இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 5 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 03-04-2024

Total Views: 23756

செந்தூரா 5



செந்தூரமித்ரன் ஐந்து வருடங்களாக எப்போதும் தன் நண்பனிடம் கூட இதுவரை பகிர்ந்திராத சொந்த விஷயத்தை பற்றி சொல்ல தொடங்கினான்.


பொள்ளாச்சியில் விவசாயம் செய்து அந்த ஊருக்கே பெரிய பண்ணைக்காரராக இருந்தவர் தான் முத்துபாண்டி, அவர்தான் மித்ரனின் தாத்தா. முத்துபாண்டிக்கும் அவர் மனைவி ரஞ்சிதத்திற்கும் பிறந்தவர்கள் மித்ரனின் தந்தை கதிரேசனும், அத்தை சாரதாவும் என இரண்டு வாரிசுகள் தான்.


கதிரேசனை விட சாரதா பத்து வயது சின்னவள் என்பதால் தங்கையிடம்  எப்போதும் பாசமாகவே இருப்பார். கதிரேசன் ஜானகியை திருமணம் செய்து வந்த போது சாரதா அப்போது தான் பள்ளிப்படிப்பை முடித்திருந்தார். அவர் கல்லூரியில் சேர்ந்து இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தான் கதிரேசன் ஜானகிக்கு முதல் ஆண் குழந்தை பிறந்திருந்தது.


சுட்டெரிக்கும் உச்சி வெயில் நேரத்தில் பிறந்ததாலும் சிவந்த நிறத்துடன் பிறந்திருந்ததாலும் சாரதா தான் அண்ணன் மகனுக்கு செந்தூர மித்ரன் (சிவப்பு சூரியன்) என்று பெயர் வைத்தார். எப்போதும் அண்ணன் மகனை தூக்கி கொஞ்சுவதும் அவனுக்கு உணவூட்டி வளர்த்ததும் சாரதா தான்.


அவன் தாய் ஜானகிக்கு மித்ரன் எப்படி வளர்ந்தான் என்றே தெரியாது. அந்த அளவிற்கு அவன் எப்போதும் சாரதாவையே “அத்தை அத்தை” என்று சுத்தி வந்தான். அவனுக்கு நான்கு வயதாக இருக்கும் போது அவன் தங்கை காயத்ரி பிறந்திருந்தாள். அதன் பிறகு சாரதாவிற்கும் வயதாகி கொண்டே போவதால் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


சாரதாவை பெண்பார்க்க சென்னையிலிருந்து ஒரு குடும்பம் வந்திருந்தது.  மாப்பிள்ளை சுபாஷிற்கும் சாரதாவிற்கும் ஒருவரை ஒருவர்  பிடித்துவிட அடுத்தடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


அதில் மித்ரனுக்கு தான் ஏகப்பட்ட வருத்தம். இனி அத்தை தன்னுடன் விளையாட வரமாட்டாள், அவள் கணவனுடன் சென்னைக்கு சென்று விடுவாள் என்பதால் சோகமாக அமர்ந்திருந்தான்.


“டேய் செவப்பா, ஏண்டா சோகமா உட்கார்ந்திருக்கா?” என்று கேட்ட ரஞ்சிதம் பாட்டியை முறைத்தான்.


“எத்தனை முறை சொல்லியிருக்கேன் செவப்பானு கூப்பிடாதேனு” என்று கோபமாக கத்தினான். “டேய் நீ செவப்பா ராஜா கணக்கா இருக்க, அதான்லே அப்படி கூப்பிடுறேன்” என்றாள் ரஞ்சிதம் பாட்டி சிரித்துக் கொண்டே.


“அத்தை தான் என்னை செவப்பானு கூப்பிடாதே, செந்தூரானு வேணா கூப்பிடுனு சொல்லியிருக்கு இல்ல, உன் காதுக்கு ஏற்கலையோ” என்றான் மித்ரன்


“எத்தனை நாளைக்கு உன் அத்தை சப்போட்டுக்கு வர்றானு நானும் பார்க்கிறேன். அவள் கல்யாணம் ஆகி போயிட்டால் என்னலே செய்வே? செவப்பான்னு தான்லே கூப்பிடுவேன்” என்றாள் அப்பத்தா வீம்பாக.


ஏற்கனவே அத்தைக்கு திருமணம் என்றதில் கவலையாக இருந்தவன் இப்போது அப்பத்தாவும் அதையே கூறவும் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான். கதிரேசனும் முத்துபாண்டியும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அழுகையை நிறுத்தவில்லை.


