இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 08-04-2024

Total Views: 16400

காதலொன்று கண்டேன்!

தேடல்  16

அவனுக்காக..

பையனவனின் விழிகளோ இமைக்காமல் அவளை உரசிக் கொண்டிருக்க அந்த விழிகளில் ஓடிடும் உணர்வு என்னவென்று யாருக்கும் புரிந்திட வாய்ப்பில்லை.

யாழினிக்கு அவன் பார்வையை நினைக்கும் போதே உள்ளூரக் கலவரம்.எப்படியாவது நடந்து வெளியேறிடப் பார்த்தவளின் முன்னே மார்புக்கு குறுக்கே கரத்தை கட்டிய படி அழுத்தமான பார்வையுடன் வந்து நின்றான்,பையனவன்.

அவனின் கூர்ப்பார்வையில் பயந்து எச்சிலை விழுங்கிய படி தப்பிக்க முயன்றவளாய் அசடு வழிய அவள் சிரித்து வைத்திட அவனின் விழிகளின் கூர்மை இன்னும் கூடிற்று.

"அரே..எதுக்கு இப்டி பாக்குதுன்னு தெரியலியே.." மனம் ஒரு புறம் பயந்தாலும் "ஷார்ப்பான கண்ணு..அழகா இருக்கே.." என்பதாய் எண்ணத் துளிகள் மனதோரம் துளிர்க்கவும் மறந்திடவில்லை.

"எதுக்காக நடுவுல வந்த..?" அவள் எதிர்பாராத கேள்வி அவன் குரலில் கணீரென ஒலித்தது.அவனிடம் திட்டுக்களை எதிர்ப்பார்த்து பயந்தவளுக்கு இந்த வினாக்கள் இன்னும் பயங்கரமாய் தோன்றினும் அவனின் ஒருமை அழைப்பு ஏனோ மனதுக்கு அத்தனை பிடித்துப் போனது.

"அட இதுவும் நல்லா தான் இருக்கு..இனிமே இப்டியோ கூப்ட சொல்லனும்.." சிந்தனை தறி கெட்டு ஓட அவள் இந்த உலகில் இல்லை.

"யாழினீஈஈஈஈ" அழுத்தி அழைத்தவனின் குரலில் கொஞ்சமும் கோபம் இல்லை.அவளின் முகபாவத்தை படித்தவனுக்கு கோபம் கொள்ள முடியாமல் போனதன் மாயம் என்னவோ..?

"சார்ர்ர்ர்ர்ர்.." பம்மிக்கொண்டு அவள் குரல் தாவிப்பாய விழிகளில் பயம் சூழ்ந்தது.

"லிஸன்..பயப்ட வேணா..நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.." அவளின் விழிகளில் தெரிந்த பயத்தைக் கண்டு அவன் மொழிந்தது,இன்னுமின்னுமே அவளை அவன் புறம் ஈர்த்து விடும் என்று அவன் அறியவில்லை.

"எதுக்கு நடுவுல வந்தீங்க..?" மரியாதையான அழைப்பில் அவன் கேட்க அவள் முகம் வாடினாலும் காட்டிக் கொள்ளவில்லை,பெண்ணவள்.

"தோணுச்சு சார்..ஏன்னு தெரியல.." அவனை நேர்ப்பார்வையால் ஸ்பரிசித்து பதில் சொன்னவளின் வார்த்தைகளில் பொய்யில்லை என்பதும் அவனுக்கும் புரியத் தான் செய்தது.

அவனுக்கு வலிக்கும் என்பது மட்டும் தான் அந்த நொடி அவளில் சிந்தையில் உதித்த விடயம்.அதைத் தாண்டி வேறெதுவும் அவள் மனதை நிறைக்கவில்லையே.

"என்னது..?"

"நெஜமா தான் சொல்றேன் சார்..ஏதோ தோணுச்சு அது தான் அப்டி பண்ணேன்.."

