இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...22 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 01-04-2024

Total Views: 34615

பெங்களூருவின் மையப் பகுதியில் இருந்த அந்த அம்மன் கோவிலில் ஆங்காங்கே குழுக்களாக பிரிந்து இன்னும் நான்கு திருமணங்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு தரணி மற்றும் முகிலனின் குடும்பத்தினர் வந்து அமர்ந்திருந்தனர். முகிலனை தரணியும் மீராவை பூச்செண்டும் கழுத்தில் மாலையிட்டு அழைத்து வந்து மணவறையில் அமர வைத்து அவர்களின் பின்னே நின்று கொண்டனர். தமிழ் தெரிந்த புரோகிதர் வரவழைக்கப்பட்டு மந்திர உச்சாடனங்களுடன் திருமண நிகழ்வு ஆரம்பித்தது. பெரியவர்கள் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி… மீராவின் முகத்தில் மட்டும் ஒரு சிறுவாட்டம்… ஆழமான காதல் அடையாளம் கண்டு கொள்ளாத என்ன…? 


அவள் கரத்தை இதமாய் பற்றி “என்னாச்சுடா…?” மெல்லிய குரலில் கேட்டான் முகிலன்.


“அம்மாவும் அப்பாவும் உயிரோட இருந்திருந்தா இப்படி ஒரு நல்ல குடும்பத்தில நான் வாழப் போறதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்க முகி… எனக்குதான் யாருமே இல்லையே… நான் வாழப்போற குடும்பத்துக்கு நல்ல சொந்தங்களை கொடுக்க முடியலையே…” சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.


“ஏய் பைத்தியம்…” தனது கைக்குட்டையால் அவசரமாய் அவள் கண்களை துடைத்தான். மற்றவர்களும் புரிந்து கொண்டனர்… குறிப்பாக பாட்டி நகர்ந்து வந்து அவள் கரத்தை பற்றிக் கொண்டார்.


“எதை நெனைச்சும் வெசனப்படக்கூடாது ராசாத்தி… நாங்க இம்புட்டு பேரு ஒனக்கு இருக்கோம்.‌. பொறந்தவன் கொறைய தீர்க்க தரணி இருக்கியான்… மல்லிகாவுக்கும் மருமகனுக்கும் நீயும் ஒரு மவதேன்… எந்த கலக்கமும் வேணாம்… சிரிச்ச மொகமா கழுத்துல தாலியை வாங்கு… எல்லாரும் ஒரு குறையும் இல்லாம நல்லா இருப்பீக…” மனப்பூர்வமாய் அடி மனதில் இருந்து பேசினார் பாட்டி.


“மீரா…be happy… don't cry… no emotions ok…” குனிந்து அவள் தலையை செல்லமாய் ஆட்டியபடி கூறினான் தரணி.


நிமிர்ந்தவன் எதார்த்தமாய் தன் அருகில் நின்றிருந்த பூச்செண்டை திரும்பி பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன என்று புருவத்தை ஏற்றி இறக்கினான். ஒன்றுமில்லை என்று தலையசைத்தாலும் அவளது முகமும் வாடி இருந்ததை கவனித்தான். தங்கள் திருமணம் நடந்த தருணங்களை எண்ணி வாடி இருக்கிறாளோ என்று தோன்றியது. அவனுக்குமே அந்த நிகழ்வு மனதுக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தியது.


அந்த நொடியில் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அவள் துடித்து அழுத காட்சி கண்முன் விரிந்தது. அவள் மனதில் முகிலன் இல்லைதான்… ஆனால் திடீரென எதிர்பாராமல் வீட்டிற்கு விருந்தாளியாய் வந்த ஒருவன் தாலி கட்டி கணவன் ஆவான் என்று கனவிலும் கற்பனை செய்திருக்க மாட்டாளே… என்னதான் படித்திருந்தாலும் கிராமத்து கலாச்சாரங்களுக்குப் பழகி அங்கேயே வளர்ந்த பெண். சட்டென தன்னை கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாததால்தான் அந்த ஒதுக்கமும்… அன்னியத்தனமான பார்வையும். அன்று கதவடைத்து உள்ளே அமர்ந்து கொண்டதும் கூட மனதளவில் ஒட்ட முடியாத நிலையில்தான். நான்தான் புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடி அவளை மேலும் சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டேன். 


