இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--3 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 13-04-2024

Total Views: 32845

இதயம் 3



     கல்லூரிப் படிப்பிற்காக மின்மினி சென்னை வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. கல்லூரி ஆரம்பிக்க இன்னும் நாட்கள் இருந்தாலும் அவளுக்கு அந்த ஊரும், வீடும் பழகட்டும் என்று ஜீவன் தான் அவளை முன் கூட்டியே அழைத்து வந்திருந்தான். அக்கா, அத்தான், அக்கா பிள்ளைகள் பாரி, சபரி, மகிழ்வதனி என மின்மினியின் நேரம் சந்தோஷம் மட்டுமே நிறைந்ததாகச் சென்று கொண்டிருந்தது.



     அந்த வீட்டிற்கு வந்த புதிதில் அவளுக்கு நிறைய விஷயம் புதிதாய் இருந்தது. ஒருநாள் காலையில் அவள் எழுந்து வரும் போது ஜீவன் வரவேற்பறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான். “அத்தான் எதுக்காக இந்த வேலையை எல்லாம் நீங்க பார்த்துக்கிட்டு இருக்கீங்க, அக்கா எங்க? இப்படித்தான் உங்களை கொடுமைப் படுத்திக்கிட்டு இருக்காளா? இருக்கட்டும் எங்க அம்மாகிட்ட பேசும் போது போட்டுக்கொடுத்து வசவு வாங்க வைக்கேன்.



     இப்ப விளக்குமாறை என்கிட்ட கொடுங்க, நான் பார்க்கேன். வீட்டில் இரண்டு பொம்பிளைப் பிள்ளைங்க இருக்கும் போது இந்த வேலையை எல்லாம் ஒரு வளர்ந்த ஆம்பிளை செய்யுறது நல்லாவா இருக்கு“ தான் பழகிய பழக்கத்தைக் கொண்டு இப்படிச் சொன்னாள்.



     ஜீவன் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டான் போலும், “இந்த வீட்டில் தான் நானும் இருக்கேன். அப்படி இருக்க வீட்டோட சின்னச்சின்ன வேலைகள் செய்வதால் ஒன்னும் குறைந்து போயிடமாட்டேன்.



     வேலையில் ஆண்பிள்ளை வேலை பெண்பிள்ளை வேலைன்னு எதுவும் கிடையாது. எல்லோரும் எல்லா வேலையும் தெரிந்து வைத்திருப்பது தான் நல்லது“ தீர்மானமான குரலில் சொன்னான். வழமைக்கு மாறான அவனுடைய கடுமையான குரலில் மினியின் முகம் சட்டென்று வாடியது. எதுவும் பேசாமல் தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டாள்.



     சற்று நேரம் கழித்து அவனே மினியின் அறைக்கதவைத் தட்டி, “ஸ்சாரி மா, காலங்காத்தால ஒருத்தன் என்னைக் கடுப்பாக்கிட்டான். அவன் மேல இருந்த கோபத்தை உன்மேல காட்டிட்டேன். தப்பு தான், இனிமேல் இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்“ என்றுவிட்டு அவன் பாட்டிற்கு சென்றுவிட்டான்.



     திகைத்து விழித்தது என்னவோ மினி தான். அவள் வீட்டு ஆண்கள் சாதாரணமாகவே இதை விட கண்டிப்பான குரலில் தான் பேசுவார்கள். அதை விட முக்கியம் அவர்கள் மீதே தவறு இருந்தாலும் மன்னிப்பு என்ற வார்த்தை அவர்கள் வாயில் இருந்து வந்ததே இல்லை. அவர்களையும், ஜீவனையும் ஒப்பிட்டுப் பார்த்த மனதை அவளால் தடுக்கவே முடியவில்லை.



     இன்னொரு நாள் சமையலறையில் காரச்சட்னி அரைக்க தேவையான பொருட்களை இரண்டு வானலியில் தனித்தனியாக வதக்கிக் கொண்டிருந்த வதனியை வித்தியாசமாகப் பார்த்தாள் மினி.



