இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-12(2) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 31-03-2024

Total Views: 38263

அத்தியாயம் -12(2)


உணவை முடித்துக் கொண்ட இருவரும் மீண்டும் தங்கள் அறைக்கு வர, தனது அலைபேசியை எடுத்துக் கொண்டு வினோத்துடன் பேசிவிட்டு வந்த யஷ்வந்த் பால்கனியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் வந்தான்.

“சனா.. லேட்டாச்சு தூங்கலாம் வா” என்று அவன் கூற, 

“மாமா எனக்கு சுத்தமா தூக்கமே வரலையே” என்றாள். 

“டைம் வேரி ஆகுது இல்லையா. இப்ப இந்தியால மார்னிங் தானே அதான் தூக்கம் வரலை. வந்து படுத்தா டயர்ட்னஸ்கு தூக்கம் வந்துடும் சனா. நாளைக்கு ஈவினிங் போட்டிக்கு பிரஷ்ஷா போக வேணாமா? வா” என்று விளக்கம் கொடுத்து அழைத்து வந்தான்.

அவனுடன் படுத்தவள் அவன் கூறியதைப் போல் களைப்பில் சில நிமிடங்களிலேயே தூங்கிப் போனாள். தன்னோடு பேசிக் கொண்டே இருந்தவளது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு அலைபேசியில் பேசிவிட்டு வந்தவன் பச்சைக் குழந்தையாய் அவள் உறங்குவதைக் கண்டு விழிகள் விரிய நின்றான்.

“நீ வளரவே இல்லடி சனா.. யது இப்படி தான்‌ சித்தா சித்தானு பேசிகிட்டே இருப்பான்.. ரெண்டு நிமிஷம் பேச்சையே காணுமேனு பாத்தா நல்லா தூங்கிட்டு இருப்பான்” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட, “ம்ம்” என முகம் சுருக்கி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அதில் மீண்டும் புன்னகைத்தவன் தானும் படுத்துக் கொள்ள மனையாளின் வாசம் அவனையும் உறங்க வைத்தது. 

அவள் முகம் தெளிந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே அவளை காலை விரைவே எழுப்பாதவன் சற்று தாமதமாகவே எழுப்பினான். அதற்கே அவனை ஐந்து நிமிடம் போராட வைத்தாள் என்பது வேறு கதை.

அவளைக் குளிக்க அனுப்பியவன் உடை மாற்றும் அறைக்குள் இருக்கும் சிறு கண்ணாடி மேஜையில் அவளுக்கு அணிவிக்க வேண்டிய அனைத்தையும் எடுத்து வைத்தான்.

குளித்து முடித்து குளியல் அங்கியுடன் உள்ளே வந்தவள் அவ்வறையை விழிகள் விரிய கண்டபடி வந்தாள். புடவைக்கு தோதாக அவன் வாங்கிய நீலமணி கற்கள் கொண்ட ஆபரணங்கள் அனைத்தையும் அவன் தயார் செய்துகொண்டிருக்க, மேஜையில் ஒரு சிறு குறிப்பேடு இருந்தது.

அதை பாவையவள் எடுத்துப் பார்க்க, எந்த தோரணையில் புடவையை அணிவிக்கலாம் எப்படியான ஆபரணங்கள் பூட்டலாம் போன்று வரைந்து வைத்த குறிப்புகள் இருந்தன. 

'அம்மாடி.. மாமா இதை கட்டுறதுக்கே இவ்வளவு எஃபர்ட் போடுறாரே' என்று எண்ணியவள் அப்புடவை அவனது நான்கு ஆண்டு உழைப்பு என்று அவன் கூறியதை எண்ணிப் பார்த்து சிலிர்த்துக் கொண்டாள்.

அவள் வந்ததைக் கண்டு திரும்பியவன் குறிப்பேடை வாங்கி அதில் பார்வையை சுழல விட்டபடி, 

“க்விக் சனா.. சீக்கிரம் கிளம்பனும்” என்க, அவனையே குறுகுறுவெனப் பார்த்தாள். 

அவள் அசையாது இருப்பதில் எரிச்சலுற்றவன் “கமான் சனா.. விளையாடாத” என்று கூற, 

அவனுக்கு பின்னே வந்து நின்று அவன் பரந்த முதுகில் தன் பிஞ்சு கரங்கள் பதிய அழுத்தியபடி அவனைத் தள்ளிக் கொண்டு அவ்வறை வாசலில் விட்டு கதவடைத்தாள்.

