இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 12-04-2024

Total Views: 23882

செந்தூரா 10


செந்தூரன் தன் உடைமைகளை எடுத்துக் காெண்டு தன் இருச்சக்கரவாகனத்தில் வைத்து அதை உயிர்ப்பிக்க எத்தனித்தபோது சுபாஷின் குரல் தெளிவாக கேட்டது.


“சாரதா, நீ வேணும்னா பாரு, உன் அண்ணன் மகன் வெளிநாட்டுக்கு போறேன்னு சொல்றான். வரும்போது நிச்சயமா ஒரு வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணியிருப்பான். குறைந்தது யாரையாவது என் காதலினு சொல்லியாவது அழைச்சிட்டு வருவான்” என்றார் எள்ளலாக.


“இப்படி எல்லாம் பேசாதீங்க, என் செந்தூரன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். எப்படி போகிறானோ அப்படியே வருவான். அவன் சொன்ன மாதிரி செய்து முடித்தால் என்ன செய்வீங்க?” என்றார் சாரதா கோபமாக.


“நானே அவனுக்கு என் பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பேன், அவன் பிசினஸ் தொடங்கி பெரிய ஆளாக மாறிவிட்டால் நான் ஏன் மறுக்க போகிறேன்?” என்றார் சுபாஷ்.


“அவன் திரும்பி வர்றவரைக்கும் தாரிகாவிற்கு எந்த கல்யாண ஏற்பாடும் செய்யக் கூடாது சரிதானே” என்றார் சாரதா கண்டிப்பான குரலில்.


“கட்டாயமாக! நம்ம தாரிகாவும் முதுகலை பட்டம் படிக்க வேண்டும் இல்லையா? அதுக்குள்ள உன் அண்ணன் மகன் என்ன கிழிக்கிறான்னு பார்த்திட்டு முடிவெடுக்கலாம்” என்றார் சுபாஷ்.


“என்னென்னவோ பேசி பிள்ளையை வீட்டை விட்டு துரத்திட்டிங்களே” என்று சாரதா அழுது புலம்பிக் கொண்டிருக்க, அதற்கு மேலும் அத்தையின் புலம்பலை கேட்க முடியாமல் பல்சரை வேகமாக இயக்கி ஏர்போர்ட்டை நோக்கிச் சென்றான்.


அதே சமயம் கதிரேசன் ஜானகி, காயத்ரி அனைவரும் சாரதா வீட்டின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள கோவையிலிருந்து கிளம்பி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.


செந்தூரனை பார்த்து அவர்களை வரவேற்கத்தான் வந்திருக்கிறான் என்று எண்ணி, “என்ன செந்தூரா? கார் எடுத்து வராமல் பைக் எடுத்து வந்திருக்க?” என்று கேட்டார் கதிரேசன்.


“அப்பா, நான் நம்ம வீட்டிற்கு போகிறேன், நீங்க ஒரு டாக்சி புக் செய்து அத்தை வீட்டிற்கு போங்க. பங்ஷன் முடிஞ்சதும் வாங்க உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றான் செந்தூரன் இறுக்கமான குரலில்.


“என்ன விஷயம்டா? எதாவது பிரச்சனையா?” என்று பதறினார் ஜானகி.


“அய்யோ அம்மா, அதெல்லாம் இல்லை. நான் மாஸ்டர்ஸ் படிக்க வெளிநாட்டிற்கு போக போகிறேன். அதற்கு தேவையான டாக்குமென்ட்களை தயார் செய்யணும். அதுக்குதான் இப்பவே நம்ம ஊருக்கு போகிறேன். நீங்க பங்கஷன் முடிச்சு வந்தபின்னாடி சொல்லாம்னு இருந்தேன்” என்றான் விளக்கமாக.


“என்னடா திடீர்னு வெளிநாடு அது இதுனு சொல்றே? அப்போ விவசாயத்திற்கு எதுவும் செய்ய போறது இல்லையா?” என்றார் கதிரேசன் கவலையாக.


