இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 14 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 04-04-2024

Total Views: 20108

காதலொன்று கண்டேன்!

தேடல்  14

அவனுக்காக..

அந்த நினைவுகள் ஒவ்வொரு முறையும் அவனின் மனக்கண்ணில் வந்து அவனை உயிரோடு கொன்று தான் போடுகிறது,மறுப்பதற்கேதும் இல்லை அதில்.

விட்டத்தை விழி விரித்து வெறித்த படி படுத்திருந்தவனுக்கு உறக்கம் எட்டவில்லை.
தந்தை என்ன செய்து கொண்டிருப்பார் என்கின்ற நினைப்பு மனதில் ஓட விருட்டென எழுந்தமர்ந்தான்,பையன்.

தந்தையிடம் அரிதாகத் தான் இப்படியெல்லாம் நடந்து கொள்வது.அதிலும் திருமணப் பேச்சை எடுக்கும் சமயங்களில் தான்.

அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வர அங்கே உணவு மேசையில் தலையை கவிழ்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்,சத்யமூர்த்தி.மகனின் வாழ்வை நினைத்து கலக்கமாகவும் இருந்தது.

மூடி வைக்கப்பட்டிருந்த உணவுப் பாத்திரங்கள் அவரும் இன்னும் சாப்பிடவில்லை இல்லை என்பதை உணர்த்த கோபத்துடன் சிறு புன்னகையும்.

கைகளை கழுவிக் கொண்டு வந்து தட்டில் தோசையை எடுத்து வைக்க விழித்திருந்தவருக்கு சத்தம் கேட்டாலும் தலையை நிமிர்த்தவில்லை,அவனின் தாயுமானவர்.

"அப்பா எந்திரி..வா சாப்டலாம்.."

"அப்பா.." என்ற படி அசையாது படுத்திருந்தவருக்கு கிச்சு கிச்சு மூட்ட அதை தாள முடியாமல் எழுந்தமர்ந்தாலும் கொஞ்சமும் சிரிக்கவில்லை.முறைத்த படி இருந்தவரோ அவனுடன் பேசவும் எத்தனிக்கவில்லை.

"அப்பா இந்தா சாப்டு.." தோசையைப் பிய்த்து அவரின் வாயிற்கு நேரே கொண்டு செல்ல முகத்தை திருப்பிக் கொண்டவரோ எழுந்து செல்லப் பார்க்க கரத்தை இழுத்துப் பிடித்து அமர வைக்க திமிறியவரை முறைக்க தவறவில்லை,அவன் விழிகள்.

"இந்தா பா அடம் புடிக்காம சாப்டு.."

"வேணா.."அடுத்த வார்த்தை பேச விடாது வாய்க்குள் உணவைத் திணித்திருந்த பையனின் செயலில் கடுப்பானாலும் விழுங்காமல் இருக்கவில்லை.

"துப்புனன்னா இனி நா உன் கூட பேசவே மாட்டேன்.." மகனின் பேச்சில் கோபம் வந்தாலும் துப்ப முயலவில்லை.

ஒருவாறு ஊட்டி முடித்தவனோ அவரின் முகம் பார்க்க சிரிப்பாய் வந்தது.கையை கழுவி விட்டு அப்படியே அவரின் காலடியில் அமர்ந்து மடியில் தலை சாய்க்க பறந்தோடியிருந்தது,தந்தையானவரின் கோபம்.
இயல்பான தாய்மை உணர்வு ஊற்றெடுக்க மெதுவாய் தலை கோதி விட்டது,அவரின் கரம்.

"எதுக்கு பாப்புகுட்டி கல்யாணம் வேணாம்னு சொல்ற..?"தன்மையாக கேட்டவரின் மனநிலை அவனுக்கும் புரியத் தான் செய்தது.

