இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 6 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 06-04-2024

Total Views: 22886

பாவை - 6

அன்று தீப்தி வழக்கம் போல் தன் கல்லூரிக்கு வர, இன்முகத்தோடு வரவேற்றது என்னவோ தோழிகள் தான்.

“ஹே ! தீப்தி ” சந்தோஷமாக, ஏதோ பல மாதம் காணாத தோழியைக் கண்டது போல் ஆராவாரத்தோடு கத்தவே,

“என்னடி, என்னாச்சு உங்களுக்கு ? ஏன் இவ்வளோ சந்தோஷமா இருக்கீங்க ? எதுவும் குட் நியூஸ் இருக்கா என்ன ?” கேட்டவாறு தன் வகுப்பில் வந்து அமர்ந்தாள்.

அவளின் அருகில் அமர்ந்த மற்ற தோழிகளும், “ஆமாடி, இன்னைக்கு மகிழன் சார் பர்த்டே “ என்க,

“உண்மையாவா ? உங்களுக்கு எப்படி தெரியும் ?” 

“அவரோட, பேஸ்புக், இன்ஸ்டா பார்த்து பசங்க சொன்னாங்க “

“என்ன பண்ணலாம்ன்னு சொல்லுற ? கிளாஸ் எடுக்க வரும் போது விஷ் பண்ணலாம். அதை தவிர நம்மளால என்னடி பண்ண முடியும் “

“எல்லாரும் சேர்ந்து பிளான் போட்டிருக்கோம். கேக் வாங்கலாம்ன்னு “

“அதெல்லாம் அந்த காலம்டி “

“எந்த காலமா இருந்தா என்ன ? எல்லாருமே அவரோட டீச்சிங்க்கு மட்டும் அடிமை இல்லை. அழகுக்கும் தான். எப்படியாவாது இம்ப்ரெஸ் பண்ணனும். தனியா எல்லாம் பண்ண முடியாது. அதான் எல்லாரும் சேர்ந்து ஒரு பிரசென்ட் வாங்கிக் கொடுத்து கேக் வெட்டலாம்ன்னு நினைக்கிறோம் “

“அது சரி தான். அதுக்கு நான் என்ன பண்ண ?”

“வெரி சிம்பிள் தீப்தி. உன் கிட்ட இருக்குற கொஞ்சம் பணத்தையும், நீ நம்ம டிபார்மெண்ட் லீடரா இருக்குறதுனால அனுமதியும் கொடுத்தா போதும் “ என்க,

“வாட் நானா ? என்னால முடியாது. பணம் வேணா எவ்வளோனாலும் கொடுக்குறேன். அனுமதி மட்டும் என்னால முடியாது “

“ஹே ! இது நம்மளோட பைனல் இயர். இதை விட்டா வேற வாய்ப்புமில்லை “ கெஞ்சிக் கேட்க,

“எனக்கு முதல ஹெச்ஒடி அனுமதி தரணுமேடி “

“போய் கேட்க தான் நாங்க எல்லாரும் சொல்லுறோம் “ என்க, முதலில் மறுத்தவள் பின் அனைவரின் தொல்லை தாங்க முடியாது துறைத்தலைவர் அலுவலகம் நோக்கிச் சென்றாள்.

உடன் வந்த தோழிகள் வெளியே நின்றுக் கொள்ள, இன்னும் மகிழன் வரவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டனர்.

“சார் உள்ளே வரலாமா ?” அனுமதிக் கேட்க,

“வா தீப்தி. என்ன விசியம்மா ?”

“சார் அது வந்து இன்னைக்கு மகிழன் சார் பிறந்தநாள். பைனல் இயர் இஸ்டூடெண்ஸ் அவர் மேல இருக்குற மரியாதைக்காக கொண்டாடணும் நினைக்கிறாங்க “

“ஓகே, நோ பிராபளம். மத்தவங்களுக்கு தொந்தரவு இருக்க கூடாது. என்ன பிளான் ?” என்க, பரிசு, கேக் இரண்டையும் கூறினர்.

“இது தானே இதுக்கு நீ வந்து கேட்கணும்ன்னு அவசியமேயில்லை “ என்றதும், நன்றி கூறி வெளியே வந்தாள்.

மதியத்திற்கு மேல் தான் மகிழனின் வகுப்பு இருக்கவே, அனைவரிடமும் பணத்தை வாங்கி பரிசுப்பொருளும், கேக் வாங்கிக் கொண்டு வந்தனர். உணவு நேரத்தில் டெக்கரேஷன் வேலையும் செய்து முடித்தனர்.

