இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...27 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 13-04-2024

Total Views: 32696

பக்கத்து ஃபிளாட் வேல்மணி சுந்தரி இருவருக்கும் பூச்செண்டின் மேல் தனி பிரியம் உண்டு. அவர்களுக்கு ஒரே மகன்… வெளிநாட்டில் வேலை பார்க்கிறான்… குடும்பம் குழந்தை என்று அங்கேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன் அவ்வப்போது விருந்தாளி போல் வந்து செல்வான். வேல்மணிக்கு மத்திய அரசாங்கத்தில் வேலை… விரைவில் ஓய்வு பெறப் போகிறார்… அவர்களது தனிமைக்கு பெரும் ஆறுதல் பூச்செண்டு. விகல்பமற்ற அவளது பேச்சும் துடுக்கத்தனமும் கொஞ்சு தமிழும் அவர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். அனைவரும் வேலைக்குச் சென்றபின் சுந்தரியிடம்தான் வந்து வாயளந்து கொண்டிருப்பாள்.


இன்று வேல்மணி வேலை முடிந்து வந்து வெகுநேரமாகியும் அவர்களோடு அரட்டை அடித்தபடி வீட்டிற்கு செல்வதை தாமதப்படுத்திக் கொண்டு இருந்தாள். ஆத்திரத்தில் கண்ணாளனின் காதை கடித்து வைத்து ஓடி வந்ததில் பயம்… அவள்மேல் சரியான கோபத்தில் இருப்பான் என்று தெரியும்… முகிலனும் மீராவும் வந்திருப்பார்கள் என்று தெரிந்தும் சுந்தரி பூரி சுட வட்ட வட்டமாக மாவை தேய்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


அவளையும் பிடிவாதமாக தங்களுடனே உணவு உண்ண அழைக்க இங்கேயே வேலையை முடித்து அனைவரும் உறங்கியபின் வீட்டிற்குள் நுழையலாம் என்று எண்ணம் அம்மணிக்கு. ரசித்து ருசித்து பூரியை கிழங்கோடு எடுத்து வாயில் குதக்கிக் கொண்டிருந்தபோது முகிலனிடம் இருந்து அழைப்பு வந்தது. 


பெரியவர்கள் இருவரும் உண்டபடியே நகர்ந்து அமர்ந்து டிவி சீரியலில் லயித்து விட “சொல்லு மாமா…” பூரியையும் வார்த்தையையும் ஒன்றாய் மென்றாள்.


“என்னடி… என்னவோ தின்னுக்கிட்டே பேசுற மாதிரி தெரியுது…”


“ம்… சுந்தரிம்மா பூரி சுட்டாங்க… சாப்பிட்டுட்டு இருக்கேன்…”


“எரும எரும… புருஷன் காதை கடிச்சு காயப்படுத்திட்டு உல்லாசமா பூரி முழுங்கிட்டு இருக்கியா… உன்மேல கொலை காண்டுல இருக்கான்… பொம்பளையாடி நீ… உன்னை துவைச்சு எடுக்கப் போறான் பாரு…” பற்களை கடித்து கோபமாய் சத்தமிட்டான் முகிலன்.


“சும்மா பயமுறுத்தாத முனி… என்னை அவர் துவைக்கிற வரைக்கும் என் கை துவையல் அரைச்சிட்டு இருக்குமா… என் டிரீட்மெண்ட் எப்படி இருக்கும்னு உன் பிரண்டுகிட்ட கேளு…” சுவாரஸ்யமாய் பூரியே உள்ளே தள்ளியபடியே அசராது பதிலளித்தாள்.


