இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-15(1) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 11-04-2024

Total Views: 35721

அத்தியாயம் -15(1)



“டைம் ஸ்கொயர் ரொம்ப சூப்பரா இருந்தது அஜு. நான் உன்கிட்ட அந்த சுற்றுலா புக்ல ஸ்டாச்சு ஆஃப் லிபர்டி காட்டிருக்கேன்ல? அதை நான் நேர்ல பார்த்தேன். அது மேல ஏறி அந்த மொத்த இடத்தையும் அவ்வளவு ஹைட்ல இருந்து பார்த்தது எப்படி இருந்தது தெரியுமா? அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சது எம்பயர் ஸ்டேட் பில்டிங்ல இருந்து மொத்த நியூயார்க்கோட நைட் வ்யூ பார்த்தது தான்” என்று தன் வீட்டு கூடத்தில் அமர்ந்துக் கொண்டு தன் உடன் பிறந்தவனிடம் அஞ்சனா உற்சாகமாக பயண அனுபவத்தைக் கூற, அர்ஜுன் முகத்தில் அப்படியொரு திருப்தி.

ஆதி, மால்யதா அடிக்கடி நியூயார்க் சென்று வந்துள்ளனர் என்றாலும் அர்ஜுனோ அஞ்சனாவோ சென்றதில்லை. அர்ஜுன் செல்ல வாய்ப்பு கிடைத்தாலும் அஞ்சனாவை அமுதா அனுப்பியிருக்க மாட்டார் என்பதே உண்மை! தற்போது அவள் பேசுவதை அனைவரும் புன்னகையுடன் நோக்க, அமுதாவுக்கு மட்டும் சற்றே அதிருப்தியாய் இருந்தது.

அவள் யஷ்வந்துடன் அமேரிக்கா சென்றதெல்லாம் வருத்தமில்லை. ஆனால் அவனது படைப்புக்கு அவள் மாடலாக இருந்தது மட்டும் சற்றே அதிருப்தியாக உணர்ந்தார். 

“நான் ரொம்ப ஹாப்பியா இருந்தேன் அஜு” என்று அஞ்சனா கூற, அவளை அணைத்துக் கொண்ட அர்ஜுனின் மூடிய விழிகளிலிருந்து கண்ணீரும் இதழில் புன்னகையும் கசிந்தது.

சுற்றியிருந்த உடன் பிறந்தோர் இருவரும் அவர்கள் பாசம் கண்டு ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைத்துக் கொள்ள, “நீ ஹாப்பி தானே பாப்பா?” என்று அர்ஜுன் கேட்டான்.

“ரொம்ப அஜு” என்று சத்தமாய் கூறியவள், “முதன்முறை உலகத்தை பார்த்த மாதிரி இருந்தது அஜு” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள். அதில் இன்னமும் அவன் கண்களில் கண்ணீர் சுரக்க, 

“ஹாப்பியா இரு அஞ்சு. இந்த உலகம் இன்னும் பெருசானது, அழகானது” என்று கூறினான்.

அவனிலிருந்து பிரித்தவள், “மாலு அண்ணி நீங்க பாரிஸ் ஈஃபில் டவர் பிக் காட்டிருக்கீங்கள்ல? நாங்க அங்க போறதாவும் இருந்தது. ஆனா அதுக்குள்ள யஷு மாமாக்கு வேலை வந்துடுச்சு. மாமா இன்னொரு முறை கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க” என்று கூற,

 “சூப்பர்டா” என்று மால்யதா கூறினாள்.

வீடு முழுதும் அவளது உற்சாகக் குரலே எதிரொலிக்க, அதில் அமுதாவே உள்ளுக்குள் குற்ற உணர்வாய் உணர்ந்தார் என்று தான் கூற வேண்டும்.