பின்பே அவளது குறுகுறுப்பு பார்வை புரிய, இதழ்கள் விரித்து முத்து முறல்கள் மின்ன சிரித்தவன், அதே சிரிப்புடன் தான் பாதுகாப்பாய் பத்திரப்படுத்தி கொண்டுவந்த புடவையை சென்று எடுத்தான்.

கதவை திறந்தவள் “மாமா புடவை?” என்க,

 “குடுத்தா மட்டும் அம்மணி ரொம்ப பெர்பெக்டா கட்டிடுவீங்க” என்றவன் 

“மேல ஷர்ட் எதும் போட்டுக்க சனா நானே கட்டி விடுறேன்” என்று அவளை சங்கடப்படுத்தாத விதமாகவே பேசினான்.

முதலில் யோசனையாய் விழித்தவள், “சனா க்விக்” என்ற அவனது அதட்டலில் அவன் சொல்படி செய்தாள். 

படைத்தவனே அப்படைப்பை தன் கைப்பட, தனது ரசனைக்கும் புடவையின் நேர்த்திக்கும் ஏற்ப அதை கட்டினான்.

அவன் கவனம் முழுதும் புடவையை நேர்த்தியாய் கட்டுவதிலேயே இருக்க, அவள் தான் கவனமின்றி தவித்து நின்றாள். அவளவன் ஸ்பரிசம் கொடுக்கும் புரிந்தறியா உவகைக்கும் அவளது கருத்துக்களுக்கும் இடையாக அவள் போராடிக் கொண்டிருக்க, 

பாதி புடவையைக் கட்டி முடித்தவன், “சனா.. முந்தி வை வரேன்” என்றபடி அவளுக்கான ஆபரணங்களை தெரிவு செய்து கொண்டிருந்தான்.

'என்ன என்னை வைக்க சொல்றாரு?’ என்று அவள் திருதிருக்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஏதோ கூற வருவதைக் கண்டவள் “சனா க்விக்.. அதானே” என்றாள். 

அவனுடைய தோரணையில் மெல்லியாளின் மென்மையான குரலைக் கேட்டு புன்னகைத்தவன் “விளையாடாதடி” என்றான். 

முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டவள் திரும்பி அவன் சொன்னதை செய்ய முற்பட, தானும் தனது வேலையை தொடர்ந்தான்.

முதல் முறை மடிப்பு வைத்துப் பார்த்தவள் புடவை கசங்குவதில் பதறி, அதை தன் தோளில் மிதக்கவிட்டுக் கொண்டு அவனிடமே சென்று நின்றாள். 

“உன்னை மடிப்பு வைக்க சொல்லி நான் சொன்னேனா? இதுக்கு ஃப்ளோடிங் தான் நல்லா இருக்கும் சனா. எதுக்கு தேவையில்லாம ட்ரை பண்ற? புடவை கசங்கப் போகுது” என்றவன் மிதக்கவிட்டபடியே ஊக்கிட்டு அவளுக்கு அந்த நீலமணி கற்கள் பதித்த கழுத்தை ஒட்டிய கழுத்தணியை பூட்டினான்.

காதுகளில் பெரிய பெரிய ஜிமிக்கிகள் போட்டுக் கொண்டவள் கைக்கு வளையலையும் போட்டுக் கொள்ள, அவளை புருவம் சுருக்கி இரண்டு நிமிடம் விடாது நோக்கினான்.

“எ..என்ன மாமா?” என்று அவன் பார்வையில் அவள் திணறலாய் வினவ, 

“சனா வளையல கழட்டு” என்றுவிட்டு சென்றவன் எதற்கும் இருக்கட்டுமென அதே நிறத்தில் வாங்கிய கண்ணாடி வளையல் எடுத்து வந்து அந்த பட்டை வளைகளுக்கு இடையே கலகலக்கும் கண்ணாடி வளைகளைப் பூட்டினான்.


அளவான ஒப்பனையை முடித்தவன், “எனக்கு ஹேர் ஸ்டைல் பண்ண அவ்வளவா வராது. நீயே பண்ணு நான் ஓகேவா சொல்றேன்” என்க, “எப்ப சொல்றீங்க? வளையல் போடும் முன்னவே சொல்லிருக்கலாமே மாமா” என்று கேட்டுக் கொண்டபோதும் அவன் சொன்னதை செய்தாள்.

அவள் இரண்டு மூன்று முறை வெவ்வேறு அலங்காரம் செய்தும் வேண்டாம் வேண்டாம் என்று அவன் கலைத்திட, “மாமா கை வலிக்குது மாமா” என்று கெஞ்சினாள்.

