இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 4 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 03-04-2024

Total Views: 24326


 பாவை - 4

மாலை நேரம் தன்னறையில் அமர்ந்திருந்த அஞ்சனா. லேடிஸ் ஹாஸ்டலில் இருந்து எடுத்து வந்த தன் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளின் பேக்கிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தவளுக்கு அதனைக் கண்டதுமே விழிகளோ கலங்க ஆரம்பித்தது.

“நான் பண்ணுறது தப்பு தான். ஆனா எனக்கு வேற வழி தெரியல. என்னை மன்னிச்சிருங்க “ அந்த புகைப்படத்தை கண்டு மன்னிப்புக் கேட்டவளோ நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

எத்தனை நொடிகள் தான் சென்றதோ தெரியவில்லை. யாரிடமோ கைபேசியில் பேசியவாறு நந்தன் அறைக்குள் வர, சட்டென முதுகு காட்டி அந்தப் புகைப்படத்தை மறைத்தாள்.

கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு துணிகளை எடுத்து அடுக்கி வைக்க, பேசி முடித்து கைபேசியை வைத்தவனோ, “என்ன பண்ணுற நீ ?” கேட்ட நொடி, இதயத்துடிப்பு சட்டென நின்று விட்டது.

“உன்னை தான் கேட்குறேன் அஞ்சு. என் பக்கம் திரும்பு “ என்க,

‘கண்டு விட்டானா  என்ன ?’ உதட்டினை கடித்தவளோ தடுமாற்றத்தோடு திரும்பினாள்.

“ஏன் உன் கண்ணெலாம் அழுதது மாதிரி சிவந்திருக்கு “

“நானா ? நான் ஏன் அழப் போறேன் “

“அப்போ உன் கண்ணு “

“அது கபோர்ட்ல தூசி இருந்தது தட்டும் போது கண்ணுல விழுந்திருச்சி. இப்போ சரியாகிருச்சு வேற ஒன்னுமில்லை. “ என்று விட்டு திரும்பிக் கொண்டாள் 

எழுந்து வந்து மனைவியைப் பின்னிருந்த அணைத்த நந்தனும், “அஞ்சு “ உருகி கரைய, இறுக்கியவனின் அணைப்பின் பின் இருக்கும் செயல் புரிந்து விட்டது.

“பகலுங்க “ மெல்லக் கூற,

“அதுனால என்ன ?” என்றான்.

“சும்மா இருங்க. போய் மொபைல்லை ஏதாவது படம் பாருங்க. “

“அந்த படமெல்லாம் எனக்கு வேண்டாம். வேற படம் தான் வேணும் “ கிசுகிசுப்பாய் கூறிக் கொண்டு மனைவியோடு இணைய, முதலில் மறுத்தவளோ பின் தன்னையே மறந்தாள்.

முத்த மழையில் நனைந்து தன்னவன் இதழில் தாகம் தீர்த்து ஓருடலாய் கலைந்து கூடலை வெற்றிகரமாக முடிக்க, அவர்களின் செய்கை காண முடியாது ஆதவனோ மறைந்து விட்டான்.

தன்னவன் நெஞ்சில் சாய்ந்தவாறு பெண்ணவள் படுத்திருக்க, வருடிக் கொடுத்தவனுக்கு அப்போது தான் காலையில் அண்ணன் கூறியது நினைவுக்கு வந்தது.

அண்ணனைப் பற்றி எதுவுமே தவறாக மனைவியிடம் கூறியதில்லை. பின் ஏன் அவன் அவ்வாறு கூறிச் சென்றான் ?

“அஞ்சு “

“சொல்லுங்க” விழிகள் சொருக கேட்கவே,

“தூக்கம் வருதா ?”

“இல்லை. நீங்க சொல்லுங்க ?”

“காலையில என் அண்ணன் ஏன் அப்படி சொன்னான் ? நீ எதுவும் அவன் கிட்ட சொன்னையா ?” என்ற நொடி பட்டென எழுந்து விட்டாள்.

“என்னாச்சு அஞ்சு ?”