நேரம் கடக்கவே யஷ்வந்தின் வாகனம் உள்ளே வர, “மாமா வந்துட்டாங்க” என்று துள்ளலோடு அஞ்சனா வெளியே ஓடினாள். வாகனத்திலிருந்து வந்தவன் தன்னிடம் ஓடிவந்த கோழிக்குஞ்சைக் கண்டு அவளுக்கு மட்டுமே பிரதானமான தன் புன்னகையை வீச, “வாங்க மாமா” என்று புன்னகையாய் அவனுடன் உள்ளே வந்தாள்.

முன்பே அமுதாவிடம் அதிருப்தி கொண்டிருந்தவனுக்கு இந்த அமேரிக்க பயணம் அவர்மீது மேலும் அதிருப்தியையே கொடுத்திருந்தது. ஆதியுடன் மட்டுமே சில வார்த்தைகள் அவன் பேச, அஞ்சு வாய் ஓயாது அர்ஜுனனிடம் பேசிக் கொண்டே இருந்தாள். 

இடையே அவளது அண்ணன் மகன் மற்றும் அக்கா மகளின் பேச்சுக்களும் அவள் குரலுடன் சேர்ந்து ஒலிக்க, குழந்தைகளுடன் வம்பளந்துக் கொண்டிருந்தவளை திரும்பிப் பார்த்தான். பார்த்த மாத்திரம் அவன் இதழில் ஒரு விரிந்த புன்னகை வந்து போக, அதை தற்செயலாக திரும்பிப் பார்த்தான் அர்ஜுன்.

'சிரிச்சா நல்லா இருப்பாங்க அஜு’ என்று அஞ்சு அடிக்கடி அவனிடம் புலம்பும் விடயம் அவன் மூளையில் தோன்றி மறைய, தன் தங்கையை பார்த்துப் புன்னகைத்துத் திரும்பும் இந்த யஷ்வந்த் புதுமையாய் தெரிந்தான். அது தன் தங்கைக்கான புன்னகை என்று நினைக்கையில் அர்ஜுனுக்கு இத்தனை நாளில்லாமல் தற்போது யஷ்வந்த் மீது ஒரு நம்பிக்கை வந்தது. 

தன் மனையாட்டி பேசி ஓயமாட்டாள் என்று எண்ணிய யஷ்வந்த் தானே புறப்படுவதாய் கூறி எழ, அஞ்சனாவும் எழுந்தாள். அனைவரிடமும் விடைபெற்றவள் யஷ்வந்துடன் வெளியேற, செல்லும் இருவரையும் பார்த்திருந்த அர்ஜுன் தன் பார்வையிலிருந்து இருவரும் மறைந்த மறுநொடி வெளியே தானும் ஓடினான்.

யஷ்வந்தை இதுவரை முறை வைத்து அழைத்திடாதமையால் எப்படி அழைத்து நிறுத்துவது என்று புரியாதவன், “பாப்பா..” என்க, அஞ்சு சட்டென திரும்பினாள். யஷ்வந்தும் அதில் திரும்ப, மூச்சிறைக்க வந்தவன் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

அவனது அமைதியில் குழம்பிய அஞ்சு, “என்ன அஜு?” என்க, “நீ காருக்கு போ” என்றான். “ஏன்?” என்று பதில் கேள்வி கேட்டவளைப் பார்த்து “போடா” என்று கெஞ்சலாய் அவன் கூற, யஷ்வந்தை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு சென்றாள். செல்பவளை கண்களில் கண்ணீரும் இதழில் மெல்லிய சிரிப்புமாய் பார்த்தவன் யஷ்வந்தை நோக்க, உணர்வுகளற்ற முகத்துடன் அர்ஜுனை நோக்கினான்.

