இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...26 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 11-04-2024

Total Views: 32498

முகிலனும் மீராவும் வீட்டிற்குள் நுழைந்தபோது வீடு முழுக்க அப்படி ஒரு அமைதி. வழக்கமாக இந்த நேரத்தில் சமையலறையில் ஏதேனும் உருட்டிக்கொண்டு வேலையாக இருப்பாள் பூச்செண்டு. அங்கும் அரவம் இல்லை. தங்களது அறைக்குச் சென்று குளித்து உடைமாற்றி வெளியே வந்தும் தரணி பூச்செண்டின் சத்தமே இல்லை. தரணியின் அறை அகலத் திறந்து இருந்தது.


“சண்டை கோழிங்க ரெண்டும் எங்கே போச்சு என்ன பண்ணுதுன்னு தெரியலையே…’ புலம்பியபடியே தரணியின் அறைக்குள் முகிலன் நுழைய தங்களுக்கு காபி தயாரிக்க சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் மீரா.


அறையை ஒட்டியுள்ள பால்கனியின் நீள்விருக்கையில் பெர்முடாஸும் கையில்லாத உடம்பை ஒட்டிய பனியனும் அணிந்து கால்கள் இரண்டையும் குத்துக்கால் இட்டதுபோல் வைத்து கன்னத்தில் கை தாங்கி எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தான் தரணி.


அவன் அமர்ந்திருந்த தோரணை சிரிப்பு மூட்டுவதாக இருக்க “என்னடா இது போஸ்…? கண்ணை மூடி வாயை பொத்தி காதை மூடி உட்கார்ந்து இருக்குமே மூணு மங்கீஸ்… நாலாவதா உன்னையும் கூட உட்கார வச்சுடலாம் போல… அவ்வளவு பெர்ஃபெக்ட்டா இருக்கு…” சிரித்தபடியே கூறியவன் அவன் அருகில் வந்து அமர்ந்தான்.


முகிலனை திரும்பிப் பார்த்து முறைத்தவன் மீண்டும் பழைய தோரணையிலேயே அமர்ந்து கொள்ள “நீ இங்கே உட்கார்ந்திருக்க… நரிச்சின்னக்கா எங்கே போனா…?” கண்களை சுழற்றியபடி கேட்டான்.


“எங்கே தொலைஞ்சாளோ…? யாருக்கு தெரியும்…?” எரிச்சலாய் சொன்னவனை தலையை சாய்த்துப் பார்த்தான் முகிலன்.


“ஏதாவது சண்டையாடா…? பொண்டாட்டிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு வந்த… பியூட்டி பார்லர் ஆரம்பிக்கிற ஐடியா இல்லையா அவளுக்கு… உன்னை ஏதாவது சங்கடப்படுத்துற மாதிரி நடந்துக்கிட்டாளா…?”


“ப்ச்…” சலிப்பாய் இச்சு கொட்டினான் தரணி.


“என்னன்னு சொன்னாதானடா தெரியும்… உன் காலேஜ் ஃப்ரெண்ட் விசித்திராவை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்னு சொன்ன… அவங்க வரலையா…?”


“வந்துட்டா… அவ வேற ஒரு பிரண்ட் வீட்டுக்கு போயிட்டா… எல்லாம் இந்த பஜாரியாலதான்…” சிடுசிடுத்தவனை புரியாமல் பார்த்தான் முகிலன்.


“கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றியா…”


“என்னடா சொல்லணும்…? என் காதை புடிச்சு கடிச்சு வச்சுட்டா நான் கட்டிக்கிட்ட அந்த காட்டேரி…” முகம் கூம்ப சொன்னவன் முகத்தை திருப்பி தன் காதை காட்டினான்.


காதின் மேல்பக்கத்து மடல் கன்றி சிவந்திருந்தது. பையன் கன்னத்தில் கை வைத்து அமரவில்லை… காதை பிடித்தபடி அமர்ந்திருக்கிறான்… முகிலனுக்குமே இப்போதுதான் புரிந்தது. உடன் படிக்கும் நண்பன் சண்டையில் கடித்து வைத்துவிட்டான் என்று தந்தையிடம் புகார் கூறும் குழந்தையைப் போல அப்பாவி முகத்துடன் காதை திருப்பி தன்னிடம் காட்டிக் கொண்டிருந்தவனை பார்த்து பகபகவென சிரிக்கத் தொடங்கினான் முகிலன்.