     “என்னடி அப்படிப் பார்க்கிற, ஒரே சட்னிக்காக எதுக்காக இரண்டு பாத்திரம் என்று யோசிக்கிறியா? உங்க அத்தானுக்கு கடலை எண்ணையில் வதக்கினா பிடிக்கும் எனக்கு நல்லெண்ணைய் பிடிக்கும்“ சாதாரணமாகச் சொன்னாள்.



     “கடலை எண்ணைய் உன் உடம்புக்குப் பிடிக்காதா?“ தங்கையின் கேள்வியை காதில் வாங்கினாலும் கவனத்தை வேலையில் வைத்துக்கொண்டே “இல்லையே“ என்றாள் வதனி.



     “பிறவென்ன, அத்தானுக்கு ரெடி பண்ணுவதையே நீயும் சாப்பிட வேண்டியது தானே. நேரம், கேஸ் எல்லாமே மிச்சம் தானே“ பெரிதாய் யோசனை சொன்னாள் சின்னவள்.



     “அவருக்குப் பிடிச்சதை அவருக்குப் பிடித்த மாதிரி மட்டுமே செஞ்சுக்கிட்டு இருந்தால் எனக்குப் பிடிச்சதை எப்ப என்னால சாப்பிட முடியும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிடித்தம் இருக்கும். அதுக்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது. யாருக்கு சமைக்கிறோமோ அவங்களுக்குப் பிடித்த மாதிரி சமையல் இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா சாப்பிடுவாங்க என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை நமக்குப் பிடித்த வகையில் உணவு இருந்தால் நாமும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிடுவோம் என்பது.



     நம்மவர்கள் மேல் நாம் காட்டும் பிரியத்தின் அளவை நம் மீதும் காட்டிக்கொள்ள வேண்டும். இல்லாமல் போனால் வாழ்க்கை ரொம்ப சீக்கிரம் சலிப்படைந்துவிடும்“ பெரிய விஷயத்தை சாதாரணமாகச் சொன்னாள் வதனி.



     மினியின் வீட்டில் அவளுக்கு தேங்காய் சட்னி பிடிக்காது என்று தெரிந்தாலும் மணிமேகலை அதைத் தான் செய்வார், இவள் சிணுங்கினால் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்க முடியாது என முகத்தில் அடித்தது போல சொல்லிச் சென்றுவிடுவார்.



     அப்பொழுது எல்லாம் தாய் மணிமேகலை மேல் கோபம் கொண்டாலும் ஒரு வயது வந்த பிறகு தான் புரிந்து கொண்டாள் தன் தாய்க்கும் தேங்காய் சட்னி பிடிக்காது, தந்தைக்காவும் தமையனுக்காவும் தான் அவர் தினமும் அதையே செய்து கொண்டிருக்கிறார் என்று.



     உணவு விஷயம் மட்டும் அல்ல, வேறு எதுவாக இருந்தாலும் அனைத்திற்கும் ஆண்கள் விருப்பம் தான் முதல் அந்த வீட்டில்.      நெஞ்சு பொறுக்காமல் காரணம் கேட்க பெண்ணிற்கு தாய் சொன்ன பதில், “ஒரு கால கட்டத்திற்குப் பிறகு பெண்களுடைய பிடித்தம் அவள் குடும்பத்தின் பிடித்தமாக மாறிவிடும். இப்பொழுது அது உனக்குப் புரியாது, நாளை நீ ஒருவனுக்கு மனைவியானால் தானாகப் புரிந்து கொள்வாய்“ என்று சொல்லி இருந்தார்.



     தாய் தந்தை வாழும் வாழ்விற்கும் அக்கா, அத்தான்  வாழும் வாழ்விற்கும் எத்தனை வேறுபாடுகள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை மினியால்.



     வதனி சில சமயம் எழுந்திருக்க தாமதமானால் ஜீவன் காலை நேர வீட்டு வேலையும் செய்து, வேலைக்கு எடுத்துச் செல்வதற்காக காலை மற்றும் மதிய உணவையும் சேர்த்து  தயார் செய்துவிடுவான்.



     “நான் செஞ்சு தாரேன்“ என மினி போய் நின்றாலும், “படிக்கிற பொண்ணு அந்த வேலையை மட்டும் பாரு“ என்றுவிட்டு கடமையில் கண்ணாக இருப்பான்.



