இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 13 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 05-04-2024

Total Views: 28930

அத்தியாயம் 13

சென்னை

சுரேந்தர் டெல்லி சென்று திரும்பியவன் எப்போதும் போல அவனது வேலையில் கவனமாக இருந்தான்.

வர்ஷினியும் எப்போதும் போல அவன் பின்னால் சுற்றுவதில் கவனமாக இருந்தாள்.

அப்படி என்ன இருக்கிறது அவனிடம் என்று கேட்டால் அவளிடம் இருந்து வரும் பதில்கள் ஏராளம்.

ஆறடிக்கும் சற்று அதிகமாக வளர்ந்தவன், கண்களில் எப்போதும் இருக்கும் கருணை மருத்துவன் அல்லவா அக்கண்கள் கோபத்தில் சிவந்தால் அக்னி தேவன் அவன் என்பது பாவம் பேதை பெண் வர்ஷினிக்கு தெரியவில்லை....

கருத்த அடர்ந்த புருவங்களை உடையவன், அடர்ந்த மீசையும் சிவந்த உதடுகளையும் அதில் எப்போதும் தவழும் புன்னகையுமாக வளைய வருபவனை யாருக்குத்தான் பிடிக்காது....

அதைவிட அவனுக்கு அங்கு இருக்கும் மரியாதை பெரியவர்களுக்கு அவன் கொடுக்கும் மரியாதை அதேசமயம் நோயாளிகளிடம் அவன் காட்டும் நிதானம் அத்தனையும் அவளை அவன்பால் காந்தம்போல இழுத்து இருக்க கனவில் அவனுடன் குடும்பமே நடத்த துவங்கி விட்டாள் வர்ஷினி...

பாவம் அவளுக்கு தெரியவில்லை அவனுக்கான தேவதை அவள் இல்லை என...

இரண்டு நாட்கள் தள்ளிப் போட்டவன் வர்ஷினியிடம் ஒரு ரெஸ்டாரண்ட் பெயரை கூறி வந்துவிடுமாறு கூற அவளோ ரெக்கை கட்டி பறக்காத குறையாக துள்ளினாள்.

அருவியின் ஊர்.

சூரியன் தன் பணியை செவ்வனே செய்ய வந்துவிட மெல்ல உறக்கத்தில் இருந்து விழித்தான் வாசு.

கண்களில் எரிச்சல் இன்னும் மிச்சம் இருந்தது.

"என்னத்த கொடுத்தானோ தெரியல.... தூக்கமே போகல..." என தன்பாட்டுக்கு பேசியபடி எழுந்து இருகரங்களையும் கொண்டு கண்களை அழுத்தி தேய்த்து திறந்தவன் கண் முன் தலைவிரிக் கோலமாக அமர்ந்து இருந்தாள் மகிழா.

அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

முதலில் கனவு என நினைத்தவன் மீண்டும் கண்களை தேய்த்துவிட்டு பார்க்க அவள் அமர்ந்து இருந்த கோலத்தை மாற்றாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள் அவள்.

அவள் அமர்ந்து இருந்த கோலம் அவனுக்கு பயத்தை உண்டாக்கியது.

பதறியடித்து எழுந்தவன் "ஏய்... நீ... நீ... இங்க என்ன பன்ற..?" என கேட்க.

அவன் விழித்துவிட்டான் என்பதை அறிந்தவள் தனது நாடகத்தை அறங்கேற்ற ஆரம்பித்தாள்.

"மைனரே... இப்படி பண்ணிப்புட்டீரே... என் வாழ்க்கையவே அழிச்சிப்புட்டீரே... இது உமக்கே அடுக்குமா... என் பிரண்ட கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஊரே தம்பட்டம் அடிச்சிப்புட்டு... இப்ப என் வாழ்க்கையவே கெடுத்துப்புட்டீரே... இனி நான் இந்த ஊர்ல எப்படி முழிப்பேன்... எவன்கிட்டயே கெட்டுப் போனவன்னு இந்த ஊரே என்ன காரித்துப்புமே... நான் என்ன பன்றது... இதோ உங்க முன்னாடியே என் வாழ்க்கைய நான் அழிச்சிக்கிறேன்...." என எழுந்தவள் அவன் படுத்து இருந்த கட்டிலில் இருந்து தன் தாவணியை உருவி அங்கிருந்த சேர் மேல் ஏறியவள் அங்கு சுற்றிக் கொண்டு இருந்த மின்விசிறி மேல் எறிய அது நழுவி விழுந்தது.

