இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 13-04-2024

Total Views: 36405

அத்தியாயம் -16

முகத்தை சுருக்கிக் கொண்டு சொல்லியவள் முகம் தற்போது இழகிக் குழைய, 

‘வோட்கா வெளைய காட்டுதே.. இவளை உடனே கூட்டிட்டு போகனும்’ என்று மனதோடு கூறிக் கொண்டு, அவளை தன் தோள் வளைவில் பிடித்துக் கொண்டவன் வினோத்திடம் கண் காட்டிவிட்டுப் புறப்பட்டான்.

வண்டி வரை அமைதியாக தள்ளாடிக் கொண்டு வந்தவளை உள்ளே ஏற்றியவன் மறுபுறம் வந்து அமர்ந்து புறப்பட, 

“மாமா..” என்று போதைக்கே உரிய குழைவோடு அழைத்தாள். 'ஆரம்பிச்சுடுச்சு' என்று அவன் நினைத்துக் கொள்ள, 

“எனக்கு பூஸ்ட் வேணும்” என்றாள்.

“வீட்டுக்கு போய் தரேன் சனா” என்றவன் வண்டியின் வேகத்தை அதிகரிக்க, “எனக்கு இப்பவே வேணும்” என்று அவன் காது சவ்வுகளைப் பதம் பார்த்தாள்.

“சனா..” என்றவன் பேச வருவதற்குள் அவன் முகத்தை சட்டென தன்புறம் திருப்பி, 

“நான் லூசா மாமா?” என்று கேட்டாள். அந்த நொடி வண்டி அவன் கைகளின் கவனம் இழந்து தடுமாற, அதில் அதிர்ந்து வண்டியை ஓரம் கட்டியவன், “சனா ஷட் அப்” என்றபடி சீட் பெல்ட்டை அவளுக்குப் போட்டுவிட்டான்.

“என்னை ஏன் மாமா கட்டிபோட்டுட்டீங்க” என்றபடி அதை அவள் அவிழ்க்க முயற்சிக்க, ‘அய்யோ கடவுளே' என்று ஆனானப்பட்ட யஷ்வந்தே புலம்பி தவித்தான்.

 “பூஸ்ட் வாங்கித்தர மாட்டேன்னு சொல்லிட்டீங்கள்ல?” என்று தன் இஷ்டத்துக்கு கத்திக் கொண்டே வந்தவளை கவனியாது ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தவன், ‘நல்லவேலை வீட்ல யாருமில்ல’ என்று பெருமூச்சு விட்டான்.

தானிறங்கி மறுபுறம் வந்து அவளை அழைக்க, “வரமாட்டேனே” என்று தலையை இடவலமாய் ஆட்டினாள். 

“சனா வா” என்று அவன் அழைக்க, “காலா மாமா உங்களோடது? என்ன வேகமா நடக்குறீங்க? என்னோட குத்தி கால வச்சுகிட்டு நான் ஓடிதான் வரனும்.. காலெல்லாம் வலிக்குது” என்று பிதற்றலாய் கூறினான்.

இது வேலைக்கு ஆகாது என்றபடி அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டவன் உள்ளே செல்ல, அவனிடமிருந்த திமிறியபடி, “நான் வரலை வரலை விடுங்க” என்று கத்தினாள்.

தங்கள் அறைக்குள் நுழைந்ததும் கதவை பூட்ட அவன் திரும்பியபோது அவனிடமிருந்து குதித்து இறங்கியவள், அவன் முகத்தினை இரு கரங்களில் பிடித்துக் கொண்டு, “நான் லூசா மாமா?” என்று கேட்டாள்.

'எதுக்கு இதையே கேட்குறா?’ என்று அவன் நினைக்க,

 “ஆமாதானா?” என்றவள் உண்மையில் அப்போது பைத்தியம் போலதான் அறையை சுற்றி சுற்றி ஓடினாள்.

அவளைப் பிடிக்க முயற்சித்தவன் கைகளுக்குள் சிக்கிய புடவை இழுபட்டு ரவிக்கையின் கைவலையோடு பிய்த்துக் கொண்டு வந்திட, நடப்பதேதும் உணராத நிலையில் சுற்றிக் கொண்டிருந்தாள்.

