இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 5 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 04-04-2024

Total Views: 21459


பாவை - 5

நாட்கள் கடக்க வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்களை வாங்க வேண்டுமென்பதால் நிதினிடம் முதல் நாள் இரவே பயத்தோடுக் கேட்டாள் கவிநயா.

“என்னங்க, நாளைக்கு சூப்பர் மார்கெட் போகணும். அப்படியே புதுசா, பெட்ஷீட் பில்லோ எல்லாம் வாங்க வேண்டியது இருக்கு “ என்க,

“அதை ஏன்டி என்கிட்டே சொல்லுற “

“அதுக்காக வச்சிருந்த பணத்தை தான் நீங்க சொன்னது மாதிரியே பாப்பாக்கு பீஸ் கட்டிட்டேன் “

“இப்போ என்ன சொல்ல வர்றே, பணம் வேணும் கொடுக்கச் சொல்லுற அப்படி தானே ?”

“இல்லைங்க அது “

“பேசாதேடி. இந்தா இதுல பத்தாயிரம் இருக்கு வாங்கிக்கோ. மீதி பணத்துக்கு ஏதாவது பண்ணிக்கோ “ என்க,

“அத்தை கிட்ட வாங்குன எல்லாம் காட்டி கணக்கு சொல்லணும் ? இந்த பணம் பத்தாதுங்க “

“ஒரு பையனை பெத்து கொடுக்க வக்கில்லை. பேச வந்துட்டா ? முதல்ல என் முன்னாடி நிக்காதே போய் தொலைடி “ கத்தவே, என்ன செய்வதென தெரியாது மகளின் அருகில் சென்று அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் விடிந்து விட, வழக்கம் போல் தன் வேலையைப் பார்த்து அனைவரையும் அனுப்பி வைத்தாள். ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதைப் பார்த்ததுமே கண்டு பிடித்த அஞ்சனா மற்றவர்கள் கிளம்பிய பின் அவளின் அருகில் வந்தாள்.

“அக்கா “

“என்ன அஞ்சனா ஏதாவது வேணுமா ?”

“இல்லைக்கா. உங்களுக்கு ஏதாவது தேவையா ? உங்க முகமே சரியில்லையே ?”

அத்தையிடம் மாட்டி அவர் காரணம் கேட்டு கணவன் பெயரை சொல்லி அவனிடம் அடிவாங்க முடியாது என்பதால், தானாக வரும் உதவியை விட மனமில்லை.

“எனக்கு கொஞ்சம் பணம் வேணும் ? ஆனா இதை நீ யார் கிட்டயும் சொல்லக் கூடாது”

“எவ்வளோக்கா ?”

“பத்தாயிரம் “

“எதுக்கு அக்கா. எதுவும் பிரச்சனையா ?”

“இல்லை அஞ்சனா. வீட்டுக்கு தேவையான பொருள். எல்லா ரூமுக்கு “ என்று என்னென்ன தேவை என்று அனைத்தையும் கூறி அதற்கு தான் பணம் வேணுமென்றாள்.

“சரிக்கா. என் கிட்ட இருக்கு வாங்கிக்கோங்க “

“நான் சீக்கிரம் கொடுத்துறேன். ஆனா நீ வீட்டுல யார் கிட்டையும் இதை சொல்லக் கூடாது “

“சரி. இந்தாங்கக்கா என்னோடு கார்ட். பாப்பாக்கு பீஸ் கட்ட என் கிட்டையே நீங்க நேரா கேட்டிருக்கலாம். நிதின் மாமா ஏன் இப்படி இருக்காரு ?” என்க,

“என்னால இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. உனக்கு நேரமாச்சுல நீ போ ” என்றதும், தனக்கும் வேலைக்கு நேரமாகி விட்டதால் கார்டை கொடுத்து விட்டுச் சென்றாள்.

வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு வேலைக்காரியோடு தங்களின் வீட்டு காரிலேச் சென்று தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வீடு வந்துச் சேர்ந்தாள்.

அதன் பின்னே சற்று நிம்மதி உணர்வு. பின் கணக்குகளைப் பார்த்து வைத்து மாலை நேரம் காத்திருக்க, மாமியாரும் வந்து விட்டார்.

