இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 11-04-2024

Total Views: 35143

இதயம் 2

     அரசர்களின் விளையாட்டாகக் கருதப்படும் சதுரங்கம் செங்களம், வல்லாட்டம் எனப் பல பெயர்களில் வழங்கப்படும் இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு.

     ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து உலகளவில் பரவியது என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது. போர் விளையாட்டாகவும், மூளை சார்ந்த போர்க்கலையாகவுமே பெரும்பாலும் இது பார்க்கப்படுகிறது.

     இந்தியாவில் இருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவிய இந்த ஆட்டமானது, இன்னொரு பக்கத்தில் மங்கோலியா வழியாக ரஷ்யாவையும் சென்றடைந்தது. குறிப்பிட்ட இடைவெளியில் பாரசீகத்துக்குப் பரவிய இது, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது.

     பத்தாம் நூற்றாண்டு அளவில் இஸ்லாமியர்களால் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. பதினொன்றாம் நூற்றாண்டில் செங்களம் இங்கிலாந்தை எட்டியது. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் உலகம் முழுவதம் சதுரங்கக் காய்களின் நகர்த்தலுக்கான ஒரே விதமான வரைமுறைகள் இத்தாலியில் 
 பயன்பாட்டுக்கு வந்தன.

     இவ்விளையாட்டிற்குத் தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. விளையாடும் பலகை 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி, மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவத்தில் இருக்கும். மதியூகமும், தந்திரமும், நிதானமும் இவ்விளையாட்டுக்கு அதி முக்கியமானவையாகும்"

     தமிழகத்தின் தலைசிறந்த சதுரங்க கலைக்கூடத்தில் ஒன்றான ராஜாவின் விளையாட்டு ( King's Game) கலைக்கூடத்தில், இன்றைய காலகட்டத்தில் செஸ் என்று அழகான பாணியில் நாம் அழைத்துக் கொண்டிருக்கும் சதுரங்க ஆட்டத்தைப் பற்றிய ஆதியும் அந்தமுமான AV  பெரிய திரையில் ஓடிக் கொண்டிருக்க, விளையாட்டைக் கற்றுக்கொள்ள புதிதாக அங்கு சேர்ந்திருந்த மாணவ மாணவியர் பலர் அதை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     அங்கிருந்து சற்று தொலைவில் குளிரூட்டப்பட்ட ஏசி அறையில் மயான அமைதி நிலவிக் கொண்டிருந்ததன் பலனாய் எதிராளியின் இதயத்துடிப்பு இதயமானி இல்லாமலே தெள்ளத் தெளிவாக காதில் விழுந்தது அவனுக்கு. 

     தேவையற்ற சதைகள் இல்லாது கல்லைப் போன்று, அப்படிச் சொல்வதை விட அவன் இதயத்தைப் போன்று என்று சொல்லலாம், இறுகிப்போய் இருந்த தன் வலது கையை கன்னத்தில் தாங்கியபடி, தனக்கு முன்னால் இருக்கும் சதுரங்கப் பலகையில் அடுத்த காய் நகர்த்தலை எப்படிச் சாத்தியமாக்கலாம் என்ற யோசனையில் இருந்த எதிராளியை ஒரு கண்ணாலும், இன்னொரு கண்ணால் அருகே ஓடிக்கொண்டிருந்த சிசிடிவி நேரலை வீடியோவையும் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஒருவன்.

     நேரம் போய் கொண்டே இருந்ததால் வேறு வழியின்றி தனக்காக இருந்த ஒரே சாத்திய நகர்வை செயல்படுத்தினான் எதிராளி. அதற்காக காத்திருந்தவன் போல்  B7 Rook மற்றும் F6 knight என்ற தன் இரு வெள்ளை நிற காய்களை மட்டுமே வைத்து H8 இல் இருந்த கருப்பு ராஜாவை Arabian mate முறையில் கைப்பற்றி விளையாட்டை முடித்து வைத்தான் அவன்.

     “யூ ஆர் சம்திங் ஸ்பெஷல் சார். என் மூளைக்குள் புகுந்து உங்க இசைவுக்கு ஏத்த மாதிரி காய்களை நகர்த்த வைச்சிருக்கீங்க. இப்படி ஒரு ஆளுமையான எதிராளியோட விளையாடியதில் எனக்கு சந்தோஷம். 

     உங்க க்வினை சீக்கிரமே எடுத்ததில் எப்படியும் ஜெயிச்சிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டுட்டேன் போல“ உள்ளார்ந்து சொன்னான் எதிராளி.