“அது..அது வந்து “ 

“சொல்லு. காலையிலே நான் கேட்டதுக்கு சாப்பிடுங்க சொல்லிட்டே. எல்லாரும் கிளம்புற அவசரத்துல நானும் மறந்துட்டேன். அப்பறம் நம்மளும் வெளியேப் போயாச்சு. சுத்தமா மறக்க இப்போ தான் நியாபகம் வந்தது. சொல்லு “ என்க,

தான் பொய்யாக எதையாவது கூறி வைத்தால் நிச்சியம் வீட்டில் இருப்பவர்கள் பேசுகையில் தெரிந்து விடும். அதனாலே காலையில் நடந்த அனைத்தையும் அப்படியே கூறினாள்.

“எதுக்கு இப்படி அஞ்சனா ?”  எரிச்சலோடுக் கேட்க,

“என்னாச்சுங்க ?”

“இதே வேற யாராவது இருந்திருந்தா குடும்பத்தை வந்ததும் பிரிக்கப் பார்க்குறையா கேட்டிருப்பாங்க. என்னை மாதிரி வேற எவனும் இருந்திருந்தா உன் கன்னம் பழுத்திருக்கும் "

“நான் ஒன்னும் தப்பா சொல்லையே ? நிதின் மாமா பண்ணுனதை தானே சொன்னேன். “ என்று சற்று முன் கொஞ்சிய கிளிகள் இப்போது எலியும், பூனையுமாக மாறியது.

“அதுக்கு என்னை எதுக்கு இதுல கோர்த்து விட்டே ?”

“கவிக்கா பாவம். அதுனால சொன்னேன். நிதின் மாமா கவி அக்காவை முறைச்சாங்க. அக்கா பயந்து போய் இருந்தாங்க அதான் இப்படி பண்ணுனேன் ?”

“அப்போ என் அண்ணன் அந்த நிமிஷம் என் மேல கை வச்சிருச்சா என்ன பண்ணிருப்பே ?”

“அடிச்சிருப்பேன் “ பதிலுக்கு பதிலாய் கூறிக் கொண்டிருந்தவளோ சட்டென வார்த்தையை விட்டாள்.

“அஞ்சனா. என்னாச்சு உனக்கு ? கல்யாணத்துக்கு அப்பறம் ரொம்ப மாறிட்டே போல “

“நான் எப்பவும் போல தான் இருக்கேன். இந்த வீட்டுல நடக்குறதை தான் சொன்னேன். புதுசா பண்ணுறது நீங்க தான். கோவப்பட கூட உங்களுக்கு தெரியுது. அது சரி தான் “ முறைப்போடு கூறிவிட்டு, தன் வாய் தனக்கு வினை தப்பித்தால் போதுமென எழுந்து குளியலறைக்குள் சென்று விட்டாள்.

மனைவிச் சென்ற பின்னே தான் தானும் அதிகமாக கத்தி விட்டோம்மோ ? என்ற எண்ணம் தோன்றியது.

‘ச்சே, கல்யாணத்துக்கு அப்பறம் நீ முழுசா மாறணும், பொறுமையா இருக்கணும் பிரெண்ட்ஸ் சொன்னது எல்லாம் காத்துல விட்டேன் பாரு. எனக்கு இது தேவை தான். யாருமே இல்லாம அனாதையா வாழ்ந்தவளைப் போய் கல்யாணம் முடிஞ்ச ரெண்டே நாளுல நோகடிச்சிட்டேன் ‘ நெற்றியை தேய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

நேரம் சென்று அஞ்சனா வெளியே வர, “அஞ்சு சாரி “ விழிகளை சுருக்கிக் கெஞ்ச,

‘கோவம் வந்தா மட்டும் அஞ்சனா. மத்த நேரத்துல அஞ்சுவாம் அஞ்சு ‘ புலம்பிக் கொண்டு கண்ணாடியின் முன் சென்று நிற்கவே, எழுந்து வந்தான்.

“சாரி பட்டு “ தோள்பட்டையில் தன் முகம் வைத்து கண்ணாடியில் அவள் முகம் கண்டு கூற,

“அக்காவை காப்பாத்த அப்படி பண்ணுனேன். நான் பண்ணினது தப்பு தான். அதுக்கு நீங்க புரிய வைக்கிற மாதிரி சொல்லணும். அதை விட்டுட்டு திட்டுறீங்க ? குடும்பத்துல இருக்குறவங்க கிட்ட என்ன மாதிரி நடந்துக்கணும் எனக்கு என்ன தெரியவா செய்யும் “ என்ற நொடி, மனைவி வருந்துகிறாள் என நினைத்து திரும்பி தன்னோடு அணைத்துக் கொண்டான்.

