இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 7 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 07-04-2024

Total Views: 22810

பாவை - 7

தன் இருக்கையில் அமர்ந்திருந்த மகிழனுக்கு தான் பார்த்தது நிஜம் என்றாலும் எப்படி இது சாத்தியமாகும் ? 

 ‘ஐஸ்வர்யா இறந்துப் போக இந்த கையால தானே அவளை நான் தூக்குனேன்.  என் முன்னாடி தானே அவளை எரிச்சாங்க. எப்படி இப்போ உயிரோட இருக்கா ? நிச்சியம் இவ என் தங்கச்சி ஐஸ்வர்யா தான் ‘தனக்குள்ளே நினைத்துக் கொண்டு இருந்தவன் தீப்தியிடம் கேட்டு விடலாம் என்று நினைத்தான்.

அப்போது அங்கு சில நோட்டுகளை வைக்க வந்த ஒரு பெண்ணிடம், “பைனல் இயர் கிளாஸ் ஸ்டுடெண்ட் தீப்தியை கொஞ்சம் வரச் சொல்லும்மா ?” என்க, சரியெனக் கூறி அந்த பெண் சென்று விட்டார்.

அவள் சென்று தீப்தியிடம், “அக்கா, உங்களை மகிழன் சார் ஆபிஸ் ரூமுக்கு கூப்பிட்டாங்க “ எனக் கூறி அவளின் வகுப்புக்குச் சென்று விட 

“என்ன எதுக்கு இந்த நேரம் கூப்பிடுறாரு “ தோழிகளிடம் குழம்பிக் கொண்டாள்.

“தெரியல. ஒரு வேலை காம்படீசன் பத்தி சொன்னாலும் சொல்லுவாரு போல. போய் கேட்டுட்டு வா “ என்று தோழிகள் கூற, அலுவகலம் நோக்கிச் சென்றாள்.

“மே ஐ கமின் சார் “  அனுமதிக் கேட்க,

“உள்ளே வாங்க “ என்றதும், அவரின் முன்னே வந்து நின்றாள். 

“அதர் காலேஜ் காம்படீஷன் ஒன்னு வருது. யாராவது ஜாயின் பண்ணப் போறாங்களா கேட்டு நோட் பண்ணி கொண்டாங்க. என்னென்ன போட்டிகள் இருக்குன்னு இதுல லிஸ்ட் இருக்கு. ஷேர் பண்ணிருங்க “ எனக் கூறிக் கொடுக்க வாங்கிக் கொண்டாள்.

“சரிங்க சார் “ என்றவளோ கிளம்புவதற்கு திரும்ப,

“ஒரு நிமிஷம் “

“சொல்லுங்க சார் “

“காலையில உன்னை ட்ராப் பண்ணினது யாரு ?”

“என்னோட அண்ணி சார் “

“அண்ணியா ? அவங்க பேர் என்ன ? என்ன பண்ணுறாங்க ?” 

“எதுக்கு சார் இதெல்லாம் கேட்குறீங்க ?” என்கவே, தன் தவறினை புரிந்துக் கொண்டான். அவனோ வாத்தியார் என்ற பதவியில் இருப்பதையே ஒரு நொடி மறந்துப் போனான்.

அதை விட தனக்கு இப்போது முக்கியமான தெரிந்து ஆக வேண்டுமென்பதால் மறுபடியும் முயற்சி செய்துப் பார்த்தான்.

“சும்மா தெரிஞ்சிக்கலாம்ன்னு தான் கேட்டேன். எங்கையோ அவங்களைப் பார்த்தது மாதிரி இருந்தது அதான். சாரி நீங்க போங்க “ என்கவே, சட்டென அவனின் முகம் வாடியதை போல் உணர்ந்தாள்.

எதையோ நினைத்து ஏமார்ந்து விட்டான் என்பது தீப்திக்கு கண்டதும் புரிந்து விட மனம் கேளாது, “என் அண்ணி பேர் அஞ்சனா, சாப்ட்வேர் கம்பெனில வேலைப் பார்க்குறாங்க “ என்றாள்.

“அப்படியா ? சரி “ என்க, அங்கிருந்துச் சென்று விட்டாள்.