"ஏய்...என்ன பன்ற நீ... இது என்ன கோலம்...போய் முதல்ல துணிய மாத்து..." என கத்தினான் அவன்.

"நீங்கதான எதுக்குடி இந்த தாவணின்னு அத கழட்டி எறிஞ்சீரு... இப்ப போய் துணிய போடுன்னு சொல்றீரு... இங்க பாரும்.. இந்த தாவணி எல்லாம் எப்படி கிழிச்சு வச்சிருக்கீருன்னு பாரும்..." என அவள் கிழிந்த தாவணியை அவன் முன் நீட்ட

 "ஏய்.. ச்சீ.. ச்சீ.. வாய மூடுடி.. யார் இடத்துல வந்து என்ன பன்ற.. உன் அண்ணன் அனுப்பினானா அருவிய பழி வாங்க... ச்சே... நீயும் வந்து கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம எப்படி நிக்கிற பாரு... வெளிய போடி..." என கத்த.

"இப்படி என் உடுப்ப முழுசா கிழிச்சிப்புட்டீரு... ராத்திரி முழுசா உங்கக்கூட இந்த அறையில்தான் இருந்தேன்... நான் இப்ப வெளிய போன்னு சொன்னா... இந்த கிழிஞ்ச துணியோட எப்படி நான் போறது...?" என அவள் கேட்டு கொண்டு இருக்க.

"டேய் மாப்ள...." என்றபடி உள்ளே வந்தான் அவன் கூட்டாளி ஒருவன்.

அவள் வேண்டும் என்றே கதவு தாழிடாமல் இருந்தாள்.

இரவு அவன் போதையில் இருக்கும்போது அவனது நண்பர்கள் கொண்டுவந்து அவனது பண்ணை வீட்டில் விட்டு சென்றனர் அதை மறைந்து இருந்து பார்த்தவள் மெல்ல அவன் கண்ணில் படாமல் அவன் அறைக்குள் வந்து மறைந்து நின்று கொண்டாள்.

அளவுக்கு மீறி  குடித்து இருந்தாலும் நிதானம் தவறவில்லை அவன்.

அவனது அறைக்கு வந்தவன் அங்கு இருந்த கயிறு கட்டிலில் பொத்தென விழுந்து "சுசி... சுசி... என்ன மன்னிச்சுடுடி... பெரியப்பா வார்த்தைய என்னால மீற முடியாது... உனக்கு என்னைவிட நல்லவன் கிடைப்பான்டி..." என புலம்பியபடி இருக்க அவளுக்கோ சுசிலாவின் பெயரை கேட்டதும் இன்னும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.

"இன்னைக்கு ஒருநாள் நல்லா அவள நினைச்சுக்க நாளையில இருந்து அவ பேருகூட உனக்கு நெனப்புல வரக்கூடாது..." என கறுவிக் கொண்டாள்.

சற்றுநேரம் புலம்பியபடி படுத்து இருந்தவன் இயற்கை உபாதை கழிக்க வெளியேற அவன் வெளியே சென்றது அவளுக்கு நல்ல வசதியாக போனது  அவன் வெளியேறியவுடன் தான் கையில் கொண்டு வந்து இருந்த பீர் பாட்டிலில் இரண்டு தூக்க மாத்திரைகளை போட்டவள் அதை நன்கு குலுக்கிவிட்டு அவன் கண் படும் இடத்தில் வைத்துவிட்டாள்.

அவன் மீண்டும் உள்ளே வந்தவன் கண்ணில் பட்டது அவள் வைத்த அந்த பாட்டில்.

"இத எவன்டா இங்க வச்சது...?" என கூறியவன் அதை எடுத்து வாயில் அப்படியே சரித்துக் கொண்டான்.

அவனது செயல்கள் ஒவ்வொன்றையும் பார்த்தவள் மனதினுள் "அப்பாடா.. குடிச்சிட்டான்..." என மகிழ்ந்து அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும்வரை காத்திருக்க ஆரம்பித்தாள்.