அவளிடம் மனம்விட்டு பேச வேண்டும். அவசர கல்யாணம் என்றாலும் என் ஆழ்மனதில் துளிர் விட்டிருந்த அந்த காதல்தான் தைரியமாக தாலி கட்டங் சொல்லி தூண்டியது என்பதை விளக்க வேண்டும்‌. நிறைய சீண்டலும் சண்டையுமாய் இன்றைய நாட்கள் அழகுதான்… ஆனால் நிறைவான காதல் இருவரிடம் இருந்தும் வெளிப்படுவது எப்போது…? என்னவள் என்னை புரிந்து கொள்வாளா…? இப்பொழுதெல்லாம் அவளை நிறைய காதலிக்கிறேன்… ரசிக்கிறேன்… உரிமையாக என் கண்கள் எல்லைமீறல் வேலை செய்கின்றன… அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது… அடுத்த கட்டம் நோக்கிய பயணம் எப்போது…? 


ஏதேதோ சிந்தனையுடன் நின்றிருந்தவன் கெட்டிமேளம் முழங்கும் சத்தத்தில் கலைந்து தன்னுணர்வு பெற்று திரும்பினான். முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் மீராவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை உரிமையான மனைவியாக மாற்றி இருந்தான் முகிலன். அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர்… அட்சதை தூவி நெஞ்சில் கை வைத்து மேலே பார்த்து வணங்கி தங்களது ஆசீர்வாதங்களை தெரிவித்தனர் பெரியவர்கள்… சிறு சிறு சடங்கு சம்பிரதாயங்களை செய்யும்படி பாட்டி அறிவுறுத்திக் கொண்டிருக்க பெரியவர்களும் மணமக்களுடன் இணைந்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்க அவர்களிடம் இருந்து மெல்ல நழுவி கோவிலின் பக்கவாட்டிற்கு நகர்ந்து சென்றிருந்தாள் பூச்செண்டு. அவளையே கவனித்தபடி இருந்த தரணியும் மெல்ல அவள் பின்னே சென்றான்.


நீளமான திண்டில் அமர்ந்தவள் சற்றுத் தள்ளி அம்மியில் கால் வைத்திருந்த மீராவிற்கு குனிந்து அமர்ந்து அவள் காலில் மெட்டி அணிவித்துக் கொண்டிருந்த முகிலனையும் அவன் முகத்தில் தெரிந்த சிரிப்பையும் மீராவிடம் தெரிந்த வெட்கத்தையும் பார்த்தவளுக்கு ஏனோ கண்களை கரித்துக் கொண்டு வந்தது. திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறைதானே… நிறைய மகிழ்ச்சியும் குதூகலமுமாய் ஒவ்வொரு நொடிகளும் இதயப் பெட்டகத்திற்குள் இனிமையாய் சேமிக்கப்பட வேண்டிய தருணம். ஆனால் எனக்கு மட்டும் அது ஏன் வாய்க்கவில்லை…? அன்று சிரிப்பை தொலைத்து கண்ணீர் மட்டும்தானே என் கண்களில் நிறைந்திருந்தது.


