இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 13-04-2024

Total Views: 23105

செந்தூரா 11


ஐந்து வருடங்களாக தன் குடும்பத்தோடு போனிலேயே பேசி கொண்டு இருந்த செந்தூரமித்ரன் இன்று இந்தியா செல்வதற்காக விமான நிலையத்தில் கவினோடு நின்றிருந்தான்.

ஆராத்யாவும் அவர்களை வழியனுப்ப வந்திருந்தாள். “மித்ரன், மேரேஜ் பிக்ஸ் ஆனதும் எனக்கு போன் செய்து சொல்லணும், நான் உங்க இரண்டு பேரையும் வாழ்த்த கட்டாயம் வருவேன். அதற்கு பிறகு நாம் அங்கே கம்பெனியை தொடங்குவதற்கான வேலையை பார்க்கலாம்” என்றாள்.

“தேங்க்யூ ஆரா, இத்தனை சீக்கிரமாக என்னை புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி” என்று தன் கையை அவள்புறம் நட்பாக நீட்டினான். கவினுக்கு ஆச்சரியமாக இருந்தது. பெண்களிடம் கையை கூட குலுக்கமாட்டான். இன்று ஆராத்யாவை தன் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டான் போலும் என்று நினைத்துக் கொண்டான் கவின்.

அதன் பின் இருவரும் விமானம் ஏறி அமர்ந்ததும் செந்தூரன் சந்தோஷமாக கண் மூடி தன் பழைய நினைவுகளில் லயித்திருந்தான். தாரிகாவை இளம் பெண்ணாக பார்த்தது. இப்போது எப்படி இருப்பாள்? அவனை எதிர்பாராமல் பார்த்ததும் அவளுடைய எதிர்வினை எப்படி இருக்கும்? சுபாஷ் மட்டும் தான் அவனின் திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பார்.

அவருடைய எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பது? என்று பலவிதமாக யோசித்து கொண்டிருந்தான். அருகிலிருந்த கவின், “என்னடா இப்பவே உன்னோட தாராவோடு டூயட் பாட ஆரம்பிச்சுட்டியா? என்றவன் மெல்லிய குரலில் செந்தூரனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பாடினான்.

“என் தாரா, என் தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா”

என்று அவன் பாடவும் செந்தூரனின் முகம் சிவந்தது. “டேய் மச்சி, சும்மா இருடா” என்றான். “என்னடா உன் முகம் கூட சிவக்குது? நியாயமாக பார்த்தால் தாராவின் முகம் தானே சிவக்கணும்” என்றான் கவின் ஆச்சரியமாக.

“டேய் கொஞ்ச நேரம் சும்மா இருக்க போறியா இல்லையா?” என்று பொய்யாக அதட்டினான் செந்தூரமித்ரன்.

“சரி மச்சி, உன்னோட கனவை கலைச்சிட்டேனா? யு கன்டினியூ” என்று சொல்லி விட்டு கவின் தனக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் பேச தொடங்கிவிட்டான்.

செந்தூரன் அவனை பார்த்து “உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா” என்று மனதிற்குள் நினைத்தவாறு கவினை பார்த்து சிரித்து விட்டு மீண்டும் கண் மூடினான். சிறுவயதில் அவனும் தங்கை காயத்ரி மற்றும் தாராவும் விளையாடிய மகிழ்ந்த பொழுதுகளை நினைத்து பார்த்தான்.

அவளை பார்க்க போகிறோம் என்ற நினைவு உள்ளுக்குள் தகிப்பை கொடுத்தது. அவனுடைய இளம்வயதில் தாரவுடன் பழகும் போது கடைப்பிடித்த கட்டுப்பாடு எல்லாம் இனி அவளிடம் காட்டமுடியாது. ஏனென்றால் அந்த அளவிற்கு அவளை நினைத்து ஏங்கி போயிருக்கிறான். அவனின் எண்ணங்கள் அதற்கு மேலும் தாறுமாறாக ஓட, தலையை உலுக்கி கொண்டு எழுந்து அமர்ந்தான்.

மனம் ஒரு பந்தய குதிரை என்று சும்மாவா சொன்னார்கள். இருந்த இடத்திலிருந்தே உலகையே சுற்றி வர முடியுமே. இனியும் தனிமையில் யோசிக்க வேண்டாம் என்று எண்ணியவனாக கவினிடம் அவர்கள் தொடங்க போகும் கம்பெனியை குறித்து பேச தொடங்கிான்.