“அவன் ட்ரீட்மெண்ட்டை நீ பார்த்ததில்லையே… இருக்குடி உனக்கு…” 


முகிலனின் பேச்சில் மெலிதாக கிலி பிடித்துக் கொண்டாலும் “சும்மா உன் பிரண்டுக்கே சப்போர்ட் பண்ணாத… என் முன்னாடி அந்த குண்டச்சிகிட்ட என்ன வழி வழிஞ்சாரு தெரியுமா…? கையில தூக்கி சுத்துறாராம்… பெரிய சினிமா ஹீரோன்னு நெனைப்பு… அவளை தூக்கி இருந்தா இந்தாளு இந்நேரம் இடுப்பொடிஞ்சு ஆஸ்பத்திரில கிடப்பாரு…”


அடுத்த வாய் பூரி உண்ண சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டவள் “நீயே ஒரு நியாயம் சொல்லு… மீராக்கா முன்னால நீ வேற ஒருத்தியை கொஞ்சி கெஞ்சி கிள்ளி விளையாடினா அந்த அக்கா வேடிக்கை பார்த்துட்டு நிப்பாங்களா…? சலுப்புனு கன்னத்துல ஒன்னு விட மாட்டாங்க… அந்த அளவுக்கு அந்த ஆளு கன்னம் தப்பிச்சதுன்னு சந்தோஷப்படச் சொல்லு…” சமையலறைக்கு எழுந்து சென்று மற்றும் ஒரு பூரியை தட்டில் வைத்துக் கொண்டாள்.


“அதான் காதை டேமேஜ் பண்ணி வச்சுட்டியே… நீ ஒழுங்கா லட்சணமா பொண்டாட்டியா நடந்துக்கிட்டா அவன் ஏன் அடுத்த பொம்பளகூட விளையாடப் போறான்… இன்னொன்னும் தெரிஞ்சுக்கோ… அவன் அப்படி தப்பான ஆளு கிடையாது… அந்த விசித்ரா அவனோட பெஸ்ட் பிரண்ட்… அவங்க உறவை அசிங்கப்படுத்திடாதே… ஆனா ஒன்னு… இப்படியே இவன் நல்லவனாவே இருந்துடுவானான்னு தெரியாது… நீ வீட்டு சாப்பாடு போடலேன்னா கொஞ்சம் கொஞ்சமா ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு பழகிடுவான்… பார்த்து நடந்துக்கோ…”


“ஏய் முனி… எப்ப பாத்தாலும் வீட்டுச் சோறு ஹோட்டல் சோறுன்னு நீ நம்ம கெழவி உன் அயித்த எல்லாரும் ஏன் ஒரே மாதிரியே பேசுறீங்க…? அந்த பனைமரத்துக்கு என் கையால சாப்பிடத்தான் பிடிக்கும்…” மண்டு பூச்செண்டு உண்டு முடித்து விரல்களை உறிஞ்சிக் கொண்டே வெகு திறமையாக பதில் அளித்தது.


“ஷப்பா… நீ புரிஞ்சு பேசுறியா… புரியாம பேசுறியாடி… உன்னை வச்சுக்கிட்டு அவன் பாடு கஷ்டம்தான்டி… ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்து சேரு…”


“அந்த பனைமரம் தூங்கினதுக்கு அப்புறம் கூப்பிடு வரேன்…”


“ஓ… அவ்ளோ பயமா…?”


“ப..பயம் எல்லாம் ஒ..ஒன்னும் இல்ல… தேவையில்லாம அடுத்த காதையும் புடிச்சு கடிச்சு வச்சிடுவேன்… அதுக்குத்தான்…”


“இப்போ நீ வரலேன்னா உன் சிண்டை புடிச்சு இழுத்துட்டு வர ரெடியா இருக்கான்… எப்படி வசதி…? சுந்தரி ஆன்ட்டிக்கு உன் பூலவாக்கு தெரியணுமா…?”


“மா..மா…”


“என்னடி இழுவ…?”


“இன்னைக்கு ஒரு நாளைக்கு நீ அவர்கூட படுத்துக்க… நான் மீராக்கா கூட படுத்துக்குறேன்…”


“வாய்ப்பில்ல செல்லம்… உனக்காக என்னோட பிரைவேஸியை விட்டுக் கொடுக்க முடியாது…”


“சுயநலவாதி...” பல்லை கடித்தாள்.


