இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 03-04-2024

Total Views: 39335

அத்தியாயம்-13


தனக்கான திரைமறைவுக்கு வந்தவளுக்கு அதற்குமேல் அந்த குளிரைத் தாங்க முடியுமென்று தோன்றவில்லை. தான் கொண்டு வந்த ஜெர்கினை மகிழுந்திலேயே விட்டு வந்ததை உணர்ந்தவள் அப்படியே அமர்ந்துவிட, யஷ்வந்த் தன்னவளைத் தேடிக் கொண்டு வந்தான்.

“பேபி..” என்றபடி அவன் உள்ளே நுழைந்த நொடி, வந்து அவனைக் கட்டிக் கொண்டவள் உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது.

 “ஏ சனா..” என்று அவன் அவளை அணைக்க, அவள் மேனி சில்லிட்டிருந்தது. அப்போதே அவள் நிலை புரிய, “ஏ சனா ஜெர்கின் எங்கடி?” என்றான்.

“மா..மாமா.. கா..கார்லயே விட்டுட்டு வந்துட்டேன் போல. ரொ..ரொம்ப குளிருது” என்றவள் அவனை மேலும் இறுக அணைத்துக் கொள்ள,

 “என்னடி? என்கிட்ட கொடுத்து வச்சிருக்கலாம்ல? நானும் போட்டுட்டு வரலை” என்றவனுக்கு அவளது உடலின் நடுக்கம் ஒருவித பயத்தை கொடுத்ததுவோ?

“இரு சனா நான் எடுத்துட்டு வரேன்” என்று விலகப் போனவனால் அவளது இறுகிய பிடியை விலக்க முடியவில்லை!? 

“சனா..” என்று அவன் குரல் மென்மையாய் ஒலிக்க,

 “மா.. மாமா வேணாம்..” என்றாள். அவளையே இரு விநாடிகள் நோக்கியவனுக்கு அது எந்த மாதிரியான உணர்வென்று புரிந்துகொள்ள இயலவில்லை.

“பேபி வன் செக் வெயிட் பண்ணு” என்றவன் அவளை விட்டுவிட்டு வேக நடையுடன் சென்றான். அப்பகுதியை விட்டு அவன் வெளியே வர, அர்ஷித்தின் அருகே புன்னகையுடன் நின்று மஹதி பேசிக் கொண்டிருந்தாள்.

அவளிடம் யஷ்வந்த் வரவே, “யஷ்வாண்ணா” என்று அவனை அணைத்துக் கொண்டாள். 

ஒரு நெடிய வருடம் காணாத அண்ணனின் காட்சி தங்கையவளை கண்கள் கலங்க வைத்திட்டது. அர்ஷித் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது அக்காட்சியை நோக்க, தங்கையின் பாசத்தை முழுதாக ஏற்கமுடியாத பதட்டம் யஷ்வந்திடம்.

அது அவளுக்கு தெரியவில்லை தான் என்றாலும் அர்ஷித் கண்களுக்கு தப்புமா?

 “மதுமா..” என்று அர்ஷித் அழைக்க, அண்ணன் விட்டு பிரிந்து நின்று அர்ஷித்தை சங்கடமாக ஏறிட்டாள். 

'புலிக்கு சிறுத்தைக்கும் நடுவுல இருக்குறத மறந்துட்டோமே' என்று அவள் மனம் எண்ணிக் கொள்ள, 

“மதுமா.. ஐ நீட் யுவர் ஜெர்கின்” என்று யஷ்வந்த் கேட்டான்.

“ஜெர்கின்?” என்று மதுமஹதி கேட்க, 

“ஆமா..” என்று அழுத்தமாய் கூறினான். அவள் அர்ஷித்தைப் பார்க்க, தன் இருக்கையில் வைத்திருந்த அவளது ஸ்வெட்டரை எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கி மதுமஹதி தன் அண்ணனிடம் கொடுக்க, “தேங்ஸ்டா” என்றவன் மீண்டும் அதே வேக நடையுடன் சென்றான்.

