இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 3 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 02-04-2024

Total Views: 25244

அத்தியாயம் : 3


ஆதவன் ஒளிப்பட்டு ஆனந்தமாய் விடியல் தொடங்க, கண் விழித்த கவிநயா மகள் உறங்கும் அழகினை தான் மனவலி தீர ரசித்துக் கண்டாள். கடவுள் அவளுக்காக கொடுத்த ஒன்றை சந்தோஷமும், நிம்மதியும் உதிரம் சிந்தி பெற்றெடுத்த மகள் மட்டும் தானே !


உறங்கும் மகளின் புன்னகை முகம் அவளின் காயத்திற்கு மருந்தாக, புத்துணர்வுப் பெற்றாள். இதே போல் இன்னொரு செல்வம் தனக்கு கிடைக்காது என்பதை நினைக்கும் போதே துடிப்பே நிற்க, அதற்குள் மருந்தளித்தவள் இவள் ஒருத்தியே !


மணியைக் காண காலை ஆறு முப்பது. தன் கைபேசியை எடுத்து சமையலறையில் இருந்த லேன்லைனிற்கு அழைக்க, வெகு நேரம் சென்ற பின்னே தான் அழைப்பு எடுத்தது.


“நீலாக்கா “


“சொல்லுங்கம்மா “


“வந்துட்டீங்களா ? பாப்பா இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா ? இப்போ என்னால வர முடியாது. எல்லாருக்கும் நீங்களே எழு மணிக்குள்ள காஃபீ மட்டும் கொடுத்துறீங்களா ? அப்படியே என்ன சமைக்கணும் கேட்டிருங்க “ என்க, சரியெனக் கேட்டுக் கொண்டு அழைப்பினை துண்டித்தார்.


பின் நிம்மதியாக மகளை தடவியவாறே அமர்ந்திருக்க நேரம் செல்ல. பட்டென சத்தத்தோடு கதவு திறக்க வேகமாய் உள்ளே நுழைந்தான் நிதின்.


அந்த சத்தத்திலே குட்டிப்பெண்ணும் விழித்துக் கொண்டு அழ, இருவரையும் ஒரு பார்வை பார்த்தவனோ, “முக்கியமான கேஸ் விசியமா நான் கிளம்புறேன். சீக்கிரமா என் யூனிபார்ம் அயர்ன் பண்ணி எடுத்து வை “ குரல் கொடுத்த அடுத்தநொடி குளியலறை புகுந்தான்.


அழும் மகளை தன் மீது போட்டு தட்டிக் கொண்டே, இவன் இப்படி எந்த நொடியும் கேட்பான் என்பதை அறிந்தே ஏற்கனவே அயர்ன் செய்து வைத்த உடையை எடுத்து வைத்தாள்.


பின் கீழே வேலைக்காரியை அழைத்து சீக்கிரம் தேநீர் கொண்டு வருமாறு கூறவே, அடுத்த பத்து நிமிடத்தில் நிதின் குளியலறையில் இருந்து வெளியே வருவதற்கு முன் அனைத்தும் அவனுக்கு தயாராக இருந்தது.


“காஃபி சூடா இருக்கு. ட்ரெஸ் போட்டுட்டு குடிங்க “ மென்மையாய் கூற,


“எங்களுக்கு தெரியும் ?” எங்கோ இருந்த எரிச்சலை மனைவியிடம் தான் கொட்டினான்.


மூன்று நாட்கள் விடுப்பு எடுத்திருக்க இன்றே வருமாறு கூறியிருக்கவே அந்த எரிச்சலில் தான் கத்துவிட்டு விறுவிறுவென கிளம்பினான். தனக்கான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் மனைவியையும் சரி மகளையும் சரி கண்டு கொள்ளவேயில்லை. 


ஏழு மணிக்கெல்லாம் மகளோடு கீழே வந்தவள் நேராக தீப்தியின் அறைக்குச் சென்று மகளைப் படுக்க வைத்து சமையலறைக்குள் நுழைந்தாள்.


வேலைக்காரி காய்கறிகளை நறுக்க, அதனை வாங்கி நான்கு அடுப்பிலும் ஒன்றாகப் பற்ற வைத்து சமையலை ஆரம்பித்தாள். 


கடகடவென சமையல் வேலை நடக்க, காலை உணவு, மதிய உணவு இரண்டுமே சமைக்கக் வேண்டிய நிலை தான் ஒவ்வொரு நாளும். முதலில் சிரமப்பட்டவள் பின் பழகிக் கொண்டாள்.