விடாது இறுக்கியவன் பல முறை மன்னிப்பு வேண்ட, அதன் பின்னே  பேச ஆரம்பித்தாள்.

“சரி இனி இதை பத்தி பேச வேண்டாம். கவிநயா அக்காவை பார்த்தா பாவமாயில்லையா ?”

“பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் பேசுற “

“காலையில அவங்க கிட்ட பேசும் போது அவங்க இந்த வீட்டுல என்ன வாழ்க்கை வாழுறாங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். வேலைக்காரி மாதிரி தான் இருக்காங்க “ கவலையோடு கூறவே,

“அண்ணி எல்லா வேலையும் பார்க்குறதுனால உன் பார்வையில அப்படி இருக்கும். அதெல்லாம் இந்த வீட்டுல நல்லா தான் பார்த்துக்குறோம். என்னென்ன தேவையோ எல்லாமே அவங்க செய்ய தானே செய்யுறோம் “ என்க, தன்னவனிடம் இப்போது பேசி புரிய வைக்க முடியாது என்பதை உணர்ந்துக் கொண்டாள்.

“சரி விடுங்க. வெளியே எங்கையாவது போய்ட்டு வரலாமா ?” ஏனோ இங்கிருந்தால் இதனை தான் நினைப்போம் என்ற எண்ணத்தில் கேட்க, நந்தனும் சரி என்றான்.

அன்றைய நாள் அப்படியேச் சென்று விட, மறுநாள் இருவரும் ஹனிமூன் கொண்டாட வெளியூர் கிளம்பி விட்டனர்.

பெற்றவர்களிடம் காலையிலே கூற அவர்களும் சரியென்று கூறிவிடவே, நான்கு நாள் பயணமாக சிம்லாவிற்கு கொண்டாடச் சென்றனர்.

இரவு நேரம் போல் உணவு உண்ணும் போது கணவனிடம், “ஏங்க, பாப்பாக்கு இந்த மந்த் ஸ்கூல் பீஸ் கட்டணும் ?” மெல்ல கவிநயா கூற,

“இது வேறையா ? வாங்குற சம்பளம் உன் பிள்ளைக்கு பீஸ் கட்டவே சரியாகிரும் போல “ என்ற நொடி, அப்படியே சுருக்கென்று குத்திய உணர்வு.

‘தன் பிள்ளை என்கிறானே, இவனுக்கும் அவள் பிள்ளை தானே ?’ மனதில் நினைக்க,

“எவ்வளோ கட்டணும் ?”

“இருபதாயிரம் “

“எல்லாரோட பணமும் உன் கிட்ட தானே இருக்கு. அதுல எடுத்துக் கட்டு “

“அதுல எப்படிங்க கட்ட முடியும் ?”

“ஏன் அது என்ன உன் காசா ? என்னை பெத்தவங்களும் என்னோட காசும் தானே “

“ஆமாங்க. அடுத்த வாரம் வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கணும். அதுக்கு மட்டும் தான் இருக்கு “

“அப்போ தரேன். நாளைக்கு அதை எடுத்து கட்டிடு “ என்கவே, சரியென்றாள். அப்போது தான் தன்னிடம் தண்ணீர் இல்லை என்று எடுக்க வெளியே வந்த தீப்திக்கு இவர்கள் பேசுவது செவியில் விழுந்தது.

அன்று சனிக்கிழமை விடுமுறை நாளிருக்க, வேலை அனைத்தையும் முடித்து மகளின் பள்ளிக்கு பத்து மணி போல் கிளம்பி வந்தாள் கவிநயா.

மாமியாரும், மகளும் ஹாலில் அமர்ந்திருக்கவே, “அத்தை, பாப்பா இஸ்கூல் வரைக்கும் போய்ட்டு வரேன் “ என்க,

“எதுக்கு ?” என்றார்.

காரணத்தை கூறவே, “சரி போய்ட்டு வா “ என்றதும், அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

அண்ணி கொண்டுச் செல்லும் பணம் வீட்டுக்கு தேவைக்கான பொருள் வாங்கக் கொடுத்தது என்பது தீப்தி மட்டுமே அறிந்தது.

