இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 15 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 07-04-2024

Total Views: 17631

காதலொன்று கண்டேன்!

தேடல்  15

அவளுக்கென..


"எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க..?" இயல்பு போல் கேட்டவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வாள் அவளும்.

"இல்ல..இல்ல நான் நா..நார்மலா தான் இருக்கேன்.."கழுத்தோரத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை புறங்கையால் துடைத்த படி மொழிந்தவளின் செய்கை காளையவனுக்கும் புரியத் தான் செய்தது.
அதிலும் அவளின் விழிகளில் வந்து போன உணர்வுகள்,விட்டால் அவனை கரைத்தே விட்டிருக்கும்.

ஏன் என்று அவனுக்குத் தெரியாது.ஆனால்,அவளின் ஒவ்வொரு செயலும் அவனை வெகுவாய் ஈர்த்தல்லவா தொலைக்கிறது..?
அதிலும் அந்த விழிகள் வெளிப்படுத்தும் பாவனைகளை காணும் நொடி அவனின் மொத்த உலகமும் அவளின் விழிகளுக்குள் அடங்கி விடுகிறதே.

"யப்போய்ய்ய்.." முணுமுணுத்த படி பார்வையை அகற்ற தூரத்தில் தொலைந்திருந்த அவளின் பார்வை இப்போது காளையின் முகத்தை ஆராய்ந்தது.

"எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் சார்.." மனதில் பூண்ட உறுதியுடன் தீர்க்கமாய் அவள் சொல்ல சில்லென்ற உணர்வு காளையவனில்.

அவளின் முகபாவத்தை வைத்தே அவள் முடிவெடுக்கக் கூடும் என்று அவனும் ஊகித்தல்லவா இருந்தான்.அதனாலோ என்னவோ பெரிதாய் அதிர்வேதும் இல்லை.

"ம்ம்..ரொம்ப சீக்கிரமா முடிவ சொல்லிட்டீங்க..?"

"ரொம்ப யோசிச்சோம்னா கொழம்பிரும்.."

"ஆமா கல்யாணத்துக்கு உங்க கன்டிஷன் என்ன..?"

"அதுஉஉஉஉஉ" அவள் இழுக்க காளையவனின் புருவங்கள் நெறிந்தன.

"சொல்லுங்க மித்ரா..நா தப்பா ஏதும் எடுத்துக்க மாட்டேன்.." அவன் சொல்ல அவளுக்குள் மெல்லிய அதிர்வலைகள்.ஓரப்பார்வையால் எப்படி தன் மன எண்ணத்தை அறிந்து கொள்கிறான்,என்று.

"எங்க வீட்ல நானும் அப்பாவும் தம்பி தங்கச்சி தான் இருக்கோம்..மிடில் க்ளாஸ் பேமிலி..வேலக்கி போறதுக்காக நா சித்தி வீட்ல தங்கி இருக்கேன்.."

"ம்ம்.."

"நா பேசறது சரியா தப்பான்னு தெரியாது..ஏதாச்சும் ஹர்ட் ஆகுனா சாரி.." அவள் துவங்க முன்பே மன்னிப்பு யாசிக்க அவனின் இரு புருவங்களும் உயர்ந்து நின்றன,மெச்சுதலாய்.

"ம்ம்..சொல்லுங்க.."

"எனக்கு கல்யாணத்துக்கு ரொம்ப செலவழிக்கிறதுல இஷ்டம் இல்ல..என்னோட பேமிலி சிட்டுவேஷன் அப்டி கெடயாது..அதனால சிம்பிளா கோயில்ல கல்யாணம் பண்றது தான் என்னோட ஐடியா..
கல்யாண செலவ பாதி பாதியா பிரிச்சு பண்ணனும்..என் கிட்ட சேவிங்க்ஸ் இருக்கு..அதுல இருந்து எடுத்துப்பேன்..எங்கப்பாக்கு சொந்தமா இருக்குறது அவரோட வீடு மட்டுந்தான்..அது என்னோட தம்பிக்கு தான் சொந்தம்..அதனால என் மூலமா சொத்து எதுவும் வராது..ஏன்னா என்னோட பேர்ல எந்த சொத்தும் இல்ல..எங்க வீட்டால நக எல்லாம் போட முடியாது..என்னோட சேவிங்க்ஸ்ல வாங்குனது மட்டுந்தான் இருக்கு..ஒரு செயின் உம் ஒரு செட் தோடும்.."
நில்லாமல் பேசியவளுக்கு மூச்சு வாங்க அவள் வார்த்தைகளில் தோன்றிய புன்னகை இன்னுமே அவனிதழ்களில் உறைந்திருந்தது.