துணையாய் வேலைக்காரி இருக்கவே சமாளித்து வந்தாள். எட்டு மணிக்குச் சென்று மகளை எழுப்பி குளிக்க வைத்து பள்ளி சீருடை அணிந்து அலங்கரித்து வெளியே அழைத்து வர சரியாக  எட்டரை.


மாமனார், மாமியார், தீப்தி மூவருமே உண்ண வந்து விட, மகளையும் அவர்களோடு அமர வைத்து ஒன்றாக உணவு பரிமாறி, அவர்களுக்கான லஞ்ச் பேக்கையும் உண்பதற்குள் எடுத்து வைத்து முடித்தாள்.


பின் அதனை நால்வரிடமும் கொடுக்க வாங்கிக் கொண்டு, பேத்தியையும் அழைத்து ஒன்பது மணிக்கெல்லாம் சென்று விட்டனர்.


வாசல் வரைச் சென்று அனைவரையும் வழியனுப்பி வைத்து வீட்டுக்குள் வந்தவளோ மூச்சு வாங்க, பொத்தென சோபாவில் அமர்ந்தாள்.


விழி மூடி பின் சாய வேலைக்காரி வந்து காஃபி கொடுக்கவே, இளநகை பூத்து வாங்கிக் கொண்டு பருக, இதமாய் இறங்கவே அப்படியொரு உணர்வு. 


இந்தநொடிக்கு தான் ஒவ்வொரு நிமிடமும் காத்திருப்பாள்.

“சரிக்கா ! நீங்க சாப்பிட்டு கிட்சன் கிளீன் பண்ணுங்க “ என்க,

“இவ்வளோ நேரமாகியும் இன்னும் நந்தன் தம்பியும், அந்த பாப்பாவும் வரலையே “ என்ற நொடி தான், அவர்கள் இருப்பதே இவளுக்கு நினைவு வந்தது.


“ஆமால, நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது. ஆனா இன்னைக்கு பாருங்க. எல்லாரும் அவங்அவங்க வேலையைப் பார்த்து போய்ட்டாங்க. இருந்து புதுப் பொண்ணு கூட பேசி எங்கையாவது எல்லாரும் சேர்ந்து கோவிலுக்குப் போனா சரி. ஆனா இங்க நடக்குறதே வேற ? தொந்தரவு பண்ண வேண்டாம். வரும் போது வரட்டும். நான் போய் பிரெஸ்சாகிட்டு வரேன் “ என்றவாறு அயர்வோடு மாடியேறினாள்.


மாய உலகில் இருந்து மீண்டு ஒரு வழியாக புது ஜோடிகள் இருவரும் பத்து மணி போல் தான் விழி திறந்தனர். முதலில் கண் விழித்த நந்தன் மணியைக் கண்டு தன்னோடு பின்னிப் பினைந்தவளின் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான்.


வெகு நேரமாகியதுப் புரியவே, மெல்ல தன்னிடமிருந்துப் பிரித்து எழ முயற்சிக்கும் நொடியே அஞ்சனாவும் விழித்து விட்டாள்.


“குட் மார்னிங் நந்தன் “ என்றவாறு தன்னவனின் நெஞ்சில் இன்னும் அழுத்த தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.


குட் மார்னிங் என்று கூறியதும் இல்லாமல் அவளின் செய்கை வேறு தூங்கிய உணர்ச்சிகளை கிளர்த்து எழுப்பி விட, அப்படியே படுக்கையில் சாய்த்து மனைவியை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.


முதலில் சிணுங்கியவள் பின் தன்னைக் கொடுத்து, கொஞ்சி, கெஞ்சி யுத்தங்கள் முடிந்து இருவரும் எழுந்து அமர்ந்தனர்.

இன்ப பசி தீர்ந்தப் பின்னே வயிற்றுப் பசி தெரிய, “மணி என்ன நந்தன் ?” கழுத்தை அசைத்து முறித்துக் கொண்டுக் கேட்க, பதினொன்று என்றான்.


“என்னது பதினொன்னா அச்சோ ! இவ்வளோ நேரமாச்சா ?” பட்டென பதறி, மேனியில் ஆடை இல்லை என்பதை கூட மறந்து எழுந்தாள்.


எழுந்து நின்ற பின்னே உணர்வு வந்து வேகமாய் அங்கிருந்த பெட்ஷீட்டை மூடிக் கொள்ள, “எதுக்கு இந்த அவசரம் ?” பொறுமையாக அமர்ந்துக் கொண்டு கேட்டான்.


