இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 8 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 10-04-2024

Total Views: 25593

செந்தூரா 8


நாட்கள் கடந்தது, செந்தூரன் தனக்கென்று ஒரு கருப்புநிற பல்சர் வண்டியை வாங்கிக் கொண்டு கல்லூரிக்கு சென்று வந்துக் கொண்டிருந்தான். உயரமாக ஆஜானுபாகுவான தோற்றத்தில் அந்த வண்டியில் ஆளுமையுடன் அமர்ந்து அவன் வரும் தோற்றத்தை பார்த்து கல்லூரி பெண்கள் அவனிடம் நெருங்கி பேச முயற்சி செய்தனர். ஆனால் அவன் அவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் தன் படிப்பில் கவனம் செலுத்தினான்.


ஒரு ஞாயிறன்று கையில்லாத டிசர்ட் ஒன்றை அணிந்துக் கொண்டு ஷார்ட்ஸ் சகிதமாக அமர்ந்து தன் வண்டியை துடைத்துக் கொண்டிருந்தவன் அருகில் வந்தாள் தாரா.


கையை பிசைந்துக் கொண்டு எதுவும் பேசாமல் இருந்தவளை பார்த்து, “என்ன?” என்று கேட்டான். சுற்றும் முற்றும் பார்த்தவள் “அப்பா இன்னிக்கு ஆபிஸ் கிளம்பிட்டார் தானே” என்றாள் ரகசியமான குரலில்.


புருவத்தை சுருக்கியவன், “ஆமாம் இப்போ தான் மாமா கிளம்பினார். என்ன விஷயம்?” என்றான்.


“அது வந்து, அது வந்து நான் ஸ்கூலுக்கு நடந்து போகும் போது தினமும் ஒருத்தன் வந்து லவ் பண்றதாக சொல்லி லட்டர் கொடுக்க வரான் மாமா” என்றாள் தாரிகா.


செந்தூரனின் முகம் செந்தெழல் என மாறியிருந்தது. “யாரவன்?” என்றான் பற்களை கடித்தபடி. “யாரோ தெரியலை, நான் எத்தனை முறை துரத்தி விட்டும் பின்னாடியே வர்றான்” என்றாள் படபடப்புடன்.


“உன்னை யாரு நடந்து போக சொன்னது?, மாமா ஆபிஸ் போகும் போது அவர் கூட காரில் போக வேண்டியது தானே? சரி மாமாவை தனியாக ஒரு கார் வாங்கி விட சொல்றேன். இனிமேல் நீ கார்லயே போய் வா, நானே உன்னை டிராப் செய்யறேன்” என்றான்.


“உன்கிட்ட போய் சொல்ல வந்தேன் பாரு” என்று அவனை முறைத்தாள். “ஏன்டி?” என்று கேட்டான் அவன் புரியாமல். “அப்பாகிட்ட சொன்னால் அவரும் இதைத்தான் சொல்வார்னு அவர்கிட்ட சொல்லாமல் உன் கிட்ட சொல்ல வந்தேன், ஆனால் நீயும் அதையே தான் சொல்றே. எனக்கு என் பிரண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சுக்கிட்டே ஸ்கூலுக்கு போகத் தான் ஆசை. இரண்டு தெரு தள்ளியிருக்கிற பள்ளிக்கு யாராவது காரில் போவாங்களா? என் பிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் செய்வாங்க” என்று சிணுங்கினாள்.


நெற்றியை நீவியபடி “இப்போ என்ன தான்டி செய்ய சொல்றே?” என்றான் செந்தூரன்.


“அது எனக்கு தெரியாது, அவன் என்னை தொல்லை செய்ய கூடாது, அவ்வளவு தான்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.


மறுநாள் தாரிகா பள்ளிக்கு கிளம்பினாள். சிறிது நேரத்திற்கெல்லாம் செந்தூரன் அவளுக்கு தெரியாமல் தன் இருச்சக்கர வாகனத்தில் அவளை மெதுவாக பின் தொடர்ந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் தாரிகாவின் தோழிகள் மூன்று பேர் அவளுடன் சேர்ந்து நடக்க தொடங்கினர்.


தாரிகாவின் தோழிகளில் ஒருத்தி திரும்பி செந்தூரனை பார்த்து விட்டு, “என்னடி தினமும் ஒருத்தன் தான் வர்றான் என்று பார்த்தால், இன்னைக்கு புதுசாக யாரே ஒருத்தன் பல்சர் வண்டியில் நம்மை பாலோ பண்றான்” என்றாள் பதறிய குரலில்.


