இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 8 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 10-04-2024

Total Views: 22020


பாவை - 8

தன் அறைக்கு வந்த ஐஸ்வர்யா கைபேசியை எடுத்து உடனே அக்காவிற்கு அழைத்தாள்.

அவளோ அழைப்பினை எடுத்ததும், “சொல்லுடி “ என்க,

“அக்கா, அப்பா இங்கே உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிடிச்சிட்டாரு “ என்று சற்று முன் பெற்றவர்கள் பேசியதை பற்றிக் கூறினாள்.

 “உண்மையாவா ? என் கிட்ட இதை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லை “

“இப்போ என்னக்கா பண்ணப் போறே ?”

“எப்படினாலும் அப்பா என் கிட்ட சொல்லுவாரு தானே அப்போ பேசிக்கிறேன். இல்லைன்னா வசந்த்தை கூட்டிட்டு ஊருக்கு தான் வரணும் “ என்க,

“நீ கவலைப்படாதே. இங்க என்ன நடந்தாலும் நான் உனக்கு உடனே கால் பண்ணிச் சொல்லுறேன் “ எனக் கூறி அழைப்பினை வைத்தாள்.

இங்கே சென்னையில் தங்கையின் அழைப்பினை வைத்த ஆனந்தி யோசனையோடு இருக்க, அவளின் அருகில் வந்தான் வசந்த்.

“என்னாச்சு ஆனந்தி ?“

“வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிடிச்சிட்டாங்க வசந்த் “

“என்ன திடீருன்னு. இப்போ கால் பண்ணினது யாரு ? உங்க அப்பாவா ?” 

“இல்லை. அப்பா அம்மா கிட்ட பேசிட்டு இருந்ததைக் கேட்டு ஐஸ்வர்யா தான் கால் பண்ணுனா “ என்கவே, அந்த நேரம் அங்கே வந்த அவர்களின் ஹெச். ஆர் இவர்களைக் கண்டார்.

“என்ன நடக்குது இங்கே ?”

“சாரி சார். “

“ஆபிஸ் டைம்ல ஒழுங்கா வேலையை மட்டும் பாருங்க. இன்னொரு தடவை இப்படி பார்த்தேன்னு வைங்க டிஸ்மிஸ் பண்ண வேண்டியதா இருக்கும் “ எனக் கூறவே, அங்கிருந்துச் சென்றான் வசந்த்.

ஆனந்தியை முறைத்து விட்டு அறைக்குள் நுழைந்தார் ஹெச் ஆர். வேலையை முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

காதலியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, “இங்கே பாரு ஆனந்தி. நீ இதை நினைச்சி கவலைப்படாதே. உங்க அப்பா நம்ம காதலை சொன்னா புரிஞ்சிப்பாரு. எப்போ உன் கிட்ட பேசுறாரோ அப்போ சொல்லிப் பாரு “ என்கவே, சரியென்றாள்.

பின் மெல்ல அணைத்து விடுவித்து இருவரும் அவர்களின் இருப்பிடம் நோக்கி பயணித்தார்.

வசந்த் பிறந்தது முதல் இப்போது வரை அவனுக்கு பூர்வீகம் என்றால் சென்னை தான். கல்லூரி படிக்கும் போது ஆனந்தியை சந்திக்க இருவருக்கும் காதல் மலர ஆரம்பித்தது. ஆனந்தி ஹாஸ்டலில் தங்கி ஐந்து வருடம் ஒரே கல்லூரியில் படிக்க, சீனியாராக இருந்த வசந்தின் மீது காதல் கொண்டாள். இரு வருடம் கழித்து தன் தங்கையிடமே இந்த விசியத்தை கூற அவளோ மகிழ்ச்சிக் கொண்டாள்.

பிறந்ததிலிருந்து சகோதரிகளாக மட்டுமல்லாது  நல்ல தோழியாக இருவரும் இருந்து வர அனைத்தையும் பகிர்ந்துக் கொண்டனர். அப்படி தான் தன் காதல் விசியத்தையும் கூறினாள்.

வசந்தின் தந்தை சொந்தமாக சூப்பர் மார்கெட் நடத்தி வர, அவனின் அன்னையோ அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். உடன் பிறந்த அக்காவிற்கு திருமணம் முடித்து வைத்திருக்க, தங்கை ஒன்று இருக்கவே அவளின் திருமணத்திற்கு பின் தான் இவனின் திருமணம் என்பதை வீட்டில் என்றோ முடிவு செய்து வைத்திருந்தனர்.