"வரதட்சண எதுவும் கெடயாது..நீங்க வரதட்சண கேட்டா நான் உங்கள கட்டிக்க மாட்டேன்.."உரிமையுணர்வோடு செவியில் மோதிய அவளின் குரலில் ஒரு நொடி வியந்தாலும் மேலே பேசுமாறு சைகை செய்தன,அவனின் விரல்கள்.

"வேற கல்யாணம் பத்தி சொல்ல எதுவும் இல்ல..இவ்ளோ தான்..ஆனா என்ன பத்தி ஒன்னு சொல்லனும்.."

"என்ன சொல்லனும்..?" அவனின் குரலில் கொஞ்சமாய் குறும்புத் தொனி.

"நீங்க நெனக்கிற மாதிரி பொண்ணு கெடயாது நான்..நா கொஞ்சம் ரகட் டைப்..நா எப்டி இருப்பேன்னு எனக்கே தெரியாது..உங்களுக்கு என்ன சமாளிக்கற பொறும இருந்தா நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லுங்க.."மூச்சு வாங்கிய படி பேசி முடித்தவளின் மீது அவள் பாராத நேரங்களில் தொட்டு மீண்டது,காளையவனின் பார்வை.

"ம்ம் இவ்ளோ கண்டிஷன்ல.." தாடையை தடவி யோசிப்பது போல் சைகை செய்தவனுக்கு அவளை சீண்டிப் பார்த்திடும் எண்ணம்.

"இவ்ளோ கண்டிஷன என் மனசு தாங்குமானு தெரியல..நா யோசிச்சு சொல்றேன்.." தீவிரமாய் அவன் சொல்ல சட்டென வாடிவிட்டது,அவளின் முகம்.காளையவனிடமிருந்து வேறேதுமொரு பதிலை அவள் மனம் எதிர்பார்த்து இருக்கும் போலும்.

"சரி மித்ரா..நா அப்றமா அங்கிள் கிட்ட சொல்றேன்..பாய்.." என்று விட்டு அவன் கிளம்ப பிதுங்கிய இதழ்களுடன் தூண் அருகே சம்மணமிட்டு அமர்ந்தவளுக்கு கண்களில் எல்லாம் நீர் கட்டி பாய்ந்திடும் வேகத்துடன் முட்டிக் கொண்டு நின்றது.

"என்ன இப்டி சொல்லிட்டு போறாரு..அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாரோ..ஒத்துக்கலனா நா என்ன பண்ணுவேன்..?" தன் பாட்டில் புலம்பியவளுக்கு அதீத உரிமையுணர்வுடன் அவனிடம் நடந்து கொண்டதை எண்ணி தன் மீதே கோபமாய் வந்தது.

              ●●●●●●●●●●●

இரவு நேரம்.

அறையில் இருந்த பால்கனியில் நின்று அந்த கருவானத்தை இரசித்து நின்றவனுக்குள் ஏதோ ஒரு உவகை.

அவளைக் கண்ட நாள் முதல் இப்படித் தான் உணர்கிறான்,அவனும்.
முதல் பார்வையில் அவளை பிடித்ததென்று சொல்ல முடியாதென்றாலும் ஏதோ ஒன்று அவள் புறம் தன்னை ஈர்த்தது என்பதை அவனால் மறுக்க இயலாது.

அது எப்படி சாத்தியம்..?
இன்னுமே அவனின் மனதை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி அது.

