இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...23 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 04-04-2024

Total Views: 33834

இரண்டு மூன்று நாட்களாக விடாத அலைச்சல் பரபரப்பாய் திருமணம் என்று மொத்த குடும்ப அங்கத்தினர்களும் ஓடிக்கொண்டே இருந்ததால் மொத்தமாய் சோர்வு தாக்கி இருக்க வாயில் கொசு போவதுகூட தெரியாமல் ஆளுக்கு ஒரு பக்கமாய் அயர்ந்த உறக்கத்தில் இருந்தனர். முகிலன் தன் புது மனைவியை அழைத்துக்கொண்டு முதலிரவு கொண்டாட கிளம்பிவிட்டான். புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வராமல் உழன்று கொண்டிருந்தவள் பூச்செண்டு மட்டுமே. அந்த பிளாட்டில் உள்ள இரு அறைகளுமே விஸ்தாரமானவை. தரணியின் அறையில் ஆண்களும் கூடத்தில் பெண்களும் படுத்திருந்தனர். பாட்டி சோபாவில் படுத்துக்கொண்டார். தரணி வீட்டில் இல்லை… ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தான். பூச்செண்டின் அறையில் அவள் மட்டுமே அந்த விஸ்தாரமான கட்டிலில் கொட்ட கொட்ட விழித்தபடி புரண்டு கொண்டிருந்தாள். எத்தனையோ வற்புறுத்தி அழைத்தும் யாரும் அவளுடன் சென்று படுத்துக்கொள்ளவில்லை… முதல் நாள்வரை மீரா உடன் இருந்தாள். இன்று அவளும் அருகில் இல்லை.


“அத்த… ஒனக்குதேன் மொழங்கால் வலி இருக்குல்ல… கீழ ஏர் படுத்திருக்க…? இத்தாம்பெரிய ரூம்ல நான் மட்டும்தானே இருக்கேன்… இங்க வந்து படுக்குறதுக்கு என்ன…? எந்திரிச்சு வா…” செண்பகத்தை அழைத்தபோதும் மறுத்துவிட்டார்.


“நாளைக்கு எல்லாரும் ஊருக்கு ஓடிருவோம்… கொள்ள வேலை அங்க கிடக்குல்ல… அக்கா (அனுசுயா) அவுகட்ட செத்தவடம் பேசிக்கிட்டே அப்படியே தூங்கிருவேன்… நீ படு…” என்றவர் படுக்கை விரிப்பை உதறி தலையணையை வரிசையாக போட்டுக் கொண்டார். தன் மாமியாரையும் அழைத்துப் பார்த்தாள் பூச்செண்டு. அவரும் சிரித்தபடி மறுத்துவிட்டார். என்னவோ செய்ங்க என்பதுபோல் எரிச்சலுடன் வந்து படுக்கையில் விழுந்தாள்… சிறிது நேரத்தில் மல்லிகா உள்ளே வந்தார்.


“நீயாவது வந்தியே தாயே… படு… தனியா படுக்க சங்கட்டமா இருக்கு…” என்றபடியே தள்ளிப் படுத்தவளை குறுகுறுவென பார்த்தபடி கட்டிலை விட்டு தள்ளியே நின்றிருந்தார் மல்லிகா.


“ஏம்மா… என்னத்துக்கு அப்படி பாக்குற…?” இன்னொரு தலையணையை எடுத்து பக்கத்தில் போட்டபடி கேட்டவளை நெற்றி சுருக்கி சற்று கோபமாய்தான் பார்த்திருந்தார்.


“நீ வா நீ வான்டு எல்லாரையும் படுக்க கூப்பிடுற… உன் புருஷன் எங்கே தெருவுல போய் படுப்பாரா…?” எரிச்சலும் கோபமுமாய் கேட்டவரிடம் பதில் சொல்ல முடியாமல் விழித்தபடி அமர்ந்திருந்தாள் பூச்செண்டு.


“அந்த ரூம்புல ஆம்பளைக படுத்திருக்காக… பொம்பளைக நாங்க பட்டாசாலையில படுத்திருக்கோம்… அந்த மனுஷன் எங்கே போவாரு…? சங்கடப்பட்டுட்டுதேன் வெளில போன மனுஷன் வீட்டுக்கு வரல போல… நீ ஒரு தெசையில… அவரு ஒரு தெசையில இருக்கிறத நாங்களும் பார்த்துக்கிட்டு தானே இருக்கோம்… இந்தா காலையில தாலி கட்டுனவன் பொண்டாட்டியோட மொதலிரவு கொண்டாட கிளம்பிட்டியான்… கலியாணம் முடிஞ்சு ஒரு மாத்தைக்கு (மாசம்) பக்கம் ஆகப்போகுது… அந்த மனுஷனை நீ மொத்தமா வெலக்கித்தானே வச்சிருக்க…” வெளியில் இருப்பவர்களுக்கு சத்தம் கேட்கா வண்ணம் அறைக்கதவை தாழிட்டு விட்டுத்தான் வந்திருந்தார் மல்லிகா.


