இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 18 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 04-04-2024

Total Views: 25274

கஷாயத்தை குடித்த அபிலாஷா நந்தன் தோளில் சாய்ந்து உறங்கி விட இரவு உணவு தயாரனதும் “அம்மா அண்ணனை சாப்பிட கூட்டிட்டு வரேன்…” என்று சொல்லி அறையை நோக்கி வந்த அக்சயாவை தடுத்த பார்வதி


“கதவை தட்ட வேண்டாம் அச்சு நான் நந்தனுக்கு ஃபோன் பண்றேன்.” என்று அழைப்பை தொடுத்து “சாப்பிட வா நந்தா…” என்று சொல்ல



“இதுக்கு எதுக்கு ம்மா ஃபோன் பண்ணிட்டு கதவு திறந்து தானே இருந்தது..” என்று சொல்லிய பின்பே தன் தோளில் அபிலாஷா கண்மூடி சயனத்தில் இருப்பதும் அவள் உச்சந்தலையில் தன் தலையை வைத்து தான் கண்ணை மூடியதும் நினைவு லேசான வெட்கத்தில் நாக்கை கடித்து கொண்டான் அபிநந்தன்.


“சரிம்மா நான் இதோ வரேன்.” என்று அபியை மெதுவாக நேராக படுக்க வைத்து விட்டு வெளியே வர


“என்னப்பா அபி தூங்கிட்டாளா?” என்றிட


“ம்ம் தூங்கிட்டா அம்மா..” 


“ஏன் அண்ணா.. அவங்களுக்கு பச்ச தண்ணி ஒத்துக்காட்டி முன்னவே சொல்லிருக்கலாம்ல? இப்போ பாரு எவ்வளவு அதிகமா காய்ச்சல் அடிக்குது…” அக்சயா சொல்ல


“அச்சு அது நமக்கு சிரமமா இருக்கும் னு யோசிச்சிருப்பா.. சரி நந்தா நீ சாப்பிடு. எதுக்கும் இட்லி சாம்பார் தக்காளி சட்னி எல்லாம் தட்டுல வைச்சு தரேன் அபியை எழுப்பி பாரு அவ எழுந்தா சாப்பிடட்டும் இல்லைனா நல்லா தூங்கி ராத்திரி எதுவும் எழுந்தா கூட சாப்பிட கொடு.” என்று பார்வதி சொல்ல


“ஆனாலும் நீ இவ்வளவு நல்ல மாமியாரா இருக்க கூடாது ம்மா…” அக்சயா கிண்டல் செய்ய


“அடியே உனக்கு காய்ச்சல் வந்தாலும் நான் இதெல்லாம் செய்வேன் தானே அப்பறம் என்ன?” என்று அவளை அதட்டி விட்டு அபிநந்தனுக்கு சாப்பாடு பரிமாறி மறக்காமல் அபிலாஷாவிற்கு உணவோடு குடிப்பதற்கு வெதுவெதுப்பாக ஃப்ளாஸ்க்கில் வெந்நீர் ஊற்றி கொடுத்து அனுப்பி வைத்தார் பார்வதி.


அறைக்கு வந்து அபியை மெதுவாக எழுப்பி பார்த்தான் அபிநந்தன். ஆனால் அவள் அசைவே இல்லாமல் உறங்க “சரி அவளே எழுந்தா சாப்பிடட்டும்.” என்று அருகில் டேபிளில் வைத்து விட்டு அபிநந்தன் அருகில் அமர்ந்து அவளின் தலையை கோதி விட தாயை தேடும் பிள்ளை போல அவனை உரசியபடி நன்றாக உறங்கினாள் அபிலாஷா. 


லேசாக புன்னகை சிந்திய அபிநந்தன் அவளின் நெற்றி கழுத்து என்று தொட்டு பார்க்க சுரம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தது. அவளுக்கு  போர்வையை சரியாக போர்த்தி விட்டு அருகில் அப்படியே படுத்துக் கொண்டான்.


இரவு பதினோரு மணி இருக்கும் அபிலாஷா முணங்கும் சத்தம் கேட்டு நந்தன் கண் திறந்து பார்க்க காற்றிற்காக திறந்து வைக்கப்பட்ட சன்னல் வழியாக வாடை காற்று உள்ளே வர புரண்டு படுத்த அபிலாஷா போர்த்தி இருந்த போர்வை விலகி இருக்க அவளுக்கு குளிர் எடுக்க கை கால்களை குறுக்கிக் கொண்டு அனத்திக் கொண்டு இருந்தாள் அபிலாஷா.


