இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...24 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 06-04-2024

Total Views: 33673

மாறி மாறி திரும்பி முதுகை பார்த்துக் கொள்வதும் தங்களுக்குள் புலம்புவதும் செல்லமாய் சிரித்து கொள்வதும் கள்ளத்தனமாய் ரசித்துக் கொள்வதுமாய் இடைவெளி விட்டு படுத்திருந்தாலும் ஒரே கட்டிலில் தனிமையாக பூட்டிய அறைக்குள் கணவன் மனைவி என்ற உரிமையுடன் படுத்திருக்கும் முதல் நிகழ்வு என்பதால் தரணி பூச்செண்டு இருவருக்குமே அவ்வளவு எளிதில் உறக்கம் வரவில்லை.


ஒரு கட்டத்தில் தன்னை மறந்து உறங்கி இருந்த பூச்செண்டு அவன்புறம் திரும்பி படுத்திருக்க மெல்ல கண்களை உறக்கம் சுழற்றியதால் தானும் எதார்த்தமாய் அவள்புறம் திரும்பிப் படுத்தவன் ஆங்காங்கே விலகிய புடவையில் அவன் கட்டுப்பாடுகளை சோதித்துப் பார்க்கும் விஷயங்கள் கண்ணுக்கு புலப்பட “ஐயோ சாமி… நான் இல்ல…” என்றபடி படக்கென கண்களை மூடி கவிழ்ந்து படுத்தவன் அப்படியே உறங்கியும் போனான்.


நெடுநேரம் உறக்கம் இல்லாததால் இருவருமே விடிந்தும் வெகுநேரம் உறங்கிக் கொண்டிருந்தனர். காலை உணவு தயாரிக்கும் வேலையில் செண்பகமும் மல்லிகாவும் இறங்கி இருக்க அனுசுயாவும் உடன் உதவிக் கொண்டிருந்தார்.


“தரணிக்கு போன் பண்ணினேன்… எடுக்கவே இல்ல… ஆபீஸ்ல அவசரமான வேலைன்னு சொல்லிட்டு போனான்... இன்னும் காணோமே…” அனுசுயாவின் புலம்பலுக்கு பதில் சொல்ல முடியாது மல்லிகாவும் செண்பகமும் சங்கடமாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


பளிச்சென ஜன்னல் வழியே பரவிய வெளிச்சத்தில் முதலில் கண் விழித்தவள் பூச்செண்டுதான். கண்களை பிரித்தவுடன் மிக அருகில் கணவனின் எழில் முகம்… கண்களை அழுத்தமாய் மூடி இருந்ததில் அயர்ந்த உறக்கம் என்று தெரிந்தது. இதழ்களில் மட்டும் குறுநகை… உறங்கும்போதும் புன்னகைக்க முடியுமா…? கண்களை படபடத்து ஆச்சரியமாய் பார்த்தாள். அடர்ந்த மீசைக்கு கீழே தடித்த உதடுகள்… புகைக்கும் வாசனை அறியாத அதரங்கள் என்பது அந்த மென்மையில் தெரிந்தது. வருடிப் பார்க்க சுட்டுவிரல் சண்டித்தனம் செய்தது… நறுக்கென்று கடித்து தண்டனை கொடுத்தாள். அழகாய் செதுக்கப்பட்ட தாடி வைத்து வைத்துக் கொள்வதுதான் இன்றைய இளைஞர்களின் ட்ரெண்ட். ஆனால் இவன்…? கன்னம் எப்பொழுதும் மழுமழுவென பளபளப்பாய் இருக்க வேண்டும்… தினமும் சவரம் செய்து கொள்ளும் பழக்கம் கொண்டவன். அடர்ந்து மீசையை அழகாய் திருத்தம் செய்து வைத்திருப்பான்… பிடித்து இழுத்தால் என்ன…? மூக்கை சுழித்து சிரித்தாள்.


தினமும் வியர்க்க விறுவிறுக்க பால்கனியில் உடற்பயிற்சி செய்து முடித்து கொட்டும் வியர்வையை டவலால் துடைத்தபடியே வெளியே வருபவனை ஓரக்கண்ணால் பார்த்திருக்கிறாளே. செதுக்கி வைத்த கிரேக்க சிற்பம்போல் இருக்கும் இறுகிய அங்கத்தினையும் கண்களால் அளந்தாள். இத்தனை ரசனையாய் என்று அவனை பார்த்திருக்கிறாள்…? இத்தனை நெருக்கத்தில் அவனை அடி முதல் நுனிவரை அளந்து பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைத்ததில்லையே. அன்று சண்டை போட்டபடியே முட்டி மோதி நின்றபோதுகூட அவனது ஊடுருவிய விழிப் பாய்ச்சலில் அவனை அங்குலம் அங்குலமாக ரசிக்க முடியவில்லை. நெற்றி தொடங்கி கால் நகம்வரை படுத்த நிலையில் கன்னத்தில் கை வைத்தபடி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள் அம்மணி.


