இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 7 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 09-04-2024

Total Views: 23838

செந்தூரா 7


சுபாஷின் முறைப்பை எல்லாம் செந்தூரன் கண்டுகொள்வதாக இல்லை. அவனை பொருத்தவரை தாராவிற்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி ஆக வேண்டும் அவ்வளவு தான்.


அன்றைய நிகழ்ச்சி முடிந்ததும், இரவு கணவனுக்கு குடிக்க பால் எடுத்துச் சென்றார் சாரதா. “உன் அண்ணன் மகன் செய்யறது கொஞ்சமாச்சும் நல்லா இருக்கா சாரதா?” என்றார் சுபாஷ் நேரடியாக.


கணவனின் கேள்வியில் சற்றே அதிர்ந்தவர், “செந்தூரனை பற்றியா சொல்றீங்க? அவன் என்ன செய்தான்?” என்றார் புரியாமல்.

“என்ன செஞ்சான்னு இப்படி கூலாக கேட்கிறே? வயசு பையன் திருமணத்திற்கு முன்பு நம்ம பொண்ணு கழுத்தில் மாலை போடலாமா? நான் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கேன். என் பேச்சை மதிக்காமல் அவன் பாட்டுக்கு போய் மாலை போட்டால் என்ன அர்த்தம். எனக்கு அங்கே என்ன மரியாதை இருக்கு?” என்று பொரிந்து தள்ளினார் சுபாஷ்.


சாரதா இப்படி ஒரு குற்றச்சாட்டை கணவனிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் அவ்வப்போது தன் முகத்தில் ஒரு விருப்பமின்மையே செந்தூரன் விஷயத்தில் காண்பித்ததுண்டு. ஏனென்றால் மனைவி தன்னை விட தன் அண்ணன் மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாளே, எப்போதும் அவனை பற்றியே பேசுகிறாளே என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்வார்.


அப்படிப்பட்ட சமயங்களில் கணவனின் முக பாவத்தை உணர்ந்து செந்தூரனை பற்றிய பேச்சை அவரிடம் தவிர்த்து விடுவார். ஆனால் மகளிடம் எப்போதும் மருமகன் புராணம் தான். இன்று நேரடியாக அவனை தாக்கி பேசவும் பதில் சொல்ல தெரியாமல் வாயடைத்து போய் கணவனையே பார்த்திருந்தார்.


“என்ன சாரதா? இப்படி முழிக்கிற? இன்று நம்ம பொண்ணோட சடங்கில் அவன் நடந்துகிட்டது பரவாயில்லையா?” என்றார் சுபாஷ் கோபத்தை கட்டுப்படுத்தியபடி.


“இதெல்லாம் சகஜம் தாங்க, மாமன் மகன் முறைக்கு மாலை போடறதுல என்ன தவறு? அதுமட்டுமில்லாமல் அவன் தானே நம்ம தாரிகாவை கல்யாணம் செய்துக்க போறான்?” என்றார் சாரதா சமாதானமாக.


பொறுமையை கைவிட்டு கோபமாக பேச தொடங்கினார் சுபாஷ், “அதென்ன உங்க குடும்பத்திற்கு சின்ன பசங்க கிட்ட என்ன பேசறதுனே தெரியாதா? இப்பவே கல்யாணம், பொண்டாட்டினு பேசிகிட்டு இருக்கிறதால தான் அவன் ஓவரா போயிட்டு இருக்கான். அவங்க கல்யாண வயசு வந்ததும் முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை இப்பவே பேசிட்டு இருந்தால் என்ன அர்த்தம்?” என்றார்.


“ஏன் இந்த சின்ன விஷயத்திற்கு இவ்வளவு கோபப்படுறீங்க? செந்தூரன் நம்ம பொண்ணுக்கிட்ட எப்படி நடந்துக்கணுமோ அப்படி சரியாக நடந்துக்குவான். அதுமட்டுமில்லாமல் நம்ம பொண்ணு தாரிகா என் அண்ணன் மகன் செந்தூரனை தான் கட்டிக்குவா. இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார் சாரதாவும் கோபமாக.


