இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 6 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 04-04-2024

Total Views: 24000

செந்தூரா 6


ஆறு வயது சிறுவனாக இருந்த செந்தூரமித்ரன் தன் அத்தை மகளை சிரத்தையாக பார்த்து கொண்டான். தாரிகாவும் அவன் காட்டும் விளையாட்டில் எப்போதும் அவனை பார்த்து சிரிப்பாள். காயத்ரியும் அண்ணனுடன் சேர்ந்தே சுற்றுவாள்.


சாரதா சென்னை சென்றபின் மீண்டும் சோகமாக வலம் வந்தவனை அழைத்தார் அவன் அப்பத்தா ரஞ்சிதம். “இங்க பாரு செவப்பா, சரி முறைக்காதே செந்தூரா… உன் அத்தை மகள் தாரா உனக்கு தான். அவள் பெரியவளாகட்டும் நீயும் பெரிய படிப்பு எல்லாம் படிச்சிட்டு வா. கல்யாணம் பண்ணிகிட்டா காலம் பூரா உன்னோட தானே இருக்க போறா. அவள் கிணத்து தண்ணீர் போல, நீயா இறைக்கிற வரைக்கும் தண்ணீர் கிணத்துலயே இருக்கும், ஆத்து தண்ணீர் போல எங்கேயும் போகாது.


அதனால் அவங்க ஊருக்கு வந்து போயிட்டு தான் இருப்பாங்க. அதுக்காக எல்லாம் இப்படி மொண்டித்தனம் செய்ய கூடாது. நீ நல்லா படிச்சு பெரிய உத்யோகத்தில் இருந்தா தான் உன் மாமன் சுபாஷ் உனக்கு பொண்ணு கொடுப்பார்‌. அவர் கொஞ்சம் முசுடு தெரியும் இல்ல?” என்றார் அப்பத்தா.


செந்தூரனும் ஆமாம் என்று பலமாக தலையாட்டவும், “அப்போ படிக்கிற வேலையை பாரு ராசா” என்றார் அப்பத்தா.


அப்பத்தா சொன்ன கிணற்று நீரை ஆத்து வெள்ளமா அடித்து செல்ல போகிறது? என்ற வாசகம் அவன் மனதில் பதிந்து விட்டது. அதன் பிறகு பொறுப்பான பிள்ளையாக மாறி போனான்.


தங்கை காயத்ரியை பள்ளிக்கு அழைத்துச் செல்வது அவன் படித்து கொண்டே அவளுக்கும் சொல்லிக் கொடுப்பது என்று இருக்க தொடங்கினான். சாரதா தன் பெண்ணோடு வந்து விட்டால் போதும் தென்னை மரத்தில் ஏறி அந்த சிறு வயதிலேயே இளநிர் காய்களை பறித்து போடுவான். தாரிகாவை தூக்கி கொண்டு கடை தெருவுக்கு சென்று அவள் கேட்பதை எல்லாம் மறுக்காமல் வாங்கி தருவான். அதனாலேயே தாரிகாவிற்கு செந்தூரன் என்றால் கொள்ளை பிரியம். எப்போதும் மாமா மாமா என்று அவன் பின்னால் சுற்றுவாள்.


எப்போதும் உப்பு மூட்டை தூக்க சொல்லி அவனிடம் வம்பு இழுப்பாள். அவனும் சலிக்காமல் அவளை தூக்கிக்கொண்டு சுற்றுவான். அப்போதெல்லாம் அவன் மனதில் “நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னால் புரியுமா?” என்று பாடல் தான் ரீங்காரமாய் ஒலிக்கும்.


வருடங்கள் கடக்க செந்தூரனுக்கு வயது அப்போது பதினான்கு. தாரிகாவிற்கு எட்டு வயது. இப்போதெல்லாம் செந்தூரன் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்று விடுவான். காயத்ரியும் தாரிகாவும் மட்டும் விளையாட வேண்டியிருந்தது‌


இந்த முறை ஊருக்கு வந்ததில் இருந்து செந்தூரன் அவளிடம் சரியாக விளையாட வராததால் தாரிகாவிற்கு கோபம் வந்து விட்டது. சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தாள். விளையாடி முடித்து விட்டு வந்தவன், “ஏம்மா தாரா அழுதுட்டு இருக்கா? யார் அவளை அழ வைத்தது?”என்றான்.