பார்த்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காது.ஆனால்,பல நாள் அவளுடன் பழகியது போல் அவளுடன் நெருங்கி விட்டதன் இரகசியம் தான் என்ன..?

ஆழ் மனத் தேடலுக்கான வெற்றிடங்கள் எல்லாம் அவளால் நிரப்பபட்டதை உணர்ந்தவனுக்கு இத்தனை மாற்றங்களுக்கும் காரணம் புரிந்திடவில்லை.அதுவும் சில நாட்கள் எனும் போது வியப்பாகத் தான் இருந்தது.

அதிலும் மனக் கண்ணில் அவளின் விழிகள் நினைவில் வர தேகம் ஒரு முறை சிலிர்த்தடங்க விரல்கள் இடது புற நெஞ்சை மெதுவாய் நீவி விட்டன.

"கண்ணாலே சாவடிச்சிருவா.." இதழ்கள் உச்சரித்திட புன்னகை உறைய நின்றிருந்தான்,ஜீவா.

ஜெயகிருஷ்ணனிடம் சம்மதம் சொல்லி விட்டாலும் மித்ராவுடன் பேசிடவே மனம் விழைந்தது.

அவரிடம் அவளின் அலைபேசி எண்ணை வாங்க தடுத்து நின்ற தயக்கமும் தகர்த்து நின்று கேட்கையில் அவரிதழ்களில் ஓடிய நகைப்பும் இப்போதும் அவனுக்கு சங்கடத்தை தந்திட இரு உதடுகளையும் அழுத்திக் கொண்டவனின் வதனத்தில் துளிர் விட்டு பூத்திருந்தது,வெட்கப்பூவொன்று.

ஏனோ அவளின் குரலை கேட்க வேண்டும் என மனம் முரண்டு பிடிக்க அதை தடுக்கும் வழி தெரியாது தடுமாறியவனின் விரல்கள் அலைபேசியை எடுத்து அவளின் எண்ணை அழுத்தியே விட அழைப்போமா வேண்டாமா என்கின்ற தயக்கம் மனம் முழுவதும்.

எத்தனை முறை பெருவிரல் விரல் நீண்டு குறுகியதோ..?
விரலில் கூடவே மெல்லிய நடுக்கமும்.

"ரிலாக்ஸ் ஜீவா..போன் தான பேசப் போற.." தனக்கு சொல்லிக் கொண்டு அழைப்பெடுக்க மறுமுறையில் ஏற்கப்படும் வரை காத்திருக்கும் தைரியம் இல்லை,காளைவனிடம்.

துண்டித்து விடுவோமா என்கின்ற முனைப்புடன் தொட முயல மறுமுனையில் ஏற்றிருந்தாள்,அவள்.
காளையவனின் எண் அவளிடம் இல்லாதிருக்க யாராயிருக்கும் என்கின்ற எண்ணத்தில் "ஹலோஓஓஓ" என்றவளின் புருவத்தில் முடிச்சுக்கள்.

அவள் அழைப்பை ஏற்றது ஒரு புறம் அதிர்வென்றால் இப்போது குரலைக் கேட்டதும் காளையவனின் இதயம் நின்று துடிக்க எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவனின் தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.

கொட்டாவி விட்ட படி கட்டிலில் சாய்ந்து எழுந்தமர்ந்தாலும் உறக்க கலக்கம் மீதமிருக்க மறுமுனையில் பதில் ஏதும் வராதது கண்டு பெண்ணவளுக்குள் சிறு சலிப்பு.

"ஹலோ யாரு பேசறீங்க..?" கை மறைவில் கொட்டாவி விட்ட படி கேட்டவளின் கண்கள் சொக்கியது.ஏற்கனவே ஜீவாவைப் பற்றி கனவுகளாய் வந்து நிற்க பயந்து எழுந்து மீண்டும் படுத்தவளுக்கு இப்போது தான் உறக்கம் கண்களை எட்டத் துவங்கியிருக்க அதற்குள் காளையவனின் அழைப்பு.

