இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...25 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 08-04-2024

Total Views: 32954

அடுத்தடுத்த இரண்டு நாட்கள் முறைப்பும் விறைப்பும் சேவல் சண்டையும் செல்ல ரொமான்ஸுமாய் ஒரு ஜோடிக்கு கழிந்திருக்க… மற்றொரு ஜோடியோ நீங்கள் அடித்து உருண்டால் என்ன அணைத்து புரண்டால் என்ன என்ற ரீதியில் அறையே அடைக்கலமாக கிடந்தனர். முகிலன் திருமணம் முடிந்த மறுநாளே தரணியின் பொருட்கள் அனைத்தும் பூச்செண்டின் அறைக்கு மாற்றப்பட்டன. பொறுப்பாய் எடுத்து அடுக்கி வைத்தது முகிலனும் மீராவும்தான். வேறு வழி…? 


மீண்டும் ஆட்டோ ஓடும் அளவு இடைவெளியுடன் கட்டிலின் நுனியை பிடித்துக் கொண்டு முதுகு காட்டி இருவரும் இரவு நேர உறக்கம். ஆனால் இதுவும் பிடித்திருந்தது… பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் நாசியை தழுவும் இருவரின் பிரத்தியேக வாசமும் இன்பம் கூட்டுவதாய் அமைந்து போனது‌. ஆனாலும் தரணிக்கு மிகப்பெரிய சோதனை காலம்… தவித்துத்தான் போனான்… ஆனாலும் ரசனையாய் மாற்றிக் கொண்டான்.


மீண்டும் பணிக்கு திரும்பி இருந்தனர் மூவரும்… பூச்செண்டு மட்டுமே தனியாக வீட்டில். சில சமயங்களில் தன் கணவனுடன் நடத்தும் செல்லப் போர்களை அசைபோட்டு சிரித்துக் கொள்வாள்… செல்லமாய் திட்டிக் கொள்வாள்… சில சமயங்களில் தொலைக்காட்சியில் ஆழ்ந்திருப்பாள்… அதிலும் அவனை நினைவுபடுத்துவது போன்றே ஏதேனும் காட்சிகள் தோன்றும்… மொத்தத்தில் அவள் மனதை அதிகமாக ஆக்கிரமிக்க தொடங்கியிருந்தான் தரணி.


அன்றும் அப்படித்தான்… வேலைகளை முடித்து தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தாள் பூச்செண்டு. நானி நடித்த திரைப்படம் ஒன்று ஒரு சேனலில் ஓடிக் கொண்டிருக்க ஏற்கனவே பலமுறை பார்த்திருந்த போதும் மீண்டும் விரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென உள்ளே நுழைந்திருந்தான் தரணி. ‘என்ன இது… சம்பந்தமில்லாத நேரத்துல வந்திருக்கார்…’ குழப்பமாய் அவனை ஏறிட்டவள் மீண்டும் தொலைக்காட்சியின் பக்கம் கண்களை திருப்பிக் கொண்டாள்.


முகத்தை இறுக்கமாய் வைத்தபடி குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தான் மன்னவன். அறைக்குச் செல்வதும் சமையல் அறைக்குள் செல்வதும் கூடத்தில் அவள் முன்னே இங்கு அங்கும் நடமாடுவதுமாய் மூல வியாதி வந்தவன் போல் சுற்றிக்கொண்டே இருந்தான்.


‘என்ன ஆச்சு இந்த மாமுக்கு…? எதுக்கு இப்படி அலைஞ்சுகிட்டே இருக்கு…? ஒழுங்கா படம் பார்க்க விடாம குறுக்கையும் நெடுக்கையும் திரிஞ்சு கடுப்படிக்குதே…’ ஓரப்பார்வையால் அவனைப் பார்த்தாலும் தொலைக்காட்சியில் இருந்த கவனத்தை மாற்றவில்லை. முகத்தில் பல பாவங்களுடன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். வெடுக்கென டிவியை அணைத்திருந்தான் தரணி.


“எதுக்கு டிவியை ஆஃப் பண்ணினீங்க…? நான்தான் இன்ட்ரஸ்டா படம் பார்த்துட்டு இருக்கேன்ல…” சிடுசிடுவென அவன் மேல் பாய்ந்தாள்.


“இந்த படத்தை இதோட 132 வது தடவை போட்டுட்டாங்க… எப்போ போட்டாலும் பாப்பியா… இங்கே ஒருத்தன் சுத்திக்கிட்டு திரியுறேனே… என்ன ஏதுன்னு கேக்க மாட்டியா…?” தானும் பதிலுக்கு பாய்ந்தான் தரணி. நானிமேல் பொறாமை போலும்.