ஒவ்வொரு மாதமும் இப்படி கவிநயாவே வேலைக்காரியோடுச் சென்று அனைத்து பொருட்களும் வாங்கி வர வேண்டும். முதல் நாளே மற்றவர்கள் ஏதாவது தேவை என்றால் அதையும் கேட்டு குறித்து வைத்து சேர்த்து வாங்கி வர வேண்டும். முதலில் திகைத்தவளுக்கு ஆறு வருடங்கள் ஆனதால் பழகிப் போனது.

சிறிது நேரம் ஓய்வெடுத்து மாமியார் வர, “என்ன மருமகளே எல்லாமே வாங்கியாச்சா ?” கேட்க, 

“வாங்கிட்டேன் அத்தை. இந்தாக எல்லாமே பில்லோட இருக்கு “ எனக் கூறி அதனைக் கொடுக்கவே, வாங்கி கணக்குப் பார்த்த மனோகரி மீதி பணத்தையும் காட்டக் கூறினார்.

அவளும் அதைக் காட்ட, “ஒன்னா தேதி வந்ததும், எல்லாரும் காசு கொடுப்பாங்க. அப்போ வந்து மறக்காம அடுத்த மாசத்துக்கு தேவையான பணத்தை வாங்கிக்கோ. “ என்கவே, சரியென்றாள்.

இதை அனைத்தையும் ஹாலில் அமர்ந்துப் பார்த்தவாறு இருந்த தீப்திக்கு சந்தேகம். எப்படி இது சாத்தியமாகும் ?

‘அம்மா பணம் விசியத்துல சரியா இருக்க, அண்ணி எப்படி பணமே இல்லாம இவ்வளோ வாங்குனாங்க. ஒரு வேலை யாருக்கும் தெரியாம வச்சிருக்காங்களா ?’ யோசனையோடு இருந்தவளோ நேராகவேக் கேட்டு விட நினைத்தாள்.

“அண்ணி ஒரு நிமிஷம் இருங்க “

“என்ன தீப்தி ?”

“அண்ணன் பணம் எதுவும் கொடுத்தாரா ?” கேட்டதும், கவிநயாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.

“எதுக்குடி அப்படி கேட்குற ?” எழுந்துச் செல்ல நினைத்த அன்னைக் கேட்க, அன்று தான் கண்டதை அப்படியே கூறினாள்.

“சொல்லுடி. என் மகன் பணத்தை திருப்பிக் கொடுத்தானா ?” மாமியாரோ மிரட்டலோடுக் கேட்க,

“ஆமா அத்தை. நேத்து கொடுத்தாங்க “ 

“அப்போ அவன் சொன்னான்னு அதை மாதிரியே பண்ணிருக்கே ? என் கிட்ட ஒரு வார்த்தை கூட நீ இதை பத்தி சொல்லலை. சொன்னா என்ன நான் வேண்டான்னா சொல்லப் போறேன் ?”

“இல்லை அத்தை அது வந்து “

 “காரணம் சொல்லாதே. அப்போ இதே மாதிரி தானே நாளைக்கு உங்க வீட்டுல ஏதாவது அவசரம், பணம் கொடுன்னு சொன்னா கொடுப்பே ?” என்க, 

'இப்படியெல்லாம்மா யோசிக்க முடிகிறது இவரால் ‘ கசந்து வெறுத்தாள்.

அப்போது தான் வேலை முடிந்து வந்த அஞ்சனா இங்கே நடந்த அனைத்தையும் கண்டு கொண்டு தான் இருந்தாள்.

“அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் அத்தை.”

“உன்னை இனி நான் நம்ம தயாராயில்லை. என் வீட்டு காசை நீ தாரை வார்த்து கொடுத்தாலும் கொடுப்பே. இப்போ வேற உன் அப்பன் கடன்ல தானே இருக்கான். முதல்ல அந்த காசை கொடுடி. என்னைக்கு நீ கடைக்கு போறையோ அப்போ வந்து வாங்கிக்கோ “ எனக் கூறி மீதமிருந்த பணத்தை வாங்கிக் கொண்டுச் சென்று விட, விழிகள் கலங்க நின்றிருந்தாள் கவிநயா.

“சாரி அண்ணி “ என்றதோடு தீப்தி சென்று விட, கவிநயாவின் அருகில் வந்தாள் அஞ்சனா.

ஆறுதல் வார்த்தை கூற நினைக்க, அதற்குள் அழுகையோடு அங்கிருந்துச் சென்று விட்டாள். தான் நினைத்து வந்த வேலையை கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் இதற்கு  ஒரு முடிவு கட்டவேண்டுமென நினைத்தாள்.