"ப்பா..உனக்கு தெரியும்ல..எத்தன பேரு என்னோட கைய கூட புடிக்க அருவறுக்குறாங்கன்னு..தொட்டா அறுவறுக்குதுன்னு மொகத்துக்கு நேராவே பல பேரு சொல்லிருக்காங்க..அப்றம் எப்டி பா..அப்டியே ஒரு பொண்ணு சம்மதிச்சாலும் அது கட்டாயத்தால நடக்குறதா தான் இருக்கும்..மனசார சம்மதிக்க மாட்டாங்க..அம்மாவுக்கே என்ன புடிக்கல..மத்த பொண்ணுங்க எப்டி பா..? அதுல இப்ப கொழந்த வேற பொறக்குறதுக்கு சான்ஸ் கம்மின்னு சொல்லி இருக்காங்களே பா..அப்றம் எப்டி பா..? இன்னொரு பொண்ணோட வாழ்க்கய நாசமாக்கறது..?"இயல்பாய் அவன் குரல் வெளிவந்தவனின் மனமோ மரத்தல்லவா போயிருந்தது.

"கொழந்த மட்டும் இல்ல பாப்புக்குட்டி வாழ்க்க..அத விட கல்யாணத்துல எத்தனயோ விஷயம் இருக்கு.."

"அப்பா இது சினிமாக்கு பொருந்தும்..நெஜத்துல யாரும் அப்டி இருக்க மாட்டாங்க.."

"இல்ல பாப்புக்குட்டி நீ சொன்னது மாதிரி விதவப் பொண்ணுங்கள தான் பாத்தேன்..சிங்கிள் மதரா இருக்குறவங்கள தான் தேடுனேன்..நீ தான் ஒத்துக்க மாட்டேங்குறியே.."

"அன்னிக்கு ஒரு வயசு கொழந்த இருக்குற பொண்ணு தான் வந்து சொல்லிட்டுப் போச்சே பா..அதுக்கப்றம் எப்டி..?"

"இங்க பாரு பாப்புக்குட்டி..எல்லாரோட லைப்லயும் ஒரு டர்னிங்க் பாய்ண்ட் வரும்..நம்மள நமக்காகவே ஏத்துக்கற பொண்ணு வரத் தான் செய்வாங்க.."

"................."

"அப்போ எனக்கு இருபத்தஞ்சு வயசு இருக்கும் டா..நா வேற குள்ளமா இருப்பேனா.."

"ப்பாஆஆ"

"சரி..சரி கதய கேளு..அஞ்சடி தான் இருப்பேன் நானு..அப்போ கல்யாணம் எதுவுமே சரியா அமயல..அவனவன் சொல்றத கேட்டு மனசு வெறுத்துப் போனப்போ தான் வந்தா அவ..அவ அஞ்சர அடி..ரொம்ப உயரமான பொண்ணு..வந்து என்ன புடிச்சிருக்குன்னு சொன்னா..அவ டீச்சர் வேற..எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல.."

"ம்ம்"

"கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்..காதலிச்சோம்..பழய காலத்துல மாதிரி..ரொம்ப அழகான காதல் அது..அப்றம் ஒரு நாள் அவ ஆக்சிடன்ட் ஆகி எறந்து பொய்ட்டா..வாழ்க்கயே வெறுத்துப் போச்சு..மொத்தமா நான் நானா இல்ல..சரியா எனக்கு முப்பது வயசு..உங்கம்மா விரும்புன பையன் விட்டுட்டுப் பொய்ட்டான்னு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சானுங்க..எல்லாத்தயும் எல்லாரலயும் சட்டுன்னு ஏத்துக்க முடியாதுல..டைம் கேட்டேன்..உங்கம்மா தந்தாங்க..நீயும் பொறந்த..ஆனா அதுக்கப்றம் சின்ன மனஸ்தாபம்..அப்டியே பிரிஞ்சுட்டோம்..ஆனா பாரு என்ன அப்டியே ஏத்துக்க ரெண்டு பேர என்னோட வாழ்க்கைல கடவுள் அனுப்பினாரு..அது மாதிரி தான் டா உன்னோட வாழ்க்கையும் இருக்கும்.." பாதி உண்மையை மறைத்து கூறிய தந்தையிடம் சொல்ல பதிலேதும் இருக்கவில்லை,அவனிடம்.

மறுநாள் பொழுது விடிய அலுவலகத்துக்கு வந்திருந்த யாழினிக்கு தாயின் வார்த்தைகள் தான் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தன.

