இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 10-04-2024

Total Views: 42746

இதயம் 1

யா தேவீ ஸர்வ பூதேஷு,                மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா,        நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை,    நமஸ்தஸ்யை நமோ நமக!

யாதேவி ஸர்வ பூதேஷு                புத்தி ரூபிணே ஸம்ஸ்திதா          நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை,      நமஸ்தஸ்யை நமோ நமக!

     உலகின் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாய் விளங்கும் பார்வதியை தன் அன்னையாய் ஏற்று, நல்ல ஞானம் கிடைக்க வேண்டி கல்லும் கரையும் தெய்வீகக் குரலில் பாமாலை சூட்டி, மண மலர்களோடு தன் மன மலரையும் சேர்த்து அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள் மின்மினி.

     இயற்கை விரும்பியான அவள் தந்தை ஆசையாய் வைத்த பெயர். தன் குடும்பத்தில் அனைவரும் மாநிறமாய் இருக்க, மூன்று தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்த தன் மூதாதையரின் நிறத்தோடு பிறந்து, தங்கமாக ஜொலித்த பெண்ணிற்கு இதைத் தவிர வேறு பெயர் வைக்கத் தோன்றவில்லை அவருக்கு.

     அதிகாலை ஆறு பதினைந்து மணி. சீசன் முடிந்த குற்றால அருவியில் சொட்டுச் சொட்டாக வடியும் மூலிகைத் தீர்த்தம் போல், குளித்த தலையில் ஈரம் இன்னும் சொட்டிக் கொண்டிருக்க, மயில் தோகை போன்ற கூந்தலை விரித்து விடாமல் நுனியில் மட்டும் சின்னதாகக் கொண்டையிட்டு இருந்தாள்.

     கருப்பு வானவில்லை ஒத்த இரண்டு புருவங்களுக்கு நடுவில், வட்ட முகத்தில் அகல நெற்றிக்கு ஏற்ற வகையில் சற்றே பெரிய அடர்சிகப்பு பொட்டும், அதற்கு கீழ் தாழம்பூ குங்குமமும் வைத்து, கையில் கிடந்த கண்ணாடி வளையல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி எழுப்பிய ஒலி கோவில் மணியோசையை மிஞ்ச, தேவ அலங்காரத்துடன் கண் முன் இருந்த சுவாமிப் படங்களுக்கு பயபக்தியுடன் ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தாள் அந்த பதினெட்டு வயது மடந்தை.

     அவள் வாழ்வில் இப்படி ஒருநாள் வரும் என்று நினைத்துக் கூட பார்த்திராத அளவு பெரிய விஷயம் நடந்திருக்க, அதற்கு நன்றி சொல்லும் விதம் தான் இந்த பூஜை நடந்து கொண்டிருக்கிறது.

     பதினெட்டு வயது பிறந்து, உடல் அளவில் குழந்தைக்கும் குமரிக்கும் இடையே இருந்தாலும், மனதளவில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி அவளிடத்தில். அதற்கு அவள் வளர்ந்த முறை தான் முக்கியக் காரணம்.

     அவள் உண்ணும், உறங்கும் நேரத்தில் ஆரம்பித்து, நடை, உடை, தலையலங்காரம், முகப்பூச்சு, நகம், தலைமுடியின் வளர்ச்சி, செய்யும் உடற்பயிற்சி, பழகும் நண்பர்கள் வரை அனைத்திற்கும் அவளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது அவள் தந்தை இளவரசனால்.

     ஆரம்பத்தில் நம் நன்மைக்குத் தானே அப்பா சொல்கிறார் என ஆனந்தமாக அந்த வாழ்க்கையை வாழ்ந்த பெண்ணிற்கு, அன்புக்கும் அடக்குமுறைக்கும் வித்தியாசம் புரியும் வயது வந்த நேரம் இவ்வித கட்டுப்பாடுகள் பிடிக்காமல் போனாலும், ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

     இவள் அளவுக்கு இல்லை என்றாலும் இதில் பாதி அளவு கட்டுப்பாடுகள் அவள் தமையன் அன்புவுக்கும் விதிக்கப்பட்டிருந்தது தந்தை இளவரசனால்.