“சம்மந்தி அம்மா மூஞ்சிய பாக்கவே சங்கட்டமா இருக்கு… நல்லவுக… படிச்சவுக… வெசனத்தை வெளியில சொல்லல.‌. பொண்டாட்டி இருக்கிற அறைக்குள்ள ஒன்னா இருக்க முடியாம மகே வெளியில போயிட்டாரேன்டு வெளியில சொல்ல மாட்டாம கெடக்காக… நீ என்னடான்டா ஊரையே உள்ள வரச் சொல்லி கூப்பிட்டுட்டு இருக்க… வெளியில போன புருஷனுக்கு ஒரு போனை போட்டு எங்கே இருக்கீகன்டு கேக்க முடியல…” மூக்கை விடைத்தபடி கோபமாய் பேசியவரை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்.


“ஏதோ வேலைன்னு தானே சொல்லிட்டு போனாரு…” மெத்தையின் நுனியை பார்த்தபடி சன்னமான குரலில் கூறினாள்.


“இந்த நேரத்துக்கு மேல என்னடி வேலை…? நாலு நாளா அந்த மனுஷனும் நாயா அலைஞ்சிருக்காரு. தனியா ரூம்ப போட்டு எங்கேயாச்சும் போய் படுத்துட்டாரோ என்னவோ…” மல்லிகாவின் முகத்தில் கவலை.


“ஏம்மா ஏதேதோ யோசிக்கிற…? இப்ப வந்துருவாரு…”


“வந்தா மட்டும்… அடுப்படியிலதான் இடம் காலியா இருக்கு… அங்கேதான் போய் படுக்கணும்… நீ கூடவா படுக்க வச்சுக்கப் போற… அவர பெத்த மனசு எம்புட்டு பாடுபடும்… நான் தெரியாமதான் கேட்கிறேன்… என் மருமகனுக்கு என்னடி கொறைச்சல்…? அவர் அப்பாவும் அம்மாவும் தங்கம் பெத்தவுகளா இருக்காக… ஒனக்கு வேற என்னதேன் வேணும்…?” அவரது குரல் சற்று உயர்ந்திருந்தது.


“இப்போ ஏம்மா கத்துற..? உனக்கு இப்போ என்ன வேணும்…?”


“நீயும் மாப்ளையும் சந்தோசமா வாழணும் பூச்செண்டு… அன்னைக்கு வேணா ஒனக்கு ஆயிரம் கோபதாபம் இருந்திருக்கலாம்… முகிலுக்காகத்தேன் இந்த மனுஷன் அம்புட்டும் பண்ணினாரு… இன்னைக்கு அவே வாழ்க்கையை சந்தோஷமா தொடங்கிட்டியான்… ஆனா இந்த மனுஷன் சந்தோசம்தான் இல்லாம போயிருச்சு போல… நீங்க ரெண்டு பேரும் எப்போ சேர்ந்து வாழப் போறீகன்டு தெரியல… அவர் அப்பா அம்மா முன்னாடியாவது சந்தோஷமா இருக்கிற மாதிரி காட்டிக்கலாம்ல… சம்மந்தி அம்மா சங்கடத்தோடதேன் படுத்திருக்காக தெரியுமா ஒனக்கு…”


“அம்மா… எங்க கல்யாணம் எந்த மாதிரி நடந்ததுன்னு அத்தைக்கு தெரியும்… அவங்க படிச்சவங்க… என்னை புரிஞ்சுக்குவாங்க… நீயா ஏதாவது கற்பனை பண்ணாதே…”


“அதுக்காக இப்படி வெலகியே இருப்பியா… பெத்தவ நல்லதுதேன் சொல்லுவேன்… நல்ல புருஷனை கடவுள் ஒனக்கு குடுத்திருக்கியான்… வீட்டு சாப்பாடு போட மாட்டேன்டு அந்த மனுஷன ஓட்டல் சாப்பாடு சாப்பிட விட்டுறாத… உன் வாழ்க்கைதான் வீணா போகும்…” என்றவர் வெடுக்கென கதவை திறந்து கொண்டு வெளியேறி இருந்தார்.


