இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 02-04-2024

Total Views: 17813

காதலொன்று கண்டேன்!

தேடல்  13

அவளுக்கென..


காளையவனின் பார்வை பெண்ணவளின் வதனத்தை கூர்மையாய் அளவிட புத்தியின் பேச்சை கேளாது அவளின் விழிகளை அவன் விழிகள் ஸ்பரிசித்தது தான் தாமதம்,காளையவனின் உயிருக்குள் மின்னலடித்தது.

"யப்போய்ய்ய்ய்.." இதழ்கள் உச்சரிக்க இமைகள் இரு முறை படபடக்க இரு கரத்தின் விரல்களும் மேசை விளிம்பை பற்றி பிடிக்க உடலையும் தலையையும் ஒரு சேர சற்றே பக்கமாய் திருப்பி ஓரடி பின்னே சுழல் நாற்காலியுடன் நகர்ந்திருந்தான்,காளையவன்.

"பார்வையாலே ஒட்டு மொத்த உயிரையும் உறிஞ்சி விடுவாளோ..? நினைத்தவனின் அளவெடுக்கும் விழிகளின் கருமணிகளோ தத்தம் விழிகளின் இரு முனையையும் பட்டென தொட்டு மையத்துக்கு வர அனிச்சையாய் இதழ்குவித்து ஆழப் பெருமூச்சொன்றை விட்டிருந்தான்.

நொடியில் தன் தடுமாற்றத்தை மறைத்து அவளை பார்த்தாலும் அவன் தடுமாறியது நிஜம் ஆயிற்றே.

"என்ன சொன்னீங்க..?" கேட்டவனின் விரல்களோ பின்னந்தலை சிகைக்குள் நுழைந்து இரு தடவை கலைத்து விட மறுகரத்தின் புறங்கையோ நெற்றியை அழுந்தத் தடவிற்று.

இத்தனைக்கும் அதன் பிறகு அவன் விழிகள் அவளின் விழிகளை உரசவேயில்லை.கம்பீரமானவனை கரைத்து குடிக்கும் நுண்ணிய உணர்வை சுமந்த பார்வையுடன் அவளிருக்க மறுமுறை பார்த்திடும் தைரியம் அவனுக்கேது..?

திருமணத்தை நிறுத்தலாம் என்றவள் கூறி முடித்த  கணம் அவனுக்குள் எழுந்த கோபத்துக்கு அளவே இல்லாது போக இப்போது மொத்தமும் பதட்டமாய் உருமாறியிருந்ததே.

"இல்ல சார்..நீங்களும் கல்யாணம் வேணாம்னு தான சொல்ல வந்தீங்க..?" கேட்டவளின் விழிகள் இப்போது பயமின்றி அவனைப் பார்த்தது.
திடுமென வந்த தைரியத்தின் காரணம் என்னவாய் இருக்குமோ..?
அவள் தான் பதில் சொல்ல வேண்டும்.

"நோ..இந்த மேரேஜ நிறுத்துறத பத்தியே யோசன போகுதுன்னு  சொல்ல வந்தேன்..தட்ஸ் ஆல்.." இயல்பாய் அவன் பொய் சொல்ல அவள் விழிகளில் சந்தேகத்தின் துளிகள்.

"இ..இல்ல நீங்க வேற ஏதோ தான சொல்ல வந்தீங்க..?" துளிர் விட்ட சந்தேகத்துடன் அவள் கேட்க அதற்கு மேலும் அதை வளரவிடுவானா காளையவன்.

"வாட் ஆர் யூ ஜோக்கிங்..? நா என்ன பேச வந்தேன்னு உங்களுக்கு எப்டி தெர்யும்..? நா மனசுல நெனக்கிறத என் கண்ண பாத்து கண்டு புடிச்சீங்களா என்ன..? என்னோட ஐஸ் அவ்ளோ எக்ஸ்ப்ரெஸிவா என்ன..நா இப்டி தான் சொல்ல வந்தேன்..நீங்களா ஏதாச்சும் நெனச்சுகிட்டா நா பொறுப்பேத்துக்க முடியாது..தட்ஸ் ஆல்.." நீளமாய் பேசி முடித்தான்,ஜீவா.