இப்போதைக்கு திருமணம் இல்லை என்ற எண்ணத்தில் ஆனந்தியை காதலிக்க, ஆனால் இங்கோ மூத்தவளாக இருந்தவளுக்கு முதலில் திருமணம் என்ற நிலை.

மறுநாள் பார்வதி பூஜையறையிலிருந்து மூத்த மகளின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்துக் கொடுக்க அதனை வாங்கிக் கொண்டு நாராயணனை சந்திக்க டவுனுக்குச் சென்றார்.

சரியாக அவருமே காத்திருக்க, “என்னப்பா வீட்டுல எல்லார் கிட்டயும் சொல்லிட்டையா ? என் பையனுக்கு கொடுக்க சம்மதம் தானே ?” என்க,

“முதல்ல ஜாதக பொருத்தம் பார்த்துக்கலாம் “ என்றதும்,

“அதுக்கு தானே நேரா வரச் சொன்னதே ? வா ஜோசியர் கிட்ட போவோம் “ எனக் கூறி இருவரும் ஒரு ஜோதிட நிலையம் நோக்கிச் சென்றனர்.

அங்கேச் சென்று இருவரின் ஜாதகத்தை காட்டிக் கேட்க, அதனை பார்த்தவரும் முக்கியமான பொருத்தம் அனைத்தும் பொருந்தி ஒன்பது பொருத்தம் இருக்கவே திருமணம் செய்து வைக்கலாம் என்றார்.

நிம்மதியாக வெளியே வந்தவர்கள், “இப்போ என்ன சொல்லுற சிவராம். வீட்டுல கலந்து பேசிட்டு தாக்கல் சொல்லு. பரிசம் போட வரோம் “ என்க,

“முதல்லை மாப்பிள்ளையை மட்டும் கூட்டிட்டு வா. நானும் பொண்ணை காட்டுறேன். ரெண்டு பேருக்கும் பிடிச்சதுக்கு அப்பறம் மத்ததை பத்தி பேசிக்கலாம் “ 

“நீ சொல்லுறது சரி தான் . ஆனா  உன் பொண்ணு சென்னையில வேலை பார்க்குறாலே “

“வரச் சொன்னா தோது பார்த்து வந்திருவா “ என்றதும், இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

அன்று சிவராம் வீட்டுக்கு வந்ததுமே பார்வதி என்னவென்று கேட்க, ஜாதகம் பொருந்தியதை தான் பேசிவிட்டு வந்ததையும் கூறினார்.

“அப்போ என்னைக்கு ஆனந்தியை வரச் சொல்ல ?” பார்வதி கேட்க,

“வாரக்கடைசி வந்திட்டு போகச் சொல்ல வேண்டியது தான். முதல்ல மகிழனுக்கு போனை போடு பேசுவோம். எப்படி இந்த நேரம் ராத்திரியா தான் இருக்கும் “ என்றதும், அன்னையும் மகனுக்கு அழைத்தார்.

வெளிநாட்டில் இருந்த மகிழன் பெற்றவர்களின் அழைப்பினை ஏற்க, “எப்படிடா இருக்கே ? தூங்குறையா ?” பாசமாய் அன்னைக் கேட்க,

“இப்போ தான் படுக்கப் போனேன். சொல்லும்மா என்ன விசியம் ? அப்பா,தங்கச்சி எல்லாரும் என்ன பண்ணுறாங்க ?”

“இதோ உன் அப்பா பக்கத்துல தான் இருக்காரு. அவர் தான் உன் கிட்ட பேசணும் சொன்னாரு. இதோ கொடுக்கேன் “ எனக் கூறி கணவரிடம் கொடுக்க, அவரும் வாங்கி மகனிடம் நலம் விசாரிப்பு படலம் நடத்தினார்.

பின் ஆனந்திக்கி பார்த்திருக்கிற வரன் பற்றி கூறவே, “ரொம்ப சந்தோஷப்பா. பார்த்து விசாரிச்சி செஞ்சி முடிக்கணும். நானும் என் பிரெண்ட் கிட்ட சொல்லி மாப்பிள்ளையை பத்தி விசாரிக்க சொல்லுறேன் “ என்கவே

“சரிப்பா. உறுதியானதும் பரிசத்துக்கு வந்திரு “ என்றார்.