"கமான் யாழினி..கண்ண பாத்து பேசறோம்..நார்மலா இருக்கோம்..மனச கன்ட்ரோல் பண்றோம்.." தனக்குள் சொல்லிக் கொண்டு திடப்படுத்தியவளை ஒரு வித சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்,ருத்ரா.

கொஞ்சம் நெருக்கமாக மாறியிருந்தது,அவர்களிடையிலான நட்பு.

"யாழினி என்ன யோசன..? தனியா பொலம்பிகிட்டு இருக்க..?"

"ஆஹ்..அதுவா மனச கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன்..எல்லா எடத்துலயும் செல்ப் கன்ட்ரோல் முக்கியம்ல.." உளறி விட்டு சமாளித்தவளின் மீது இன்னும் சந்தேகம் வளர்ந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை,தோழி.
நேரத்தைப் பார்த்து வழியைப் பார்த்தவளின் எண்ணத்தை பொய்யாக்காமல் வந்தான்,கார்த்திக்.

முகத்தில் இருக்கும் அதே அழுத்தம் இருக்க அவனின் முகத்தை தூரத்தில் இருந்து தீவிரமாய் ஆராய்ந்தவளுக்கு அந்த இறுக்கம் ஏனோ பிடிக்கவில்லை.

"கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்..? எப்ப பாரு உர்ருன்னு..உர்ரு மூஞ்சி.." இதழ்களுக்குள் திட்டியவளின் விழிகளும் வார்த்தைகளுக்கேற்றாற் போல் உணர்வுகளை உருப்போட்டுக் காட்டிட சுற்றம் ஏனோ மறந்திருந்தது,அவளுக்கு.

திடுமென கேட்ட சத்தத்தில் கலைந்தவளுக்கு தன் செயல் ஒரு வித அதிர்வென்றால் அவளின் மனதில் தோன்றிய எண்ணங்கள் அத்தனை கலவரத்தை உண்டு பண்ணிற்று.

"என்ன இது இப்டிலாம் யோசிக்கிறேன்..?" தடுமாறியவளுக்கு இதுவரை இப்படி நடந்திடாது முதன் முதலாய் மனதில் தோன்றிய பிறழ்வுகள் பெருமளவு அலைக்கழிப்பை தந்தது.

உணர்வுகளின் பிறழ்வது..
 மனதோரம் நிகழும் புதுமையா நிகழ்வது..
அவளை ஏதோ செய்தது.

அவன் வந்ததை கவனியாதது போல் காட்டிக் கொண்டு கணினியில் பார்வையை மேய விட்டவளுக்கு பையன் தன்னை கவனிக்கவில்லை என்பதே அத்தனை நிம்மதியாய்.

காலை இடைவேளை நேரம் என்பதால் சிற்றுண்டிச்சாலை ஒரு வித பரபரப்பாய் இயங்கிக் ஒரு மூலையில் சுவற்றிற்கு அருகே ஆறு பேர் அமரக் கூடிய நீளமான இருக்கையொன்று போடப்பட்டிருந்தது.

பொதுவாக காபி டம்ளருடன் அதில் அமர்ந்து கதைப்பது பலரின் வழக்கம்.

அதில் ஒரு மூலையில் அமர்ந்து காபியை சுவைத்துக் கொண்டிருந்தாலும் சுற்றி இருந்தவர்களில் பார்வையால் அவன் பெருமளவு அசௌகரியத்திற்கு உள்ளானது உண்மை.

உணவை எடுக்கச் சென்றிருந்த தோழனோ கையில் காபியை திணித்து விட்டுச் சென்றிருக்க அவனுக்காக தான் காத்திருப்பது,மனமேயின்றி.

முகத்தை கர்சீப்பால் ஒற்றி ஒற்றி காபியை பருகியவனுக்கு அதிக  சூடாய் இருந்ததால் வேகமாய் தொண்டைக்குள் சரித்திடவும் முடியவில்லை.

கொஞ்சம் உஷ்ணமான சூழல் இருக்கவே முகத்திலும் கழுத்திலும்  இருந்த கொப்புளங்கள் இன்னும் கூடியிருக்க வழமைக்கு மாறாய் பெரிதாகி சிலது வெடித்து குருதியை கக்கிக் கொண்டிருந்தன.