“எல்லாரும் நமக்காக காத்துக்கிட்டு இருக்கப் போறாங்க ? இவ்வளோ நேரம் தூங்குவேன்னு நினைச்சி கூட பார்க்கலை “  புலம்பிக் கொண்டே தன் உடைகளை தேடி எடுக்க, எழுந்து வந்து மனைவியை அணைத்துக் கொண்டான்.


“ரிலாக்ஸ் அஞ்சு. யாரும் நம்மளை தேடப் போறதில்லை. இன்னைக்கு திங்கள்கிழமை எல்லாரும் ரெகுலர் டேஸ்க்கு போயிருப்பாங்க. நீ பொறுமையா கிளம்பி கீழே போனா போதும். “ என்க, 

தன்னிடமிருந்து பிரித்து கணவனைக் கண்டாள்.


“என்ன சொல்லுறீங்க நந்தன் ?”


“உனக்கு தெரியாதா என்ன ? தெரியாத மாதிரிக் கேட்குற ?”


“என்ன வேலைப் பண்ணுறாங்கன்னு தெரியும் தான். ஆனா நேத்து தான் நம்ம கல்யாணம் முடிஞ்சிருக்கு “


“அதுனால என்ன ? நம்ம ரெண்டு பேரும் இந்த வீக் முழுக்க லீவ் தானே சொல்லிருக்கோம் “ என்று எளிதாகக் கூறவே, புகுந்த வீட்டாரைப் பற்றி தான் எண்ணியது தவறு என்பதை தன்னவன் கூறிய வார்த்தையிலே புரிந்துக் கொண்டாள்.


பின் இருவரும் குளித்து முடித்து கிளம்பி கீழே வர தன்னந்தனியாக அமர்ந்து மதிய உணவினை கைபேசியில் படம் ஒன்றைப் பார்த்தவாறு உண்டுக் கொண்டிருந்தாள் கவிநயா.


சத்தம் கேட்டு திரும்பிக் காண, “அட, வாங்க ! வாங்க. சாப்பாடு வைக்கட்டா ?” கேட்டவாறு கரத்தினை கழுவப் போக,


“வேண்டாம் அண்ணி. நீங்க சாப்பிடுங்க. நாங்க வெளியே போய்ட்டு அப்படியே ஏதாவது ஹோட்டல்லை சாப்பிட்டு வந்திறோம் “ என்க, சரியென்றாள்.


இருவரும் வீட்டினை விட்டு ஜோடியாக வெளியே வர, “ஏங்க கொஞ்சம் நேரம் உட்கார்ந்து அக்கா கிட்ட பேசிட்டு வந்திருக்கலாம். சட்டுன்னு வந்ததும் எதுவும் நினைச்சிக்கிட போறாங்க ?” மெல்லக் கூற,


காரில் ஏற, “இதுல நினைக்க என்ன இருக்கு. காலையில ஒன்பது மணிக்கு எல்லாரும் வீட்டை விட்டு வெளியேப் போனா நாலு மணிக்கு தான் ஒவ்வொரு ஆளா வருவாங்க. அது வரைக்கும் அண்ணி எப்பவும் தனியா தான் இருப்பாங்க. சொல்லப் போனா இந்த நேரம் எப்போ கிடைக்குன்னு தான் எதிர்பார்ப்பாங்க. அந்த நேரம் நம்ம ஏன் தொந்தரவு பண்ணனும் “ என்கவே, கேட்டுக் கொண்டாள்.


மாலை நேரம் வந்து விட மறுபடியும் இயந்திரமாக மாற ஆரம்பித்தாள் கவிநயா. நான்கு மணிக்கு வாசல் கேட்டில் வந்து நிற்க, பள்ளி வாகனத்தில் வந்து இறங்கினாள் சின்மயி.


மகளைக் தூக்கி கொஞ்சி வீட்டின் உள்ளே நுழைந்து உடை மாற்றி, இஸ்னாக்ஸ் கொடுத்து விளையாட வைக்க, ஐந்து மணிக்கு கல்லூரி முடிந்து தீப்தி வந்தாள். அதனை தொடர்ந்து ஆறு மணிக்கு வங்கியில் வேலைச் செய்யும் மாமியாரும், ஆடிட்டராக வேலைப் பார்க்கும் மாமனாரும் காரில் வந்து இறங்கினர்.


ஒவ்வொருவருக்காக தேநீர் கொடுத்து கீழே இருந்த அறையில் மகளைப் படிக்க வைத்து, பின் வேலைக்காரிக்கு தேவையான உதவியைச் செய்து அனைவரையும் அழைத்து உண்ண வைத்தாள்.