“நீங்க பாட்டுக்கு வந்தீங்க… நீங்க பாட்டுக்கு சுத்துறீங்க… நான் என்ன கேட்கணும்…?”


“ஏதாவது கேட்கக் கூடாதா…?”


“இப்போ என்ன…? நீங்க விடாம நடக்கிறதை பார்த்தா சூடு பிடிச்சுக்கிச்சுன்னு நினைக்கிறேன்… நாலு சின்ன வெங்காயத்தை பச்சையா மென்னு சாப்பிட்டு ஒரு சொம்பு தண்ணி குடிங்க… அஞ்சு நிமிஷத்துல சரியா போயிடும்…” அவனை சீண்டுவதுபோல் அசட்டையாய் சொன்னபடி மீண்டும் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க வெடுக்கின்று மீண்டும் அணைத்தான்.


“என்னடி…? எகத்தாளமா…?” இடுப்பில் கைவைத்து முறைத்தவனை தானும் இடுப்பில் கை வைத்து முறைத்தாள் அவன் தர்மபத்தினி.


“இந்த டி போடுற வேலையெல்லாம் வேண்டாம்…” புசுபுசுவென முறைத்தாள்.


“வேற எப்படிடீ… கூப்பிடணும்டீ… சொல்லுடீ…” ஒவ்வொரு வார்த்தைகளையும் நாக்கு வலிக்கும் அளவுக்கு அழுத்தினான்.


“என்ன… ஆபீஸ்ல உருப்படியா வேலை ஒன்னும் இல்லையா…? லீவு போட்டுட்டு வந்து மெனக்கெட்டு என்கூட சண்டை போடுறீங்களா…?”


“ஓய்… ஆபீஸ்ல நான்தான் சீஃப் ஸ்டாஃப்… தெரியும்ல…”


“சீஃப் ஸ்டாப் ஏன் இப்படி சீப்பா வந்து என்கூட மல்லுக்கு நிக்கிறீங்க…?”


“ஓ… எட்ட நின்னு பேசறதால சீப்பா தெரியுதா… நான் வேணா கிட்ட வந்து பேசட்டுமா…” பதிலடி கொடுத்தபடியே வேகமாய் அவளை நெருங்க பயந்து பின்னால் நகர்ந்தவள் தொப்பென சோபாவில் விழுந்திருந்தாள்.


மிரண்டு விழித்தவளை குனிந்து பார்த்தவன் “என்னைவிட அந்த நானி பேரழகனா…? ஹான்…” பொறாமையுடன் சுருங்கி இருந்த அவன் கண்களை பார்த்தவளுக்கு சிரிப்பு பொங்க இதழுக்குள் மறைத்துக் கொண்டவள் “அவருக்கென்ன… செம ஸ்மார்ட்… மேக்கப்பே இல்லாம க்யூட்டா இருப்பார்… நேச்சுரல் ஸ்டார் தெரியுமா…?” வேண்டுமென்றே உசுப்பேற்றினாள்.


“நாங்க மட்டும் முகத்துல நாலு இன்ச்க்கு மேக்கப் பண்ணிட்டு அலையிறோமா… பவுடர் போடுற பழக்கம் கூட எனக்கு கிடையாது… தெரியுமா…?” ஸ்டைலாக தன் மீசையை நீவிக் கொண்டவனை பார்க்கும்போது உள்ளுக்குள் ஏதோ பொங்கியது.


“இதைக் கேட்கத்தான் ஆபீசை பங் பண்ணிட்டு வந்திருக்கீங்களோ…” நக்கலாய் சிரித்தவள் பின் ஏதோ நினைத்துக் கொண்டவளாய் “ஐயோ… இனிமேதான் முக்கியமான சீனே இருக்கு… தள்ளுங்க…” அவனை இடித்துக் கொண்டு ஓடியவளின் கையை இழுத்துப் பிடித்து நிறுத்தி இருந்தான்.


“நான் ஒருத்தன் இங்கே பொழப்பை விட்டுட்டு வந்து பேசிட்டு இருக்கேன்… நீ நனியை பார்க்கிறேன் சோனியை பாக்குறேன்னு காண்டு ஏத்துறியா… நாளையோட கேபிள் கனெக்சனை கட் பண்றேன் பாரு…” தலையை ஆட்டியபடி கீழுதட்டை கடித்தான்.


