இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-14 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 07-04-2024

Total Views: 37269

அத்தியாயம் -14


14

இருவரும் தாங்கள் வந்த மகிழுந்திலேயே விடுதி வந்து சேர, முதல் வேலையாய் தனது உடைகளைக் கலைய அஞ்சனா சென்றாள். தன்னை ஆசைதீர ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டவள் சாதாரண உடைக்கு மாறி வர, யஷ்வந்த் வினோத்துடன் பேசிக் கொண்டிருந்தான்.

பத்திரிகை நிறுவனத்தாருக்கு ஒரே ஒரு புகைப்படமும் அவர்களின் முக்கிய சில கேள்விகளுக்கு மட்டுமே பதிலும் கூறிவிட்டு யஷ்வந்த் வந்துவிட, மேலும் பாய்ந்த கேள்விகளை வினோத் கவனிக்க வேண்டியதானது.

பேசிவிட்டு யஷ்வந்த் வரவும், சோர்வாய் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருக்க,

 அவளை புருவம் சுருங்க ஒரு பார்வை பார்த்தவன், தானும் சென்று உடைமாற்றிவிட்டு வந்து, அவளுக்கு பின்னே படுத்துக் கொண்டு, “ஏ கோழிக்குஞ்சு” என்றான்.

மெல்ல திரும்பியவள் அவனை கேள்வியாய் பார்க்க,

“என்ன ஒருமாதிரி இருக்க?” என்று கேட்டான்.

 'தன் மனம் சரியில்லை தான். ஆனால் காரணம் தனக்கே தெரியவில்லை. நிச்சயம் இந்த தருணம் தான் சந்தோஷமாக உணர வேண்டும். தன்னவனின் வெற்றி, அதில் தன் சின்ன பங்களிப்பு என அனைத்தும் உவகையை ஊட்ட வேண்டிய விஷயம்' என்று சிந்தித்தவளுக்கு பதிலாற்றத் தோன்றவில்லை.

அவளுக்குள் ஏதோ ஒரு தாழ்வுமனப்பான்மை எழுந்து வருத்தியது‌. அது இவ்வொறுநாளில் பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் நிமிர்வுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்ததாலோ? அல்லது தன்னைவிட சிறிய பெண் தன்னைவிட அதிக பக்குவத்துடன் இருப்பதைப் பார்த்ததாலோ? அவளே அறியாள்.

மெல்ல யஷ்வந்தை கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைய படுத்துக் கொண்டவள், “ஒன்னுமில்ல மாமா. டயர்டா இருக்கு” என்று கூற, 

அவள் தலைகோதியபடி, “நல்லா ரெஸ்ட் எடு. நாளைக்கு நமக்கு வேலையிருக்கு” என்றான்.

“என்ன வேலை மாமா?” என்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் வினவ, 

“நாளைக்கு பாரு. இப்ப எதுவும் யோசிக்காம தூங்கு” என்று அவள் முகத்தை தன்னில் புதைத்துக் கொண்டான். மேலும் கேட்க மனமில்லாமல் அவளும் படுத்துக் கொள்ள அவளுக்கே புரியாத அவளுடைய நிலை அவனுக்குப் புரிந்தது.

ஏக்கம்.. தான் பலதை இழந்து வளர்ந்திருக்கின்றோம் என்பதை தன்னுடைய கூட்டுக்குள்ளேயே இருந்தவரை அவளுக்குப் புரியவில்லை. அவளுடைய கூட்டை உடைத்து அவன் வெளியே அழைத்து வரவே, வெளியுலகம் அவளுக்கு அதை காட்டிக் கொடுத்துள்ளது. அதில் எழுந்த கழிவிரக்கமும், தான் தனது பசுமையான பள்ளிக் காலத்தை இழந்துள்ளோம் என்ற ஏக்கமும் அவளை வெகுவாய் வருத்துகின்றது என்பது யஷ்வந்திற்கு புரிந்துபோனது.