“என்ன அண்ணாவாட்டுக்கு வந்து வாங்கிட்டு திரும்ப நார்மலா போயிட்டாங்க?” என்று மதுமஹதி கூற, “உங்கண்ணன நீ கவனிச்சது அவ்வளவு தான். அவன் ஏதோ பதட்டமா இருக்கான். அவன் நடைல எப்பவும் இருப்பதைவிட வேகம் அதிகமா இருக்கு” என்று அர்ஷித் கூறினான்.

விழிகள் விரிய அர்ஷித்தைப் பார்த்தவள் “எனக்கு அப்படி தெரியலையே மாமா” என்று கூற, 

“அதான் சொன்னேனே.. நீ அவனை கவனிச்சது அவ்வளவு தான்” என்று கூறினான். 

'அப்ப நீங்க ரொம்ப தெரிஞ்சு வச்சிருக்கீங்க?’ என்று கேட்கத் துடித்ததை‌ அவள் விழுங்கிக்கொள்ள, 

அங்கே உடையைக் கொண்டு வந்து தன்னவளுக்கு அணிவித்தவன் அங்குள்ள கிட்டிலிலிருந்து வெண்ணீர் தயாரித்து அவளுக்குக் கொடுத்தான்.

சூடான குவளையை கைகளில் பொத்திக் கொண்டவள் அதைப் பருக, மெல்ல மெல்ல அவள் நடுக்கம் அடங்கியது. அவளிடம் ஒரு பெருமூச்சு எழ, அவனிடம் ஒரு ஆசுவாசப் பெருமூச்சு எழுந்தது.

சிலநிமிட மௌனத்தை கலைத்தது, “அண்ணா..” என்ற மதுமஹதியின் குரல். தங்கையவள் குரல் கேட்டு திரும்பியவன், அவள் வெளியே நிற்பது உணர்ந்து “மது இங்க..” என்று குரல் தர, பாவை உள்ளே நுழைந்தாள்.

மஹதியைப் பார்த்த அஞ்சனா, ‘இவங்க தானே நம்மள பார்த்துட்டே இருந்தாங்க' என்று எண்ண, அஞ்சனாவைப் பார்த்து “ஹாய் அண்ணி” என்று மதுமஹதி கூறினாள். 

அஞ்சனா மெல்ல யஷ்வந்தை நோக்கிவிட்டு மதுவைக் கண்டு புன்னகைக்க முயல, “அடையாளம் தெரியலையா?” என்று கேட்டாள்.

தற்போது என்ன கூறுவதென்று புரியாது அஞ்சனா யஷ்வந்தை பரிதாபமாக நோக்க,

 “மதுமஹதி கிருஷ்ணா. கிருஷ்ணா ஃபேமிலியோட லிட்டில் சாம்” என்று மதுமஹதியே கூறினாள். பின்பே அஞ்சனாவுக்கு அவளது அடையாளம் சற்றே பிடிபட்டது.

ஆம்! கிருஷ்ணா குடும்பத்தின் கடைகுட்டி மதுமஹதியே! யஷ்வந்தின் தந்தை யுவராஜின் உடன் பிறந்த தம்பி, அவரைவிட ஏழு வயது சிறியவரான யவீந்தரின் ஒரே செல்வ குமாரியே மதுமஹதி!

அஞ்சனா முகபாவத்தைக் கொண்டே “ஹப்பா.. அண்ணிக்கு என்னை தெரிஞ்சுடுச்சு போலயே” என்று மதுமஹதி கூற, 

“ஃபோட்டோல ரொம்ப சின்னவங்களா இருந்தீங்க அதான்..” என்றாள் திணறலாய் கூறினாள்.

 “ம்ம்.. அது பதினஞ்சு வயசுல எடுத்தது. இப்ப எனக்கு பதினெட்டு வயசு. ஸ்கூல் முடிக்க போறேனே” என்று கூறினாள். 

'ஏதே அவ்ளோதானா?’ என்று அஞ்சனா விழிக்க, 

“அவ்வளவே தான். பாத்தா அப்படி தெரியலைனு தானே சொல்ல போறீங்க?” என்று அடுத்த கேள்வியையும் தானே கேட்டவள், 

“யாழி அக்கா நீங்க நிறையா பேசுவீங்கனு சொன்னாங்க. நீங்க பேசவே மாட்டேங்குறீங்க” என்று கேட்டாள்.