“அதை எப்படிப்பா விடுவேன்? நான் தாத்தாகிட்ட வாக்கு கொடுத்திருக்கேன். விவசாயத்தில் புதுசா எதாவது செய்து அதன் மூலமாக பிசினஸ்ம் செய்யலாம்னு இருக்கேன். அப்போ தானே எனக்காக உங்க தங்கச்சிக்கிட்ட பெண் கேட்க முடியும்” என்று கண்சிமிட்டினான்.


“போக்கிரி, அதுதானே பார்த்தேன்! திடீர்னு நம்ம பிள்ளைக்கு பொறுப்பு வந்துடுச்சான்னு! அத்தை மகளை கட்றத்துக்கான முன் ஏற்பாடுனு சொல்லு” என்று சிரித்துக் கொண்டே அவன் முதுகில் தட்டினார் கதிரேசன்.


செந்தூரனுக்கும் லேசாக வெட்கம் வந்துவிட, தலையை கோதிக் கொண்டு திரும்பி தங்கையின் அருகில் வந்தான். அவளோ “அண்ணா அப்போ என்னை எல்லாம் மறந்துடுவியா?”என்றாள் கவலையான குரலில். 


“காயத்ரி… நீதான் என்னோட செல்ல தங்கச்சியாச்சே மறப்பேனா. நான் கிளம்ப இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். இதைப்பற்றி நாம் விலாவரியாக நம் வீட்டில் பேசிக் கொள்ளலாம். நீ முதல்ல அத்தைக்கும் மாமாவுக்கும் திருமண நாள் வாழ்த்துச் சொல்லி, இந்த மோதிரங்களை அவங்களுக்கு பரிசாக கொடு” என்றவன் தன் சட்டை பையிலிருந்த சின்ன நகைப்பெட்டியை எடுத்தான்.


அதில் SS என்று பொறிக்கப்பட்ட இரு மோதிரங்கள் இருந்தது. கேள்வியாக பார்த்த காயத்ரியிடம், “மாமா பேர் சுபாஷ், அத்தை பேரு சாரதா இல்லையா? அது தான் இந்த மாதிரி ஆர்டர் பண்ணேன். சர்ப்ரைஸா கொடுக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள முக்கியமான வேலை வந்துடுச்சு. நீயே கொடுப்பது போல கொடுத்திடு. அப்புறம் தாரிகா என்னை விசாரிச்சால், நான் முக்கிய வேலையாக போய்விட்டேன்., பிறகு நானே அவளுக்கு போன் செய்வதாக சொல்லு” என்றான்.


அவள் சரி என்று தலையாட்டவும் தந்தையிடம் பைக்கை கொடுத்துவிட்டு, ஜானகியையும் காயத்ரியையும் டாக்சியில் ஏற்றினான். கதிரேசன் முன்னாடி பைக்கில் செல்ல, டாக்சி அவரை பின் தொடர்ந்தது. அவர்களை அனுப்பி விட்டு விமானம் ஏறியவன் கோவையை அடைந்து பின்பு பொள்ளாச்சியையும் வந்தடைந்தான். வீட்டிற்கு வந்து கட்டிலில் படுத்தவனுக்கு உள்ளம் கனத்தது.


தாராவை அப்படி ஒரு நிலையில் கண்ட நொடி அவன் மனம் தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தது. ஒருவகையில் அவளிடமிருந்து இனி தூரம் விலகி இருப்பது நல்லது தான். அந்த சமயத்தில் சுபாஷ் மட்டும் அங்கே வந்திருக்கவில்லை என்றால், அவனின் எல்லைக் கோடு எதுவரை போயிருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர் பயப்படுவது போல நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கு தானே? 


ஒரு கணம் மனம் தடுமாறியதால் குடும்பத்தினரை விட்டு பிரியும் அளவிற்கு ஒரே நாளில் இத்தனை பெரிய முடிவு எடுக்க வேண்டியதாக போய் விட்டது. தன் மேலேயே கோபம் வந்தது. இனி தாராவை பார்க்காமல் ஐந்து வருடங்கள் எப்படி இருக்க போகிறான்?


