இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 9 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 12-04-2024

Total Views: 19681


பாவை - 9

மாலை நேரம் மகள் வந்து விடுவாள் என்ற நினைப்பில் சிவராமும், பார்வதியும் இருக்க, கைபேசி தான் ஓசை எழுப்பியது.

“யாருங்க அது ? ஆனந்தியா ?” பார்வதிக் கேட்க,

“இல்லை, புதுசா ஏதோ நம்பர்ல இருந்து வருது “ எனக் கூறி அதனை எடுத்தார்.

“அம்மா, அக்கா என்ன புதுசாவா வரப் போறா ? அவளுக்கு வர தெரியாதா என்ன ? ஆமா எதுக்கு அவளை திடீருன்னு வரச் சொல்லுறீங்க ?” தெரியாததுப் போல் ஐஸ்வர்யா கேட்க,

“சும்மா தான்டி “ என்கவே, உதட்டை சுழித்துக் கொண்டுச் சென்று விட்டாள்.

அறைக்குள் சென்று அக்காவிடம் பேசி இரு நாட்கள் ஆனதால் அவளுக்கு அழைக்க, அழைப்போ செல்லவேயில்லை.

‘என்னடா இது நேத்து ராத்திரில இருந்து இப்படி தான் வருது. அப்பா கால் பண்ணுனாலும் ரிங் போக மாட்டிங்குது ?’ யோசனையோடு இருக்க, தந்தையின் அலறல் குரலோ செவியை தீண்டியது.

அதே நேரம் இங்கே, “ஹலோ ! யாரு சொல்லுங்க ?” சிவராம் கேட்க,

“ஆனந்திங்குற பொண்ணோட அப்பாவா நீங்க ?” என்ற கம்பீர குரல் ஒலித்தது.

 “ஆமா. “

 “நான் டிஎஸ்பி பேசுறேன். உங்க பொண்ணு காதல் தோல்வில ஆத்துல விழுந்து சூசைடு பண்ணி இறந்துப் போச்சு “ என்கவே, நம்ப முடியாது அலறியே விட்டார்.

“சீக்கிரம் சென்னைக்கு வந்து பாடியை வாங்கிக்கோங்க. போஸ்ட்மாட்டம் பண்ண எடுத்துட்டுப் போறோம் “ எனக் கூறி எந்த இடமென தகவலை கூறவே, தலைச் சுற்ற அப்படியே அமர்ந்து விட்டார்.

அவரின் கைபேசியோ நழுவி கீழே விழுந்து சில்சில்லாக உடைந்தேப் போனது. 

“என்னாச்சுங்க யாரு பேசுனா ?”

“நம்ம ஆனந்தி. ஆனந்தி “ என்றவரால் அதற்கு மேல் கூறவே முடியவில்லை. ஒரு வழியாக திணறி விசியத்தைக் கூறக் கேட்ட பெண்கள் இருவருக்குமே அதிர்ச்சி தான்.

ஐஸ்வர்யாக்கு தான் பேரதிர்ச்சி. அக்கா இப்படி செய்பவள் இல்லையே ? பெற்றவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாது அப்படியே அழுக, வேகமாய்ச் ஓடிச் சென்று வெளியே வேலைப்பார்த்த முனியசாமியிடம் விசியத்தை கூறினாள்.

அவரோ அக்கம்பக்கத்து சிவராமின் சொந்தங்களை அழைத்துக் கொண்டு வர, துக்கம் விசாரித்து உடனே பாடியை வாங்க வேண்டும் என்பதால் சென்னைக்கு கிளம்பினர்.

பெண்கள் இருவரும் வீட்டில் இருக்க, அருகில் இருந்த மங்கையர்களோ கூடி விட, துக்க விடாக மாற ஆரம்பித்தது. வெளிநாட்டில் இருந்த மகிழனுக்கு தகவல் செல்லவே, அப்படியே விடுப்பு எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

‘ஆனந்தி ! தங்களை விட்டு பிரிந்துச் சென்று விட்டால் ?’ என்பதை அவளின் உடலைக் காணும் வரை யாராலையும் நம்ப முடியவில்லை. தைரியமாக எதையும் சிந்தித்து முடிவெடுக்கும் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையா ? 

அன்றைய மாலை நேரம் போல் சென்னை வந்துச் சேர, காவல் அதிகாரி கூறிய இடத்துக்கு வந்தனர்.