அவனது அறையில் நெல் கொட்டி வைக்கும் தொம்பை இருந்ததால் அவள் மறைவதற்கு ஏதுவான இடமாக அது இருந்தது.

இதற்கும் வாசு ஒன்றும் குடிகாரன் இல்லை.

எப்போதேனும் விஷேச தினங்களில் மட்டுமே பருகுவான்.

சுரேந்தர் அளவுக்கு இல்லை.

ஆனாலும் இப்போது சுசிலாவை மறக்கவே அதிகம் அதை நாடியவன் இரண்டு தினங்களாக இரவு வீட்டிற்கும் செல்லாமல் பண்ணை வீட்டிலேயே தங்கிக்கொள்ள பத்மினியும் அழைத்து பார்த்துவிட்டு எப்படியோ போ என விட்டுவிட்டார்.

இதை அவனது நண்பன் ஒருவன் மூலம் அறிந்த மகிழாவின் மூளை கீழ்த்தரமாக வேலை செய்ய இதோ எந்த ஒரு பெண்ணும் செய்ய துணியாத காரியத்தை செய்ய துணிந்துவிட்டாள்.

அவனது நண்பன் உள்ளே வந்ததும் வாசுவின் பின்னால் ஓடி தன்னை மறைத்துக் கொண்டாள் மகிழா.

அவர்களின் நிலையை பார்த்த அவனது நண்பன் வேகமாக வெளியேறினான்.

தன் பின்னால் இருந்தவளை முன்னே இழுத்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைக்க பொறி கலங்கியது அவளுக்கு.

"முதல்ல என் முன்னாடி இப்படி நிக்கறது இதோட கடைசியா இருக்கட்டும்.. எனக்கும் அருவிக்கும் கல்யாணம் முடிவு ஆகியிருக்கு.. உனக்கு தெரியும்தான.. இத்தன வருஷமா அவகூடதான நீ இருந்த.. அவ வாழ்க்கைய கெடுக்க பாக்குறியே... நீ எல்லாம் என்ன பொண்ணு... என் கண்ணு முன்னாடியே வராத.. போ இங்க இருந்து..." என கத்த

அவனின் பேச்சில் வெகுண்டு எழுந்தவள் தாவணியை எடுத்து மேலே போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேற தோப்பில் வேலை செய்துகொண்டு இருந்தவர்களின் கண்களில் தெளிவாக விழுந்தாள்.

அதுதான் அவளது பிளானே.

வேகமாக ஓடியவள் அங்கிருந்த கிணற்றை நோக்கி ஓட வெளியே நின்றிருந்த அவனது நண்பன் "டேய் வாசு... அவ கிணத்துல விழப்போறாடா..." என கூற.

"விடுடா இந்த மாதிரி ஜென்மம் எல்லாம் இருக்கறதவிட இல்லாம போறமே நல்லது..." என்றவனிடம் "டேய்...வாய மூடுடா... அந்த புள்ளைக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நாளைக்கு உன்னத்தான் ஜெயில்ல போடுவாங்க.." என கூறியவன் அவள் சென்ற திசையில் ஓட அதுவரை அவன் வருகிறானா இல்லையா என பார்த்துக் கொண்டு மெதுவாக ஓடியவள் இப்போது அவனது நண்பன் வருகிறான் என தெரிந்ததும் வேகமாக ஓடினாள்.

வாசுவும் ஒருநிமிடம் கண்ணை மூடித்திறந்தவன் வெளியேறி கிணறு இருக்கும் பக்கமாக ஓட அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கும் அதிர்ச்சியாகி அவர்கள் பின்னால் ஓடினர்.

எப்படியும் காப்பாற்றி விடுவான் என்ற தைரியத்தில் கிணற்றில் குதித்தாள் மகிழா.

அதற்குள் விஷயம் ஊரெல்லாம் பரவி இருக்க ஒவ்வொருவராக வாசுவின் பண்ணை வீட்டிற்கு படை எடுக்க ஆரம்பித்தனர்.

அவன் நண்பனை தாண்டி ஓடியவனும் கிணற்றில் விழுந்தவளை காப்பாற்றி தூக்கிக் கொண்டு மேலே வர அங்கு தர்மனும் வந்து சேர்ந்தார்.

அவனை பார்த்ததும் அவர் கண்களில் அனல் பறந்தது.

