இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி 14 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 06-04-2024

Total Views: 22384

குரல் வந்த திசையில் அனைவரும் திரும்பி பார்க்க அங்கு அருணாவும் சக்ரவர்த்தியும் நின்றிருந்தனர்.

திருமண வேலைகளில் இறங்கும் முன் குலதெய்வ கோவிலுக்கு குடும்பமாக சென்று பொங்கல் வைத்து விட்டு வரலாம் என அருணா ஆசைப்பட சரி அப்படியே செய்யலாம் என தர்மனிடம் கூட கூறாமல் கிளம்பி இருந்தனர் சக்கரவர்த்தி தம்பதியினர்.

சுரேந்திரனை அழைக்க அவனோ நீங்கள் முன்னால் செல்லுங்கள் நான் வந்து விடுகிறேன் என கூறியவன் வர்ஷினியை சந்திப்பதற்காக கிளம்பி சென்றான்.

அவரை பார்த்ததும் வழிவிட்டு அவருக்கு வணக்கம் தெரிவித்த ஊர் மக்கள் அவர் என்ன கூறப்போகிறாரோ என ஆவலாக காத்திருக்க அவரோ தர்மனிடம் வந்தவர் "என்ன பண்ணிட்டு இருக்க நீ.. ?" என கோபமாக கேட்க.

"அண்ணா... அவன் என அவர் ஏதோ கூற வர "ம்ம்ம்ம்..." என அவர் கண் முன் தன் வலக்கரத்தை நீட்டி "உன் பையன் தப்பு பண்ணியிருப்பான்னு நீ எப்படி நம்பற... நம்ம வீட்டு பசங்க ஒருநாளும் நம்ம குடும்ப கெளரவம் கெட்டுப்போகற மாதிரி நடந்துக்க மாட்டாங்க... இது அருவிக்கும் பொருந்தும்..." என அவளை பார்க்க அவளும் அவரைத்தான் பார்த்து இருந்தார்.

"ஆனா அண்ணா அந்த பொண்ணு...?" என அவர் இழுத்தார்.

"ஏன் அந்த பொண்ணு பொய் சொல்லி இருக்கலாம் இல்ல..." என அவர் கூற.

ஊர் மக்கள் அவர் கூறிய கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்து மகிழாவை யோசனையுடன் பார்த்தனர்.

மகிழா சுதாரித்தவள் "ஐயா... நான் இந்த ஊர்ல உங்க கட்டுப்பாட்டுல வாழற பொண்ணு... எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல... அதும் இல்லாம எந்த ஒரு பொண்ணும் தான் உயிர விட பெருசா நினைக்கிற கற்ப இத்தனபேர் முன்னாடி அசிங்கப்படுத்திக்கமாட்டா... உங்க குடும்பத்து மேல இருக்க நம்பிக்கைல...நீங்க நியாயத்து பக்கம் இருப்பீங்கன்ற நம்பிக்கைல... நான் இத்தனபேர் முன்னாடி உண்மைய சொல்லிட்டேன்... இதுவே வேற யாராச்சும்னா என் மானம் போன உடனே தூக்குலயோ... இல்ல ஏதாச்சும் ஒரு கொளத்துலயோ.. விழுந்து செத்து என் உயிர மாச்சிக்கிட்டு இருப்பேன்..." என்க.

அவளின் பேச்சு அத்தனை உவப்பாக இல்லை அவருக்கு.

அவளை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்றார் அருணா.

"நீ இவ்ளோ தெளிவா பேசறதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு... உண்மைய சொல்லு... நான் இருக்கேன்... யாரும் உன்ன எதுவும் பண்ணாம பாத்துக்கிறேன்..." என்றார் அவர்.

"ஐயா என் கற்புக்கு நீங்க கொடுக்கிற மரியாதை இதுதானா... இதுக்கு உங்க புள்ள என்னை காப்பாத்தாமையே விட்டு இருக்கலாம்..." என்க.

"இப்ப நீ என்ன சொல்ற... என் பையன் அப்படி செய்யறவன் இல்ல... நாங்க அவன அப்படி வளர்க்கவும் இல்ல... ஆனாலும் உன்மேல உள்ள அக்கறைல கேக்கறேன்... நீ உண்மைய சொல்லு... எதுக்காக அவன் மேல இப்படி ஒரு பழிய போடுற...?" என அவர் கேட்க.