குனிந்து தன் கால் விரல்களைப் பார்த்தாள். கலாட்டா கல்யாணத்தில் காலுக்கு மெட்டி அணிவிக்கும் சடங்கு ஒன்றுதான் குறையோ…? தடதடவென தாலி கட்டிய நிகழ்வைத் தாண்டி வேறு எந்த சடங்குகளும் நடக்கவில்லையே… மணமகள் அலங்காரத்திற்காக நிறைய திருமணங்களுக்கு சென்று இருக்கிறாள்… வெவ்வேறு விதமான சடங்கு சம்பிரதாயங்களை பார்த்திருக்கிறாள்… அவளுக்குள்ளும் நிறைய ஆசைகள் கனவுகள் இருந்திருக்கின்றன… இன்று ஏனோ ஒவ்வொன்றையும் பார்க்கும்போது மனது மிகவும் கனத்துப் போனது. உதடு கடித்து அழுகையை கட்டுப்படுத்தியபடி தலையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.


திடீரென காலில் ஏதோ ஊர்வதுபோல் தோன்ற திக்கென திரும்பியவளின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவள் காலடியில் மண்டியிட்டு ஒரு காலை மடக்கி அமர்ந்து அவள் பாதங்களை தூக்கி தன் தொடையில் வைத்து புது வெள்ளி மெட்டியை அவள் விரல்களில் அணிவித்துக் கொண்டிருந்தான் தரணி. பிரமித்த நிலையில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பூச்செண்டு. மெட்டி அணிவித்த விரல்களை மெல்ல வருடினான்‌.. மெட்டியால் பாத விரல்களுக்கு அழகு வந்ததா…? அவளது விரல்களால் மெட்டி அழகு பெற்றதா…? மெல்லிய ஆராய்ச்சி வேறு. அவனே அவளுக்காக ஆசையாக எடுத்த மெட்டி… அத்தனை பாந்தமாய் விரல்களில் பொருந்தி இருந்தது.


மென்புன்னகையுடன் மெல்ல நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்… மயிலிறகு இமைகளுடன் உருண்ட விழிகளில் நீர் கோர்த்திருந்தன… அவள் ஏக்கம் உணர்ந்து உடனடியாக நிறைவேற்றப்பட்ட ஆசை… அவளே எதிர்பார்க்காத ஒன்று… இதன் பெயர் என்னவாம்…? குறும்பு, கோபம், வெறுமை என்று பார்த்த அவன் விழிகள் இன்று வேறொரு பரிமாணத்தில்… அவனது மென்மையான ஸ்பரிசம்… அந்த பார்வை… உரிமையுடன் அவன் அணிவித்திருந்த மெட்டி… அவள் இதயத்தை பிழிய… தடக்கென்று கண்களை உடைத்து வெளிவந்த கண்ணீர் நிமிர்ந்து அவள் முகம் பார்த்திருந்தவனின் கன்னத்தில் விழுந்தது‌. அந்த கண்ணீர் நெகிழ்ச்சியின் வெளிப்பாடு என்பது அவனுக்கும் புரிந்தது. தன் கை உயர்த்தி அவள் கண்ணீர் துடைக்கும் முன் தானே வேகமாய் தன் கண்களை துடைத்துக் கொண்டாள். அவளையே ஆழ்ந்து பார்த்தபடி எழுந்து கொண்டவன் சற்று இடைவெளிவிட்டு அருகில் அமர்ந்து கொண்டான்.


“என்னால உன் உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுது பூச்செண்டு… இன்ஃபாக்ட் நானும் கூடதானே இந்த மாதிரி குட்டி குட்டி சந்தோஷங்களை மிஸ் பண்ணி இருக்கேன்… முகிலனுக்காக மட்டும் உன் கழுத்துல நான் தாலி கட்டல… எனக்காகவும்தான்… ஏன்னா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருந்தது…” எங்கோ பார்த்தபடி அவன் கூற அவளோ கண்களை சுருக்கி அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.