"அப்போ வேற யாரு அந்த எடத்துல இருந்தாலும் நடுவுல குதிச்சிருப்ப..ரைட்..?" என்க மறுப்பாய் தலையசைத்தவளின் செயலில் அவனின் விழிகள் இடுங்கின.

"எனக்கு தெரிஞ்ச யாராச்சும் இருந்திருந்தா அந்த டைம் குதிக்கனும்னு மனசுக்கு தோணி இருந்தா வந்துருப்பேன் சார்..இப்போ கூட தோணலனா உங்களுக்கு குறுக்க வந்திருக்க மாட்டேன்.." பயந்து பயந்து சொன்னவளின் வார்த்தைகளில் துளியும் பொய்யில்லை.மனதுக்கு தோன்றியதை செய்திருந்தாள் என்பது தான் உண்மையும் கூட.

உனக்காக செய்தேன் என்ற நிலையும் இல்லை..
யார் இருந்தாலும் செய்திருப்பேன் என்ற நிலையும் இல்லை..
சுருக்கமாய்  சொல்லிட்டால் அவளின் நிலைப்பாடு இந்த இரண்டிற்கும் இடையில்.

கார்த்திக்கை பிடிக்கிறது.அவன் காயப்படுவது சற்றும் அவளுக்கு பிடிக்கவில்லை.அதனால் தான் அவன் வலியை தாங்கிக் கொள்ள முயன்றாள்.ஆனால்,காரணம் ஒன்றும் காதல் இல்லை.

அவள் சொன்ன வார்த்தைகளை கிரகித்துக் கொண்டவனுக்கு அவளின் எண்ணப் போக்கை தெளிவாய் கண்டு கொள்வது சிரமமாய்த் தான் இருந்தது.

அவளே குழம்பியிருக்க அவனுக்கு மட்டும் எங்கனம் தெளிவு பிறக்கும்..?

"அப்போ இதுக்கப்றம் எனக்கு யாராவது இப்டி பண்ணா நடுவுல குதிச்சுருவியா..?" மீண்டும் தெளிவு படுத்திக் கொள்ள முயன்று அவன் கேட்க அத்தனை எளிதில் அதற்கு வழி விட்டிடுவாளா அவள்..?

"அப்போ தோணுனா செய்வேன்..இல்லன்னா செய்ய மாட்டேன்.."என்க விழி பிதுங்கிற்று,பையனுக்கு

"ஊப்ப்ப்..இனிமே இப்டி பண்ணக் கூடாது சரியா..?" தன்மையாய் எடுத்து சொன்னாலும் தன் எல்லைக்குள் நுழையாதே என்கின்ற மறை பொருளை அறியாதவளா அவள்.

நொடியில் அவள் பார்வை முறைப்பாய் மாறிட பின்னிருந்து இத்தனை நேரம் இவர்களின் சம்பாஷணையைப் பார்த்துக் கொண்டிருந்த  அஜய்க்கு இதழோரம் கேளாமலே புன்னகை பூத்தது.

"எதுக்கு இப்ப மொறக்கிற..?"

"நா மொறக்கல சார்..சாதாரணமா தான் பாத்தேன்.." என்றவளின் பார்வை சட்டென பாவமாய் மாறியிருந்தது.

உள்ளுக்குள் சிரித்தாலும் விறைப்பாய் நின்றவனோ அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர அவனின் கேள்விக்கு அவள் விடை அளிக்காதது புரியாவிடினும் துருவிட மனம் முந்தவில்லை.
ஏனோ..?

பேன்ட்  பாக்கெட்டில் கையை விட்ட படி நகர்ந்தவனை பார்க்கையில் அவளுக்கு கோபமாய் வந்திற்று.