“அ..அது.. நீ..நீங்க” என்று தடுமாறிய அர்ஜுன் ஒருபெருமூச்சு விட்டுக் கொண்டு, “தேங்ஸ்” என்றான். தன் ஒற்றை புருவம் உயர்த்தி யஷ்வந்த் கேள்வியாய் நோக்க,

 “அ..அவ என் பாப்பா.. அவள அம்மா ரொம்ப மோசமா வளர்த்துட்டாங்க. எங்களால எதுவும் பண்ண முடியலை. அவ இந்த கூட்டுக்குள்ளருந்து வெளிய வரனும்னு தான் நான் அம்மாகூட நிறையா சண்டை போட்டேன். இன்னிக்கு அவ முகத்துல பார்த்த சந்தோஷம் இத்தனை வருஷத்தில் நான் பார்த்ததில்லை. அந்த சிரிப்புல இருந்த திருப்தி நீங்க குடுத்தது. அதுக்கு தான் தேங்ஸ்” என்றவன் கண்ணிலிருந்த கண்ணீர் கன்னத்தில் உருண்டு ஓடியது.

யஷ்வந்துக்கு அவனது தோற்றம் உள்ளுக்குள் ஆச்சரியத்தையே கொடுத்து, 'இப்படியொரு பாசமா?’ என்று வியக்கவே வைத்தது! இதழ் பிரியா புன்னகையைக் கொடுத்தவன் அவன் தோளில் தட்டிவிட்டு செல்ல, அர்ஜுன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு புன்னகைத்தான்.

சட்டென திரும்பிய யஷ்வந்த் “என் சனா” என்று அழுத்தமாய் கூறிவிட்டு செல்ல, தான் ‘என் பாப்பா' என்று கூறியதற்கே அந்த மறுமொழி என்று புரிந்தவனுக்கு அத்தனை நேரம் இருந்த இதத்தில் உடைமை வந்து ஒட்டிக் கொண்டது. ‘சனாவா? என் பாப்பா’ என்று மனதோடு கூறி முறைத்துக் கொண்டவன் உள்ளே செல்ல, வண்டியில் ஏறுகையில் அதை பார்த்த யஷ்வந்த் சிரித்துக் கொண்டான்.

ஒரு வாரம் அதன் போக்கில் சென்றிருந்தது. வேலை வேலையென்று இந்த ஒருவாரம் யஷ்வந்த் வீடு வருவதே நல்லிரவை தொட்டுத் தழுவும் பொழுதுகளாகிப் போனது. அவன் வரும் முன்னே தூங்கி, அவன் சென்ற பிறகு எழுவதே வாடிக்கையாகிப் போன அஞ்சனாவுக்கு அந்த மாற்றம் ஏதும் செய்ததோ?

எப்போதும் போல் குளித்து தயாராகிக் கீழே வந்தவள் கூடத்தில் யாதவன், அக்ஷரா, யாழினி, யமுனா மற்றும் யஷ்வந்த் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

ஒருவாரம் அவனைக் காணாத போது இல்லாத ஒரு உணர்வு அவனை கண்டபின்பு வந்ததோ? அது அவளே அறியாள்.. 

“நாளைக்கு கண்டிப்பா முடியாது ம்மா” என்று யஷ்வந்த் கூற, 

“ஏற்கனவே ஒரு வாரம் ஆச்சு யஷ்வா” என்று யமுனா கூறினார். 

“சோ வாட்? வெற்றி எப்ப பேசப்பட்டாலும் வெற்றி தானே? ரெண்டு நாள் தள்ளி கொண்டாடுறதுல தப்பில்லையே” என்று யஷ்வந்த் கூற, ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு யாதவனை யமுனா ஏறிட்டார்.

“அவந்தான் சொல்றானே ம்மா. விடுங்க” என்று யாதவும் தம்பிக்கே பரிந்து பேச, 

“யாரும் பேசுற போல நடந்துக்காதீங்க. நாம ஜெயிச்சதுக்கு கண்டிப்பா பிஸ்னஸ் பார்ட்னர்ஸ கூப்பிட்டு ட்ரீட் கொடுக்கனும். ஏற்கனவே ஒரு வாரம் கடந்துடுச்சு. மேலும் கடத்தாம சீக்கிரம் முடிக்கப் பாருங்க” என்று யமுனா கூறிவிட்டு எழ, படிக்கட்டிற்கு அருகே அஞ்சனா அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள்.