இதற்குமேல் விட்டாள் ஆகாது என்றவன் அவளை குண்டுகட்டாக தூக்கி கட்டிலில் போட்டு கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல் அமுக்க, மீண்டும் அவனைப் பார்த்து “நான் லூசா மாமா?” என்று கேட்டாள்.

தற்போது அவள் குரலில் இலையோடிய சோகம் அவனுக்கு புரிபட, “என்னாச்சு சனா?” என்று கேட்டான். அந்த ஒற்றைக் கேள்வி அவள் கண்களில் நீர் நிரம்ப போதுமானதாக இருக்க, 

“நான் லூசா மாமா? நான் பைத்தியமா?” என்று கண்ணீரோடு கேட்டாள்.

“யாருடா அப்படி சொன்னது?” என்று அவன் பதட்டமாய் அவள் முகம் தாங்க, “தெர்ல.. நா.. நான் லூசாம்.. பைத்தியமாம்” என்றவள் அவன் சட்டையைப் பற்றிக் கொண்டு கதறத் துவங்கினாள்.

யாரோ அவள் மனம் நோக ஏதோ கூறியிருப்பது அவனுக்கு புரிய, முந்தைய நாள் இரவு அவள் முகத்தில் தெரிந்த சோகம் தற்போது நினைவு வந்தது.

அவள் முகம் தாங்கி துடைக்க துடைக்க கண்ணீர் வடிப்பவள் கண்டு மனம் சுணங்கியவன், “சனா என்னாச்சுடா?” என்க,

 “நான் லூசு இல்லை மாமா. எ..எனக்கு நிறையா தெரியாதுதான்.. ஆ..ஆனா லூசில்ல. எ..என்ன வி..விட்துட்டு போய்டுவீங்களா?” என்று போதையில் குளறலாய் தன் தவிப்பை வெளிப்படுத்தினாள்.

“நான் ஏன்டா உன்னை விட்டுட்டுப் போகப்போறேன்” என்று அவன் வினவ, 

“போவீங்களாமே” என்றவள் அவனை இறுக அணைத்துக் கொண்டு, “விடமாட்டேன்.. போகக்கூடாது” என்று மேலும் விசும்பி அழுதாள்.

நேரம் கடந்த பின்பும் அவளது கதறல் குறையாதுபோக, “ஏ கோழிக்குஞ்சு’’ என்றபடி அவள் முகம் தாங்கினான்.

“நா.. நான் லூசில்ல மாமா” என்று ‘என்னை நம்பாது போய்விடாதே' என்ற பரிதவிப்பான குரலில் அவள் கூற,

 “நீ என் பேபிடா. என்னோட சனா” என்றான்.

அழுகையோடு அவள் அவனை அணைக்க, அவள் முகத்தை பற்றி நிமிர்த்தியவன் அவள் கண்களை நோக்கி, “நீ என் கோழிக்குஞ்சுடி” என்றபடி அவள் இதழை சிறை செய்தான். 

மூளையை செயலிழக்கச் செய்த போதையை தாண்டி மனதின் ரணங்களுக்கு அவன் ஒற்றை இதழ் முத்தம் மருந்திட, அதன் பிடியில் தன்னை தொலைத்தவள் மெல்ல உறக்கத்தின் பிடிக்குள் சென்று துயின்றாள்.

அவளை மெல்ல விடுவித்தவன் அவள் ஈரக் கன்னங்களை துடைத்துவிட, மனதில் சொல்லொன்னா வலி ஒன்று தோன்றியது! 'யாரா இருக்கும்? எதுக்கு தேவையில்லாம இவளை ஹர்ட் பண்ணனும்? கண்டிப்பா இது இன்னிக்கு பார்டில நடக்கலை. இன்னிக்கு பூராம் என்கூட தானே இருந்தா? நிச்சயம் நேத்து தான் ஏதோ நடந்திருக்கு. அதான் நேத்து கூட சோகமா இருந்திருக்கா’ என்று மனதோடு பேசிக் கொண்டிருந்தவன் சிந்தையைக் கலைத்தது அவள் அலைப்பேசியின் ஒலி.

அவளை அணைத்தபடியே எட்டி கரம் நீட்டி அதை எடுத்தவன் அவள் உறக்கம் கலையாது இருக்க, அதன் ஒலியை முதலில் அணைத்துவிட்டுப் பார்த்தான். அழைத்தது அர்ஜுன் என்பது ‘அஜு’ என்ற பெயரும் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் காட்டியது.

