இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-12(1) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 31-03-2024

Total Views: 39356

அத்தியாயம் -12(1)


விமான நிலையத்தில் ஆர்வம் பாதி குளிரின் தாக்கம் மீதியாக நின்றுக் கொண்டிருந்தாள் அஞ்சனா. தன் அலைபேசியில் வினோத்திடம் பேசிவிட்டு வந்த யஷ்வந்த் அவளைத் தன் தோள் வளைவில் நிறுத்திக் கொள்ள, அவனை சட்டென திரும்பிப் பார்த்தாள்.

மெல்ல புன்னகைத்தவன் அவளுடன் நடந்து வெளியே வர, பளிச் பளிச்சென்ற வெளிச்சம் கண்களை கூசச் செய்யும்படியான புகைப்படக் கருவிகளுடன் அவனை ஒரு கூட்டம் சூழ்ந்து கொண்டது.

யஷ்வந்த் புகழ் பெற்ற தொழிலதிபன் என்றபோதும் தனது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த எதையும் இணையத்தில் வெளியிடாது பாதுகாத்து வந்தவன் தான். அதனாலேயே அவர்கள் திருமணத்தின் போதும் கூட பத்திரிக்கை நிறுவனத்தார் யாரும் அனுமதிக்கப்படவில்லை‌. 

முதன்முறை இத்தனை பத்திரிகை கூட்டத்தை பார்த்த அஞ்சனா மிரண்டு தன்னைப்போல் அவனோடு ஒன்றி நிற்க, அதில் தன் பிடியில் அழுத்தம் கொடுத்தவனாய் அழுத்தமான பார்வையுடன் அவர்களை ஏறிட்டான்.

“சார்.. நீங்க அன்னா வின்டோர் போட்டிக்குத்தானே வந்திருக்கீங்க? அந்த போட்டிக்கு உலக அளவில் பல பெரிய பெரிய நிறுவனங்கள் வராங்க. உங்க பங்களிப்பு எதை சார்ந்ததா இருக்கும்?” என்று பலர் தங்கள் கேள்விகளை நுனி நாக்கு ஆங்கிலத்தில் வினவ, 

அழுத்தமான முகத்துடன், “எதுவா இருந்தாலும் போட்டியில் பார்த்துக்கோங்க” என்றான்.

“சார் மேடம் தான் உங்க வைஃபா?” என்று அடுத்து ஒருவர் கேள்வி எழுப்ப, அஞ்சனா தன்னவனை ஏறிட்டுப் பார்த்தாள். தானும் தன் மனையாளைப் பார்த்தவன், பத்திரிக்கையாளர்களை ஏறிட்டு, 

“மிஸஸ். அஞ்சனா யஷ்வந்த் கிருஷ்ணா, மை லவபில் வைஃப்” என்று அறிமுகம் செய்தாள்.

அவனது வரிகளில் தன்னைப் போல் அவள் மேனியில் ஒரு சிலிர்ப்பு பரவ, அவளை அணைத்துப் பற்றியவனுக்கும் அந்த சிலிர்ப்பு ஒரு பரவசத்தைக் கொடுத்து இதழ் பிரியா புன்னகைக்கு வழிவகுத்தது.

அஞ்சனா அவர்களை நோக்கி மெல்ல புன்னகைக்க, “மேம் சார் இந்த போட்டிக்கு எவ்வளவு உழைப்பு போட்டார்?” என்று அவளிடம் தங்கள் கேள்விகளைத் திருப்பினர். 

பதில் கூறலாமா வேண்டாமா என்று அவள் யஷ்வந்தை நோக்க, அவன் விழி மொழி என்ன கூறியதோ? அதில் ஏதோ ஓர் உந்துதல் தோன்றவே, 

“நாலு வருஷமா அவங்க உழைச்ச உழைப்பு இது. மீதி எல்லாம் நேரில் பார்த்துக்கோங்க” என்று அவள் கூற, தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி தன் மனையாளை மெச்சும் பார்வைப் பார்த்தான்.

அவன் பார்வையில் குதூகலம் பெற்றவள் கண்கள் புன்னகைக்க, அங்குள்ளவர்களில் துடுக்கான ஒரு பத்திரிக்கையாளர் “மேடமோட வந்திருக்கீங்கனா போட்டிக்காக மட்டுமே வந்ததுபோல இல்லையே?” என்று கேட்டு சிரிக்க, அவரை சட்டெனத் திரும்பிப் பார்த்தான்.

அந்த பார்வையில் சற்றே மிரண்டு போனவர் திருதிருவென விழிக்க, அழுத்தமான முகத்துடன் அவரை நோக்கியவன் மெல்ல கனிவான முகத்துடன் கண்கள் மட்டுமே புன்னகைக்கும் வகையில், 

“ஐ டூ ஹாவ் அ பெர்சனல் லைஃப். தென் வை நாட்?” என்றுவிட்டு தன்னவளை தோள் வலைவில் அணைத்துக் கொண்டான்.