அந்த வாரயிறுதியில் மொட்டை மாடியில் துணிகளைக் காய வைத்து விட்டு அமர்ந்திருந்த கவிநயாவை நோக்கி வந்தாள் அஞ்சனா.

சின்மயி விளையாடிக் கொண்டிருக்க, சித்தியைக் கண்டதுமே வேகமாய் ஓடி வந்து, “சித்தி “ என்க, தூக்கிக் கொண்டு சுற்று சுற்றினாள்.

அதன் பின்னே தான் யோசனைக் கலைந்து கவிநயா காண, குழந்தையை இறக்கி விட்டு மறுபடியும் அவளை விளையாட அனுப்பியவளோ அருகில் வந்து அமர்ந்தாள்.

“அக்கா ! ஏன் எல்லாரும் உங்க கிட்ட கடினமா நடந்துக்துகுறாங்க “ 

“விடு அஞ்சனா. எல்லாம் நான் வாங்கி வந்த சாபம் “

“அக்கா சொல்லுங்க “ தெரிந்தே ஆக வேண்டுமென நினைத்துக் கேட்க, தன் மனக்குமறலை யாரிடமாவது கொட்டினால் தான் சற்று நிம்மதி கிடைக்குமென மனதிற்குள் தோன்ற கூற ஆரம்பித்தாள்.

கவிநயா,நிதின் இருவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அப்போது காவல் பணிக்கு முயற்சி செய்துக் கொண்டு தான் இருந்தான் நிதின்.

கவிநயாவின் குடும்பமும் செல்வசெழிப்பாக இருக்க, உடன் பிறந்தோர் அவளுக்கு நால்வர். இவளோ இரண்டாவது பெண். இன்னும் தம்பியும், தங்கைக்கும் படித்துக் கொண்டிருக்க, பெண் கேட்டு வந்தனர்.

காவல் அதிகாரியாகி விடுவான் என்ற ஆசையில் பெற்றவர்களும், அப்போது அவர்கள் கேட்ட, நகை,பணம், சீர்வரிசை எல்லாம் கொடுத்து சிறப்பாக திருமணத்தை முடித்து வைத்தனர்.

உள்ளங்கையில் வைத்து தாங்காத குறையாக நிதின் தாங்க, இரு மாதங்களிலே தாய்மை அடைந்தாள் கவிநயா. வீட்டிலும் எந்த வேலையும் செய்யாது, வேலைக்குச் செல்கிறேன் என்பதற்கு மறுத்து பாதுகாத்து வந்தான்.

அப்போது அந்த வீட்டில் இரண்டு வேலைகாரர்கள் வேலை பார்த்து வர, நிதினிக்கு கிடைத்த முதல் ஏமாற்றம்  பெண் பிள்ளை. அவன் மட்டுமில்ல அவனின் அன்னையும் சேர்ந்து தான் ஆண்வாரிசை எதிர்பார்க்க கிடைத்தது என்னவோ பெண்பிள்ளை. 

அந்த நேரம் சரியாக கிடைக்க இருந்த வேலையும் பறிப்போகி விட, இவள் பிறந்த நேரமே சரியில்லை என்று மகளை வெறுத்து கடமையாக மட்டுமே கண்டான்.

அடுத்த குழந்தையாவது ஆண் குழந்தை வேணுமென நினைத்துக் கொண்டு மூன்று வருடங்கள் கடந்தும் குழந்தையே இல்லாதுப் போனது.

நிதினுக்கும் காவல் அதிகாரி வேலை கிடைத்து விட, அந்த சந்தோஷத்தில் பழைய நிலைக்கு திரும்பி, மனைவியோடு நன்றாக தான் சில நாட்கள் இருந்தான்.

வேலையில் கிடைத்த எரிச்சல், சம்பளம் பற்றாமல் போய் கிம்பளம் வாங்க, அதனால் கிடைத்த பகட்டு என்று போதைக்கு அடிப்போனான். அவ்வப்போது குடிக்க ஆரம்பிக்க, கவிநயா தடுக்க இருவருக்கும் சண்டை தான் வந்தது.

“ஆம்பளைப் பிள்ளை பெத்து தர்ற வக்கில்லை “ என்ற வார்த்தையை கூறி ஒவ்வொரு நாட்களும் மனதைப் புன்படுத்த, ஒரு நாள் மருத்துவரிடம் சென்றனர்.

