இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 01 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 01-04-2024

Total Views: 22857

அத்தியாயம் - 01

திருக்கடையூர்,

அங்கே இருந்த பெரிய வீட்டின் முன் பந்தல் போடப்பட்டிருந்தது. வெளியே சங்குச் சத்தம் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. 

கூடத்தில் ஒரு நடுத்தர வயதுடைய மனிதரின் உடல் கிடத்தப்பட்டு மாலைகளால் மூடியிருந்தது. அந்த உடலுக்குச் சற்றுத் தள்ளி இருந்த பெரிய தூணில் தன்னைச் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அஞ்சனா.

அவள் விழிகள் இரண்டும் களையிழந்து கண்ணீர் வற்றி காய்ந்துப் போயிருந்தது. விசும்பல் மட்டும் அவளிடம் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. 

கூடத்தில் படுக்க வைத்திருந்த தந்தையின் உயிரற்ற உடலைக் கண்டு கண்டு அவளும் ஒடுங்கிப் போயிருந்தாள். அவளது தாய் அபிராமி தந்தையின் மீது விழுந்து அழுதுக் கொண்டிருக்க இவள் ஜீவனைத் தொலைத்து வெறித்த பார்வையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.


சுற்றிலும் இருப்போர் எல்லாம் அவள் மீது விழுந்து விழுந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க அவள் எந்தவித உணர்வும் காட்ட மறுத்து அமர்ந்திருந்தாள்.


"அய்யோ அய்யோ என்னைப் பெத்த ராசா.. உனக்கா இந்த நிலைமை. இந்த பாவிப் பய எமன் உன் உசுரை இப்படிக் காவு வாங்கிட்டுப் போயிட்டானே.. அவனுக்கு ஒரு சாவு வராதா.." என ஓடி வந்து தன் அண்ணனின் அருகே அமர்ந்து அழுதே கதறினாள் லட்சுமி. இப்போது இறந்திருக்கும் சங்கரனின் ஒரே தங்கை. அண்ணன் மீது அதீத பாசம் அவளுக்கு.

"அஞ்சும்மா உங்க ஐயா நம்மளை எல்லாம் அநாதையாய் தவிக்க விட்டு போயிட்டாரே நான் என்ன செய்வேன். பெத்த மகளுக்கு எந்தவித நல்லதும் கெட்டதும் பார்க்காமலே மனுஷன் செத்துப் போயிட்டாரே.. நல்லா இருந்த மனுஷன் இப்படியா நெஞ்சை பிடிச்சுட்டு போய் சேரணும். கடவுளே உனக்கு கண்ணில்லையா..? அந்த எமனுக்கு சாகடிக்குறதுக்கு ஆளா கிடைக்கல. எங்க அண்ணன்தான் கண்ணுக்குத் தெரிஞ்சானா. என் ஐயாவை இப்படி வாரிட்டு போயிட்டானே. இனி யாரை நான் அண்ணன்னு சொல்லுவேன். அய்யோ அண்ணே! எந்திரிச்சு வந்துடு. உன் புள்ளையை பார்த்தியா எப்படி கிடக்கா. அவளுக்காகவது நீ இருந்திருக்க வேண்டாமா?" அத்தையின் ஒப்பாரியில் வந்துவிழுந்த அந்த பெயரினை அஞ்சனாவின் மனம் கெட்டியாய் பிடித்துக் கொண்டது.  எமன். ம்ம் அவன்தான். மரணத்தினை மனம் ஏற்காமல் அதற்கு காரணம் எமன்தான் என்று தீர்க்கமாய் நம்பியது. 

அந்த நொடி முதல் சகல கடவுள்களையும் அவள் வெறுத்தாள். கூடுதலாய் தந்தையின் உயிரைப் பறித்துச் சென்றிருந்த எமனை.

இன்னமும் அவள் அப்படியே இருக்க சடங்குகள் எல்லாம் வரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைத்தையும் பொம்மை போல் அவள் செய்தாள். அவளை அடித்தும் பார்த்துவிட்டார்கள். வாய்திறந்து அவள் அழவே இல்லை. அனைத்து அழுகையும் அவளுக்குள் அடக்கியே வைத்திருந்தாள். 