     வதனி சோர்வாக இருந்தால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் கடமையையும் விரும்பியே ஏற்பான் ஜீவன். ஒரு பொண்ணு செத்தாலும் அதற்கு முன்னால் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடித்திருக்க வேண்டும் என்று தன் அம்மா அடிக்கடி சொல்வது நினைவில் வந்து போகும் மினிக்கு.



     ஜீவனும், வதனியும் சேர்ந்து மினியை நல்ல முறையில் தயார் படுத்தினார்கள் என்று சொல்லலாம். ஊரில் சின்னச் சின்ன தேவைகளுக்குக் கூட தந்தை மற்றும் தமையனை எதிர்பார்த்து நின்றவளை இங்கே சொந்தக் காலில் நிற்க வைக்க பயிற்சி கொடுத்தனர்.



     பகல் வேளையில் கூட வீட்டை விட்டு தொலைவில் இருக்கும் கடைக்குச் சென்று பழக்கம் இல்லாத பெண், இங்கே வந்த பிறகு இரவு நேரம் கூட குடியிருப்பு வளாகத்திற்குள் இருக்கும் கடைக்குப் பயப்படாமல் சென்று வந்தாள்.



     வெளியூர் சென்றால் அடுத்தவரிடம் பேருந்து எண்ணைக் கேட்பதற்குக் கூட பயம் கொண்டு அமைதியாக இருப்பவளை ஒரே ஒரு முறை ஒருநாள் பாஸ் எடுத்துக்கொண்டு சென்னையின் முக்கியமான இடங்களை எல்லாம் காட்டிக்கொடுத்து பழக்கிய ஜீவன், அதன்பிறகு எந்த இடத்திற்கும் அவளோடு செல்லவில்லை. முடிந்தவரை நீயே சமாளி என்று விட்டுவிட்டான்.



     பிராய்லர் கோழியாக எந்த வித பிரச்சனையும் இன்றி பாதுகாப்பான கூட்டுக்குள் வளர்ந்தவள் அவள். இனி நீ பிராய்லர் கோழி அல்ல நாட்டுக்கோழி. உனக்கான தேவையை நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும். உன் பாதுகாப்பிற்கு நீயே பொறுப்பு என்று கிடைத்த திடீர் சுதந்திரம் அவளை மூச்சடைக்கவே வைத்தது. அவளால் இந்த அதளபாதள மாற்றத்தை சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் பழகிக்கொள்ள மறுக்கவில்லை. தனக்குத் தேவையானவற்றை தானே தேர்ந்தெடுப்பது என்பது யாராக இருந்தாலும் பிடித்தமான விஷயம் தானே, அதற்கு மினி மட்டும் விதிவிலக்கா என்ன. 



     அவளுக்குத் தகுந்த உடைகள் மற்றும் காஸ்மெட்டிக் பொருள்களை வதனி சுட்டிக்காட்ட அதில் தனக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்தாள் மினி. அப்பா, அம்மா விருப்பம் என்பதைத் தாண்டி தனக்குள்ளும் இப்படியான ஏராளமான ஆசைகள் இருப்பதே அப்போது தான் மினிக்கு உரைத்தது. அதன்பிறகு தனக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று கற்றுக்கொடுக்க முயலும் அக்கா மற்றும் அத்தானுக்கு நன்றாகவே ஒத்துழைத்தாள்.



     அவள் கல்லூரி வாழ்வும் ஆரம்பம் ஆனது. முன்பு போல் யாருக்கும் பயம் கொள்ள வேண்டாம் என்பதால் ஆண், பெண் பேதமின்றி அனைவரிடமும் நட்புக்கரம் நீட்டி சூழ்நிலையை நன்றாகவே கையாண்டாள் பெண். அவள் முன்னேற்றத்தைக் கண்டு வதனிக்கு சந்தோஷமாக இருந்தது. தன் சித்தியைப் போல் இல்லை தங்கை சுதாரித்துக்கொண்டாள் என்கிற நிம்மதி அவளிடத்தில்.



     கல்லூரி சம்பந்தமாக எங்கு செல்வதாக இருந்தாலும் தனியாகவே சென்று வந்தாள். பிறந்தநாள் பார்ட்டி போன்ற விஷேஷங்களுக்கு சங்கோஜம் இல்லாமல் சென்று வந்தாள். தன் எல்லை எது என்பதைத் தெரிந்து கொண்டு அதன்படி சரியாக மினி நடந்து கொண்டதால் அவளைப் பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது ஜீவன், வதனி தம்பதியருக்கு.



