இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 15-04-2024

Total Views: 23094


செந்தூரா 12


“என்ன நடக்குது இங்கே?” என்று அடிக்குரலில் கர்ஜித்தான் செந்தூரன். அவன் கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது, கைமுஷ்டியை இறுக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவாறு, அவன் குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களையும் ஒவ்வொருவராக உறுத்து விழித்தான்.


அவனின் குற்றம் சாட்டும் பார்வையை சந்திக்க முடியாமல் சாரதா, கதிரேசன், ஜானகி, காயத்ரி, அவனின் தாத்தா பாட்டி என அனைவருமே தலை கவிழ்ந்தனர். சுபாஷ் மட்டும் செந்தூரனின் கையை பிடித்து “எதுவாக இருந்தாலும் உள்ளே போய் பேசிக்கலாம் செந்தூரா” என்றார்.


“இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம்னு எனக்கு நல்லாவே தெரியும். அதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் என் குடும்பம் மொத்தமும் எனக்கு பச்சை துரோகம் செய்து உங்களுக்கு உடந்தையாக இருந்து இருக்காங்களே, இது தான் அதிர்ச்சியாக இருக்கு. முதல்ல என் மேல இருந்து கையை எடுங்க. இல்லனா மனுஷனாக இருக்க மாட்டேன்” என்று சீறினான்.


செந்தூரனின் இந்த சீறலில் அங்கே பேசிக்கொண்டிருந்த அனைவரும் ஸ்தம்பித்து போயினர். மாப்பிள்ளை வீட்டார் ஒன்றும் புரியாமல் சுபாஷை என்னவென்று கேட்க, “கொஞ்சம் குடும்ப விஷயம் இதோ உள்ளே போய் பேசிட்டு வர்றோம்” என்றார் மெல்லிய குரலில்.


“எதுக்கு இப்போ பூசி மெழுகிட்டு இருக்கீங்க? கூப்பிடுங்க தாராவை” என்று அவன் அடிக்குரலில் கத்தினான்.


சத்தம் கேட்டு மணப்பெண் கோலத்தில் இருந்த தாரா தன் அறையிலிருந்து ஓடிவந்து மாடியிலிருந்து கீழ்நோக்கி ஹாலைப் பார்த்தாள். “மாமா, இங்கே மாடிக்கு வா உன்கிட்ட நான் பேசணும்” என்றாள்.


அவளின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். கொழுகொழுவென்று பூசினாற் போல இருந்தவள். இப்போது மெலிந்து கொடியிடையாளாக இருந்தாள். முகத்தில் குழந்தைதனம் குறைந்து தெளிவும் நிமிர்வும் இருந்தது. ஒருவேளை அவளுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தியிருப்பார்களோ?


அவளிடம் பேசினால் தான் எந்த முடிவிற்கும் வரமுடியும் என்று இரண்டே எட்டில் தாவி மாடிப்படி ஏறி அவள் முன்னே நின்றான். தீர்க்கமாக அவளை பார்த்தான். ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி நகைகள் எல்லாம் போட்டு மணப்பெண் கோலத்தில் மிகவும் அழகாக இருந்தாள். ஆனால் அவளை ரசிக்கும் மனநிலை தான் அவனுக்கு இல்லை.


அவளும் அவனைத்தான் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் தேகம் மேலும் மெருகேறியிருந்தது. இப்போது மீசை கருகருவென்று வளர்ந்திருக்க அவன் முகத்தில் பளிரென்று தெரிந்தது. வெளிநாட்டு வாசம், அவன் நிறத்தை மேலும் கூட்டியிருந்தது. அவளின் கண்களில் ஒரு மெச்சுதலை கண்டவன் சற்றே ஆசுவாசம் அடைந்தான்.


“இங்கே என்ன நடக்குது தாரா?” என்றான். “உள்ளே வா பேசலாம்” என்றபடி தன் அறைக்குள் சென்றாள்.


பொறுமையை இழுத்துபிடித்தபடி அவள் பின்னால் செந்தூரன் செல்ல, அதற்குள் சாரதா, சுபாஷ், கதிரேசன், ஜானகி, காயத்ரி, அவள் கணவன் சத்யன், தாத்தா பாட்டி மற்றும் கவின் என அனைவருமே மேலே வந்து தாராவின் அறைக்குள் நுழைந்தனர்.


அவர்களை கண்டதும் கோபம் கொந்தளிக்க, “பச்சை துரோகிங்களா, சும்மா இருந்தவனுக்கு ஆறு வயசிலிருந்து தாரா தான் என் பெண்டாட்டினு சொல்லி சொல்லி வளர்த்து என் மனசில ஆசையை ஆலமரமாக வளரவிட்டுட்டு, இப்போ நான் வர்றத்துக்கு முன்னாடியே என் தாராவை மிரட்டி கல்யாணம் செய்து வைக்க பாக்கறீங்களா? 


சுபாஷைக் காட்டி, “இந்த மனுஷன் தான் சொல்றான்னா, உங்களுக்கெல்லாம் எங்கே போச்சு அறிவு? அந்தாள் என்ன சொன்னாலும் தலையாட்டிட்டு போயிடுவீங்களா?” என்று சீறினான்.