நாட்கள் செல்ல தேனிலவு முடிந்து வந்த புது தம்பதிகள் இருவரும் திரும்ப வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். நந்தன், அஞ்சனா இருவரும் ஒரே போல் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தான் வேலைப் பார்த்து வருகின்றனர்.

நந்தன் மூன்று வருடமாக அங்கு வேலைப் பார்க்க, அஞ்சனா அங்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறது. இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்து எட்டு மாதங்களாகிறது.

அஞ்சனா அவசரப்பட்டதால் தான் விரைவில் நந்தன் திருமணம் கொண்டான். எதற்கு அவசரப்படுத்துகிறாள் என்பதை தன்னவள் மீதுள்ள காதலில் மறந்தேப் போனான்.

இப்போது கூடுதலாக அஞ்சனாவிற்கு சேர்ந்து மதிய உணவினை தயாரிக்க வேண்டிய நிலையில் இருந்தாள் கவிநயா. அது ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால் பொருட்டாக எடுக்கவில்லை. 

திருமணத்திற்கு பின் முதல் நாள் இருவரும் வேலைக்கு வர, உடன் வேலைப் பார்த்த அனைவருமே வாழ்த்து கூறினர். இன்முகமாக ஏற்றுக் கொண்டு தங்களின் வேலையைப் பார்த்தனர்.

மதிய நேரம் போல் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கேலி, கிண்டலோடு உணவினை முடித்தனர்.  

மற்றவர்கள் சென்று விட, கணவன், மனைவி இருவர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

“உனக்கு நியாபகம் இருக்கா அஞ்சு. இந்த கேண்டீன்ல வச்சி தான் நம்ம பஸ்ட் மீட் பண்ணுனோம் “ என்க,

“இல்லையே ?” சட்டென மறுத்து கூறினாள்.

“அப்போ இதுக்கு முன்னாடி என்னை எப்போ பார்த்தே ?” என்றதும், தலையை குனிந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

“ஆமா, ஆமா நான் மறந்தே போயிட்டேன் “ என்று சமாளிப்பாய் கூறவே, 

“அஞ்சு, நீ என் கிட்ட எதையாவது மறைக்கையா ?” கேட்ட நொடி, அதிர்ந்தவளோ நிமிர்ந்தும் அவனைகாணவில்லை. தன் முகத்தைப் பார்த்தால் கண்டு பிடித்து விடுவான் என்பதால் அனைத்தையும் எடுத்து வைத்து கிளம்பத் தயாரானாள்.

“உன்னை தான் கேட்குறேன் அஞ்சு ?” மனைவியின் கரங்களை பற்றி தடுக்க,

“எதுக்காக இப்படி கேட்குறீங்க நந்தன் ? அப்போ உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னு தானே அர்த்தம். நான் உண்மையா இல்லைன்னு சொல்லுறீங்க ?” வேகவேகமாய் கோபமோடுக் கேட்க,

“ஹே ! ரிலாக்ஸ் எதுக்கு நீ இப்போ இவ்வளோ கோபப்படுற ? நான் ஏதோ சும்மா கேட்டேன். “

“ஹேர்ட் பண்ணாதீங்க நந்தன். டைமாச்சு வாங்க “ என்றவளோ அவனின் வருகிறானா என்று கூட காணாதுச் சென்று விட, தன்னை தானே திட்டிக் கொண்டான்.

‘டேய், உனக்கு என்னடானாச்சு. ஏன்டா இப்படி ஏதாவது கேட்டு அவளை காயப்படுத்துற ?’ நினைத்து நெற்றியில் அடித்துக் கொண்டுச் சென்றான்.

தன் இருக்கையில் வந்து அமர்ந்தவளின் மனமோ ஒரு நிலையில் இல்லை. 

‘இதற்கு முன் எப்படியோ ? ஆனால் இனி கணவன் மனைவி என்றாகி விட்டது. இனி ஒவ்வொரு நொடியும் வீட்டிலும் சரி இங்கும் சரி அவனோடு தான் இருக்கப் போகிறோம். தன் முகமே அவனுக்கு எதையோ காட்டிக் கொடுக்கிறது. அதனால் தானே இப்படி கேட்கிறேன். இனி தான் கவனமாக இருக்க வேண்டும். அவனை கேள்வி கேட்க விடாது வைத்துக் கொள்ள வேண்டும் ‘  என்று நினைத்துக் கொண்டாள்.