“லாஷா… என்னாச்சு மா…” என்று பரிவாய் கேட்டபடி கை கால்களை சூடு பறக்க தேய்த்தவன் எட்டி சன்னல் கதவை சாற்றி விட்டு இன்னும் கொஞ்சம் அழுத்தி தேய்த்தும் அவளுக்கு குளிர் குறைந்ததாக தெரியவில்லை. 


“லாஷா… என்னடா என்ன ஆச்சு?” என்று புலம்ப குளிர் குறைய பற்களை கடித்தாள் குளிர் தாங்காமல்.


‘என்ன பண்றது?’ என்று முழித்தவன் சட்டையை கழற்றி விட்டு அவளை அணைத்துக் கொண்டு அருகில் படுத்து தன் உடல் சூட்டை தந்து அவள் குளிரை போக்க முயன்றான் அபிநந்தன். இவன் அணைத்த அடுத்த நொடி அவனோடு பசை போட்டாற் போல ஒட்டி கொண்டாள் அபிலாஷா.


சற்று நேரம் அப்படியே இருக்க அவளுக்கு நடுக்கம் குறைந்தது. அதுவரை அபிநந்தனுக்கு லாஷாவை அணைத்திருப்பது வேறு எதுவும் தோன்றவில்லை. அபியின் நடுக்கம் குறைந்த பின்பு அவளின் தேகச் சூடு இவனுக்கு கடத்தப் பட உள்ளே ஏதோ உள்ளுணர்வு உணர்த்த அவளை விட்டு விலக முயன்றான் அபிநந்தன்.


ஆனால் அபிலாஷாவை விலக்க இயலவில்லை. “லாஷா கொஞ்சம் தள்ளி படும்மா… ப்ளீஸ்..” என்று கெஞ்சலாக குரல் வந்தாலும் அவள் மீதிருந்த தன் கையையே அவனால் எடுக்க இயலாது தவித்தான் அபிநந்தன்.


போதாக்குறைக்கு அவன் அணைப்பில் அடங்கிய லாஷா தன் முகத்தை அவன் மார்பில் தேய்க்க தவித்து போனான் ஆண்மகன்.


“அபி… லாஷா…” என்று நான்கு எழுத்து பெயரை உச்சரிக்கும் முன்பு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது அவனுக்கு. எச்சிலை கூட்டி விழுங்கியவன் “லாஷா அப்பறம் எல்லாம் என் கை மீறி போய்டும் மா.. ப்ளீஸ்..” என்று கெஞ்சலாக கூறினாலும் அவன் இதழ்கள் அவள் முகத்தில் ஊர்வலம் வர துவங்கி இருந்தது.


நெற்றி கண்கள் கன்னம் என்று இதழ் ஊர்வலம் நடத்தியவன் அவள் இதழோடு தன் இதழை பொறுத்தி நிற்க நொடிப் பொழுதில் ஆயிரம் வாட் மின்சாரம் தாக்கிய உணர்வு இருவருக்கும்.


உரிமை பட்டவன் நான் என்று அவன் தன் உரிமையை இதழில் நிலை நாட்டிக் கொண்டு இருக்க உடன் பட்டவளோ இதில் தானும் உடன் படுகிறேன் என்று சம்மதம் தெரிவிக்கும் வகையில் ஒரு நொடி கண்ணை திறந்து அவன் விழியோடு தன் விழியை கலந்திட என்ன பார்வை டா சாமி… என்று மனதில் சிலாகித்த அபிநந்தன் அதன் பின்னர் முழுக்க முழுக்க அந்த ஒற்றை பார்வைக்குள் தொலைந்து போயிருந்தான். 