“செந்தூரா வாயை அடக்கி பேசு. மாமாவை இப்படியா மரியாதை இல்லாமல் பேசுவ?” என்று அதட்டினார் சாரதா.


கோபமாக சாரதாவை நெருங்கி அவரின் தலைமுடியை கொத்தாக பிடித்து கொண்டு “ஏன் அந்தாள்னு சொன்னதும் ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ? புருஷன் பேச்சை தட்டாத பத்தினி தெய்வமே, அவருக்குதான் என்னை சின்ன வயசிலிருந்தே பிடிக்காதே, அப்போதிருந்தே சொல்லிட்டு தானே இருந்தார், எனக்கும் தாரவுக்கும் கல்யாணம் செய்யறது பிடிக்கலைனு.


அப்பவே புருஷன் பேச்சை தட்டமாட்டேன்டா செந்தூரா, நீ என் பெண்ணை மறந்திடுனு சொல்லி இருக்க வேண்டியது தானே. ஆனால் நீ என்ன செஞ்ச? அவர் அப்படித்தான் சொல்லுவார்டா, நீ தான் என் பெண்ணை கட்டணும், இது தான் என் ஆசை, நிறைவேற்றுவியா? அப்படினு எல்லாம் என்கிட்டே பேசினியே, இப்போ அதுக்கு என்ன பதில் சொல்றே?” என்றான் ஆவேசமாக 


அவனின் முகத்தில் தெரிந்த ரெளத்திரமும், அனல் கங்குகளாக தெரித்த வார்த்தைகளையும் கண்டு அரண்டு போனார் சாரதா. தடுக்க வந்த கதிரேசனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான் செந்தூரன்.


“ஏன்பா? என் மனசு உங்க எல்லாருக்கும் தெரியும் தானே, ஏன் எல்லாருமா சேர்ந்து என் வாழ்க்கையில் விளையாட நினைக்கிறீங்க? நான் எதிர்பாராமல் வந்ததால தான் இதெல்லாம் தெரிந்தது. இல்லைனா நான் வர்றதுக்குள்ள இந்த திருமணத்தையே முடிச்சிட்டு இருப்பீங்க அப்படித்தானே?” என்றான் கண்களில் வலியுடன்


அதைக்கேட்டு அனைவரும் குற்றவாளிப் போல தலையை குனிந்துக் கொள்ள, அவன் சொன்னது உண்மைதான் என்பது பட்டவர்த்தனமாக புரிந்து போனது.


“ஏன் கிழவி? கிணற்று நீரை ஆத்துவெள்ளமா அடிச்சிட்டு போக போகுதுனு டயலாக் சொல்லுவியே? நீயும் தானே இதற்கு உடந்தை?” என்றான் ரஞ்சிதம் பாட்டியை பார்த்து. அவர் என்ன சொல்வது என்று புரியாமல் சுபாஷை பார்க்க, இதற்கெல்லாம் காரணம் அவர்தான் என்பதால் கட்டுக்கடங்காமல் அவர்மேல் கோபம் வந்தது.


சட்டென்று போய் அவரின் சர்ட் காலரை பிடித்தான் செந்தூரன், “யோவ், நான் உனக்கு என்னய்யா துரோகம் செய்தேன்? சின்ன வயசில இருந்து கரிச்சு கொட்டிக்கிட்டே கிடந்த? விவசாயம் செய்யறவனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னியேனு, அந்த துறையிலேயே டெக்னாலஜியை புகுத்தி பிசினஸாக செய்யலாம்னு எல்லாத்தையும் வெற்றிகரமாக முடிச்சிட்டு வந்திருக்கேன். இப்போ என்ன சொல்லப் போறே?


ஐந்து வருஷமாக இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பெண்ணைக் கூட நிமிர்ந்து பார்த்ததில்லை. நீ சொன்ன கண்டிஷனை எல்லாம் நான் சரியாக முடிச்சிட்டு வந்திருக்கேன். நான் வர்றத்துக்குள்ளே எனக்கு தெரியப்படுத்தாமல் இப்படி திருட்டுத்தனமா என் தாராவை மிரட்டி திருமணம் செய்து வைக்க நினைக்கிறேயே, உனக்கே இது நியாயமாக இருக்கா? என்று சுபாஷைப் போட்டு உலுக்கினான் செந்தூரன்.


“யாரும் என்னை மிரட்டலை, என்னோட முழு சம்மதத்தோட தான் இந்த திருமண ஏற்பாடு நடக்குது” என்ற தாராவின் தெளிவான அழுத்தமான குரலில் அப்படியே ஒருகணம் ஸ்தம்பித்து போனான் செந்தூரன்.


தன் காதுகளையே நம்ப முடியாமல் மெல்ல திரும்பி இப்போது தாராவைப் பார்த்தான். இப்போது அவள் கண்கள் அவனை நேராக பார்க்க முடியாமல் தரையை பார்த்தது.