அவள் தற்போது தான் தன்னுடைய நிலையை புரிந்துக் கொள்கின்றாள் எனும்போது இவ்வாறான உணர்வுகள் இயல்புதான் என்றபோதும், அதை மேலும் வளர்க்கவிடாது அவளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவன் மனம் உந்தியது. 

உறக்கமற்று அவளை அணைத்துப் படுத்திருந்தவனுக்கு காலை முதல் நடந்தவையே நினைவில் ஓடியது. 'சனா க்விக்..அதானே மாமா' என்று கேலி செய்து அவள் கேட்ட தோரணை, அவளுக்கு பிடித்தமான கண்ணாடி வளையலே அவளுக்கு அழகென்று கூறி அதை சூட்டியதும் அவள் அடைந்த குதூகலம், புடவை கட்டியதும் அவள் கண்களில் தோன்றிய பிரகாசம், தனக்காக அவள் குளிரைப் பொறுத்துக் கொண்ட விதம், குளிருக்கு அணைவாய் தன்னை தேடிய விழிகள் என்று அவளின் சின்ன சின்ன செயல்களே அவனை ஈர்த்து அவள் வசம் நிறுத்தியிருந்தது.

'சிரிக்கவெல்லாம் தெரியுமா உங்களுக்கு?’ என்று முதல் நாள் இரவு அவள் கேட்ட கேள்வி தோன்ற, அவன் முத்து முறல்கள் மின்னின. ‘when I met you I thought that there is no way I'm gonna like you. But look at me now, head over the heels in love with someone I used to call weirdo. You are my other half and I love everything about you, baby' என்ற வரிகள் அவன் மனதில் வலம் வந்தது.

'காதலா? இது காதல் தானா?’ என்று அனாவசியமான கேள்விகளை தட்டி துரத்தியவன் மனம் 'இது காதல் அல்லாது வேறெது காதல்?’ என்று பதில் கூறியது. 'அவளுக்காக நான் ஏன் படபடக்க வேண்டும்? அவளது சிறு செயல்கள் என்னை ஏன் ஈர்க்க வேண்டும்? அவளது கஷ்டங்களைப் போக்க நான் ஏன் யோசிக்க வேண்டும்? காதல்! காதல் அல்லாது வேறேது? திருமண பந்தம் கொடுத்த உணர்வே இதுவென்றாலும் சரி.. மனைவி மீது காதல் வந்திடக்கூடாதா என்ன? எனக்கு என் மனைவி மீது காதல் வந்துவிட்டது! அவளால் அவளுக்காக தலைகுப்புற விழுந்துவிட்டது என் மனம்' என்று கர்வத்துடன் எண்ணிக் கொண்டான்.

காதலில் விழுவது கூட ஓர் அழகிய கர்வம் தானே! எண்ணியவனுக்கு உள்ளமெல்லாம் தித்திப்பாய் தித்தித்தது. இந்த இரண்டு நாளில் அமேரிக்காவின் சில முக்கிய இடங்களை அவளுக்கு சுற்றிக் காட்ட எண்ணினான். அதன் பிறகு பாரிஸ் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டான். 

அதற்கான வேலைகள் அனைத்தையும் தான் வினோத்திடம் கூறியிருந்தான்.‌ அந்த நினைவுகளோடு உறங்கியவன் காலை விரைவே எழுந்தவன், பாவம் போல் உறங்கிக் கொண்டிருப்பவளை எழுப்ப மனமின்றி முதலில் தான் சென்று தயாராகி பின்பு அவளை எழுப்பினான். 

அவனுக்கு போக்கு காட்டிவிட்டு எழுந்து கொண்டவளும் தயாராகி வர, “போலாமா?” என்றான். 

“எங்க போறோம் மாமா?” என்று அஞ்சனா வினவ, “வா” என்றபடி அவளைக் கூட்டிச் சென்றான். 

கீழே காலை உணவை முடித்துக் கொண்டு அவர்களுக்காக காத்திருந்த மகிழுந்தில் ஏறி இருவரும் செல்ல, சில நிமிடங்களில் அந்த மகிழுந்து பயணம் முடிந்தது. “எங்க மாமா போறோம்?” என்று வண்டியை விட்டு இறங்கியவள் வினவ, அவளை அப்படியே திருப்பி கரம் நீட்டி எங்கோ குறிப்பிட்டான். 