“ஒருநாள் நீ என்கிட்ட சொன்ன… என் மாமான்னா எனக்கு உயிர்னு… அதை வச்சு நீ முகிலனை லவ் பண்றியோன்னு நானும் கூட தப்பாதான் கணக்கு போட்டுட்டேன்… அ..அந்த நிமிஷம் எ..என் உயிரே போன மாதிரி ஒரு வலி. என்ன காரணம்னு அப்ப எனக்கு சரியா புரியல… உங்க கல்யாணம் முடிவான உடனே எனக்கு உரிமையான பொருளை யாரோ என்கிட்ட இருந்து வம்படியா பிடுங்குற மாதிரி ஃபீல் ஆச்சு… சிலநாள் பார்த்து பழகினதுல இப்படியெல்லாம் நடக்குமான்னு எனக்குள்ள நிறைய கேள்விகள்… ஆராய்ச்சிகள்…” 


“என்னென்னவோ நடந்து முகிலனோட பிரச்சினை பெருசாகி நின்னப்போ எல்லாருக்கும் சாதகமான முடிவா நான் உன் கழுத்துல தாலி கட்டினதா என்னை பெரிய தியாகச் செம்மல் மாதிரி எல்லாரும் நினைச்சுட்டாங்க. உண்மையை சொல்லணும்னா அந்த சூழ்நிலையை நான் எனக்கு சாதகமா ஆக்கிட்டேன்… அதுதான் நிஜம்… அந்த இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா சூழ்நிலையை வேற மாதிரி ஹேண்டில் பண்ணி இருப்பேன். ஆனா உன்னை எனக்கு உரிமையாக்கிக்கணும்னு என் மனசு சொல்லுச்சு… அதைத்தான் செஞ்சேன். உன் கழுத்துல மூணு முடிச்சு போட்டப்போ நீ முழுசா என் மனசுல இருந்த… இதை நீ எப்படி எடுத்துப்பேன்னு எனக்கு தெரியாது. ஆனா இதுதான் உண்மை… உனக்கு நடந்தது பொம்மை கல்யாணம் இல்ல… நான் மனப்பூர்வமா நேசிச்ச பெண்ணை மனப்பூர்வமா ஏத்துக்கிட்ட நிஜ நிகழ்வு…” 


“அண்ட் அன்னைக்கு நான் அவ்வளவு கோபமா நடந்துகிட்டதுக்கும் மன்னிச்சுக்கோ… அ..அது அதுவும் கூட ஒருவிதமான உரிமைப் போராட்டம்தான். நீ என்னை புரிஞ்சுக்கலையேன்னு வேதனை. அதுதான் கோபமா மாறிடுச்சு… எல்லாத்துக்குமே சாரி… பட் ஐ… ஐ லவ் யூ… இது நிஜம்…”


சொன்னவன் எழுந்து வேகமாய் அங்கிருந்து நகர்ந்திருந்தான். அவளோ சிலையென அசையாது அமர்ந்திருந்தாள். தன் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாய் பேசியதாலோ என்னவோ அனைவருடனும் சகஜமாய் சிரித்து பேசியபடி வெகு சாதாரணமாய் இருந்தான் தரணி. ஆனால் பூச்செண்டு தான் அமைதியாக இருந்தாள். அவளது கண்கள் அடிக்கடி அவனை தழுவியபடியே இருந்தன. உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள்… பளபளவென வெள்ளி மெட்டி மின்னும் தன் பாத விரல்களை அடிக்கடி ரசனையாய் பார்த்துக் கொண்டாள்… அதே ரசனையுடன் தன்னவனையும் அவள் விழிகள் தீண்டியதை அவள் மனமும் அறிந்திருந்தது. 


அவன் வெளிப்படையாய் தன காதலை கூறிவிட்டான். சமீப நாட்களாக அவளது மனமும் அவனை நோக்கி சாய்ந்து கொண்டிருப்பதை அவளும் அறியாமல் இல்லை. ஆனால் தாலி கட்டிய காரணத்திற்காக தன்னை விரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்… அதனால்தான் தன்னை சீண்டி வம்பிழுத்து அவ்வப்போது சண்டைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்றுதான் நினைத்திருந்தாள். இன்று மனம் விட்டு அவன் சொன்ன விஷயங்கள் இதய நந்தவனத்தில் வாசமிகு மலர்களை மலரச் செய்து நாசிவரை மணம் பரப்பி இருந்தன.