அவன் சிரிப்பில் இன்னும் கடுப்பானவன் “டேய்… எரிச்சலை கிளப்பாதே… கணுகணுன்னு காதெல்லாம் வலிக்குது… உனக்கு இளிப்பா இருக்கா…? பொண்ணாடா அவ… பிசாசு…” இவன் புலம்பிக் கொண்டிருக்க கண்ணில் நீர் வர சிரித்த முகிலன் “காதை புடிச்சு கடிக்கிற அளவுக்கு நீ என்னடா பண்ணுன…?” சிரிப்பை தொடர்ந்தபடியே கேட்டான்.


“விச்சுகிட்ட ரொம்ப க்ளோசா பேசினேனாம்… அவ என்னோட பெஸ்ட் பிரண்டு… இவளுக்கு ஹெல்ப் பண்றதுக்காக அவளை வரவழைச்சேன் பாரு… என்னை செருப்பாலேயே அடிக்கணும்…” தன் தலையில் பட்டென்று அடித்துக் கொண்டான். முகிலனால் என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது… அவனது யூகமும் சரிதான்.


பூச்செண்டின் கோபத்தையும் எரிச்சலையும் சீண்டுவதைப் போலவே தரணியும் விசித்திராவும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் கிள்ளிக் கொண்டும் சத்தமிட்டு சிரித்துக்கொண்டும் தீக்குச்சி இல்லாமல் சிறப்பாய் அவனது வயிற்றை பற்ற வைத்திருந்தனர். அங்கு ஒருத்தி இருக்கிறாள் என்பதையே மறந்து பழங்கதைகள் பேசுவதும் அவன் தலைமுடியை இவள் கலைப்பதும் இவள் குதிரைவால் முடியை அவன் பிடித்து இழுப்பதுமாய் வெந்து தணிந்தது இல்லையில்லை தணியாமல் பற்றி உடல் முழுக்க எரிந்து கொண்டிருந்தாள் பூச்செண்டு.


விசித்ரா தரணியின் கல்லூரித் தோழி… தரணிக்கு நெருக்கமான ஒரே பெண் தோழி… பெற்றோரை பிரிந்து விடுதி வாழ்க்கையின் தனிமையை உணர்ந்து அவன் தவித்த நாட்களில் எல்லாம் அந்த எண்ணத்தை அவனிடம் இருந்து போக்கியவள்… அப்பழுக்கற்ற நட்பு இருவருக்கும்… அவனது திடீர் திருமணம் நடக்கவிருக்கும் ரிசப்ஷன் என்று அனைத்தையும் ஃபோனிலேயே தெரிவித்து இருந்தான் தரணி. மைசூரில் சொந்தமாக பியூட்டி கிளினிக் வைத்திருக்கிறாள் விசித்ரா. திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் உண்டு. 


வெற்றிகரமான பியூட்டிஷியன் அவள்… தன் மனைவியின் திறமையைப் பற்றி கூறி அவளுக்கு உதவுமாறு தரணி கேட்டுக்கொள்ள உடனிருந்து சில வேலைகளை முடித்துக் கொடுத்து அவர்களுடனே மதுரைக்குச் செல்லும்போது ரிசப்ஷனுக்கு செல்வதாக திட்டம். பெங்களூருவில் அவளுக்கு வேறு சில தோழிகளும் உண்டு… அவர்களையும் சந்தித்து ஓயாத வேலைப்பளுவில் இருந்து தன்னை சற்று இளக்கிக் கொள்ளவே கிளம்பி ஓடி வந்திருந்தாள் விசித்ரா.


நம்ம நரிச்சின்னக்காவுக்கு அதைப்பற்றி எல்லாம் என்ன கவலை…? எதையும் தெரிஞ்சுக்கணும்னு அவசியமும் இல்லை. அவ எண்ணமெல்லாம் ஒன்னுதான். ‘என் புருஷனை எப்படி தொட்டு தொட்டு பேசலாம்… இந்த ஆளு எப்படி உரிமையா வாடி போடின்னு பேசி விளையாடலாம்… நான் ஒருத்தி குண்டுக்கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கேன் என்னை கண்டுக்காம எனக்கு ஹெல்ப் பண்றதா சொல்லிட்டு இந்த வழி வழிஞ்சிட்டு கிடக்குதே ரெண்டும்… என்னை உசுப்பேத்தி பார்க்குதா இந்த பனைமரம்…’


மூளை சூடாகி காது மூக்கு வழியே வழியத் தயாரானது. திடீரென அறை சூடாகி வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததில் தன் கவனத்தை அப்போதுதான் தன் மனையாட்டியின் மேல் பதித்தான் தரணி. அம்மன் படத்தின் இறுதிக் காட்சியில் மார்புக்கூடு ஏறி இறங்க கண்களை உருட்டி விழித்து நிற்கும் ரம்யா கிருஷ்ணன் போல் நின்றிருந்தாள் பூச்செண்டு. கையில் வேல் மட்டும்தான் இல்லை.