தந்தையை பறிகொடுத்துவிட்டு முழுதாய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அவளால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. எங்கு திரும்பினாலும் அவர் இல்லாத வெறுமை அவளை ஓங்கி அறைந்தது. கண்களை இறுக மூடிக் கொண்டு காதுகளைப் பொத்திக் கொண்டு அவள் அமர்ந்த நிலையினைக் கண்டு அவளது அம்மா தான் "அஞ்சனா இங்க பாரு. கொஞ்சமாஞ்சும் தெளிஞ்சு வர பாருடி. இப்படி இருந்தால் உன் ஐயாவுக்கே உன்னைப் பிடிக்காது. அழுதுட்டு எந்திரிச்சுப் போய் வேலையைப் பாரு" என்று சொல்ல அவள் எந்தவிதப் பதிலும் பேசவில்லை.

ஓங்கி ஓங்கி அவரும் அவளை அடித்து அழச் சொல்ல உதடுபிதுக்கி கட்டுப்படுத்தத்தான் பார்த்தாளே தவிர அவள் அழவே இல்லை. மரணத்தினை ஏற்றுக் கொள்ள அவள் இன்னமும் பக்குவப் படவில்லை. 

அப்படியே இன்னும் இரு தினங்களில் அவள் பேச்சு மூச்சற்று விழுந்து போனாள். இப்போது மருத்துவமனையில் அவள் இருந்தாலும் அவளது நிலைமை கவலைக்கிடமாகவே இருந்தது.

"கடவுளே! புருஷனை பறிச்சுக்கிட்ட. இப்போ மனசை தேத்திட்டு இருக்குறது இந்த பொட்டப்புள்ளைக்காகத்தான். அவளையும் கொண்டு போயிடாதப்பா.." என சதா அழுதுக் கொண்டே இருந்தாள் அந்த தாய். 

பிறப்பொன்று இருக்கையில் அங்கே இறப்பு என்பதும் பொதுவான ஒன்று.  தினந்தோறும் இறப்பினையும் பிறப்பினையும் இவ்வுலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டோர் திரும்பி வரமாட்டார் என்பது உலகின் நியதி. பிறப்பு இறப்பும் சரிவர இயங்குவதால் மட்டுமே இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இறப்பிற்கு பின்னதான உலகம் எப்படிப்பட்டது என்பது எவர்க்கும் தெரியாது. அது ஒரு மர்ம உலகம். 

ஆம், அந்த மர்ம உலகம் அந்தகனுக்குச் சொந்த மானது. அந்தகன் அவனுக்கு காலன், இயமன், எமதர்மராசன் இப்படி பல பெயர்கள் உண்டு. ஆங்காங்கே ஓலக்குரல்களும் அழுகைச் சத்தமும் மட்டுமே ஒலித்துக் கொண்டு இருக்கும் இடமும் அதுதான். இறந்தோரின் ஆன்மாக்கள் எல்லாம் அங்குதான் முதலில் வருவிக்கப்படும். அதன்பின்னரே பாவ புண்ணியத்தினை கணக்குப் போட்டுப் பார்த்து சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஆன்மாக்கள் அனுப்பி வைக்கப்படும்.

இயமனுக்கு உயிரை எடுக்கும் அதிகாரம் சிவனால் தரப்பட்டிருந்தது. அழிக்கும் கடவுளின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உயிர்களை எடுக்கும் வேலையை இயமன் சிறப்பாக செய்துக் கொண்டிருந்தான். அவனது சபையில் பலர் இருந்தனர். அதிலொருவன் சித்திரகுப்தன்.

அந்த எமலோகம் இப்போது அமைதியினைப் போர்த்திக் கொண்டு காட்சி அளித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த மேடையில் சித்திரகுப்தன் உட்கார்ந்து ஏதேதோ குறிப்புகளை  எழுதிக் கொண்டிருந்தான். அவன் கையில் இருந்தது பிரம்மச் சுவடி. அதில் தான் ஒவ்வொரு உயிரின் பாவ புண்ணிய கணக்குகள் எல்லாம் குறித்து வைக்கப் படும். 

அச்சமயம் உள்ளே இயமன் பிரவேசித்தான் "சித்திரகுப்தா" எனும் விளிப்போடு.

"சொல்லுங்கள் பிரபு"

"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"


"உயிர்களின் பாவ புண்ணிய கணக்கினை குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்"

"அனுதினமும் இதே பணியை தானே செய்துக் கொண்டே இருக்கிறாய். புதிதாய் என்ன செய்து விடப் போகிறாய்?"

"பிரபு. தங்களுக்கு உயிரை எடுக்கும் பணி கொடுக்கப்பட்டது போல எனக்கு இந்த பணி. இதை நாம் தவறாமல் செய்வதாய் ஈசனுக்கு வாக்களித்திருக்கிறோம்"

சோர்வாய் தன் எருமை வடிவ அரியாசனத்தில் அமர்ந்த இயமன் "சித்திரகுப்தா! உன்னிடம் சற்று பேச வேண்டும். வா இப்படி வந்து உட்கார்" என்று அழைத்ததும் எமனுக்கு அருகே வந்து நின்றபடியே "சொல்லுங்கள் பிரபு" என்றான் சித்திர குப்தன்.