“பண்ணிக்கோங்க… இருக்கவே இருக்கு செல்போன்… ஒரு நாளைக்கு மூணு நானி படம் பார்ப்பேன்… உங்களால ஒன்னும் பண்ண முடியாது…” பெருவிரலை ஆட்டி மூக்கை சுளித்தாள்.


“செல்போன் இருந்தாத்தானே பார்ப்பே… சிம்மை உடைச்சு போடுறேன்…” பற்களை நறநறத்தான்.


“ஓ… அப்போ எங்க கை பூ பறிக்குமோ..? உங்க லேப்டாப்பை உடைச்சு நொறுக்கிந் போடுவேன்… ஆபீஸ் வேலை எல்லாம் அரோகராதான்…” 


முதலில் கழுத்து வலிக்க வலிக்க நிமிர்ந்து பேசிக் கொண்டிருந்தது போல் தோன்றியது… இப்போது வாகாக சுகமாக அவனது முகத்திற்கு அருகே முகம் வைத்தபடி சூடான விவாதம் இருவருக்குள்ளும்.


‘நம்மகிட்ட ஏதோ எனர்ஜி இருக்கு… இவர் கூட சண்டை போட்டா மடமடன்னு வளர்ந்துடுவோம் போல… நானும் இவர் வளத்திக்கு வளந்துட்டேன்…ஹை…’


“காலை ஆட்டி பேன்ட்டை அழுக்கு பண்ணாதே… கழுத்தோட கையை கோர்த்துப் பிடி… சட்டையை கசக்காதே… வெளியே போகும்போது கசகசன்னு அழுக்கா போக முடியாது…” அவள் கண்களோடு கண்கள் கலந்து குறும்புப் பார்வையுடன் அவன் கூற ‘என்ன உளருது இந்த பனைமரம்…’ குழப்பமாய் குனிந்து பார்த்தவள் “அஹ்…” கண்கள் தெறித்து விழ உதட்டை மடக்கி வாயை அழுத்தமாய் மூடிக் கொண்டாள்.


‘இது எப்போ நடந்துச்சு…?’ சுகமாக அவன் வயிற்றில் அமர்ந்தபடி தீவிரமாக யோசிக்கத் தொடங்கினாள்.


“சண்டை போடுற மாதிரி இருந்தா இந்த பொசிஷன்தான் நமக்கு கரெக்ட். உன்னாலயும் குதிச்சு குதிச்சு சண்டை போட முடியாது… என்னாலயும் குனிஞ்சு குனிஞ்சு சண்டை போட முடியாது… ரெண்டு பேருக்குமே கழுத்து வலி வந்துடும்… This is the best option… okay…” இன்னும் வாகாய் அவளை இடுப்போடு இறுக்கிப் பிடிக்க குப்பென ஏறிய நாணத்துடன் முகம் சிவந்து போக அவனது முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவனிடமிருந்து விலகி இறங்கிப் போனவளை இன்னும் இறுக்கமாய் இழுத்து பிடித்தான்.


“இரு… இன்னும் சண்டை முடியல… எங்கே நிறுத்தினோம்…? ஆங்… என் லேப்டாப்பை உடைப்பியா…? நான் உன் மேக்கப் கிட்டை பக்கத்து வீட்டு வேணி அக்காவுக்கு தானமா கொடுத்துடுவேன்…”


“ஓ… தானமா கொடுக்கத்தான் என் அம்மாகிட்ட ஞாபகப்படுத்தி மறக்காம எடுத்துட்டு வரச் சொன்னீங்களோ…?” வாகாக அவன் கழுத்தோடு கட்டிக் கொண்டு மூக்கும் மூக்கும் உரச மீண்டும் சண்டை தொடர்ந்தது.


“வீட்ல சும்மா தூங்குறதை உருப்படியா யாருக்காச்சும் தானமா கொடுக்கிறது தப்பில்ல…” கண்களால் அவள் அழகு முகத்தை களவாடியபடி ஒரு கையால் முன் நெற்றியில் சிலுப்பி நின்ற அவள் முடிகளை ஒதுக்கிக் கொண்டிருந்தான் கள்ளன்.