‘ என்ன இவ அஞ்சனான்னு சொல்லுறா ? ஆனா நான் பார்த்தது ஐஸ்வர்யாவை தானே ? ஒரே ரத்தம் என்னால உறுதியா சொல்ல முடியும். இப்போ இவ கிட்ட இதுக்கு மேல தோண்டி துருவி கேட்கவும் முடியாதே. என்ன பண்ணலாம் ? ஒரு வேலை இவ என் தங்கச்சியாவே இல்லை அப்படினாலும் என்னைப் பார்த்து எதுக்கு  இவ ஓடிப் போகணும் ? அப்போ இதுல ஏதோ இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஏதோ நடந்திற்கு போல. ஏதாவது பண்ணி இதை கண்டு பிடிச்சே ஆகணும் ‘ நினைத்தவனுக்கு அன்றைய நாள் ஓடவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மாலை நேரம் கல்லூரி வேலை முடிந்து வீட்டுக்கு வந்துச் சேர்ந்தான் மகிழன்.

மகனின் பைக் சத்தம் கேட்டதுமே அவனின் அன்னை பார்வதி வந்து கதவினை திறக்க, இன்னுமே அதே யோசனையோடு தான் வீட்டுக்குள் நுழைந்தான்.

சோபாவில் வந்து அமர, “என்னாச்சுடா, என்ன யோசிக்கிற ? டீ போடட்டா “ கேட்க,

“அம்மா இன்னைக்கு தான் ஐஸ்வர்யாவை பார்த்தேன்மா “ வேகமாய் கூற, டிவி பார்த்துக் கொண்டிருந்த அவனின் தந்தை சிவராம் அப்படியே அமர்த்தினார்.

“என்னடா சொல்லுற?”

“அதானே செத்துப் போனவ எப்படிடா திரும்ப வருவா ?” என்று பெற்றவர்கள் இருவரும் கேட்க, அவனால் அதற்கு பதில் கூற முடியவில்லை.

“இல்லைம்மா. நான் பார்த்த பொண்ணு நம்ம ஐஸ்வர்யா தான்மா. என்னை பார்த்தும் வேகமா இஸ்கூட்டியை எடுத்திட்டு போயிட்டா “ என்று இன்று கண்டது, தீப்தியிடம் கேட்டது அனைத்தையும் கூறினான்.

“டேய், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உன் பிரம்மையா. உடல்வாகு நம்ம பொண்ணு மாதிரி இருந்திருக்கும். உடனே உனக்கு உன் தங்கச்சி நியாபகம் வர அப்படி தோணிருக்கும். நான் பெத்த முத்து பிள்ளைகளை இந்த கையால தானேடா கொல்லிப்போட்டேன் “ என்று கூறும் போதே சிவராமிற்கு விழிகள் கலங்கி விட்டது.

“போன உசுரு திரும்ப வரப்போறதில்லை. அப்பா சொன்னது சரி தான் நீ எதையாவது நினைச்சிக்கிட்டு இருக்காதே. முதல்ல போய் துணியை மாத்து “ எனக் கூறிய அவனின் அன்னையும் சென்று விட, திடிரென பேசியதால் மகளின் நினைவு வர சிவராமும் அங்கிருந்தது வேதனையோடுச் சென்றார்.

அலுவலகத்திற்கு வந்த அஞ்சனாவிற்கும் அன்று வேலை ஓடாது தலை வலியோ அதிகரிக்க, விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டாள்.

இருளுக்குள் தன் வாழ்க்கையை தானே முடக்கிக் போட்டிருக்க, இன்று காலையில் வேற அவனைக் கண்டதை நினைத்து வலியோ அதிகரித்தது.

இவ்வளோ தூரம் அனைவரையும் விட்டு வந்ததிற்கு பலனை எதிர்பார்த்து காத்திருக்க, இந்த நொடி ஏன் தனக்கு இப்படியொரு நிலைமை ? அறையின் தனிமையில் அமர்ந்திருந்த அஞ்சனாவின் நினைவுகளோ தன் வசந்த காலத்திற்குச் சென்றது.

திருநெல்வேலி அருகில் இருக்கும் மாயனாபுரம்  ஊரில் கோவில் திருவிழாவிற்கு ஊரே கூடியிருந்தது. அந்த ஊரின் தலைவரான சிவராமின் பொறுப்பில் தான் அனைத்துமே நடைபெற்றது.