"ஐயா... நாங்க இல்லாதவங்க... இதோ என் அண்ணன்காரன் உங்க வீட்டு பொண்ண தொந்தரவு பண்ணனதுக்காக இந்த ஊரவிட்டே ஒதுக்கி வச்சிட்டாரு உங்க தம்பி... இதுவே உங்க வீட்டு பொண்ண என் அண்ணன் இதுமாதிரி பண்ணி இருந்தா நீங்க அவன சும்மா விட்டுருப்பீங்களா... நாங்க இல்லாதுப்பட்டவங்கன்னு தான எங்க பேச்சு அம்பலத்துல ஏறல...?"என அவள் தைரியமாகவே பேசினாள்.

அருவிக்கும் சுசிலா விற்கும் இவள் தங்களுடன் இத்தனை நாட்களாக பழகிய மகிதானா என சந்தேகமாக இருந்தது.

தன்னை என்ன கூறிவிட்டாள் என அருவிக்கு அவள்மேல் முதன்முதலாக ஒரு வருத்தம் இழையோடியது.

தானும் சரி இந்த பெரிய குடும்பத்தாரும் சரி இதுவரை யாரையும் பிரித்து பார்த்து பேசியதில்லை.

ஆனால் இவள் என்னவெல்லாம் கூறிவிட்டாள் என கோபம் வர இருக்கும் இடம் கருதி அமைதி காத்தாள்.

"அம்மா... மகிழா இந்த ஊர பொருத்தவரைக்கும் யாரு தப்பு பண்ணாலும் ஒரே தண்டனைதான்... அது எங்க வீட்டு பையனாவே இருந்தாலும்... ஆனா தப்பு நிரூபிக்கப்படனும்..."  என அவர் கூற.

"ஐயா... நான் கெட்டுப் போனதுக்கு சாட்சி கேக்குறீங்களா ஐயா...?" என அவள் கேட்க.

"அப்பறம் எப்படிம்மா தப்பு பண்ணவங்களுக்கு  தண்டனை கொடுக்கறது... நீ வேற அர்த்தத்துல புரிஞ்சிக்கிற... இப்போ நீ நல்ல மனநிலையில இல்ல... கொஞ்சம் நிதானமா யோசிச்சு சொல்லு... நீ எப்படி இங்க வந்த... ஆமா ஊருக்குள்ள இருந்து இது ரொம்ப தூரமாச்சே... எப்படி தனியா வந்த... யார் தயவும் இல்லாம...?" என சரியாக அவர் கேள்வி எழுப்ப அவளுக்கும் அவளை அழைத்து வந்த அந்த கருப்பு ஆட்டிற்கும் உள்ளுக்குள் திக்கென ஆனது.

"ஐயா... என் கற்ப இத்தன பேர் முன்னாடி எப்படி போனுச்சுன்னு விளக்கம் கேட்டா... நான் எப்படிங்க ஐயா விளக்கி சொல்லுவேன்..." என மீண்டும் அழ ஆரம்பிக்க அவளது பதிலில் அவருக்கு திருப்தியளிக்கவில்லை.

"இங்க பாரும்மா... இப்போ உண்மைய சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி நாங்க முடிவு எடுப்போம்..." என்க.

ஒருவாறு தெளிந்தவள் "ஐயா நேத்து ராத்திரி நான் அருவிய பார்த்துட்டு இன்னைக்கு கோவிலுக்கு போலாம்னு சொல்லிட்டு வர போனேன், திரும்பி வரும்போது இருட்டாகிடுச்சு... தனியா நடந்து வரும்போது.. யாரோ என் பின்னாடியே வந்து என் வாய்ல துணிய வச்சு அடைச்சு தூக்கிட்டு போய்ட்டாங்க... அப்பறம் வந்த பிறகுதான் தெரிஞ்சிது அது இந்த மைனருன்னு..." என்க.