நேரம் செல்ல மகிழன் வரும் நேரம் வந்து விட்டது. ஒருவன் மெல்ல எட்டிப் பார்க்க, அலுவலகத்தில் இருந்து கையில் ஒரு புக்கோடு மகிழன் வந்தான்.

“ஹே ! சார் வர்றாரு “ என்றவனோ தயாராக இருக்க கூறி அவனின் இடத்தில் சென்று அமர்ந்து விட, அந்த நீண்ட வரண்டாவில் நடந்து வந்தான்.

அவனை விட மூத்தவர்கள் அவன் வணக்கம் வைக்க, சிறியவர்கள் அவனுக்கு வைக்க  புன்னகை முகமாக வருகை கொடுத்தான்.

கிளாஸ் ரூமிற்குள் காலடி எடுத்து வைக்க, அவனின் மீது கலர் தாள்கள் வந்து பூவினைப் போல் விழுந்தது. அதன் பின்னே நிமிர்ந்து அனைத்தையும் கண்டான்.

“ஹாப்பி பர்த்டே சார் “ அனைவரும் ஒரே சேரக் கூறவே, கடமைக்காக மட்டுமே இளநகை பூத்தான்.

 “சார் வாங்க “ இளைஞ்சர்கள் அழைத்து வந்து டேபிளில் முன் நிறுத்த, அவனின் புகைப்படம் போட்டோ கேக் தான் காட்சிக் கொடுத்தது.

 "வெட்டுங்க சார் “ என்க,

“இதெல்லாம் எதுக்கு ?”

“ரெண்டு வருஷமா டீச்சிங் பண்ணுற உங்களுக்கு நாங்க பண்ணக் கூடாதா  சார் “ என்றதும், அவர்களுக்காக மட்டுமே ஏற்றுக் கொண்டானே தவிர, இந்த பிறந்தநாளில் அவனுக்கு சுத்தமாக விருப்பமில்லை.

கேக்கினை வெட்டி அருகிலிருந்த மாணவன் கரங்களில் கொடுக்க அவனும் வாங்கிக் கொண்டான். பின் மங்கையர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக வர, தீப்தியின் கையில் பரிசுப் பொருள் இருந்தது.

“சார், ஏதோ எங்களால முடிஞ்சது. ஹாப்பி பர்த்டே “ என்றவளோ குறுநகை பூத்து நீட்ட, வாங்கிக் கொண்டான்.

“எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. இனிமே இப்படி பண்ண வேண்டாம் “ வார்த்தை என்னவோ நேராக தீப்தியிடம் தான் இருந்தது.

‘அவளுக்கோ ஏமாற்றம். அனைவரும் சேர்ந்துச் செய்ய தன்னிடம் மட்டும் ஏன் கூறுகிறான் ?’ சரியெனக் கூறி தலையசைத்து விட்டாள்.

சிறிது நேரம் கொண்டாட்டம் முடிந்ததும் பாடத்தை எடுத்து மகிழன் சென்று விட, “போதுமா உங்களுக்கு ? நீங்க பண்ணுனதுக்கு எப்போ பார்த்தாலும் என்னை தான் திட்டுனாரு ?” என்க,

“அப்படி எதுவும் அவர் சொல்லலையே. நீயா எதுவும் நினைச்சிக்காதே “ என்கவே, தீப்திக்கு பெரும் குழப்பம்.

நாட்கள் கடக்க நந்தன், அஞ்சனா இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் வெளியேச் சென்று வந்தனர். 

அன்று ஒரு நாள் வீட்டுக்குள் புதிதாக ஒரு பெண்மணி வந்து, “அக்கா ! அம்மா ! யாராவது இருக்காங்களா வீட்டுல ?” என்கவே, கவிநயா தான் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள். 

“யார் வேணும் உங்களுக்கு ?” என்க,

“அஞ்சனாம்மா வரச் சொன்னாங்க “ 

“ஒ அப்படியா, இருங்க “ எனக் கூறி மாடியைப் பார்த்து அஞ்சனாவை அழைக்க, சற்று நேரத்தில் அவளும் கீழே இறங்கி வந்தாள்.

“உன்னைப் பார்க்க தான் வந்திருக்காங்க “ எனக் கூறிச் செல்ல, சத்தம் கேட்டு மாமியாரும் வெளியே வந்தார்.

“யார் நீங்க ?”