அடுத்த சில மணிநேரங்களில் அவர்கள் வந்த விமானம் சென்னையை வந்து அடைந்தது. முதலில் அத்தையையும் தாராவையும் பார்த்து பேசிவிட்டு பின்பு தாராவை அழைத்துக் கொண்டு அவனின் ஊரான பொள்ளாச்சிக்கு சென்று அவன் பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தவனாக டாக்சி புக் செய்தான்.

கவினுடன் காரில் ஏறியவன், அவன் படித்த காலேஜை காட்டி அதைப் பற்றி சொல்லிக் கொண்டு வந்தான். அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் வந்த டாக்சி அவனின் அத்தை வீடு இருந்த தெருவில் நுழைந்தது.

அந்த தெருவின் இருப்பக்கத்திலும் பல வண்ணங்களில் அழகாக பூக்களைக் கொண்ட செடிகள் தொட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தது. வண்ண தோரணங்களும் விளக்குகளும் கட்டப்பட்டு இருந்தன,

“என்ன மித்ரன்,எதாவது திருவிழாவா?” என்று கேட்டான் கவின். மித்ரனும் யோசனையோடு இல்லை என்று தலையாட்டினான். இப்போது கார் அவன் அத்தை இருந்த வீட்டின் கேட்டின் அருகே சென்றது.

அந்த பெரிய கேட் ஏற்கனவே நன்றாக திறந்து வைக்கப்பட்டு இருந்தது. வாசலில் மிக பெரிய கோலம் போட்டு இருந்தனர். உள்ளே பேண்ட் வாத்தியம் முழங்கியது. புருவமுடிச்சுடன் செந்தூரன் காரிலிருந்து இறங்கினான்.

அங்கே இருந்த சில பெண்கள், அவனை வரவேற்கும் பொருட்டு, “வாங்க மாப்பிள்ளை வாங்க, உங்களுக்காக தான் காத்திருக்கிறோம். உங்க அப்பா அம்மா எல்லாம் வேறு காரில் வருகிறார்களா?” என்று விசாரித்தாள்.

“என்னடா மச்சி சஸ்பென்ஸாக இருக்கட்டும், வீட்டிற்கு வரப்போவதை சொல்லபோவதில்லைனு என்கிட்ட சொல்லிட்டு, நீ வர்றதை போன் போட்டு சொல்லிட்டியா என்ன? வரவேற்பு எல்லாம் தடபுடலா இருக்கு?” என்றான் கவின் அவன் காதோரமாய்.

“அதான்டா எனக்கும் புரியலை, நான் அடுத்த மாதம்னு சொன்னதை என் அத்தை அடுத்த வாரம்னு புரிஞ்சுகிட்டாங்களா? அப்பவும் எப்படி சரியா இன்றைக்கு இத்தனை ஏற்பாட்டையும் செய்திருக்க முடியும்?” என்றான் செந்தூரமித்ரன் யோசனையாக.

“அதுக்கு பேர் தான் டெலிபதினு சொல்றது. உனக்கும் உன்னோட குடும்ப உறவினர்களுக்கும் அத்தனை புரிதல் இருக்கு. பார்க்கவே சந்தோஷமாக இருக்குடா” என்றான் கவின்.

அவர்கள் இருவரும் உள்ளே செல்லவும் அங்கே இருந்த உறவுக்கார பெண்கள் “மாப்பிள்ளை வந்துட்டார்” என்று குரல் கொடுத்தனர். அவர்களில் பலர் சுபாஷின் உறவினர்கள் என்பதால் சிறுவயதில் தான் செந்தூரனை பார்த்திருந்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவனுக்கு அவர்களை தெரிந்தது.

தான் வரப்போவதை முன்பே உணர்ந்து அத்தை நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்து விட்டாரா? என்ற ஆச்சரியத்தோடு கூட்டத்தை விலக்கிக் கொண்டு மெல்ல மெல்ல முன்னேறி வீட்டிற்குள் நுழைய போனான்.

“அப்படியே நில்லுங்க மாப்பிள்ளை, ஆரத்தி எடுக்கணும்” என்றபடி வந்த காயத்ரியை பார்த்து அசந்து போய் நின்றான். ஆக அவன் குடும்பமும் இங்கே தான் வந்திருக்கிறார்களா? எப்படி நான் வருவதை தெரிந்துக் கொண்டார்கள்? என்று அப்படியே நின்று ஆச்சரியமாக பார்த்தான்.

காயத்ரியோ நிமிர்ந்து பார்க்காமல் கடகடவென்று ஆரத்தி சுற்றியவள், அதில் இருந்த சிவப்பான நீரில் தன் விரலை தொட்டு செந்தூரனின் நெற்றியில் வைக்க தன் கையை மேல் நோக்கி நீட்டியபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதிர்ச்சியில் அவளின் கண்கள் விரிந்தன, நீட்டிய கை அப்படியே அந்தரத்தில் நின்றது. “அ அண்ணா” என்றாள் குழறியபடி.