இரண்டு நாட்கள் முன்பே அங்கு வந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்த வினோத் அவர்களுக்கான வாகனத்துடன் வந்துவிட, “க்வஷின்ஸ் ஓவர்” என்றுவிட்டு தன்னவளுடன் அகன்றான்.

அவர்களைத் தொடர்ந்து வந்தோரை வினோத் தடை செய்து யஷ்வந்தை கூட்டிவந்து வாகனத்தில் ஏற்ற, உயர்தர உணவகம் (ரெஸ்டாரென்ட்) ஒன்றில் அது வந்து நின்றது. 

“சார் உங்க ரூம் கீ சார்” என்று வினோத் சாவியைக் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்டவன் அஞ்சனாவுடன் உள்ளே சென்றான்.

பணியாளர்கள் அவர்களது பொதிகளைக் கொண்டுவந்து அவர்களுக்கான அறைக்குள் வைக்க, அந்த அறையின் கட்டமைப்பை ரசனையோடு பார்த்த அஞ்சனா பால்கனி நோக்கிச் சென்றாள்.

மாலை வேளையதில் மங்கிய வானமும் எங்கும் மின்விளக்குகளும் மின்னி அவள் கண்களில் பளபளக்க, அவற்றை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பின்னிருந்து வந்து அணைத்துக் கொண்டவன், 

“வ்யூ நல்லா இருக்குல்ல?’ என்றான்.

அவன் அணைப்பில் ஒருநொடி திடுக்கிட்டவளது மேனியின் அதிர்வு அவனால் உணர முடியவே, தன் அணைப்பின் இறுக்கம் தளர்த்தி பாதுகாப்பாய் அணைத்துக் கொண்டவன் “சனா..” என்க,

அவன் செயலில் அதிர்வு நீங்கியவள் “ரொம்ப அழகா இருக்கு மாமா” என்று உற்சாகமாய் கூறினாள்.

“முதல் முறை வர்றல?” என்று அவன் சாதாரணமாக கேட்க, 

“நான் எங்க வீடு, காலேஜ் விட்டு வெளியிடம் வர்றதே முதல் முறை மாமா” என்று ஏக்கமும் சளிப்புமாய் கூறினாள். 

அதில் அதிர்ந்து போனவன், “என்னடி சொல்ற?” என்று வினவ, 

“ஆமா யஷு மாமா. நான் ஸ்கூலுக்கு போனதே அஜு அம்மா கூட சண்டை போட்டதால தான். டுவல்த் அப்போ டெல்லிக்கு டூர் பிளான் போட்டிருந்தாங்க ஸ்கூல்ல. அம்மா அனுப்பவே முடியாதுனு சொல்லிட்டாங்க. நான் அஜுவை மட்டும் போக சொன்னேன். அவன் நான் இல்லாம போக மாட்டேன்னு சொல்லிட்டான். இப்ப காலேஜ் முதல் வருஷமும் கேரளா டூர் வந்தது. அம்மா அதே தான் சொன்னாங்க. ஆனா நான் ஃபோர்ஸ் பண்ணி அஜுவ மட்டும் அனுப்பிச்சேன். அவன் பிக்ஸ் காட்டினான் மாமா ரொம்ப அழகா இருந்தது அந்த ஊர்” என்று கூறினாள்.

அவளைத் தன் முன்னே நிறுத்தியிருந்தபடி கதை கேட்டவனுக்கு அந்த குரலில் கொள்ளை கொள்ளையாய் வழிந்த ஏக்கம் தெளிவுறத் தெரிந்தது.

 “இப்ப நீ வந்தது..?” என்று யஷ்வந்த் வினவ,

 “நான் சொன்னப்ப நீ ஏன் இதுக்குலாம் ஓகே சொன்னனு கேட்டாங்க..” என்று மீதியைக் கூறாமல் தயங்கினாள்.

“யஷு மாமா தான் கண்டிப்பா வரனும் சொன்னாங்கனு சொல்லிருப்பியே” என்று அவளைக் கணித்தவனாய் அவன் வினவ, விழிகள் விரியத் திரும்பியவள் முகத்திற்கு வெகு அருகே அவன் முகமும், முகத்தில் அவன் மூச்சுக் காற்றும்.

அதில் மேலும் அவள் விழிகள் விரிய, அவள் கண்களில் புரிந்தறியா உணர்வை உணர்ந்தவன் இதழில் மெல்லிய புன்னகை குடிகொண்டது. “என்ன சரியா சொல்லிட்டேனா?” என்று அவன் வினவ, 

“அ..அது மாமா.. அம்மா திட்டுவாங்க அதான்” என்றாள்.

“இனிமே திட்டினா என்னை காரணம் சொல்லாத. எனக்கு இஷ்டம் நான் போறேன்னு தைரியமா சொல்லு. சரியா?” என்று அவன் கூற, மெல்ல தலையை உருட்டினாள்.