முதல் அழைப்பு முடிந்து இரண்டாம் அழைப்பு துவங்கவே அழைப்பை ஏற்றவன் காதில் வைக்க, 

“அஞ்சு.. பாப்பா.. ஆர் யூ ஓகே? என்னடா பண்ற?” என்று படபடப்பாய் கேட்டான். தன் குரலை செறுமிய யஷ்வந்த்,

 “அவ தூங்கிட்டா” என்று கூற,

 ‘அய்யோ இவரா’ என்று எண்ணியவன், “ஓ.. அ..அவ ஓகேவா? எதும் பிரச்சினை இல்லையே?” என்று தயக்கத்தோடு கேட்டான்.

“ஏன்? என்னாச்சு?” என்று யஷ்வந்த் வினவ,

 “இல்ல ஏதோ.. அவ அழற போல ஃபீல் ஆச்சு அதான்” என்று தன் நிலை இவருக்குப் புரியுமோ என்ற தவிப்புடன் கூறினான். இரட்டியர்களுக்கு பொதுவாகவே உடன் பிறந்தோரின் மனநிலைகளை உணரமுடியும் தன்மை இருக்கும் என்பது அறிந்தவனுக்கு, அஞ்சனாவின் கண்ணீரை அவளது இரட்டை சகோதரனால் உணர முடிந்திருப்பது புரிந்தது.

“இல்லை நல்லா தான் இருக்கா. டயர்டா இருந்தா வந்ததும் படுத்துட்டா” என்று யஷ்வந்த் கூற,

 “ஓ..ஓகே..” என்றவன், “வச்சுடுறேன்” என்றபடி அழைப்பைத் துண்டித்தான்.

'அப்ப இவனுக்கும் தெரியாதுதான் போல.. நாளைக்கு முழிக்கட்டும் கேட்போம்’ என்றபடி அவளை நோக்கினான். 'பூஸ்ட் வேணும் மாமா’ என்று தன் முகம் தாங்கி அப்பாவி போல் அவள் கேட்டதை எண்ணி மெலிதாய் சிரித்தவன், அவளை அணைத்துக் கொண்டு படுத்துறங்கினான்.

மறுநாள் காலை வெகு தாமதமாக எழுந்த அஞ்சனா, தலையில் பெரிய பாறையை கட்டிவிட்டது போல் பாரமாக உணர்ந்தாள். “ஆ..” என்று பல்லைக் கடித்தபடி தன் தலையை தாங்கியவள் விழிகளைத் திறக்கவே வெகு பிரயத்தனப்பட்டு திறந்தாள்.

கண்களை சிமிட்டி பார்வையை தெளிவாக்கியவள் தன் கோலம் கண்டு பதறி விழிகள் விரிய போர்வையை போர்த்திக் கொண்டு திரும்ப, அருகே நாற்காலியில் கால் மேல் காலிட்டு அழுத்தமான பார்வையுடன் யஷ்வந்த் அமர்ந்திருந்தான்.

அவனைக் கண்டு மேலும் விழிகள் விரித்தவள் முந்தைய நாள் என்ன நடந்ததென யோசிக்கலானாள். தாகமெடுத்து எதையோ குடித்த பின்பு நடந்தவை கோர்வையற்று கலங்கலாய் நினைவில் ஆடியது.

கண்களை சுருக்கி தலையை பிடித்தபடி அவள் யோசிப்பதைக் கண்டவன் அமைதியாக இருக்க, தான் செய்த அட்டகாசம் ஓரளவு நினைவில் இருந்தது. அவள் முகம் குழப்பம் தீர்ந்து செம்மை பூசுவதைக் கண்டவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு, “சனா..” என்று இறுக்கமாய் அழைத்தான்.

பாவை பட்டென நிமிர, “நேத்து நீ என்ன குடிச்சனு தெரியுமா?” என்று கேட்டவன் கண்டு ‘இல்லை’ என தலையசைத்தாள். 

“அது வோட்கா சனா. டிரிங்க்ஸ்” என்று அவன் கூற, அவள் விழிகள் ஆகாயத்தையும் பூமியையும் அளந்துவிடும் நோக்கில் விரிந்தது.