சுற்றிலும் கடல் பரப்பு.. அதற்கு நடுவில் கையில் தீபம் ஏந்தி நிற்கும் சுதந்திர தேவியின் சிலை! அஞ்சனாவின் விழிகள் வட்டமாய் விரிந்து கொள்ள, “ஸ்டேச்சு ஆ..” என்றவன் முடிப்பதற்குள் “ஸ்டேசு ஆஃப் லிபர்டி” என்றாள்.

அவளை புருவம் உயர்த்தி வியப்பாய் பார்த்தவன் புன்னகைக்க, “ப்ரான்ஸ் நாடு அமேரிக்காவுக்கு பரிசா கொடுத்த சிலை. பிரட்ரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டியால் உருவாக்கப்பட்டது. அ.. அப்றம் இது நியூ யார்க் அன்ட் நியூ ஜெர்சியை இணைக்கும் ஹட்சன் நதி. எப்பவோ அமேரிக்காவுல நடந்த ஐக்கிய புரட்சி போது அமேரிக்காவுக்கு ஃப்ரான்ஸுக்கும் உண்டான நட்பு ரீதியா கொடுக்கப்பட்டது” என்று அதைப் பற்றி அவள் அத்தனை விளக்கமாய் கூற, தற்போது அவன் ஆச்சரியித்து நின்றான்.

அவன் அமைதியில் மெல்ல திரும்பியவள், “ச.. சரி தானே மாமா?” என்று கேட்க, 

“எப்படி சனா இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க?” என்று கேட்டான்‌. 

“ரொம்ப பிடிக்கும் மாமா. நான் பெருசா வெளிய போனதில்லை. போகனும்னு ஆசை இருந்ததானும் தெரியல மாமா. அஜு அம்மா கூட சண்டை போடும்போது உலகம் ரொம்ப அழகானது அஞ்சு, அம்மாக்காக வீட்டுக்குள்ளயே இருக்காதனு சொன்னான்.‌ அப்ப தான் ஒரு சுற்றுலா பத்தின புத்தகம் எடுத்து படிச்சேன். நிஜம் தான மாமா? உலகம் ரொம்ப அழகுல?” என வெள்ளந்தியாய் சிரித்தபடி கேட்டவளை ஆச்சரியமாய் பார்த்தான்.

தனது சோகத்தைக் கூட காட்டி அவள் பழகியிருக்கவில்லை போலும் என்று தான் தோன்றியது அவனுக்கு

 “அப்ப நான் படிச்சு ரொம்ப வியந்த இடங்களில் இதுவும் ஒன்னு மாமா. இவங்க கால் கட்டை விரல் அளவு கூட நான் இருக்க மாட்டேன்ல மாமா?” என்று கேட்டு அவள் சிரிக்க, அவளையே ஆழ்ந்து பார்த்தான்.

பரந்து விரிந்திருக்கும் அந்த ஹட்சன் நதியில் பல கப்பல்கள் சென்றும் வந்தும் இருந்தன. நீலக்கடல் மெல்லிய சூரிய ஒளியில் வைரக்குவியலாய் பளபளக்க, அதற்கு இணையாய் தன் கண்களும் மின்ன அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா.

“மாமா ரொம்ப அழகா இருக்குல்ல? இந்த தண்ணியோட சத்தம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மாமா” என்று அவள் குதூகலமாய் கூற, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மென்மையாய் புன்னகைத்தான்.

இருவரும் ‘லிபர்டி ஐலான்ட்’ எனப்படும் அத்தீவை அடைய, அனைத்தையும் வியப்போடு பார்த்தபடி இறங்கினாள். பூவடிவ மேடையின் மேல் ஆகாயத்தை தொட்டுக் கொண்டு நின்றிருந்த அந்த சுதந்திர தேவியைக் கண்டவளுக்கு இரண்டு கண்கள் போதவில்லை!