     தென்காசி மாவட்டத்தில் அருவிகளின் நகரான குற்றாலம் தான் சொந்த ஊர்.  ஓரளவு நடுத்தர விவசாயக் குடும்பம் மின்மினியுடையது. தந்தை இளவரசன் பாசத்தை விட கண்டிப்பு அதிகம் காட்டுபவர். தாய் மணிமேகலையும் அப்படியே. மின்மினி, அன்பு இருவரும் எலியும் பூனையும் தான். அன்பைப் பொழியவும் தேவை இருக்காது, அடிஉதைக்கும் வேலை இருக்காது.

     முழுஆண்டு விடுமுறையை எதிர்நோக்கும் பள்ளிக் குழந்தைகளைப் போல, பண்டிகை என்ற பெயரில் வரும் நல்ல நாட்களுக்காக காத்திருந்து அந்த தினங்களில் மட்டும் அதீத சந்தோஷத்தை அனுபவித்துக் கொள்ளும் சாதாரணக் குடும்பம் அவர்களுடையது.

      பெண் பிள்ளைகளுக்கு அவர்களைப் பெற்ற தந்தைமார் தான் எப்பொழுதும் முதல் நாயகன். அந்த வழியில் மின்மினியும் தந்தையை மலைப்பாய் பார்த்து, ஒரு பருவம் வரை அவர் எள் என்று சொன்னால் எண்ணெய்யாய் வந்து நிற்பாள். அவர் நண்பர்களிடத்தில் பெருமை பாடுவதற்காக தான் கஷ்டப்பட்டு படித்து பள்ளியின் முதல் மாணவியாய் வருவாள்.

     எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னால் தன் தாய் தந்தையருக்கு தலைகுனிவு வந்து விடக்கூடாது என்பது தான் அந்தச் சின்ன வயதில் இருந்தே பிஞ்சு மனதில் ஆழமாய் பதிந்து போன அழுத்தமான எண்ணம்.

     பதின்மூன்று வயதில் பருவம் அடையும் வரை தனக்கும் தன் அண்ணனுக்கும் வீட்டில் எந்தவிதமான பாகுபாடும் இல்லை என்றே நினைத்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு அதன் பிறகு தான் நிதர்சனம் புரிய ஆரம்பித்தது.

      இளவரசன் என்ன தான் செல்லமகள் மின்மினிக்கு அன்பான தந்தை என்றாலும், அவரும் பழமைவாதிகளைப் போல மகன் தான் எல்லாமே என்று அன்புவின் மேல் காட்டும் தனி அக்கறை அந்தச் சின்ன வயதிலேயே புரிந்து தான் இருந்தது மின்மினிக்கு.

     பெரிதாக அதில் வலி எல்லாம் இல்லை. அண்ணனிடம் அதீத அக்கறை காட்டினாலும் நம்மை ஏங்க விடவில்லையே. நம்மிடமும் பாசமாய் தானே இருக்கிறார் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.

     அன்னப்பறவை போல் எல்லாவற்றிலும் நன்மையை மட்டுமே பிரித்தெடுக்கும் குணமுடைய பெண்ணவளிடம் இருந்த இன்னொரு மிகப்பெரிய நல்லகுணம் அவள் பழகும் மனிதர்களை அவர்களின் குணங்களோடு அப்படியே ஏற்றுக்கொள்வாள். இப்படியான பக்குவம் அந்தப் பதின் வயது துவக்கத்தில் இருந்த குழந்தைக்கு எப்படி வந்தது என்பதை யாரும் அறியார்.