“என்ன இது… எப்போ பார்த்தாலும் வீட்டு சாப்பாடு ஹோட்டல் சாப்பாடுன்னு மாமியாளும் மருமகளும் இதையே சொல்லுதுக… நான் ஆக்குற சோறுதேன் என் புருஷனுக்கு புடிக்கும்… அதை பொழுதுக்கும் இதுககிட்ட சொல்லிக்கிட்டே இருக்கணுமோ…” சத்தமாய் முனகியவள் படுக்கையில் விழுந்தும் உறக்கமே வரவில்லை. தன் அன்னை பேசியவை மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தன.


‘உண்மைதான்… எங்கே படுப்பது என்ற குழப்பத்தில் வெளியே சென்றுவிட்டாரோ… நேற்றுவரை இது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. திருமண வீடு என்பதால் ஆளாளுக்கு ஆங்காங்கே உருண்டு கிடந்தார்கள்… அவருக்கு துணையாக மாமாவும் எனக்கு துணையாக மீராக்காவும் இருந்ததால் பெரிதாக யாரும் எதுவும் நினைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நாங்கள் விலகி இருப்பது தனியாய் தெரிகிறதே…’


நேரத்தை பார்த்தாள்… மணி இரவு பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.


‘எங்கே போயிருப்பார்…?’ அவனை நினைத்து வருத்தம் கொண்டாள். போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள். முதன்முறையாக அழைக்கிறாள்… மூன்று ரிங் போன நிலையில் அழைப்பு ஏற்கப்பட்டது.


“சொல்லு பூச்செண்டு…” நிதானமான குரல்.


“எ..எங்கே இ..இருக்கீங்க…?” தடுமாற்றமாய் கேட்டாள்.


“ஏன்…?”


“ரொ..ரொம்ப லேட் ஆயிடுச்சு… இ..இன்னும் வீட்டுக்கு வரல…”


“கொஞ்சம் வேலை…”


“இந்நேரத்துக்கு என்ன வேலை…?”


அவனிடம் மௌனம்.


“வீ..வீட்டுக்கு வாங்க…”


மீண்டும் மௌனம்.


“அம்மா என்னை கண்டபடி திட்டுது…”


“ஓஓ… அதனாலதான் இவ்வளவு அக்கறையோ…? நான்கூட ரெண்டு செகண்ட்ல ஏதேதோ கற்பனை பண்ணிட்டேன்…”


இப்போது அவள் மௌனமானாள்.


“எல்லாருக்கும் நம்ம சூழ்நிலை புரியும்… பெரியவங்க ஏதாவது ஆதங்கத்தில பேசுவாங்க… அதுக்காக நீ ஒன்னும் சங்கடப்பட வேண்டியது இல்ல… நான் எங்கேயும் போகல… ஜாலியா பாட்டு கேட்டுட்டு ஏசி போட்டு கார்லதான் படுத்திருக்கேன்… நீ நிம்மதியா தூங்கு…” 


இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. அடுத்த இரண்டாவது நிமிடம் கார் ஜன்னலை தட்டியபடி கண்ணாடிக்கு வெளியில் தெரிந்தாள் பூச்செண்டு. வேகமாய் கார் கதவை திறந்து வெளியே வந்தான் தரணி.


“இந்நேரத்துக்கு இங்கே வந்து என்ன பண்ற…?”


“நீங்க ஏன் இப்படி வந்து படுத்துட்டு இருக்கீங்க…? உங்க வளத்திக்கு உங்க முழங்காலுக்கு கூட பத்தாது இந்த கார்… ஏன் இப்படி சங்கடப்படுத்துறீங்க…? வீட்டுக்கு வாங்க…” உரிமையாய் அழைத்தவளை அமைதியாய் பார்த்தான்.


“நான்தான் சொன்னேனே… மத்தவங்களுக்காக நீ யோசிக்க வேணாம்… நீ நீயாவே இரு… எந்த விஷயமும் கட்டாயத்தில வரக்கூடாது… அதுல எனக்கு உடன்பாடு கிடையாது…” எங்கோ பார்த்தபடி சொன்னவன் ஒற்றை கையால் தலையை கோதிக் கொண்டான்.


“நான் ஒன்னும் மத்தவங்களுக்காக வரல… எனக்கும் மனசாட்சி இருக்கு… நீங்க இங்கே சுருட்டி முடக்கி படுத்து இருக்கும்போது நான் மட்டும் விஸ்தாரமா அந்த மெத்தையில உருள முடியுமா…? தினமும் இப்படியே வந்து படுத்துக்குவீங்களா… நாளைல இருந்து மாமாவும் மீராக்காவும் தனி அறையிலதான் இருப்பாங்க… அப்பவும் இதே மாதிரி வந்து படுப்பீங்களா…” காரில் சாய்ந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்து காற்றில் அலைபாயும் தன் கூந்தலை ஒதுக்கியபடியே கேட்டாள்.