     “என் ராஜாவுக்கு மட்டும் இல்லை, எனக்கும் ராணி என்ற கதாபாத்திரம் என்னைக்கும் தேவைப்படாது“ அழுத்தமாக சொல்லிவிட்டு சதுரங்கக் காய்களை எடுத்து வைக்க ஆரம்பித்தவனுக்குள் வேண்டாத நினைவுகள் மொத்தமாக ஆக்கிரமிக்க முயற்சிக்க, அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு காரியத்தில் கண்ணானான். 

     விளையாடும் வரை தனித்தனி அதிகாரங்களுடன் இருந்த அனைத்து காய்களையும் இப்போது ஒரே பெட்டியில் வைத்துவிட்டு, இரண்டு வண்ண ராணிகளை மட்டும் தீண்டத்தகாத பொருளைப் போல் தனியாக எடுத்து வைத்தவன், திரையில் ஓடிக்கொண்டிருந்த AV முடியவும், அங்கிருந்த மாணவ மாணவியர் முன்னால் வந்து நின்றான்.

     நெடுநெடுவென்ற உயரத்தில், உடலை ஒட்டியவண்ணம் சிவந்த சருமத்திற்கு ஏற்ற வகையில் அடர்நீலநிற சட்டையை கைமுட்டி வரை மடித்துவிட்டு இருந்தான். தலையில் தடவியிருந்த ஜெல்லில் ஆரம்பித்து, காலில் கிடந்த ஷூ வரை பணத்தின் செழிப்பு கொட்டிக்கிடந்தது.

     கடுகடுவென்று இருந்த அவன் முகத்தோடு ஒப்பிட்டால், கரும்பாறை கூட தோற்றுப் போய் விடும். வாயைத் திறந்தால் முத்து உதிர்ந்துவிடுமோ என்ற நம் ஊரின் கிண்டல் பழமொழி அவனுக்கு கணக்கச்சிதமாகப் பொருந்தும். அவ்வளவு இறுக்கம் உடலிலும், மனதிலும் கூடவே முகத்திலும். சிலசமயம் அவன் கண்களில் கூட அந்த இறுக்கம் தென்படும்.

     காலப்போக்கில் அந்த இறுக்கமே அவனுடைய அடையாளமாகிப் போனது. சிடுமூஞ்சு, முசுடு, வாழத் தெரியாதவன், முனிவர் எனப் பல பட்டப் பெயர்களோடு அவனுக்கு அவனே வைத்துக்கொண்ட சாணக்கியன் என்ற பெயரும், ஒற்றை நண்பன் எழில் வைத்த பாகுபலி என்ற பெயரும் உண்டு.

     முதல்முறை அவனோடு பேசும் எவருக்கும் அவன் அதீத கோபத்தில் இருக்கிறான் போல என்று தான் தோன்றும். அத்தனை கம்பீரமான தனித்துவமான குரல் அவனுக்கு. ஆனால் அவன் குணமும், குரலும் அதுதான் என்பது அவனை நன்கு தெரிந்த வெகுசிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

     தன் முன்னிருந்த மாணவ மாணவிகளில் சிலரை மட்டும் ஆள்காட்டி விரல் உதவியால் சுட்டிக்காட்டி எழுப்பியவன், "ரிசப்ஷனில் பெயர் சொல்லி கட்டிய பணத்தை திரும்ப வாங்கிக்கிட்டு வீட்டுக்கு கிளம்புங்க. உங்களுக்கு இது ஒத்துவராது" குழந்தைகள் என்றும் பாராமல் ஒளிவுமறைவின்றி முகத்தில் அடித்த போல சொல்லிவிட்டான்.

      எழுந்து நின்ற ஐவரில் நால்வர் இப்போது என்ன நடந்தது என புரியாமல் நிற்க, மீதி இருந்தோ ஒரு பெண்ணோ அழ ஆரம்பித்துவிட்டாள். அது காதிற்குள் சங்கு ஊதுவது போல நாராசமாகத் தோன்றவும், பெருமூச்சுவிட்டு தன்னை நிதானித்துக்கொண்டு, "எழில் இவங்களைப் போக சொல்லு" மற்ற குழந்தைகள் பயந்துவிடக் கூடாது என முடிந்தவரை மென்மையாகத் தான் நண்பனிடம் சொன்னான். அதற்கே குழந்தைகள் பயப்படத்தான் செய்தனர். அவனிடம் அவ்வளவு தான் மென்மை.