“தூங்கும் போது யாரையும் ரசிச்சு பார்க்கக் கூடாது…’ பாட்டியின் குரல் காதுக்குள் கேட்டது.


‘அடப்போ கெழவி… முழிச்சுக்கிட்டு இருந்தா இந்த பனைமரத்தை இப்படி ரசிக்க முடியுமா…? கண்ணால ஆயிரம் கதை பேசும்… எனக்கும் வெக்க வெக்கமா வரும்… இனிமே தூங்கும் போது ரசிக்க மாட்டேன்… இன்னிக்கு ஒரு நாள் மட்டும்…’ தனக்குத்தானே சமாதானம் கூறி அவனை ஆழ்ந்து ரசித்து இதயத்திற்குள் நிரப்பிக் கொண்டாள்.


‘அழகு மாமு… உன்னை கொஞ்சம் கொஞ்சமா எனக்கு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு… நிறைய ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்… எப்போ நீ எனக்குள்ள இருக்கிறதை முழுசா உணர்றேனோ அப்போ நான் ஐ லவ் யூ சொல்லுவேன்… நீயும்தானே சொன்ன… முகில் மீரா மாதிரி காதலோடதான் வாழ்க்கை ஆரம்பிக்கணும்னு… உண்மைதான்… நம்மளோட வாழ்க்கையும் அப்படித்தான் ஆரம்பிக்கணும்… எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடு மாமு… இன்னும் நான் உன்னை நிறைய புரிஞ்சுக்கணும்…’


சிந்தனையைக் கலைத்து நேரம் பார்த்தாள். எட்டு மணியை கடந்து இருந்தது… ஐயோ ரொம்ப நேரம் ஆச்சு… பனைமரம் நேரமா எந்திரிச்சு எக்ஸர்சைஸ் பண்ணும்… அதுவும் இப்படி அசந்து தூங்குது… பாவம் தூங்கட்டும்… கைகளை மார்பிற்கு குறுக்கே இறுக்கி கட்டிக் கொண்டு படுத்திருப்பவனை பார்க்கும்போது சிரிப்பு வந்தது.


‘கை மேலே பட்டுடக் கூடாதுன்னு ரொம்ப கண்ட்ரோலா தூங்குறாராம்… ரொம்ப நல்லவரு பாரு… அப்படியே மண்டைல நங்குன்னு ஒரு முட்டு முட்டினா எப்படி இருக்கும்…’ பல்லை கடித்து ரசனையாய் சிரித்து வேகமாய் எழுந்து குளியல் அறைக்குள் ஓடினாள்.


குளித்து முடித்து அங்கேயே புடவை கட்டிக்கொள்ள ஏதுவாக இல்லாததால் மெல்ல கதவை திறந்து எட்டிப் பார்த்தாள். அவன் அதே நிலையில் உறங்கிக் கொண்டிருந்தான். நல்லா தூங்குறார்… அப்படியே முதுகுக்கு பின்னாடி நின்னு சத்தம் இல்லாமல் சட்டுன்னு புடவை கட்டிடலாம்… உள்பாவாடை ரவிக்கையுடன் அடி மேல் அடி வைத்து வெளியே வந்தவள் அவன் முதுகை அவசரமாய் ஆராய்ந்து மஞ்சள் நிற ஷிஃபான் புடவையை மடிப்பு எடுத்து கட்டத் தொடங்கினாள்.


தெளிவாக புடவை கட்டி முடித்து ஈரக் கூந்தலை உலர்த்துவதற்காக அவள் பால்கனிக்கு சென்றுவிட “ஷப்பா…” என்றபடி இழுத்துப் பிடித்திருந்த மூச்சை அப்போதுதான் வெளியேற்றினான் கள்வன் ஒருவன். என்ன செய்வது…? அவன் உறங்குவதாக எண்ணி முதுகை மட்டும் ஆராய்ந்தவள் அவனுக்கு முன்னே இருந்த ஆளுயர கண்ணாடியை கவனிக்காது போனாளே‌.. காலையில் கண்விழிக்கும் போதே முதுகுக்கு பின்னே திவ்ய தரிசனம்… தேவியின் தரிசனம்… மூச்சடைத்துப் போனது… கண்களை மூடச் சொல்லி மூளை கட்டளையிட்டாலும் மனம் கேட்க வேண்டுமே.