“அ..அப்படிலாம் இல்லை” என்றவள் ‘பல்லெல்லாம் டைப்படிக்குது கொஞ்சம் பேசிதான் தொலைங்களேன் மாமா’ என்று மனதில் நொந்துக் கொண்டு யஷ்வந்தை நோக்கினாள்.

அவள் பார்வையில் இதழ் மடித்து சிரிப்பை கட்டுப்படுத்தியவன், “மதுமா.. அவளுக்கு குளிர் தாங்கலைடா” என்று கூற, 

“அமேரிக்காவுக்கு புதுசா அண்ணா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள். 

அவர்கள் குடும்பத்தாருக்கு அமேரிக்கா அம்பாசமுத்திரம் போல என்றால் அனைவருக்கும் அப்படியா இருந்திடும்?

அந்த கேள்வியில் அஞ்சனா முகம் சட்டென வாடியதைக் கண்ட யஷ்வந்த், மெல்ல ஆமென்று தலையசைக்க, “அச்சுச்சோ.. ஓகே ஓகே. ஹாட் வாட்டர் குடிச்சாங்களா?” என்று கேட்டாள்.

“ம்ம்..” என்று யஷ்வந்த் கூற, “ஓகே அண்ணா. அண்ணி ஓகேவானதும் கூட்டிட்டு வாங்க. நான் வெளிய இருக்கேன்” என்று கூறிவிட்டு சென்றாள். 

திடீரென்று ஏனென்று புரியாது சோகம் அவளை சூழ்ந்துக் கொள்ள, ஏதும் பேசத் தோன்றாது அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“சனா.. இப்ப ஓகேவா?” என்று அவன் வினவ, அவனை ஏறிட்டு மெல்ல தலையசைத்தாள். இருவரும் வெளியே வர, அவளைத் தன் தோள்வளைவில் இருத்திக் கொண்டு கூட்டிவந்தான். 

இருவரும் மேடைக்கு கீழ் வந்துவிட, அர்ஷித்தின் அருகே மஹதி அமர்ந்திருந்தாள்.

 'இவங்க யஷு மாமாவோட பிஸ்னஸ் எனிமினு அன்னிக்கு கேட்டப்ப யாழி டார்லிங் சொன்னாங்க. ஆனா இப்ப இவங்க அவங்க கூட நின்னுட்டு இருக்காங்க' என்று அவள் மனம் கேள்வியெழுப்பியபோதும் அவள் வாய் திறக்கவில்லை.

அங்கு போட்டியாளர்களின் கலைநயங்களுக்கு மதிப்பெண்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர் அருங்காட்சியகத்தார். அத்தனை படைப்புகளும் அழகோவியமாய் இருந்ததால் போட்டி படு சிக்கலாகவே இருந்தது.

அனைவரும் வரிசையாய் அமர்ந்திருக்க, அர்ஷித்தின் அருகே மஹதி, அவளருகே அஞ்சனா, அவளையடுத்து யஷ்வந்த் அமர்ந்திருந்தான். மதுமஹதி அஞ்சனாவை விட வயதில் சிறியவள் என்றாலும், பார்ப்பதற்கும் பக்குவத்திலும் அவளுக்கு மூத்தவள் போன்றே இருந்தாள்.

“அண்ணி இப்ப ஓகேவா?” என்று அவள் வினவ, “ம்ம்” என்று தலையசைத்து புன்னகைத்தாள்.

 “நீங்களும் ஃபேஷன் டிசைனிங் தானே படிக்குறீங்க?” என்று மஹதி வினவ, 
“ஆமா” என்றாள்.

 “நானும் அதுதான் படிக்க போறேன். நீங்க படிக்குற காலேஜ்ல தான் சேருவேன்” என்று மஹதி கூற, 

“அப்ப நீங்களும் இந்தியா வந்துடுவீங்களா?” என்று கேட்டாள்.

அக்கேள்வியில் யஷ்வந்தும் அர்ஷித்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, மஹதிக்கு பக்கென்று ஆனது. ஆனால் இம்முடிவு எடுக்கப்பட்டு வருடங்கள் ஆனதால் நிச்சயம் அவளை யாரும் தடுக்கமாட்டர் என்று அறிந்தவள், ஒரு பெருமூச்சுடன் “ஆமா அண்ணி” என்றாள்.