சின்னச் சின்ன போட்டிகள் எல்லாம் நடைபெற மீன் பிடி போட்டியும் நடைபெற்றது. சொல்லப் போனா மீன் பிடி திருவிழா என்று தான் அதனை அழைக்கவேச் செய்வார்கள்.

அன்று அந்த விழா ஆரம்பிக்க, அதற்க்கான அனைவருமே கையில் கூடையோடுக் காத்திருந்தனர். அதில் சிவராமின் மகளால ஐஸ்வர்யாவும், ஆனந்தியும் கலந்திருந்தனர்.

வீட்டில் போட்டி நடைபெறும் இடத்திற்கு வரக் கூடாது என்று கூறித் தான் வந்திருந்தான் சிவராம். ஆனால் இங்கு வந்து போட்டி துவங்கி வைத்த பின் தான் தெரிந்தது கூட்டத்தில் தன் இரு மகள்களும் இருக்கிறார் என்று.

“ஐயா, பாப்பா ரெண்டு பேருமே வந்திருக்காங்க போல “

“ஆமா முனியசாமி, அதுக ரெண்டு பேரையும் அந்த இடத்துல இருந்து வெளியே கூட்டிட்டு வந்து வீட்டுக்கு போகச் சொல்லு “

“எதுக்கு சிவராம் ? சந்தோஷமா விளையாடிட்டு போகட்டுமே ?”

“வயசுப்பிள்ளை இப்படி ஆடிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் சொல்லு ? அதுவும் என் வீட்டுப் பிள்ளைகள். ஊர்த்தலைவர் பொண்ணை இப்படி வளர்த்திருக்காருன்னு நாலு பேர் பேசிறக் கூடாதுல “ என்கவே,  உடன் இருந்த அவர்களின் வீட்டு வேலைக்காரன் விளையாடும் இடத்திற்குச் சென்றான்.

முனியசாமி வருவதைக் கண்ட பெண்கள் இருவருமே, “அடியேய் ! முனியண்ணே வருது. அப்பா நம்மளை பார்த்திட்டாரு போல “ என்க,

“ஏக்கா, அதான் மீன் பிடிக்க சேத்து தண்ணிக்குள்ள இறங்கியாச்சுல. கண் மறைஞ்சி பிடிப்போம். முனியண்ணே நம்மளை கண்டு பிடிக்கிறதுக்குள்ள ஒளிஞ்சி பிடிப்போம் “ என்று அக்கா, தங்கை இருவரும் பிளான் போட்டு அதன் படியே கூட்டத்துக்குள்  தலைமறைவாகினர். 

தூரத்தில் மேடையில் அமர்ந்திருந்த சிவராமிற்கு மகளின் செயல்கள் புரிய, முனியசாமியோ எங்கே என்று நொடியில் தேட ஆரம்பித்தார். 

நேரங்கள் கடந்து ஒரு வழியாக முனியசாமி இருவரையும் பிடித்து விட்டு, “வாங்க பாப்பா, உங்களை திட்டிட்டு இருக்காரு. அடிக்கப் போறாரு பிள்ளைகளா வாங்க “ எனக் கூறி இருவரையும் பிடித்துக் கொண்டு இழுத்தார்.

இதற்குள் மேல் முடியாது எனத் தெரிந்த பெண்களும் பிடித்த மீன்களை தோழிகளிடம் கொடுத்து விட்டு வெளி வந்தனர். அங்கே இருந்தவாறு தந்தையை முறைத்துக் கொண்டு முனியசாமியோடு வீடு நோக்கிச் சென்றனர்.

பழங்காலத்து வீடாக இருந்தாலும் அரண்மனைப் போன்று காட்சிக் கொடுத்த வீட்டில் மாலை நேரம் போல் பெண்கள் இருவரும் ஆளுக்கொரு தூணை பற்றிக் கொண்டு நின்றிருந்தனர்.

“நான் அவ்வளோ சொல்லியும் அந்த இடத்துக்கு எதுக்கு போனீங்க ரெண்டு பேரும் ? ஒரு வழியா என் மானத்தை வாங்கிடீங்க. சிவராமே ஆடுகாளி பிள்ளைகளை பெத்து வச்சிருக்கான் ஊர் உலகம் பேசவா சொல்லுங்க ? ஆரம்பத்துல இருந்து பொட்டபிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு. அதான் இந்த ஆட்டம் ஆடுறீங்க ? வயசுப் பிள்ளைகள் கை வைக்காம இருந்தா சேட்டை பண்ணிட்டு திரியுறீக ரெண்டு பேரும். நல்லதுக்கில்லை சொல்லிப்புட்டேன் “ என்று மகள்கள் இருவரையும் திட்டி விட்டு மனைவியின் புறம் திரும்பினார்.