‘ஏய்… வேலையை பார்த்துட்டு போ… எப்ப பாத்தாலும் குச்சியை கையில வச்சுக்கிட்டு மிரட்டிட்டே திரிய வேண்டியது… என் பொண்டாட்டிதானே… எனக்கு இல்லாத உரிமையா…? நான் அப்படித்தான் பார்ப்பேன்…’ முறுக்கிக் கொண்ட மனதிடம் மூளையால் வாதிட முடியவில்லை. உதடு குவித்து மூச்சு விட்டபடி எழுந்து அமர்ந்தான். சோதனை மேல் சோதனை… போதுமடா சாமி… பாடலை விசில் அடித்தபடியே தானும் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.


இருவரும் தெளிவாய் கிளம்பி கதவை திறக்கும்போது மொத்த குடும்பமும் கூடத்தில் அமர்ந்திருந்தது. முகில் மீராவும் கூட வந்திருந்தனர். பூச்செண்டு முன்னே வர அவளை பின்தொடர்ந்து தன் கைச்சட்டையை மடித்தபடியே தரணியும் வர ஆஆஆ என்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது மொத்த கூட்டமும். சாதாரணமாய் வெளியே வந்து நின்றவர்கள் ஊசியாய் துலளைத்த அனைவரது பார்வையிலும் உடல் முழுக்க குறுகுறுவென யாரோ கிச்சகிச்சு மூட்டியதைப் போல் கூச்சமாய் கால்கள் பின்ன தரையோடு வேரூன்றி நின்றனர்.


“தரணி… நீ எப்போடா வந்த…? எத்தனை தடவை ஃபோன் பண்ணினேன்… எடுக்கவே இல்ல… இப்ப கூட கூப்பிட்டேனேடா…” ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாய் அனுசுயா கூற காரில் படுத்திருக்கும் போதே போனை சைலன்ட் மோடில் போட்டது நினைவு வந்து வேகமாய் எடுத்து நார்மல் மோடிற்கு மாற்றினான்.


“அம்மா… நான்…” அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க அவனை நெருங்கி வந்த முகிலன் “ஒரு வழியா சக்சஸ் பண்ணிட்ட போல… எனக்கு ஹோட்டல்ல அரேஞ்ச் பண்ணிட்டு நீ அரேஞ்ச்மெண்ட்ஸ் இல்லாம ரொம்ப நல்ல பையனா அமைதியா எல்லா வேலையும் முடிச்சிட்ட போல…” காதுக்குள் மெல்ல முணுமுணுக்க 


“டேய்ய்… பன்னாட…” எரிச்சலுடன் அடிக்க வந்தவனின் கையை முறுக்கிவிட்டு சிரித்தபடி முகிலன் ஓட தரணி துரத்த பெரியவர்கள் அனைவரும் சத்தமிட்டு சிரிக்கத் தொடங்கினர். பூச்செண்டுதான் இன்னும் குறுகுறுப்பு குறையாமல் சிவந்து போய் நின்றிருந்தாள்… ஒருவழியாய் இருவரையும் இழுத்து வந்து உணவு பரிமாறினர்.


“நாட்டுல நல்லதுக்கே காலமில்ல. கையை கட்டிக்கிட்டு கண்ணியமா தூங்கி எந்திரிச்சு வந்திருக்கேன்… புது பொண்ணு மாப்பிள்ளையை விட்டுட்டு நம்மளையே ஏன் எல்லாரும் இப்படி பார்க்கிறாங்க…? ரொம்ப ஷையா இருக்கு…” பூச்செண்டிற்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியபடியே உணவை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான் தரணி.


இருவரும் மனம் ஒத்து வாழ ஆரம்பித்து விட்டதாக அனைவரின் முகத்திலும் அத்தனை சந்தோஷம். எதுவும் இல்லை என்று சொல்லி அவர்களின் மகிழ்ச்சியை ஏன் கெடுப்பான் என்று இலைமறை காயாக எழும்பிய சீண்டல்களையும் அசட்டுச் சிரிப்புடன் கடந்தனர் இருவரும். இளையவர்கள் நால்வருக்கும் ஆயிரம் அறிவுரைகள் வழங்கி பெரியவர்கள் அனைவரும் மொத்தமாய் கிளம்பி இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை வரவேற்பு என்பதால் வெள்ளி இரவுக்குள் ஊர் வந்து சேர்ந்து விடும்படி ஆணை பிறப்பித்து கிளம்பியிருந்தனர். அனைவரையும் அனுப்பி வைத்து ஆசுவாசமாய் சோபாவில் விழுந்தவனை மீண்டும் சீண்டத் தொடங்கினான் முகிலன்.