“சரி அவங்க படிப்பை நிறுத்திட்டு இப்பவே கல்யாணத்தை பண்ணிடலாமா?” என்றார் சுபாஷ். “நான் அப்படி சொல்ல வரலை” என்று சொன்ன மனைவியை கை காட்டி நிறுத்தினார் சுபாஷ்.


“இங்கே பாரு சாரதா, நம் பொண்ணு கல்யாண வயசுல யாரை கை காட்றாளே அவனை கல்யாணம் செய்து வைக்க நான் தயார். அது செந்தூரனாக இருந்தாலுமே எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால் அதுவரைக்கும் தாரிகாவை நம்ம பெண்ணாக வளர்க்கணும் தானே?” என்றார் சற்றே கோபம் தணிந்த குரலில்.


ஆமாம் என்று சாரதா தலையை ஆட்டவும், “தாரிகா இப்போ பெரிய மனுஷி ஆயிட்டாள். இனி உன் அண்ணன் வீடாகவே இருந்தாலும் அவளை மட்டும் இனி தனியாக இங்கே அனுப்ப கூடாது, நீயோ நானோ வந்தால் தான் தாரிகாவை நம்மோடு அழைத்து வரணும். புரிந்ததா?” என்றார் சுபாஷ் கண்டிப்பான குரலில்.


அவரின் இந்த பேச்சு அண்ணன் மகன் நடத்தையில் நம்பிக்கை இல்லாத்தன்மையை எடுத்துக்காட்டியது. இப்போதைக்கு வாக்குவாதம் வேண்டாம் என்று தோன்ற சாரதாவும், “சரிங்க, அப்படியே ஆகட்டும்” என்றார்.


அவர்களின் இந்த உரையாடலை எதேச்சையாக கேட்டிருந்தான் செந்தூரன். அவனுக்கு கோபமாக வந்தது, அவனும் ஒரு தங்கையுடன் பிறந்தவன் தானே, எப்படி நடந்துக் கொள்வது என்று அவனுக்கு தெரியாதா? நான் என்னவோ அவர் மகள் மேல் பாய்ந்து விடுவேன் என்பது போல அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார் என்று உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான்.


அதன்பிறகு வந்த விடுமுறை நாட்களில் தாரிகாவை பொள்ளாச்சிக்கு அனுப்பி வைக்கவே இல்லை. அப்படியே எதாவது திருவிழா என்று வந்தாலும் குடும்பத்தோடு வந்து உடனடியாக கிளம்பினார்கள். தாரிகாவிற்கும் இதில் வருத்தம் தான். ஆனால் அப்பாவை எதிர்த்து பேச முடியாமல் கண்களாலே அவனிடம் விடைபெற்று கொள்வாள். 


இந்த நிலையில் தான் செந்தூரன் கல்லூரியில் சேர வேண்டி இருந்தது. எங்கே சேர போகிறாய் என்று கேட்டதற்கு சென்னையில் அக்ரிகல்சர் இன்ஜீனியரிங் சேர போவதாக சொன்னான். “ஏன்டா, கோயம்பத்தூர்லேயே நல்ல காலேஜ் இருக்குமே?” என்று கேட்ட கதிரேசனை முறைத்தான். “நான் சென்னையில் தான் படிப்பேன். ஏன் உங்க தங்கச்சியும் மாப்பிள்ளையும் அவங்க வீட்டில் எனக்கு இடம் தரமாட்டாங்களா?” என்றான் கிண்டல் தொனியில்.


“ஏன் தராம போக போறாங்க? இரு இப்பவே சுபாஷூக்கு போன் செய்யறேன்” என்ற கதிரேசன் உடனடியாக சொன்னதை செய்திருந்தார். “மாப்பிள்ளை நம்ம செந்தூரன் சென்னையில் தான் ஏதோ படிக்கணுமாம், அவனை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்து விட முடியுமா? நீங்களும் சாரதாவும் இருக்கறதால தான் அவனை சென்னைக்கு அனுப்ப ஒத்துக்கிட்டேன். பசங்களோட சேர்ந்தால் கெட்டு போயிடுவான், உங்க வீட்டிலேயே இருக்கட்டும். உங்களுக்கு இதில் ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?” என்று கேட்டார் வெளிப்படையாகவே.