 “உங்கண்ணன் என்ன சொன்னான்?” என்று யஷ்வா வினவ, “ஆதிண்ணா என்ன சொல்ல போறாங்க மாமா? அண்ணா ஹாப்பி தான்” என்றாள்‌.

“ப்ச்.. அவங்க இல்லை. உன் கூடவே பிறந்துருக்கானே..” என்று யஷ்வா கூற, 

“அஜுவா?” என்றாள். 

“ம்ம்..” என்று யஷ்வந்த் கூற, 

“அவன் ரொம்ப ஹாப்பி மாமா. நிஜமா அமேரிக்கா போறியா அஞ்சு? அன்னா வின்டோர் போறியா அஞ்சு? எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்குடானு அவ்வளவு சந்தோஷமா பேசினான்” என்று பரவசமாகக் கூறினாள்.

அதில் மெல்ல புன்னகைத்தவன் “சரி பிரஷ்ஷாகிட்டு வா. சாப்பிட போகலாம்” என்று அவன் கூற,

 “ம்ம்” என்று சென்றாள். அவன் மனம் அவளது ஏக்கப் பேச்சுகளில் உழன்றுக் கொண்டிருந்தது.

'இப்படியும் ஒரு தாயா? அதிகப்படியாய் தன் மகளை காக்கின்றேன் என்ற முயற்சியில் அவளது சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட இழக்க வைத்திட்டாரே? அவள் குரலில் தான் எத்தனை ஏக்கம்’ என்று அவன் உள்ளம் பரிதவிக்க, அவள் காணாத உலகை அவளுக்குக் காட்டிவிடும் உத்வேகம் அவனிடம் எழுந்தது.

அதே நேரம் தமிழ்நாட்டுக்கு மிக அருகே உள்ள கேரளத்திற்கும், தில்லிக்கும் அனுப்பிடாத அவளை அமேரிக்காவுக்கு கூட்டிவந்திட்ட கர்வம் அவனிடம் எழுந்தது. புத்துணர்ச்சி பெற்று அழகிய இளம் ஊதா நிறத்தில் ஒரு முழுக்கை மேல் சட்டையும் அடர் நீல நிற ஜீன்ஸும் அணிந்துக் கொண்டு தனது ஸுவெட்டருடன் வந்தவள் “நான் ரெடி மாமா” என்று கூற,

 “பூட்ஸ் போட்டுக்கோடா. நான் ரெடியாயிட்டு வரேன்” என்றான்.

சென்று தானும் அடர் சிகப்பு நிறத்தில் சுவெட்டர் போன்ற முழுக்கை சட்டையும் கருப்பு நிற ஜீன்ஸும் அணிந்து வந்தவன், குளிர்காலத்தில் தாய் பாதுகாப்பாய் தயார் செய்த குழந்தையைப் போல் ஸுவெட்டரெல்லாம் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவளைக் கண்டான்.

அவளைப் பார்த்து ஆடவன் பக்கென சிரித்திட, மெல்ல எழுந்தவள் “ஏன் மாமா சிரிக்குறீங்க?” என்றாள்.

 “நீ உன்னை கண்ணாடில பாரேன். கோழிக்குஞ்சு மாதிரி தான்டி இருக்க” என்று கூற, 

அவனை முறைத்தவளோ “அப்படி தான் இருக்கேனா?” என்று பாவம் போல் கேட்டாள்.

“ம்ம் ஆமா” என்றவன் 

“வா” என்க, 

“நீங்க சுவெட்டர் போடலை?” என்றாள். 

“எனக்கு இந்த குளிர் பழகிடுச்சு அஞ்சு. இந்த ஷர்டே சுவெட்டர் டைப் தான்” என்று அவன் கூற,

 “எனக்கு இன்னும் ரெண்டு சுவட்டெர் போட்டாலும் குளிரும் போல இருக்கு மாமா” என்றாள்.

லேசாய் நகைத்தவன் அவளைக் கூட்டிக் கொண்டு கீழே வந்திட, இருவருக்குமான இரவு உணவை வரவழைத்துக் கொண்டனர். வெளிநாடுகளில் அவர்கள் உணவு கலாச்சாரத்தில் ஒன்று வைன். அங்குள்ள குளிருக்கு உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைப்பதற்காக அவர்கள் எடுத்துக் கொள்வர். ஆதலால் அனைத்து உணவகங்களிலுமே மதுபானம் விநியோகிக்கப்படும் ஒன்றாகும்.

தங்களைச் சுற்றியுள்ள அனைத்து மேஜையிலும் வண்ண வண்ண மது பானங்களும், கோப்பைகளும் இருப்பதைக் கண்டு அதிர்ந்து விழி விரித்தவள் சட்டென தன் தலையை குனிந்துக் கொள்ள, அவள் செயலை கவனித்த யஷ்வந்த் முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை தன் மீசைக்குள் புதைத்துக் கொண்டான்.


Leave a comment


Comments


Related Post