"சித்திரகுப்தா! மனம் சதா சர்வ காலமும் எதையோ பறிகொடுத்தது போல் அலைபாய்ந்துக் கொண்டிருக்கிறது. என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை"

"பிரபு! தாங்களா இப்படிப் பேசுவது. காலந்தவறாமல் கடமை ஆற்றுவதால் தானே தாங்கள் காலன் என்று அழைப்படுகிறீர்கள். தாங்களே இப்படிப் பேசினால் எப்படி?"

"அதே எமலோகம். அதே எருமை மாடு இதோ இந்த கையில் இருக்கும் பாசக்கயிறு இருபுறங்களிலும் காவலுக்கு எமகிங்கிரர்கள். எப்போது பார்த்தாலும் கேட்கும் இந்த ஓலக் குரல்கள். இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் மனம் சலிப்புத் தட்டிவிட்டது"


 "அய்யோ பிரபு. அப்படிச் சொல்லாதீர்கள். தங்களை நம்பி ஈசன் ஒப்படைத்த பணி இது. தாங்களும் அதை பொறுப்பாய் ஏற்று சிறப்பாய் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது இந்த தடுமாற்றத்தினை ஒத்தி வைத்து அடுத்த பணியினை பாருங்கள் பிரபு. தங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். சர்வேஸ்வரனை கோபப் படுத்தும் படி எதுவும் செய்துவிடாதீர்கள்" சித்திரகுப்தன் பேசிவிட்டு தன் இருப்பிடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டான். 

அவனுக்குள் இப்போது அச்சம் துளிர்விடத் தொடங்கியிருந்தது. பிரபுவுக்கு என்னாயிற்று. இப்படி பிதற்றும் அளவிற்கு அவருக்கென்ன துயர். வதனத்தினைப் பார்த்தால் என்னவென்று அனுமானிக்கக் கூட முடியவில்லையே. பரமேஸ்வரா எந்த பாவியின் கண்பட்டதோ. எம் பிரபுவின் முகம் இப்படி வாடிக் கிடக்கிறதே. மரணதேவனுக்குள் இப்படியொரு மாற்றமா? என புலம்பினாலும் அவனது கை பிரம்மச் சுவடியில் கணக்குகளை குறித்துக் கொண்டுதான் இருந்தது.

சித்திர குப்தன் தன் பணியினை பார்க்க ஆரம்பித்த பின்னருங் கூட இயமனால் இயல்பு நிலைக்கு வர இயலவில்லை. இதுபோல் அவனிருந்ததில்லை. இதன் மர்மமும் அவனுக்குப் புரியவிவ்லை. 

"சுவாமி! தங்களது முகத்தில் ஒருவித மந்தகாச புன்னகை தென்படுகிறதே. திருவிளையாடலுக்குத் தயாராகி விட்டீர்களோ?" பார்வதியின் கேள்விக்கு, "ஆம் தேவி" என்று புன்னகையுடனே பதில் சொன்னான் சர்வேஸ்வரன்.


"இந்த முறை யார் அந்த பாக்கியசாலி"

"வேறு யார் எல்லாம் எமதர்மன் தான்"

"சுவாமி எமனோடு திருவிளையாடலா? இதென்ன விபரீத விளையாட்டு. இறப்பு நின்று போய்விடுமே"

"உன் மைந்தன் பிரம்மதேவனை சிறையில் அடைத்து வைத்தான் நினைவிருக்கிறதா தேவி"

"இருக்கிறது சுவாமி"

"அப்போது பிறப்பு பாதிக்கப்பட்டதா?'

"இல்லை. மைந்தன் அந்த பொறுப்பினை ஏற்றிருந்தான்"

 "நான் அவனுக்கே தந்தை. அழித்தலுக்கான கடவுளும் கூட. நான் அந்த வேலையைப் பார்த்துக் கொள்ள மாட்டேனா தேவி"

 "தாங்களின்றி அணுவும் அசையாது. இதில் எமதர்மன் எம்மாத்திரம். நடத்துங்கள் உங்களது விளையாட்டினை" உரைத்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள் பார்வதி தேவி.

சிவனின் முகத்தில் மீண்டும் அதே மர்மப் புன்னகை. சிவன் தீர்மானித்துவிட்டான். இனி இயமன் படும் பாடு திண்டாட்டம் தான். 