மது உடலுக்கு கேடு என்பதையும் தாண்டி, மது அருந்துதல் பெரும் குற்றமாகத்தான் அவளுக்கு போதிக்கப்பட்டிருந்தது. ஆகவே அவன் கூறியது அதிர்ந்து போனவள் இதயத்தின் மையத்தில் விண்ணென்று வலிக்க, கண்கள் சடுதியில் கலங்கிவிட்டது. அதை கண்டு குழம்பியவன், “சனா..” என்க, 

“சா..சாரீ மாமா” என்றவள் போர்வையில் தன் முகம் மூடி வெடித்து அழுதாள். 

அதில் பதறி எழுந்தவன், அவளருகே அமர்ந்து, “சனா.. என்னாச்சு?” என்க, 

“சாரி மாமா.. நி..நிஜமா எனக்கு தெரியாது. சாரி சாரி” என்று அழுதாள். 

அவள் தோள்களைப் பற்றியவன், “இதுக்கு எதுக்கு சனா அழற?” என்று வினவ, 

“மா..மாமா ட்..டிரிங்க் பண்றது ரொம்ப தப்பு தானே. நி..நீங்க எப்பவும் ஃபெர்பெக்டா இருக்கனும்னு சொல்வீங்க. நா.. நான் இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று அழுதாள்.

'ஓ காட்.. இவளை சின்ன புள்ளைலயே என்கிட்ட குடுத்துருக்கலாம். நானே உருப்படியா வளர்த்திருப்பேன்' என்று நொந்துக் கொண்டவன், “சனா ஸ்டாப்பிட் சனா” என்க,

 “சாரி மாமா. நிஜமாவே அது தண்ணினு தான் நினைச்சேன். ட்..டிரிங்ஸ் கலரா தானே இருக்கும்?” என்று கூறினாள்.

அவன் அவளை அமைதியாய் நோக்க, “எம்மேல கோவமா மாமா?” என்று கண்ணீரோடு கேட்டாள். 

“சனா.. நீ ஒன்னும் வேணும்னே குடிக்கலை. அன்ட் டிரிங்க் பண்றது ஒன்னும் க்ரைம் கிடையாது. குடிச்சா உடம்புக்கு நல்லதில்லை. அதுவும் ஒரு அளவுக்கு மேல்தான். மேலை நாட்டுல அங்கவுள்ள குளிருக்கு உடலின் தட்பவெட்ப நிலையை பராமரிக்க உருவாக்கப்பட்ட பானம் தான் மது. அதில் மூளையை மழுங்க செய்யும் சில போதை பொருட்களைக் கலந்து நம்ம நாட்டுல விற்க ஆரம்பிச்சு அதுல கிட்னி ப்ராப்ளம், கேன்சர்னு நிறையா நோய் வந்தது. அன்ட் குடிச்சா மூளை தன் செயல்பாட்டை இழந்துடும். குடிச்சுட்டு வண்டி ஓட்டினா ட்ரைவ் பண்ண முடியாது, சோ ஆக்ஸிடென்ட் நடக்கும். உடலுக்கு நல்லதில்லைனு தான் அதை குடிக்கக் கூடாதுனு சொல்றாங்க. மத்தபடி நீ நினைக்குறபோல அது ஒன்னும் பெரிய கொலை குற்றமில்லை. புரியுதா?” என்று நீளமாய் பேசினான்.

கண்ணீரோடு மலங்க மலங்க விழித்தாள், “அ..அது அப்ப தப்பில்லையா மாமா?” என்று கேட்க, 

“நீ நினைக்குறபோல தப்பில்லை” என்றான். கண்ணீரோடு தலை குனிந்தவள் கண்டு அவள் ஆசுவாசம் அடைய சற்று நேரம் கொடுத்தவன், “தலை வலிக்குதா?” என்று கேட்க, அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

முனகலாய், “ரொம்ப வலிக்குது மாமா. தொண்டையும் வலிக்குது” என்று கூற, “ஃபர்ஸ்ட் டைம் குடிக்குற இல்லையா? அதான் செட் ஆகலை. போய் ஃப்ரெஷ் ஆகிட்டுவா சனா” என்று ஆறுதலாய் பேசினான்.

