன.

"அம்மாஆஆஆஆ"

"இரு இரு சொல்றேன்..பொதுவாவே எதிர்ப்பாலார் கவர்ச்சினு ஒன்னு இருக்கும்..அது பொதுவான விஷயம்..இங்க பாரு யாழினி..நீ வளந்த சூழ்நில ரொம்ப வித்தியாசம்..அப்பா கூட அட்டாச்சா இல்ல..தாய் மாமா தாத்தா யார் கூடவும் நீ பழகுனதில்ல.."

"............."

"சரி சரி..மொறக்காத..அவங்க உன் கூட சின்ன வயசுல டைம் ஸ்பென்ட் பண்ணல..அப்போ வெலகுனது இப்போ கூட உன்னால ஒட்ட முடியல..சுருக்கமா சொல்லப்போனா உன்னோட சர்கிள்ல ஆம்பளங்க இருந்தாலும் உன்னோட யாரும் பழகுனது இல்ல..அப்பாவுக்கு புடிக்காதுங்குறதால நீ ஸ்கூல் படிக்கிற டைம்ல கூட நீ பசங்களோட பேசுனது பழகுனது இல்ல..அதனால உனக்கு பசங்க கூட இயல்பா பேசி பழக டைம் எடுக்கும்.."

"ஆமா நீங்க சொல்றது சரி தான்.."

"இப்போ கம்பனில யாராச்சும் உன் கூட வந்து பேசுனாலோ இல்லன்னா உன் கண்ணுக்கு அழகா தெரிஞ்சாலோ உனக்கு அத இயல்பா எடுத்துக்க முடியல..அத சலனம்னே சொல்லலாம்..சலனம் எல்லாருக்கும் வரும்..அத தாண்டி வர்ரதுல தான் லைபே இருக்கு.."

"இதெல்லாம் டீனேஜ் பசங்களுக்கு பண்ற அட்வைஸ் தாயே.."

"என்ன பண்ண உனக்கு இப்ப தான பண்ண வேண்டியிருக்கு..இங்க பாரு யாழினி..உனக்கு யாராச்சும் பையன பாத்து சலனப்பட்றதா தோணுச்சுன்னா வெலகி வெலகி போகாம நார்மலா பேசு..அவன் கூடவும் மத்தவங்க கூட பழகுற மாதிரி பழகு..அது தான் சரியான தீர்வு..அந்த பையனும் உன் கூட நார்மலா பேசுனா உனக்கு இந்த எண்ணம் வராதுன்னு தோணுது..ம்ஹும் கண்டிப்பா வராது.."

"வாவ் ராஜமாதா..சரியா பேசி என்ன தெளிய வச்சுட்டீங்க.." நக்கல் தொனிக்கும் குரலில் கூறினாலும் அந்த வார்த்தைகள் சத்தியமான உண்மை தான்.

"அம்மா நா ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.."

"அது நீ கேக்கறது பொறுத்து இருக்கு மகளே.."

"ம்ம்மாஆஆஆ"

"சரி சரி சொல்லு.."

"ஒருவேள எனக்கு ஏதாச்சும் பையன புடிச்சிப் போய் உன் கிட்ட வந்து சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க..?" நா தாயிடம் வினாத்தொடுத்தாலும் விழிகள் தந்தை வருகிறாரா என பயத்துடன் வாயிலை அலசிக் கொண்டிருந்ததே.

"ம்ம்..அப்டி உனக்கு புடிச்சதுன்னா விசாரிச்சு பாத்துர வேண்டியது தான்..நீ ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல..மத்த பொண்ணுங்கள மாதிரியும் இல்ல..எந்த விஷயத்துலயும் தப்பா முடிவெடுக்க மாட்டன்னு அம்மாவுக்கு ஒரு நம்பிக்க.." அவர் சாதாரணமாய் சொன்னாலும் அவளுக்கு விழிகள் மெல்லக் கலங்கிற்று.

மகனாயினும் மகளாயினும் பெற்றோர் தம்மை முழுவதாக நம்புவதை உணர்கையில் உண்டாகும் உணர்வு வித்தியாசமானது ஆயிற்றே.

"டேங்க்ஸ்ஸ்ஸ் ராஜமாதா.." இயல்பாய் சொன்னாலும் அவள் உள்ளுக்குள் அத்தனை நெகிழ்ந்திருந்தாள்.

தாயின் வார்த்தைகளை அசை போட்ட படி கட்டிலில் படுத்திருந்தவளுக்கு கார்த்திக்குடன் சாதாரணமாய் உரையாடினால் தன் சலனங்கள் முற்றாய் தகர்ந்திடும் என்கின்ற எண்ணம் தோன்ற அதை செயற்படுத்தும் முனைப்புடன் விழி மூடியவளை உறக்கம் அணைத்துக் கொண்டது,சீக்கிரமாகவே.