“வீட்டு வேலைக்கு ஆள் வேணும்ன்னு சொன்னாங்க “

“ஆமா, ஆமா. நான் தான் சொன்னேன். இந்த வீட்டுக்கு தான் “ என்கவே,

“ஏய் ! என்ன நடக்குது இங்கே ? யாரைக் கேட்டு வேலைக்கு ஆளை கூட்டிட்டு வந்திருக்கே ?” மனோகரி முன்னே வந்துக் கேட்க,

“எனக்கு வேலைக்காரி தேவைப்படுது அத்தை. நான் சம்பளம் கொடுத்துப்பேன். இதுக்கு நான் யாரையும் கேட்கணும்ன்னு அவசியமில்லையே ?” 

மூக்கு உடைந்ததை போல் நினைத்த மாமியாரும், “இதுக்கு தான் நான் சொல்லுற பொண்ணை கட்டச் சொன்னேன் கேட்டானா அவன் “ புலம்பி திட்ட ஆரம்பித்தார்.

“நாளையில இருந்து வேலைக்கு வாங்க. இப்போ நீங்க போகலாம். இந்தாக அட்வான்ஸ் “ எனக் கூறி சிறிது பணத்தை கொடுக்க வாங்கி கொண்டுச் சென்றார்.

“உனக்கு வேலைக்காரி வைக்கிற அளவுக்கு அப்படி என்னடி குறைச்சல் இந்த வீட்டுல ? நந்தன் ஏலே ! நந்தன் “ மாடியை பார்த்து அழைக்க, கீழே இறங்கி வந்தான்.

“என்னம்மா ?”

“உன் பொண்டாட்டி பண்ணுறது சரியில்லையே “ என்கவே, மனைவியை பார்த்தான்.

“என்ன பண்ணுன நீ ?”

“வீட்டுக்கு வேலைக்காரி புதுசா கொண்டு வந்தேன். அதுக்கு கத்துறாங்க. நானே சம்பளம் கொடுக்கேன்னு சொல்லிட்டேன். காலையில நான் தினமும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். மூச்சை இழுத்து அக்கா வேலைப் பார்க்குறாங்க. அதுக்கு தான் காலையில மட்டும் வேலைக்காரி வரச் சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு ?“

“அம்மா, இதுனால என்னம்மா ?”

“என்னால இதை ஏத்துக்க முடியாது. புதுசா வேலைக்காரி எல்லாம் வரக் கூடாது ” 

“வந்தா என்ன சொல்லுங்க அத்தை ?” என்க,

“மாமியாருங்குற மாரியாதை இருக்கா, பாருடா உன் முன்னாடியே என்ன பேச்சு பேசுறான்னு. அப்பன் ஆத்தா யாருன்னே தெரியாம நல்லது, கெட்டது, சொந்தபந்தம் இல்லாம ஆசிரமத்துல வளர்ந்தவளுக்கு எங்க மரியாதை தெரியப் போகுது “ ஆவேசமோடு கூறவே, 

“அம்மா “ கத்தினான் நந்தன்.

“என்னடா, பொண்டாட்டியை சொன்னதும் பத்திக்கிட்டு வருதோ ?” என்ற நொடி,

“நிறுத்துங்க, என்ன இது சந்தைக்காடு மாதிரி. படிச்சி அரசாங்க உத்தியோகத்துல இருக்குறவ பேசுறவ பேச்சா இது. மனோகரி என்ன இருந்தாலும் வீட்டுக்கு வந்த மருமகளை இப்படி பேசுறது தப்பு. இந்த பொண்ணு இப்போ என்ன சொல்லிட்டான்னு இந்த குதி குதிக்கிற ? நமக்கு தோணாத விசியம் அந்த பிள்ளைக்கு தோணிருக்கு. நல்லது தானே பண்ணுறா ? மூத்த மருமக பாவம் பிள்ளையை வச்சிக்கிட்டு எவ்வளோ வேலையை தான் பார்க்கும் சொல்லு ? முதல்லே நீ ரூமுக்கு போ “ மனைவியை திட்டி அறைக்குள் விரட்டி விட்டவர் மருமகளைக் கண்டார்.

“அவ சொன்ன எதுவும் பெரிசா நினைக்காதே ? நாளைக்கு வரட்டும் போம்மா “ என்றதும், சரியென தலையசைத்து மாடியேறினாள்.