“என்னமோ சொல்லிக்க… இவ்வளவு எதுக்கு…? அவன் கிட்ட சாரி கேட்டு சரண்டர் ஆயிடு… பிராப்ளம் சால்வ்ட்…”


“வாய்ப்பில்ல ராசா…”


“இப்போ உன் புருஷன் வருவான்… அவன்கிட்ட இதையே சொல்லி உன் வீரத்தை காட்டு…” இணைப்பை துண்டித்தான் முகிலன். வெளியில் கெத்தாய் பேசினாலும் அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்கத்தான் செய்தது.


“சுந்தரிம்மா நான் கிளம்புறேன்…” வேகமாய் எழுந்து கொண்டாள்.


“இருடா… தரணிக்கும் பூரி வச்சு தரேன்… எடுத்துட்டு போ…”


“மீராக்கா சமைச்சு மூணு பேரும் சாப்பிட்டாங்களாம்… நான் நாளைக்கு வரேன்…” 


சரி என்று இருவரும் சிரித்தபடியே தலையாட்ட வெளியேறி தன் பிளாட்டின் முன் வந்தவள் சிங்கத்தின் கூண்டிற்குள் நுழையும் பயத்துடன் நின்றாள்.


“ச்சே… இது தேவையா… அவசரப்பட்டு காதை கடிச்சு இப்போ அந்த மனுஷனுக்கு பயந்துக்கிட்டு நிக்கிற நிலைமை வந்துருச்சு… பூச்செண்டோட அகராதியில இதெல்லாம் ரொம்ப புதுசு… சரி சமாளிப்போம்…” உதறலை மறைத்து ஒன்றும் தெரியாதவள்போல் உள்ளே நுழைந்தாள்.


மீராவின் மடியில் படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன். அவள் தேடிய நெட்டை மரம் அங்கு இல்லை.


“அக்கா… பால் ஆத்திட்டு வரட்டுமா…?” அக்கறையாய் கேட்டபடி மீராவின் மறுபுறம் வந்து அமர்ந்தாள்.


“அடேயப்பா… உன் கரிசனத்தை கடல்ல கொண்டு போய் கொட்டு… உள்ளே ஒருத்தன் சாப்பிடக்கூட வராம உட்கார்ந்து இருக்கான்… அவனுக்கு கொண்டு போய் குடு பாலையும் பழத்தையும்… நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டோம்…” படுத்திருந்தவன் தலையை தூக்கி எரிச்சலாய் கூற “அவர் இன்னும் சாப்பிடலையா…?” மெல்லிய குரலில் கேட்டாள்.


“ஓசில கிடைச்சதுன்னு 32 பூரியை வயிறு முட்ட நீ முழுங்கிட்டு வந்துட்ட… புருஷனை பத்தி அக்கறைப்பட்டியாடி…” கோபமாய் சத்தமிட்டான் முகிலன்.


“ஐயோ மாமா… இப்ப எதுக்கு கத்துற…? உன் பங்குக்கு நீயும் அவரை உசுப்பேத்தி விடாதே… என்னமோ நான் மட்டும் தப்பு பண்ணினதா என்னையே திட்டற… அவர் மட்டும் தப்பு பண்ணலையோ…” உதட்டை சுழித்து காலை தூக்கி சோபாவில் வைத்து அமர்ந்து கொண்டாள்.


“அம்மா தாயே… அதெல்லாம் உங்க பர்சனல்… நீயாச்சு அவனாச்சு… என்னமோ பண்ணுங்க..” என்றபடியே எழுந்து அமர்ந்தவன் “மீரா… டேப்லெட் போட்டுட்டு வா… நாம போய் படுக்கலாம்…” என்றபடியே எழுந்து கொண்டான்.


“அக்கா… அவர் காது ரொம்ப காயமா இருக்கா…?” மீராவின் காதில் கிசுகிசுப்பாய் கேட்டாள் பூச்செண்டு.