அதிக உஷ்ணத்துக்கும் தூசுக்கும் இப்படி நடப்பது வழமை என்றாலும் அடுத்தவரின் பார்வையை சமாளிக்கும் பக்குவம் பையனிடம் இன்னும் இல்லை.தோழனும் இன்னும் வராதிருக்க சிரமமாகத் தோன்றிற்று.

பையனைக் கலாய்த்த படி அங்கு வந்து சேர்ந்தான்,யாதவ்.
அவர்களின் நிறுவனத்தின் உரிமையாளரின் தங்கை மகன்.

அதற்கென்று அவனுக்கு பெரிதாய் சலுகைகள் இல்லை என்றாலும் அவனுக்கு வர வேண்டிய வாய்ப்புக்கள் எல்லாவற்றுக்கும் போட்டியாக பையன் நிற்பது போல் அவனுக்குத் தோன்ற காரணமின்றிய வன்மம் பையனின் மீது.

அதிலும் அவனை விட உயர் பதவியில் பையன் இருப்பது ஒரு வித பொறாமையையும் உண்டாக்கி விட்டிருப்பது,உண்மையே.அதிலும் சமீபத்தில் அவன் கேள்விப் பட்ட விடயம்..?

"என்ன கார்த்திக் இங்க என்ன பண்ற..?"சாவகாசமாய் முன்னே நின்று கேட்டவனுக்கு பதிலேதும் சொல்லவில்லை,பையன்.

கோபம் வந்தாலும் வலிய வரும் பிரச்சினைகளை தள்ளி நிறுத்தவே விரும்புவான்,அவன்.

"நேத்து தான் டாக்டர் வெற்றி கிட்ட பேசுனேன்..அப்போ தான் உன் விஷயம் தெரிஞ்சுது..நார்மல் லைப் வாழ்ந்தாலும் உனக்கு கொழந்த பொறக்காதாம்..ஏதோ கொற இருக்காம்.." சுற்றி நின்றிருந்த தோழர்களுக்கு கேட்கும் படி அவன் சொல்ல பையனின் முகம் இறுகியது.

"தட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ்.."

"ஹேய் வெய்ட்..எங்க மாமா பொண்ணு உன்ன புடிச்சிருக்குன்னு சொல்றா..உன்ன ட்ரீட்மன்ட் பண்ணி சரியாக்கி அப்றம் கட்டிக்கிறேன்னு சொல்றா..அப்போ எனக்கு என்ன பைத்தியமா..? வேணும்னே அவள மயக்கி வச்சிருக்க.."

"எனக்கு அது யாருன்னே தெரியாது.." இழுத்துப் பிடித்த பொறுமையுடன் சொன்னான்,பையன்.
அவனுக்கே விடயம் புதிதாக இருக்க இதில் இப்படி நடந்து கொண்டால் கோபம் வராதா என்ன..?

"பத்தி எரியுதுடா..உன்னால என்னோட அத்தப் பொண்ணு என் பக்கம் பாக்க கூட மாட்டேங்குறா.." வெறி பிடித்தவனாய் சொன்னவனின் முகத்தில் கொலைவெறி தாண்டவமாடியது.

"எனக்கு ஒன்னும் தெரியாது யாதவ்..போக விடு.." வழி மறைத்து நின்றவர்களிடம் மல்லுக் கட்ட முடியாமல் சமாதானமாக முயல தன்னில் இருந்து பக்கமாய் மூன்றடி தூரத்தில் வந்து நின்றவளை அவன் கவனிக்கவில்லை.

கார்த்திக் அங்கு இருப்பதைக் கண்டு யாழினி தான் வந்திருந்தாள்,ருத்ராவின் மறுப்புக்களை புறக்கணித்து விட்டு.

அவர்களிடையே நடந்து கொண்டிருந்த வாக்குவாதம் ஒரு வித பயத்தை தந்தாலும் அவள் அவ்விடத்தில் தரிக்க ஒரே ஒரு காரணம் கார்த்திக் மட்டும் தான்.இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளில் ஒரு வித பரிதவிப்பு.