அறைக்கு வந்து படுக்கையில் அமர, பின்னோடு வந்த நந்தனும், “நீ பண்ணினது நல்லது தான் ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லிருக்கலாம்ல “ என்க,

“அப்போ எனக்கு இங்க எந்த உரிமையும் இல்லையா ? தப்பு எதுவும் பண்ணலையேங்க “ விழிகளை சுருக்கிக் கொண்டு கூறவே, தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“அம்மா சொன்னதுக்கு சாரி “ என்கவே,

“விடுங்க அது ஒன்னும் என்னை பெரிசா பாதிக்கலை. இந்த வீட்டுல எதுவுமே சரியில்லை. நான் மாத்தணும் நினைக்கலை. அதுவே மாறுனா சரி “ என்றவளோ அதற்கு மேல் அத்தோடு நிறுத்தி விட்டாள்.

மறுநாள் கூறியதுப் போல் வேலைக்காரி வர, அஞ்சனாவிற்கு உதவியாக இருந்தது. ஆறு மணிக்கு வந்தால் ஒன்பது மணிக்கு சென்று விடுவாள். அது வரைக்கும் அதிகமாக வேலை இருக்கும் என்பதால் போதுமான நேரமாக தான் இருந்தது.

காலையில் சமையலறைக்குள் வந்தால் என்னென்ன சமைக்க வேண்டுமென கூறிச் சென்று விடுவாள். மகளிடம் அதிக நேரம் கிடைப்பது போன்று உணர்ந்தாள். 

 நாட்கள் கடக்க அஞ்சனாவிடம், “ரொம்ப தேங்க்ஸ் அஞ்சனா. எனக்காக தானே இதெல்லாம் பண்ணுனே ?” என்க,

“பாப்பா கூட நீங்க அதிகமாக டைம் இஸ்பென்ட் பண்ணுங்க அதுவே போதும். அவ உங்களோட அன்பை மட்டும் தான் எதிர்பார்க்குறா. பார்த்துக்கோங்க “ எனக் கூறிச் சென்று விட்டாள்.

வழக்கம் போல் இரவு நேரம் வீட்டுக்கு வந்த நிதின், கையில் கொண்டு வந்த ஒரு பையை கவிநயாவிடம் கொடுத்தான்.

“என்னங்க இது பார்த்தா பணம் மாதிரி இருக்கு “ அதிர்ந்துப் போய்க் கேட்க,

“இதை எங்கையாவது பத்திரமா வை. யாருக்கும் தெரியக் கூடாது. நான் கேட்டும் போது கொண்டு வரணும். உன் பொறுப்பு. ஏதாவது நடந்தது பார்த்துக்கோ “ மிரட்டிக் கொண்டு கொடுக்கவே, வாங்கியவளோ தங்களின் அறையில் வைக்கச் சென்றாள்.

அப்போது கைபேசியில் பேசியவாறு வெளியே வந்த அஞ்சனா கவியைக் காண, சட்டென தன் பின்னே அதனை மறைத்துக் கொண்டாள்.

குறுநகை ஒன்றை உதிர்த்து விட்டு அறைக்குள் நுழைந்து விட, எதையோ மறைத்தார்கள் என்பதை கண்டுக் கொண்டாள் அஞ்சனா.

மறுபடியும் அறையை விட்டு வெளியே வர, “தூங்கலையாக்கா ?” என்க,

“கீழே சின்மயி அப்பா இருக்காரு. இன்னும் சாப்பிடலை. அதுக்கு அப்பறம் தான் தூங்கணும். நான் வரேன் “ எனக் கூறி கீழேச் சென்று விட, குரலில் இருந்த பதட்டம் எதையோ உணர்த்தியது.

நேரம் கிடைக்கும் போது பார்த்துக் கொள்ளாமல் என நினைத்தவள் பேசி முடித்து மறுபடியும் தன்னறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

எப்போதும் போல் நாட்கள் செல்ல, நந்தனோ  அன்று விரைவாக அலுவலகம் சென்று விட, தினமும் கிளம்பும் நேரம் கிளம்பி கீழே வந்தாள் அஞ்சனா.

காலை உணவு தயாராக இருக்க வேலைக்காரி பரிமாறவே, உண்டு முடிக்க கவி வந்து மதிய உணவு நந்தனுக்கும் சேர்த்து தரவே வாங்கிக் கொண்டாள்.

வீட்டை விட்டு வெளியே வர. இஸ்கூட்டியை எடுக்கும் நொடி தீப்தி அவளின் பைக் ஸ்டார்ட் செய்ய முயற்சிச் செய்வதை பார்த்தாள்.

“என்னாச்சு தீப்தி ?”