மெல்ல திரும்பி பார்த்த தாரிகா செந்தூரனை பார்த்ததும் சிறு புன்னகையை யாரும் அறியாமல் அவன் மேல் வீசி விட்டு திரும்பிக் கொண்டாள்., அவளின் இந்த செய்கையில் செந்தூரனின் இதயம் தடம் மாறியது. அவனையும் அறியாமல் அவன் மனதில் “கண்கள் இரண்டால், அவள் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாள், இழுத்தாள் போதாதென கள்ளச்சிரிப்பில்” என்ற பாடல் தோன்ற அதுவே அவன் காதிலும் ஒலித்தது. ஆனால் அந்த குரல் அத்தனை இனிமையானதாக இல்லை.


ஒல்லியாக இருந்த ஒருவன் அந்த பாடலை பாடியபடி தன் TVS 50 யை வலமிருந்து இடப்புறம், இடமிருந்து வலப்புறம் என்று வளைத்து வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தான். தாரிகாவை இடிப்பது போல அவன் வண்டியை செலுத்த அவள் பதறிப் போய் அப்படியே நின்று திரும்பி செந்தூரனை பார்த்தாள். அவள் கண்களிலேயே அவளை தினமும் தொல்லை செய்வது அவன் தான் என்று தெரிந்து விட, அப்படியே தன் பல்சரை அவன் எதிராக கொண்டு வந்து நிறுத்தி விட்டு வேகமாக கீழே இறங்கி வந்தவன், அவனின் சட்டை காலரை பிடித்து தனியாக ஆள் அரவம் அற்ற பக்கத்து தெருவிற்குள் இழுத்துச் சென்றான். அவனை அப்படியே  தன் உயரத்திற்கு மேலே தூக்கினான்.


அவனோ தவளை போல கைக்கால்களை உதைத்துக் கொண்டு பதறினான். “ஐயோ என்ன பண்றீங்க? விடுங்க” என்றான். “இனி ஸ்கூலுக்கு போகும் பொண்ணுங்க பின்னாடி உன்னை பார்த்தால் அந்த இடத்திலேயே தூக்கி போட்டு மிதிப்பேன். இனி இவங்க பின்னாடி போவியா?” என்றான். அந்த இளைஞனோ செந்தூரனை இப்போது தான் முழுமையாக பார்த்தான். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது தான் இருக்கும், ஆனால் செந்தூரனின் உடற்பயிற்சியால் அவன் தேகம் மெருகேறியிருந்தது. 


கையில்லாத அந்த டிசர்டில் வாளிப்பான அவன் உடல் அமைப்பும் முறுக்கேறியிருந்த கைகளும் அவனின் வலிமையை எடுத்துரைத்தது. விட்டால் போதும் என்று தோன்ற, “ஐயோ சார், இனி இந்த பக்கமே வரமாட்டேன், என்னை கீழே இறக்கி விடுங்க” என்று பதறினான்.


செந்தூரன் மெல்ல திரும்பி பார்க்க தாரிகா தன் தோழிகளுடன் அவனைத் தான் பார்த்திருந்தாள். கண்களால் அவனை கீழே விடுமாறு அவள் சொன்னதும் தான் அவனை கீழே விட்டான். அந்த இளைஞனோ நொடியில் ஓடிச் சென்றுவிட்டான்.


தாரிகாவுடன் வந்திருந்த தோழிகள் செந்தூரனை தான் ஆவென்று பார்த்திருந்தார்கள். என்னவொரு கம்பீரமான தோற்றம்! படிக்கட்டு தேகம், முறுக்கேறியிருந்த தோள்கள் என்று அவனை அங்குலம் அங்குலமாக ரசித்தபடி இருந்தனர். அவன் மெதுவாக அவளிடம் வந்து, “இனி நான் பார்த்துக் கொள்கிறேன், நீ ஸ்கூலுக்கு போ” என்று விட்டு சென்றான்.