     அவள் உடலால் பெரிய மனிதினாய் மாறிய நாளில் இருந்து முன்பு போல் நெருக்கம் காட்டாமல் நான்கடி தள்ளி நின்று தான் பேசுவார் இளவரசன். இன்றில் இருந்து எந்த ஆண் மகனிடமும், அது நானாக இருந்தால் கூட நான்கடி தள்ளி நின்றே பேச வேண்டும் என்று சொல்லாமல் சொன்ன அறிவுரை, அதன் பிறகு தொடர ஆரம்பித்தது பல வழிகளில்.

     “நம்ம ஆளுகளோட பிள்ளைகள் கிட்ட பழக்கம் வைச்சுக்கிட்டா தான் நாளைக்கு உனக்குன்னு ஒரு பிரச்சனை வந்தா துணைக்கு வருவாங்க“ என்பதில் ஆரம்பித்து, அன்புவிடம் திணித்த ஜாதிப் பெருமைகளை மின்மினியிடமும் திணிக்கப் பார்த்தார்.

     ஏனோ தன் ஹீரோவான அப்பாவே இதைச் சொன்னாலும் அதில் எல்லாம் நாட்டமில்லை அந்தச் சிறுபெண்ணிற்கு. அவள் நெருங்கிய தோழி, வேற்று இனமாக இருந்தது தான் அதற்கு காரணமோ என்னவோ.

     உடன் படிக்கும் மாணவர்களிடம் அவள் ஏதாவது பேசினால் சண்டைக்கு வருவான் அண்ணன் அன்பு. அதற்காகவே நன்றாகப் பழகிய நண்பர்கள் என்றாலும், வயது வந்த பின்னர் தானாகவே ஒதுங்கிக்கொள்ளத் துவங்கினாள் பெண்.

    அவள் பெரியவளான பிறகு மின்மினியின் பொறுப்பு இளவரசனிடம் இருந்து தாய் மணிமேகலைக்கு வந்தது. சமயலறைக்குள் வேலை அதிகரித்தது. கண் பார்ப்பதை கை செய்ய வேண்டும் என்று சொல்லி சொல்லியே தோசை ஊற்றுவதில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் சின்னச்சின்ன சமையல் வேலையை அவள் அறியாமலே அவளுக்குப் பழக்கிக் கொடுத்தார் அவள் தாய்.

     எந்த ஒரு செயலையும் ஆரம்பத்தில் கற்றுக்கொள்ளும் போது பேரார்வம் இருக்கும். அது தான் மின்மினிக்குள்ளும் இருந்தது, தானாக ஆசையாய் செய்தாள். நாள் போகப்போக தான் சிரமம் புரிந்தது, அது எரிச்சலையும் கொடுத்தது.

     பெரும்பாலான இரவு நேரங்களில், இளவரசனும் அன்புவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது, இரவு உணவாக செய்த அனைத்தையும் அவளோ இல்லை அவள் தாயோ கொண்டு வந்து அவர்களுக்கு முன்னால் கடை பரப்பி, தட்டில் பரிமாறி அவர்களின் கைகளில் கொடுக்க வேண்டும்.

     சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தண்ணீர் காலியானால் அதை எடுத்து வரும் பொறுப்பும் மின்மினிக்கே. சாப்பிட்டு முடித்ததும் அந்த எச்சில் தட்டை கூட எடுக்க மாட்டார்கள் ஆண்கள் இருவரும்.

    அந்தப் பணியும் அவள் தான் செய்தாக வேண்டும். மீண்டும் பாத்திரங்களைக் கொண்டு போய் சமயலறைக்குள் போட்டு சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து, படுக்கை விரிப்பை விரித்து அனைவருக்கும் தலையணை போர்வை கொண்டு வந்து வைப்பது வரை அனைத்தும் அவள் வேலை.