“அப்புறம் என்னவோ பெருசா என்னை உருவாக்கப் போறதா பில்டப் கொடுத்ததா எங்க அம்மா பீத்துச்சு… மாமியாரை மயக்க பீலா விட்டீங்களோ…” 


கண்ணுக்குள் விழுந்து அந்த மயிலிறகு இமைகளுக்கு தொந்தரவு செய்து கொண்டிருந்த முடியை காதோரம் ஒதுக்கிக் கொண்டிருந்தவனை கவனிக்காது சண்டை போடுவதிலேயே குறியாக இருந்தாள் சண்டிராணி. நெருக்கமாய் அவள் மூச்சுக்காற்றும் முணுக்கென சிவந்து நின்ற அந்த மூக்கும் கோணி கோணி விடாது பேசிக் கொண்டே இருக்கும் அந்த இதழ்களும் அவனுக்குள் போதையை கூட்ட பொய்யாய் முறைத்துக் கொண்டிருந்தவனின் கண்களால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. காதல் கட்டவிழ்ந்து கண்களில் நின்றது. கதை பேசிய அந்த கண்களை அவளும் கண்டுகொண்டாள்.


“நான் பீலா விட்டேனா…?” திடீரென அவனது குரல் குழைந்து வெளிவந்தது.


“அ..அப்புறம் நீ..நீங்க ஏ..ஏன் அ..அப்படி…?” அவன் கண்கள் பேசிய பாஷையில் அவள் தடுமாறினாள்.


“நான் எதுக்காக இப்போ வீட்டுக்கு வந்தேன்னு தெரியுமா…?” காதல் வழிந்தோடியது குரலில்.


“எ..எ..எதுக்கு…?” எச்சில் கூட்டி விழுங்கியவள் தன்னிச்சையாய் அவன் சட்டை பட்டனை உருட்டினாள்.


“பெயிண்டிங் ஒர்க் முடிஞ்சிடுச்சு… இன்டீரியர் எப்படி இருக்கணும்னு சொன்னா ஆள் வந்துடுவாங்க…” மென்புன்னகையுடன் கூறினான்.


“பு..புரியல…?” நெற்றி சுருக்கினாள்.


“போகலாமா…?” காதோடு இதழ் உரச கிசுகிசுத்தான்.


“எ..எங்கே…?” அந்த நெருக்கத்தில் தடுமாறினாள்.


“சொன்னாத்தான் வருவியா…?” ஆழ்ந்த குரல் அவளுள் ஏதோ செய்தது.


“நீ..நீங்க சொ..சொல்றது எ..எனக்கு பு..புரியல…” அவனது நீள் மூக்கை ஆராய்ந்தபடியே கூறினாள்.


“கூட வந்து பார்த்து புரிஞ்சுக்கலாமே…” தடித்த உதடுகள் அழகாய் சிரித்தன… அந்த அழகுச் சிரிப்பில் விழுந்து போனாள் பேதை.


“ம்ம்…” 


தன்னிச்சையாய் தலையாட்டினாள். சற்று முன்வரை காச் மூச்சென்று கத்திக் கொண்டிருந்த இரண்டும் வார்த்தைக்கே வலிக்காமல் பேசிக் கொண்டன.


“இப்படியே போறதில எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்ல… ஆனா பாக்குறவங்க ஒரு மாதிரியா நினைப்பாங்க…” ஒரு பக்கமாய் இதழை சுழித்து குறும்பாய் சிரித்தவனை புரியாமல் பார்த்தாள்.


“மேடம் என் வயித்துல இருந்து கீழே இறங்கினீங்கன்னா உடனே கிளம்பலாம்…” பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி கூற கண்களை உருட்டி நாக்கை கடித்துக் கொண்டவள் “அச்சோ…” என்றபடி அவசரமாய் குதித்து இறங்கினாள். அவன் கீழ் உதட்டை கடித்தபடி சிரித்துக் கொண்டிருக்க அவளோ வெட்கத்துடன் அறைக்குள் ஓடி இருந்தாள்.


சிறிது நேரத்தில் அவனுடன் கிளம்பி வெளியே வந்திருந்தாள். எங்கு அழைத்துச் செல்கிறான் என்று அனுமானிக்க முடியவில்லை வாயாடி வனஜாவிற்கு. தனது ராயல் என்பீல்டை முறுக்கியவன் அவளை திரும்பிப் பார்க்க அமைதியாக ஏறி அமர்ந்து கொண்டாள்‌. முதன்முறையாக அவனுடனான டூவீலர் பயணம்… இடைவெளி விட்டுத்தான் அமர்ந்திருந்தாள்… பக்கவாட்டில் உள்ள கம்பியைத்தான் பிடித்திருந்தாள்… நெருங்கி அமர்ந்து அவன் வாசம் நுகர்ந்தபடி காற்றில் சடசடத்து முகத்தில் அடிக்கும் முதுகு சட்டையையும் முகத்தில் மோதும் அவன் பிடரி முடியையும் உணர்ந்து பார்க்க ஆசைதான்…ஆனால் முழுதாய் தயக்கம் இன்னும் விலகவில்லையே… காற்றை கிழித்துக்கொண்டு பறந்தான் தரணி.