“நாளைக்கு எல்லாரும் ஊருக்கு போயிடுவாங்க… அப்புறம் இருக்கவே இருக்கு ஹால்… ஷோபா… அப்புறம் என்ன…?” தோளை குலுக்கியவனை அழுத்தமாய் பார்த்தாள்.


“என் மேல உங்களுக்கு கோபமே வரலையா…?” அவள் குரல் குழைந்து இருந்தது.


“எதுக்கு கோபப்படணும்…? நீ என்ன தப்பு பண்ணின…? நான் என் இடத்தில இருந்து உன்னை பத்தி யோசிக்கல… உன் இடத்தில இருந்துதான் யோசிக்கிறேன்… கழுத்துல தாலி ஏறிட்டா கண்ணை மூடிட்டு அந்த வாழ்க்கையை ஏத்துக்கணும்னு அவசியம் இல்ல… அதுல புரிதல் இருக்காது… கடமையேன்னு வாழ ஆரம்பிச்சா எல்லாமே பிழையா போயிடும்… இன்னைக்குதான் என் மனசையே உன்கிட்ட வெளிப்படுத்தி இருக்கேன்… உனக்கான டைமை நான் கொடுக்கணும் இல்லையா..‌ கல்யாண வாழ்க்கை காதலோடதான் ஆரம்பிக்கணும்… முகில் மீரா மாதிரி… நம்ம வாழ்க்கை ஆரம்பிச்ச விதமே வேற… நீ உனக்கான காலத்தை எவ்வளவு வேணாலும் எடுத்துக்கோ… எதுவாயிருந்தாலும் உனக்கா தோணனும்… அடுத்தவங்களுக்காக உன்னை மாத்திக்க நினைக்கிறதை நானே ஏத்துக்க மாட்டேன்… இன்னைக்கு நான் அட்ஜஸ்ட் பண்ணி இங்கேயே படுத்துக்குவேன்… நீ போ…”


மீண்டும் காருக்குள் நுழையப் போனவனை அவளது மலர்க்கரம் தடுத்துப் பிடித்திருந்தது‌. திரும்பியவன் குனிந்து தன் கை பார்த்து நிமிர்ந்து அவள் கண் பார்த்தான்.


“எனக்கான டைமை கொடுப்பீங்கதானே… அப்புறம் என்ன…? பக்கத்திலேயே கூட தள்ளி இருக்கலாம்…” குழப்பமாய் பேசி அவனை இழுத்துச் சென்றாள்.


‘என்ன சொல்றா இவ…?’ முயல்குட்டி கட்டி இழுத்துச் செல்லும் சிங்கக்குட்டியாய் அவள் பின்னே சென்றான்.


கூடத்தில் ஆங்காங்கே குறட்டை ஒலிகளுடன் உறங்கிக் கொண்டிருந்தவர்களை கடந்து தனது அறைக்குள் அவனையும் உள்ளே இழுத்து வந்து தாழிட்டு இருந்தாள். திருதிருவென விழித்தபடி நின்றிருந்தான் தரணி.


“போய் படுங்க…” கட்டிலை கண் காட்டினாள்.


“ஹான்…” 


இழுத்து பெருமூச்சு விட்டவள் “போய் படுத்து தூங்குங்கன்னு சொன்னேன்…” அழுத்தமாய் கூறினாள்.


“அப்போ நீ…?”


“நானும் தூங்கத்தான் போறேன்…”


“எ..எங்கே…?”


“இவ்ளோ பெரிய கட்டில்ல எனக்கு கொஞ்சம் இடம் கொடுக்க மாட்டீங்களா…?” இடுப்பில் கை வைத்து கேட்க பொங்கி வந்த புன்னகையை உதட்டில் தேக்கியபடி அமைதியாகச் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டான்.