“டேய் நன்னாரி… சத்தியமா எதுவுமே நடக்கலடா… படுக்க இடம் இல்லேன்னு ஒண்டிக்கறதுக்கு ஓரமா அவ ரூம்ல இடம் கொடுத்தா… அது ஒரு குத்தமாடா…?” அப்பாவியாய் கேட்டான் தரணி.


“இவ்ளோ பெரிய ஹால்ல உன் ஒருத்தனுக்கு இடம் இல்லாம போயிருச்சா… முனீஸ்வரன் கோவில்ல மூணு கெடா வெட்டி பொறந்த மூணு மாசத்துலயே எனக்கு காது குத்திட்டாங்க நண்பா… போவியா…” நம்ப மறுத்தான் முகிலன்.


ஒரு கட்டத்தில் எரிச்சலானவன் “டேய் ஆமாடா… எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சு… இப்போ அதுக்கு என்ன…? என் பொண்டாட்டிதானே… வேற யாரும் இல்லையே… கல்யாணம் முடிஞ்ச உடனே உன் பொண்டாட்டியை தனியா தூக்கிட்டு ஓடின நாறப்பயதானே நீ… எனக்கு கல்யாணமாகி ஒரு மாசம் ஆச்சு… நான் மட்டும் தனியா சன்னியாசியாவே இருக்கணுமா…” மூக்கு சிவக்க கத்தியவனை மூக்கை சுழித்து முறைத்தபடி எதிரில் நின்றிருந்தாள் அவன் சண்டிராணி.


“ஒத்துக்கிட்டான் பாத்தியா…” நக்கலாய் சிரித்தபடி தன் மனைவியை நாசூக்காய் அறைக்குள் நகர்த்திச் சென்றிருந்தான் முகிலன். 


அறைக்கதவு பட்டென சாத்தப்பட “கருமம்… இந்த கன்றாவியை எல்லாம் சகிச்சுக்கிட்டு ஒவ்வொரு நாளையும் ஓட்டணும்… பேசாம இனிமே வேலையை நைட் டூட்டிக்கு மாத்திட வேண்டியதுதான்… இல்லேன்னா வயித்தெரிச்சல்ல அல்சர் வந்து சாக வேண்டியதுதான்… ஹும்.. அவன் ராசி அப்படி… என் ராசி இப்படி…” தலையில் அடித்துக் கொண்டு தன்னைப்போல் புலம்பிக் கொண்டிருந்தவனை இடுப்பில் கை வைத்து அதே நிலையில் முறைத்துக் கொண்டிருந்தாள் பூச்செண்டு.


‘இவ ஏன் ரொம்ப நேரமா ஆங்கிள மாத்தாம அதே பொசிஷன்ல நிக்கிறா…’ குழப்பமாய் அவளை ஏறிட “மாமாகிட்ட ஏன் என்னென்னவோ சொன்னீங்க…?” பற்களை அரைத்தபடி கேட்டாள்.


“என்ன சொன்னேன்…?” தெரியாதவன் போல் கேட்டபடியே தன் அறைக்குள் நுழைய “எல்லாம் முடிஞ்சிருச்சு… அப்படி இப்படின்னு…” சுறுசுறுவென கேட்டபடியே பின் தொடர்ந்து தானும் உள்ளே நுழைந்தாள்.


“நெருப்புன்னு சொன்னா நாக்கு வெந்திடுமா…? அவனை சமாளிக்கணும்னா ஒரே வார்த்தையில ஆமான்னு முடிச்சுடணும்… பார்த்தே இல்ல… எல்லார் முன்னாடியும் என்ன ஓட்டு ஓட்டினான்னு…” இஸ்திரி போடுவதற்காக தனது சட்டைகளை எடுத்து வைத்தபடியே பேசியவனின் எதிரில் வந்து நின்றாள்.


“அதுக்காக நடக்காத ஒன்னை நடந்ததுன்னு பொய் சொல்லுவீங்களா…?” விடாது கேள்வி கேட்டவளை எரிச்சலாய் பார்த்தவன் “இப்போ என்ன…? அந்த பொய்யை வேணா உண்மையாக்கிடலாமா… உனக்கு ஓகேவா… ஹான்…” தலையாட்டி கேட்டபடி அவளை நோக்கி வேகமாய் இரண்டடி வைக்க பயந்து பின் நகர்ந்தவள் மேஜையில் இடித்துக் கொண்டு மருண்டு விழித்தாள்.