     ஆரம்பத்தில் அம்மா சொன்னார் செய்கிறேன், நம் வீட்டு வேலை தானே என எதையும் யோசிக்காமல், தானாக முன்வந்து செய்து கொண்டிருந்த பெண்ணிற்கு நாளாக நாளாக ஒரு சலிப்பு வந்தது. ஆணும் பெண்ணும் சமமே என்ற சமஉணர்வு எண்ணங்கள் மண்ணைப் பிளந்து வெளிவரும் செடியைப் போல மெல்ல துளிர்விட்டு வேகமாய் வளர ஆரம்பித்த நேரம் அது.

     சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தண்ணீர் காலியானால், ஒருநாள் அண்ணன் சென்று எடுத்து வரக் கூடாதா? எனக்கேட்டு திட்டு வாங்கினாள். சில முறை அதிகாலையில் எழுந்து படித்துக் கொண்டிருக்கும் போது, இரவு படுத்திருந்த பாய்களை எடுத்து வைக்க மறந்திருப்பாள். தாய் திட்டியதும் தான் நினைவு வந்து ஓடுவாள். அந்த மாதிரி நேரங்களில் அன்பு அதை எடுத்து வைக்கக் கூடாதா, இல்லை தாய் தான் அவனை எடுத்து வைக்க சொல்லக் கூடாதா என்கிற எண்ணம் வர ஆரம்பித்தது.

     இதெல்லாம் சின்னச் சின்ன வேலைகள் தான். இதை தினமும் செய்வதால் தான் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை என்று அவளுக்கும் புரிந்து தான் இருந்தது.

      அவளுடைய குழப்பம் எல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒரு குடும்பம் வசிக்கும் வீட்டில் இதெல்லாம் அடிப்படையான சின்னச்சின்ன வேலைகள். இதை ஒரு நாள் கூட ஆண்பிள்ளையான அன்பு செய்யமாட்டான், செய்யக்கூடாது என்றால், இது என்ன அவ்வளவு கீழான வேலையா? அப்பொழுது தன்னை ஏன் செய்யச் சொல்கிறார்கள் என்ற நினைப்பு வந்து அவளைக் குழப்பும். சிறுபிள்ளை தானே அவள் வயதிற்கு ஏற்ற வகையில் தான் அவளுக்கான குழப்பங்களும் ஆரம்பித்தது.

     ஆண்பிள்ளைக்கும், பெண்பிள்ளைக்கும் சின்னச் சின்ன விஷயத்தில் கூட இவ்வளவு பாகுபாடு காட்டும் ஆட்கள் நாளை பெரிய விஷயத்தில் என்ன செய்வார்களோ என்ற இனம் புரியாத பயம் வந்தது. கல்விச் சுற்றுலா கூட அன்புவுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது அவளுடைய தவிப்பை அதிகரித்தது.

     ஆண்பிள்ளை வீட்டின் வாரிசு, எவ்வளவு செல்லமாக வளர்ந்தாலும் பெண் பிள்ளை நாளை இன்னொருவன் வீட்டிற்கு போகக் கூடியவள் தானே, அவளுக்கு கற்பிக்க வேண்டியது நல்ல குணங்களும், ஒழுக்கமும் மட்டும் தான் என்ற தன் தாய், தந்தையின் எண்ணம் தெளிவாகப் புரிந்தது.

     வீட்டில் பெண்ணிற்கு வேலை, காட்டில்(வயலில்) ஆணுக்கு வேலை என்று இளவரசன் பெருமை பேசினாலும், வீட்டில் இரண்டு குழந்தைகள் இருக்கும் போது ஒருவர் மட்டும் ராஜாவைப் போல் கவனிக்கப் படுகிறாரே என்ற எண்ணம் ஒவ்வொரு நேரம் அவளை அதிகம் வருந்த வைக்கும்.