“ஆமா… நல்லா சிவந்து வீங்கி இருந்தது… போய் சமாதானப்படுத்து…” என்று கூறி எழுந்து கொண்டவள் மாத்திரை போட்டுக் கொண்டு முகிலனோடு இணைந்து தங்களது அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டாள்.


உதட்டை வளைத்தபடி தனது அறையை எட்டிப் பார்த்தாள் பூச்செண்டு. சிங்கத்தின் குகை போன்றே காட்சியளித்தது. விளக்கை அணைத்து இரவு விளக்கை போட்டவள் மெல்ல தலையை மட்டும் நீட்டி அறையை எட்டிப் பார்த்தாள்… படுக்கையில் அவன் இல்லை… உறக்கம் வரும்வரை பெரும்பாலும் பால்கனியில் அமர்ந்திருப்பான் என்பது தெரியும்… சில வினாடிகள் யோசித்தவள் அமைதியாய் சோபாவில் சென்று படுத்துக் கொண்டாள் உறக்கம் அறவே வரவில்லை.


‘பாவம்… சாப்பிடாம வேற இருக்காரு…’ ஹாட் பாக்ஸில் இருந்த இட்லியையும் தக்காளி சட்னியையும் ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு பூச்சிபோல் அறைக்குள் நுழைந்தாள். பால்கனியில் நான்காம் குரங்குபோல் அதே நிலையில்தான் அமர்ந்திருந்தான் மகாராசன். மெல்லிய கொலுசின் ஓசையும் காற்றில் கலந்து வந்த கஸ்தூரி மஞ்சள் வாசனையும் தனக்கு பின்னே நிற்பது யார் என்பதை உணர்த்தினாலும் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான் தரணி.


தலை சாய்த்து காயம்பட்ட காதினை ஆராய்ந்தாள்… சிவந்து வீங்கித்தான் இருந்தது… மனதுக்கு மிகவும் சங்கடமாய் போனது… சுற்றிக்கொண்டு அவன் எதிரில் வந்து நின்றாள்.


“ஏன் சாப்பிடாமலே உக்காந்திருக்கீங்க…? இந்தாங்க சாப்பிடுங்க…” அப்பாவிபோல் முகத்தை வைத்தபடி தட்டினை அவனிடம் நீட்ட கண்களை மட்டும் நிமிர்த்தி அவளை பார்த்தான். அந்த கண்கள் முழுக்க கோபம் நிறைந்திருந்தது… அழுத்தமாக சில நொடிகள் வெறியுடன் பார்த்தவன் எதுவும் பேசாது பார்வையை திருப்பிக் கொண்டான்.


“சா..சாரி… நீ..நீங்க எ..என்னை ரொம்ப தூண்டற மாதிரி பே…” வெடுக்கென எழுந்து விறுவிறுவென சென்று படுக்கையில் படுத்துக் கொண்டான்.


இழுத்து பெருமூச்சு விட்டவள் ‘பனைமரம் பயங்கர கோபத்திலதான் இருக்கு…’ புலம்பியபடியே தட்டை கொண்டு போய் உணவு மேஜையில் வைத்து அறையை தாழிட்டு கட்டிலின் மறுபுறம் வந்து அமர்ந்தாள்.


“நான் பண்ணினது தப்புத்தான்… நீங்க பண்ணினது மட்டும் சரியோ…? என் முன்னாடியே அவகிட்ட என்ன அப்படி ஒரு இளிப்பு கொஞ்சல் கெஞ்சல்…? எனக்கு எப்படி இருந்திருக்கும்…? அப்படியெல்லாம் கண்டவளும் உங்ககூட இழையிறதை என்னால வேடிக்கை பார்க்க முடியாது…” அவனது முதுகை பார்த்தபடி கூற அவனிடம் எந்த அசைவும் இல்லை.