     சென்னை வாழ்க்கையில் மின்மினி பெற்றது ஏராளம் என்றால் இழந்தவையும் கொஞ்சம் இருந்தது. அதில் முக்கியமானது அவள் மாவட்டத்துக்கு உரித்தான பேச்சு வழக்கு. அவளுடைய முயற்சி இல்லாமலே அது மினியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருந்தது.



     ஆனால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில்  குடும்பத்தினரோடு அலைபேசியில் பேசும் போது மட்டும் தன்னால் அந்தப் பேச்சுவழக்கு வந்து ஒட்டிக்கொள்ளும் அவளிடத்தில். அன்பானவர்கள் அருகில் இருக்கையில் தொலைத்த சுயம் கூட அழகாக வெளிப்படுவதை அருகில் இருந்து அனுபவிப்பதும் புதிதாகத் தான் இருந்தது அவளுக்கு.



     நேரம் கிடைக்கும் போது தானே முன்னே நின்று மினிக்கு இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தான் ஜீவன். அவள் ஊரில் கள்ளம் இல்லாமல் தான் பழகுகிறார்கள் என்று தெரிந்தாலும் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக நெடுநேரம் இருக்க இருக்கவிடமாட்டார்கள்.



     வதனிக்கு தன் கணவன் மீது எத்தனை நம்பிக்கை என்பதை, அவன் தன்னுடன் பழகும் விதத்தை அவள் ஊக்குவிக்கும் அழகைப் பார்த்து தெரிந்து கொண்ட மினிக்கு கர்வம் தாங்கவில்லை.



     தமக்கை மற்றும் அத்தான் வாழும் வாழ்வைப் பார்த்து இப்படியும் வாழலாம் போலவே என்று நினைக்க ஆரம்பித்தவளின் நினைப்பு நாள்கள் போகப் போக இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் அளவுக்கு உறுதியாகியது.



     தனக்கு வரப்போகிறவன் தன்னை தன் அத்தான் அளவு காதலிப்பானா தெரியாது. ஆனால் தான் அவனை, தன் அக்கா அத்தானைக் காதலிக்கும் அளவை விட அதிகமாகக் காதலிக்க வேண்டும். அவன் மீது கடல் அளவு நம்பிக்கை வைக்க வேண்டும். அனைவரும் பார்த்து கண் வைக்கும் அளவு எங்கள் வாழ்கை இருக்க வேண்டும் என்று நாளுக்கு நாள் தன் எதிர்கால வாழ்வைப் பற்றிய ஆசைகளை கண்டமேனிக்கு வளர்த்துக்கொண்டே போனாள் மினி.



     அவள் ஆசைப்பட்ட வாழ்வு அவளுக்குக் கிடைக்கும் தான். ஆனால் அதற்காக அவள் அதிகம் பாடுபட வேண்டியது இருக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை பாவம்.



     அன்று மினியின் நெருங்கிய தோழி தேன்மொழியின்  பிறந்தநாள். விடுமுறை தினம் என்பதால் காலை உணவை முடித்த கையோடு அங்கே கிளம்பிச் சென்றிருந்தாள் மினி. பொதுவாக அவள் வெளியே கிளம்பும் போது, யாரைப் பார்க்கச் செல்கிறாள் எந்த ஏரியா என்ற அனைத்தையும் சொல்லிவிட்டுத் தான் செல்வாள்.



     ஆனால் இந்த முறை விசித்திரமாக அவள் தேன்மொழியின் வீடு என்று மட்டும் தான் சொல்லி இருந்தாளே தவிர, அது இருக்கும் ஏரியா பெயரைச் சொல்லி இருக்கவில்லை. சொல்லி இருந்தால் நிச்சயம் அவளை அங்கே செல்ல அனுமதித்து இருக்க மாட்டார்கள் வதனியும் ஜீவனும்.