மனதின் அழுத்தம் தாங்க முடியாமல் ஆத்தங்கரை பக்கம் சென்றான். அந்தி சாயும் நேரம் என்பதால் வானம் செந்தூரத்தை பூசியது போல சிவந்து இருந்தது. ஆற்று மணலில் இருக்கும் பாறை மேல் சாய்ந்தவாறு செவ்வானத்தை தான் வெறித்து பார்த்து இருந்தான்.


அதே நேரம் தாரிகா தன் அன்னையையும் கதிரேசன் குடும்பத்தையும் கேள்விகளாக கேட்டு துளைத்தெடுத்துக் கொண்டிருந்தாள். “செந்தூரன் மாமா எங்கே போச்சு? ஏன் இன்னும் வரலை?” என்று கேட்டவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவர்கள் விழிக்க, சுபாஷ் அவள் அருகில் வந்து, “எல்லாரிடமும் கேட்பதற்கு நீயே உன் மாமனிடம் கேட்கலாம் இல்லை, போன் போட்டு கேளு. நாங்களும் எதற்கு என்று தெரிந்துக் கொள்கிறோம்” என்றார். 


அதுவும் சரி என்று தோன்ற தாரிகா போனில் செந்தூரனுக்கு அழைத்தாள். ஆற்றங்கரையில் அந்திவானத்தை வெறித்தபடி இருந்தவனின் சிந்தையை அவனின் அலைப்பேசி சத்தம் கலைக்க, அதை ஏற்றிருந்தான். போன் இணைப்பு கிடைத்ததுமே அதை ஸ்பிக்கரில் போட்டாள் தாரா, 


“மாமா, என் மேல் கோபமா? நான் விளையாட்டுக்கு தான் உன் மேல் உப்பு மூட்டை ஏறினேன். நீ கீழே விழுவேனு நான் எதிர்பார்க்கலை. எங்கே அடிப்பியோனு பயந்துட்டே இருந்தேன். அதுதான் அப்பா வந்ததும் தப்பிச்சு ஓடி என் அறைக்குள் ஒளிஞ்சுக்கிட்டேன். நான் செஞ்சது தப்பு தான். சாரி மாமா. நீ இப்போ பங்ஷனுக்கு வா. என் பிரண்ட்ஸ் எல்லாம் உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க” என்றாள் வெகுளியாய்.


சாரதா இப்போது கணவனை பார்த்து முறைத்தார். தற்செயலாக நடந்த விஷயத்தை சுபாஷ் தான் ஊதி பெரிதாக்கியிருக்கிறார் என்று இப்போது புரிந்தது. சுபாஷ் சாரதாவின் பார்வையை கண்டுக் கொள்ளாமல் செந்தூரனின் பதிலுக்காக காத்திருந்தார்.


“தாரா, நீ விளையாட்டுக்கு செய்தேனு எனக்கு தெரியாதா? உன் மேல எனக்கு கோபம் எல்லாம் இல்லை. எனக்கு கலிபோர்னியாவில் மாஸ்டர்ஸ் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதுக்கு தயாராக தான் உடனே ஊருக்கு கிளம்பி வந்துட்டேன். நான் நேரம் கிடைக்கும் போது போன் செய்து பேசறேன், நீ சமத்தா படிக்கணும், புரிஞ்சதா?” என்றான்.


“என்னைய விட்டுட்டு நீ வெளிநாட்டுக்கு போக போறியா?” என்று ஓவென அழதொடங்கினாள் தாரா. அதை கேட்க பொறுக்காமல் போனை அணைத்தான் செந்தூரன். இப்படி ஒருவர் மேல் ஒருவர் உயிராக இருப்பவர்களை பிரிக்க பார்க்கிறாரே என்று சாரதா கணவரை தீப்பார்வை பார்த்தார்.


சுபாஷ் மகளை சமாதானம் செய்துக் கொண்டிருந்தார். அதற்குள் விருந்தினர் கூட்டம் வரத் தொடங்கவும் அனைவரும் வந்தவர்களை கவனிக்க தொடங்கினர். 