அலைபேசியை தள்ளி நிறுத்தி ஆழப் பெருமூச்சொன்றை விட்டவனோ "நா ஜீவா பேசறேன் மித்ரா.." கம்பீரமான குரலில் சொன்னாலும் அவன் குரலில் இழையளவு தடுமாற்றம் தாக்கியிருந்ததே.

அவன் குரலை கேட்டதும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தவளுக்கு விதிர்த்துப் போட்டது.
கனவிலும் கற்பனையையும் கலந்து இம்சிப்பது போதாதென்று இப்போது நிகழ் சுமக்கும் நிஜத்திலும்...

"இங்கயும் நீங்களா..?" விழிகள் பிதுங்க உள்ளங்கையை தலையில் வைத்த படி படபடப்பாய் கேட்டவளின் வார்த்தைகளை கிரகித்த நொடி காளையவனின் விழிகள் மினுமினுக்க இதழ்களில் அழகாய் ஒரு புன்னகை கசிந்தது.

"வேறெங்கயாச்சும் வந்தேனா..?" ராகமாய் அவன் கேட்க அவளுக்கு சட்டென எதுவும் உரைக்கவில்லை.

"ஹலோ மித்ரா இருக்கீங்களா..?" மென்மையில் கரைந்து இருந்தது அவன் குரல்.உயிரின் அடி ஆழத்தில் இருந்து எழுந்திருக்கும் போலும்.

"ஆஹ்..இருக்கேன் ஜீவா சார்..என்ன கேட்டீங்க..?" அவன் கேட்டது அவளுக்கு உரைக்கவில்லை.அவனின் குரல் கேட்டு உறைநிலையில் இருப்பவளுக்கு அது புரிந்திடுமா என்ன..?

"வேறெங்கயாச்சும் வந்தேனான்னு கேட்டேன்.." அவன் அழுத்தி நிதானமாய் சொல்லவே தான் உளறிக் கொட்டியது புரிந்தது,அவளுக்கு.

"கடவுளே என்ன பண்ணி வச்சிருக்கேன்.." மனதுக்குள் கேட்ட படி  இதழ் குவித்து ஊத அந்த பேரிரைச்சல் அவனைத் தீண்டிட காளையவனுக்குள் ஏதோ ஆனது.

அவளின் தடுமாற்றமும் தவிப்பும் அந்த ஒற்றைச் இரைச்சலின் ஊடு அவன் இதயத்துக்குள் நுழைந்ததோ.பிளந்திருந்த இதழ்களுக்கு குறுக்கே புறங்கையை தடுப்பாய் வைத்து ஆழமாய் சுவாசித்தான்,
காளையவன்.

"மித்ரா..நா கேட்டதுக்கு பதில் வர்ல இன்னும்.." தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு அவன் அதையே கேட்க அவளுக்கு திக்கென்றிருந்தது.

"இவரு விடவே மாட்டாரு போல.." நினைத்தவளோ இயல்பாய் பேச முயன்றும் வார்த்தைகளிலும் குரலிலும் அப்படியொரு தடுமாற்றம்.

"கோ..கோயி..கோயில்ல பா..பாத்தோ..பாத்தோம்ல..அ..தான்.." வியர்த்த விரல்களின் உபயத்தில் அலைபேசியை இறுகப்பற்றிய அமர்ந்திருந்தவளின் மறு கரமோ சொல்லி முடிப்பதற்குள் முகத்தை இரு தடவை மொத்தமாய் அழுத்தி மீண்டன.

"ஓஹ் அதயா சொன்னீங்க.."

"நம்புங்க சார்..அதத்தான் சொன்னேன்.." அவன் மறுத்து விடுவானோ என்கின்ற பயத்தில் பதறியடித்துக் கொண்டு உளறி விட  இரு புருவத்தை ஏற்றி இறக்கி அவன் விழிகளால் அவளுக்கு கொக்கி போட்டு நின்றது நிச்சயம் அவளுக்குத் தெரியாதே.