இவ ஏன் உக்கிர சொரூபமா நிக்கிறா…? பொறாமைத் தீயின் பாதிப்பு என்று புரிந்தது… உயர்ந்த மனிதனுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.


“டேய் தரணி… இந்த போட்டோ பாத்தியா… நம்ம காலேஜ் பேர்வெல் டே அப்போ நீ என்னை கையில தூக்கி சுத்தினியே… அப்போ எடுத்தது… உன் போனுக்கு சென்ட் பண்றேன்…” சூழ்நிலை தெரியாத விசித்ரா உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலையில் கூடுதலாய் கொஞ்சம் எரிபொருளை ஊற்றி இருந்தாள்.


‘அய்… நம்மாளுக்கு சூடு கிளம்பிடுச்சு… இன்னும் கொஞ்சம் சீண்டி பார்க்கலாமா…?’ நரிச்சின்னக்காவின் நாட்டியம் பற்றி அறிந்தும் அவளது பொறாமை பார்வையை எதிர்கொள்வதில் ஏக குஷி தரணிக்கு.


“பழைய போட்டோ எதுக்குடி… இங்கே வா… இப்போ உன்னை தூக்கி சுத்துறேன்… இதை போட்டோ எடுத்து ரெண்டையும் கொலேஜ் பண்ணுவோம்…” ஓரக்கண்ணால் தன்னவளின் கோபத்தை ரசித்தபடியே விசித்திராவை அழைத்தான்.


“இப்போ வெயிட் போட்டுட்டேன்டா… முன்ன மாதிரி உன்னால தூக்க முடியாது… வேணாம் விடு…” சலித்துக் கொண்டாள் அவள்.


“நீ எவ்ளோ வெயிட் போட்டாலும் எப்பவும் என்னோட விச்சுதான்… அது மாறாது… வாடின்னா…” அவள் வேண்டாம் என்று மறுத்தும் தரணி அவளை தூக்க முயற்சித்துக் கொண்டிருக்க டமார் என்று சத்தம். இருவரும் திடுக்கிட்டு திரும்பினர். பெயிண்டிங் வேலைக்காக ஓரமாய் வைக்கப்பட்டிருந்த ஏணி கீழே விழுந்து கிடந்தது.


“தெரியாம கை பட்டுடுச்சு…” இறுக்கமாய் எங்கோ பார்த்தபடி சொன்னவள் “வீட்டுக்கு போகலாமா…” அவன்புறம் கோபக் கண்களுடன் திரும்பி இருந்தாள்.


“விச்சுகிட்ட நீ இன்னும் எந்த ஐடியாஸும் கேட்கல… அதுக்குள்ள கிளம்பலாம்னா எப்படி…?” அவளது கோபத்தை குறும்புச் சிரிப்புடன் ரசித்தபடியே பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு நின்றான் தரணி.


“ஆஹான்… எனக்கு ஹெல்ப் பண்ண வந்தவங்க என்னை தவிர உங்ககிட்டதானே ஃபுல் கான்சென்ரேஷன்ல இருக்காங்க… நீங்க ரெண்டு பேரும் எப்போ உங்க ஆட்டத்தை முடிச்சு என்னை கவனிக்கிறது… எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு… எதுவாயிருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம்… இப்ப போகலாம்…” கொந்தளித்த கோபத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி பேசியவள் வெடுக் வெடுக்கென வெளியேறி நடந்தாள்.


அவள் பின்னே ஓடியவன் “ஏய் பூச்செண்டு… ஒரு மரியாதைக்காகவாவது வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட மாட்டியா… உனக்காகத்தானே வந்திருக்கா…” அவள் கைப்பிடித்து இழுத்து நிறுத்தி மெல்லிய குரலில் கூற வெடுக்கென அவன் கையை உதறியவள் 


“எனக்காக ஒன்னும் வரல… உங்க மடியில ஏறி உட்கார்ந்து விளையாடத்தான் வந்திருக்கா… அந்த குண்டு மாடை கையில தூக்கி சுத்துறீரோ நீரு..‌ வீட்டுக்கு வாங்க… உங்க மண்டையை ரெண்டா பொளக்குறேன்…” பல்லைக் கடித்து கூறியவள் ஜங் ஜங் என்று நடந்து மாடிப்படியில் இறங்கி கீழே சென்று நின்றிருந்தாள்.


“என்னாச்சுடா…?” தரணியில் பின்னே வந்து நின்றாள் விசித்ரா.