வாய் மட்டும் அசைந்தது, குரல் வரவில்லை. செந்தூரன் அவளைப்பார்த்து குறும்பாக புன்னகைத்தவன், “என்ன தட்டில் காசு போட்டால் தான் நெற்றியில் பொட்டு வைப்பாயா?” என்று மந்தகாசமாக சிரித்தான்.

என்ன சொல்வது என்று தெரியாமல் காயத்ரி அப்படியே நின்றிருக்க, “என்னடி மசமசன்னு நின்னுட்டு இருக்கே, நல்ல நேரம் முடியப்போகுது, சீக்கிரம் மாப்பிள்ளையை உள்ளே அழைச்சிட்டு வா” என்றபடி ஜானகியும் ரஞ்சிதம் பாட்டியும் வந்தார்கள்.

காயத்ரி அதிர்ச்சியாக நின்றிருக்கும் கோலத்தை பார்த்தவர்கள், அவளின் பார்வை செல்லும் திசையை திரும்பி பார்த்தார்கள். அவர்களின் வாய் அதிர்ச்சியில் மேலும் திறந்துக் கொண்டது. அவர்களைப் பார்த்து செந்தூரன் பெரிதாக புன்னகைத்தான்.

எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் மூவருமே அதிர்ச்சியில் திறந்த வாயை மூடாமல் கண்களை விரித்தபடி பார்த்தபடி நின்றிருந்தனர்.

செந்தூரன் தான் அவர்கள் மூவரையும் கவினுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தான், “இது என் தங்கை காயத்ரி, அது என் அம்மா ஜானகி, இதோ இந்த அழகி தான் என்னோட பாட்டி ரஞ்சிதம்” என்றான் சிரித்துக் கொண்டு.

மூவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் நிலையை பார்த்த செந்தூரன் சிரித்தான், “என்னம்மா, நான் வருவதை தெரிந்து தானே எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருக்கீங்க? எதற்கு இத்தனை அதிர்ச்சியாக பார்க்கறீங்க? ஷாக்கை குறைங்க” என்றான் புன்னகையுடன் இரு விரல்களை குவித்து

அப்போது தான் அவர்கள் திறந்திருந்த வாயை மூடிக் கொண்டனர். வேறு வழியில்லாமல் காயத்ரி தன் அண்ணனின் நெற்றியில் திலகமிட, அவன் தன் பாக்கெட்டிலிருந்த ஒரு கத்தை நோட்டை தன் தங்கையின் கையில் திணித்தான்.

தயக்கத்துடன் அதை வாங்கி கொண்டவள், திரும்பி ஜானகியையும் ரஞ்சிதத்தையும் பார்த்தாள். அவர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்பது அவர்களின் முகத்தை பார்த்தாலே தெரிந்தது.

“எப்படிம்மா இருக்கீங்க?” என்று அன்னையின் தோளில் ஒரு கைப்போட்டவன் ரஞ்சிதம் பாட்டியின் தோளில் மறுகையை போட்டான். “என்ன அப்பத்தா? நீ சொன்ன மாதிரியே படிச்சு பெரிய ஆளாக வந்துட்டேனா?” என்றான்.

இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தனர். அவன் பேசிக்கொண்டே ஹாலை அடைந்து விட, சோபாவில் அமர்ந்திருந்த சுபாஷ் அதிர்ச்சியுடன் எழுந்தே விட்டார். செந்தூரன் தன் தாய் மற்றும் அப்பத்தாவின் தோள் மேல் இருகைகளையும் படரவிட்டபடி தோரணையாக நின்றபடி சுபாஷை அழுத்தமாக பார்த்தான்.

சாரதா அங்கே விரிக்கப்பட்டு இருந்த ஜமுக்காளத்தில் பழத்தட்டுகளை அடுக்கி கொண்டிருந்தார். சுபாஷ் செந்தூரனை பார்த்துக் கொண்டே மெல்ல மனைவியின் அருகே சென்றவர், அவர் தோளின் மேல் கையை வைத்தார்.

சாரதாவோ தான் செய்துக் கொண்டிருந்த வேலையை நிறுத்தாமல் கணவரை பார்த்து என்ன என்பது போல் கண்களால் கேட்டார். சுபாஷூம் கண்களாலேயே செந்தூரன் இருந்த பக்கம் ஜாடை காட்டினார்.