கதிரேசன் அப்படி கேட்டதும் சுபாஷால் மறுக்கமுடியவில்லை. “அதற்கென்ன மச்சான், தாராளமாக படிக்கட்டும், அனுப்பி வையுங்க, அவனுக்கு எதில் விருப்பமோ அதிலேயே சேர்த்துவிடறேன்” என்றார் சுபாஷ்.


அடுத்தவாரமே செந்தூரன் தன் அத்தை வீட்டிற்கு கிளம்பினான். அவன் வரப்போவதை அறிந்த சாரதா தன் மருமகனுக்கு தடபுடலாக சமைக்க தொடங்கினார். சுபாஷ் மனைவியின் முகத்தை இறுக்கமாக பார்த்திருந்தார். அண்ணன் மகன் வரபோவதாக சொன்னதும் எத்தனை சந்தோஷமாக சமைக்கிறாள், இனி நான் எங்கே இவள் கண்ணுக்கு தெரிய போகிறேன் என்று நினைத்து பெருமூச்சொன்றை வெளிவிட்டபடி அவனை ஏர்போர்டிலிருந்து அழைத்துவர சென்றார்.


சுபாஷை கண்டதும் ஒரு சிறு தலையசைப்புடன் அவரருகில் வந்தவன் எதுவும் பேசாமல் அவருடன் காரில் ஏறினான். அவரும் அவனை விசாரிக்கவில்லை. அவனும் அவரிடம் நலமா என்று கேட்கவில்லை. இருவருமே முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.


அவனாக ஏதும் பேசபோவதில்லை என்று உணர்ந்த சுபாஷ் தொண்டையை கனைத்தார், “என்ன படிக்க போறே?” என்றார். “அக்ரிகல்சர் இன்ஜீனியரிங்” என்றான் பட்டென்று. அவன் பதிலில் நம்பமாட்டாமல் திரும்பி அவனை பார்த்தார். 


“அது படிச்சுட்டு என்ன பண்றதாக உத்தேசம்?” என்றார், அவனோ “விவசாயம்” என்றான் தோள்களை குலுக்கி. ஒரு கணம் அவனை தீர்க்கமாக பார்த்து விட்டு, “அதுக்கெதுக்கு படிக்கிறே? இப்பவே போய் விவசாயம் செய்யலாமே. அந்த பட்டிக்காட்டை விட்டு வர்றதாக இல்லையா?” என்றார் ஒரு மாதிரி குரலில்.

“அந்த பட்டிக்காட்டிலிருந்து தான் என் அத்தையை திருமணம் செய்துட்டு போய் இருக்கீங்க, அதை மறந்துடாதீங்க” என்றான் சுள்ளென்று மீண்டும் அவரை திரும்பி பார்த்து, “விவசாயம் படிச்சால் என்ன குறைவாக தோணுது உங்களுக்கு?” என்று கேட்டான்.


அவன் எதிர்த்து பேசியதில் சுபாஷின் முகம் இறுகிபோனது. என்னவோ படிக்கட்டும் எனக்கென்ன வந்தது என்று நினைத்தவராக அவனுக்கு பதிலேதும் சொல்லாமல் காரை ஓட்டுவதில் கவனத்தை செலுத்தினார்.


செந்தூரனுக்கும் ஒரு மாதிரியாகி விட்டது, என்ன இருந்தாலும் அவரிடம் அப்படி பேசியிருக்க கூடாது. அன்று தாராவின் சடங்குக்கு பிறகு சாரதாவிடம் சுபாஷ் பேசியதை கேட்டிருந்ததால் அவர் மேல் அவனுக்கு கோபம் இருந்தது, அதுதான் இப்போது வெளிவந்து விட்டது. முகம் கன்ற, “சாரி மாமா” என்றான். அவரோ பரவாயில்லை “உன் படிப்பு உன் விருப்பம்” என்று மட்டும் சொல்லி விட்டு பயணத்தை தொடர்ந்தார்.