வரவேற்ப்பில் தங்களின் மகளின் பெயரைக் கூறவே, பிணவறையக் காட்டினர். அங்கேச் செல்ல, காதலியை இழந்த துயரத்தில் தன்னுயிரே போனவனாய் பைத்தியம் பிடித்தது போல் வாசல் படியில் அமர்ந்திருந்தான் வசந்த்.

அங்கே வேலைப் பார்ப்பவர்களிடம் கேட்க, அவனோ வசந்த்தை கைகாட்டிச் செல்லவே, ஒன்றும் புரியாது அவனின் முன்னேச் சென்று நின்றனர்.

அதுவரை சுள்ளென வெயில் என்றும் பாராது அமர்ந்திருந்த வசந்த் தன் மீது ஏதோ நிழல் பட்ட பின்னே நிமிர்ந்துக் காண, வெள்ளை வேஷ்டி, சட்டையில் நால்வர் நின்றிருந்தனர்.

“தம்பி, நீ யாருப்பா ? என் பொண்ணுக்கு என்னப்பா ஆச்சு ?” இன்னுமே மகள் இறந்ததை முழுதாக ஏற்க முடியவில்லை பெற்றவர். யாரால் தான் இதனை தாங்கிக் கொள்ள முடியும்.

“ஆனந்தி “ வார்த்தைகள் உதிர்க்கவே அவனால் முடியாதுப் போக,

“என் பொண்ணு தான்ப்பா “ என்க, சட்டென அவரின் காலிலே விழுந்து விட்டான்.

“ஐயோ ! என்னை மன்னிச்சிருங்க சார். ஆனந்தியோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம். என்னால தான் அவ ஆத்துல விழுந்து சூசைடு பண்ணிக்கிட்டா ?” என்கவே, அவருக்கோ ஒன்றுமே புரியவில்லை.

“நானும் உங்க பொண்ணும் நாலு வருஷமா காதலிச்சோம் சார். நேத்து முந்தின நாள் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ரெண்டு பேரும் சொல்லும் போது அவளோட மனசை நான் புரிஞ்சிக்காம திட்டினதுக்கு எனக்கு இன்னைக்கு இவ்வளோ பெரிய தண்டனை கொடுத்துட்டா. இனி என் ஆனந்தியை என்னால பார்க்கவே முடியாது. பாவம் பண்ணிட்டேன் சார் நான் பாவம் பண்ணிட்டேன் “ என்று அவரின் கால்களைப் பற்றிக் கொண்டு கதறவே,

“டேய் ! உன்னை சும்மாவே விட மாட்டோம்டா. எங்க வீட்டு பொண்ணை கொன்னுட்டையே பாவி பயலே “ என்று உடன் வந்தவர்கள் அவனைத் தாக்கினர்.

அங்கிருந்து காவல் அதிகாரி வந்து பிரச்சனையை பேசி சரி செய்து, பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றவரிடம் கொடுத்து கையெழுத்தும் வாங்கி பாடியை எடுத்துச் செல்லக் கூறினார்.

வசந்த் கையெழுத்து போட்ட பின்பு தான் பிரேத பரிசோதனை நடைபெற்றது என்பதையும் பிரச்சனை வரக் கூடாது எனக் கூறியேக் கொடுத்தனர்.

தன் மகளை உயிரோடு தான் காண முடியவில்லை. பிணமாகவாவது காண சிவராமின் மனமோ தவியாய் தவித்து துடிக்க, வெள்ளை துணியில் சுற்றி முகம் மட்டுமே தெரிய கொண்டு வந்தனர்.

“ஐயோ ! “ நெஞ்சில் அடித்துக் கொண்டு சிவராம் கதற,

“ஆனந்தி “ காதலியை உயிரற்ற நிலையில் கண்ட வசந்தோ தன்னுயிரேப் போனது போல் துடியாய் துடித்து கதறி விட்டான்.

வண்டி ஒன்றைப் பிடித்து ஆனந்தியை ஏற்றிக் கொண்டு தங்களின் ஊருக்குச் செல்ல நினைக்க, உயிர்ப் போன பின்னும் கூட வசந்திற்கு ஆனந்தி தன்னை விட்டு பிரிந்துச் செல்வதை ஏற்க முடியவில்லை.

தர மாட்டேன் என்று அவளைக் கட்டிப்பிடித்து மறுக்க, உடன் இருந்தவர்கள் பிரித்து அவனை பிடித்துக் கொண்டனர். பின் ஆனந்தியின் உடலை ஏற்றிக் கொண்டு தங்களின் ஊர் நோக்கி பயணித்தனர்.