இருள் சூழப் போகும் இருவரும் அவரவர் பைக்கில் வீடு திரும்பினர். வேலைக்குச் சேர்ந்த மூன்றாம் மாதத்திலே மாதத்தவனை மூலம் இஸ்கூட்டி ஒன்றை வாங்கிய அஞ்சனா அதிலே தான் தினமும் வந்துச் செல்வான். 

இப்போது திருமணம் முடிந்த பின்னும், வீட்டில் வைத்து என்ன செய்ய என்பதால் அதனை எடுத்துக் கொண்டு அலுவலகம் வந்திருந்தாள். ஒரு சில நாட்களில் இருவருக்கும் வெவ்வேறு நேரங்களில் வேலை முடியும் என்பதால் தன் இஸ்கூட்டியிலே சென்று வருவதாகக் கூற நந்தனும் கேட்டுக் கொண்டான்.

அன்று ஒரே போல் வேலை முடிய இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அவர்கள் வரும் நேரம் மனோகரி ஹாலில் அமர்ந்திருந்தார்.

இளநகை ஒன்றை உதிர்த்து விட்டு நேராக மாடியேற, “மருமகளே ! “ அஞ்சனாவைக் கண்டு அழைத்தார்.

“சொல்லுங்க அத்தை “ என்றவளோ திரும்பி அவரின் அருகில் வர, நந்தனும் மாடிப்படி அருகே அப்படியே நின்றான்.

“இனி ஒவ்வொரு மாசமும் சாப்பாட்டுக்கு ஐயாயிரம் கொடுத்திரும்மா. நீ வேலைக்கு போகாம இருந்தா உன் புருஷன் கிட்ட கேட்பேன். நீ தான் போறையா அப்போ நீயே கொடுத்துரு “ என்க, அவளோ திரும்பி கணவனைக் கண்டாள்.

“அவங்களும், நானும் எப்பவும் ஒன்னு தான். ஏதோ எங்களை பிரிச்சிப்பேசுற மாதிரி பேசுறீங்க ?” பட்டென கேட்டு விட, 

“அப்படி நினைச்சா நான் எதுக்கு உங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லப் போறேன். என் மகனுக்கு பொண்ணு தர எத்தனை பேர் இருந்தாங்க தெரியுமா ? ஏன் என் அண்ணன் பொண்ணு கூட காத்துக்கிட்டு தான் இருந்தா. வர்ற வைகாசி அவளை தான் கட்டி வைக்கணும் நினைச்சேன். என்ன பண்ண நான் நினைச்சது எங்க நடந்தது “ வெறுப்போடு கூறினார்.

“இப்போ எதுக்கு இதை சொல்லுறீங்க அத்தை ?” என்க,

“அஞ்சு “ மனைவியை அடக்கினான்.

“அம்மா, இனி ஒன்னாம் தேதி சேர்த்துக் கொடுத்துறேன் “ எனக் கூறி மனைவியை அழைத்துக் கொண்டுச் சென்றான் நந்தன்.

தங்களின் அறைக்கு வந்த அஞ்சனா கைப்பையை படுக்கையில் வீச, தங்களின் குடும்பத்தாரோடு இவள் ஒத்துப் போக இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதை நந்தன் புரிந்து வைத்திருந்தான்.

“என்னாச்சு அஞ்சு ?”

“சாப்பாடுக்கு காசு வாங்குறாங்க. என்னங்க இதெல்லாம். ஆமா அவங்க ஏதோ நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தது பிடிக்காத மாதிரிப் பேசுறாங்க. யாருமே இல்லாத எனக்கு எல்லாரோட அன்பும் கிடைக்கும் நினைச்சு வந்தா அப்படி ஒன்னும் இங்கே இல்லை. நீங்க என்னை ஏமார்த்திட்டீங்க நந்தன் “ வேதனையோடுக் கூறவே, மனைவியை அணைத்துக் கொண்டான்.

ஆறுதல் வார்த்தை கூறி நந்தன் தடவிக் கொடுக்க, இவர்களின் எண்ணங்களையும், இங்கு நடக்கும் செயல்களையும் நினைத்து உள்ளுக்குள் விஷமத்தோடு சிரித்துக் கொண்டாள் அஞ்சனா.

 தொடரும் ...

தங்களின் கருத்துகளை மறக்காமல் தெரிவிக்கவும். நன்றி 



Leave a comment


Comments


Related Post