மொத்தமும் பொய் தான்.அதை கொஞ்சமும் வெளிக்காட்டாமல் இயல்பாய் ஏற்ற இறக்கத்துடன் அவன் பேச அதற்கு மேலும் நம்பாமல் இருந்தால் அது மித்ரா இல்லையென்று ஆகி விடாதா..?

அழகாய் அவன் கோர்த்துச் சொன்ன பொய்யை நிரூபிக்க அவன் முயன்றது வீணாகிடவில்லை.
மொத்தமாய் நம்பி தனக்குள் எழுந்த சரியான நினைப்பையும் தவறாக்கி விட்டு அவனைப் பார்த்தவளிடம் இப்போது கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

"சாரி சார்..நா ஏதோ நெனச்சிட்டேன்.." சிறு சங்கடத்துடன் அவள் சொல்ல "இட்ஸ் ஓகே.." தோளைக்குலுக்கி கொண்டு மொழிந்தவனின் உள் மனமோ ஆசுவாசப் பட்டுக்கொண்டது.

"சார் என்னன்னா.."

"ஜூஸ் ஏதாச்சும் சாப்புட்றீங்களா..? இல்லன்னா டீ காபி.." அவள் பேசுவதை இடை மறைத்து அதிரடியாய் கேட்டவனுக்கு அடிக்கடி கைக்கடிகாரத்தை ஆராய்ந்தவளின் செயல் அவள் கிளம்புவதற்கு அவசரப்படுவதை உணர்த்தி விட்டிருந்ததே.

அத்தனை சீக்கிரம் அவளை அனுப்பும் எண்ணம் இல்லை, காளையவனுக்கு.அதனால் தான் இந்தப் பேச்சு.

இடையிடையே அவள் பாராத நேரங்களில் கள்ளப்பார்வையால் அவளைத் தீண்டவும் மறக்கவில்லை,அவன்.

"இல்ல சார் எதுவும் வேணாம்.."

"நோ..நீங்க இப்ப எதுவும் சாப்டாம போனா அங்கிள் என்னத் தான் திட்டுவாரு..ஸோ அதுக்காக சரி ஏதாச்சும் சாப்டுங்க.." கூறியவனுக்குத் தெரியாது,தான் அவளிடம் விழுந்து கொண்டிருப்பது.

கடைவிழிப்பார்வையில் கள்ளத்தனம் சேரந்திற்று.சுருக்கென விழும் வார்த்தைகளில் திணறல் எட்டிப் பார்த்திற்று.ஒரு  நொடிப் பார்வையில் ஓராயிரம் மின்னல் பாய்ந்திற்று.நிதானமான மெய்களில் பதறிய பொய்கள் கொஞ்சம் கலந்திற்று.

அப்படியென்றால் இது காதலின் துவக்கம் தானே.இவை போதாதா அவன் காதல் அதிகாரத்தின் துவக்கத்தை துலக்கி காட்ட..?

"சரி சார்.." மனமின்றி சொல்ல இதழ்களுக்குள் தோன்றிய புன்னகையை மறைத்துக் கொண்டான்,அவன்.

"ஆமா என்ன சாப்புட்றீங்க..? டீ காபி ஆர் மில்க் ஷேக்..இல்லன்னா ஜூஸ் ஏதாச்சும்.."

"எதுனாலும் ஓகே சார்.."

"ம்ம்.." என்றவனோ தரணிக்கு அழைத்து காபி கொண்டு வர சொல்ல அவனோ அலைபேசியில் காளையா பேசியது என திகைத்து நின்றது எல்லாம் வேறு விடயம்.

"ஓகே..பீ ப்ரேன்க்..உங்களுக்கு இந்த மேரேஜ்ல இஷ்டமா இல்லயா..?" நேரடியாய் கேட்பான் என எதிர்பாராவிடினும் தன்னை சுதாரித்து கொண்டவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

நாலாப்புறமும் தலையசைத்தவளை கண்டு புருவம் நெறித்தவனின் விழிகளும் இலேசாக சுருங்கின.அவளுக்குள் ஏதோ குழப்பம் ஓடிக் கொண்டிருப்பது காளையவனுக்குப் புரிந்தாலும் என்னவென்று கேட்டிட முடியாதே.