“அப்பா இதை நீங்க சொல்லணும்ன்னு அவசியமேயில்லை. என் தங்கச்சி கல்யாணம். நாளைக்கே கூட வரணும்னா வரேன் “ என்க, பெற்றவருக்கு மனம் நிம்மதி. உடன் பிறந்த தங்கையின் மீது அவன் வைத்த பாசத்தை அறிய இந்த ஒற்றை வார்த்தை போதுமே !

சிறிது நேரம் பேசிவிட்டு கைபேசியை வைக்க, அதுவரை  தன்னறையின் கதவின் அருகே நின்று இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள் ஐஸ்வர்யா.

அன்றே அதுவும் அப்போதே அக்காவிற்கு அழைத்து விசியத்தை கூற, அவளோ அதனைக் கேட்டு அதிர்ச்சியுற்றாள். இவ்வளோ தூரம் வரைச் சென்று தந்தை தன்னிடம் இன்னும் கேட்கவில்லையே ? என்ன செய்வதென்று தெரியாது நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

மாலை நேரம் போல் வசந்திடம் இதனைப் பற்றி கூறவே, “ஏய், எப்படியும் உன்னை வரச் சொல்லாம அவங்களால எதையும் முடிவெடுக்க முடியாது. உங்க அப்பா உன்னை ஊருக்கு வரச் சொல்லும் போது நேரா போய் விசியத்தைச் சொல்லிரு “ என்க, 

“அது முடியாது. என் அப்பா முகத்தை பார்த்து பேச தைரியம் வருமான்னு தெரியல “

“அப்போ என்ன பண்ண சொல்லுற ?”

“நீயும் என் கூட வா வசந்த் “

“வாட் நானா ? ஹே, என்ன விளையாடுறையா ? உங்க ஊருக்கு என்னை சேர்த்து நீ கூட்டிட்டு உன் அப்பா முன்னாடி நின்னா அவமானப்படப் போறது நீயும், நானும் மட்டுமில்லை. உன் பேமிலியும் சேர்த்து தான். மறந்துட்டியா ? இதே நீ ஊருக்கு தெரியாம உன் அப்பாவை கன்வன்ஸ் பண்ணிட்டேன்னு வை. அரேஞ் மேரேஜ் மாதிரி பண்ணிரலாம் “ என்க, ஆனந்திக்கு எதுவுமே ஓடவில்லை.

நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தவன் அப்படியே அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள, சற்று கவலை தீர தன்னவனிடம் சிறிது நேரம் ஆறுதல் கொண்டாள்.

இப்படியே இருக்க முடியாது என்பதால் அவளைப் பிரித்தவன், “நேரமாச்சு நீ கிளம்பு. நான் உன் கூடவே வரேன். நீ ஹாஸ்டல் போனதும் நான் போய்க்கிறேன் “ அவளால் நிச்சியம் சரியாக வண்டியை ஓட்ட முடியாது என்பதால் கூறினான்.

பின் இருவரும் அங்கிருந்து கிளம்பி விட, அவர்கள் காதலிக்கும் விசியம் ஏற்கனவே உடன் வேலைப் பார்ப்பவர்களுக்கு தெரிந்து தான் இருந்தது.

இரவு நேரம் போல் ஆனந்தி கைபேசி ஓசை எழுப்ப, நித்திரை வராது யோசனையோடு படுத்துக் கொண்டிருந்தவளோ சட்டென அதனைக் கண்டு எழுந்தாள்.

தந்தையிடமிருந்து தான் அழைப்பு வந்தது. அவர் என்ன கூறப் போகிறார் என்பது தெரியும். இப்போது என்ன செய்வது ? அழைப்பினை துண்டிக்காது எடுக்கவும் முடியாது தடுமாறினாள்.

அவளின் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது என்று தான் கூற வேண்டும். நெற்றியோரம் வியர்க்க, மறுமுறையும் தந்தை அழைக்கவே, நடுக்கத்தோடு அதனை எடுத்தாள்.

“ஹலோ ?”

“என்னம்மா இவ்வளோ நேரமா போனை எடுக்கலை. தூங்கிட்டையா தங்கம் “ என்க, தந்தையின் இந்த பாசமான குரலில் மேலும் குற்றவுணர்வு நெஞ்சத்தை அரித்தது.