“ஆத்தாவா நீ எதுக்குடி இந்த வீட்டுல இருக்கே ? பிள்ளைக வெளியே போனது கூட தெரியாம அப்படி என்னடி வீட்டுல புடுங்கிட்டு இருக்கே ? இனி ஒரு தடவை இப்படி ஏதாவது நடந்தது அப்பறம் நான் சும்மா இருக்க மாட்டேன். “ என்று மனைவியையும் சேர்த்து கத்தியவரோ அங்கிருந்துச் செல்ல, பெண்கள் இருவரும் சிரித்தனர்.

சட்டென திரும்பியவரோ, “ஆனந்தி “ மூத்த மகளை அழைக்கவே,

“அப்பா “ என்றவாறு முன்னே வந்து நின்றாள்.

“எப்போ சென்னைக்கு போறே ?”

“அடுத்த வாரம்ப்பா “

“நாளைக்கே கிளம்பு. ரெண்டு பேரும் ஒரு இடத்துல இருந்தா அந்த இடமே உருப்பிடாது “ எனக் கூறிச் செல்ல, தந்தையை மனதுக்குள் அர்ச்சரித்தாள்.

தந்தை உறுதியாகச் சென்று விட்டது தெரிந்த பின்னே, “ஏம்மா, உன் வீட்டுக்காரருக்கு கொஞ்சம் கூட என் மேல அக்கறையே இல்லையா ? பிள்ளை வருஷத்துல நாலைஞ்சு தடவை தான் ஊர்ப்பக்கமே வாராலே. கூட கொஞ்சம் நாள் இருந்து அனுப்பி வைக்கணும் தெரியுதா. நாளைக்கே கிளம்பச் சொல்லுறாரு. இனிமே நான் வரவே மாட்டேன் “ உதட்டை சுழித்துக் கொண்டு கத்தியவளோ வெடுவெடுக்கென தன் காலினை தரையில் பதித்து நடந்துச் சென்றாள்.

அவள் அறிந்துச் சொன்னாலோ அல்லது அறியாமல் சொன்னாலோ விதி அவளை அவ்வாறு தான் ஆக்கி வைத்தது.

தங்கையோடு அறைக்குள் நுழையவே, “இனிமே வர மாட்டேன்னு ஏன் சொன்னேன். ஒரு வேலை மாமா கூட ஓடி போற ஐடியால இருக்கையா ?” கிண்டலோடுக் கேட்க,

“கத்தாதடி. விட்டா நான் பண்ணுற விசியத்தை நீயே போட்டு கொடுத்திருவே போல. நான் அப்பவே சொன்னேன். நீ கேட்டையாடி. நாளைக்கு நான் சென்னைக்கு போகணும். இன்னும் நாலைஞ்சு நாள் இருக்கலாம் பார்த்தேன் “ எரிச்சலோடு தங்கையிடம் கத்த,

“அக்கா ! இதுனால என்ன ? ஆபிஸ்ல எப்படியும் நீ லீவ் போட்டே. அதை வீணாக்காம இருக்க நான் ஒரு யோசனை சொல்லட்டா ?” என்க,

“என்ன சொல்லு ?”

“மாமா கூட எங்கையாவது அவுட்டிங் போய்ட்டு வா “ என்கவே, ஆனந்திக்கும் இது நல்ல யோசனையாக தான் இருந்தது.

“சரி நான் அவன் கிட்ட சொல்லுறேன் “ என்றவளோ, நாளை செல்ல வேண்டும் என்பதால் தேவையானதை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

மறுநாள் கூறியது போல் ஆனந்திச் சென்று விட, கல்லூரி இறுதி ஆண்டில் இருந்த ஐஸ்வர்யாவும் தன் படிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.

சிவராம் அந்த ஊரிலே அனைவரையும் விட பணம் படைத்தவர். அதை விட ஊரின் தலைவரும் அவர் தான். எந்த விசியமாக இருந்தாலும் அவரைக் கேட்டு தான் முடிவெடுப்பர். அந்த குக்கிராமம் எப்போது அவருக்கு கீழ் தான் செயல்படும். அவரின் மனைவி பார்வதி அன்பனாவர்.