“உன்னால் தான்டா அழுதுட்டு இருக்கா. இந்த முறை நீ சரியாக அவளோட விளையாடலையாம்” என்றார் ஜானகி. சாரதா சென்னையிலேயே இருந்து கொண்டு மகளை மட்டும் கோடை விடுமுறைக்கு தாய் வீட்டிற்கு தன் அண்ணன் கதிரேசனை வரச்சொல்லி அவருடன் அனுப்பி வைத்திருந்தார்.


“தாரா அழாதே வா விளையாட கூட்டிட்டு போறேன்” என்றான். அவள் உப்பு மூட்டை தூக்க சொல்லவும் அவளை தன் முதுகில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தான். தங்கை காயத்ரியை அழைத்ததற்கு வீட்டுப் பாடம் இருப்பதாக சொல்லி விட்டாள்‌. அந்தி சாயும் வேளை என்பதால் பொடிசுகள் தத்தமது வீட்டில் ஆஜராக தொடங்கி இருந்தனர்.


எங்கே செல்வது என்று தெரியாமல் ஆத்தங்கரை பக்கம் சென்றான் செந்தூரன். “மாமா இறக்கி விடு இங்கேயே வீடு கட்டி விளையாடலாம்” என்றாள். அவனும் அவளை இறக்கி விட்டான். பச்சை நிற பட்டு பாவாடையில் இருக்கும் அடர்சிவப்பு நிற பார்டருக்கு ஏற்ப சட்டை அணிந்து இருந்தாள். அவளின் குண்டு கன்னங்களை கிள்ள வேண்டும் என்று போல இருந்தது. அவள் மணல் வீடு கட்டி விளையாடுவதை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தான் செந்தூரன். 


“என்ன நீ என்னோட விளையாடாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறே” என்று முறைத்தாள் தாரிகா.


“என்ன விளையாட சொல்ற? இதெல்லாம் பெண்கள் விளையாடறது” என்றான் செந்தூரன்.


“அப்போ வா நாம பொம்மை கல்யாணம் விளையாடலாம். நீதான் மாப்பிள்ளை நான் தான் கல்யாணப் பொண்ணு சரி தானே?” என்றாள் தாரிகா.


“தாரா இது மாதிரி எல்லாம் விளையாட கூடாது வா போகலாம்” என்று அதட்டினான். “ஏன் விளையாடத் கூடாது? நான் தானே உன் பொண்டாட்டி” என்றாள் அந்த எட்டு வயது சிறுமி.


“இதெல்லாம் உனக்கு யார் சொல்லி தராங்க” என்றான் கோபமாக‌‌. “கண்ணம்மா பாட்டி நான் எப்போ ஊருக்கு வந்தாலும் உன்கிட்ட என்ன செந்தூரா? உன் பொண்டாட்டி ஊருக்கு வந்துட்டாளானு தானே கேட்பாங்க” என்றாள் .


“அதெல்லாம் மாமா அத்தை மகள் உறவுக்காக அப்படி விளையாட்டாக சொல்லுவாங்க தாரா, அதையெல்லாம் இந்த சின்ன வயசுல யோசிக்காதே” என்றான் பெரிய மனிதன் போல.


“அப்போ என்னை கல்யாணம் செய்துக்க மாட்டியா?” என்று அவள் அழ தொடங்கினாள். என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அவளை சமாதானம் செய்தான்.


“சரி சரி நான் பெரியவன் ஆனதும் உன்னையே திருமணம் செய்துக் கொள்கிறேன், அழாதே”என்றான்.


“உன்னை நம்பமாட்டேன் போ, பெரிசா ஆனதும் என் கூட விளையாடவே வரமாட்டேங்கிற, நீ எங்கே என்னை கல்யாணம் செய்துக்க போறே” என்றாள் அழுதுகொண்டே.


இதென்ன வம்சா போச்சு என்று நினைத்தவன், “இப்போது என்ன தான்டி பண்ண சொல்ற?” என்றான் சலிப்பாக.

 

“இப்போதைக்கு என்னை பொம்மை கல்யாணம் பண்ணிக்கோ, அப்புறம் பெரிசானதும் நிஜ கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவள், அவளின் பட்டு பாவாடையில் இருந்த ஜரிகை நூலை பிரித்து எடுத்து அவனிடம் கொடுத்தாள்.