அக்கணத்தில் நாராயணா நாராயாணா வெனும் நாமஞ்சொல்லியபடி நாரதன் வந்துக் கொண்டிருந்தான்.


 "என்ன நாரதா? கலகம் மூட்ட வந்திருக்கிறாயா?"


 "சுவாமி? இதென்ன இப்படிக் கூறிவிட்டீர்கள். சிவ சிவ"


 "நாரதன் எவ்விடத்தில் இருக்கின்றானோ அவ்விடத்தில் கலகம் நிச்சயம் பிறக்கும் என்பது கயிலாயம் மட்டுமல்லாது குவலயமும் அறிந்தவொன்று"


 "சுவாமி இதெல்லாம் நாரதரின் பேரில் சுமத்தப்படும் வீண் களங்கள்"


 "கலகக்காரன் நிதர்சனத்தை உடனே ஏற்றுக் கொள்வானா என்ன? அதிருக்கட்டும் நாரதா! உன்னால் எனக்கொரு காரியம் ஆக வேண்டும்"


 "ஆணையிடுங்கள் சுவாமி. தங்களின் சித்தம் என் பாக்கியம்"


 "ஒன்றுமில்லை. சில தினங்களாக இயமனுக்கு மனதில் ஏதோவொரு சஞ்சலம்"


 "நேரந்தவறாமல் காலம் முடிந்த உயிர்களை கவர்ந்து வரும் காலனுக்கே சஞ்சலமா விளங்கவில்லையே சுவாமி"


 "விளக்கமாய் சொல்கிறேன். கேட்டுக் கொள் நாரதா.." சிவன் விவரித்துச் சொன்னதும் "என்னைக் கலகக்காரன் என்று இயம்பிவிட்டு தாங்கள் அந்த பணியை பார்க்கிறீர்கள். கேட்டால் இது திருவிளையாடல் என்பீர்கள். சர்வேசா இயமன் பாவம்" என்றான் நாரதன்.

 "அப்படியெனில் என் திருவிளையாடலை உன்னிடம் இருந்து துவங்குகிறேன்"


 "வேண்டாம் பிரபு. வேண்டவே வேண்டாம். அதைத் தாங்குவதற்கு அடியேனுக்கு அத்தனை பலமில்லை"


 "அப்படியெனில் உரைத்ததை"


 "உரைக்கச் சொல்லி சொன்னோரிடம் தவறாது சேர்ப்பிப்பது அடியேனின் கடமை சுவாமி"


 "நல்லது நாரதா..." என்றதும் "நாராயணா நாராயணா" என்றபடி இயமனைத் தேடிச் சென்றுவிட்டான் நாரதன்.

இயமன் இன்னும் தன் நிலையில் இருந்து மாறவே இல்லை. சித்திரகுப்தன் தன் கடமையை முடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தபோதும் இயமன் அப்படியே தான் அமர்ந்திருந்தான்.


 "பிரபு! இப்படியே அமர்ந்திருந்தால் எப்படி?"


 "சித்திர குப்தா. நான் என் நிலையை கூறிவிட்டேன். என்னை என் போக்கில் சற்று நேரம் விடு. எனக்கும் கடமை நினைவில் இருக்கிறது"


 "தங்களின் கலக்கமான முகம் ஏனோ எனக்குள் பலவித சங்கடங்களை தோற்றுவிக்கிறது. கண்முன்னே நெற்றிக்கண் திறந்தபடி சிவபெருமான் காட்சியளிப்பது போன்றே தோன்றுகிறது"

சலிப்புடன் "ருத்ரன் சினம் எத்தகையது என்பதனை யாம் அறிவோம் சித்திர குப்தா. அந்த இன்னல் உனக்கு வேண்டா. என்னைக் குறித்தான சங்கடங்களை விட்டுவிட்டு உன் பணியில் கவனம் செலுத்து. நான் சற்று நேரம் வெளியே உலவிவிட்டு வருகிறேன்" என்றுரைத்துவிட்டு வெளியேறினான் இயமன்.

பிரம்மச் சுவடியை அவசரமாக திருப்பிய சித்திரக்குப்தன் "பிரபு! இந்த நாழிகையில் தாங்கள் எடுக்க வேண்டிய உயிர்கள் இரண்டு உள்ளது. தாங்களோ..." எனத் தயங்க


 "எம கிங்கரர்களை அனுப்பி வைத்துவிடு" இயமனாய் ஆணை பிறப்பித்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றுவிட்டான் இயமன்.

எமகிங்கரர்கள் இயமனின் ஆணையை ஏற்று பூலோகம் சென்றிருக்க இயமனோ வான் வீதியில் சஞ்சாரித்துக் கொண்டிருந்தான்.