“அ..அவளுக்கு ரொம்ப தலை வலிக்குதாம்… நா..நாளைக்கு மத்த விஷயங்களை பேசிக்கலாமா விச்சு…” மேலே பார்த்து முறைத்தபடி நிற்பவளை கீழே குனிந்து பார்த்து ஆராய்ந்தபடியே கூறியவனின் முதுகில் கிள்ளி சிரித்தாள் விசித்ரா.


“என்னடா .. பொண்டாட்டியை பார்த்து நடுங்கற… அவ மனசுல நான் இருக்கேனா இல்லையான்னு தெரியல என்னை மனப்பூர்வமா எப்போ ஏத்துப்பான்னு தெரியலன்னு டெய்லி எங்கிட்ட புலம்புவியே… இப்ப புரியுதா… உன் பொண்டாட்டிக்கு உன் மேல கன்னா பின்னான்னு லவ் இருக்கு… அவளை உசுப்பேத்தத்தான் நானும் கொஞ்சம் ஓவரா பர்பாமென்ஸ் பண்ணினேன்... நீ அதைவிட அதிகமா பண்ணின… மேடம் டோட்டலா சூடாகிட்டாங்க… போ… போய் கூல் பண்ணு…” தரணிக்கும் உள்ளே மகிழ்ச்சி எழாமல் இல்லை… அவனுக்கும் புரிந்தது.


“சரிடி… நீ வீட்டுக்கு வா…”


“முதல்ல நீங்க ரெண்டு பேரும் சமாதானமாகி அப்புறமா என்னை பத்தி அவ கிட்ட எடுத்து சொல்லு… இந்த கோபத்துக்கு ஓவர் பொஸசிவ்னெஸ்தான் காரணம்… புரிஞ்சுதா… போடா… ஜாலியா வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணு…”


“அதுக்கில்லடி  நீ…”


“டேய்… நானே லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவதான்… இதெல்லாம் தான்டா காதலுக்கு அழகு… போய் என்ஜாய் பண்ணுடா… நான் கன்யா வீட்டுக்குப் போறேன்… எத்தனை மிஸ்டு கால் பார்த்தேல்ல… இன்னைக்கு ஃபுல்லா அவகூட என்ஜாய் பண்ணப் போறேன்… நாளைக்கு புது பொண்ணு மாப்பிள்ளைக்கு கிஃப்டோட உன் வீட்டுக்கு வரேன்…”


“நமக்குள்ள என்னடி ஃபார்மாலிட்டி…!”


“உனக்கு யார் கொடுக்குறா வெண்ண… உன் ஃப்ரெண்ட் முகில் மீராவை சொன்னேன்…”


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே பூச்செண்டிடம் இருந்து இடைவிடாத அழைப்புகள்.


“சரி நீ கிளம்புடா… கன்யா தம்பி என்னை கூட்டிட்டு போக வந்துடுவான்… நான் போயிக்கிறேன்…” சரி என்று தலையாட்டி அவன் நகர “ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கூட்டிட்டு போடா… கோபத்தில ரொம்ப சிவந்து போய் நிக்கிறா உன் பொண்டாட்டி…” வாய் கொள்ளா சிரிப்புடன் விசித்ரா கூற தானும் சிரித்தபடியே கீழே இறங்கி ஓடினான் தரணி.


வண்டியில் அமர்ந்தவள் அவன்மேல் முட்டாமல் தள்ளி அமர்ந்தபடி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வீடு வந்து சேரும்வரை அவனை முறைத்தபடியே பயணித்தாள்… குதூகலமாய் அவளது கோபத்தை ரசித்தபடியே வந்தான் கள்வன்.


அறைக்குள் நுழைந்து அவள் படுக்கையில் விழ “ரொம்ப தலைவலியா இருக்கா…? நான் வேணா காபி வச்சு எடுத்துட்டு வரட்டுமா…” அக்கறையாய் கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தான் தரணி.


ஸ்ப்ரிங் போல் வேகமாய் எழுந்து அமர்ந்தவள் “ஏன்…? அப்படியே தைலத்தையும் எடுத்து உடம்பு பூரா பூசி விடுங்களேன்… ஏற்கனவே கம்மியாதான் எரியுது… இன்னும் கொஞ்சம் அதிகமா எரியட்டுமே…” சுள்ளென பாய்ந்தாள்.


“நல்லாதானடி என்கூட வந்த… திடீர்னு என்ன ஆச்சு உனக்கு…?” ஒன்றுமே தெரியாதவன்போல் அப்பாவியாய் கேட்டான்.