"காப்பாத்துனதுக்கு தேங்க்ஸ் கூட சொல்ல வேணா..இப்டி மெரட்டிட்டு போறாரு..உனக்குத் தேவ தான்..இத விட தேவ தான்.." தனக்குள் முணகிய படி கன்னத்தில் அறைந்து கொண்டவளுக்கு கன்னம் காயமாயிருந்து மறந்து போயிருக்க அடித்த அடியில் வலியெடுக்க "ஆஆஆ" என்று கத்தியிருந்தாள்,தன்னை மீறி.

இருந்த எரிச்சலில் கண்கள் கலங்கி விட்டிருக்க இதழ்கள் பிதுங்க அமர்ந்திருந்தவளின் அலறல் கேட்ட அடுத்த நொடி பதறியனவாய் அவளருகில் வந்திருந்தான்,கார்த்திக்.

"என்னாச்சு..? எதுக்கு கத்தற..?திரும்ப வலிக்கிதா..? ஆயின்மன்ட் பூசுனது பத்தலயா..?" அவனுக்காக வலியைத் தாங்கிக் கொண்டவளின் மீது எழுந்திருந்த பரிவினால் கேட்க உறுத்து விழித்தாள்,அவனை.

"ஒன்னுல்ல..நீங்க விழுந்தாலும் நா பாக்க வர மாட்டேன்..இனிமே நா கத்துனா மட்டுல்ல கைய கால ஒடச்சிகிட்டாலும் இப்டி கத்திகிட்டு வர கூடாது சரியா..?" அவனின் வசனத்தை மாற்றி அழுத்தமும் தீர்க்கமுமாய் அதே மறை பொருளுடன் உரைக்க பையனின் இதழ்களோ சிரிக்கத் துடித்தன.

"சாரி..மனிதாபிமானத்துல பண்ணிட்டேன்.." வேண்டுமென்றே முறைப்புடன்  சொல்லி விட்டு நகர அவளுக்கு சப்பென்றானது.அதற்கு மேலாய் ஏதோ ஒன்றை அவனிடம் அவள் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்.

"ச்சே..அமைதியா இரு..யாழினி.." தன் இயல்பு அவனின் முன் கட்டவிழ்ந்து கொட்டுவது புரிய அவளின் மனம் போகும் பாதையும் அத்தனை சரியாய் படவில்லை,அவளுக்கு.

தன்னிடத்தை அடையும் வரை கார்த்திக் பார்வை இருமுறை அவளை தொட்டு மீண்டது.அவளிடத்தில் வேறு யாரும் இருந்து இப்படி கோபத்தை காட்டியிருந்தால் அவனின் பதில் மொழி வேறாய் இருந்திருக்கும் என்பது முற்றிலும் உண்மை தான்.ஆனால், அவளிடத்தில் அதே முகத்தை காட்டத் தோன்றவில்லை.

அவன் கண்களுக்கு அவள் குழந்தையாய் தெரிய அவனுக்குள் தந்தையின் பரிவு எழுந்து நின்றது.

இது தான் காதலாகப் போகிறது என்பது நிஜம் என்றாலும் பையன் அதை உணர்ந்து கொள்வானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விதி வலியது ஆயிற்றே.

அலுவலக நேரம் முடிவடைய அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க தன் வண்டியை கிளப்ப முயன்று தோற்ற யாதவ்வோ "டயர் பன்சர்" என கடுப்பாய் திட்டிய படி தனது இரு சக்கர வாகனத்தை  தள்ளிக் கொண்டு செல்ல அதைக் கண்ட கார்த்திக் தோளைக் குலுக்கிக் கொண்டு நிமிர ஓரமாய் நின்றிருந்த யாழினியின் மீது படிந்தது,அவன் பார்வை.

முகத்தில் ஒரு உவகை மின்ன யாதவ்வை மிதப்பாய் பார்ப்பதும் பின்னர் ருத்ராவின் காதில் ஏதோ கிசுகிசுப்பதுமாய் நின்றவளின் மீது துளிர்த்தது,சிறு சந்தேகம்.