“அத்தையை நம்ம வீட்டை விட்டு அனுப்ப கூடாது, இந்த கல்யாணம் வேண்டாம்” என்று அழுது கொண்டே இருந்தான். சாரதாவிற்கு சங்கடமாக போய்விட்டது. அவருக்குமே சுபாஷை பிடித்திருந்தது. அதே சமயம் மித்ரனை பிரிவதும் கவலையாக இருந்தது. அவன் தங்கை காயத்ரிக்கு ஒன்றரை வயதே என்பதால் அவளுக்கு ஏதும் பிரச்சனை இல்லை.


குழந்தையிலிருந்து அத்தையிடமே வளர்ந்ததால் அவள் பிரிவை இப்போதே தாங்க முடியாமல் அடம்பிடிக்க தொடங்கினான் செந்தூரமித்ரன்.


“செந்தூரா திருமணம் ஆனதும் அத்தையை அடிக்கடி வீட்டிற்கு வரச்சொல்வோம், நாமும் அத்தையை பார்க்க செல்வோம்” என்று கதிரேசன் பலவாறு மகனை சமாதானம் செய்தார்.


சாரதா சுபாஷின் திருமண நாளும் நெருங்கியது. பொள்ளாச்சியிலேயே கோலாகலமாக மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார் முத்து பாண்டி.

திருமணத்திற்கு பின் மணமகன் சுபாஷ் அவன் அத்தையின் கையை விடாமல் பிடித்திருந்ததை பார்க்க பார்க்க செந்தூரனுக்கு கோபமாக வந்தது. சுபாஷை ஒரு வில்லன் போல பார்த்தான்.


சுபாஷ் அவனிடம் சகஜமாக பேசினாலும் முறுக்கி கொண்டு திரிந்தான் செந்தூரன். அவரால் தானே அத்தையை பிரிய வேண்டியிருக்கிறது என்ற கோபம் தான். அவனின் செயல் அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பையே வரவழைத்தது.


எல்லோரும் சிரித்து மகிழ்ந்திருக்க செந்தூரன் மட்டும் முகத்தை தூக்கிக் கொண்டு திரிவதை பார்த்த அவனின் அம்மாவை பெற்ற கண்ணம்மா பாட்டி, “செந்தூரா நீ ஒண்ணும் கவலபடாதே பேராண்டி, உன் அத்தையை பிரிச்சு கூட்டிட்டு போற இந்த சுபாஷ் மாமனை நாமும் பழிக்கு பழி வாங்குவோம்” என்றாள்.


திருமண விழாவில் இருந்த அனைவரும் கண்ணம்மா பாட்டியின் பேச்சில் அதிர்ந்து போய் அவரை பார்க்க, செந்தூரன் மட்டும் ஓடிப்போய் “எப்படி ஆத்தா?” என்றான். “நம்ம வீட்டு பெண்ணை அவர் கல்யாணம் பண்ணிட்டு போற மாதிரி, அவங்க வீட்டு பெண்ணை நீ கல்யாணம் கட்டிட்டு வந்திடு, எப்படி?” என்றார் கைதேர்ந்த வில்லி போல.


அதை கேட்டு அங்கிருந்தோர் எல்லோரும் கொல்லென சிரித்தனர். “அவங்க வீட்ல எந்த பொண்ணு ஆத்தா?” என்று அவன் ஆர்வமாக கேட்கவும், “உங்க அத்தை சாரதாவுக்கு பெண் பிள்ளை பொறக்கும்டா, நீ அவளை கல்யாணம் கட்டிக்கோ. சரிதானே” என்றார் அவன் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தபடி.


“அத்தைக்கு எப்போது பாப்பா பிறக்கும்?” என்றான் அவன் கர்ம சிரத்தையாக. “உன் பொண்டாட்டி பிறக்கறதுக்கு நீ ஒரு வருஷமாச்சும் காத்திருக்கணும்டா செவப்பா” என்றார் கண்ணம்மா பாட்டி.


“செவப்பா இல்ல, செந்தூரா” என்றான் பற்களை கடித்தபடி. “சரி சரி செந்துரா” என்று அழுத்தி கூறியவர், நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போனால் தான் உன் பொண்டாட்டி உன்னை கட்டிக்குவா, நல்லா படிப்பியா” என்று கண்ணம்மா பாட்டி கேட்க, அவனோ அவன் அத்தையை பார்த்து, “எனக்கு உன் பெண்ணை தருவியா அத்தை?” என்று கேட்டான்.


சாரதா வெட்கம் தாங்காமல் தலையை குனிந்து கொண்டார். சுபாஷ் மனைவியையே பார்த்திருக்க, அங்கிருந்த அனைவரும் அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் மித்ரனோ, அவன் அத்தை சரி என்று தலை ஆட்டும் வரை அவளை விடவே இல்லை. 