இதுவரை தான் சொல்லாத காதலை மென்மையாக கூடலில் அவன் சொல்லிட வாய் வலிக்க காதலை சொன்னவளோ அதன் ஆழம் உணர்ந்து தன்னையே கொடுத்திருந்தாள் தன் தலைவனுக்கு தானமாக…


முதல் கூடல்… வாய் வழி சம்மதம் கூறாது போனாலும் இரு மனங்களின் சங்கமமாக மாறி இருக்க அதிகாலை பொழுது புலர்ந்தும் இருவருக்கும் விழிப்பு தட்டியும் ஒருவரை ஒருவர் காண வெட்கிக் கொண்டு கண்ணை மூடி உறங்குவது போல பாவித்துக் கொண்டு படுத்திருந்தனர் அருகருகே…


எத்தனை நேரம் தான் அப்படியே இருக்கவும் முடியும்.. எல்லாம் கடந்து தான் ஆக வேண்டும் என்று முதலில் விழியை திறந்தது அபிநந்தன் தான்… அபிலாஷா முகத்தில் தோன்றிய வெட்கச் சிவப்பே அவள் விழித்ததை உணர்த்தினாலும் அதை அவன் காட்டிக் கொள்ளாமல் நெற்றி கழுத்து என்று அக்கறையாக தொட்டு பார்த்த அபிநந்தன்


“ம்ம்.. பரவால்ல லாஷா… சுரம் நல்லாவே குறைஞ்சிடுச்சு..” என்று அவன் பேச்சை துவங்க மெதுவாக விழிகளை மலர்த்தினாள் அபிலாஷா.


“நேத்துல இருந்து நீ சாப்பிடாம இருக்க… ரொம்ப டயர்டா இருக்கும். நான் உனக்கு பின் பக்கம் அடுப்புல வெந்நீர் போடுறேன். நீ குளிச்சிட்டு சாப்பிடு.” என்று சொல்ல


“ம்ம்…” என்று தலையை மட்டும் ஆட்டினாள் அபிலாஷா.


அவளின் வெட்கத்தை ரசித்தவன் குளிப்பதற்காக பின்பக்கம் செல்ல பார்வதி ஏற்கனவே தயாராக வெந்நீர் போட்டு வைத்திருந்தார். 


“அம்மா..” நந்தன் ஆச்சர்யமாக பார்க்க “என்ன நந்தா இப்போ தான் எழுந்தியா… சரி அபி எழுந்தா வெந்நீர் ல குளிக்க சொல்லுப்பா.” என்று சொல்ல அவன் குளித்து விட்டு அறைக்கு வர இன்னமுமே தலை நிமிர முடியாத வெட்கத்தில் அபி அமர்ந்திருக்க


“லாஷா… அம்மாவே வெந்நீர் போட்டு வைச்சிட்டாங்க.. நீ போய் குளிச்சிட்டு வா” என்று நந்தன் சொல்ல அவளோ தலை நிமிராது நின்றவள் வதனமதை கையில் ஏந்தி தன்னை பார்க்க செய்தவன்


“போ… போய் குளிச்சிட்டு வா…” என்று சிறு புன்னகையோடு சொல்ல அவளும் மாற்றுடையோடு சென்று குளித்து வந்தாள் அபிலாஷா.


வந்தவளை அமர வைத்து தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து துவட்டி விட்டார் பார்வதி.


“அண்ணி இப்போ எப்படி இருக்கீங்க பரவாயில்ல சுரம் நல்லாவே குறைஞ்சிடுச்சு எப்படி அண்ணி அம்மாவோட கஷாயம் அவ்வளவு பவரா என்ன?” தாயை கலாய்க்கும் படி அக்சயா கேட்க லேசாக வெட்கச் சிரிப்பை உதிர்த்தாள் அபி.


“அம்மா நந்து ஆஃபிஸ் போக டைம் ஆச்சு போதும் அம்மா…” என்று எழுந்து சென்றவள் கிச்சன் உள்ளே ஒளிந்து கொள்ளும் படி நின்று கொள்ள


“நீ போய் ரெஸ்ட் எடு அபி…” என்று பார்வதி சொல்ல


“இல்லம்மா என்ன வேலை செய்யனும் எப்படி செய்யனும் னு சொல்லுங்க” என்று அவள் அங்கேயே நிற்க


“வேலை எதுவும் செய்ய வேண்டாம். நீ வேணும்னா நான் என்ன செய்றேன்னு பாரு…” என்று சமையலை தொடர ஆர்வமாக பார்த்திருந்தாள் அபிலாஷா.