மெளனமாக மகள் இருக்கவே, “ஹலோ, ஆனந்தி. அம்மாடி “ தந்தை மீண்டும் மீண்டும் அழைத்த பின் தான் நிதானத்திற்கு வந்து மூச்சினை விட்டுக் கொண்டாள்.

“அப்பா சொல்லுங்கப்பா ?” என்க,

“சத்தத்தையே காணோம்த்தா “

“தூக்க கலக்கத்துல இருந்தேன் அதான்ப்பா. எல்லாரும் நல்லாயிருக்காங்களா ?”

“நல்லாயிருக்காகத்தா. ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு ?”

“லைட்டா தலைவலிப்பா “

“உடம்பை பார்த்துக்கோம்மா. வேலை கஷ்டமா இருந்தா பேசாம விட்டிட்டு வந்திரு “

“அதெல்லாம் இல்லைப்பா. ஈஸியா தான் இருக்கு “ மாட்டேன் என்பதை கூற முடியாது தவித்தாள்.

“இந்த வாரக்கடைசி வீட்டுக்கு வாம்மா “ என்க,

“எதுக்குப்பா ?”

“உன்னை பார்க்கணும் போல இருக்கு அதான். போன தடவை நீ வரும் போது திட்டி விட்டுட்டேன்.  அதுனால தான் வரச் சொல்லுறேன் “

“லீவ் கிடைக்குமான்னு தெரியலப்பா “

“கேட்டுப் பாரு. நான் உன் அண்ணனை டிக்கெட் போட சொல்லுறேன். இந்தா உன் அம்மா கிட்ட பேசு “ எனக் கூறி அன்னையிடம் கொடுத்து விட, காரணத்தை கூறினாலும் ஏதாவது சொல்லிப் பார்க்கலாம். இப்படி வா என்று அழைத்தால் என்ன செய்ய முடியும் ?”

“தலைவலிக்கு நாளைக்கு கூப்பிடுறேன் “ எனக் கூறி கைபேசியை வைத்தவளுக்கு உண்மையிலே தலைவலிக்கத் தான் செய்தது.

மறுநாள் அலுவலகம் செல்ல, அங்கே அவளை அழைத்த ஹெச். ஆர் இனி சில நாட்கள் உனக்கு நைட் சிப்ட் என்றிடவே அதிர்ந்து தான் போனாள்.

“சார் இங்கே ஜாயின் பண்ணும் போது எனக்கு நைட் சிப்ட் கிடையாதுன்னு தானே சொன்னேங்க சார் “ 

“ஆமா. ஆனா இப்போ நம்ம இயர் லாஸ்ட்ல இருக்கோம். கொஞ்சம் நாளைக்கு தான் “ என்கவே, வேறு வழியின்றி கேட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

மதிய உணவருந்தும் நேரம் போல் வசந்திடம் தந்தை பேசியதையும், தனக்கு வேலை நேரம் மாறியதையும் கூறினாள்.

“ச்சே ! நேரம் கெட்ட நேரத்துல இது வேறையா ? சரி விடு பார்த்துக்கலாம். நான் கிளம்பும் போது நீ வேலைக்கு வருவே இனி அப்போ தான் மீட் பண்ண முடியும் “ 

“ஆமா. எனக்கு இது கூட பிரச்சனையில்லை. இந்த வாரம் என்னை ஊருக்கு வரச் சொல்லிருக்காங்க “

“போ, போய் உன் அப்பா கிட்ட நம்ம காதலை பத்தி சொல்லு. வொரி பண்ணிக்கிட்டு உன் ஹெல்த்தை நீயே இஸ்பாயில் பண்ணிக்காதே ஆனந்தி “ என்கவே, தன் மனம் புரிந்தும் இவன் இவ்வாறு கூறுகிறானே ?

அவள் மட்டுமே ஏதோ நோய் வாய்ப்பட்டதை போல் அந்த வாரம் முழுவதும் சுற்றி வர, அவனோ அதற்கு மாறாய் எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் இருந்தான்.

அன்றிரவு ஐஸ்வர்யா அழைக்க, “சொல்லுடி ?” என்க,

“என்னக்கா, அப்பா பேசிட்டாரு போல ? மாமா கிட்ட இதை பத்தி சொன்னையா ?”