“மாமா.. உங்களை ரொம்ப தொல்லை பண்ணிட்டேன்ல?” என்று அவள் கூற, 

அவள் முகம் நிமிர்த்தியவன், “இல்லைனுலாம் சொல்ல மாட்டேன். ரொம்ப தொல்லை பண்ணிட்ட” என்று கூறினான்.

அதில் அவள் முகத்தை பாவம் போல் வைத்துக் கொள்ள, அவள் கன்னம் கிள்ளியவன், “அதான் நான் நேத்தே அதுக்கு பனிஷ்மென்ட் கொடுத்துட்டேனே” என்று அவள் இதழ் வருடினான். அவன் கூறவருவது உடனே புரிந்துவிட்டால் அவள் அஞ்சனாவாகிட இயலுமா? 

புரியாது விழித்தவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “நேத்து நடந்த எதும் நினைவு இல்லையா சனா?” என ஏக்கம் தூவிய கிசுகிசுப்பான குரலில் வினவ, அவள் அடிவயிற்றில் ஏதோ ஓர் இனம் புரியா உணர்வு!

“மா..மாமா” என்று அவள் திணற, “திணறல் சொல்லுதே.. அப்போ நினைவு இருக்கு” என்று கூறினான். சிவந்த கன்னங்களை மறைக்க முடியாது, அவை சிவக்கும் காரணமும் அறியாது அவள் தவிக்க, அதை கண்டு லேசாய் சிரித்தவன், “பூஸ்ட் தரவா?” என்றான்.

விழி தாழ்த்தியிருந்தவள் பட்டென நிமிர, அதில் அட்டகாசமாய் சிரித்தவன், அவள் கன்னம் பற்றி ஆட்டிவிட்டு, “போய் ஃப்ரஷ் ஆயிட்டு டிரஸ் பண்ணிட்டு வா. பூஸ்ட் தரேன்” என்று கூற, 

“ம்ம்” என்று தலையாட்டியவள் போர்வையோடு எழுந்து குளியல் அறைக்குள் புகுந்துவிட்டு அதை வெளியே வீசினாள்.

அதில் மேலும் சிரித்துக் கொண்டவன், “கோழிக்குஞ்சு” என்று கூறிக் கொள்ள, சில நிமிடங்களில் குளித்து முடித்து உடை மாற்றிவிட்டு வந்தாள்.

தலை வலியில் அவள் கண்கள் சிவந்து கலங்கியிருக்க, அவளை கீழே கூட்டி வந்து சூடாக பூஸ்ட் கொடுத்தவன் காலை உணவையும் மாத்திரைகளையும் சேர்த்து கொடுத்தான். 

உண்டு முடித்து மருந்தின் உபயத்தில் தூங்கி எழுந்த பிறகு தான் அன்று கல்லூரிக்கு செல்லாததே அவள் நினைவில் தோன்றியது.

 “கேடி ஃபெல்லோ.. காலேஜ்கு லீவ் போட்டுட்டல? செம் வருது அஞ்சனா” என்று கராராக கூறியவன், “உன் அண்ணன்கிட்ட உனக்கு டயர்டா இருந்தது அதனால வரமுடியலைனு தான் சொல்லிருக்கேன். அவன்கிட்ட கேட்டு ஒழுங்கா படி” என்று கூறினான்.

இவன் கணவனா? காதலனா? காவலனா? ஆசானா? என்று ஒன்றுமே புரியாத அந்த பேதை அவன் அவளுக்கு அனைத்துமானவன் என்பதை புரிந்துக் கொள்ளும் நாட்கள் வெகு தொலைவிலேயே உள்ளது!

அங்கு பரந்து விரிந்திருக்கும் மெரீனா கடற்கரையில் மதிய வெயிலில் தன்னந்தனியாய் தலையை தாங்கியபடி அமர்ந்து கொண்டிருந்தாள் யாழினி.

“அம்மா கூடவே போயிருக்கலாம்” என்று அவள் புலம்புகையில் இரண்டு இளநீருடன் அவளருகே அமர்ந்த அர்ஷித், “டார்லிங்.. இந்தா இளநீர்” என்றான். 

அவனைத் திரும்பிப் பார்த்தவள் மனதிற்குள் தான் எத்தனை முரணான எண்ணங்கள்!