அதன்பிறகு சாரதா தாய்வீட்டிற்கு வரும்போதெல்லாம், “அத்தை பாப்பா எப்போ வரும்? எனக்கு தானே கல்யாணம் செய்து கொடுப்ப?” என்று கேட்டான். சாரதா வாஞ்சையுடன் அண்ணன் மகனை கட்டிக் கொண்டார். இந்த முறையும் அவன் அதே கேள்வியை தன் அத்தையிடம் கேட்க, அவரும் “என் பொண்ணு உனக்கு தான் செந்துரா” என்றாள் அவன் நெற்றியில் முத்தமிட்டபடி.


ஆம் அவள் கருவுற்றிருந்தாள், அதை கணவனிடமோ, தாயிடமோ முதலில் சொல்லாமல் அண்ணன் மகனிடம் சொல்லியிருந்தாள். அவள் அவனிடம் சொல்லும் போது தான் அனைவருக்குமே சாரதா கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.


கதிரேசன் தங்கைக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்தார். அந்த மாதம் முழுவதும் சாரதா அங்கேயே தங்கி விட செந்தூரனுக்கு குஷியாகி போனது. சுபாஷ் மட்டும் சென்னைக்கு கிளம்பினார். செந்தூரனின் தாய் ஜானகியும் சாரதாவிடம் அன்பாகவே இருந்தார்.


செந்தூரனுக்கு ஐந்து வயதாகி விட்டதால் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான். அவன் தங்கை காயத்ரிக்கு மூன்று வயது. பள்ளி முடிந்து வந்ததுமே அத்தையின் முந்தானையை பற்றிக் கொண்டு சுற்றி வருவதே அவன் வேலை. எப்போதும் அத்தையின் வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றித் தான் அவன் கேள்வி இருக்கும்.


“பாப்பா எப்படி இருக்கும்? அதுக்கு என்னை புடிக்குமா?” என்று அத்தையிடம் கேட்டுக் கொண்டே இருப்பான். அவன் அன்னை ஜானகிக்கு சற்று பொறாமையாகவே இருந்தது., “ஏண்டா கூட பொறந்தவள என்னான்னு கூட கண்டுக்க மாட்டேங்கிற? பொறக்காத பொண்டாட்டிக்கு இப்பவே மாமியாரை காக்கா பிடிக்கிறயா?” என்று பொய்யாக அதட்டினார்.


அவன் அதை எல்லாம் காதில் வாங்காமல் அத்தையிடமே வளவளத்துக் கொண்டு இருப்பான்.


இடையில் சாரதா சில மாதங்கள் சென்னை சென்றபோது உம்மென்று இருந்தான். மீண்டும் அவன் அத்தையை அவர்கள் குடும்பமாக சென்று வளைகாப்பு செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவர்கள் வீட்டின் எதிரே இருந்த மாந்தோப்பிலும் தென்னந்தோப்பிலும் மருமகனின் கையைப்பற்றி கதைகள் பேசிக் கொண்டு காலாற நடப்பதே சாரதாவின் வழக்கம்.


மனைவியை காண வந்த சுபாஷிற்கு சற்று கடுப்பாகவே இருந்தது. இந்த செந்தூரன் அவர் மனைவியை கொஞ்ச நேரம் கூட தனியாக விடுவதில்லை. 


எப்போது பார்த்தாலும் அத்தையுடனே அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த சிறுவன் மேல் அவருக்கும் தெரியாமல் ஒரு பகை உருவாகி இருந்தது. செந்தூரனுக்கும் மாமன் சுபாஷிடம் அத்தனை ஒட்டுதல் இல்லை. அவர் தானே தன் அத்தையை அவனிடமிருந்து பிரித்தது என்ற கோபம் அவனுக்கு.


ஒருநாள் பள்ளி முடித்து வந்தவன் வீட்டில் யாரையும் காணாமல் அழ ஆரம்பித்தான். காயத்ரி அவனிடம் வந்து, “அண்ணா அழாதே” என்று அவன் கண்களை துடைத்தாள். முத்துபாண்டி தாத்தா தான் சந்தோஷமாக “செந்தூரா” என்று அழைத்தபடி அவனருகில் வந்தார்.


அவன் அழுதுக் கொண்டிருப்பதை பார்த்தவர், “ஏன்டா அழற? அதான் நீ ஆசைப்பட்ட மாதிரியே உன் பொண்டாட்டி பொறந்துட்டாளே” என்றார்.