அவரோ கவிநயாவை பரிசோதித்துப் பார்த்து கர்ப்பப்பை வீக்காக இருக்க, அடுத்த குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லை என்றிடவே அந்த நொடியிலிருந்து முற்றிலும் மாறியது கவிநயாவின் வாழ்க்கை.

வீட்டில் வந்து இந்தச் செய்தியை கூற மாமனாரோ ஆறுதலாக கூறி விலகி விட, மாமியாரோ வறுத்தெடுக்க ஆரம்பித்தார். சில நாட்களில் வேலைக்காரியும் வேலைக்கு வராதுப் போக, இவளின் தலையிலே கட்டினர்.

“சும்மா தானே வீட்டுல கிடைக்கே, இந்த வேலையாவது செய் “ என்றே அனைத்தும் வேலைகளையும் பார்க்க வைத்தனர்.

எதிர்க்க நினைத்தாலும் முடியாத படி, ஒரு வருடத்திற்கு முன் வேறு பிறந்த வீட்டில் தந்தையோ உடன் வேலை பார்க்கும் ஒருவரால் பணத்தை பறிப்போக விட்டார்.

மோசடி வழக்கில் தந்தை ஜெயிலுக்குப் போக, அவரை காக்க கணவரிடம் காலில் விழாத குறையாக வேண்டி கெஞ்சி தந்தையை வெளியேக் கொண்டு வந்தாள்.

இருந்தும் அவர் கட்ட வேண்டிய பணத்தை விரைவில் கட்ட வேண்டும். இல்லை என்றால் எப்போது வந்து காவல் அதிகாரிகள் அழைத்துச் செல்வார்கள் என்றே தெரியாது.

“உன் அப்பனை நான் நினைச்சா இப்பவே ஜெயிலுக்குள்ள தள்ள முடியும் “ என்று அதையும் சேர்த்தே கூறி மனைவியை வருத்தெடுத்தான்.

வாழ்க்கையே வெறுத்து மகளுக்காக மட்டுமே உயிரைப் பிடித்து வைத்து இது நாள் வரை வாழ்ந்து வருகிறாள் கவிநயா.

நடந்த அனைத்தையும் அழுதுக் கொண்டு அஞ்சனாவிடம் கூற, கேட்டவளுக்கு சினம் தாங்க முடியவில்லை. 

‘இப்படியெல்லாம்மா வேதனையைக் கொடுக்கிறார்கள் ? அம்மாவும், மகனும் என்ன மனிதர்களோ ?’ அர்ச்சரித்தாள்.

“ஏன்க்கா, மாமாவுக்கு இந்த விசியம் தெரியாதா என்ன ?”

“தெரியுமே ”

“அவர் எதுவும் சொல்லலையா ?”

“சொல்ல என்ன இருக்கு அஞ்சனா. அடிச்சா, துன்புறுத்துனா கேட்ப்பாரு. ஆனா இவங்க மனசால தானே காயத்தை கொடுக்குறாங்க. எங்களுக்குள்ள நடக்குற விசியத்தை வெளியே சொன்னா அதுக்கு இவ அப்பன் சண்டை போடுவாரு. டிவோர்ஸ் பண்ணிட்டு அப்பன் வீட்டுக்கு போகப் பார்த்தா அங்கே அவரே ஒன்னுமில்லாம கிடைக்காரு.பொம்பளைப் பிள்ளையை வச்சிக்கிட்டு நான் என்ன பண்ண முடியும் சொல்லு “ என்க,

“எல்லாமே உங்களால பண்ண முடியும். நீங்க படிச்சிருக்கீங்க ? படிப்பு தான்க்கா ஆணிவேரே. நீங்க தப்பு பண்ணிட்டீங்க ? அதான் உங்களை அடிமையா வச்சிக்கிட்டாங்க. நீங்க ஒன்னும் மலடி இல்லை. உங்களால ஒரு குழந்தையை பெத்துக் கொடுக்க முடிஞ்சிருக்கு. “ 

“என்ன சொல்ல வர்ற அஞ்சனா ?”