“ஆமாம் மாமா, என்னோட கல்லூரியில் எனக்கு சீனியர் தான் இந்த சித்தார்த், அவரை விரும்பறதாக நான் தான் அப்பாவிடம் சொன்னேன். என் விருப்பத்தின் பேரில் தான் இந்த திருமண ஏற்பாடு நடக்குது” என்றாள்.


செந்தூரனின் இதயத்தை யாரோ ஈட்டியால் குத்தியதை போன்ற வலியை உணர்ந்தான். ஒரு நொடிக்கூட அவள் தன்னை மறந்து வேறு ஒருவனை விரும்பியிருப்பாள் என்று மனதால் அவன் நினைத்ததுக் கூட இல்லை. ஆனால் அதை அவளே தன் வாயால் சொல்லும்போது இத்தனை நாள் கட்டியிருந்த மனக்கோட்டை சுக்கல் சுக்கலாக நொறுங்கியது போல இருந்தது.


சுபாஷின் சட்டைமேல் இருந்த தன்னோட பிடியை மெல்ல தளர்த்தினான்.


தாரா மேலும் பேசினாள், “எனக்கு தெரியும் மாமா, என்னோட விருப்பத்திற்கு நீ எப்பவும் தடையாக இருக்க மாட்டேன்னு, நீயே என் கல்யாணத்தை முன்னே இருந்து நடத்தி வைக்கணும் சரியா?” என்று கேட்டவளை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தான்.


அதற்குள் சித்தார்த்தின் அம்மா வசந்தா அங்கே வந்தார், “என்ன எதாச்சும் பிரச்சனையா? எங்களை வரச்சொல்லிட்டு குடும்பாக நின்னு இங்கே பேசிட்டு இருக்கீங்க?” என்றார்.


“அது ஒண்ணுமில்ல ஆன்டி, இவர் என்னோட மாமா செந்தூரமித்ரன், இப்போதான் கலிபோர்னியாவிலிருந்து வந்தார். அவருக்கு என்னோட திருமண ஏற்பாடு பத்தி தெரியாது, அதனால் கோபமாக இருக்கிறார், அதுதால் எல்லாருமா சேர்ந்து அவரை சமாதானம் செய்துட்டு இருக்கோம்” என்றாள் தாரா நிலைமையை சமாளிக்கும் பொருட்டு.


“சரிசரி, சீக்கிரம் நல்ல நேரம் முடியறதுக்குள்ள கீழே வாங்க, தட்டை மாத்திக்கலாம். ஒரு வாரத்தில் கல்யாணம்னா சும்மாவா? தலைக்குமேல வேலை கிடக்கு” என்றவாறு வசந்தா வெளியே சென்றார்.


அசையாமல் இறுகி போய் நின்றிருந்த செந்தூரமித்ரனை உலுக்கினான் கவின். “எதுவா இருந்தாலும் வெளியே போய் பேசிக்கலாம். நல்லா யோசித்து ஒரு முடிவுக்கு வரலாம் மித்ரா. இப்போதைக்கு பிரச்சனை வேண்டாம், வா போகலாம்” என்றான்.


“இனி நான் யோசித்து முடிவெடுக்க என்னடா இருக்கு? அதுதான் எல்லாருமா சேர்ந்து என்னை முட்டாளாக்கிட்டாங்களே” என்றான் செந்தூரமித்ரன் இறுகிய குரலில்.


“சரி வா போகலாம்” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றான் கவின்.


அனைவரும் போகும் அவனை தடுக்கும் வழியறியாமல் கனத்த மனதுடன் நின்றிருந்தனர்.


கவினுக்கே இந்த திருமண ஏற்பாட்டை பார்த்து அதிர்ச்சி என்றால், செந்தூரனுக்கு எப்படி இருக்கும் என்று அவனால் உணர முடிந்தது. இப்போதைக்கு நண்பனை தனியாக விடக்கூடாது என்று நினைத்தவன், நண்பனை டாக்சியில் அழைத்துக் கொண்டு உடனடியாக ஒரு ஓட்டலில் அறையை புக் செய்தான்.


அறைக்குள் சென்றதும் செந்தூரன் ஹாட் ட்ரிங்க்ஸ் வேண்டும் என்று கேட்கவும் அதிர்ந்து போனான் கவின். “என்னடா புது பழக்கம்?” என்றான்

“இனி யாருக்காக என்னை நல்லவனாக இருக்க சொல்றே?” என்றான் செந்தூரன் கசந்த குரலில். அந்த வார்த்தைகளில் இருந்த வலி புரிய கவின் அவன் கேட்டவற்றை ஆர்டர் செய்தான்.


கண்ணாடி டம்ளரில் இருந்த அந்த சிவப்பு நிற திரவத்தை சிவந்த கண்களுடன் பார்த்தான். மனதில் இருந்த வலியை மறக்க அது மருந்தாகக் கூடும் என்று தவறாக நினைத்து அதை முதன் முதலாக அருந்த தொடங்கினான்.


மது எப்போதும் பிரச்சனைக்கு தீர்வாகாது, அது எப்போதும் பிரச்சனைகளின் ஆரம்பம் என்பதை அவன் உணரவில்லை. அந்த திரவம் உள்ளே செல்ல செல்ல அவனுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்தெழுந்தது.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post