அவர்கள் வீட்டை அடைந்ததும் தாரிகா துள்ளிக் கொண்டு வந்தாள், “ஏய் செவப்பா, இனி இங்கே தான் இருக்க போறியாமே?” என்றாள் முகம் கொள்ளா சிரிப்புடன்.


அவளை முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றான். சாரதா அவனை வரவேற்று அமரச் செய்து தான் செய்து வைத்திருந்த பலகாரங்களை எல்லாம் எடுத்து வர சமையலறைக்கு சென்றார். சுபாஷும் உடை மாற்றி தயாராகி வர அவரின் அறைக்கு போய்விட்டார்.


தாரிகா அவனருகில் வந்து அமர்ந்து, “ஏன் என்கிட்ட பேசமாட்டேங்கிறே?” என்றாள் உதட்டை பிதுக்கி.


“என்னை ஏன்டி செவப்பானு கூப்பிட்டே? எத்தனை முறை சொல்லியிருக்கேன்? மாமானு கூப்பிட்டால் தான் உன் கூட பேசுவேன்” என்றான் முகத்தை திருப்பிக் கொண்டு.


“ஓ அதுதான் உனக்கு பிரச்சனையா? சரி இனி மாமானு தான் கூப்பிடுவேன் சரியா மாமா?” என்றாள் கண்களை சிமிட்டி. அப்போதும் அவன் அமைதியாக இருக்கவும் “என்னாச்சு?” என்றாள் அவன் தாடையை அவள் பக்கமாக திருப்பி.


“ஏன்டி இத்தனை நாளாக பொள்ளாச்சிக்கு வரலை? அதுக்குள்ள எங்க ஊரு பட்டிக்காடா ஆயிடுச்சா?” என்றான் அழுத்தமாக.


“ஐயோ மாமா, நான் எத்தனை தடவை அழுது அடம்பிடிச்சேன்னு அம்மாவை கேளு, அப்பா தான் தனியாக அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டார்” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.


பொத்தி பொத்தி வளர்க்கறாராமாம், வளர்க்கட்டும் வளர்க்கட்டும், கடைசியில் என்னிடம் தானே பெண்ணை அனுப்பனும் என்று நினைத்துக் கொண்டான். “என் மேல கோபம் இல்லையே?” என்றாள் தாரா அவன் கைகளை பற்றி.


சூடான அவன் கைகளின் மேல் பஞ்சு போன்ற மென்மையான கைகள் பட்டதும் என்னவோ போல இருக்கவும் அவள் கைகளை விலக்கினான். “தொடாமல் பேசுடி” என்றான். “ஏன் இதுக்கு முன்னாடி நான் தொட்டதே இல்லை பாரு, எதுக்கு இப்ப ஓவரா பண்ற?” என்றவள் முகத்தை தன் தாடையில் இடித்தபடி எழுந்து சென்றாள்.


கோபித்துக் கொண்டு அவள் செல்வதும் அழகுதான் என்று அவளை ரசித்தபடி அமர்ந்திருந்தான் செந்தூரன். அதற்குள் சாரதா உணவு பதார்த்தங்களை சாப்பாட்டு மேஜையில் அடுக்கினார். சுபாஷூம் வந்து விட, அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். சாரதா ஓயாமல் தன் பெற்றோர், அண்ணன் அண்ணி, பசுமாடு, தோட்டம், வாய்க்கால் என்று மருமகனிடம் விசாரித்துக் கொண்டே இருந்தார்.


அவனும் சலைக்காமல் தன் அத்தையிடம் எல்லாவற்றையும் விவரித்துக் கொண்டிருந்தான். அங்கே சுபாஷ் மற்றும் தாரிகா என்று இரு ஜீவன்கள் இருப்பதையே மறந்து இருவரும் பேசிக் கொண்டிருக்க, சுபாஷ் தனது கம்பெனியில் வேலை இருப்பதால் கிளம்பி விட்டார். தாரிகாவும் பள்ளிக்கு சென்று விட்டாள்.