இந்திரலோகம் செல்லலாம் என்றால் எந்நேரமும் நடனம் இசை பாடல் என்றிருக்கும் இடத்தினை நினைத்தாலே இயமனுக்கு சிறிது ஒவ்வாமை உண்டு. அதனை அறவே தவிர்த்துவிட்டு இயமலோகத்திற்கு அப்பால் உள்ள ஓர் இடத்தில் கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.

நெற்றியின் மையப்பகுதியில் கவனத்தினை குவித்தான். இழுத்துப் பிடித்த மூச்சினை கணக்கிட்டு அவன் வெளியிட அவனது பாரம் நீங்கியதைப் போலிருந்தது‌. வெகுநேரம் அமர்ந்திருந்தவன் அருகே கேட்ட அரவத்தினை உணர்ந்து விழி திறந்தான். கூடுதலாக நாராயணா நாராயணாவெனும் உச்சாடனம் வேறு.

நிமிர்ந்து பார்த்தான். நாரதன் தான் அங்கே பிரசன்னமாகியிருந்தான். 


 "நாரதரே வாருங்கள் வணங்குறேன்" என்று இயமன் அழைக்க "என்ன இயமா? முகத்தில் அந்த களையில்லையே. ஏன் இப்படி இருண்டு போய் உள்ளது" என்றான்.


 "அதற்கான காரணம் அறியாது தான் நானும் தவித்துக் கொண்டிருக்கிறேன்"


 "இயமா! நீ மரணத்துக்கே தேவன். தர்மத்தினை நிலைநாட்ட வந்தவன். உனக்குள் இப்படியான கலக்கங்களும் சங்கடங்களும் இருந்தால் உன்னால் உன் கடமையை முழுமனதோடு நிறைவேற்ற முடியாது. எதிர்ப்போர் எவராயினும் நீயும் எதிர்த்து நின்றிருக்கிறாய். ஆனால் இன்று இப்படி நிலைகுலைந்து இருப்பது எனக்கே வேடிக்கையாக இருக்கிறது"


 "தாங்கள் வேறு ஏன் நாரதரே? நானுமே என்ன செய்வது என்று புரியாத ஒரு மனநிலையில் தான் உள்ளேன்"

 "எனக்கொரு ஐயம் உண்டு"

 "என்ன நாரதரே?"

 "இயமனின் மனதிற்குள் கலக்கத்திற்கு பதில் கள்ளம் எதுவும் புகுந்துவிட்டதோ?"

 "கள்ளமா? தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்"

 "காலனுக்குள் மையல் குமிழியிட்டுள்ளது போல"

 "மையலா? நாரதரே  உங்களது வழக்கமான வேலையே என்னிடம் காட்ட வேண்டாம். எனக்குள் சினம் மூண்டால்"

 "அறிவேன் இயமா! இப்படி சோர்வுற்று கடமையை சரிவர கவனிக்காமல் இருப்பது தான் அதற்கான முதல் அறிகுறி"

 "நாரதரே. வீண் விவாதம் வேண்டாம். வந்த வழியைப் பார்த்து கிளம்புங்கள். வீணாய் என் பாசக்கயிறுக்கு வேலை வைத்துவிடாதீர்கள்"

 "சினம் அதற்கடுத்தான அறிகுறி இயமா!"

 "பரமேஸ்வரா இந்த நாரதரிடம் இருந்து காப்பாற்றுங்கள். நாரதரே எனக்கொன்றும் இல்லை. மனசஞ்சலம் எதுவும் இல்லை. இப்போதே பூலோகம் சென்று என் கடமையைத் தொடர்கிறேன். வருகிறேன் நாரதரே" என்று அவன் விடைபெற்று அங்கிருந்து ஓடிவிட சிவபெருமானே மையல் என்ற பெயரைக் கேட்டதற்கே காத தூரம் ஓடுகிறானே. தங்களின் திருவிளையாடலுக்கு இயமன் தான் அகப்பட்டானா? நாராயணா நாராயணா என்றபடி நாரதனும் தன் அடுத்த வேலையைப் பார்க்க புறப்பட்டான்.

எமகிங்கரர்கள் ஏற்கனவே தங்களது ஆணைக்கினங்க உயிரை எடுக்க வேண்டிய இடமான அதே திருக்கடையூர் ஊரினை அடைந்திருக்க இயமனும் அந்த மண்ணில் கால் பதித்திருந்தான்.

காதலாசை யாரை விட்டது...?




Leave a comment


Comments


Related Post