"ஏய்... அடிச்சு பல்லெல்லாம் பேத்துடுவேன்... நானாடி உன்ன தூக்கிட்டு வந்தது..." என அவன் வீறுகொண்ட வேங்கையாக முன்னால் வர "தேவா..." என்ற அழைப்பில் அப்படியே நின்றான்.

"சரிம்மா... நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும்... உன்ன தூக்கிட்டு வரும்போது அங்க யாருமே இல்லையா... அது என்ன இருட்டற நேரத்துல பொம்பளபுள்ள தனியா வெளியில போறது.. ஏன் அத காலையில வெள்ளெனவே வந்து சொன்னா அருவி வரமாட்டேன்னு சொல்லிடுவாளா...?! என அவர் கேட்க.

"ச்சே... இந்த மனுஷன் பாயின்டு பாயின்டா கேள்வி கேட்டு என் உசுர வாங்குறாரு..." என நினைத்தவள் அவரை பார்க்க.

"சொல்லும்மா... அப்ப யாருமே  இல்லையா அக்கம்பக்கத்துல...?" என கேட்க.

"இல்லைங்கய்யா..." என்றாள் அவள்.

அவள் கூறிய கதையை சிறுகுழந்தைகூட நம்பாது ஆனாலும் அவள் வைத்த குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்க தர்மனும் அண்ணன் என்ன கூறுகிறாரோ அதையே ஏற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்க அங்கு வந்து சேர்ந்தார் பத்மினி.

"அப்பா... இவ சொல்றத நம்பாதீங்க... நான் இவள ஒன்னுமே பண்ணல... இவகிட்ட முகம்கொடுத்து கூட நான் பேசுனது இல்ல...ஏன் இப்படி எம்மேல பழி போடறான்னு எனக்கு தெரியில...?"என்க.

"ஐயோ... ஐயோ... ராத்திரி பூரா எங்கூட இருந்துப்புட்டு...இப்படி ஊரு முன்னாடி என் மானத்தையே வாங்குறாரே... நான் என்னென்னு சொல்லுவேன்... யார்ட்ட  என் குறைய சொல்லி அழுவேன்... என அவள் மீண்டும் கிணற்றை நோக்கி ஓட இப்போது சக்கரவர்த்திக்கே கோபம் வந்து அவளை இழுத்து ஓங்கி ஒன்று வைத்தார்.

"என்ன பொண்ணு நீ...என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுதான் பன்றியா... உன் மானத்தை நீயே இப்படி ஏலம் விடற மாதிரி பன்றியே... உனக்கே இது நல்லா இருக்கா...?" என கேட்க.

இப்போது பாலன் அவர் முன்னால் வந்து "ஐயா...உங்க வீட்டு பொண்ண நான் அப்டி பண்ணியிருந்தா... நீங்க சும்மா விட்டுருவீங்களா.. நாங்க அன்னாடாங்காட்சின்னுதான.. எந்தங்கச்சி சொல்றத யாரும் நம்ப மாட்டேன்னு சொல்றீங்க... இதோ இந்த பரமன் அவங்க ரெண்டுபேரையும் பாக்கக்கூடாத நேரம் பார்த்து இருக்கான் நீங்களே அவன்ட்ட கேளுங்க... என்க.

"என்ன பரமா... அவன் சொல்றது உண்மையா..?" என அவர் கேட்க.

"அது... வந்துங்க ஐயா..."என அவன் இழுக்க தர்மனோ "ஏன்டா தயங்கற சொல்லு..." என்றார்.

"ஐயா... அது நான் அவங்க ரெண்டு பேரையும் பாக்கக் கூடாத கோலத்துல பார்த்தேன்ங்க ஐயா..." என்க.

ஊரே அதிர்ந்து வாயில் விரல் வைத்து கொண்டது.

அருணா வந்து "ஏங்க அருவி... என இழுக்க "உன் பையனுக்கு போன் பண்ணி சீக்கரம்மா வர சொல்லு..." என்க.

"ஏங்க..." என அவர் இழுக்க "சொன்னத செய்..."என்றவர் "மகிழா..." என அழைக்க.

அவரோ அழுதபடி முன்னால் வந்து நிற்க.

"உன் அம்மாமேல சத்தியம் பண்ணு..." என்க.