"என்ன மிஸ்ஸ்ஸ்ஸ்" இழுத்தவனுக்கு அவள் பெயர் தெரியாது என்கின்ற விடயம் அப்பொது தான் நினைவில் வந்தது.
ஜெய்கிருஷ்ணன் சொல்லும் போது கூட கவனிக்காது தவிர்ந்திருந்தான்.

"மித்ரா.." அவனின் இழுவை ராகம் புரிந்து அவள் சொல்ல அந்த குரலில் இழையோடிய ஏதோ ஒன்று அவனுக்கு எதையோ உணர்த்த முயன்று தோற்றிருக்க அவனுக்கும் அது புரியவில்லை.

"உங்களுக்கு லவ் பெயிலியரா..?" பட்டென காளை கேட்டு விட அவள் விழிகளில் ஓடிய அதிர்வலைகள் அடங்க சில நிமிடங்கள் எடுத்தன.

சத்தியமாய் அவனிடம் இருந்து இப்படியொரு கேள்வியை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.அதுவும் இத்தனை விரைவாய்..ம்ஹும்.
இப்படி கேட்பான் என நினைக்க கூட இல்லை.

"மித்ரா உங்கள தான் கேக்கறேன்.." அழுத்தி கேட்க விழி தாழ்த்தி முகத்தில் வேதனை ரேகைகள் பரவ நாலாப்புறமும் தலையசைத்தவளை காளையவனின் பார்வை  இரசிப்புடன் தொட்டு மீண்டது.

குழந்தையாய் தெரிந்தாளா என்பதெல்லாம் நிச்சயமாய் சொல்லிட இயலாது.அவளின் வேதனையை துடைத்திட வேண்டும் என்கின்ற எண்ணம் அவன் மனதில் வேர் விட்டு எழுந்தது மறுக்க இயலாத உண்மை.

"ஊப்..ஓகே நான் என்ன பத்தி சொல்றேன்..நா இது வர யாரயும் லவ் பண்ணது கெடயாது..அதுக்காக உங்க பாஸ்ட் லைப் உம் அப்டி இருக்கனும்னு நா எதிர்பாக்கல.." அழுத்தமாய் சொன்னவனை விழுக்கென்று அவள் நிமிர்ந்து பார்த்திட தரணி கேட்டிருந்தால் மயங்கியே விழுந்திருப்பான்.

"ஸோ நா உங்க பாஸ்ட பத்தி எந்த கேள்வியும் கேக்க விரும்பல..நல்லா யோசிச்சு தெளிவான முடிவ சொல்லுங்க..ரைட்..?" அவன் கேட்க மந்திரத்துக்கு கட்டுண்டவள் போல் தலையசைத்தவளுக்கு சில விடயம் புரிய கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.

"அப்போ உங்களுக்கு கல்யாணத்துல சம்மதமா..?" பட்டென்று கேட்க மேசையில் தாளம் தட்டியவனின் விரல்கள் ஒரு நொடி நின்றாலும் வழமை போல் மறுநொடி இயல்பாகின.

"நீங்க ஒரு டிஸிஷன் சொன்னா தான் நா மேல யோசிக்கலாம்.." எதிர்பாரா பதிலை கூறியவனின் வார்த்தைகளில் அவளுக்கு தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை.

அதற்குள் தரணி வந்து காபியை கொடுத்து விட்டு காளையவனை ஓரக்கண்ணால் முறைத்து விட்டு நகர காளையின் கவனம் முழுக்க காபியை பருகுபவளில் தான் இருந்தது.

                 ●●●●●●●●

உறக்கம் வராமல் வெகுநேரம் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள்,மித்ரா.

ஜீவாவின் வார்த்தைகள் மனதில் வந்து போக இதழ்களில் சின்னப் புன்னகையொன்று உதித்திருக்க மனதில் பெரும் அலைக்கழிப்பு.

அவனின் காட்டுக்கத்தலை எதிர்ப்பார்த்து சென்றவளுக்கு இந்த கனிவான வார்த்தைகள் புதிதாய் இருந்தன.

ஒரு முறை ஆராய்ந்து பாராமல் அவசரமாய் எடுத்த முடிவு அவளின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்க தற்போதும் முடிவெடுப்பதில் பயம்.