“தெரியல அண்ணி. ஸ்டார்ட் ஆக மாட்டிங்குது. அம்மா, அப்பா வேற போய்ட்டாங்க. என்ன பண்ண தெரியல ? சின்ன அண்ணன் இருக்காங்களா அண்ணி “

“அவருமே காலையில போய்ட்டாரு தீப்தி. எதுக்கு ?”

“ட்ராப் பண்ண சொல்ல தான் “

“சரி வா ட்ராப் பண்ணுறேன். ஈவினிங் மேனேஜ் பண்ணிப்பையா ?” என்க, சரியென்றாள்.

பின் தீப்தியை அழைத்துக் கொண்டு அவளின் கல்லூரி நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

“சாரி அண்ணி. என்னால உங்களுக்கு வேற கஷ்டம். ஆபிஸ்க்கு லேட்டாகும்ல “

“கொஞ்சம் நேரம் தானே அதுனால ஒன்னுமில்லை. படிப்பெல்லாம் எப்படி போகுது ?”

“நல்லா தான் போகுது அண்ணி “

“பைனல் இயர் தானே ?”

“ஆமா அண்ணி “

“அடுத்த என்ன பண்ணுறதா ஐடியா இருக்கு “

“படிப்புக்கு ஏத்த மாதிரி ஜாப் இருந்தா பார்க்கணும். இல்லையா மேல தான் ஏதாவது படிக்கணும் “

“இப்படி ரெண்டு முடிவா இருக்காதே தீப்தி. அப்பறம் உனக்கு தான் குழப்பம். சீக்கிரம் ஒரு முடிவு எடு. வர்ற சண்டே எங்கையாவது ஷாப்பிங் போய்ட்டு வரலாமா ? படிப்பு, வீடுன்னு இருந்தா உனக்கு போரிங்கா இருக்கும்ல “

“சரியா சொன்னேங்க அண்ணி. நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே ? இந்த காலத்து பொண்ணுங்க எப்படி சுதந்திரமா இருக்காங்க. ஆனா என்ன பாருங்க எப்படி இருக்கேன்னு ? வீட்டுல ரொம்ப இஸ்டிரிக்கா இருக்காங்க “

“உன் நல்லதுக்கு தான் அப்படி பண்ணுறாங்க தீப்தி. இதை நீ பெரிசா எடுத்துக்க கூடாது சரியா. பாதுகாப்பு ரொம்ப முக்கியம் தானே ?”

“ஆமா அண்ணி. சரி வீக்கெண்ட் போகலாம். கவி அண்ணியை கூப்பிட்டு பார்ப்போம். அவங்க வராங்கன்னா சேர்ந்தே போகலாம் “ என்றதும்,  கல்லூரி வந்துச் சேர்ந்தது.

“ஓகே, வீட்டுல பார்க்கலாம் “ என்க,

சரியெனக் கூறி தன் பேக்கை எடுத்துக் கொண்டு தீப்தி இறங்க, சரியாக அவர்களை நோக்கி தன் பைக்கில் வந்து கொண்டிருந்தான் மகிழன்.

பெண்கள் இருவரும் காண்பதற்குள் மகிழனின் பார்வை இவர்களை கண்டு விட, அடுத்தநொடி சடன் பிரேக் தான். சத்தம் கேட்டு அஞ்சனா நிமிர மகிழனை விட பெரும் அதிர்ச்சியில் ஒரு நொடி உறைந்துப் போய் நின்றாள்.

அடுத்தநொடி, “சரி தீப்தி, நான் வரேன் “ எனக் கூறி இஸ்கூட்டியை திருப்பிக் கொண்டு சென்று விட,

“குட் மார்னிங் சார் “ என்றவாறு அவளும் கல்லூரிக்குள் நுழைந்தாள்.

மகிழன் கண்டதை அவனாலே நம்ப முடியவில்லை. அதிர்ச்சியிலும் அதிர்ச்சி பேரதிர்ச்சி. இனி பார்க்கவே முடியாது என்று நினைத்தவளை எப்படி பார்க்க முடிஞ்சது ? எப்படி இது சாத்தியமாகும். தான் கண்டது உண்மை தானா அல்லது பிரம்மையா ?

விழிகளை விட்டு அஞ்சனா மறைந்திருக்க, உள்ளே நடந்துச் செல்லும் தீப்தியை கண்டவன் இவளிடம் பேசியாக ஆக வேண்டுமென முடிவெடுத்தான்.

தொடரும் ...


தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



Leave a comment


Comments


Related Post