 “ப்ச்..” என்று எரிச்சலுற்ற போதும் அவளது முகம் காண பாவமாக தான் இருந்தது.

இணையத்தில் அலசி ஒரு சிகை அலங்காரத்தை அவன் காட்ட, அதை போட்டு முடித்தாள். அது அவனுக்கு திருப்தியளிக்கவே மேலும் அலங்காரங்களை சரி பார்த்தான்.

அனைத்தும் முடிய அவளை திருப்தியோடு பார்த்தவன் “அவ்சம் சனா” என்று கூற, 

அவளுள் ஒரு இன்பப் படபடப்பு. தாமதியாமல் அவளை அழைத்துக் கொண்டு அவர்களுக்காக காத்திருந்த உயர் ரக மகிழுந்தில் புறப்பட்டனர்.

“ஜெர்கின் போட்டுக்கோ சனா அங்க போய் ரிமூவ் பண்ணிக்கலாம்” என்று காரின் ஹீட்டர் இதம் தராது மேனியின் குளிர் தாங்காது அமர்ந்திருப்பவளைக் கண்டு அவன் கூற, 

“இல்ல மாமா.. நான் அதை போட்டு கலட்டினா எதாவது எசகு பிசகா பண்ணிடுவேன். வேணாம். அங்கயும் ஹீட்டர் இருக்குமே. கொஞ்சம் நேரம் பொறுத்துக்குறேன்” என்றவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

சிலநிமிடங்களில் அந்த அருங்காட்சியகத்தில் போட்டியாளர்களுக்கான தனிப்பட்ட பாதை வழியே உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். போட்டி துவங்கும் முன் எந்த ஊடகத்தாரும் உள்ளே அனுமதிக்கப்படாதபடி அமைத்திருக்க, தடையின்றி உள்ளே சென்றனர்.

மேடை போன்று அமைக்கப்படு அதன் பின்னே அனைவருக்கும் தனித்தனியே இடம் அமைக்கப்படிருக்க, தங்களுக்கான எண் கொண்ட திரைமறைவுக்கு சென்றனர். மீண்டும் ஒருமுறை அஞ்சனாவின் அலங்காரத்தை சரிபார்த்தவன் அவளை நோக்க, விழிகளில் ஒருவித பயத்துடன் நின்றாள்.

“என்னடா?” என்று யஷ்வந்த் வினவ, 

“மா..மாமா நிறைய பேர் இருக்காங்களே. நான்..நான் சொதப்பிட்டேனா?” என்று கேட்டாள். 

“ஜஸ்ட் ஒரு வாக் தான் அஞ்சு. அதுவும் நிமிர்ந்து நல்லா உன்னோட ஃபுல் ஸ்மைலிங்கோட நடக்கபோற. அவ்வளவே தான். அன்ட் சாரிய லைட்டா வேவ் பண்ணி திரும்பி நட போதும். நீ நடக்குறதுக்குலாம் யாரும் மார்க் குடுக்க போறதில்லை. அதனால பயப்படாம இரு” என்று அவளுக்கு அவன் ஆறுதல் கூற, தெளிவின்றி தலையசைத்தாள்.

மென்மையாய் அவள் கன்னம் பற்றியவன் அதனினும் மென்மையாய் அவள் உச்சந்தலையில் தானாக முன்வந்து வழங்கும் முதல் அச்சாரத்தைப் பதிக்க, அவள் உள்ளங்கால்கள் இரண்டும் சில்லிட்டுப் போயின. அந்த உள்ளங்கால் சிலிர்ப்பை அவன் கரத்தினை அழுந்தப்பற்றி அவனுக்கே கடத்தியவள் தனிச்சையாய் நகர்ந்து கொள்ள, சிறு புன்னகையுடன் 

“நான் ஸ்டேஜுக்கு கீழ தான் நிற்பேன். என்னை மட்டும் பாரு ஓகே? நீ திரும்ப நடந்து முடிச்சதும் நான் வந்துடுவேன்” என்று கூறி சென்றான்.

சில நிமிடங்களில் போட்டியாளர்கள் யாவரும் வந்துவிட, ஊடகத்தாரும் வந்து சேர்ந்தனர். போட்டியை நடத்தும் அருங்காட்சியகத்தை சேர்ந்தோர் வந்தவர்களுக்கு வணக்கவுரை முடித்து, போட்டியைத் துவங்கவேண்டி உள்ளே நின்றிருந்த மாடல்களை  வரிசைப்படுத்தினர்.