“எ..எனக்கு எ..எப்படி சொல்றதுன்னு தெ..தெரியல… ஆ..ஆனா அடுத்த பொண்ணுகிட்ட நீ..நீங்க உரிமை எடுத்துக்கிறதை எ..என்னால ஏத்துக்க முடியாது… நீ..நீங்க எ..என்னைத் தவிர யா..யார்கிட்டயும் க்ளோசா இருக்கிறதை நா..நான் அனுமதிக்க மாட்டேன்…” தட்டுத் தடுமாறி சொல்ல கயிறு கட்டி இழுத்தது போல் சரக்கென எழுந்து அமர்ந்தான் தரணி.


‘“என்ன சொன்ன…?” தலையை குனிந்து கண்கள் சுருக்கி கேட்க “எ..என்ன…?” தடுமாறினாள்.


“என்னவோ க்ளோசா இருக்கிறதை பத்தி சொன்னியே… நீயும் நானும் ரொம்ப க்ளோசா இருக்கோமா…? உன் மனசை தொட்டு சொல்லு…” அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டவனிடம் பதில் சொல்ல முடியாமல் தலையை இங்கும் அங்கும் திருப்பினாள்.


“பதில் சொல்லுடி…” பற்களை அரைத்தான்.


‘எதுவும் சொல்ல முடியலேல்ல… இதுதான் நம்ம நிலைமை… நமக்குள்ள பெரிய இடைவெளி இருக்கு…. என் மனசை எப்பவோ உன்கிட்ட வெளிப்படுத்திட்டேன். நீதான் விலகி நிக்கிற… விருப்பம் இல்லையா பிடிக்கலையா எனக்கு தெரியாது… உனக்கான மரியாதையை கொடுத்து நான் ஒதுங்கி நிக்கிறேன்… உன் இஷ்டத்துக்கு நீ சந்தேகப்பட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல… விச்சு என்னோட பிரண்ட்… அவகூட பேசாத பழகாத விளையாடாதேன்னு சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல… புரிஞ்சுதா… உன் லிமிட்ல நீ நில்லு… உன் பக்கம் சொல்றதுக்கு எந்த நியாயமான வாதங்களும் இல்ல… ரொம்ப நல்லவ மாதிரி வந்து உட்கார்ந்து ஆர்கியுமென்ட் பண்ணாத…” 


கடுகடுவென பேசியவன் மீண்டும் திரும்பி படுத்துக் கொண்டான். நெடுநேரம் அதே நிலையில் அமர்ந்திருந்தாள் பூச்செண்டு. அழுகை முட்டிக்கொண்டு வந்தது.


‘லிமிட்ல நிக்கணுமா…? அப்படியெல்லாம் நிக்க முடியாது… நான் உங்க பொண்டாட்டி… என்னைவிட அவதான் உங்களுக்கு முக்கியமா..? சரி இருந்துக்கங்க… எனக்கு என்ன போச்சு…? நான் தள்ளியே இருக்கேன்…’ தனக்குள் புலம்பியவள் அவன் ஆழ்ந்து உறங்கி விட்டான் என்பதை அறிந்து அலமாரியில் இருந்த களிம்பை எடுத்து வந்து அவன் காதில் மெல்ல தடவினாள்.


‘அப்படி எல்லாம் தள்ளி இருக்க முடியாது… நான்தான் உங்களுக்கு எல்லாமுமா இருக்கணும்… திரும்பவும் என்னை சீண்டினா அந்த காதையும் புடிச்சு கடிச்சு வப்பேன்… நீ எல்லாம் ஒரு புத்திசாலியா…? மட்டி… வாயை திறந்து சொன்னாத்தான் புரிஞ்சிக்குவியோ… முட்டாள் மாமு… கடிச்சு வச்சேன்னு கோபம் மட்டும் வருதுல்ல… அதுக்கு பின்னால இருக்குற அன்பு புரியலையா…? போயா தண்டம்…’ அவன் முகத்திற்கு நேரே குனிந்து உறங்குபவனையே ஆழ்ந்து பார்த்தாள். கன்னத்தில் முத்தமிட இதழ் குறுகுறுத்தது.