அவர்கள் போனதை கூட உணராமல் சாரதாவும் செந்தூரனும் பேசிக் கொண்டே இருந்தனர். “செந்தூரா, நல்லா படிச்சு நல்ல வேலையில் நீ இருந்தால் தான் மாமா தாரிகாவை உனக்கு கல்யாணம் செய்து வைப்பார். அதனால் நீ அவரிடம் முரண்டு பிடிக்காமல் அவர் சொல்வதை கேட்டு நல்ல பிள்ளையாக படித்து முடி. என்ன ஆனாலும் நீதான் என் பொண்ணை கல்யாணம் செய்துக்கணும், புரியுதா?” என்றார்.


சரி என்று பலமாக தலையை அவன் நாலாபுறமும் வேகமாக ஆட்டினான் செந்தூரன். அன்று மாலை வேலை முடித்து வந்த சுபாஷ் கல்லூரியில் சேர விண்ணப்ப படிவங்களை வாங்கி வந்திருந்தார். செந்தூரன் அதை நிரப்பி அவரிடம் கொடுக்கவும், “நீ கீழே இருக்கும் இந்த அறையிலேயே தங்கிக்கோ. தாரிகாவின் அறை மாடியில் இருக்கு. எக்காரணம் கொண்டும் நீ மாடிக்கு போக கூடாது” என்றார் 


அவர் அப்படி சொன்னதும் கோபம் வந்தது. என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணியபபடி அவரை முறைத்தான். அவன் முறைப்பை சட்டை செய்யாமல், “நாளைக்கு காலேஜிற்கு சென்று இந்த விண்ணப்பத்தை கொடுத்து சேர்ந்துக் கொள், நான் ஏற்கனவே அவர்களிடம் பேசி, பணத்தையும் கட்டிவிட்டேன்” என்றார்.


அவனோ உடனடியாக போனை எடுத்து தந்தைக்கு அழைத்தான். “அப்பா, என்னோட படிப்பு மற்றும் தங்கும் செலவுக்கான பணத்தை மாமாக்கு இப்பவே அனுப்பி விடுங்க” என்றான். “மாப்பிள்ளை எதாவது கோவிச்சுக்குவார்டா” என்ற கதிரேசனிடம், “நான் சொன்னதை செய்யுங்க, இலவசமாக இருந்தால் எனக்கு மதிப்பிருக்காது” என்று அவரை பார்த்து சொல்லிவிட்டு விறுவிறுவென்று தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றான்.


மாடியில் தாரிகா அறைக்கு போக கூடாது என்று சொன்னதால் அவனுக்கு கோபம் என்று புரிந்துக் கொண்டார் சுபாஷ். மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டார்.


அறைக்குள் சென்றவனுக்கு கோபத்தை கட்டுபடுத்திக் கொள்ள முடியவே இல்லை. இப்போதே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று தோன்றியது. ஆனால் சாரதா ஏற்கனவே அவனிடம் சொன்னது நினைவில் வந்தது, “செந்தூரா, உன் மாமா ஸ்டிரிட் ஆபிசர் போல சில நேரம் பேசுவார், அதை எல்லாம் காதில் வாங்காமல் அத்தைக்காக பொறுத்து போகணும் சரியா?” என்றிருந்தார். தலையை கோதிக்கொண்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தவனை தாரிகா அழைத்தாள், “மாமா சாப்பிட வா, அம்மா உன்னை கூட்டிட்டு வரச் சொல்லுச்சு” என்றாள்.


அவன் வேண்டாம் என்று தலையசைக்க, அவளோ அவன் கரம் பற்றினாள், அவன் கையை உருவிக் கொள்ள, எப்போதும் போல குதித்து அவன் முதுகில் ஏறினாள். அவள் செய்கை அவனுக்கு மேலும் கோபத்தை தர தன் தோள் மேல் இருந்த அவளின் கையை வேகமாக விலக்கிவிட்டான். அதில் தொப்பென்று விழுந்தவள், “போடா செவப்பா” என்று திட்டி விட்டு எழுந்து நின்றாள். அவன், “அடி” என்ற அடிப்பதை போல கையை ஓங்க, அவள் அங்கிருந்து ஓடிக் கொண்டே “போடா செவப்பா” என்றாள். அவளின் செய்கையில் அவனின் கோபம் காணாமல் போயிருந்தது. சிரித்தபடி போகும் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post