யாரிடமே கடின வார்த்தைகளை உதிர்க்காதவர். கணவரைப் போல் தான். யாராவது இல்லையென்று வந்தால் வாரி வழங்குபவர். இவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள்.

முதலில் மகன், அடுத்த இரண்டும் பெண் பிள்ளைகள். ஆண்மகனுக்கு மட்டும் கல்வி போதும், பெண்களுக்கு எதற்கு என்று நினைக்காது சரி சமமாக படுக்க வைத்தார்.

மகன் மகிழன் நன்றாகப் படித்து வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் வாங்க, இரண்டாவது பிள்ளை மகளோ அவளும் படித்து முடித்து வேலைப் பார்த்து வருகிறாள்.

படித்த கல்லூரியிலே வேலைக்கு தேர்வாகி கடந்த இரண்டு வருடமாக சென்னையில் வேலை பார்த்து வருகிறாள். அழகு மங்கை தான். தந்தையின் சொல்லை தட்டாமல் கேட்பவள். தங்கையோடுச் சேர்ந்து சிறு குறும்புத்தனமும் இருக்கும்.

கடைசி மகள் தான் ஐஸ்வர்யா. முதுகலை இரண்டாம் ஆண்டு பக்கத்து டவுனில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறாள். நேர்மைக்கும், உண்மைக்கும் குரல் கொடுப்பவள். எந்த பிரச்சனை வந்தாலும் முன்னே இருந்து சாமாளிப்பவள். பார்த்தால் சுட்டிப்பெண் போல் தான் இருக்கும். அவளோடு பழகியவர்களுக்கு மட்டும் தான் அவளின் குணம் தெரியும்.

இன்பமாக அவர்களின் நாட்கள் கடந்துச் செல்ல, அடிக்கடி கைபேசியில் மகன் மற்றும் மகளோடு பேசிக் கொள்வர்.

அன்று ஒரு நாள் வீட்டுக்கு வந்த சிவராம் யோசனையோடு இருக்கையில் அமர, மனைவி என்னவென்று வந்துக் கேட்டார்.

“இன்னைக்கு சுப்பையா மாமா மகன் நாராயணனை டவுன்ல வச்சி பார்த்தேன். அவனோட மகனுக்கு பொண்ணு தேடிட்டு இருக்கானாம். நம்ம மகளை கேட்டேன். அதான் யோசிச்சிட்டு இருக்கேன் “ என்க,

அப்போது தான் கல்லூரி முடிந்து வந்த ஐஸ்வர்யா ஏதோ பெற்றவர்கள் ரகசியம் பேசுவது போல் தோன்ற அப்படியே நின்று ஒட்டுக் கேட்டாள்.

“இதுல யோசிக்க என்னங்க இருக்கு ? ஆனந்திக்கி தான் கல்யாண வயசு வந்திருச்சுல. ஜாதகம் கொடுக்க வேண்டியது தானே ?”

“இருந்தாலும் உடனே எப்படி ?”

“நமக்கு என்னங்க குறை சொல்லுங்க. நம்ம என்ன விசாரிக்காமலா பொண்ணை கொடுக்கப் போறோம். ஜாதகம் பார்த்து, ரெண்டு பேரும் மணப்பொருத்தம் பார்த்து, மாப்பிள்ளையைப் பத்தி விசாரிச்சி தானே கொடுக்கப் போறோம் “

“ஆமா நீ சொல்லுறது சரி தான். அவன் நம்பர் கொடுத்திட்டு தான் போயிருக்கான். நாளைக்கு சாமியை கும்மிட்டு ஜாதகத்தை எடுத்து வை. அவன் கிட்ட கொடுக்குறேன். பார்த்து சொல்லட்டும் “ என்க, சரியெனக் கூறி மனைவிச் செல்லவே,

‘ஆஹா, அக்கா இல்லாத நேரம் இது வேறையா ? முதல்லையே அவ கிட்ட சொல்லணுமே ?’ மனதுக்குள் நினைத்தவளோ வேகமாய் தன் அறைக்குச் சென்றாள்.

தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Leave a comment


Comments


Related Post