 

அடுத்து வந்த இரு மாதங்களில் செந்தூரன் வெளிநாட்டிற்கு செல்ல தேவையானவற்றை ஏற்பாடு செய்துக் கொண்டே தாரிகாவிற்கும் போன் செய்து உண்மையான காரணத்தை மட்டும் சொல்லாமல் பலவாறு பேசி அவளை சமாதானம் செய்தான்.


இப்படி ஒரு சூழ்நிலையில் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்சில் கல்லூரியில் சேர்ந்தவன் இரு முக்கிய தீர்மானங்களை எடுத்தான். ஒன்று இந்தியா செல்லும் போது ஒரு பிசினஸ் மேனாக தன்னை உயர்த்திக் கொண்டு செல்வது, மற்றொன்று எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க கூடாது என்பது தான். அதுபோலவே கடந்த ஐந்து வருடங்களையும் வாழ்ந்து முடித்திருந்தான்.


இடையில் காயத்ரிக்கு நடந்த திருமணத்திற்கு கூட அவனால் செல்ல முடியவில்லை. அத்தை சாரதாவிடமும் தாராவிடமும் மாதத்திற்கு ஒருமுறை போன் செய்வதோடு சரி. இதோ இப்போது இந்த பிராஜெக்ட் நல்லபடியாக முடிந்ததும், அவனின் முதல் வேலை இந்தியாவிற்கு சென்று தாரிகாவை மணம்முடிப்பது தான் என்று நீளமாக பேசி முடித்த செந்தூரமித்ரனை ஆச்சரியமாக கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கவின்.


“மித்ரா, என்னா லவ்வுடா உன்னோடது? யப்பா? இந்த காலத்தில் இப்படி ஒரு காதலா? அத்தை பொண்ணுக்காக ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் ஒரு சன்னியாசி போல வாழ்ந்துக் கொண்டிருக்கிறாயா? கிரேட் டா” என்று நண்பனை கட்டி பிடித்து ஆரத் தழுவிக் கொண்டான் கவின்.


இதை எல்லாம் சார்லஸ் பாண்டே, சங்கர பாண்டியன் மற்றும் ஆராத்யா என மூவருமே கேட்டுக் கொண்டிருந்தனர். கவின் சொன்ன என்னா லவ்வுடா உன்னோடது? என்ற ஆச்சரியம் தான் அவர்களுக்குள்.


குழந்தை பருவத்திலிருந்து உருகி உருகி காதலித்தவளை அவன் எப்படி மறப்பான், தன்னை அவன் ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்று பெருமூச்சு விட்டாள் ஆராத்யா. 


அப்போதும் சங்கரபாண்டியன் கடைசி வாய்ப்பாக, “ஏன் மித்ரன் நீங்க சொல்றது எல்லாம் சரி தான். இந்த ஐந்து வருடத்தில் உங்க அத்தை பெண் தாரிகாவிற்கு வேற எதும் அபேர்ஸ் வந்திருக்காதா? அப்படி அவள் நீங்க வேண்டாம்னு யாரையாவது திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தால்?” என்று கேட்டார்.


செந்தூரமித்ரன் திரும்பி சங்கரபாண்டியனை பார்வையாலே எரித்து விடுபவன் போல பார்த்தான், “என் தாராவை பற்றி எனக்கு தெரியும், அவள் என்னை நினைத்துக் கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருப்பாள். என்னை தவிர வேறு யாரும் அவள் கழுத்தில் தாலிக் கட்ட ஒருபோதும் விடமாட்டேன்” என்றான் அழுத்தமான குரலில்.


அவன் குரலில் இருந்த தீவிரத்தை பார்த்து இனி இவனை கன்வின்ஸ் செய்வது கடினம் என்பது போல ஆராத்யாவை பார்த்தார் சங்கரபாண்டியன்.