உடல் அடிக்கடி சிலிர்த்தபடி இருந்தது… உதட்டை கடித்து அடிக்கடி தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள். ரசனையை கண்களில் தேக்கி அடிக்கடி அவனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன அவள் விழிகள். அவனோ அவள் பக்கமே திரும்பாது பொறுப்பாக பெரியவர்களின் மத்தியில் ஒரு காலை மடித்து மறு காலை மடக்கி அதன் மேல் கையை நீட்டி வைத்து அமர்ந்தபடி சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தான்.


‘ஐ லவ் யூ ன்னு சொல்லிட்டு திரும்பிக் கூட பாக்க மாட்டேங்குது இந்த பனைமரம்… நெக்லஸ், புடவை, மெட்டி எல்லாம் பார்த்து பார்த்து செலக்ட் பண்ண தெரியுது… நான் எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்லுச்சா… ஒருவேளை என்னை அலைய வைக்கணும்னு நினைக்குதோ… நான் எதுக்கு அலையப் போறேன்…? நானா வலிய போய் காதலைச் சொன்னேன்… ஹும்…” உதட்டை சுழித்து கழுத்தை வெட்டி பிலுக்கிக் கொண்டாள் பூச்செண்டு.


‘ராசாத்தி… காதலை சொன்ன ஆளு கம்முனு கண்டுக்காமதான் உட்கார்ந்திருக்கு. உண்மையைச் சொல்லணும்னா இப்போ நீதான் அலையுற… காலையில‌ இருந்து நீயும் நெக்லஸை சரி பண்ணவும் புடவை மடிப்பை சரி பண்ணவுமா உன் புருஷன் இருக்கிற பக்கமேதான் ஷோ காட்டிட்டு திரியிற… அந்த ஆளு உன்னை திரும்பி பார்த்தாரா…?” மானத்தை கெடுத்தது மனசாட்சி.


‘என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு ஏன் கண்டுக்காம இருக்காரு…?’ கன்னத்தை தட்டி யோசித்து உதட்டை பிதுக்கினாள்.


‘அப்போ நீயும் போயி உன் லவ்வை சொல்லிடு…’


‘அஸ்க்கு…புஸ்க்கு… நான் ஒன்னும் லவ் பண்ணலையே… நானெல்லாம் சொல்ல மாட்டேன்பா…’ தோள்களை திமிராய் குலுக்க ‘அப்போ அடங்கு… என் உசுர புடுங்காத…’ எரிச்சலுடன் அவள் கன்னத்தில் ஒரு இடி இடித்து ஓடி மறைந்தது மனசாட்சி.


அனைவரும் இரவு உணவு முடித்து சாவகாசமாய் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க “ஏத்தா மீரா… ரொம்ப அசதியா இருந்தா பூச்செண்டு கூட போயி படுத்து தூங்கு… நாங்க எல்லாம் செத்தவடம் பேசிட்டு அப்புறமா படுப்போம்… நீ ஏன் உட்கார்ந்து கெடக்க… பூச்செண்டு… அவளை கூட்டிட்டு போயி உன்கூட படுக்க வச்சுக்க…” கால்களை நீட்டியபடி வெற்றிலை இடித்துக் கொண்டே பாட்டி கூற குண்டு வைத்து தகர்த்தது போல் இதயம் வெடிக்க நெஞ்சில் கை வைத்துக் கொண்டான் முகிலன்.


“டேய்… கெழவி என்னடா சொல்லுது…?” மறு கையால் தரணியின் தோள்பற்றி வேதனையாய் பார்க்க பக்கென சிரித்திருந்தான் அவன்.


“அப்போ எந்த அரேஞ்ச்மெண்ட்ஸும் இல்லையா…? வழக்கம்போல நீயும் நானும்தான் மெத்தைல உருளணுமா…? பெருசு குண்டை தூக்கி தலையில போடுதே…” தலையில் கை வைத்துக் கொண்டான் முகிலன்.