அவளோ ஒருநிமிடம் அதிர்ந்தாள்.

பின்னே அவள் கூறுவது அனைத்தும் பொய்யாயிற்றே.

அவளுக்கு யாரைப்பற்றியும் கவலை இல்லை ஒரு நிமிடம் யோசித்தவள் "என் அம்மாமேல சத்தியமா நான் சொல்றது அத்தனையும் உண்மை..." என்றாள் கொஞ்சமும் பிசிறடிக்காமல்.

வாசுவே அதிர்ந்து பார்த்தான் அவளை.

கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் ஒரு பெண் இப்படி ஒரு கீழ்த்தரமான வேலையை செய்வாளா அதுவும் இவள் அருவியின் சிறுவயது முதல் இப்போது வரை உற்ற தோழியாக இருந்தவள் அவளுக்கு திருமணம் பேசி இருக்கிறார்கள் என தெரிந்தும் கள்ள நாடகத்தை ஊர் முன் அரங்கேற்றி இருக்கிறாளே என அவன் மனம் அவளை இன்னும் வெறுத்தது.

அவள் முகத்தில் விழிப்பது கூட பாவம் என எண்ணினான் அவன்.

சக்கரவர்த்தி, அருணா பத்மினி மற்றும் தர்மன் அனைவருமே அவகிட்ட இந்த செயலில் ஆடிப்போயினர்.

அவர்கள் நால்வருக்குமே தெரியும் வாசுதேவன் அந்த மாதிரி ஈன செயல்களை செய்பவன் அல்ல என.

இவள் எதற்காக தன் மகன்மேல் வீண்பழியை போடுகிறாள் என பத்மினி எண்ணி வாசுதேவனை பார்த்து கண்களால் "என்னடா இது...?" என கேட்க.

அவனோ இல்லை என தலையாட்டினான்.

சற்றுநேரம் பெருத்த அமைதி நிலவியது அங்கே.

அந்த அமைதியை கலைத்தாள் அருவி.

"மாமா..." என சக்கரவர்த்தியை அழைக்க "நான் ஒன்னு சொல்லட்டுமா...?" என கேட்க.

"ம்ம்ம்ம்..." என தலையசைத்தார் அவர்.

மற்ற அனைவரும் அவள் என்ன கூறப்போகிறாள் என ஆவலாக பார்க்க.

"பெரியவங்க உங்களுக்கு தெரியாதது எதையும் நான் சொல்லிடப் போறது இல்ல... ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி தன் கற்பு பறிபோய்டுச்சின்னு இத்தன சனங்க முன்னாடி அழறா... அத நாமளும் வேடிக்கை பாத்துட்டு இருக்கோம்... நாளபின்ன அவளுக்கு ஒரு நல்லது எப்படி நடக்கும்... அவள யாரு கட்டிப்பாங்க....  கடைசிவரைக்கும் இது சொல்லுக்கடன் இல்லையா... ஒருநாள் இல்லனா ஒருநாள் அவள நாளைக்கு கட்டிக்கப் போறவன் அவள குத்திக்காட்டி பேசிட்டா... அவ வாழ்க்கையே நரகமா போய்டும் இல்லையா... ஒரு பொண்ணோட பாவம் நமக்கு வேணாம் மாமா... மகிய வாசுவுக்கு கட்டி வச்சிடுங்க...." என்க.

"அருவி..." என கத்தினான் வாசுதேவன்.

"அமைதியா இரு வாசு... தெரிஞ்சோ தெரியாமலோ உங்க ரெண்டு பேரோட பேரும் ஊருக்குள்ள சேர்த்து அடிபட்டுடுச்சி... இனி அவள யாரு கட்டுவா... அவ வாழ்க்கையே போச்சு இல்ல.. மகிய கட்டிக்க வாசு..." என அவனிடம் கூற.

"தேவா..." என அழைத்தார் சக்கரவர்த்தி.

அவனும் அவரை திருப்பிச் செய் பார்க்க "மகிழாவ கல்யாணம் பண்ணிக்க..." என கூற.

"அப்பா..." என அதிர்ந்தான் அவன்....



Leave a comment


Comments


Related Post