“அஞ்சு என்னடா அங்கயே நின்னுட்ட?” என்று அவர் கேட்ட பின்பு தான், யஷ்வந்தை பார்த்தபடியே தான் அங்கு நின்றதை உணர்ந்தாள். சட்டென அவளுள் ஒரு இனம் புரியாத படபடப்பு! 'தன்னவனை மெய் மறந்து பார்த்துக் கொண்டு நின்றேன்' என்று அவரிடம் கூறக் கூடாது என்று அவள் மனம் உந்தியதில் “அ..அது அத்தை” என்று தடுமாறினாள்.

அவள் தடுமாறுவதில் குழம்பிய யமுனா, “சாப்பிட வாடா” என்க, தலையசைத்து அவருடன் சென்றவள், மெல்ல தலையை வளைத்து யஷ்வந்தை நோக்க, யாதவனுடன் பேசிக் கொண்டிருந்தவன் இதழில் மெல்லிய குறுஞ்சிரிப்புத் தோன்றியது.

அதைக் கண்டு ரசித்துவிட்டு அவள் திரும்பிக்கொள்ள, அரிதாய் உதிரும் தம்பியின் குறுநகை புரியாத யாதவன் அவனை விசித்திரமாய் நோக்கினான். அண்ணனின் பார்வையில் தன் சிரிப்பை மீசைக்குள் மறைத்துக் கொண்டவன் அவன் கவனத்தை வேலையின் புறம் திருப்ப, ‘அடியே கோழிக்குஞ்சு' என்று அவன் மனம் எண்ணி சிரித்தது.

அடுத்த இரண்டு நாட்களையும் பரபரப்போடு கடந்தவன் முன் வந்து நின்ற வினோத் “சார் ப்ளாக் அன்ட் வைட் காம்போவே போட்டுடலாமா?” என்று வினவ,

 மேஜையில் விரல்கள் தட்டி தாளமிட்டவன் “இல்ல வினோத்.. பிளாக் அன்ட் அக்வா மெரைன் ப்ளூ காம்போல ஆர்டிபிஷியல் டாஃபடில்ஸ் அல்லது டெய்சி வச்சு அரேஞ்ச் பண்ணுங்க” என்று கூறினான்.

'என்னடா அதிசயமா இருக்கு’ என்று வினோத் விழிக்க, தன் ஒற்றை புருவம் உயர்த்தி யஷ்வந்த் வினோத்தை நோக்கினான். 

“அ..அது எப்பவுமே ப்ளாக் அன்ட் வைட் தான் போடுவோம் இல்லையா சார். அதான் திடீர்னு சேஞ்ச் பண்ணுறீங்களேனு” என்று தயங்கிய வினோத், 

 “சாரி சார். அரேஞ்ச் பண்றேன்” என்க, இதழ் வளைத்து கண்களில் சிரிப்பை காட்டியபடி தலையசைத்தான்.

அவனவளுக்கு பிடித்த நிறமாயிற்றே! நிச்சயம் நிகழ்வுக்கு அவளையும் அழைத்து வர வேண்டும். அப்படியிருக்க அவளுக்கு பிடித்த நிறத்துடன் தனக்கு பிடித்த நிறத்தினை இணைத்து அலங்காரம் செய்திடவே அவனுக்கு தோன்றியது. ‘டீன் பாய் மாதிரி பிஹேவ் பண்றடா யஷ்வா’ என்று மனதோடு கூறி சிரித்துக் கொண்டான். 

காதலில் விழுவது ஒரு சுகமென்றால் காதலிக்கு பிடித்ததை செய்து அதில் அவள் முகம் காட்டும் ஆச்சரியத்தை ரசிப்பது பெரும் சுகம் தானே!