     என்ன இருந்தாலும் ஒரு வீட்டில் ஆணின் கை தான் ஓங்கி இருக்க வேண்டும் என்ற பழமைக் கொள்கை அவளுக்குள்ளும் திணிக்கப்பட்டு இருந்ததால் தன்னுடைய அசௌகர்யத்தையும் மீறி கொஞ்சம் கொஞ்சமாக நடப்பை ஏற்றுக்கொண்டாள். அது பழகியும் போனது. நாட்கள் நகர்ந்தது, பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து பதினொன்றாம் வகுப்பில் முதல் க்ரூப்பில் சேர்ந்தாள்.

     இந்த அளவிற்கு படித்த உன் மகள் நிச்சயம் மருத்துவராகி விடுவாள், என்ற ஊர் மக்களின் பேச்சைக் கேட்டு மலைக்கோட்டை கட்டினார் இளவரசன். தான் படிக்காமல் கஷ்டப்பட்டது போதும் எப்படியாவது பிள்ளைகள் இருவரையும் நல்லபடியாகப் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் அதிகமாகவே இருந்தது. இந்த விஷயத்தில் மட்டும் ஆண்பிள்ளை பெண்பிள்ளை என்ற பேதம் இல்லை அவரிடத்தில்.

     சாதிப்பது யாராக இருந்தாலும் அது மற்றவரின் பார்வைக்கு இளவரசனின் பிள்ளைகள் தானே. மகளை மருத்துவராக்கிவிட வேண்டும் என மனக்கோட்டை கட்டி அவளுடைய பொதுத்தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

     ஆனால் மின்மினியின் நேரம் அவளுக்கு மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை. அவளுக்கு மருத்துவராகும் ஆசையும் இல்லை என்பது இரண்டாவது விஷயம். அந்த நேரத்தில் தான் முதன் முதலில் தந்தையின் மனதில், தான் இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் சறுக்கி இருந்தாள் பெண்.

     அன்பு அருகில் இருந்த ஊரில் ஒரு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்க, தன் உறவினர் ஒருவர் சொன்னதைக் கேட்டு மின்மினியின் நல்ல எதிர்காலத்திற்காக, பொறியியல் படிப்பதற்காக அவளை சென்னை மாநகரம் அனுப்பி வைக்க முடிவு செய்தார் இளவரசன்.

     இதிலும் பெரிதாக மின்மினிக்கு ஆர்வம் என்பது இல்லை. இதில் மட்டும் இல்லை, உண்மையில் தன்னுடைய ஆசை இலட்சியம் தான் என்ன என்றே தெரியாத சிறுபிள்ளை அவள்.

     அத்தனை வருட அவள் வாழ்க்கைப் புத்தகத்தை திருப்பிப் பார்த்தால், அதில் அவளின் அப்பா அம்மா மட்டுமே நிறைந்திருப்பார்கள். பிள்ளைகளாகப் பிறந்தவர்களுக்கு அவர்களின் தாய் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதே முதல் கடமை என நினைத்து வளர்ந்தவளுக்கு, அதாவது அப்படியொரு எண்ணத்துடன் வளர்க்கப்பட்டவளுக்கு தனியாக தனக்கே தனக்கென்று சின்னச்சின்ன ஆசைகள் தான் இருந்தனவே தவிர இலட்சியம் என்று எதுவும் இருந்ததில்லை.

     வழக்கம் போல தன்னுடைய அப்பா சொல்கிறார், தனக்கு அவர் நல்லது தான் நினைப்பார். அதனால் கேட்டுக்கொள்வோம், எதையோ படிக்கப் போகிறோம் அதற்கு இதைப் படித்தால் தான் என்ன, என்ற மனநிலையில் தான் சென்னை செல்லத் தயாரானாள். ஆனால் அது வாழ்வை புரட்டிப்போடும் நிகழ்வாக அமையப்போகிறது என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

     அன்புவுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. "சும்மாவே அவட்ட ஏதாவது வேலை ஏவினா, ஏன் நீ பாக்க மாட்டியான்னு எதுத்து எதுத்து பேசுதா. இந்த அழகில் அம்புட்டு தூரம் போய் பெரிய படிப்பு படிக்க வைக்காட்டி தான் என்ன" தானே பேச தயங்கும் தன் தந்தையிடம் வாய்த் துடுக்காக எதையாவது பேசி வைக்கும் தங்கையின் மீது இருந்த வருத்தத்தை இந்த வழியில் தாயிடம் இறக்கி வைத்துவிட்டுச் சென்றான் அன்பு.