‘கார் ஓட்டினாலும் ஸ்பீடுதான்… டூவீலரும் அப்படித்தான்… பெரிய ரேசர்னு நினைப்பு…’ உதடு அசையாமல் எரிச்சலாய் நாக்குக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.


“ரேசர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்… பட் லைப் ஸ்டைல் வேற மாதிரி ஆயிடுச்சு…” தலையை சற்றுப் பின்னால் நகர்த்தி சொன்னவனை மாயாவியை பார்ப்பது போல் பார்த்தாள். 


அவள் அதிர்ச்சியுடன் தன்னை பார்ப்பதை கண்ணாடி வழியே பார்த்தவன் செல்லப் புன்னகையுடன் கண்சிமிட்ட உதட்டை குவித்து செல்ல முறைப்புடன் கண்கள் சிரிக்க அவன் முதுகில் குத்தி கிள்ளி வைத்தாள்.


“ஏய்… கீழே தள்ளி விட்டுடாதடி…” சிரித்தபடியே நெளிந்தான். அவனது உரிமையான அந்த டி அழைப்பு அவள் உயிர்வரை சிலிர்க்கச் செய்தது.


நகரின் பிரதான பகுதியில் ஒரு பெரிய காம்ப்ளக்ஸின் முன் வண்டியை நிறுத்தினான். யாருக்கோ அழைத்து பேசியபடி முதல் மாடிக்கு அழைத்துச் சென்றான். வரிசையாக 10 கடைகள்… இரண்டாவது கடைக்குள் நுழைய புதிதாக அடிக்கப்பட்ட பெயிண்டின் வாசம் நாசியில் ஏறியது. பெரியதும் அல்லாத சிறியதும் அல்லாத அளவான அறை.


“பெயிண்ட் கலர் ஓகேவா…?” 


அறையின் வலது இடது புறங்களில் லைட் பிங்க் நிறமும் நுழைந்தவுடன் நேர் பார்வைக்கு சற்று அடர்த்தியான ரோஜாப்பூ நிறமுமாய் அறையின் அழகு வசீகரித்தது. மலங்க மலங்க விழித்தபடி அவள் அவன் முகம் பார்க்க “கெஸ் பண்ண முடியலையா…?” நெருங்கி வந்து அவள் மூக்கை பிடித்து ஆட்டினான். ஒற்றை விரலால் நெற்றியை கீறியபடி புரியாது நின்றாள் பூச்செண்டு.


“உன் திறமையை ப்ரூவ் பண்ணப் போற இடம்… உன்னை நிரூபிச்சு ஜெயிக்க வேண்டிய இடம்… இங்கேதான் நீ பியூட்டி பார்லர் ஆரம்பிக்கப் போற…” செல்லமாய் அவள் நெற்றியில் முட்டியவனை கண்களை அகல விரித்து ஆச்சரியமாய் பார்த்தாள்.


“நம்ம மேரேஜ் ரிசப்ஷன் முடிஞ்சு வந்த உடனே வெற்றிகரமா ஆரம்பிக்கப் போறோம்… அதுக்குள்ள இன்டீரியர் தேவையான பர்னிச்சர்ஸ் இதெல்லாம் பிளான் பண்ணிடனும்… எஸ்பெஷலி ரொம்ப அட்ராக்டிவான நேம் செலக்ட் பண்ணனும்… நானி படம் பார்க்கிறதை விட்டுட்டு இதைப் பத்தி எல்லாம் யோசி…” ஒற்றை விரலால் அவள் நடு நெற்றியில் ஒரு தட்டு தட்டினான். இதற்குள் சினேகமாய் புன்னகைத்தபடி ஒரு வாலிபன் உள்ளே நுழைந்தான்.


“பூச்செண்டு… இவர் ராஜேஷ்… இன்டீரியர் எப்படி வேணும்னு சொல்லிடு… அவர்கிட்ட கேட்டலாக் இருக்கு… அவசரம் இல்லாம பார்த்து முடிவு பண்ணு… பர்னிச்சர்ஸ் லிஸ்ட் ப்ரிப்பேர் பண்ணி வை… ராஜேஷ் நிறைய ஐடியாஸ் கொடுப்பார்… இது விஷயமா இன்னும் உனக்கு ஹெல்ப் பண்ண இன்னொரு ஆள் வராங்க…” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே கைப்பேசி அழைத்தது.