அதை கையில் வாங்கி கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமற்ற அந்த ஏகாந்த வேளையில் அந்தி வானத்தின் சிவப்பால் ஆத்தங்கரை மணல் பளபளத்தது. ஆத்தங்கரையும் அந்தி வான சிவப்பும் அவர்களை பார்த்து கெட்டி மேளம் சொல்வது போல் தோன்ற, அந்த நூலை அவள் கழுத்தில் கட்டினான்.  


தாரிகா கட்டியிருந்த மணல் வீட்டை இருவரும் மூன்று முறை சுற்றி வந்தார்கள். அவளை பொறுத்தவரையில் அது பொம்மை கல்யாணம் ஆக இருக்கலாம். ஆனால் செந்தூரனுக்கு தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆக மாறிப்போனது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அவளை தன் முதுகில் சுமந்து கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.



*****


அன்று செந்தூரன் தங்கை காயத்ரிக்கு சடங்கு சுற்றினார்கள். விழாவிற்கு வந்திருந்த செந்தூரனின் தாய் மாமா காயத்ரிக்கு மாலை அணிவித்தார். வந்தவர்களுக்கு சாப்பாடு பறிமாறிக்கொண்டிருந்த செந்தூரனையே பார்த்தபடி தூரமாக நின்றிருந்தாள் தாரிகா. அவனுக்கு ஏதோ உணர்வு தோன்ற திரும்பி பார்த்தான். கண்களால் தன்னருகே வருமாறு அழைத்தாள் தாரிகா.


“என்ன தாரா?” என்று கேட்டபடி அவளருகே சென்றவனிடம் “மாமா எனக்கும் இதுமாதிரி செய்யும் போது கதிரேசன் மாமா மாலை போடக்கூடாது, நீதான் எனக்கு மாலை போடணும், சரியா?” என்றாள் வெள்ளந்தியாக.


செந்தூரனுக்கு வெட்கத்தில் முகம் சிவந்து விட்டது, நெற்றியை தேய்த்துவிட்டுக் கொண்டே அவள் கண்களை நேராக பார்த்து  “என்னடி இதெல்லாம் என்கிட்ட பேசிட்டு இருக்க” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.


அவள் கால்களை தரையில் உதைத்துக் கொண்டு, “சரினு சொல்லு மாமா” என்றாள். “சடங்குக்கு மட்டுமில்ல கல்யாணத்துக்கும் நான் தான் உன் கழுத்தில் மாலை போடுவேன். என்னை தவிர வேற யாரையும் போட விட்டுடுவேனா? இப்பவே இப்படி எல்லாம் என்கிட்ட பேசிட்டு நிக்காதே. அது அது நடக்க வேண்டிய நேரத்தில் தானாக நடக்கும். போய் வேலையை பாரு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான் செந்தூரன். 


அடுத்து இரண்டு ஆண்டுகளில் வந்த கோடை விடுமுறைக்கு தாரிகா பொள்ளாச்சிக்கு வரவில்லை. சுபாஷ் குடும்பத்தோடு வெளிநாடு சுற்றுலா சென்று வந்தார். தாரா வராததால் வருத்தமிருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்தினான் செந்தூரன்.


அடுத்த கோடை விடுமுறைக்கு தாரிகா வந்தபோது அவளுக்கு பதினான்கு வயது. செந்தூரன் விடலை பருவத்தில் இருந்தான். அப்போதும் தாரிகா அவனை உப்பு மூட்டை தூக்க சொல்லி அடம்பிடிக்க, அவளை முதுகில் ஏற்றியவனுக்கு இதுவரை தோன்றாத புதுவித உணர்வு உடலெங்கும் பரவியது.


அப்படியே தொப்பென்று அவளை கீழே போட்டு விட்டு வெளியேறினான். எதிர்பாராத நேரத்தில் அவன் தள்ளி விட்டதில், “போடா செவப்பா” என்றாள், அப்படி சொன்னால் அவனுக்கு பிடிக்காது கோபம் வரும் என்று தெரிந்தே அவள் சொல்ல அவனோ அவளை ரசனையாக பார்த்து சிரித்தபடி சென்று விட்டான்.