‘ம்ஹூம்… நீயே இன்னும் எனக்கு கொடுத்ததில்ல… பெரிய இவரு… விலகி நிக்கிறாராம்… வயித்துல தூக்கி உட்கார வச்சு நீ செய்ற சேட்டை எல்லாம் தெரியாதோ.. முதன் முதல்ல நான் உனக்கு கொடுக்கற முத்தம் ஸ்பெஷலா இருக்கணும்… இப்படி தூங்கும்போது கொடுத்து ஸ்பெஷல் மொமென்டை மிஸ் பண்ண மாட்டேன்…’ 


ஏதேனும் செய்யச் சொல்லி குறுகுறுத்த இதழை குவித்து அவன் காதின் னமேல் ஊதினாள். வலிக்கு சுகமாய் இருந்தது போலும்… உறக்கத்திலும் அந்த இதத்தை அவன் அனுபவித்துக் கொண்டதை அவனது மெல்லிய தலையசைவே உணர்த்தியது.


“மாமு… ஐ.. ஐ… ம்ஹூம்… இதையும் வெளிப்படையாத்தான் உன்கிட்ட சொல்லுவேன்… நீ எப்படி நேருக்குநேரா சொன்ன… அதே மாதிரி…” சத்தம் வராமல் உதடு அசைய சொன்னவள் “செல்ல மாமுக்குட்டி…” பல்லை கடித்து ஆசையாய் முணுமுணுத்து அவன் பரந்த முதுகை பார்த்தபடியே படுத்துக் கொண்டாள். அவன் வாசம் உணர்ந்து சிலிர்த்து சிரித்து அப்படியே உறங்கியும் போனாள்.


காலையில் எழுந்ததிலிருந்து உர்ரென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டுதான் அலைந்து கொண்டிருந்தான் தரணி. முகிலனும் மீராவும் எதையும் கண்டு கொள்ளவும் இல்லை கேட்டுக்கொள்ளவும் இல்லை… அவர்களே அவர்களது பிரச்சனையை பேசி முடித்து சமாதானம் ஆக வேண்டும் என்பதுதான் இவர்களது எண்ணம்… பூச்செண்டும் வழக்கம்போல் தன் பணிகளில் இறங்கி இருந்தாள்.


“முகில்… நீயும் மீராவும் ஆஃப் எ டே லீவ் போடுங்க… நானும் போட்டுட்டேன்…” இறுக்கமான முகத்துடன் கூறியபடியே கை திருப்பி நேரம் பார்த்தான் தரணி.


“எதுக்குடா…?”


“விசித்ரா வீட்டுக்கு வர்றா… குறிப்பா உங்களை பாக்குறதுக்காக… அவளுக்கான மரியாதையை நீங்களாவது கொடுங்க…” புருவம் நெறிய சொன்னவன் ஓரக்கண்ணால் பக்கவாட்டில் நிற்கும் பூச்செண்டையும் பார்த்துக் கொண்டான்.


“மீரா… விச்சு டிபன் சாப்பிடற மாதிரிதான் இங்கே வர்றா… அவளுக்கும் சேர்த்து அரேஞ்ச் பண்ணு… அவளை பார்க்கவோ அவகூட பேசவோ விருப்பம் இல்லாதவங்க நேத்து மாதிரியே பக்கத்து வீட்ல போய் அடைக்கலம் புகுந்துக்கலாம்… ஒன்னும் ஆட்சேபணை இல்ல…” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே விசித்ரா அழைத்திருந்தாள்.


“விச்சுதான் கூப்பிடுறா… வந்துட்டா போல… நான் போய் கூட்டிட்டு வந்துடறேன்…” சொன்னபடியே வேகமாய் அவன் வெளியேற “நான் ஏன் பக்கத்து வீட்டுக்கு போகணும்…? இது என் வீடு… இங்கேதான் இருப்பேன்…” சத்தமாய் முதுகில் விழுந்த மனைவியின் குரலை காதில் வாங்கியபடியே இதழ்கள் விரிய புன்னகைத்தபடி நடந்தான் தரணி.






Leave a comment


Comments


Related Post