‘அவன் அமருவதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து எங்கெங்கிருந்தோ பஞ்சுமெத்தை கொண்ட இருக்கைகளை சர்வ சாதாரணமாக வாங்கி வைக்கும் தந்தைக்கு மகனாய் பிறந்தவன், தனது பதிலில்லா காதலுக்காக கொதிக்கும் மணலில் அமர்ந்து கொண்டு தனக்காக வெயிலில் அலைந்து இளநீரும் வாங்கி வருகின்றான்’ என்ற எண்ணம் முழுதாய் முடிவதற்குள்,

'நான் தான் பிடிக்கலைனு சொல்றேனே.. ஏன் என்னை டார்ச்சர் பண்றாரு. இவர் குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் ஆகவே ஆகாதுனு தெரிஞ்சும் எதுக்கு இந்த பாழா போன காதல் இவருக்கு? இந்த மது குட்டிக்காக வாய மூடிகிட்டு இருக்கேன். இல்லை கன்னத்துலயே நாலு போட்டு அனுப்பலாம்' என்ற எண்ணமும் வந்தது.

'பிடிக்கலை என்று வாய் திறந்து கூறினாயா?, கன்னத்தில் நாலு போடுமளவு உரிமை உண்டா? இல்லை தைரியம் தான் உனக்கு உண்டா?’ என்று அவள் ஆழ்மனம் கேட்ட கேள்வியெல்லாம் வழமை போல் நிலுவையில் சென்றது.

“யோசிச்சு முடிச்சாச்சுனா இதை வாங்கி குடி” என்று அவன் கூற, வெகுநேரம் அவன் ஏந்தி நிற்பதில் மனம் நொந்து தன் கைகளில் வாங்கிக் கொண்டாள்.

அவள் குடிக்காதிருப்பதைப் பார்த்து, “ஏதும் கலந்துட்டேன்னு யோசனையா?” என்று அர்ஷித் வினவ, அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“டார்லிங்..” என்று அவன் அழைக்க, “அப்படி கூப்பிடாதீங்க..” என்று கத்தினாள்.

 “நீ மட்டும் என் ஆசைப்படி மாமானு உரிமையோட கூப்பிடுறியா சொல்லு? அப்றம் நான் மட்டும் ஏன் உனக்கு பிடிச்சபடி கூப்பிடனும்?” என்றவனை ஆயாசமாய் பார்த்தவள்,

“நீங்க ஒன்னும் எனக்கு மாமா கிடையாது. நீங்க மதுக்கு மட்டுமே தான் மாமா. புரிஞ்சதா?” என்றாள்.

“அப்ப மதுவ நீ உன் தங்கச்சியா நினைக்கலை போல?” என்று கேட்டபடி அவன் இளநீரை உரிய, 

அதில் பதறிப் போனவள், “நான் அப்படி சொல்லலை” என்றாள்.

 “சிம்பிள்.. மதுக்கு நான் மாமா. மது உனக்கு தங்கை, அதனால உனக்கும் மாமா” என்று அவன் கூற,

 “புல்ஷிட்” என்றுவிட்டு திரும்பினாள்.

“உண்மை கசக்கதான் செய்யுமாம்” என்று நமட்டு சிரிப்போடு அவன் கூற, 

“எதுக்கு இப்ப என்னை இங்க கடத்திட்டு வந்திருக்கீங்க?” என்று கேட்டாள்.

 “வாட்? கடத்திட்டு வந்திருக்கேனா?” என்று குடித்து முடித்த இளநீரை தூர இருக்கும் குப்பை தொட்டிக்குள் வீசியவன், “என்னடி கடத்தல் காரன்னு சொல்ற?” என்க, 

ல்ல“ஆமா.. என் விருப்பில்லாம வலுக்கட்டாயமா இழுத்துட்டு வந்திருக்கீங்க. இது கடத்தல் இல்லாமல் வேற என்ன?” என்றாள்.

“அதுசரி” என்று அவளை மேலும் நெருங்கி அமர்ந்தவன், “லவ் யூ யாழுமா” என்க, 

“த..தள்ளி போங்க” என்று நகர்ந்து அமர்ந்தாள். அவள் மனதில் யஷ்வந்துக்கு தான் அர்ஷித்துடன் இருப்பது தெரிந்திடுமோ என்ற படபடப்பே அதிகமிருந்தது.