"நா நம்பலன்னு சொல்லவே இல்லயே மித்ரா.." அவன் சொல்ல அவனின் குரலில் மெல்லிய சிரிப்பொன்று கலந்திருப்பது போன்று தோன்றிட கூர் தீட்டி ஆராய முயன்றவளுக்குத் தோல்வியே.

"ஹலோ.." மீண்டும் அவன் தான் துவக்கினான்.இடையிடையே அவள் மௌனத்தை இறுக்கிக் கொள்வதன் காரணத்தை அவனால் கணிக்க முடியாமல் போகுமா என்ன..?

"ஹலோ சார்ர்ர்ர்.."

"என்ன அடிக்கடி ப்ரீஸ் மோட்கு போயிர்ரீங்க..?" வேண்டுமென்று தான் கேட்டான்.அவளை தடுமாற வைப்பது ஏனோ பிடித்திருந்தது.

"ப்ரீஸ் மோட் எல்லாம் இல்ல சார்..சும்மா யோசன.."

"ஆஹான்ன்ன்.." அவன் இழுத்த இழுப்பே கூறியது,அவன் நம்பவில்லை என.
அதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டவளுக்கு அவனை சமாளிப்பது என்னவோ மலையை பிளக்கும் வேலையாய் தோன்றியதன் மாயம் தான் என்ன..?

"சார் எதுக்கு சார் போன் பண்ணீங்க..? ஏதாச்சும் அவசரமா..?" அவன் அழைத்ததை பற்றி கேட்டாலும் அவளுக்குத் தெரியும் தான் கேட்பதில் தர்க்கம் இல்லை என்பது.அவசரத்துக்கு அழைத்தவனோ இப்படி அவஸ்தைக்குள்ளாக்குவானா என்ன..?

"அவசரத்துக்கு போன் பண்ணிட்டு இப்டி ஆற அமர பேசுவாங்களா மித்ரா..?" உள்ளுக்குள் ஏதோ ஒரு ஏக்கத்தை சுமந்தவனின் வார்த்தைகள் சாதாரணம் என்றாலும் குரல்...
காற்றோடு கலந்து வந்து செவியில் நுழைந்து இதயத்தை துளைக்கிறதே.

"இல்ல சார்..சும்மா தான் கேட்டேன்..போன் பண்ணிருக்கீங்களேன்னு.." எச்சில் விழுங்கிய படி அவள் சமாளிக்க எழுந்த புன்னகை அவனிதழ்களுக்குள் அடங்கிற்று.

"அப்போ நா போன் பண்ணக் கூடாதா மித்ரா..?" அதே உயிர்த்தொடும் குரலில் உளமுருகி நிற்க என்ன பதில் சொல்லிட இயலும்.

இன்று காலையில் விறைப்பாய் பேசி விட்டு தற்போது மொத்தமாய் உருகி அல்லவா போகிறாள்..?

"அப்டி இல்ல..சார் நைட் டைம்ல போன் பண்ணிருக்குறது தான்.."சமாளிப்பாய் அவள் அடித்து விட உள்ளங்கையால் வாயை மூடி புன்னகையை அடக்கிக் கொண்டான்,காளையவன்.

"அப்போ பகல் டைம் போன் பண்ணா பரவாலயா மித்ரா..?" தீவிரமாய் அவன் கேட்க இவளுக்கு நெஞ்சு வெடிக்கும் போல் இருந்தது.இது ஜீவாவா என்கின்ற சந்தேகமே துளிர்த்து விட்டது.

"மித்ரா.."

"சார்ர்ர்ர்ர்ர்.."

"இப்போ நா போன் பண்ணது ப்ரச்சனயா..இல்லன்னா நைட் டைம்ல போன் பண்ணது ப்ரச்சனயா..?"
கேள்வி கேட்க வந்தவளுக்கு மயக்கம் வரும் விதமாய் அவனின் தொடரான கேள்விகள் இருக்க "ஆத்தாடி.." அவளிதழ்கள் சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டன.

தேடல் நீளும்.

2024.04.05


Leave a comment


Comments


Related Post