பையனின் பார்வை தன் மீதென்பது தெரியாது நின்றிருந்தவளை கலவரத்துடன் பார்த்திருந்தாள்,ருத்ரா.

"நீ பண்ணது சரியான்னு சொல்லு.."

"அந்த பன்னி பண்ணது மட்டும் சரியா..அதான் ரிவென்ஜ் எடுத்துட்டேன்.." என்று வில்லச் சிரிப்புடன் கேட்டவளின் செயலில் மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டாள்,தோழி.

"கார்த்திக் சாரே பேசாம தான இருந்தாரு..நீ எதுக்குடி அவன பழி வாங்கற..காபிய நீயா தான் மூஞ்சில வாங்கி கிட்ட..சரியாப் பாத்தோம்னா கார்த்திக் சார் தான் ஏதாச்சும் பண்ணிருக்கனும் அவனுக்கு.."

"ப்ச்ச்..நீ வேற அந்த உர்ரு மூஞ்சி கார்த்திக் சார் பழிவாங்கும்னு நெனக்கிறியா நீ..அன்பே சிவம்னு மன்னிச்சி விட்ருவாரு..இல்லன்னா காந்தி தாத்தா மாதிரி அகிம்சை வழின்னு ஒதுங்கிப் போய்ருவாரு..அதான் நானே பழி வாங்கிட்டேன்.."

"உனக்காக செஞ்சியா..? இல்லன்னா கார்த்திக் சாருக்காக செஞ்சியா..?" ஆராய்ச்சி பார்வையுடன் தான் கேட்டிருந்தாள்.தோழியின் மீது துளிர்த்திருந்த சந்தேகம் கிளை விரித்தாடியது,அவளின் செயல்களைக் கண்ட பின்னர்.

"அதுல என்ன டவுட்..கார்த்திக் சாருக்காக தான்.." அலட்டிக் கொள்ளாமல் சொன்னவளைக் கண்டு பேந்த பேந்த விழிக்கத் தான் முடிந்தது,அவளால்.

"அ..அப்போ அவர லவ் பண்றன்னு ஒத்துக்கிறியா நீ..?" புருவம் நெறிய குழம்பிய மனதுடன் கேட்டவளை "பைத்தியமா இவள்..?" எனும் ரீதியில் மொய்த்தது,அவள் பார்வை.

"நம்மளுக்கு ஒருத்தர புடிச்சி இருக்குன்னா லவ் பண்றதுன்னு ஆகுமா..?"

"அப்போ க்ரஷ்ஷா..?"

"தெரியல..ஆனா க்ரஷ் ஆ இருந்தா நா அம்மா கிட்ட சொல்லிருப்பேன்..அப்டின்னா இது க்ரஷ்ஷுன்னும் தோணல மனசுக்கு.."

"அப்போ எதுக்குடி அப்டி பண்ண..? அவருக்காக எதுக்கு நீ மெனக்கெடனும்..?" தோழியை தெளிய வைக்க அவள் கேள்விகளை சராமாறியாய் வீச அதில் இன்னும் என்னவோ குழம்பி நின்றது,யாழினி தான்.

"அதான..நா எதுக்கு மெனக்கெடனும்..? எனக்கும் புரியல..ஆனா அவர யாரும் ஹர்ட் பண்ணக் கூடாதுன்னு தோணுது..அது ஏன்னு புரியல.." தனக்குள் யோசித்த படி நெற்றியில் அறைந்தவாறு அவள் சொல்ல தோழிக்கு ஏதோ புரிவது போல்.

"யாழினி..நல்லா யோசி.." என்று அவள் கூறும் முன் விழிகளை மட்டும் உயர்த்தி மேலே பார்த்த படி யோசனை செய்து கொண்டிருந்தவளின் முன்னே வந்து நின்றான்,பையன்.

அவனை அவள் எதிர்பாராதிருக்க சட்டென ஈரடி பின்னே நகர்ந்தவளின் கரமோ சமநிலை வேண்டி ருத்ராவின் கரத்தை கெட்டியாகப் பற்றிக் கொண்டது.