“நீதான் ஆல்ரெடி எல்லாத்தையும் முடிச்சிட்டியே… அப்புறம் என்ன அரேஞ்ச்மெண்ட்ஸ் வேண்டி கிடக்கு உனக்கு… வா… நாம போய் தூங்கலாம்… ரொம்ப டயர்டா இருக்கு…” என்றபடியே அவன் கைப்பிடிக்க வெடுக்கென உதறிக் கொண்டவன் 


“பாவி… உனக்கு ஒண்ணுமே நடக்கலேன்னு என்னையும் உன்கூட சேர்ந்து உருள சொல்றியா…? உன் பொண்டாட்டியை நீ கட்டி தூக்கிட்டு போ… யார் வேண்டாம்னு சொன்னா…? என்னை ஏன்டா என் பொண்டாட்டி கிட்ட இருந்து பிரிக்கிறீங்க…? இந்த அழுகுணி ஆட்டத்துக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்… இன்னைக்கு என்னோட ஃபர்ஸ்ட் நைட் நடந்தே ஆகணும்…” கையையும் காலையும் உதறி சிறு பிள்ளை போல் முறுக்கிக் கொண்டு நின்றவனை பார்த்து இன்னும் சத்தமாய் சிரித்தான் தரணி.


“ஏன்டா இப்படி அலையிற…?”


“டேய்ய்… கல்யாணம் முடிஞ்சா எல்லாருக்கும் நடக்குற விஷயம்தானே… சரி… உனக்கு நடக்கல… ஒத்துக்குறேன்… உன் சூழ்நிலை வேற… நீ விசுவாமித்திர முனிவர்… உன் மேனகை மனசு இறங்கி வந்து உன் முன்னால நடனம் ஆடுற வரைக்கும் நீ இப்படித்தான் இருப்ப… எங்க விஷயம் அப்படியா…? இந்த கெழவி எதுக்கு தடுக்குது…? லூசு கெழவி…” பற்களை கடித்தான்.


“மீராவோட ஹெல்த்தில இருக்கிற அக்கறைதான்… புரியலையா…?”


“மண்ணாங்கட்டி… எனக்கு அந்த அக்கறை இருக்காதோ… டாக்டர்கிட்ட எல்லாமே தெளிவா கேட்டுட்டோம்... ஃபிசிகல் ரிலேஷன்ஷிப் தப்பு இல்லைன்னு சொல்லிட்டாங்க… கொஞ்சம் பாதுகாப்பா இருக்க சொல்லி இருக்காங்க… அவ்வளவுதான்… அதுக்காக பிரிச்சு வைப்பீங்களா… என்ன கொடுமை சரவணா இது..?” தலையில் அடித்துக் கொண்டவன் பொத்தென்று மெத்தையில் அமர்ந்தான்.


சிரித்தபடி அவன் அருகில் வந்த தரணி கார் சாவியை அவன் கையில் கொடுத்து “ஹோட்டல் சவானாவில எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு… மேனேஜர் சபரீஷ் உன்னை ரிஸீவ் பண்ணிப்பார்… என்ஜாய் யுவர் டே… நாளைக்கு எப்போ தோணுதோ அப்போ வா…” சிரித்தபடி அவன் தோளில் தட்ட “டேய்ய்ய்… நண்பா…” கண்கள் விரித்தான் முகிலன்.


“ஆனா இவங்க எல்லாரும்…” என்று இழுக்க “மத்தவங்ககிட்ட சொல்லிட்டேன்… பாட்டிதானே… நான் பேசிக்கிறேன்… மீராவை கூட்டிட்டு நீ கிளம்பு…”


“நண்பேன்டா…” தரணியை இறுக்கி கட்டிக் கொண்டான் முகிலன்.


Leave a comment


Comments


Related Post