“சும்மா நசநசன்னு… கொலை குற்றவாளியை கூண்டுல நிக்க வச்சு குறுக்கு விசாரணை பண்ற மாதிரி குதிச்சு குதிச்சு கேள்வி கேட்கிற… குட்ட கத்திரிக்கா…” தாழ்ந்த குரலில் கூறினாலும் அவள் காதில் விழும்படி கூறியவன் மீண்டும் பின்னால் நகர்ந்து அலமாரியை திறந்து அயர்ன் பாக்ஸை கையில் எடுக்கும்முன் அவனது இரண்டு காதுகளும் திடீரென அடைத்துக் கொண்டன. அவன் பத்தினிதான் இரண்டு கைகளாலும் இழுத்துப் பிடித்திருந்தாள்.


“ஏய்… என்னடி பண்ற…? காதை தனியா கழட்டிடாதடி…” ஒற்றைக் கண்ணை அழுத்தமாய் மூடி சத்தமிட “முதல்ல குட்ட கத்திரிக்கா… இப்போ வாடி போடியா…?” பல்லை கடித்தபடி கூறியவள் தன் உயரத்திற்கு அவனைப் பிடித்து இழுத்தாள்‌.


“வகைதொகை இல்லாம நீங்க பனைமர ஒசரத்துக்கு வளர்ந்திருந்தா நான் குட்ட கத்திரிக்கா மாதிரிதான் தெரிவேன்… நெட்டமாடு… வளர்ந்து கெட்ட ஜென்மம்…” ஒவ்வொரு வார்த்தைக்கு இடையிலும் மண்டையில் நங் நங்கென கொட்டு வேறு.


“ராட்சஸி… சண்டி ராணி… ரவுடி ரங்கம்மா…. வலிக்குதுடி எரும… விடுடி…” சத்தமிட்டபடியே அவளது கைகள் இரண்டையும் சுழற்றி தன் ஒரு கையில் அடக்கி மறு கையால் இடையோடு பிடித்து தூக்க அவள் கால்களை உதறி உடம்பை வளைத்து மீன் போல் துள்ள பிடிமானம் இன்றி தடுமாறியவன் பொத்தென்று மெத்தையில் விழுந்திருந்தான். 


அவன் கீழே… அவள் மேலே… விழுந்த வேகத்தில் அவளது இதழ்கள் நச்சென்று அவனது நெஞ்சில் அழுத்தமாய் முத்தமிட்டிருக்க திக்கென அதிர்ந்து ஒரு நொடி உறைந்து போயினர் இருவரும். மெல்ல தலை உயர்த்தி அவன் முகம் பார்த்தாள்… அவனும் குனிந்து அவள் முகம் பார்த்தான்… நெருக்கத்தில் இருவரின் முகம்… இருவரின் வாசமும் இரண்டற கலந்து புதுவித போதையை இருவருக்கும் ஏற்படுத்த நான்கு கண்களும் நகர மறுத்து அழுத்தமாய் பிணைந்திருக்க வெட்கப் பூச்சுடன் அவள் தேகம் முழுக்க செம்மை படரத் தொடங்கிய நொடி


“டேய் நாயே… உங்க சல்லாபத்தை எல்லாம் கதவை மூடிட்டு பண்ண மாட்டீங்களா…worst fellows…” தலையில் அடித்தபடி அறைக் கதவை சாத்திவிட்டு சென்றிருந்தான் முகிலன்.


தில்லுவாலே புச்சுனேடேசாஆஆஆ…


கிறங்கித் தவித்த அந்த மயிலிறகுக் கண்கள் சட்டென கோபத்தில் சுருங்க ‘நல்லா போய்க்கிட்டு இருந்துச்சு… எப்படித்தான் மூக்கு வேர்த்து வந்தானோ…. கோர்த்து விட்டுட்டு போயிட்டானே அந்த கோவேரி கழுத… ஊரெல்லாம் பிரண்ட் வச்சிருக்கிறவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான்… இந்த ஒத்த பிரண்டை வெச்சுக்கிட்டு நான் படுறபாடு இருக்கே… ராமா…’


ஆதங்கமாய் தரணி யோசித்துக் கொண்டு இருக்கும்போதே அவன் அடர்ந்த சுருண்ட முடியை வாகாய் பிடித்து மாவாட்டத் தொடங்கி இருந்தாள் பூச்செண்டு.








Leave a comment


Comments


Related Post