“இங்க நீங்க எங்க இருக்கீங்க?” என்று அஞ்சனா வினவ,

 “அர்ஷித் மாமா வீட்டுல” என்றாளே பார்க்கனும். 

“மாமாவா?” என்று அஞ்சனா அதிர்ந்து வினவ, அர்ஷித் சட்டென திரும்பிப் பார்த்தான். 

யஷ்வந்த் இதழ் மடித்து தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த, 

“உங்களுக்கு தெரியாதா அண்ணி?” என்று கேட்டாள்.

அஞ்சனா யஷ்வந்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு இறுகிய அவன் முகம் காட்டா உணர்வுகளில் நொந்தவளாய் மஹதியை நோக்கி இல்லையென தலையசைக்க,

 “அர்ஷித் மாமா என் த்..தாய்மாமா பையன்” என்று கூறினாள். 'தாய்மாமா' என்ற வார்த்தையில் அவள் காட்டிய சிறு நடுக்கம் அந்த ஆடவர்கள் இருவர் உடலையும் விரைக்க வைத்தது.

ஆம்! அர்ஷித் மஹதியின் தாய்மாமா மகன். யவீந்தரின் மனைவி யசோதாவின் ஒரே அண்ணனான அக்ஷை பிரசாத்தின் ஒரே மகனே அர்ஷித். மதுமஹதிக்கு ஐந்து வயது இருக்கும்போதே தொழில்துறையில் நடந்த பிரச்சினையால் யாரோ யவீந்தரையும் அவர் மனைவியையும் திட்டமிட்டு விபத்தின் போர்வையில் கொலை செய்திட, தாய் தந்தையற்று தன் தங்கையே உலகமென வாழ்ந்த அக்ஷைக்கும் அவரது மனைவி அர்ச்சனாவுக்கும் அச்செய்தி பேரிடியாய் அமைந்தது.

இருவர் பூதவுடலும் வீட்டில் வைக்கப்பட்டு அனைவரும் சோகமே உருவாக அமர்ந்திருக்க, கோபம் கொப்பளிக்க வந்தவர் தனது தங்கையின் இறப்புக்கு அக்குடும்பம் தான் காரணம் என ஆடித்தீர்த்தார். ஐந்தே வயதான மஹதிக்கு மாமனின் கோபம் அதிகப்படியான பயத்தை கொடுத்தது. 

“என் மருமகள நானே கூட்டிட்டு போறேன்” என்று கர்ஜித்துவிட்டு அவர் மஹதியை தூக்கிக் கொள்ள, “யமுமா.. வேணாம்.. நா..நான் இங்கயே இருக்கேன்” என்று கதறி ஒரு கட்டத்தில் குழந்தை மயங்கி விழுந்தாள்.

குடும்பம் மொத்தமும் பதறிக்கெண்டு அவளை மருத்துவமனையில் சேர்க்க, பயத்தில் எழுந்த மயக்கம் என்று மருத்துவர்கள் கூறி சிகிச்சைக் கொடுத்தனர். அக்ஷைக்கும் யசோதாவுக்கும் வயது வேறுபாடு அதிகமென்பதால் அவரும் அவர் மனைவியும் சேர்ந்து தான் யசோதாவை வளர்த்தனர். அவளுக்காகவே அவர்கள் குழந்தைகூட தாமதாக தான் பெற்றுக் கொண்டனர்.

அப்படிப்பட்ட யசோதாவின் அச்சில் உருவான மகளை நோகடிக்க மனமின்றி “தயவுசெஞ்சு பிள்ளைய பயமுறுத்தாதீங்க. அது பிஞ்சு.. அவளை அழவச்சு நாம வற்புறுத்தி கூட்டிட்டு போக வேணாம். அவ வளரட்டும். என் பாசம் புரிஞ்சு அவளே வருவா” என்று அர்ச்சனா கூறிட, அதேபோல் வளர்ந்து அனைத்தும் அறிந்து பக்குவப்பட்ட மதுமஹதி பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அர்ச்சனா தங்களுடன் அமேரிக்க வந்து இருக்கும்படி கேட்டபோது தவிர்க்க மனம் வராது நின்றாள்.