அதிலும் ஜீவாவை மணம் முடிப்பது தான் சற்று யோசனையை கிளப்பியது.தன் காதல் அத்தியாயம் தெரிந்து கொண்டால்  தன்னைப் பற்றிய விம்பம் அவனுக்குள் எப்படியிருக்கும் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.

அவளுக்கும் இருக்கிறதே.சொல்லபட்டாத ஒரு காதல் அத்தியாயம்.ஆத்மார்த்தமானதொரு காதல் அத்தியாயம்.

இயல்பாய் எடுத்துக் கொள்வேன் என அவன் சொன்னாலும் நிச்சயம் பெண்களுக்கே உண்டான பயம் அவளிடத்தில் இல்லாது போகுமா..?

இந்த நொடி ஏனோ ஜீவாவின் வார்த்தைகள் அவசியப்பட்டது.அவனின் தரிசனத்தை மனம் எதிர்ப்பார்த்து நின்றது.

தலையணையைக் கட்டிக் கொண்டு யோசித்தவளுக்கு தலைவலி வரும் போல் தான் இருக்க விழிகளை மூடிக் கொண்டாள்.

நினைவு தரும் தாக்கதில் நிகழை வதைக்கவும் அவளுக்கு விருப்பமில்லை.நினைவனைத்தையும் கடந்து நிகழில் மட்டுமே லயிப்பது அத்தனை சுலபமாகவும் இல்லை.

கரைந்து போகா காயம் இருக்கிறது.வழிந்து போகா வலி இருக்கிறது.எல்லாவற்றையும் விட மீண்டும் உடைந்திடுவோமோ என்கின்ற பயம் மனதில் கொட்டிக் கிடக்கிறது.

மீண்டும் நடந்திடுமோ என்கின்ற பயம் தானே பலருக்கு இயல்பாய் இன்னொரு அத்தியாயத்தை துவக்க விடுவதில்லை.எல்லா விடயத்துக்கும் இது பொருந்தும் அல்லவா..?

விடியலில் கண்ணயர்ந்தவளோ எழுந்ததும் முதல் வேலையாக சென்றது,கோயிலுக்கு தான்.

வழமை போல சாமி சன்னிதியில் கை கூப்பி நின்றிருந்தவளின் முகத்தில் குழப்பமே நிறைந்திருந்தது.

"எல்லாம் கடந்து போச்சுன்னு நா இருக்குறப்போ திரும்ப எல்லாம் ஆரம்பிக்குது..சத்தியமா என்ன பண்றதுன்னு தெரியல..பழச நெனச்சிகிட்டு புதுசா வர்ரத ஏத்துக்காம இருக்குறது என்ன பொறுத்த வர தப்பா தான் தோணுது முருகா.."

"இப்போ கல்யாணத்துக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரில..ஜீவா சார் என்ன புரிஞ்சிப்பார்னு தோணுது..ஆனா உண்மயெல்லாம் தெரிஞ்சா என்ன வெறுத்துருவாரோன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு..நீ தான் ஒரு நல்ல வழிய காட்டனும்.."ஈஸ்ரீ கை கூப்பி வேண்டி விட்டு பிரகாரத்தை சுற்றி வந்தவளின் மொத்த கவனமும் நடையில் இல்லை.

ஆனால்,எதிரே வந்து கொண்டிருந்தவனின் விழிகள் அவளில் தான் படிந்திருந்தன.

வேஷ்டி சட்டையில் புல் ஸ்லீவ் ஷர்ட் முட்டி வரை மடித்து விட்டவனின் நெற்றியில் கீற்றாய் விபூதி ஒட்டிக் கொண்டிருக்க இதழ்கள் அழுந்த மூடியிருந்தாலும் மனதில் ஒரு வித துள்ளல்.

திருமணம் பற்றி குழப்பமாய் இருக்க தெளிவு பெற கோயிலுக்கு வந்தவனுக்கு தேவி தரிசனத்தை விட வேறேது தெளிவான பதிலாய் அமைந்திட முடியும்..?

தளரப்பின்னிய கூந்தலுடன் சுடிதார் அணிந்து விரித்துப் போட்டிருந்த துப்பட்டாவை சேர்த்துப் பிடித்துக் கொண்டு நடந்தவள் ஏனோ பேரழகாய்த் தான் தெரிந்தாள்,காளையவனின் விழிகளுக்கு.