“என்ன யாழு.. மாமா கிட்டவந்தா பயப்படுறியே.. எங்க என் லவ்வ அக்செப்ட் பண்ணிடுவியோனு பயமா?” என்று அர்ஷித் கேட்க,

 ‘இவரு இப்படிலாம் பேசுவாரா?’ என்று ஆயாசமாய் பார்த்தாள்.

“பேசுவேன்..” என்றவன் அவளை நோக்கி, “உன்கிட்ட மட்டும் இப்படிலாம் பேசுவேன்” என்று கூற, அந்த நெருக்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாது பட்டென எழுந்தாள். 

அவள் கைபற்றி மீண்டும் அவன் அமரச் செய்ய, தடுமாறி அவன் மீது சாய்ந்தவளைத் தாங்கிக் கொண்டவன், “ஏன் பொய் சொல்ற?” என்று வினவ, கண்கள் லோசாய் கலங்கி படபடக்க, “நா.. நான் என்ன பொய் சொல்றேன்?” என்றாள்.

“என்னை பிடிக்காதுனு சொல்றியே” என்று அவன் கூற, அவனை உதறிவிட்டு தள்ளிச் சென்று நின்றவள், அவனுக்கு காட்ட விரும்பாத தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, 

“காதல்.. அது..வேற.. அது ஒரு ஃபீல். இப்படி வற்புறுத்தி ஒரு பொண்ணை காதலிக்க வைக்குறது தப்புனு உங்களுக்கு தோனலை?” என்க, 

“எஸ் அஃப்கோர்ஸ்.. காதல் ஒரு ஃபீல். அது யாரும் வற்புறுத்தி வராது, வரவும் முடியாது. உனக்கு என்மேல தோன்றின போல தானா தான் வரும்” என்றான்.

“எனக்கு உங்க மேல லவ் இல்லை” என்று அவள் கத்த,

 “ஜஸ்ட் திங்க்.. என்மேல காதல் இல்லாமயா என்கூட இருக்க? கடத்திட்டு வந்தேன்னு சொல்றியே வேற யார் கடத்திருந்தாலும் இப்படி கூட போயிருப்பியா? தப்பிக்க முயற்சி பண்ணிருக்க மாட்ட? நான் இளநீர் வாங்க போய் திரும்பி வர பத்து நிமிஷத்துக்கு மேல ஆச்சு. நீ நினைச்சிருந்தா தப்பிச்சு போயிருக்கலாம் தானே? ஏன் போகலை?” என்று கேட்டான்.

'சரி தானே?’ என்று எண்ணியவள் மனம் மத்தளம் வாசிக்கத் துவங்கி, அவள் மூச்சுக்காற்றை ஏக போகத்திற்கு திணற வைத்தது. 'காதலா? இவர் மீதா? அது நடக்காத ஒன்று! அண்ணாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்' என்று அவள் எண்ண,

 “நீயே யோசி யாழு.. உனக்கு புரியும்” என்றான்.

அவள் அப்படியே சிலை போல நிற்க, “கிளம்பி வீட்டுக்கு போ. உங்கண்ணன் வெயிட் பண்ணிட்டு இருப்பான்” என்று நக்கலாகக் கூறினான். அதில் அவள் அரண்டு நிமிர,

 “உங்கண்ணன நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவு தான். நான் உன்னை தூக்கிய அடுத்த அஞ்சாவது நிமிஷம் அவனுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும். இஃப் அம் ரைட், இன்னும் பத்து நிமிஷத்துல வினோத் இங்க வருவான்” என்று கூறினான்.

அவன் கூறியது போல் அங்கு வந்த வினோத், அர்ஷித்திடம் ஏதும் பேசாது, “வாங்க மேடம்” என்று யாழினியை கூட்டிச் செல்ல, அவர்கள் மகிழுந்து வரை சென்றவள் பீதியுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். ஆடவன் அட்டகாசமான புன்னகையுடன் பறக்கும் முத்தம் ஒன்றை வழங்க, அரண்டடித்துக் கொண்டு வண்டியுள் ஏறினாள்.


Leave a comment


Comments


Related Post