இரவு விளக்கை போட்டு கட்டிலின் மறுபுறம் வந்து படுத்தாள்  சாதாரணமாக கூறி படுக்கைக்கு வந்திருந்தாலும் இதயத்தின் லப்டப் ஓசை அதிகரித்தது போல் உணர்ந்தாள் பூச்செண்டு. அவனுடன் தனிமையில் ஒரே படுக்கையில் முதன் முறையாய் படுக்கிறாள்‌.‌ ஏதோ ஒருவித சிலிர்ப்பு… முதுகு காட்டி படுத்திருந்தவள் மெல்ல திரும்பிப் பார்த்தாள்… அவனும் முதுகு காட்டி கட்டிலின் நுனியில் படுத்திருந்தான். இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியில் உசிலைமணியும் பிந்துகோஷும் தாராளமாய் படுத்து உருளலாம். சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது… பொங்கி வந்த சிரிப்பை வாய் பொத்தி அடக்கியபடி திரும்பிக் கொண்டாள்.


‘பனைமரம்… படுத்திருக்கிறதை பாரு… கண்டிப்பா காலையில கீழே உருண்டு விழுந்து கிடக்கும்… எந்த ஏடாகூடம் பண்ணினாலும் எனக்கு பிடிக்கிற மாதிரியே பண்ணித் தொலையுது… கார்ல கால் மேல கால் போட்டு ஆட்டிக்கிட்டே தோரணையா படுத்திருக்குது… இது ஒசரத்துக்கு காருக்குள்ள படுத்து தூங்குதாம்… ரொம்ப நல்லவனோ நீயி… ஆளையும் மூஞ்சியும் பாரு… அழகு மாமு…’ மூக்கை சுழித்து உதட்டை குவித்து சிரித்தாள் அவன் முதுகை பார்த்தபடி.


‘சண்டி ராணி… இவ்ளோ இறங்கி வந்துட்டா… ரொம்ப நல்லவன்னு நம்பித்தான் கிட்ட விட்டிருக்கா… அந்த பேரை காப்பாத்தணுமே…’ கண்களை உருட்டியபடி மெல்ல அவள்புறம் திரும்பினான். புடவையை மாற்றாது படுத்திருந்ததால் இடுப்புச் சேலை விலகி வரி விழுந்த குட்டி இடுப்பு கண்களுக்கு விருந்தளிக்க படக்கென கண்கள் அகலமாகின.


‘ஐயோ… சோதிக்கிறாளே… நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே கார்ல படுத்திருந்தேன். இவளை யார் வந்து இழுத்துட்டு வரச் சொன்னது…? புடவையை மாத்திட்டு நைட் டிரஸ் போடறதுக்கு என்ன…? காதல் பொண்டாட்டியை இவ்வளவு பக்கத்துல வச்சுக்கிட்டு கண்ணியமா இருந்திட முடியுமா…? என்ன டெஸ்ட் பண்ணி பாக்குறாளோ…? ப்ச்… இந்த கை வேற என் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்குதே… என்னடா இது தரணி உனக்கு வந்து சோதனை…?’ தலையை உலுக்கியபடி எழுந்து அமர்ந்தான். கட்டிலின் அசைவில் அவனை திரும்பிப் பார்த்தாள் பூச்செண்டு.


“என்ன…?”


“ஒ..ஒன்னும் இல்ல… நா..நான் வேணா கீழே விரிச்சு படுத்துக்கட்டுமா…?”


“ஏன்…?”


“இ..இல்ல தூக்கத்துல உருண்டு கைய காலை தூக்கி மேலே போடுவேன்… அ..அது சரியா வ..வராது…” இழுத்தபடி கூறியவனை கண்கள் இடுங்க பார்த்தாள்.


“இ..இல்ல. தெரியா தான் படும்… நீ ஏதாவது என்னை தப்பா நினைச்சுட்டா…?”


 அவள்தான் பல நாட்கள் பார்த்திருக்கிறாளே… முகிலனும் தரணியும் கட்டிப்பிடித்து கால் மேல் கால் போட்டு உறங்குவதை… இதுக என்ன புருஷன் பொண்டாட்டி மாதிரி படுத்து தூங்குதுக… வாயைப் பொத்தி சிரித்திருக்கிறாள்.


“நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம்… செயின்ல பின்னூசி கோர்த்து வச்சிருக்கேன்… அப்பப்ப குத்தினா கை கால் மேலே படாது…” அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற ‘செஞ்சாலும் செய்வா இந்த சண்டிராணி… வலிய கூட்டிட்டு வந்து பின்னூசியால குத்தியே கொல்ல பாக்குறா…’ அவளை முறைத்தவன் தன் சுட்டு விரலை தன் முகத்திற்கு முன்னே நீட்டி 


“இது உனக்கு தேவையா…?” சத்தமாய் கூறி திரும்பி படுத்துக்கொள்ள பொங்கி வந்த சிரிப்பை அடக்க படாதபாடுபட்டாள் பூச்செண்டு.



Leave a comment


Comments


Related Post