அழுவதை அப்படியே நிறுத்தியவன், “நிஜமாவா தாத்தா” என்று அழுத்தி கேட்டான். ஆமாடா வா உன்னைய என்னோட புல்லட் வண்டியில் கூட்டிட்டு போறேன், நீயே பார்க்கலாம் உன் பொண்டாட்டிய” என்றார்.


அவனும் குதுகலமாக தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாத்தாவின் புல்லட் வண்டியில் ஏறினான். போகும் வழியெல்லாம் பெருசுகளும் சிறுசுகளும் அவனை கிண்டல் செய்தனர், “என்ன செந்தூரா உன் பொண்டாட்டி பிறந்துட்டாளாமே” என்று சொல்லி கிளுக்கி சிரித்தனர்.


செந்தூரனுக்கு முகம் கொள்ளா சிரிப்பு, ஆமாம் என்பது போல தலையை ஆட்டிக் கொண்டே சென்றான். 


மருத்துவமனைக்கு சென்றதும் அவனது அப்பத்தா ரஞ்சிதம் அவனை அமரச் சொல்லி, அவன் மடியில் அவனின் அத்தை மகளை படுக்க வைத்தார்.


பன்னீர் ரோஜா போன்ற நிறத்திலும் அதைவிட மென்மையான சருமத்தையும் கொண்டு இருந்த அந்த பெண் குழந்தையை மெதுவாக தொட்டு பார்த்தான். அவன் விரல் பட்டதும்,. அவள் தன் உடலை குறுக்கி நெளிந்தாள். அவனின் விரலை அவள் விரல்கள் கெட்டியாக பிடித்துக் கொள்ளவும் சந்தோஷமாக இருந்தது அவனுக்கு.


“செந்தூரா, அத்தை நீ கேட்ட மாதிரியே உனக்கு ஒரு பெண் குழந்தையை பெத்து கொடுத்துட்டேன். நீ அவளை பத்திரமாக பார்த்துக்குவ தானே” என்றார் சாரதா புன்னகையுடன்.


“ஆமாம்” என்று பலமாக தலையாட்டினான் செந்தூரன். அதன் பிறகு சாரதா வீட்டிற்கு வந்ததும் எப்போதும் குழந்தையுடனே விளையாடிக் கொண்டிருந்தான்.


குழந்தை பிறந்த செய்தியை கேட்ட சுபாஷ் மனைவியை காண வந்திருந்தார். அங்கே அனைவருமே செந்துரனின் பெண்டாட்டி என்றே தன் மகளை விளிப்பதை விரும்பாமல், “இந்த சின்ன வயதிலேயே படிக்கிற குழந்தைங்க மனசுல எதுக்கு கல்யாணம் பெண்டாட்டினு பேசறீங்க. நடக்கும் போது நடக்கட்டும். எதுக்கு இப்பவே இப்படி சொல்லிட்டு இருக்கீங்க” என்று அதட்டினார்.


அவர் சொல்வதில் நியாயம் இருந்தாலும் அப்படி வெளிப்படையாக தன் மறுப்பை அவர் தெரிவிக்கவும் பெரியவர்களுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. “சரி சரி, உடனடியாக குழந்தைக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுங்க, பெயர் வச்சுட்டா இந்த பிரச்சனையே இல்லை” என்றார் கதிரேசன்.


எல்லாரும் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, செந்தூரன் அத்தையின் அருகில் சென்றான், “என்ன செந்தூரா, பாப்பாவுக்கு நீ எதாவது பேர் செலக்ட் பண்ணியிருக்கியா?” என்றார் சாரதா.


அவன் ஆமாம் என்பது போல தலையாட்டவும், “என்ன சொல்லு?” என்றார் அத்தை. “தாரா, என் பெயர் செந்தூரானு வருது இல்ல, அதனால் தாரானு வைக்கணும்” என்றான். அண்ணன் மகனின் கன்னத்தை செல்லமாக கிள்ளி, “அதுக்கென்ன வச்சுட்டா போச்சு, அதோட கொஞ்சம் சேர்த்து தாரிகானு வைக்கலாமா? செல்லமா தாரானு கூப்பிட்டுக்கலாம்” என்றாள் சாரதா.


ஏனென்றால் அவர் கணவர் சுபாஷ் ஏற்கனவே தன் மகளிற்கு தாரிகா என்ற பெயரை தேர்ந்தெடுத்து இருந்தார். அவர் பேச்சையும் மீறாமல் அண்ணன் மகன் ஆசையும் கெடுக்க விரும்பாமல் இப்படி சொன்னார். அதில் செந்தூரனுக்கு ஏக திருப்தி. அவள் எல்லாருக்கும் தாரிகாவாக இருந்துவிட்டு போகட்டும், இந்த செந்தூரனுக்கு அவள் எப்போதுமே தாரா தான்.


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post