யஷ்வந்தின் கரத்தினைப் பற்றிக் கொண்டு, சுற்றிலும் கடல் பரப்புக்கு நடுவே நிற்கும் தன்னை கிரகிக்க முயன்றாள். ஆம்! உண்மை தான் என்பதை அவளவனைப் பிடித்திருக்கும் கைப்பிடியின் அந்த இறுக்கம் மட்டுமே உணர்த்தியது.

“மாமா.. அங்க மேல போக முடியுமா?” என்று அவள் கைநீட்டி வினவ, “கண்டிப்பா சனா..” என்றபடி அவளைக் கூட்டிக் கொண்டு சென்றான். சுதந்திர தேவியின் கிரீடத்திற்கு மின்தூக்கி வழியே இருவரும் செல்ல, அவன் கரத்தை மேலும் இறுகப் பற்றிக் கொண்டவளுக்கு அத்தனை குதூகலமாக இருந்தது.

உயரச் சென்றால் அபாரமும் சிறு புள்ளிதான்.. இடத்திற்கு மட்டுமல்ல மனதிற்கும்… அத்தனை உயரத்திலிருந்து பரந்து விரிந்த ஹட்சன் நதியும் நியூயார்க், நியூஜெர்சி, ஹோபோகென், பயோனி போன்ற நகரங்களின் உயர்ந்த கட்டிடங்களும் வரைபடத்தில் வரைந்த சிறுசிறு ஓவியங்களாய் தெரிந்தன. 

அத்தனை உயரத்தில் காதில் வந்து மோதிய கடல் காற்றின் சத்தமும், நீலக்கடல் சூழ்ந்த பகுதி கொடுத்த குளுமையும், உவகையும் சொல்லொன்னா உணர்வை பெண்ணுக்குக் கொடுத்தது.

 “மாமா.. நிஜமா இவ்வளவு அழகா இருக்கும்னு எதிர்ப்பார்க்கலை” என்று அவள் கூற,

“டூ யூ லைக் இட்?” என்று கேட்டான்.

“என்ன மாமா கேள்வியிது? ஐ ஜஸ்ட் லவ்ட் இட்” என்று அவள் குதூகலிக்க, இருவருமாய் அங்கு சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கீழே வந்து, அங்கேயும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

மீண்டும் கப்பல் பயணத்தை ரசித்தபடி இருவரும் நியூயார்க் வந்து சேர மதியம் இரண்டு மணியைத் தொட்டிருந்தது. அந்த துறைமுகத்தில் நின்றபடியே அவள் அச்சிலையைப் பார்த்துக் கொண்டிருக்க, “சனா.. பசிக்கலையாடி உனக்கு?” என்று கேட்டான்.

“அதுக்குள்ளயா?” என்று அவள் வினவ, 

“அதுக்குள்ளயாவா? மணி ரெண்டுக்கு மேல ஆச்சு” என்று கூறினான்.

 “என்ன மாமா சொல்றீங்க? எனக்கு நேரம் போனதே தெரியலை. பசியும் தெரியலை” என்று கூறி அவள் சிரிக்க, 

“ம்ம்.. சுதந்திர தேவியின் அழகு உன்னை உலகமே மறக்க வைச்சுடுச்சு போல. சனா.. உனக்கு இந்த விஷயம் தெரியுமா? இந்த சிலை முதன்முதலா காப்பர் கலர்ல தான் இருந்தது. கடல் காற்று பட்டுப் பட்டு அந்த உப்பு படிஞ்சு போய் தான் இந்த நிறத்துக்கு வந்திருக்கு” என்றான்.

“ஓ.. அது எனக்கு தெரியாது மாமா. அந்த புக்ல கூட க்ரீன் கலர்ல தான் இருந்தது” என்று அஞ்சனா கூற,

“ம்ம்.. சரிவா. சாப்பிட்டுட்டு அடுத்த இடத்துக்கு போகனும்” என்றான்.