புருவத்தை உயர்த்தியவன் “நான் சொன்ன ஆள் வந்தாச்சு…” சிரித்தபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.


“விச்சு… வந்தாச்சா…? எங்கே இருக்க…? ஹான்… இதோ நான் வரேன்… அங்கேயே வெயிட் பண்ணு…” இணைப்பை துண்டித்தவன் “நீ ராஜேஷ் கூட கன்சல்ட் பண்ணிட்டு இரு… நான் போய் என் பிரண்டை கூட்டிட்டு வந்துடறேன்…” அவன் கிளம்பி இருக்க அவளால்தான் அடுத்தடுத்து அவசரகதியில் நடந்து கொண்டிருக்கும் அதிசயங்களை நம்ப முடியவில்லை.


‘மாமு… இவ்வளவு வேகமா வேலையில இறங்கிட்டீங்களா…?’ அவளது திறமையை தூக்கி நிறுத்த முனைப்புடன் இறங்கிய தன்னவனின் செயலில் சிலிர்த்துப் போனாள். ஆசை கூடிப்போனது… கட்டி அணைத்து கன்னங்களில் கடித்து வைத்தால் என்ன என்று தோன்றியது… உதடு கடித்து சிரித்துக் கொண்டவள் கவனத்தை ஒருநிலைப்படுத்தி ராஜேஷுடன் ஆலோசனையில் இறங்கினாள்.


சில நிமிடங்களில் சத்தமான சிரிப்புக் குரலுடன் தரணியை தொடர்ந்து உள்ளே நுழைந்தாள் ஓர் அழகான இளம் யுவதி… நவநாகரீக மங்கை.


“ஷீ இஸ் மை பிரண்ட் விசித்ரா… விச்சு…” அவள் தோளில் அழுத்தமாய் கை போட்டு உரிமையாய் நின்றவனை பார்வையால் கூறு போட்டாள் பூச்செண்டு.


“மை வைஃப் பூச்செண்டு…” கையை மட்டும் அவள்புறம் நீட்டி அறிமுகம்… 


‘என் தோள்ல கை போடாம அவ தோள்ல கை போட்டு நிக்கிற…’ கூடுதலாய் எரிந்தாள் குலேபகாவலி.


பொக்கேவுக்கு பொறாமைத்தீ கொழுந்து விட்டு எரியுது… இது தெரியாம விச்சுவுக்கு கிச்சு கிச்சு மூட்டி விளையாடிட்டு இருக்கு நெட்ட பக்கி… வீட்டுக்கு போன உடனே அவன் வயித்துல ஏறி உட்கார்ந்து ஒரு மணி நேரத்துக்கு வம்பளக்கப் போறா வாயாடி. அவனுக்கு அது ஜாலிதான்… ஆனா அம்மணி பாக்குற பார்வையில கண்ணுல இருந்து கங்கு மழையா கொட்டுதே… அப்போ இன்னைக்கு தரணி பயலுக்கு சேதாரம் அதிகம்தான். 


பொண்டாட்டியை ஒசரத்துக்கு கொண்டு வர்றியா மைனரே… இன்னைக்கு உன் உச்சி முடியை பிச்சு ஊதப் போறா பாரு… பின்ன… அவ கண்ணு முன்னாடியே விச்சு தோளோட தோள் சாஞ்சுக்கிட்டு போன்ல எதையோ காட்டி இளிச்சுக்கிட்டு இருக்க… ராசேசு இன்டீரியர் ஓகே பண்ணிட்டு போயிட்டாப்புல… உன்னோட இன்டீரியர் பார்ட்ஸ்க்கு கேரன்டி இல்லையே ராசா… 


அனேகமா நாளைக்கு நாங்க எல்லாரும் ரொட்டிக் கட்டும் சாத்துக்குடியும் வாங்கிட்டு வந்து உன்னை பார்த்துட்டு வருவோம்னு நினைக்கிறேன். அடேய்… நெட்ட மரம்… கெக்கே பிக்கேன்னு அவ கூட என்ன சிரிப்பு…? உன் பொக்கே மூஞ்சியை ஒரு நிமிஷம் நிமிந்து பாருடா… இதைத்தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதுன்னு சொல்லுவாங்களோ… செத்தான் சேகரு…


Leave a comment


Comments


Related Post