     இப்போது தான் செல்லும் இந்தப் பயணம் தான் தன் வாழ்க்கைப் பயணத்தை திசை மாற்ற இருக்கிறது என்று தெரியாமல் ஆனந்தமாக வந்து கொண்டிருந்த மினி, வாடகை வாகனம் தோழியின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த போது வழியில் இருந்த ஒரு வீட்டைப் பார்த்து அதிசயத்துப் போனாள்.



     அது முழுக்க முழுக்க பணம் படைத்தவர்கள் வசிக்கும் இடமாகத் தான் இருந்தது என்றாலும் இப்படியொரு தனித்தன்மை அங்கிருந்த எந்த வீடுகளிலும் இல்லை.



     கேட்டில் ஆரம்பித்து தோட்டம் வரை  முழுக்க முழுக்க செஸ் தீமில் இருந்தது அந்த வீடு. கேட்டில் ரூக் சின்னம், வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்களில் குதிரைச் சின்னம், வீட்டுக் கதவில் பிஷப் சின்னம், காம்பவுண்ட் சுவர் முழுக்க சிப்பாய்கள் இவர்கள் அத்தனை பேரையும் கட்டிக் காப்பதற்காக வீட்டு உச்சியில் ராஜா என்று அத்தனை அழகாக இருந்தது வீடு.



     பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. காரில் இருந்தபடியே அந்த வீட்டை புகைப்படம் எடுத்துக்கொண்டாள் அவள். அவள் இரசனை மற்றும் ஆ,ர்வத்தைக் கவனித்த கார் ஓட்டுநர், “இந்த ஏரியாவுக்கே இந்த வீடு தான் மா அடையாளம். செஸ் வீடு என்று சொன்னால் குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்“ என்று சொல்லிக்கொண்டே காரை நிறுத்தினார். காரணம் அந்தச் செஸ் வீட்டின் எதிர் வீடு தான் தேன்மொழியுடையது.



     பிறந்தநாள் பார்ட்டி முடிந்ததும் மினி சற்றே மறந்திருந்த அந்த செஸ் வீட்டைப் பற்றி பேச்சு வந்தது மற்றவர்களால். தன்னைப் பார்க்க வந்த தன்னுடைய நண்பர்கள் தன் வீட்டை விடுத்து எதிர்வீட்டைப் பற்றி பெருமை பேசுவதைக் கண்டு எரிச்சல் வந்தது தேன்மொழிக்கு.



     அதனாலேயே, “வீடு பார்க்க அழகா இருந்து என்ன பிரயோஜனம். அதன் உள்ளே வாழும் மனிதரோட வாழ்வு ஒன்னும் அவ்வளவு நல்லா இல்லையே“ வேண்டுமென்றே சொன்னாள்.



     அனைவரும் அவளை ஆர்வமாகப் பார்க்க, “அந்த வீட்டில் இருப்பது ஒரு தனிக்கட்டை. அப்பா அம்மா சொந்தம் பந்தம் என்று யாரும் கிடையாது. ஒரு சில வருஷத்துக்கு முன்னாடி செஸ் விளையாட்டில் கொடி கட்டிப் பறந்தவராம். இப்ப என்னனாச்சுன்னு தெரியல. இங்க வந்து அஞ்ஞாதவாசம் இருக்கார்“ அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கை, கால் கட்டுடன் வீட்டின் வாசல் முன்னால் வந்து இறங்கினான் சாணக்கியன்.



     நண்பர்கள் அனைவரும் இப்போது இருக்கும் அந்த விருந்தாளி அறையின் உள்ளே இருந்து பார்த்தால் சாணக்கியனின் வீட்டு முகப்பு நன்றாகவே தெரியும். எதேச்சையாகத் திரும்பிய மினி, சாணக்கியனின் அடிபட்ட தோற்றத்தைக் கவனித்து, “தனிக்கட்டைன்னு தேன்மொழி சொன்னாளே. இந்த நேரத்தில் எப்படித்தான் சமாளிக்கப் போறாரோ பாவம்“ என்று பாவம் பார்த்தாள். அவனுக்கு இவள் பாவம் பார்க்கிறாள். அவனால் இவள் படப் போகும் பாட்டிற்கு இவளுக்கு யார் பாவம் பார்க்கப் போகிறார்கள் என்பதை யாரும் அறியார்.   


Leave a comment


Comments


Related Post