அர்ச்சனா மற்றும் அக்ஷை இந்தியாவைச் சேர்ந்தோர் தான். வேலை ஒன்றிற்காக ஐந்து வருட காலம் அமேரிக்காவில் கழிக்க நேரிட, மஹதி சற்றே தயங்கினாள்.

“உன்னை போக வேண்டாம்னு கண்டிப்பா யாரும் சொல்லவே மாட்டோம் மதுமா.. தாய்மாமன் உறவு தூக்கிபோடுறது இல்லை. ஆனா உனக்கு விருப்பமில்லாம உன்னை வற்புறுத்தவும் மாட்டோம். உன் மாமா ரொம்ப கோவக்காரர் தான். ஆத்திரத்தில் செயல்பாடு இழப்பவர் தான். ஆனா உன்மேல உயிரா இருப்பவர்” என்று யமுனா கூற, 

ஒருவித தெளிவு கொண்டவள் “நான் லெவந்த் டுவல்த் அங்கயே படிக்குறேன் யமுமா.. காலேஜ்கு இங்க வந்துடுவேன்” என்று கூறினாள்.

இதற்கிடையில் யஷ்வந்தின் திருமணத்திற்கு அவள் வர ஆசை பட்டும் அக்ஷைக்கு அதில் விருப்பமில்லாதுபோக, விசா கிடைக்கவில்லை பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்று தட்டிக்கழித்தார். நிச்சயம் அர்ஷித்திடம் கேட்டால் அவன் தானே வந்து அவளைக் கூட்டிச் சென்று கூட்டி வருவான். ஆனால் அப்போது அர்ஷித் வேலை விடயமாக இத்தாலியில் இருந்ததால் அவனே யஷ்வந்தின் வரவேற்பு விழா அன்று தான் இந்தியா சென்றிருந்தான்.

மேலும் அத்தையை துணைக்கு அழைத்தால் மாமா சண்டையிடுவாரோ என்று பயந்து மஹதியும் ‘தானில்லையென்று வருந்தாது திருமணத்தை முடிக்க வேண்டும்’ என்று தன்னை திடப்படுத்திய குரலில் திடமாக யமுனாவிடம் கூறியிருந்தாள்.

அந்த நினைவுகளில் சுழன்றவளை ஒலிவாங்கியின் சத்தம் மீட்டெடுக்க, போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படுவதாக கூறப்பட, அனைவர் முகத்திலும் அத்தனை ஆர்வம். அர்ஷித் மற்றும் யஷ்வந்த் முகம் வழமைபோல் அமைதியாகவே இருக்க, மஹதிக்கு படபடப்பாக இருந்தது. 

'அண்ணாவோ மாமாவோ ஜெயிச்சா எப்படி ரியாக்ட் பண்றது? இவங்க சண்டைல நம்ம மண்டை உறுலுது பா' என்று மதுமஹதி நினைத்துக் கொள்ள, மூன்றாம் பரிசிலிருந்து அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவிலிருந்து வந்த ஒருவரின் ரஷ்யா மற்றும் சீன பாரம்பரிய உடைகளின் கலப்பில் தயாரான உடை மூன்றாமிடமும், இந்தோனேசியாவிலிருந்து பண்டைய ராஜா காலத்து உடையில் நாகரீக சாயலின் தெளிப்போடு தயாரான ஆண்கள் உடை இரண்டாம் பரிசும் பெற, மஹதி மற்றும் அஞ்சனா நுனியிருக்கைக்கு வந்துவிட்டனர்.

“அன்ட் ஃப்ர்ஸ்ட் பிரைஸ் கோஸ் டூ” என்று கூறி நிறுத்தியவர், உற்சாகக் குரலில், “யஷ்வந்த் கிருஷ்ணா ஃப்ரம் யுவனா இண்டஸ்ட்ரீஸ், இந்தியா’’ என்று கூற, அஞ்சனா உற்சாகத்துடன் திரும்பி தன்னவனைப் பார்த்தாள்.