இப்போதெல்லாம் அனைவரிடமும் கைபேசி இருக்கவே ஹாலில் இருக்கும் டிவியை யாருமே கண்டு கொள்வதில்லை. என்றாவது ஒரு நாள் ஓய்வாக வெளியே ஹாலில் அமர்ந்தால் மட்டும் தான் அதன் நினைப்பே வரும்.


நிதின் எப்போது வருவான் என்பதே தெரியாதுப் போக, அவனின் வருகைக்காக கீழே இருக்கும் காலியான அறையிலே மகளோடு படுத்துக் கொள்வான். ஹாலில் சத்தம் கேட்டால் மட்டும் வேகமாய்ச் சென்று கதவினை திறப்பது தான் கவிநயாவின் வழக்கம்.


வெளியேச் சென்ற ஆசைத் தீரப் பொழுதை போக்கினை காதல் ஜோடிகள் இருவரும் இருள் சூழந்து வெகு நேரமாகியப் பின்னே தான் வீடு வந்துச் சேர்ந்தனர்.


சுற்றி விட்டு வந்த அசதியில் இருவரும் வீட்டுக்குள் நுழைய, “நைட் சாப்பாடு ரெண்டு பேருக்கும் “ கேட்க, மறுத்து விட்டு மாடியேறினர்.


நேரமாகி விட்டதால் கதவினை லாக் செய்து வந்து மகளின் அருகே படுத்தவளோ சிறிது நேரத்தில் கண்ணயர ஹாலில் பெல் ஒலிக்கும் சத்தம்.

கணவன் வந்து விட்டது புரிய பட்டென வேகமாய் ஓடிச் சென்று திறக்க, “கதவை திறக்க உனக்கு இவ்வளோ நேரமா ? அப்படி என்னத்த பிடிங்கிட்டு இருக்கே ?” கேட்டவாறு உள்ளே நுழைந்தான்.


“பாப்பா “


“வாயை மூடு காரணம் சொல்லாதடி ?”  கத்திக் கொண்டு மாடியேறியவன் அடுத்த அரை மணி நேரத்தில் கீழே வந்தான்.


கணவனுக்கு இரவு உணவினைப் பரிமாறி அவன் உண்ணும் வரை அருகில் இருந்து, உண்டு முடித்தப் பின் தான் சற்று நிம்மதியானாள். ஒரு சில நேரங்களில் சாப்பாடு நன்றாக இல்லையென்றால் அதற்கு குறை கூறி அடிக்காத குறையாக எரிந்து விழுவான். 


இன்று அமைதியாக உண்டு முடித்து எழுந்து விடவே உணவில் அவனுக்கு குறை இல்லை என்பதை அறிந்துக் கொண்டாள்.


பின் நிதின் மாடியேறிவிட பாத்திரங்களை அனைத்தையும் எடுத்து வைத்து, தன் மகளை தூக்கிக் கொண்டு மேலே இருந்த தங்களின் அறைக்குச் சென்றாள்.

மறுநாள் ஆதவன் விழி திறந்து விட, அன்று சீக்கிரமே கண் விழித்து விட்ட அஞ்சனா மணியைக் காண, ஏழாக இருந்தது. சரி குளித்து முடித்து கீழேச் சென்று நேற்று தான் காண முடியவில்லை இன்றாவது காணலாம் என நினைத்து வேகமாய் குளியலறைக்குள் நுழைந்தாள்.


அரை மணி நேரத்தில் கீழே இறங்கி வர, ஹாலில் யாருமே இல்லை. சமையலறை சத்தம் இருக்கவே, அங்குச் செல்ல, பரபரப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர் பெண்கள் இருவரும்.


“அக்கா “


“வா அஞ்சனா ? காஃபீயா டீயா ?” 

நின்று பேசக் கூட நேரமில்லாது வேகமோடுக் கேட்க,


“எதுவும் வேண்டாம்க்கா. நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா ?"


“வேண்டாம் “ என்கவே, 


அஞ்சனாவிற்கு மனமில்லாது பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள். அவர்கள் தடுத்தும் கேட்ட பாடில்லை.


“ஆசிரமத்துல இருந்ததுனால எனக்கு சமைக்க அவ்வளோ வராதுக்கா “


“பரவாயில்லை. அதுனால என்ன அஞ்சனா. உன்னை இங்கே யாருமே சமைக்கச் சொல்லலையே ? நாங்க பார்த்துப்போம் இதெல்லாம் “


“நீங்க ஏன்க்கா வேலைக்குப் போகலை ? இந்த வீட்டுல எல்லாருமே வெளியேப் போறாங்களே அப்பறம் என்ன ?” என்க,


“பாப்பாவை கவனிச்சிக்கணும்ல அஞ்சனா “


“பொய் சொல்லாதீங்க ” என்றதும், சட்டென நிமிர்ந்து இளையவளைக் கண்டவளோ, “சின்மயி அப்பா தான் வேலைக்கு எல்லாம் போக வேண்டான்னு சொல்லிட்டாரு “ என்றவாறு பெரிதாக நினைக்காது வேலையிலே இருந்தாள்.