“அடுத்த இடமா? எங்க போறோம் மாமா?” என்று உற்சாகமாய் அவள் துள்ளிக் குதிக்க, அதில் சிரித்துக் கொண்டவன் 

“போனா தெரிஞ்சுக்க போற. வா” என்றபடி அவளுடன் உணவுண்ணச் சென்றான்.

அடுத்து இருவருமாய் மீண்டும் புறப்பட, அவர்கள் வந்த மகிழுந்தை விடுத்து ‘டபுள் டக்கர்' பேருந்தில் சென்றனர். பேருந்தின் மேல் தளத்தில் அமர்ந்துகொண்டு வேடிக்கைப் பார்த்தவளிடம், திருவிழாக்குள் அழைத்து வந்த குழந்தையின் உற்சாகமே!

சில நிமிடங்களில் இருவரும் அந்த உயர்ந்த கட்டிடத்தின் முன் வந்து நிற்க, “வேர்ள்ட் டிரேட் சென்டர்” என்று யஷ்வந்த் கூறினான். அவளுக்கு இது குறித்து ஏதும் தெரியுமா என்று அவன் ஆர்வமாய் நோக்க, “முன்ன இருந்த டிவின் டவர் இடம் தானே மாமா?” என்று கேட்டாள்.

“ஆமா சனா. உலக வர்த்தக மையம். 1972-1973 வரை உலகத்துல உயர்ந்த கட்டிடம்னு இதைதான் சொன்னாங்க. இதுக்கு இரண்டு முறை தாக்குதல் நடந்தது. அதுல ஒன்னுதான் நீ சொல்றது” என்றவன் அவளை கீழேயிருக்கும் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றான்.

அக்கட்டிடத்தின் தாக்குதலில் இறந்தோரின் புகைப்படங்கள் அங்கே இருக்க, அதுகுறித்து அவன் கூறியதும் “எதுக்கு மாமா இத்தனை பேர கொலை பண்ணாங்க?” என்று மெல்லொலியில் சோகமாய் வினவ, “அது பெரிய கதை சனா. டெரரிஸம் அட்டாக். நாலு ஏர்லைன ஹைஜாக் பண்ணி டிவின் டவர்ல மோதவிட்டு நடத்தினது” என்றான்.

வாழ்க்கையை ஒரே கோணத்தில் பார்த்து வந்தவளுக்கு இது முதல் திருப்புமுனையாகத் தெரிய, அதை கண்டு சற்றே மிரண்டு தான் போனாள். “மறுபடியும் இப்படி நடக்குமா மாமா?” என்று அவள் வினவ, லேசாய் புன்னகைத்தவன்

 “நடக்கும்னு இருந்தா கண்டிப்பா நடக்கும் சனா. ஆனா இப்ப நிறைய செகியூரிடி இருக்கு. சோ டோன்ட் வொரி” என்றான்.

அந்த அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும், டிவின் டவரிலிருந்து உடைந்த பாகம் உள்ள பூங்காவுக்கு செல்ல, அனைத்தையும் ஆச்சரியமும் ஆனந்ததமுமாய் கண்டாள்.

பின்பு அந்த உயர்ந்த கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் செல்ல, மொத்த நியூயார்க்கும் புள்ளி ஓவியமாய் அவள் கண்களுக்கு காட்சியளித்தன.

உற்சாகத்துடன் “மாமா ரொம்ப அழகா இருக்கு மாமா” என்று அவள் கூற, 

“நைட் வியூ இன்னும் நல்லா இருக்கும் சனா. நாளைக்கு எம்பயர் ஸ்டேட் பில்டிங்ல நைட் வியூ பாக்கலாம்” என்று கூறினான்.

அழகு தான்.. முன்மாலை வேளையில் மொத்த நகரையும் அத்தனை உயரத்திலிருந்து பார்ப்பது நிச்சயம் பேரழகுதான்.

 “மாமா உலகம் அழகானதுல?” என்று அவள் பார்வையை நகரத்தை விட்டு எடுக்காது பக்கவாட்டாக இருப்பவனிடம் வினவ, அந்த நொடி, அவ்வுலகத்தைவிட அவளே பேரழகாய் அவனுக்குத் தெரிந்தாள்.