ஊரே விஷயம் பரவி இருக்க அருவிக்கு மட்டும் தெரியாதா என்ன வேலுவும் சுசிலாவும் அருவியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் வரவும் வாசு அவளை மேலே தூக்கிக்கொண்டு வரவும் சரியாக இருக்க.

அருவிக்கும் சுசிலாவிற்கும்  அவளது கயமைத்தனம் தெரியாமல் தங்கள் உயிர்த்தோழி உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள் என கதறிக் கொண்டு ஓடி வந்தனர்.

மகிழாவிற்கு தேவையான முதலுதவிகள் செய்யப்பட்டு அவளை வாசுவின் கட்டிலிலேயே படுக்க வைத்து இருந்தனர்.

அதற்குள் பாலனும் அவனது அன்னையும் வந்து வயிற்றில் அடித்துக் கொண்டு அழ தர்மன் அவர்களை அமைதிபடுத்திவிட்டு அவள் கிணற்றில் குதித்ததற்கான காரணத்தை கேட்க.

அவளோ அங்கு ஈரத்தலையோடு கோபத்தோடு நின்றிருந்த வாசுவை பார்த்தாள்.

தர்மனுக்கு தூக்கிவாரிப்போட "சொல்லும்மா மகிழா.. என்ன ஆச்சு... ஆமா.. நீ இங்க என்ன பன்ற..?" என கேட்க.

"அம்மா..." என கதறியபடி அவள் அன்னையின் தோழில் சாய்ந்தவள் தாயிடம் தான் கெட்டுப் போய்விட்டதாக கூற அங்கு நிசப்தமோ நிசப்தம்.

அவளது அன்னையோ அவளை கன்னம் கன்னமாக அறைந்து "யாருடி காரணம்...?" என கேட்க.

ஒருமுறை கூட்டத்தை சுற்றி தன் பார்வையை பதித்தவளின் கண்களில் பட்டனர் அருவியும் சுசிலாவும், கண்களில் வன்மத்தோடு அவர்களை பார்த்தவள் அங்கு நிற்கும் வாசுவை நோக்கி கைக்காட்ட அங்கு இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியோ அதிர்ச்சி.

யாராலும் இதை நம்ப முடியவில்லை.

காரணம் அந்த ஊரில் பெரிய வீட்டு பையன் வாசுதேவன் என்பதை விட குணத்தில் அவன் தங்கம் என்றே எல்லோரும் நம்பி இருந்தனர்.

அவன் இந்த மாதிரியான ஒரு ஈன செயலில் ஈடுபட்டு இருப்பான் என கனவிலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒருவன் மீது இப்படி அபாண்டமாக பழி விழ அனைவரும் அதிர்ச்சியாகினர்.

அருவிக்கும் சுசிலாவிற்கும் தங்கள் காதுகளையே நம்ப முடியவில்லை.

அருவியாலும் இதை நம்பமுடியவில்லை.

"என்னடி சொல்ற...?" என அவள் தாய் கேட்க.

"ஆமாம்மா..." என்றவள் மேலும் அழ இப்போது தர்மன் வாசுவின் முன் வந்து நின்றார்.

அவனோ அவரை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தடுமாற அவனது தடுமாற்றம் அவருக்கு பயத்தை தோற்றுவிக்க.

"அந்த பொண்ணு சொல்றது உண்மையா...?" என தர்மன் கேட்க.

"அப்பா அவ..." என அவன் ஏதோ கூற வருமுன் தன் அன்னையிடம் இருந்து விலகி வந்தவள் "ஐயா... நான் சொல்றத நம்பலன்னா... இதோ இவன் அவரு கூட்டாளிதான அவன்கிட்டயே கேளுங்க.." என்க.

அவரும் "உண்மைய சொல்லுடா..." என்க.

"ஐயா... அது வந்து... நான் வாசுவ கூப்ட வந்தேன்... அப்ப  இவங்க ரெண்டு பேரும் தோப்பு வீட்டுக்குள்ள.. துணி இல்லாம..."அவன் கூற வருவதற்குள் போதும் என கைகாட்டியவர் வாசுவின் அருகில் வந்து அவனை ஓங்கி அறைய "தர்மா...." என்ற குரலில் அதிர்ந்து நின்றார் அவர்...



Leave a comment


Comments


Related Post