“பேசினேன். அவன் என்னடானா அப்பா கிட்ட நேர்ல வந்து என்னை பேச சொல்லுறான் “ என்று வசந்த் கூறியதை கூறவே,

“அக்கா நான் ஒரு யோசனை சொல்லட்டா ?”

“என்னடி ?”

“பேசாமா. நீங்க ஏன் கல்யாணம் பண்ணிட்டு நம்ம ஊருக்கு வரலாம்ல. மத்தவங்க பேசினாலும் அப்பாவால உன்னை விட்டுக் கொடுக்க முடியாதுக்கா. அதுவும் நீ கல்யாணம் பண்ணிட்டு வந்தா கண்டிப்பா ஒத்துப்பாரு “ என்கவே,

“இது வொர்க் அவுட் ஆகுமா ஐஸ்வர்யா ?”

“அப்பாவை பத்தி நமக்கு தெரியாதா ? கண்டிப்பா ஏத்துப்பாரு “

“சரிடி நாளைக்கு வசந்த் கிட்ட சொல்லுறேன். எனக்கு நைட் சிப்ட் வேற போட்டாங்க. ஒரு வாரத்துக்கு ராத்திரி தான் வேலைக்குப் போகணும் “

“சரிக்கா பார்த்து கவனமா ட்ராவல் பண்ணு. என்னைக்கும் நான் உனக்கு துணையா இருப்பேன். ஐ லவ் யூக்கா “ கொஞ்சிக் கொண்டு கூறவே,

“உன்கிட்ட பேசும் போதெல்லாம் எனக்கு ஒரு பாசிடிவ் எனெர்ஜி கிடைக்கும். லவ் டி தங்கம். சரி வச்சிறேன் “ எனக் கூறி கைபேசியை வைக்க, அது தான் அவர்களின் இன்பமான வார்த்தைகள் என்பதை அப்போது  மங்கையர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை. 

வசந்திடம் மறுநாள் தங்கை கூறியதைப் பற்றி தான் யோசித்து போன்றே கூற, முற்றிலும் மறுத்தான்.

“ஆனந்தி, உனக்கு தான் என் பேமிலி பத்தி தெரியும்ல. என் தங்கச்சிக்கு கல்யாண வயசு. அவளுக்கு முடியணும். அப்படி இருக்க நான் எப்படி கல்யணம் பண்ண முடியும் ? “

“எனக்கு புரியுது. நம்மளை பத்தி நீ யோசிச்சிப் பாரு வசந்த் “

“யோசிக்க என்ன இருக்கு ? நான் தான் தெளிவா சொல்லிட்டேன். நீ தான் கேட்கலை. நீ கொஞ்சம் தைரியமா பேசுனா. நம்ம காதல் ஜெயிக்கும். இல்லை உன்னால முடியாது அப்படின்னா உன் அப்பன் சொல்லுறவனை கல்யாணம் பண்ணிக்கோ போ “

“எதுக்கு நீ இப்படி பேசுற ?”

“சும்மா எரிச்சலாக்காதே ஆனந்தி “ என்றவனோ, அதற்குள் மேல் நிற்காதுச் சென்று விட, அழுகையோடு அவன் செல்லும் பாதையைப் பார்த்தவாறு நின்றாள்.

வேலை முடிந்து ஹாஸ்டலுக்கு வந்த ஆனந்தி, தங்கைக்கு அழைத்து வசந்த் பேசியதைப் பற்றி கூறினாள்.

“இப்படி பேசுவான்னு நான் நினைச்சி கூட பார்க்கலைடி “ என்க,

“சரி விடுக்கா. நீ இங்க வா அப்பா கிட்ட ரெண்டு பேரும் சேர்ந்தே பேசிப் பார்க்கலாம் “ என்று சிறிது நேரம் ஆறுதல் கூறி அழைப்பினை வைத்தாள்.

பின் இதோ அதோ என்று அந்த வாரக்கடைசி வர, முதல் நாள் இரவே மகள் கிளம்பி விட்டாலா என்று அழைக்க, அழைப்போ செல்லவில்லை.

மறுநாள் காலை நேரம் புதிதாக நம்பரில் இருந்து சிவராமிற்கு அழைப்பு வர, அதில் வந்த செய்தியைக் கேட்டு இடியே இறங்கிய உணர்வு. அப்படியே கைபேசியை தவற விட்டார்.

தொடரும்...

தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Leave a comment


Comments


Related Post