அவன் பேசியதற்கு தாரிகா தலையை ஆட்டவும் தான் அவளின் தோழிகளுக்கு வந்தவன் தாரிகாவிற்கு தெரிந்தவன் என்றே தெரிந்தது. அதற்குள் செந்தூரன் தன் நீளமான காலை தூக்கி பல்சரின் மேல் லாவகமாக போட்டபடி அமர்ந்த விதமும், அந்த வண்டியின் கைப்பிடியை முறுக்கேறிய கைகளால் அவன் அழுந்த பற்றியிருந்த விதமும் அவர்களின் கருத்தை வெகுவாக கவர்ந்தது. கண்களால் தாரிகாவிடம் விடைப்பெற்றுக் கொண்டு அவன் வண்டியை செலுத்த அதுவோ சீறிப்பாய்ந்து சென்றது.


இமைக்கக்கூட மூட மறந்து ஆவென பார்த்திருந்த தோழிகளை பார்த்து முறைத்தாள் தாரிகா. “என்னாங்கடி அப்படியே நிக்கறீங்க, ஸ்கூலுக்கு நேரமாவது தெரியலையா?” என்றாள் கடுப்பாக.


“தாரா, இப்போ வந்து போனாரே அவர் யாரு?” என்றாள் ஒருத்தி. “ம்ம் என் மாமா, ஏன் கேட்கறீங்க?” என்றாள். அவளோ, “ஏய் சூப்பரா இருக்கார்டி, எங்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கறீயா ப்ளீஸ்” என்றனர் மூவரும் கோரசாக.


இப்போது தாரிகாவிற்கு கோபம் வந்து விட்டது, “என் மாமாவை நான் ஏன் அறிமுகம் செய்து வைக்கணும்? முடியாது போங்கடி” என்று விறுவிறுவென்று பள்ளியை நோக்கி நடந்தாள். அவர்களும் அவள் பின்னாலேயே ஓடினர்.


அடுத்து வந்த நாட்களும் செந்தூரன் தாரிகாவை பின்தொடர்ந்து வந்தான், யாரும் அவளை மீண்டும் தொல்லை செய்கிறார்களா என்று அறிந்துக் கொள்ள அவன் தினமும் அவளுக்கு பாதுகாப்பாக சென்றான்.


ஆனால் தாரிகாவிற்கு வேறுவிதத்தில் தொல்லையாக இருந்தது. அவளின் தோழிகள் அவளெதிரலேயே அவளின் மாமனை வர்ணித்து பேசியது அவளுக்கு பிடிக்க வில்லை. அன்று பள்ளி முடிந்து வந்தவள் செந்தூரனை தேடியபடி வந்தாள், அவனோ அப்போது தான் கல்லூரி முடித்து வந்தவன் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக் கொண்டிருந்தான்.


அவனருகில் வந்தவள் இடுப்பில் தன் இருகைகளையும்  வைத்துக் கொண்டு அவனை பார்த்து முறைத்தாள். என்னவென்று புருவம் உயர்த்தியவனிடம், “உன்னோட சிக்ஸ்பேக்கை காண்பிச்சு என் தோழிகளை மயக்கலாம்னு தானே தினமும் பாதுகாப்புக்குனு சொல்லிட்டு என் பின்னாடி வர்றே? உண்மையை சொல்லு?” என்றாள் கோபமாக அவனை முறைத்து.


பதிலேதும் சொல்லாமல் தன் கைகளை மார்ப்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு வண்டியின் மேல் சாய்ந்தவாறு அவளை அழுத்தமாக பார்த்தபடி நின்றான். அவனின் அந்த செயலே அவள் பேசியது தவறு என்று அவளுக்கு இடித்துரைக்க “சரி நீ ஒண்ணும் அவங்களை மயக்கறதுக்கு வந்து இருக்க மாட்டே., அதுங்க தான் சரியான ஜொள்ளுங்க, நீ இனிமேல் முழுக்கை சட்டை பேண்ட் போட்டுட்டு வா, எப்பவும் போல இரண்டு பட்டன் கழட்டி விட்டுட்டு உன் ஆர்ம்ஸை காட்டிட்டு வராதே, எல்லா பட்டனையும் போட்டுட்டு வரணும் புரியுதா?” என்றாள் கண்களை உருட்டி அவனை மிரட்டுவது போல.


“ஏன்?” என்றான் அவன் ஒற்றை புருவம் உயர்த்தி, “ஏன்னா அவளுங்க உன்னை அப்படி பார்க்கிறது எனக்கு புடிக்கலை” என்றாள் பட்டென்று. “நான் உன் கூட இருக்கும் போதும் அப்படித்தானே டிரஸ் பண்ணுவேன், அப்போ எல்லாம் நீ இப்படி சொன்னதில்லையே?” என்றான் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து.