அவன் கீழே போட்டதினால் இடுப்பில் ஏற்பட்ட வலியினாலும் என்றுமில்லாமல் புதிதாக அவளை அவன் ரசித்து பார்த்ததாலோ என்னவோ இரவெல்லாம் தாரிகாவிற்கு தூக்கமே வரவில்லை. மறுநாள் காலையில் தூங்கி கொண்டு இருந்தவளை எழுப்பி விட்டு ஜானகி அவளும் பெரிய பெண் ஆகி இருப்பதை உணர்ந்து அவளை தனியாக அமர செய்து விட்டு சாரதாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னார்.


ஜானகி கதிரேசனை அழைத்தார், அவர் பசுமாட்டை கவனிக்க சென்று விட்டதால் செந்தூரனை அழைத்து தென்னமர ஓலைகளை வெட்ட சொன்னார். அவனும் எதற்கு என்று கேள்வி கேட்காமல் ஓலைகளை வெட்டி வந்தான்.


ஜானகி ஒரு தனிஅறையில் ஓரமாக அதை குடிசைபோல கட்ட சொல்லவும் திடுக்கென்று அன்னையை திரும்பி பார்த்தான். அவரோ அவனிடம் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றவர் காயத்ரியின் பாவாடை தாவணியை எடுத்து தாரிகாவிற்கு கட்டி விட்டார்.


“உன் அம்மா உடனே வருவதாக சொல்லியிருக்கிறாள், அவள் வரும்வரை பக்கத்து அறையில் இருந்துக் கொள்” என்றார், அவளும் சரி என்று தலையாட்டி ஜானகியுடன் வெளியே வர எத்தனித்தாள்.


செந்தூரன் யோசனையுடனே குடிசையை கட்டி விட்டு, தாரிகாவும் அவன் அம்மாவும் பேசிக் கொண்டிருந்த அறையின் வாசலில் எதிர்புறமாக சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் தாரா பெரியமனுஷி ஆகிவிட்டாள் போல இருக்கே என்று அவனுக்கு சந்தேகம்.


வெளியே குறுகுறுவென்று ஆவலாக பார்த்தபடி நின்று கொண்டு இருந்த செந்தூரனை பார்த்ததும் தாரிகாவிற்கு புதிதாக வெட்கம் வந்து விட்டது. அதுவும் இல்லாமல் புதிதாக தாவணி பாவாடை அணிந்திருந்தாள். அவன் முன்னாடி அந்த உடையில் வந்து நிற்க முடியாமல் அவளை வெட்கம் பிடுங்கி தின்றது.


வாசற்படியில் கால் வைத்தவள் அப்படியே மீண்டும் காலை உள்ளே இழுத்துக் கொண்டாள். ஜானகியோ அவளின் நிலை புரியாமல், “இன்னும் ஏன் மசமசனு நின்னுட்டு இருக்க? எல்லாருக்கும் விஷயத்தை சொல்லி மற்ற வேலையை பார்க்கணும், சீக்கிரமா வா” என்றழைத்தார்.


“ம்ஹும், செந்தூரன் மாமா வெளியே நிக்குது., நான் வரமாட்டேன்” என்றாள் சிணுங்கி கொண்டு. அவள் சிணுங்கல் அவனுக்கும் கேட்டது. ஏன் வரமாட்டேன் என்கிறாள் என்று புரியாமல் குழம்பினான் அவன்.


“அவன் இருந்தால் என்ன? இன்னிக்குதா அவனை பார்த்து புதுசா பயப்படுற, வா தாரிகா வேலையிருக்கு” என்று முன்னால் நடந்தார் ஜானகி.


வேறுவழியில்லாமல் மெதுவாக காலை எடுத்து வெளியே வைத்தாள். ஊதா நிற பட்டு பாவாடையும் ரோஐா நிறத்தில் தாவணியும் அணிந்து பெரிய அழகான வட்ட வடிவ பொட்டை வைத்து தலைநிறைய மல்லிகைப் பூவுடன் வெளியே மெல்ல எட்டிப் பார்த்தவளை பார்த்து அசந்து போனான் செந்தூரன்.