பார்வைப் பரிமாற்றங்களும் இரம்மியமான பேச்சுக்களும் மட்டுமல்ல,இனம் புரியா தடுமாற்றங்களும் விழிவழியே தெரிந்திடும் பரிதவிப்புக்களும் காதலின் துவக்கப் புள்ளி தான்.

"உன்னக் கொல்லப் போறேன்டா.." தன்னில் இருந்து சில அடி தூரத்தில் நின்றிருந்தவனை பார்த்து உறுமிய படி அருகே நின்றிருந்த தோழனின் கையில் சூட்டுடன் இருந்த காபியை அவனை நோக்கி ஆவேசமாய் வீச சட்டென சுதாரித்துக் கொள்ள முடியவில்லை,தலை தாழ்த்தி அசட்டையாய் நின்றிருந்த பையனால்.

முகத்தை மறைத்து சற்றே குனிந்து கொண்டவனின் செவிகளில் "சார்" எனும் அழைப்பு வந்து விழ விழி திறந்தவனுக்கு தெரிந்தது என்னவே தனக்கு முன்னே முதுகு காட்டி நின்று கொண்டிருந்த பெண்ணொருத்தி தான்.

அவளின் குரலை வைத்து யார் என்று கண்டு கொண்டவனுக்கு ஓரிரு நொடிகளில் பின்னரே நடந்திருக்கும் விபரீதம் உரைத்தது.

யாதவ் கத்தும் போதே இடையில் வந்தவளோ அவன் காபியை வீசுவது கண்டு விரைய சிதறியது காபித் துளிகள் வந்து பட்டுத் தெறித்தது,அவளின் கன்னத்திலும் கழுத்திலும் தான்.

                 ●●●●●●●

"ஆ..அம்மா மெதுவா க்ரீம பூசு டி..அது இன்னும் வலிக்கிது.." முணுமுணுத்தவளுக்கு கோபப் பார்வையுடன் ருத்ரா களிம்பை பூசி விட அதை விட உச்ச கட்ட கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது பையனின்றி வேறு யாராக இருந்திட முடியும்..?

பதட்டமும் கோபமுமாக நின்றிருந்தவனின் அருகே நின்றிருந்த அஜய்க்கும் யாழினியைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது.

கன்னத்திலும் கழுத்திலும் காபி வந்து ஒட்டிக் கொண்ட பின் ஒரு நிமிடம் உறைந்து போனவளை பதட்டத்துடன் இழுத்துக் கொண்டு போய் நீர்க்குழாயின் அருகே விட்டது மட்டுமல்லாமல் பதறிய படி வந்த ருத்ராவிடம் பாக்கெட்டில் இருந்த புது கர்சீபை எடுத்து நனைத்து ஒற்றச் சொல்லி கொடுத்தது என்னவோ பையன் தான்.

தனக்காக தான் அவள் குறுக்கே வந்து நின்றாள் என்பது புரிய பதட்டப்படாமல் இருக்க முடியவில்லை,பையனாலும்.

"பாத்து கவனமா இரு..திரும்ப ஏதாச்சும் கொட்டிக்காம.." திட்டி விட்டு ருத்ரா நகர தன் கன்னத்தை தடவியவளுக்கு அத்தனை எரிச்சலாய் இருந்தது.

கொஞ்சம் சூடாக இருந்ததால் கன்னமும் கழுத்தும் சிவந்திருக்க தொட்டுப் பார்த்தவளுக்கு பெரிதாய்த் தோன்றா விடினும் பார்வையால் தொட்டுக் கொண்டிருந்தனுக்குள் ஆழிப்பேரலையாய் கனிவின் ஆக்கரமிப்பு.
பார்த்தவர்களில் அவள் மட்டும் வித்தியாசமாய்த் தோன்றியதன் காரணம் என்னவோ..?

விருப்பங்கள் வித்தியாசப்படலாம்.
வித்தியாசங்களே விரும்பச் செய்திடலாம்.

தேடல் நீளும்

2024.04.03


Leave a comment


Comments


Related Post