“நான் பார்க்கலாம், அவளுங்க எப்படி உன்னை அப்படி பார்க்கலாம்” என்றாள் சற்றும் யோசிக்காமல். இப்போது அவன் கண்கள் மின்ன அவளை ஆழ்ந்து பார்த்தான். அவன் பார்வையில் ஏனோ தலையை குனிந்து கொண்டாள். அதற்குள் சுபாஷின் கார் சத்தம் கேட்கவும் வீட்டிற்குள் ஓடினாள்.


செந்தூரனும் தன் அறைக்குச் சென்று படிக்க தொடங்கினான். அடுத்த நாள் தாரிகா சொன்னது போல கருப்பு நிற முழுக்கைச் சட்டை அணிந்து சந்தன நிற பேண்டை அணிந்தவன் கருப்பு நிற கூலிங்கிளாஸை அணிந்தபடி தாரிகா அன்ட் டீமிற்கு சற்று இடைவெளி விட்டு கருப்பு நிற பல்சரில் அவர்களை பின் தொடர்ந்தான்.


மற்ற நாட்களை விட இன்று மேலும் அவனின் வசீகரம் கூடி போய் இருந்ததை தாரிகாவே உணர்ந்து இருந்தாள். அவளின் தோழிகளோ கண்டமேனிக்கு அவனை வர்ணித்து தள்ள பொறுக்க மாட்டாமல் அவனை நோக்கி வந்தாள்.


திடீரென்று தாரிகா அவனை நோக்கி வரவும், “என்னாச்சு தாரா?” என்றான். “நீ என்னை அந்த போக்கிரிகிட்ட இருந்து காப்பாத்த வந்தே, காப்பாத்திட்ட, அவனும் இப்போவெல்லாம் வர்றதில்லை, அதனால் நீ இனி என் பின்னாடி வராதே” என்றாள் தாரிகா.


“ஏன் தாரா நான் உன் பின்னாடி வந்தால், நானும் உன்னை தொல்லை செய்யறது போல தோணுதா” என்றான் வருத்தமாக குரலில். அவளோ இல்லை என்று தலையாட்டியவள், “நீ என்னை அந்த இளைஞனிடம் காப்பதறதுக்கு பதிலா நான் தான் இவளுங்க கிட்ட இருந்து உன்னை காப்பாத்தணும் போல இருக்கு, இனி என்னால் முடியாது. நானே பார்த்துக்கிறேன்,. எதாவது பிரச்சனை என்றால் உன்னிடம் சொல்றேன், நீ அப்போ வந்தால் போதும்” என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தாள். 



பிறகு ஏதோ நினைவு வந்தவளாக மீண்டும் அவனருகில் வந்தவள், “உன்னோட காலேஜில் கூட இப்படி தான் நடக்குதா?” என்றாள் அவனை ஒரு மாதிரி பார்த்து.


அவள் கேள்வியில் அவனுக்கு புரை ஏற என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான். உண்மையில் கல்லூரியில் பல பெண்கள் அவனிடம் தங்கள் காதலை சொல்லியிருந்தனர், அவன் தான் அவர்களிடமிருந்து விலகி இருக்கிறான். அதை சொன்னால் என்ன சொல்வாளோ என்று அவன் திருதிருவென விழிக்க, ஒற்றை விரலைக் காட்டி அவனை பத்திரம் என்று கண்களால் மிரட்டினாள்.


அவளின் செய்கைகள் அனைத்தும் அவன் மேல் அவள் கொண்ட காதலையும் உரிமையையும் பறைசாற்றியது. சிறு புன்னகையுடன் “சரி இனி பத்திரமாக இருந்துக் கொள்கிறேன்” என்று சொல்லி உல்லாசமாக சிரித்தான். அவன் சிரிப்பு அவளையும் தொத்திக் கொள்ள சிரித்துக் கொண்டே திரும்பி தன் தோழிகளை நோக்கி நடந்தாள்.


அவர்கள் இருவரும் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. இயல்பாகவே ஒருவர் மேல் ஒருவர் பாசத்துடனும் உரிமையுடனும் நடந்துக் கொண்டனர். அது காதல் என்று அவனுக்கு தெரியும், ஆனால் அவளுக்கு?



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post