     "பொம்பளப் புள்ளையை என்னத்துக்கு அம்புட்டு தூரம் அனுப்பி படிக்க வைக்க நினைக்க" எனப் பலர் கேட்டாலும், ஏனோ இளவரசன் இதில் பின்வாங்க நினைக்கவில்லை.

     வாழ்க்கைப்பட்டு போகும் இடத்தில் தன் பெண் மரியாதையோடு வாழ வேண்டும். அதற்குத் தரமான கல்வியும், அதைத் தொடர்ந்த வேலையும் அவசியம் என்பது அவருக்கு சமீபத்தில் தான் புரிந்தது.

     பெண் பிள்ளைகள் வேலைக்கு செல்லக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு அவர் கீழானவர் இல்லை. இருந்தாலும் ஒரு பெண்  பெரிய படிப்பு படித்து எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் அவள் என்றும் ஒரு பெண் தான், ஆணுக்கு கீழ்தான் என்ற எண்ணம் உடையவர்.

     கல்லூரியோடு கூடிய விடுதி இருந்தாலும் அங்கே மின்மினியைச் சேர்த்து விட மனமில்லை பெற்றவருக்கு. மற்ற பெண்களுடன் பழகி மகள் கெட்டுவிட வாய்ப்பு இருக்கிறது என நினைத்தவர் தன் தம்பி மகள், கணவன் குழந்தைகளுடன் அதே ஊரில் வசிப்பது நினைவு வரவும் அவர்களிடம் மகளை ஒப்படைக்கத் திட்டமிட்டார்.

     அதுவரை தெரியாத ஊரில், பெரிய கல்லூரியில் படிப்பதை நினைத்து வருத்தத்தில் இருந்தவளுக்கு அக்கா அத்தானின் வீட்டில் தங்குவது நிம்மதி கலந்த பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. மின்மினியிடம் சென்று நீ பார்த்து வியந்த மனிதர் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்வாள் தன் ஜீவன் அத்தான் என்று.

     விவரம் தெரிந்த நாளில் இருந்து கோப குணம் கொண்ட ஆண்களை மட்டுமே பார்த்து வளர்ந்திருந்த பெண் அவள். அப்பாவாகட்டும், அண்ணனாகட்டும் அக்கம் பக்கத்து மனிதர்களாகட்டும் எல்லோருமே அப்படித் தான்.

     யார் மீதோ இருக்கும் கோபத்தை வீட்டுப் பெண்களிடம் காட்டி, கண்டபடி திட்டி அவர்கள் அழ ஆரம்பித்ததும் எதுவும் நடவாதது போல் எழுந்து செல்லும் பழக்கம் கொண்ட ஆட்களையே பார்த்து பார்த்து வளர்ந்தவளுக்கு மென்மையான ஆண்களும் உலகத்தில் இருக்கிறார்கள் எனப் புரிய வைத்தவன் ஜீவன். அவள் சித்தப்பா மகளும் செல்ல அக்காவுமான சந்திரவதனியின் கணவன். அப்படி ஒரு அன்பானவன்.

     வதனிக்கு மூன்று குழந்தைகள். முதல் இரண்டு இரட்டை குழந்தைகள் பாரிவேந்தன் மற்றும் சபரிவேந்தன். மூன்றாவது பெண் குழந்தை பிறந்த போது, கட்டாயப்படுத்தி தன் வீட்டிற்கு வரவழைத்து பார்த்துக் கொண்டார் மணிமேகலை. தாய், தந்தை இல்லாத பெண் தாயான போது தாயன்பைக் கொடுக்க நினைத்து பார்த்து பார்த்து செய்தார்.