“என்னை டி போட்டு கூப்பிடாதீங்க… நீங்க உரிமையா டி போட்டு கூப்பிட அந்த குந்தாணி இருக்காளே…”


“ஏய்… மரியாதையா பேசுடி… படிச்சவதானே நீ…”


“ஆஹா… என்னைவிட அதிகம் படிச்சவங்கதானே நீங்க ரெண்டு பேரும்… உங்க யோக்யதையைத்தான் பார்த்தேனே…” புசுபுசுவென வெப்ப மூச்சு வெளியேறியது.


“ஏய்… அவ என் ஃப்ரெண்டுடி… தப்பா பேசாதே…”


“அடடாடாடா…. ஃப்ரெண்ண்ண்டு…” அழுத்தி சொல்லி வாயை கோணியவள் “பொண்டாட்டி ஒருத்தி பக்கத்துல இருக்கிற எண்ணமே இல்லாம அவளை கையைப் பிடிக்கவும் காதை பிடிக்கவும் முடியை பிடிக்கவும் கொஞ்சி கொஞ்சி பேசவும் அதுக்குத்தான் அவளை வரச் சொன்னீங்களோ… எல்லாத்துக்கு மேல அவள கையி தூக்கி சுத்…” பேச்சை நிறுத்தி வெறியுடன் தலையணையை எடுத்து தாறுமாறாய் அவனை அடிக்கத் தொடங்க சந்தோஷ சிரிப்புடன் வேண்டுமென்றே அவளது அடிகளை வாங்கியவன் பின் தலையணையை பிடுங்கி தூக்கி எறிந்து அவள் கைகளை தன் ஒரு கைக்குள் அடக்கிக் கொண்டான்.


அவனது சிரிப்பு அவளை இன்னும் வெறியேற்ற “நெட்டமாடு… நான் ஒருத்தி முருங்கைக்காய் மாதிரி நிக்கிறேன்… நீ அந்த பூசணிக்காயை தூக்கி சுத்துவியோ…” மறு கையால் அவன் தலையில் நங் நங் என குட்ட “கத்திரிக்காய்னு சொல்லு… முருங்கைக்காய்னு சொன்னா உலகம் ஒத்துக்காது…” இன்னும் அவளை வெறுப்பேற்ற ஆஆ என சத்தமிட்டபடி அவனிடமிருந்து கையை உருவி அவன் மடியில் ஏறி அமர்ந்து அவனை அடித்து குத்தி பாடாய்படுத்த சிரித்தபடியே அவளை கீழே கவிழ்த்து அவள்மேல் தன் முழு எடையையும் போட்டு விழுந்தவன் “உனக்கு ஏன்டி இவ்வளவு பொறாமை…? காரணம் சொல்லு…” அவள் வாய்மொழியாக சிலவற்றை கேட்க ஆசை.


“ஒரு காரணமும் இல்ல…” அவனை விலக்கித் தள்ள முயன்றபடி கூற “அப்போ அடங்கு… நான் அப்படித்தான் விச்சுகூட விளையாடுவேன்… நாளைக்கு வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கேன்… இன்னும் ஜாலியா விளையாடுவேன்…” சொல்லி முடிக்கும் முன் ஆஆஆ என்று அலறி இருந்தான். கத்திரிக்காய் அவனது காதினை வெறியோடு கடித்திருந்தது.


அவளை உதறி எழுந்து எதிரில் இருந்த கண்ணாடியில் பார்க்க மெல்லிய காது மடல் பற்கள் பட்டு உடனே வீங்கி இருந்தது.


“ராங்கி… ராட்சஸி… உன்னை என்ன பண்றேன்னு பாரு…” பல்லை கடித்தபடி அவளை நோக்கி திரும்ப கட்டிலில் இருந்து குதித்து இறங்கியவள் ஒரே ஓட்டமாய் வெளியில் ஓடி இருந்தாள்.


“ஏய்… குட்லீ… சுந்தரி ஆன்ட்டி வீட்லதானே போய் உட்கார்ந்து இருப்ப… திரும்ப வந்துதானே ஆகணும்… இன்னைக்கு உன் உடம்பு பூரா புடிச்சு கடிச்சு வச்சு உன்னை குண்டு பூசணிக்காயா மாத்தி வைக்கல… நான் தரணிதரன் இல்லடி…” தொண்டை கிழிய கத்தியவனின் குரலை காதில் வாங்கியபடியே அடுத்த வீட்டிற்குள் எப்போதௌ அடைக்கலம் புகுந்து இருந்தாள் பூச்செண்டு.


காதிற்கு எண்ணெய் வைத்து கவலையுடன் அமர்ந்திருந்தவனின் கதை கேட்டு வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருந்தனர் முகிலனும் மீராவும்.




Leave a comment


Comments


Related Post