அனைத்து பணிகளும் முடித்து இரவு விரைவே வீடு வர அவன் முயற்சித்த போதும் மணி பத்தை கடந்திருந்தது. தன்னவள் நிச்சயம் உறங்கியிருப்பாள் என்ற எண்ணத்துடன் அறைக்குள் நுழைந்தவன் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

உடல் உஷ்ணம் தனிய குளித்து வந்தவன், படுக்கை காலியாக இருப்பதை புருவம் சுருங்க ஏறிட்டவன், பால்கனியின் கதவு திறந்திருப்பதை அப்போதே கவனித்து அங்கு சென்றான். தேக்குமர ஊஞ்சலில் தேவதையாய் அமர்ந்தபடி, நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாவை!

“சனா..” என்று அழைத்தவனின் திடீர் குரலில் திடுக்கிட்டு எழுந்தவள் அவனைக் கண்டு ஆசுவாசம் அடைய, “இத்தனை பயம் இருக்கே அப்பறம் எதுக்கு இந்த நேரம் இங்க உக்காந்திருக்க?” என சற்றே கண்டிப்பாக வினவினான்.

“இல்ல மாமா துக்கம் வரலை” என்றவள், “உங்களுக்கு வர்க்கெல்லாம் முடிஞ்சதா?” என்று வினவ, 

“ஏன்டா சீக்கிரம் வந்தனு கேட்காம கேட்குறியா?” என்று தன் ஒற்றை புருவம் உயர்த்தி வினவினான்.

சிரித்தபடி அவன் அவ்வாறு கூறியிருந்தாலே பெண்ணவள் பதறித்தான் போயிருப்பாள். அவனோ துளியும் புன்னகையின்றி உணர்வற்ற முக்ததுடன் அவ்வாறு கேட்டிருக்க, அந்த குரலிலிருந்த கேலி அவளை சென்றடையாது போனது.

“அய்யயோ.. அப்படிலாம் இல்லை. இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டீங்களேனு கேட்டேன்” என்று மெல்லிய குரலில் அவள் மொழிய, அந்த பாவமான முகத்தில் வாய்விட்டு சிரித்தவன் ‘வா’ என்று கரம் நீட்டி அழைக்க, அவனிடம் வந்தாள்.

அவளை தன் பரந்த கைகளுக்குள் சிறை வைத்தவன் அணைப்பு, பருந்தின் சிறகுகளுக்குள் பாதுகாக்கப்படும் கோழிக்குஞ்சைப் போன்றே தெரிந்தது.

எப்போதும் அவன் அணைப்பில் அமைதியாய் இருப்பவள் இன்று ஏனோ தானும் அவனை அணைத்துக் கொண்டு முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கெள்ள, தன் ஒற்றை புருவம் உயர்த்தி அவளை புன்னகையாய் ஏறிட்டான்.

“தூக்கம் வரலையா?” என்றபடி ஆடவன் அவள் தலைகோத, “வருது” என்றாள். “அப்ப போய் தூங்கு” என்று அவன் கூற, சட்டென நிமிர்ந்தவள் “நீங்க?” என்று கேட்டாள். அவள் தன்னோடு உறங்க எண்ணுவது புரிந்திடவே தனது வேலைகளை புறம் தள்ளியவன் “நானும் தான். வா” என்றான்.

இருவரும் சென்று படுத்துக் கொள்ள, அவனை அணைத்தபடியே உறங்கிப் போனாள். தூக்கத்திலும் புன்னகைக்கும் அவள் இதழ்களில் இன்று ஒரு மெல்லிய சோகத்தை அவனால் உணர முடிந்தது. காரணம் அறியாத போதும் அவளாக கூறுவாள் என்று எண்ணிக் கொண்டு தானும் உறங்கினான், அந்த சோகம் மிகப்பெரிய பிரச்சினையின் அடித்தளம் என்று அறியாமல்.


Leave a comment


Comments


Related Post