அவனை நிமிர்ந்து பார்க்காமல் ஓர விழி பார்வையால் அவன் இதயத்தை தாக்கினாள். புதிதாக தாவணி பாவாடை அணிந்ததாலா பெரிய மனுஷி ஆகியதாலா என்றெல்லாம் தெரியவில்லை, ஏதோ வெட்கம் கூச்சம் அவளை தடுமாற செய்தது. கன்னங்களில் வெட்க சிவப்புடன், அவன் மேல் ஓரப்பார்வையை செலுத்தியபடி ஜானகி சொன்ன அறைக்குச் சென்றாள்.


அவள் அந்த அறைக்கு சென்று குடிசையில் அமர்ந்ததும் ஜானகி அவனிடம் உலக்கையை எடுத்து வரச் சொன்னார். அவன் கொண்டு வந்து கொடுத்தபோது ஓலை மறைவில் ஒளிந்து கொண்டாள். அதற்குள் ஜானகியை யாரோ அழைக்கவும் அவர் வெளியே சென்றார்.


“தாரா” என்று மெல்லிய குரலில் அழைத்தான் செந்தூரன். அவள் மேலும் ஒளிந்து கொண்டாள்.


“பொட்டு வைச்ச கிளியே எட்டி பாரு வெளியே” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக பாடினான். அவள் வெட்கத்துடன் தன் இரு கைகளையும் கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். சிரித்துக் கொண்டே வெளியே சென்று விட்டான் செந்தூரன்.


அடுத்து வந்த ஒன்பது நாட்களும் அவர்களின் வீடு சொந்தபந்தங்களால் நிறைந்து வழிந்தது. சாரதாவிற்கு தன் அண்ணன் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் பரம சந்தோஷம். ஒன்பதாம் நாள் அன்று சடங்கு செய்யும் நிகழ்ச்சிக்கு பட்டுபுடவைகள் நகைகள் என பலவகையான சீர் வரிசைகளை இறக்கியிருந்தார் கதிரேசன்.


தாய்மாமன் வாங்கி கொடுத்த பட்டுபுடவையில் தேவதையாக வந்து நின்ற தாரிகாவை கண் இமைக்காமல் பார்த்திருந்தான் செந்தூரன். அவளை பார்த்ததும் இருபது வயது இளைஞனுக்கு இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.


அங்கே வந்திருந்த பெண்களில் ஒருத்தி, “தாய் மாமன் மாலை போடுங்க, நலங்கு வைக்க ஆரம்பிக்கலாம்” என்று சொன்னதும் சற்றும் யோசிக்காமல் மடமடவென்று மேடை ஏறினான் செந்தூரன்.


தாய்மாமன் என்று சொன்னதால் கதிரேசனும் எழுந்தார், அதற்குள் செந்தூரன் தாரிகாவை நெருங்கி விட்டதால் அப்படியே அமர்ந்து விட்டார். 


திருமணமாகாத இளைஞனாக இருக்கும் செந்தூரன் தன் மகளுக்கு மாலையிடுவதில் சுபாஷிற்கு விருப்பமில்லை. “செந்தூரா நில்லு, அப்பா இருக்கும் போது நீ எதுக்கு மாலை போடணும், அவர் போடட்டும், கதிரேசன் என்ன அப்படியே உட்கார்ந்திருக்கீங்க? எழுந்து வாங்க” என்றார்.


கதிரேசனும் சுபாஷின் வார்த்தையை மீற முடியாமல் எழுந்தார். ஆனால் செந்தூரன் ஏற்கனவே தாரிகாவிற்கு தான் வாக்கு கொடுத்ததை மனதில் எண்ணிக் கொண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென்று மாலையை தாரிகாவின் கழுத்தில் போட்டே விட்டான்.


அங்கிருந்தவர்கள் எல்லாம் கொல்லென்று சிரித்தனர். “செந்தூரன் அவன் பொண்டாட்டியை விட்டுக் கொடுப்பானா? இப்பவே பரிசம்  போட்ட மாதிரி தான்” என்று ஆளாளுக்கு கிண்டல் செய்தனர்.


சாரதாவும் கதிரேசனும் கூட அவர்களுடன் சேர்ந்து சிரித்திருக்க, சுபாஷ் மட்டும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு செந்தூரனை அழுத்தமாக பார்த்தபடி நின்றிருந்தார்.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post