அஞ்சனாவுக்கு அருகே நின்றிருந்த பெண்ணொருத்தி அஞ்சனாவைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருக்க, இரண்டு மூன்று முறைக்கு மேல் அதை கவனித்த அஞ்சனாவுக்கு அந்த பெண்ணின் பார்வை ஏதோ போல் இருந்தது.

அங்கு யஷ்வந்தின் அருகே வந்தமர்ந்த அர்ஷித், “நாலு வருட உழைப்புக்கு மனைவியவே மாடலராக்கி கூட்டிட்டு வந்தாச்சு போல.. மிஸ்டர் யஷ்வந்த் கிருஷ்ணா?” என்று நீளமாக வினவ, 

“வை நாட்?” என்று இரண்டே வார்த்தைகளில் பதில் கொடுத்தான்.

வினோத்தும் குணாவும் அவ்விடம் வந்துவிட, யஷ்வந்தையும் அர்ஷித்தையும் அருகருகே பார்த்த இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட வினோத் மற்றும் குணா, 

‘அப்பனே முருகா.. புலியும் சிறுத்தையும் ஒன்னா உக்காந்து எங்க உசுர எடுக்குதே’ என்று புலம்பிக் கொண்டனர்.

போட்டி துவங்கி ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்த புகழ் பெற்ற நிறுவனத்தாரின் பெயர்கள் அறிவிக்கப்பட, அவர்களின் படைப்புகள் தாங்கிய பெண்கள் மற்றும் ஆண்கள் நடந்து வந்தனர்.

'மிஸ்டர் யஷ்வந்த் கிருஷ்ணா ப்ரம் யுவனா இன்டஸ்ட்ரீஸ், இண்டியா’ என்று ஒலிவாங்கியில் கூறப்பட்டதும், யஷ்வந்தின் விழிகளில் பளபளப்பு கூட, உள்ளே ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு மெல்ல நடையிட்டு வந்தாள் அஞ்சனா.

கண்களில் குழந்தைத்தனமான புன்னகை, இதழில் வசீகரிக்கும் புன்னகை, மென்மையான முகமதில் வீற்றிருக்கும் துளியளவு கர்வமும், கொள்ளை கொள்ளையான கனிவும் அவளை அத்தனை அழகாய் காட்சிப்படுத்தின.

அங்குள்ள மெல்லிடை மாடல்களுக்கு மத்தியில் பூசிய புசுபுசுவுடலுடன் பாந்தமாய் புடவையைத் தழுவிக் கொண்டு, தன்னவன் கூறிய தோரணையில் நடந்து வந்தவள் பார்வை மொத்தமும் அவனிடமே! அதில் அவன் கண்கள் கர்வத்தை பிரதிபலித்ததுவோ?

அங்குள்ள அத்தனை பேரின் கண்களும் அவளையே வியந்து நோக்க, சில கண்கள் அவளையும், சில அவள் தழுவிய புடவையையும் ரசித்தது!

“ஜஸ்ட் வாவ்” என்று தன்னை மறந்த நிலையில் அர்ஷித் முனுமுனுக்க, யஷ்வந்த் இதழில் ஒரு வெற்றிப் புன்னகை.

 முந்தானையை சுழற்றியபடி திரும்பியவள் மீண்டும் உள்ளே சென்றிட, அடுத்ததாக அர்ஷித் பெயர் கூறப்பட, அழகிய இளம் மாதுவவள் அவன் தயாரித்த உடையணிந்து தோரணையாய் நடையிட்டு வந்தாள்.

அவளைக் கண்டு யஷ்வந்த் தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி, “ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ” என்று கூற, “பட் ஐ எக்ஸ்பெக்டட் திஸ் ஷாக் ஃப்ரம் யூ” என்று அர்ஷித் கூறினான். 

மேடையில் புன்னகையுடன் அவன் தயாரித்த நீள்சட்டையை அணிந்திருந்த மதுமஹதி கிருஷ்ணா யஷ்வந்தைப் பார்த்து மேலும் ஒரு இன்ச் புன்னகைக்க, “காட்ஜியஸ் டிசைனிங் காட் மோர் காட்ஜியஸ் பை மை சிஸ்டர் (அழகிய உடை என் தங்கை அணிந்ததில் மேலும் அழகு பெற்றது)” என்றுவிட்டு தன்னவளைக் காண எழுந்து சென்றான்.


Leave a comment


Comments


Related Post