"என்ன பண்ணி வச்சுருக்க..?" அதிர்வில் இருப்பதும் பாராமல் அவளிடம் சீறியவனின் விழிகள் கோபத்தில் சிவந்திருந்தனவே.

"எ..என்..என்ன சார்...?"

"எதுக்கு யாதவ் பைக்க பன்சர் பண்ணி வச்ச..?" அடிக்குரலில் உறுமியவனோ சுற்றத்தை அலசவும் மறக்கவில்லை.

"உங்களுக்கு எப்டி தெரியும்..?" பயத்துடன் கேட்டவளின் விழிகள் விரிந்து கொள்ள கண்களை இறுக மூடிக் கொண்டான்,பையன்.
அவன் சொன்னதை புரிந்து கொள்ளாமல் வேறேதோ விடயத்தை பிடித்துக் கொண்டு தொங்குவதை நினைத்து ஆயாசமாய் இருந்ததே,அவனுக்கும்.

"ஷட் அப்..கேள்வி கேக்காம நா கேட்டதுக்கு  பதில் சொல்லு..எதுக்கு அவன் வண்டிய பன்சர் பண்ணுன..?"

"அந்தப் பன்னி தான் என் மூஞ்சில காபிய ஊத்துச்சு..அதுக்கு தான் அப்டி பண்ணேன்.." தனது செயலில் உள்ளுக்குள் குற்றவுணர்ச்சி குறுகுறுத்தாலும் காட்டிக் கொள்ளாது நிமிர்வாய் வார்த்தைகளை கொட்ட விழிகளின் பாஷைக்கும் இதழ்களின் வார்த்தைகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் பையனுக்கு தோன்றிற்று,ஒரு நொடி.

"அப்போ நீ பண்ணது தப்பு கெடாயது..ரைட்..?"

"ஆமா..அவன் தான தொடங்கி வச்சான்..அதான்.."

"அப்போ நாளக்கி வந்து மேனேஜர மீட் பண்ணு.."

"என்ன சொல்றீங்க..? யாரு பாத்தா..சிசீடிவிய கூட மறச்சிட்டு தான பண்ணேன்..யாரு மேனேஜர் கிட்ட சொன்னது..?"படபடவென கேட்டவளுக்கு சத்தியமாய் பயம் வந்ததே.

"இவ்ளோ பயத்த வச்சிட்டு எதுக்கு அப்டி பண்ண..?மாட்டியிருந்தா உன் கதி..?"

"ஹப்பா..அப்போ மாட்டலயா..? நீங்க வேற பயமுறுத்தாதீங்க சார்.." என்றவளோ பேரூந்துக்கு நேரமாவதைப் பார்த்து அவனிடம் சொல்லாமலே நகர்ந்து விட அவளைப் புரிந்து கொள்ள முடியாது விழித்தான்,பையனவன்.

இரவு எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது.

கட்டிலில் படுத்து காலை ஆட்டிய படி பையனை பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தாள்,யாழினி.

அவன் வந்து ஒருமையில் பேசியது மனதுக்கு ஒரு வித தித்திப்பை தந்திட இதழ்கடையில் அந்த நினைப்பு தந்த புன்னகை தேங்கிக் கிடந்திருக்க விழிகள் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தன.

"என்னன்னாலும் அந்த கேரிங்..நல்லாருக்குல.." தனக்குத் தானே கேட்டவளுக்கு ஒரு ஆண் மகனிடமிருந்து முதன் முதலாய் கிடைக்கும் அக்கறையான வார்த்தைகள் அத்தனை சிலிர்ப்பை தந்தது.

அவள் இப்படி அக்கறை எல்லாம் இதுவரை கண்டதில்லையே.அதனால் தான் இப்படியோ என்கின்ற எண்ணம் மனதோரம் எட்டிப் பார்த்தாலும் ஆராய விருப்பமும் இல்லை.