கேட்ட அஞ்சனாவிற்கு ஆத்திரம் அடங்கவில்லை. பிடித்திருந்த பாத்திரத்தை அப்படியே தன் கரங்களால் இறுக்கினாள். அப்படியே வேலை முடியும் வரை பேச்சினைக் கொடுத்து ஓரளவு அந்த வீட்டாரைப் பற்றி தெரிந்துக் கொண்டாள்.


டைனிங் டேபிளில் உணவினை எடுத்து வைத்து அனைவரையும் அழைக்க, கவிநயாவின் ஒவ்வொரு செயலையும் பார்த்தவாறு தான் இருந்தாள்.


அனைவரும் வந்து விட, “பாப்பாக்கு நீங்க ஊட்டி விடுங்க அக்கா. நான் பாரிமாறுனேன் “ எனக் கூறவே, சரியென்று சற்று ஓய்வெடுத்தாள்.


“என்ன புது மருமகளே ! எப்படி இருக்கு எங்க வீடு ?” மாமியார் கேட்க,


“நல்லாயிருக்கு அத்தை. ஆனா உள்ளே இருக்குற எதுவுமே எனக்கு பிடிக்கலை “ என்று வீட்டில் ஆட்கள் நன்றாக இருந்தாலும் அவர்களின் மனது நல்ல குணத்தில் இல்லை என்பதை தான் அப்படி கூறினாள்.


“ஏன்மா ?” மாமனார் கேட்கவே,


“தெரியல மாமா. பார்த்தேன் சொன்னேன். எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. நான் என்ன வீட்டுலையேவா இருக்க போறேன். அடுத்த வாரம் ஆபிஸ் போயிருவேன் “


“வேலைக்குப் போறையா ?” 

மாமியார் அதிர்ச்சியோடுக் கேட்க,


“ஏன் அத்தை. போக கூடாதா என்ன ?” எதிர்த்துப் பேசினாலும் மனம் வருந்தாதுக் கேட்டாள்.


“என்னாச்சு மனோகரி ? மருமக என்ன பண்ணனும் நினைக்கிறாலோ பண்ணட்டும் “ பரிந்துக் கொண்டு பேசினார் வாசுதேவன்.


“அதுக்கில்லை மூத்தவளே வீட்டுல தானே இருக்கா. அதான் “ என்று இழுக்கவே,


“நிதின் மாமா அக்காவை விடலைன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும் அத்தை. என் புருஷன் என்னை வேலைக்கு போக வேண்டான்னு சொல்லலையே ? ஏன் நீங்க கூட தான் வேலைக்குப் போறீங்க ?” என்ற நொடி, நிதினோ தன் மனைவியைத் தான் முறைத்தான்.


அதனைக் கண்டு கொண்டவளோ, “நந்தன் தான் நேத்து நைட் என் அண்ணன் மாதிரி நான் இல்லை. அவங்க விருப்பம் போல வாழப் பொண்ணுங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ சுதந்திரமா இருன்னு சொன்னாங்க “ என்று கவிநயாவிற்கும், இதற்கும் எந்த சம்மந்தமில்லை என்பதை தெளிவாக கூறி விட்டாள்.


அந்த நொடி சரியாக நந்தனும் கீழே வந்து டைனிங் டேபிள் அருகே வர, “என்னடா உன் பொண்டாட்டி பார்வையில என்னை கெட்டவனாக்கா பார்க்குறையா ?” சட்டென எழுந்து நிதின் சீற்றமோடுக் கேட்டான்.


“என்னாச்சு அண்ணே இப்போ ?”


“ஒழுங்கா பார்த்து நடந்துக்கோ. அப்பறம் அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன் சொல்லிட்டேன் “ கத்தியவனோ அங்கிருந்துச் சென்று விட்டான்.


ஒன்றும் புரியாது நந்தன் விழிக்க, ‘கொழுந்து விட்டு எரியும்ன்னு பார்த்தா புஸ்பானமாகிருச்சி’ மனதுக்குள் நினைத்து கடுகடுப்போடு நிதின் செல்லும் திசையைக் கண்டு அக்னி ராணியாக நின்றாள் அஞ்சனா.


தொடரும்...


🙏தங்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 🙏


 


Leave a comment


Comments


Related Post