மறுநாள் அதிகாலை நேரம் போல் ஆனந்தியின் உடல் அவளின் சொந்த ஊருக்கு வந்துச் சேர, சரியாக மகிழனும் வந்து விட்டான். தன் நண்பனின் பைக்கிலிருந்து மகிழன் இறங்க, அப்போது தான் ஆனந்தியின் உடலைக் கண்டு அனைவரும் ஒப்பாரி வைத்தனர்.

“இனி நான் வரவே மாட்டேன் “ என்று மகள் கூறிச் சென்றதை இப்போது பார்வதி நினைக்க, தலையிலும், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அழுதார்.

“ஆனந்தி, இங்கே பாரு. உன் அண்ணன் வந்திருக்கேன் “ என்று ஆண்மகனான மகிழன் விழிகளையே கண்ணீர் மறைக்க கதறவே, 

“அண்ணே !” ஓடி வந்து அழுகையோடுக் கட்டிக் கொண்டாள் இளையவள்.

ஏற்கனவே பந்தலிட்டு வருகைக்காக தயாராக தான் இருந்தனர். உடல்கூறாய்வு செய்த உடல் என்பதால் அதிக நேரம் வைக்காது சிலமணி நேரங்களிலே தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

ஆக வேண்டிய அனைத்தையும் செய்து முடித்து மேனியிலிருந்து என்னதான் நீர் சொட்டினாலும் மகளின் நினைவுகளை இதனால் அழிக்க முடியுமா என்ன ? ஆனந்தியை தூக்கிக் கொண்டு இடுகாடு நோக்கி பயணிக்க, பாதியிலே அவளின் வாழ்வு முடிந்து விட்டது.

யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியுமா என்ன ? இதோ அதற்கு சான்றாகத் தான் ஆனந்தி இருந்தாள். அவர்கள் அனைவரின் வாழ்வில் ஆனந்தியின் மறைவு இருளைக் கொடுத்தது. 

அக்னிக்குள் அவளோச் சென்று விட, இடிகாட்டில் இருந்து வீடு நோக்கி திரும்பினர். அதனை தொடர்ந்த நாட்கள் வீட்டார் நால்வருக்கும் இருள் தான். ஒவ்வொரு நாளும் அவளில்லாது கடைப்பதே பெரும் பாடானது. 

அதுவும் ஐஸ்வர்யாவின் நிலையைச் சொல்ல முடியவில்லை. கொடிய காய்ச்சலில் விழுந்து விட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். பாதி உயிரை பறித்து விட்டு உடன் பிறந்தவள் சென்று விட, அனைத்தையும் இழந்ததைப் போல் வாழ்க்கையை வெறுத்தாள்.

ஒரு வழியாக அவளைத் தேற்றி வீட்டுக்கு அழைத்து வர, வெளியூர் ஆட்களுக்கு தெரிந்து துக்கம் விசாரிக்க வந்தால் மறுபடியும் கவலைக்குச் சென்று விடுவார்கள்.

இப்படியே இரவு, பகல் என்று நாட்கள் கடந்து ஒரு மாதமாகி விட, மறுபடியும் வெளிநாடுச் சென்று விட்டான் மகிழன். வழக்கம் போல் ஐஸ்வர்யா கல்லூரிச் சென்று வந்தாள். கடமையாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

ஆனந்திச் செய்ததை உயிரானவளால் ஏற்க முடியாதாகிப் போனது. சில நாட்கள் முன் மகிழன், ஒரு முறை ஆனந்தி காதலித்து உண்மையா என்று இளையவளிடம் கேட்க, அவளுமே தனக்கு தெரிந்த அனைத்தையும் கூறினாள்.

“இந்த அப்பனை பத்தி தெரியாதாடா ? என்ன ஆசைப்பட்டாலும் வாங்கிக் கொடுக்குறவன் அவனை தான் கல்யாணம் பண்ணப் போறேன்னு சொன்னா சரின்னு தானேடா சொல்லப் போறேன். அதுக்கு ஏன் இப்படி பண்ணுனா ?” 