“வெளி உலகத்தைப் பாருங்க அக்கா. மனசுக்குள்ள இருக்குற பயத்தைப் போக்குங்க. போக்கிடம் இல்லைன்னு நீங்க நினைச்சு தான் இங்கையே இருக்குறீங்க ? துணை தான் இல்லையே தவிர போக்கிடம் எப்பவும் நமக்கு கிடைக்கும் “

“பேசுறதுக்கு வேணா நல்லாயிருக்கும் அஞ்சனா. ஆனா நடைமுறைக்கு செட்டாகது. என் பொண்ணு உறவுகளை இழக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன். அதுக்காக எந்த கஷ்டம்னாலும் நான் தாங்கிப்பேன். நேரமாச்சு. வேலை இருக்கு வரேன் “ எனக் கூறி மகளையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

மூச்சினை விட்ட அஞ்சனாவும் தோள்பட்டையை குழுக்கிக் கொண்டுச் சென்று விட்டாள்.

இரவு நேரம் போல் அறைக்கு வந்த மனைவியிடம், “அன்னைக்கு மீது பணத்துக்கு என்ன பண்ணுனே ? அம்மா கேட்டதுக்கு நான் கொடுத்தேன்னு சொல்லிருக்கே ?” என்க,

‘இவங்களுக்கு எப்படி இந்த விசியம் தெரிய வந்தது ?’ மனதிற்குள் நினைத்துக் கொண்டு இப்போது என்ன கூறுவது என்ற யோசனையோடு நின்றாள்.

“உன்னை தானே கேட்குறேன். “

“அஞ்சனா தான் கொடுத்தா “

“அப்போ அவ கிட்ட நீ எல்லாத்தையும் சொல்லிருக்கே ?”

“இல்லைங்க. பணம் தேவைப்படுது சீக்கிரம் கொடுத்துறேன்னு சொன்னேன். வேற ஒன்னும் சொல்லலை “

“இந்தா இதுல பத்தாயிரம் இருக்கு அவ கிட்ட கொடுத்துரு “ என்றதும், சரியெனக் வாங்கிக் கொண்டாள்.

‘நான்கு நாட்களுக்கு முன் கேட்டதுக்கு இல்லையென்று கூறிவனுக்கு இப்போது எப்படி வந்தது ?’ மனதுக்குள் மட்டுமே நினைத்துக் கொண்டாள்.

மறுநாள் அந்த பணத்தை அஞ்சனாவிடம் கொடுக்க, “என்னாச்சு அக்கா ? எதுக்கு உடனே கொடுத்துட்டீங்க ? நான் நேத்து பேசுனதுனால எதுவும் ?” என்று கூற வர,

“அப்படியெல்லாம் இல்லை அஞ்சனா. எனக்கு உன் மேல எந்த கோபமுமில்லை. அவர் கொடுத்தாரு அதான் இருக்கும் போதே கொடுத்துரலாம் கொடுத்துட்டேன் “ என்றதும், சரியென வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

மதிய நேரம் போல் அலுவலகத்தில் அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்த அஞ்சனாவிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. 

அதனைக் கண்டு ஒரு நொடி யோசித்தவள் பின் டெலிட் செய்து விட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். வேலை முடிந்ததும் தன்னவனிடம் ஷாப்பிங் செல்லப் போகிறேன் வர தாமதமாகும் எனக் கூறி விரைவிலே கிளம்பி விட்டாள்.

உடன் வருகிறேன் என்று கூறியவனையும் மறுத்து  அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவள் அரை மணி நேர பணத்திற்கு பிறகு பார்க் ஒன்றிருக்குச் சென்றாள்.

அங்கே அவளுக்காக ஒருவன் காத்திருக்க சரியாக அவனின் முன்னேச் சென்று நிற்க, அவனோ எழுந்து நின்று வரவேற்றான் .

பின் இருவரும் அமர்ந்து சிறிது நேரம் பேச நேரம் செல்லவே, தன் பையிலிருந்து ஒரு போட்டோவை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டாள்.

“சரி நேரமாச்சு நான் கிளம்புறேன் “ என்றவளோ எழுந்து நிற்க,

“எதுக்கு நீ கொஞ்சம் கவனமா இரு. பார்த்திடப் போறாங்க “ என்றான்.

“நான் பார்த்துக்குறேன்” என்றவளோ அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி பயணித்தாள். நினைவுகளோ கடந்த காலத்திற்குச் செல்ல முயல கடிவாளமிட்டு தடுத்து நிறுத்தினாள் அஞ்சனா.

தொடரும் ...


Leave a comment


Comments


Related Post