ஆராத்யா தன் தந்தையை பார்த்து கண்களால் அமைதியாக இருக்கும்படி சைகை செய்து விட்டு, “சாரி மித்ரன், உங்களோட காதல் பற்றி தெரியாமல் நானும் என் குடும்பமும் உங்களுக்கு தொல்லை கொடுத்துட்டோம். நீங்க தாராளமாக உங்க அத்தை பெண்ணை கல்யாணம் செய்துக்கோங்க. இதனால் எல்லாம் நம்ம பார்ட்னர்ஷிப்பிற்கு எந்த பிரச்சனையும் வராது. 


நீங்க முதலில் இந்தியா போய் திருமணத்தை ஏற்பாடு செய்து விட்டு எங்களுக்கும் தெரியப் படுத்துங்க. நாங்களும் உங்க திருமணத்தில் கலந்துக் கொள்ள விருப்பபடுறோம். முக்கியமாக எனக்கு உங்க தாராவை பார்க்கணும் போல இருக்கு” என்றாள்.


இப்போது செந்தூரமித்ரன் ஆராத்யாவை மெச்சுதலாக பார்த்தான். “தேங்க் யூ பார் யுவர் அன்டர்ஸ்டான்டிங் ஆரா” என்றான் கனிவான குரலில்.


“இட்ஸ் ஓகே, என்னோடது கிட்டத்தட்ட ஒரு மாதம் கூட முடியாத காதல், ஆனால் ஆறு வயதில் தொடங்கிய உங்க காதல் இப்போது இருபத்திரண்டு ஆண்டுகளாக தொடர்ந்துட்டு இருக்கு. உங்களோட காதல் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்” என்று அவன் கைப்பற்றி குலுக்கினாள் ஆராத்யா.


ஆராத்யாவின் காதலால் பிராஜெக்ட் பறிபோய்விடுமோ என்று பயந்திருந்த கவினுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. 


“மச்சான் எனக்கும் சேர்த்து இந்தியாவிற்கு டிக்கெட் போடு, நானும் உன் கூடவே இருந்து உன் கல்யாணத்திற்கு எல்லா வேலையும் பார்க்க போகிறேன்” என்றான் கவின் குதுகலமாக.


அதே சந்தோஷம் செந்தூரனையும் தொற்றிக் கொள்ள, உடனடியாக ஒரு வாரத்திலேயே இந்தியா செல்வதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்து முடித்து, அதே வேகத்தில் அத்தை சாரதாவிற்கும் போன் செய்தான்.


“அத்தை நான் மாமாகிட்ட சொன்ன மாதிரி பிசினஸ்மேன் ஆயிட்டேன். சீக்கிரமே நேரில் வருகிறேன் உங்க கணவரையும் என் பொண்டாட்டியையும் தயாராய் இருக்க சொல்லுங்க” என்றான் உற்சாகமாக.


அந்த பக்கமோ சாரதா சற்று பதட்டமாக, “எப்ப? எப்ப வரப்போற செந்தூரா?” என்று கேட்டார்.


அடுத்த வாரம் என்று சொல்ல எத்தனித்தவன் அவருக்கு சஸ்பென்ஸ் கொடுக்க எண்ணி “அடுத்த மாதம்” என்றான்.


சாரதா சற்றே ஆசுவாசமாக மூச்சு விட்டதை போன்று தோன்றியது சில நிமிட மெளனத்திற்கு பிறகு, “சரிப்பா பத்திரமாக வந்து சேரு” என்று சொல்லி விட்டு போனை வைத்தார்.


செந்தூரனுக்கு ஏதோ சரியில்லையோ என்று தோன்றியது, அதற்குள் கவின் தன் கேலிப்பேச்சை ஆரம்பிக்க, அவனுக்கு சிரித்தபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.


அங்கே போனை வைத்த சாரதாவிடம், “யாரு போனில் சாரதா?” என்று விசாரித்தார் சுபாஷ்.


“நம்ம செந்தூரன் தான் போன் செய்திருந்தான். அடுத்த மாதம் இந்தியா வருகிறானாம். அவன் வருவதற்குள் தாரிகாவின் திருமணத்தை நடத்தி முடித்துவிட முடியுமா?” என்று கணவரை பார்த்து கவலையாக கேட்டார் சாரதா.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post