தாழ்ந்த தலையுடன் நடந்து வந்தவளோ தன் முன்னே விழுந்த நிழலைக் கண்டு ஒரு கணம் பதறி நின்று விழி உயர்த்தி பார்த்தவளுக்கு அவனின் தரிசனத்தில் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

மார்புக்கு குறுக்கே கரத்தை படரவிட்டு இறுகிய முகத்துடன் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் அலைந்து திரிந்த விழிகள் மட்டும் வேறு கதை சொன்னதே.

"சா..சார் நீ..நீங்க..?" திடுக்கிடலுடன் ஈரடி பின்னே நகரந்து திணறலாய் அவள் கேட்க "சாமி கும்பிட வந்தேன்.." தீர்க்கமாய் மொழிந்தவனின் பார்வை தூரத்தே தெரிந்த காட்சியில் நிலைத்திருந்தது.

நொடிக்கு பலமுறை துடித்த இதயத்தை அடக்கும் வழி தெரியவில்லை,அவளுக்கு.படபடப்பும் பதட்டமும் பற்றி எரிய அதிர்வும் தாக்க முகத்தில் எந்த பாவனையை கொண்டு வருவதென்று தெரியாமல் தவித்து பேயறைந்தது போல் இருந்தது,அவள் தோற்றம்.

"மித்ரா..மித்ரா.."மிரண்டிருந்தவளின் முன்னே கை ஆட்டி அழுத்தி அழைக்க சுயம் கலைந்தவளோ அவனிருப்பதை மறந்து தன் கரத்தை கிள்ளிப் பார்க்க தன்னை மீறி முறுவலித்தன,அவனிதழ்கள்.அவளுக்குத் தான் அது புரியவில்லை.

"என்ன மித்ரா என்னாச்சு..?" முக பாவத்தை வைத்தே அவளின் மன எண்ணத்தை படித்திருந்தவன் எதுவும் தெரியாது போல் கேள்வி கேட்க அவளுக்குத் தான் ஐயோவென்றிருந்தது.

"இ..இல்..இல்ல சார்..கோயில்ல உங்கள பாக்கவும் ஷாக் ஆகிட்டேன்.." இன்னும் மாறா அதிர்வுடன் அவள் சொல்ல பக்கவாட்டாய் திரும்பியிருந்தவனின் முகத்தில் எந்த வித உணர்வுகளும் வெளிப்படவில்லை.

"சரி..எதுக்கு ஷாக் ஆகனும்..?" கேட்டவனின் குரல் இயல்பாய் இல்லை.கொஞ்சம் குறும்பு கலந்திருக்க அதை உணரும் நிலையிலா இருக்கிறாள் அவள்.

அவன் கேள்வியிலேயே தடுமாறி விட்டாள்.சட்டென பொய்யும் வரவில்லை.

"இங்..இங்க எ..எதிர்பாக்கல இ..இல்ல...அதான்" சமாளிப்பாய் சொல்லி விட்டவளுக்கே படு கேவலமாய் நடிப்பது புரியத் தான் செய்தது.இருந்தாலும் வேறு வழி..?

"அப்போ வேற எடத்துல என்ன எதிர்பாத்தீங்களா மித்ரா..?" புன்னகையை அடக்கிய படி பேதமில்லா குரலில் அவன் கூற அவனின் வார்த்தைகளை கிரகித்துக் கொண்டவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.

நிஜம் தானே.
நேற்று இரவு ஏதோ ஒரு தருணத்தில் அவனை எதிர்ப்பாத்தாள் தானே.

குறும்பாய் கேட்கிறானா என்று பார்த்திட எப்போதும் போல் இறுக்கமாய்த் தான் இருந்தது,அவன் முகம்.
அவன் தன்னை சீண்டுவது அவளுக்கு புரியாதிருக்க அதற்கு முழுமுதற் காரணம் அவன் தன்னை சீண்டுவான் என அவள் நினைக்காததே.

"இல்ல..இல்ல..அப்டிலாம் இல்ல.." பதட்டத்துடன் உரைத்தவளின் வார்த்தைகளில் அவனிதழ்களில் கண்ணுக்கே தெரியாத புன்னகை.

தேடல் நீளும்.

2024.04.01


Leave a comment


Comments


Related Post