“நானும் அவ கிட்ட சொல்லி பார்த்தேன்ப்பா. சரி வரேன்னு தான் சொன்னா ?” அழுகையோடு இளையவள் கூற,

“பாதகத்தி , உனக்கு கூட தெரிஞ்சிருக்கு தானே நீயாவது இந்த ஆத்தா கிட்ட சொன்னையாடி. சொல்லிருந்தா எப்பவோ பேசியிருக்கலாமேடி. இப்படி அமைதியா இருந்து போய் சேர்ந்துட்டாலே “ வேதனையோடு பார்வதி புலம்ப, ஐஸ்வர்யாவிற்கு மேலும் குற்றவுணர்வாகிப் போனது.

நாட்கள் செல்ல ஏனோ அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை. ஒரு வேலை தன்னால் தான் அக்கா இறந்து விட்டாலோ ? தான் கூறியதால் தானே அவனோடு சண்டை போட்டாள். சண்டை போட்டதால் தானே மனம் வெந்து இறந்து போனாள் என்று ஏதேதோ நினைத்து தன்னையே வருத்திக் கொண்டாள். 

நாட்கள் மின்னல் வேகத்தில் கடக்க, மெல்ல மெல்ல வீட்டார்கள் தேறி வந்தனர். ஐஸ்வர்யாவும் தன் படிப்பினை முடித்து விட்டாள். உடன் பயின்றவர்கள் அனைவரும் படிப்பு முடிந்ததைக் கொண்டாடும் விதமாக டூர் செல்ல நினைக்க, ஐஸ்வர்யாவிடம் கூறினர்.

அக்கா இழந்த பின் வாழ்க்கையை இழந்தவளும் வரவில்லை என்று மறுத்து விட, அடுத்த வாரம் அனைவரும் கிளம்ப முடிவு செய்தனர்.

ஒரு நாள் இரவு அவளின் கைபேசியிற்கு அழைப்பு வந்தது. புதிதாக நம்பரிலிருந்து வரவே முதலில் மறுத்தாள். பல முறை அழைக்கவே எடுத்து விட்டாள்.

“ஹலோ, யாருங்க இந்த ராத்திரில கூப்பிடுறீங்க ?”

“ஐஸ்வர்யா “

“ஆமா. நான் தான் நீங்க யாரு ?”

“நான் வசந்த் பேசுறேன் “ என்கவே, சட்டென அவளுக்கு நினைவில்லை.

“வசந்தா ? யாரு “ யோசனையாய்க் கேட்கவே, அவளுக்கு தான் யாரென தெரியவில்லை என்பது புரிந்தது.

“நான் உன் அக்கா ஆனந்தியோட லவ்வர் “ என்க,

“நீங்களா ? நீங்க எதுக்கு இப்போ எனக்கு கால் பண்ணுனீங்க ? நீங்ககெல்லாம் என்ன மனுஷன். சுயநலமா இருந்து எங்க அக்காவை கொன்னுட்டீங்களே ? “ஆவேசமோடு வேதனையில் கத்த,

“ஐஸ்வர்யா. பிளீஸ் காம் டவுன். நான் சொல்லுறதை கொஞ்சம் கேளு. எனக்கு என்னமோ உங்க அக்கா இறப்புல சந்தேகம் இருக்கு. என் மேல தப்பு இருக்கு. நான் ஒத்துக்குறேன். என்னை கொஞ்சம் பேச விடும்மா “ என்று கெஞ்சினான்.

அவன் கூறியதில் அதிர்ந்தவளோ, “என்ன சொல்லுறீங்க நீங்க ?” விழி விரியக் கேட்க,

“சாகுறது முன்னாடி உன் அக்கா உன் கிட்ட கடைசியா எப்போ பேசுனா ? அவ தங்கியிருந்த ரூம்மை காலி பண்ணும் போது மொபைல் எதுவும் கிடைச்சதா ?” 

“அதெல்லாம் நாங்க பார்க்கலை. அவளோட திங்க்ஸ் எல்லாம் எங்களுக்கு பார்சல் போட்டு விட்டாங்க. அது அப்படியே தான் இருக்கு “ 

“அதுல அவளோட ஹேன்ட்பேக் மட்டும் இருக்கா கொஞ்சம் பாரேன். ஏன்னா அவளோட பாடியை ஏரிக்கரை ஓரமா எடுக்கும் போது ஒரு போலீஸ் கையில ஹேன்ட்பேக் வச்சிருந்தாரு. “

“அதுல என்ன இருக்க போகுது ?”