“ரொம்ப அழகு சனா. பாக்குற கோணத்துல தான் எல்லாமே இருக்கு” என்று யஷ்வந்த் கூற, அவள் தலை ஆமென்று அசைந்தது. மீண்டும் கீழிறங்கிய இருவரும் அடுத்ததாக ‘’டைம் ஸ்கொயர்' என்னும் பகுதிக்கு சென்றனர்.

புதிதாக எதுவுமே இல்லையென்றாலும் எப்போதுமே கூட்டமாகவும் மின்விளக்குகளின் மினுமினுப்போடும் இருக்குமிடமே ’டைம் ஸ்கொயர்’. சுறுக்கமாக சொல்லப் போனால் நமது சென்னை ரங்கநாதன் தெருவைப் போன்றதே.

இரவின் இருளுக்கு தன் வண்ண வண்ண விளக்குகளை ஒளிரவிட்டுக் கொண்டு ஜே ஜேவென காட்சி தரும் அவ்விடம் முழுதும் சுற்றிப் பார்த்தாலும் திகட்டாது!

அவையனைத்தையும் சுற்றிப் பார்த்த பின் இரவு பன்னிரண்டு மணிபோல தங்கள் இருப்பிடம் திரும்பினர். உடல் களைத்து உறக்கத்திற்கு கெஞ்சியபோதும் அஞ்சனாவின் மனதில் துளியும் களைப்பில்லை. அத்தனை உற்சாகத்துடன் வாய் ஓயாமல் தாங்கள் சென்று வந்த இடங்களில் பிடித்த தருணங்களை அவள் கூறிக் கொண்டே இருக்க, இதழில் சிறு புன்னகையுடன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில் அவளிடமிருந்து எந்த சத்தமும் வராது போக, மெல்ல திரும்பிப் பார்த்தவன் ஆவென சிற்பியிதழ் திறக்க உறங்குபவளைக் கண்டு பக்கென சிரித்துவிட்டான். பேசிக் கொண்டே உறங்கிப் போகும் குழந்தையைப் போல் உறங்கியவள் கண்டு அவன் உள்ளமெல்லாம் தித்தித்தது. 

மறுநாளும் அமேரிக்காவின் மேலும் சில முக்கிய இடங்களான சென்டிரல் பார்க்க, அக்வாரியம், ப்ரூக்லின் பிரிட்ஞ் என அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியாக எம்பயர் ஸ்டேட் பில்டிங் சென்றனர். 

இரவு நேரத்தில் பல மின்மினிப் பூச்சிகளை தூரத்திலிருந்து காண்பதைப் போன்று தெரிந்த நகரத்தை அக்கட்டிடத்தின் உச்சியிலிருந்து பார்த்து ரசித்த இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு திரும்பினர்.

அவளுடன் பாரிஸ் செல்ல வேண்டும் என்ற திட்டத்தில் அவனிருக்க, அதற்குள் தனது நிறுவனத்தில் வேலை வந்துவிட்டதமையால் அடுத்தமுறை செல்லலாம் என்று கூறி இந்தியா நோக்கி புறப்பட்டனர்.

அனைத்தையும் எடுத்து வைத்து இருவரும் அறையை காலி செய்ய, அறைவிட்டு வெளியேறும் முன் தன்னவனை சட்டென வந்து அணைத்துக் கொண்டவள், “தேங்ஸ் மாமா” என்றாள் ஆத்மார்த்தமான குரலில்.

மெல்லிய புன்னகையுடன் அவளுக்கு தட்டிக் கொடுத்தவன் விமான நிலையம் வர, அர்ஷித்துடன் மதுமஹதி காத்திருந்தாள். இருவரையும் அணைத்துக் கொண்டு அவள் பிரியா விடை கொடுக்க, யஷ்வந்த் மற்றும் அர்ஷின் தங்கள் கரம் குலுக்கிக் கொண்டு விடைபெற்றனர்.


Leave a comment


Comments


Related Post