சலனங்கள் ஈர்ப்பின் முதல் அத்தியாயம்.ஈர்ப்பு அவன் மீதான காதலின் முதல் அத்தியாயம்.அவன் மீதான காதலே அவள் வாழ்வின் முழு அதிகாரம்.

சலனம் ஈர்ப்பாகி ஈர்ப்பு காதலாய் உருமாறி அவன் மீதான காதலில் அவளிதயம் கசிந்துருகப் போவது தெரிந்திருந்தால் இத்தகைய முடிவை அவள் எடுத்திருக்க மாட்டாளே.

பலருக்கு காதல் வாழ்க்கையின் பிடித்தம்.வெகு சிலருக்கு அந்தக் காதல் தான் வாழ்க்கையின் பிடிமானம்.

அவளுக்கு...?

வாழ்க்கையில் காதல் உருவாகலாம்.காதலே வாழ்க்கையாகவும் உருமாறலாம்.

அதே நேரம்,

"அப்பா போதும் பா..இப்டி ஊட்டி விட்டு தான் நீ என்ன குண்டாக்க பாக்கற..?"

"பாப்புக்குட்டி ரெண்டு தோச தான் சாப்ட..அதுக்குள்ள போதும்ங்குற..சாப்புர்ரா.."

"அப்பா..போதும் பா..நெஜமாவே பசிக்கல பா..நீ சாப்டு.." கையை திருப்பி அவருக்கே ஊட்டி விட முறைப்புடன் கையில் இருந்த தோசைத்துண்டை தன் வாயில் போட்டுக் கொண்டார்,அவனின் தாயுமானவர்.

"பாப்புக்குட்டீஈஈஈஈ.."

"என்னப்பா இழுக்குற..?"

"அப்பா ஒரு விஷயம் சொல்றேன்..கோச்சிக்க கூடாது.." என்க பையனின் புருவங்கள் இடுங்கின.

"நேத்து தான் வில்லங்கமா பேசி வாங்கிக் கட்டிகிட்ட..இன்னிக்கி திரும்ப வாங்கிக் கட்டிக்கப் போறியா..?" உறுத்து விழித்த மகனின் பார்வையில் உள்ளுக்குள் குளிரெடுத்தாலும் கேட்க வந்ததை கேட்டாக வேண்டுமே..?

"அது வந்து பாப்புக்குட்டீஈஈஈஈ..தரகர் ஒரு பொண்ணு போட்டோ.." என்று முடிக்கும் முன்னமே விருட்டென எழுந்தவனை அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாற்ற உண்டு முடித்த பிறகாவது சொல்லியிருக்கலாம் என்று நேரம் கடந்து யோசிக்கலானார்,சத்யமூர்த்தி.

நிலைக்கண்ணாடியின் முன்னே நின்று தன் உருவத்தை ஏறிட்டவனின் இதழ்கள் விரக்தியில் விரிந்தன.

உருவக்கேலியால் நிரம்பவே அடிபட்டவன்.
ஏன் ஓரிரு நபர்கள் அவனின் முகத்துக்கு நேராகவே சொல்லியிருக்கிறார்களே அவனின் தோற்றம் அறுவறுப்பை தருவதென.

பேசி விடலாம்.ஒருவரின் தோற்றத்தை தரம் தாழ்த்தி பேசி விடுவது அத்தனை கடினமான விடயமும் அல்ல.

சிலர் விளையாட்டுக்கு கலாய்ப்பார்கள்.சிலர் நிஜமாகவே வம்பிழுப்பார்கள்.ஆனால்,அதை எல்லோராலும் இலகுவாக கடந்திட முடியாது.

விளையாட்டுக்கு கலாய்த்தாலும் அதற்கு அவர்கள் புன் சிரிப்பையே பதிலாய்த் தந்தாலும் அந்த கணத்திலோ மீண்டும் யோசிக்கும் பொழுதோ ஒரு நொடியாவது வலிக்கத் தான் செய்யும்.அது தான் நிஜமும் ஏன் நிதர்சனமும் கூட.

இன்றைய சமூகத்தில் உருவக்கேலி பரவல் தான்.மறுப்பதற்குமில்லை.

உருவங்களை கேலி செய்யும் உரிமையை இறைவன் உயிர்களுக்கு கொடுத்தானா என்ன..?
யோசிக்கத் தான் வேண்டும்.

எத்தனை திடமாய் பையனவன் காட்டிக் கொண்டாலும் அவனுக்குள்ளும் வலி நிறைந்த கறுப்புப் பக்கங்கள் இருக்கத் தான் செய்கின்றன.
அவ்வப்போது நினைவில் வந்து அவனை குத்திக் கொல்லத் தான் செய்யும்.இப்போது போல்.

அப்படியே கட்டிலில் கண்மூடி படுத்து விட்டவனுக்கு பல்வேறு நினைவுகள்.

நிஜம் ஒரு முறை தான் கொல்லும்.நினைவுகள் ஒவ்வொரு முறையும் கொன்று புதைக்கும்.

தேடல் நீளும்.

2024.03.30


Leave a comment


Comments


Related Post