சாப்பிட்டு முடித்து அபிநந்தன் அலுவலகம் கிளம்ப “அம்மா இன்னைக்கு காலேஜ் ஹாஃப் டே தான்… நான் மதியமே வந்திடுவேன்.” என்று அக்சயாவும் கிளம்ப அபிலாஷாவும் பார்வதியும் மட்டுமே இருக்க மீதம் இருந்த வேலைகளை முடிக்கும் முனைப்பில் பார்வதி இருக்க


“அம்மா நீங்க வந்து முதல்ல சாப்பிடுங்க அப்பறம் என்ன வேலை செய்யனும் னு சொல்லுங்க நான் பண்றேன்.” என்று அமர வைத்து பரிமாறினாள் அபி.


பின்னர் கிச்சனை சுத்தம் செய்து விட்டு அபிலாஷா வர தைப்பதற்கு இருந்த சில துணிகளை அளவு துணி வைத்து வெட்டிக் கொண்டு இருந்தார் பார்வதி.


“அம்மா… எனக்கு ஸ்டிச் பண்ண சொல்லி தருவீங்களா?” என்று அபிலாஷா கேட்க


“ம்ம் கண்டிப்பா மா… ஆனா இது இன்னைக்கே தர வேண்டிய ப்ளவுஸ்… இதை முடிச்சிட்டு பொறுமையா உனக்கு சொல்லி தரேன்.” என்று அவர் தன் வேலையை துவங்க அவளோ விழி அகலாது பார்த்திருந்தாள்.


பாதிக்கும் மேல் தைத்து முடித்து விட்டு கழுத்தில் கை வைத்து இடம் வலம் என்று ஆட்டி கொஞ்சம் ஓய்வை தந்தவர் அபியின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்க மோகன்ராம் மனைவி பத்மாவதி வந்தார். 


“வாங்க மா” என்று பார்வதி வரவேற்க்க


“அது வந்து அவரு ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல நாள் பார்த்ததுல இன்னும் பத்து நாள்ல தேதி முடிவாயிருக்கு. மண்டபம் கூட அவரு பேசி முடிச்சிட்டார். அடுத்து ஷாப்பிங் தான்.. அபி ஃப்ரீயா இருந்தா சொல்லுமா இன்னைக்கு நாளைக்கு போய் ட்ரெஸ் பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சிட்டு வந்திடலாம்.” என்று பேச


“ஆ… நாளைக்கு நான் ஆஃபிஸ் வரை போய்ட்டு வரலாம் னு இருக்கேன். இன்னைக்கு அச்சு கூட ஆஃப்டர் நூன் வந்திடுவா சேர்ந்து போகலாம் ஆன்டி…” அபிலாஷா சொல்ல 


பத்மாவதி ஏதோ பேச வந்து பார்வதி இருக்க தயக்கமாக பார்ப்பது இருவருக்குமே புரிய “நான் உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்திட்டு வரேன் நீங்க பேசிட்டு இருங்க..” என்று பார்வதி அங்கிருந்து நகன்றிட 


“என்னாச்சு ஆன்டி ஏதாவது பேசனுமா?” அபிலாஷா கேட்க


“அபி… என்னடா நான் இதெல்லாம் கேட்குறேன்னு நினைக்காதே… ஒருவேளை உனக்கு அம்மா இருந்தா நான் இதெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனா…” என்று தயங்க


“என்ன கேட்கனுமோ கேளுங்க ஆன்டி…” அபி ஊக்கிட


“நந்தனை பத்தி எனக்கு நல்லா தெரியும் ம்மா ஒரு பொண்ணு மனசை இல்ல..‌ எல்லா உயிர்களையும் மதிக்க தெரிஞ்சவன். கண்டிப்பா அவனால உனக்கு நல்ல வாழ்க்கை துணையா இருக்க முடியும் தான்…இருந்தாலும் நீ சொல்லு நீ சந்தோஷமா இருக்க தானே… உன் வாயால அதை சொன்னா எனக்கு கொஞ்சம் மனசுக்கு திருப்தியா இருக்கும்.” என்று பத்மாவதி முடிக்க பதில் எதுவும் சொல்லாமல் வெட்கத்தில் கன்னம் சிவக்க தலையை குனிந்தாள் அபிலாஷா.


பத்மாவதி மட்டும் அல்லாது கிச்சனில் இருந்து வெளிவந்த பார்வதியும் அதில் மனம் நிறைந்து போயினர் இரண்டு அன்னையர்களும். 


  • தொடரும்…

Leave a comment


Comments


Related Post