     பொறுமைக்கு இலக்கணமாய் விடா முயற்சியோடு போராடி கங்கா, சிவன் இருவரின் மனதைக் குளிர்வித்ததன் மூலம் ஆகாய கங்கையை பூமி அழைத்து வந்து, தன் முன்னோர்களுக்கு சாப விமோட்சனம் வாங்கிக் கொடுத்த சூரிய குல வாரிசான பகீரதன் அவன் இயற்பெயர்.

     பொறுமை மற்றும் விடாமுயற்சி இரண்டிற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய அந்த பகீரதனைப் போல் தன் மகனும் இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து பெயரிட்டு இருந்தார் அவன் தந்தை அரசன். 

     ஆனால் சிறுவயதில் இருந்து அவனுக்கும் பொறுமைக்கும் என்றும் அடிபிடி சண்டை தான். இருந்தாலும் தனக்குத் தந்தை வைத்த அந்த அரிதான பெயரில் அவனுக்கு அத்தனை கர்வம் உண்டு. 

     ஆனால் என்ன நடந்ததோ ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்தப் பெயரை அவன் அறவே வெறுத்துப் போய் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட பெயர் தான் சாணக்கியன்.     

     எழில் ஓடி வந்து அழும் குழந்தையை சமாதானப்படுத்திவிட்டு, "குழந்தைங்க டா" என்றவன், உன் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியுமா என்கிற தோரணையில் நண்பனைப் பார்த்தான்.

     "இது மத்த விளையாட்டு மாதிரி உடல் பலத்தை நம்பி களத்தில் இறங்குவது கிடையாது. முழுக்க முழுக்க புத்திசாலித்தனத்தையும், முழுமுதற் கவனத்தையும் அடிப்படையாக் கொண்டது. இந்தக் குழந்தைங்க சரிவர மாட்டாங்க.

     கத்துக்கப் போற விளையாட்டோட வரலாற்றைக் கேட்பதற்கு கூட பொறுமையும் ஆர்வமும் இல்லாம செல்போனில் விளையாடும் இவங்க, ஆட்ட நெறிமுறையை எப்படிப் பொறுமையா கத்துப்பாங்க. என்னோட கணிப்பு எப்பவும் சரியா இருக்கும்" இந்த வரியைச் சொல்லும் போது அவன் மனசாட்சியோ,

    "அப்படியா? சொல்லவே இல்லை" எனக் கேலி செய்ய அதைக் கண்டுகொள்ளாதவன், "அந்தக் குழந்தைங்க இருந்தா மற்ற குழந்தைங்களும் கெட்டுப்போக வாய்ப்பிருக்கு, அப்புறம் உன் இஷ்டம்.

     ஆனா நான் அவங்களுக்கு க்ளாஸ் எடுக்க மாட்டேன். தனியா வைச்சு நீயே சொல்லிக் கொடுத்துக்கோ" என்றவன் மற்ற குழந்தைகளை அழைத்துக் கொண்டு சதுரங்கப் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

     "இருந்தாலும் இந்த மனுஷனுக்கு இவ்வளவு பிடிவாதம் இருக்கக் கூடாது. சின்ன குழந்தைகளுக்கு கூட கருணை காட்ட மாட்டேங்கிறார். எல்லோரும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருந்தால், இவர் பிடிச்ச முயலுக்கு ஏழு கால் என்று எதிரில் இருப்பவரையும் நம்ப வைப்பார்.

     இப்படி இருந்தா எந்தப் பொண்ணு தான் இவரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பா. அதனால் தான் முப்பது வயசு ஆகியும் பிரம்மச்சாரியாவே இருக்கார்" அங்கே க்ளீனிங் வேலை செய்யும் ஆட்கள், அவன் உண்மையான நிலை தெரியாமல் புறம் பேச, இதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை என்னுடைய இலக்கு சதுரங்கத்தில் உலக நாயகனை உருவாக்குவது மட்டும் தான் என்ற முனைப்பில் அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்தான்.

     தன்னுடைய இலட்சியம் ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல என்பது அவனுக்குமே தெரியும் தான். காலம் மற்றும் நேரத்தோடு விளையாடும் நபரின் குடும்பத்தின் துணையும் மிக அவசியம். இதுவரை அவன் பயிற்சியளித்த பலர் பாதியில் விலகிச் சென்றதற்குக் காரணம் அவர்களின் குடும்பத்தின் ஆதரவு இல்லாததால் தான்.

     சதுரங்கத்தின் வெற்றி என்பது  ஒருகாலமும் அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பது இல்லை. இயல்பான புத்திசாலித்தனத்துடன், குறைந்த நேரத்தில், வேகமான மற்றும் தரமான திட்டமிடலுடன் அதைச் சரியாக செயல்படுத்தும் திறன் தான் அங்கே மூலதனம். அதற்கு மனநிம்மதி மிக அவசியம். 