     வதனி மின்மினியின் வீட்டில் இருந்த மூன்று மாத காலமும் கணவன் ஜீவன் புராணம் தான் பாடிக் கொண்டிருந்தாள். அவனும் அதற்கு நூறு சதவிகிதம் தகுதியானவனே என்பது வேறு விஷயம்.

     முதல் முறை இரட்டை குழந்தைகளை வைத்துக்கொண்டு தெரியாத ஊரில் சிரமப்பட்ட போது, இரவும் பகலும் விழித்திருந்து அவளைத் தாயாய் தாங்கி இருந்தான் ஜீவன். இப்பொழுது மணிமேகலை பார்த்துக் கொள்வதைக் காட்டிலும், முந்தைய பிரசவத்தின் போது ஜீவனின் அன்பும் அரவணைப்பும் இன்னுமே நன்றாக இருந்ததாய் தோன்றியது வதனிக்கு.

     வதனி மின்மினியின் வீட்டில் இருந்த அந்த மூன்று மாதங்களில், நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்த ஜீவனை ஏதோ தேவதூதன் போல பார்த்தாள் மின்மினி.

     சாப்பிட்ட மனைவியின் தட்டை எடுத்துக் கொண்டு வருவதாகட்டும், அவளுடைய புடவையை சேர்த்து துவைப்பது ஆகட்டும், இரவில் அவள் தூங்கும் போது அழும் குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு வரவேற்பு அறையில் நடப்பதாகட்டும், சிலசமயங்களில் சந்திராவிற்கு கால் பிடித்து விடுவதாகட்டும் அனைத்தையும் கொஞ்சமும் முகம் சுழிக்காமல் செய்தான். அவள் அதுவரை பார்த்து வளர்ந்த ஆண்களுக்கு நேர் எதிராக இருந்தான்.

     அந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை வதனி, ஜீவன் தம்பதியருக்குள் சண்டை வந்திருக்கிறது. அந்த நேரத்தில் எல்லாம் வதனியினி சத்தம் தான் அந்த அறையைத் தாண்டிக் கேட்குமே தவிர ஜீவன் குரலுயர்த்தி பார்த்ததில்லை மின்மினி. கோபம் வராத ஆண்மகனா, எட்டாவது உலக அதிசயம் டோய் என்று தான் யோசித்தது அவளின் குழந்தை மனது.

     "ஏன் அத்தான் நீங்க உண்மையிலே மனுஷன் தானா? உங்களை மாதிரி  ஆம்பிளையை எங்கனயும் நான் பாத்ததில்லை" ஆச்சர்யத்தின் மிகுதியில் அவள் சொல்ல புன்னகையோடு அவள் தலையில் கொட்டியவன்,

     "ஊர்க்குருவியா இருந்தா, உலகம் எவ்வளவு பெருசு அதில் மனிதர்கள் எத்தனை விதம் என்று தெரியாது. சிறகை விரிச்சு உன்னோட பாதுகாப்பான எல்லைக்குள் பறந்து பாரு. அப்புறம் எதையும் ஆச்சர்யமா பார்க்க மாட்ட" நான்கே வரிகளில் நச்சென்று சொல்லிவிட்டுச் சென்றான். 

     அன்றில் இருந்து அவள் மனதில் இன்னும் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்திருந்தான் ஜீவன். அதிர்ஷ்டம் இருந்தால் தனக்கே தனக்காக வரப்போகும் ஜீவனும், தன் ஜீவன் அத்தானைப் போன்ற மென்மையானவனாக இருக்க வேண்டும் என்று அவ்வப்பொழுது நினைத்துக்கொள்வாள் சிறுபெண். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் எதற்கு.



Leave a comment


Comments


Related Post