அவன் கண்களில் மகிழ்ச்சியும் இதழில் மெல்லிய புன்னகையும் தோன்ற, தன்னவளைப் பார்த்து கண்ணடித்தவன் எழுந்து மேடைக்குச் சென்றான். ‘சிறந்த ஆடல்கலை நிபுணர்’ என்ற விருது வழங்கப்பட, அவன் முகத்தில் இன்பமும் கர்வமுமாய் ஒரு புன்னகை.

அரிதினும் அரிதான தன்னவனின் புன்னகையைக் கண்ட அஞ்சனாவின் மனதில் மீண்டுமொரு இனம்புரியா சலனம். கைதட்டிக் கொண்டிருந்தவள் கரங்கள் தன் செயல் நிறுத்தம் செய்து பூரிப்போடு நோக்க, அவளிடமிருந்து வந்த சத்தம் நின்றதில் அவளைத் திரும்பிப் பார்த்த மஹதி பக்கென சிரித்து வைத்தாள்.

அந்த சிரிப்பு சத்தம் கூட அஞ்சனாவை நிலை கொண்டுவரவில்லை. யஷ்வந்திடம் ஒலிவாங்கி கொடுக்கப்பட, “தேங்க் யு சோ மச் ஃபார் யுவர் அவார்ட்ஸ் அண்ட் விஷஸ் சர். அண்ட் ஸ்பெஷல் தாங்க்ஸ் டு மை பீ. ஏ. வினோத் அண்ட் மிஸஸ். அஞ்சனா யஷ்வந்த் கிருஷ்ணா டு பி எ மோடலர் ஃபார் மை ப்ரோடக்ட் (thank you so much for your awards and wishes sir. And special thanks for my P.A.Vinoth and Mrs. Anjana yashwanth Krishna to be a modeler for my product)” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான்.

மீண்டும் அவன் கீழே வந்திட, அவனை கட்டியணைத்த மஹதி, “வாழ்த்துக்கள் அண்ணா” என்று கூறினாள். 

“தேங்ஸ் மது” என்றவனை அங்குள்ளோர் பலர் சூழ்ந்துகொண்டு கைக்குலுக்கி தங்கள் வாழ்த்தை தெரிவிக்க, இதழ் பிரியா புன்னகையுடன் கைகுலுக்கி தன் நன்றியை தெரிவித்தான்.

அர்ஷித் இன்னும் வாழ்த்தாமல் நிற்பதைக் கண்டு மஹதிக்கு சங்கடமாக இருக்க, 

‘பாவம் மாமாவும் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சாங்க’ என்று மனதோடு நினைத்துக் கொண்டாள். யஷ்வந்தை சுற்றிய கூட்டம் சற்றே விலக, அழுத்தமான அடிகளுடன் அவனிடம் வந்த அர்ஷித் தன் கரம் நீட்ட, யஷ்வந்த் அவன் முகம் நோக்கினான்.

தன் முத்து முறல்கள் மின்ன புன்னகைத்த அர்ஷித், “கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர். யஷ்வந்த் கிருஷ்ணா” என்று கூற, 

“தேங்ஸ் வித் ப்ளெஷர்” என்று யஷ்வந்த் கூறினான்.

 மேலும் ஒலிவாங்கியில் பேசியவர் மூன்று படைப்புகளுக்கு சிறப்புப் பரிசு கொடுப்பதாக அறிவிக்க, அதில் அர்ஷித்தின் பெயர் முதலிடம் பெற்றது.

தனக்கானதை மனமாற ஏற்று நன்றி கூறி கீழிறங்கிய அர்ஷித்திற்கு தற்போது யஷ்வந்த் கரம் நீட்ட, “ஐ எக்ஸ்பெக்ட்  திஸ் ஃப்ரொம் யு” என்றபடி அர்ஷித் கரம் குலுக்கினான்.

 “பட் ஐ டிட்ன்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரொம் யு” என்று யஷ்வந்த் அவன் தன் பாராட்டுக்களை எதிர்ப்பார்ததாய் கூறியதை தான் எதிர்ப்பார்க்கவில்லை என்று கூற, அர்ஷித்திடம் அட்டகாசமான சிரிப்பு.