     நாடு போய்க் கொண்டு இருக்கும் நிலைக்கு, “விளையாட்டு ஒன்றும் உனக்குச் சோறு போடப்போவதில்லை. அதனால் முதற்கட்டமாக உனக்கென்று ஒரு வேலையைத் தயார் செய்து கொண்டு அதன்பிறகு எது வேண்டுமானாலும் செய்து கொள்“ என்பது தான் இன்றைய பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் தாரக மந்திரமாக இருக்கிறது.

     அவர்களைச் சொல்லியும் குற்றம் கிடையாது. விளையாட்டிலும் அரசியல் கலந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், பணமும் அதிகாரமும் கொண்ட பெரிய வீட்டுப் பிள்ளைகளுடன் தங்கள் பிள்ளைகள் போட்டிபோட்டு அதனால் எந்தப் பிரச்சனையும் வர வேண்டாம். 

      தங்கள் பிள்ளைகளின் ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறாமல் போனால் போகட்டும். ஆனால் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து மடிய வேண்டும் என்று நினைக்கும் ரகம் தான் பெரும்பாலான நடுத்தர மக்களின் மனநிலையாக இருக்கிறது.

     பணம் இருக்கும் இடத்தில் குணம் இருப்பது இல்லை. குணம் இருக்கும் இடத்தில் பணம் இருப்பது இல்லை என்கிற பொன்மொழியைப் போல், செல்வமும் நேரமும் கொட்டிக்கிடந்து பெற்றோரின் ஆர்வமும் இருக்கும் குழந்தைகளுக்கு வித்தை புரிவதில்லை. வித்தை புரியும் பிள்ளைகளுக்கு மற்றவை கிடைப்பதில்லை.

     ஆனால் என்றேனும் ஒருநாள், சதுரங்கத்தின் மீது கொள்ளை காதல் கொண்ட யாரேனும் ஒருவன் தன்னிடம் வருவான். அவனுக்குத் தான் கற்றுத்தேர்ந்த அனைத்தையும் கற்றுக்கொடுத்து, பார் போற்றும் பரந்தாமனாக அவனை உருவாக்க வேண்டும் என்பது சாணக்கியனின் நீண்ட கால ஆர்வம்.

     அப்படிப்பட்ட ஒருவரைத் தான் தேடிக் கொண்டிருக்கிறான் சாணக்கியன். இதுவரை கிடைக்கவில்லை, நிச்சயம் ஒருநாள் கிடைப்பான் என தன் ஆத்மார்த்த சீடனுக்காக காத்திருந்தான் அந்த குருவானவன். 

     யாருடைய வரவுக்காக அவன் காத்திருக்கிறானோ அந்த நபர் தான் அவன் இலட்சியத்தோடு சேர்த்து வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொடுக்க காத்திருக்கிறாள் என்று இப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

     குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாணக்கியன் வந்து சேர்ந்த இடத்தில், நிழலுக்காக மேலே மட்டும் நிழற்குடை அமைந்திருக்க, ஏனைய எல்லாப் பக்கங்களிலும் திறந்த வெளியே காணக் கிடைத்தது. 

     சரியான இடைவெளியில் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த செவ்வக வடிவிலான மேஜைகளில், சதுரங்கப் பலகையும் காய்களும் தயார் நிலையில் இருந்தது. 

     நிறைய மரங்களும், பூச்செடிகளும் சுற்றி வைக்கப்பட்டு குட்டி வனம் போல காட்சியளித்த அந்த இடம் குழந்தைகளின் கண்களோடு சேர்ந்து அவர்கள் மனதையும் நிறைத்தது.

     அருகே காற்று, மழை என எதிலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இன்னொரு ஆடிடோரியமும் இருந்தது தான். ஆனால் இந்த இடத்தில் பயிற்சி மேற்க்கொள்ளவே முடியாது என்கிற நிலைமை வந்தால் மட்டும் தான் அவ்விடம் மாணவர்களை அழைத்துச் செல்வான் சாணக்கியன்.

     மனதும், மூளையும் சுறுசுறுப்பாக இருக்க, இயற்கை சூழ்நிலை நன்றாக உதவி செய்யும். அதன் மூலம் கற்கும் விஷயங்கள் குழந்தைகளின் மூளையில் நன்கு பதியும். தொந்தரவு இல்லாமல் கவனம் முழுவதும் விளையாட்டில் மட்டுமே இருக்கும் என நினைத்தான்.