அவர் காட்டியப் பக்கம் அலட்டிக் கொள்ளாமல் மெதுவாக திரும்பிய சாரதா நெடுநெடுவென்று நின்றிருந்த நீளமான கால்களை தான் பார்த்தார். ஏதோ உள்ளுணர்வு உந்த மெல்ல நிமிர்ந்து பார்த்தார், அங்கே செந்தூரமித்தரன் தன் அத்தையைப் பார்த்து குறும்பாக சிரித்தபடி நின்றிருந்தான்.

அதிர்ச்சியில் கண்கள் தெரித்து விடும்படி அண்ணன் மகனையே பார்த்த சாரதா மெல்ல கண்களை சுழற்றினார். அப்போது தான் வந்திருந்த கதிரேசனும் முத்துப்பாண்டியுமே செந்தூரனை பார்த்து விக்கித்து நின்றிருந்தனர்.

இப்போது தான் செந்தூரனுக்கு ஏதோ வித்தியாசமாக உணர்ந்தான். கிட்டத்தட்ட எல்லாருமே அதிர்ச்சியாக அவனை பார்த்தபடி நின்றிருக்கிறார்களே தவிர, இத்தனை வருடங்கள் கழித்து அவன் வந்ததற்கு சந்தோஷமாக கூச்சலிடாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு விசாரிப்பு, அரவணைப்பு என எதுவுமே இல்லை.

எல்லாரையும் ஒருமுறை திரும்பி பார்த்தவன், “என்ன எல்லாரும் ஏதோ பேயை கண்ட மாதிரி முழிக்கிறீங்க? நான் வரப்போவதை தெரிந்து தானே எனக்கும் தாராவுக்கும் நிச்சயத்தார்த்தத்துக்கு ஏற்பாடு செய்து இருக்கீங்க? இப்போ என்னவோ புதுசா பார்க்கிற மாதிரி அதிர்ச்சியாக பார்க்கறீங்க? எல்லாரும் இங்கே இருக்கீங்க, தாரா எங்கே?” என்றான் செந்தூரன்.

எல்லாருமே இப்போது ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர். என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தனர், “என்னாச்சு உங்களுக்கெல்லாம்?” என்றவன் மாடியை நோக்கி, “தாரா” என்று சத்தமாக அழைத்தான்.

அதற்குள் வெளியே திடீரென்று பாண்ட் வாத்தியங்கள் சத்தமாக முழங்கியது, நாலைந்து கார்கள் தொடர்ந்து வந்து நிற்கும் சத்தம் கேட்டது. புருவம் உயர்த்தி, “யார் வருகிறார்கள்? எதற்கு இந்த வரவேற்பு? இதெல்லாம் எனக்காக இல்லையா?” என்று கேட்டான்.

எல்லாரும் சுபாஷை பார்க்க, அவரோ வெளி வாசல் நோக்கி வேகமாக சென்றார். “வாங்க வாங்க, உங்களுக்காகத் தான் காத்திருந்தோம். ஏன் லேட்டாயிடுச்சா?” என்று சுபாஷ் கேட்டுக் கொண்டிருந்தார்.

வயதான தாத்தா பாட்டி. நடுத்தர வயது ஆண் பெண்கள், மற்றும் சில சிறுவர் சிறுமியர்களோடு ஒரு இளைஞன் வந்துக் கொண்டிருந்தான்.

அவர்களை பார்த்த செந்தூரனுக்கு புருவம் இடுங்க, திரும்பி சாரதாவை பார்த்தான். அவர் அவனைத்தான் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். “என்ன அத்தை நடக்குது இங்கே?” என்றான் அடிக்குரலில்.

சாரதா எச்சிலை விழுங்கியபடி தொண்டையில் சிக்கியிருந்த வார்த்தைகளையும் விழுங்கினார். அவரிடம் தெரிந்த தயக்கமும் கண்களில் தெரிந்த பயமும் ஏதோ சரியில்லை என்று தோன்ற இப்போது தன் சொந்தங்கள் ஒவ்வொருவரையும் நிதானமாக பார்த்தான். அனைவருமே சாரதாவின் நிலையில் தான் இருந்தனர்.

சுபாஷ் அங்கிருந்த சூழ்நிலையை உணர்ந்தவாறு வேகமாக அவனருகில் வந்தவர், “செந்தூரா, மீட் மிஸ்டர் சித்தார்த். இவர் தான் நம்ம தாராவை திருமணம் செய்துக்க போறவர்” என்றார்.

“ஹலோ” என்று சிநேகமாக கைநீட்டிய சித்தார்த்தை பார்க்காமல் திரும்பி தன் குடும்பத்தாரை குரூரத்துடன் பார்த்தான் செந்தூரன். அவன் கண்கள் தீஜூவாலை போல கனன்று கொண்டிருந்தது.


(தொடரும்)



Leave a comment


Comments


Related Post