பலவித சிந்தனைகள் அவளை இழுத்துக் கொண்டிருக்க அலுப்பாய் உணர்ந்தவளோ வாட்ஸ் அப்பினுள் நுழைந்த கணம் விழிகளில் விழுந்தது என்னவோ,தெரியாத எண் ஒன்றில் இருந்து வந்த குறுஞ்செய்திகள் தான்.

யோசனையுடன் திறந்தவளுக்கு அதில் இருந்த கேள்விகளில் சட்டென எட்டிப் பார்த்தது,பையனின் நினைவு.

"ஆர் யூ ஓகே.."

"இப்ப வலி எப்டி இருக்கு..?"

"ஆயின்மன்ட் பூசுனியா..?"

தொடராய் மிளிர்ந்த கேள்விகளை கண்டு அவளிதழ்கள் புன்னகையில் விரிய ஏன் என்று தெரியாமல் மனதின் அடி ஆழத்தில் ஒரு சந்தோஷப் பூ.

அவளின் மீதான அக்கறையில் அளவுக்கு மீறி நெகிழ்ந்திருந்தவளுக்கு உறவிலும் சரி உரிமையாகவும் சரி இப்படி யாருமில்லை என்கின்ற நினைப்பே மனதில் ஒரு பெரும் வெற்றிடத்தை உண்டாக்கியது.

"கார்த்திக் சார் தான.."

"இப்ப ஓகே சார்.."

"வலி எல்லாம் இல்ல சார்.." முற்றாக மட்டுப்படவில்லை என்றாலும் அவனுக்காக பொய் சொல்லியிருந்தவளின் மனம் செல்லும் வழி அவளுக்கே புரியவில்லை.

"இதுக்கப்றம் தான் பூசனும் சார்.." 

வரிசைப் படி பதில் அனுப்பி விட்டு அலைபேசியை அப்படியே நெஞ்சில் நிற்க வைத்தவளின் பெருவிரலும் ஆட்காட்டி விரலும் அலைபேசியின் கீழ்ப்பகுதியை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க மறு கரமோ தலைக்கு கீழே மடிந்து தலையை தாங்கியிருந்தது.

வீற்றிருந்த புன்னகை தொலைந்து போய் இதழ்களின் ஓரம் விரக்தியாய் விரிய மீண்டும் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம்.

"லேட் பண்ணாம ஆயின்மன்ட் பூசு..அப்போ தான் சரி ஆகும்.."

"சரி சார்.." என்ற படி இரு கண் சுருக்கி நாக்கை வெளியே போட்டுக் கொண்டிருக்கும் எமோஜியை அனுப்ப மறுமுனையில் இருந்தவனின் மனதை போட மாட்டாளோ என்கின்ற பதட்டம் கவ்வியிருந்தது.

"நெஜமா ஆயின்மண்ட் போடுவ தான..?" என்று தட்டச்சு செய்து அனுப்பப் பார்த்தவனுக்கும் சிறு புன்னகை எழ அதனுடன் ஒற்றைப் புருவம் உயர்த்தி மிரட்டும் எமோஜியை அனுப்ப அதைப் பார்த்தவளோ எழுந்தமர்ந்து விட்டாள்,சடுதியாய்.

"நீங்க நெஜமாவே கார்த்திக் சாரா..? இல்லன்னா வேற யாராச்சுமா..?" மனதில் உண்மையாய் தோன்றிய சந்தேகத்துடன் இரு கரத்தால் கன்னம் தாங்கி வாய் பிளந்திருக்கும் எமோஜியை அனுப்ப பையனுக்கு தன்னை மீறி சிரிப்பு வந்துவிட சற்று சத்தமாகவே சிரித்து விட்டிருந்தான்,பையன்.

தேடல் நீளும்.

2024.04.08


Leave a comment


Comments


Related Post