அத்தனை நேரம் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சனாவை நோக்கிய யஷ்வந்த் தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி நோக்க, எப்போதும் போல் அதில் வியந்து நின்றாள். சின்ன புன்னகையுடன் கண்களால் அவன் வாவென்று அழைக்க, அவனிடம் வந்தவள் “வாழ்த்துக்கள் மாமா” என்றாள்.

கண்கள் மூடித் திறத்து புன்னகைத்தவன் கலைந்த அவள் முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டு, “போலாமா?” என்று கேட்க, அவளுக்கு ‘ஹப்பாடா’ என்றிருந்தது. 

அதில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் மஹதியை நோக்கி, “மதுமா..” என்க, “ரியலி ஹாப்பி ஃபார் யூ அண்ணா” என்றாள்.

“தேங்ஸ்டா” என்றவன் “நாங்க கிளம்புறோம் மது” என்க, 

“அதுக்குள்ளயா?” என்று ஏமாற்றமாய் கேட்டாள்.

 “இந்தியா போக வன் வீக் மேல ஆகும்டா. இங்கருந்து கிளம்புறோம்” என்று யஷ்வந்த் கூற,

 “ஓ..” என்றவள் அவனை அர்ச்சனா வீட்டிற்கு அழைக்கலாமா வேண்டாமா என்று தயங்கினாள்.

யஷ்வந்த் வந்தால் அக்ஷை சாமியாடிவிடுவார் என்பது திண்ணம். இந்தியாவில் அர்ஷித்தை அடிக்கடி சென்று பார்த்து வருவாள் தான். அப்போதெல்லாம் தயங்காது அர்ஷித்தை வீட்டிற்கு அழைத்திருக்கின்றாள். ஆனால் தற்போது அதேபோல் தயக்கமின்றி யஷ்வந்தை அழைக்க முடியவில்லல அவளால். அக்ஷையை நிச்சயம் அர்ஷித் சமாளித்துவிடுவான். ஆனால் தேவையில்லாது தான் பிரச்சினை செய்திட வேண்டுமா என்று எண்ணினாள்.

தயக்கத்துடன் ஏறிடும் தங்கையைப் பார்த்து அவள் தலை கோதியவன், “நோ வொரீஸ் மது” என்க,

 அர்ஷித் அழைப்பானா என்று அவனை ஏறிட்டாள். அர்ஷித் யஷ்வந்தை நோக்க, அவன் பார்க்கும் அதே உணர்வற்ற பார்வை யஷ்வந்திடம்!

தானாவது அண்ணாவுடன் செல்வோமா என்று எண்ணிய மஹதிக்கு அதற்கும் தயக்கமாக இருந்தது. யஷ்வந்திற்கு அக்ஷை சார்ந்த யாரும் பகையாளிகள் கிடையாது‌. ஆனால் மதியாதார் தலைவாசல் மிதிப்பதென்ன, நோக்குவதைக் கூட தவிர்த்திடுபவன். அப்படியிருக்க, அர்ஷித்தும் கூப்பிடவில்லை, யஷ்வந்தும் அவர்கள் இல்லம் செல்ல விரும்பவில்லை.

அதற்குமேல் அந்த மௌனம் பொறுக்காது அண்ணனைக் கட்டிக் கொண்டு, “பை அண்ணா.. வில் மிஸ் யூ. ஃப்ளைட் என்னிக்குனு சொல்லுங்க வரேன்” என்று கூறி அவள் அர்ஷித்தை நோக்க, அவன் தான் அழைத்து செல்வதாக தலையசைத்தான். 

“டூ டேஸ் கழிச்சு தான்டா” என்று யஷ்வந்த் கூற,

 “இந்தியா போக ஒருவாரம் ஆகும்னு சொன்னீங்க?” என்று மஹதி வினவ, “பேரிஸ் போறோம் மது” என்றான்.

'யப்பா.. யாழிட்ட கூட இவ்வளவு பொறுமையா பேசிருக்க மாட்டான்' என்று அர்ஷித் நினைத்துக் கொள்ள,

 “ஓ சூப்பர் அண்ணா. என்ஜாய் தி வீக்” என்றவள் அஞ்சனாவையும் அணைத்து பிரியா விடை கொடுத்தாள்.


Leave a comment


Comments


Related Post