     எட்டு வயதில் இருந்து பதினேழு வயது வரை கலவையாக மொத்தம் பதினைந்து மாணவ மாணவிகள் இருந்தனர் அவன் முன்பு. 

     "நீங்க கத்துக்க வந்து இருக்கும் விளையாட்டோட பூர்வீகத்தைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சுக்கிட்டீங்க. இப்ப இதோட சிறப்புகளையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?" கணீர் குரலோடு ஆரம்பித்தான்.

     “இந்தியர்களான நாம உடல் பலம் மட்டும் இல்ல, புத்தி பலத்தையும் விளையாட்டுகளின் வழியாகவே வலுவாக்கும் வித்தை தெரிஞ்சவங்கன்னு உலக மக்கள் எல்லோருக்கும் உரக்கச் சொல்லும் விளையாட்டு தான் செஸ் என்று சொல்லப்படுற சதுரங்கம்.

     நம்ம முன்னோர்கள் விளையாடும் விளையாட்டுகளில் கூட பல கருத்துகளை உட்பொதிந்து வைச்சிருக்காங்க. அந்த வகையில் சதுரங்கம் மூலமா அவங்க சொல்ல வந்தது என்னவோ அரசியல் நியதிகளும் குடும்ப ஒற்றுமையும் தான்.

     ஆண் இல்லாமல் பெண் இல்லை, பெண் இல்லாமல் ஆண் இல்லை என்பதைத் தான் ரொம்ப சாதாரணமா ராஜா, ராணியை வைச்சு சொல்லி இருக்காங்க. 

     நம்மகிட்ட இருக்கும் புத்திபலமும், படைபலமும் எதிரியிடமும் இருக்கும். அவனும் நம் அளவுக்கு, சில சமயங்களில் நம்மை விட அதிக பலசாலியாகவும் இருக்க வாய்ப்பிருக்கு. அதனால் ஒவ்வொரு நகர்விலும் அதி கவனம் அவசியம் என்கிற அரசியலின் பால பாடத்தையும் மையப்புள்ளியா வைச்சிருக்காங்க.

     ஒவ்வொரு காய்களுக்கும் ஒவ்வொரு விதமான பவரைக் கொடுத்து யுத்தத்தில் பங்கெடுக்கும் அனைவரும் சமமானவர்கள் இல்லை தான், ஆனால் வெற்றி பெற எல்லோருடைய பங்கும் முக்கியமானது என்பதை சொல்லும் தாரக மந்திரம் இந்த விளையாட்டு.

     இதைக் கத்துக்கிறதோ இல்லை விளையாடி ஜெயிக்கிறதோ மலையை உடைக்கும் அளவு கடினமான காரியம் இல்ல. சுலபமா ஜெயிக்க பலவழி இருக்கு.

     எல்லா வித்தையையும் கத்துக்கிட்டு, அதே மாதிரி எல்லா வித்தையும் தெரிஞ்ச ஒருத்தனை என்னைக்கு ஜெயிக்கிறோமோ அன்னைக்கு தான் நமக்கு உண்மையான வெற்றி. 

     எனக்கு நீங்க ஒவ்வொருத்தரும் ஜெயிக்கணும் செய்வீங்க தானே“ புத்திவிளையாட்டின் பாலபாடத்திற்கு முன்னால் தனக்குத் தெரிந்தவரை குழந்தைகளை உற்றாகப் படுத்தினான்.

     இன்னைக்கு நீங்க கத்துக்கப் போற முதல் பாடம், சதுரங்கப் பலகை அதாவது செஸ் போர்டை சரியான விதத்தில் எப்படி வைப்பது என்பதைத் தான். எப்படிப் பார்த்தாலும் வெள்ளையும் கருப்புமா தானே இருக்கும். அதை எப்படி வைச்சா என்னன்னு தோணுது தானே. எல்லாத்துக்கும் வழிமுறை இருக்கு. அதை நாம பின்பற்றி தான் ஆகணும்.

     விளையாடும் இரண்டு நபர்களின் வலது கை பக்கத்தின் முதல் கட்டம் வெள்ளையா இருக்கணும். அதுதான் சரியான அமைப்பு“ என்று ஆரம்பித்தவன் முதல் நாள் என்பதால் A முதல் H வரை 1 இல் இருந்து 8 வரை காய்களின் வரிசை அமைப்பை மட்டும் கற்றுக்கொடுத்தான்.

     பிள்ளைகளுக்கு பாடத்தை அவன் கற்றுக்கொடுக்க, அவனுக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்க இருக்கும் மின்மினி தன் கல்லூரிப் படிப்பிற்காக அவன் இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

 


Leave a comment


Comments


Related Post