“ஏதாவது ஆதராம் இருக்கலாம்ல “

“ஏன் உங்களுக்கு அப்படி தோணுது “ என்க,

“உங்க அக்கா இறந்த கொஞ்சம் நாளுல என்னோட ஹெச். ஆர் என்னை விட்டு வேலையை விட்டு தூக்கிட்டாரு. இப்போ கொஞ்சம் நாளுக்கு முன்னாடி அங்கே வேலை பார்த்த ஒரு பொண்ணை பார்த்தேன். அவளும் அன்னைக்கு நைட் சிப்ட்ல தான் இருந்தா ? அப்போ கடைசியா நான் ஊருக்கு போறேன் .எங்க காதலை பத்தி வீட்டுல சொல்லப் போறேன். கண்டிப்பா ஏத்துக்கிடுவாங்க சொல்லிட்டு தான் போனாளாம். அதுவும் சந்தோஷமா தான் அங்கிருந்து கிளம்பியிருக்கா ? அதான் கேட்டேன் “ என்று தன் சந்தேகத்தை கூற, 

“நான் உடனே பார்த்துச் சொல்லுறேன் “ எனக் கூறியவளோ வேகமாய் அந்த இரவில் பெரிதாக இருந்த பார்சலைப் பிரிக்க, நினைத்ததுப் போன்று அவளின் கைப்பையோ அதிலில்லை.

வசந்திற்க்கு அழைத்து விசயத்தை கூற, “அப்போ, உன் அக்கா மொபைல், பேக் எல்லாம் எங்க போச்சு ?” சந்தேகமாய்க் கேட்க,

“தெரியல. எனக்கும் ஏதோ சந்தேகம் இருக்கு. அக்கா இப்படி பண்ண மாட்டா ?”

“ஆனந்தி கூட பழகுன வரை என்னால உறுதியா சொல்ல முடியும். அவ சாவை எதிர்பார்த்தவ இல்லை “

“இப்போ என்ன பண்ணலாம் ?”

“விசாரிச்சே ஆகணும். ஏதோ ஒரு உண்மை இதுக்குள்ள மறைஞ்சிருக்கு “

“நான் உங்களை நேர்ல பார்க்கணும் மாமா “ என்க, அந்த உரிமை அழைப்பில் அவள் அக்காளின் மீது வைத்த நேசம் எத்தகையது என்பதைப் புரிந்தான் வசந்த்.

“சென்னையில தான் இருக்கேன் “

“உங்க அட்ரெஸ் வேணும் ?” என்கவே, முகவரியைக் கொடுத்து வரும் போது தனக்கு தகவல் கொடுக்க கூறினான். கைபேசியை வைத்தவளுக்கு பெரும் யோசனை. 

‘எப்படியாவது இந்த உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் எப்படி ? முதலில் தான் இங்கிருந்து உண்மையை கூறிச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பின் எப்படி செல்ல முடியும் ? சொல்லாமல் தான் செல்ல முடியும். எப்படி எப்படி ?‘ என்று யோசித்து அன்றைய இரவினைக் கடத்தினாள்.

அதிகாலை விடியும் நேரம் தான் யோசனை ஒன்று உதிர்த்தது. டூர் செல்கிறேன் எனக் கூறிச் செல்ல நினைத்தாள்.

அன்று தந்தையின் முன்னேச் சென்று நின்றவள், “அப்பா நான் டூர் போகலாம்ன்னு நினைக்கேன் “ என்க, மகளை வித்தியாசமாகத் தான் கண்டார்.

‘இந்த நொடி இதையெல்லாம் விருப்பப்பட மாட்டாளே மகள் அப்படி இருக்க இதென்ன இப்படி வந்துக் கேட்கிறாள் ?’ யோசித்துக் கொண்டிருக்க,

“கொஞ்சம் மைன்ட் ரிலாக்ஸ் ஆனா பீல் இருக்கும்ப்பா. அதான் பிரெண்ட்ஸ்சோட போய்ட்டு வரலாம்ன்னு நினைக்கிறேன் “ என்கவே, சரியெனக் கூறினார்.

நாட்கள் கடக்க, டூர் செல்லும் நாளும் வர வீட்டிலிருந்து கிளம்ப, இதன் பின் அவளின் வாழ்க்கையே மாறப் போகிறது என்பதை அறியவில்லை பேதையவள்.

தொடரும் ...


தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எழுத்துப் பிழைகள் இருந்தால் அதையும் கூறவும். நன்றி.



Leave a comment


Comments


Related Post