இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலாகி! காற்றாகி! அத்தியாயம் 1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK029 Published on 15-04-2024

Total Views: 21332

அத்தியாயம் ஒன்று 

விஸ்மயா வணிக வளாகம்.
மூன்றாவது தளத்தில் சிரிப்பலைகளும் சந்தோஷ குரல்களும் நாலாப் பக்கமும் எதிரொலித்தது. சிறுவர் சிறுமிகளின் ஆனந்த சிரிப்புகளுக்கு ஊடே ஆங்காங்கே வசீகரிக்கும் காந்தக் குரலும் அவர்களுக்கு ஈடுக் கொடுத்து சிரிப்போடு பங்கு கொள்ளும் காட்சியும் அரங்கேறிக் கொண்டிருந்தது.

விஸ்மயா வணிக வளாகத்தில் மூன்றாவது தளம் முழுவதும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

அந்த வணிக வளாகத்தில் பல கடைகளும், பிரத்யேக உணவு தளங்களும், சினிமா, ஸ்பா என்று எண்ணற்ற பொழுதுப்போக்கு அம்சங்களும் நிறைந்து இருக்கிறது. மேலும் வளாகத்தின் மற்றொரு அம்சமாக, நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஹோட்டல் இயங்கி வருகிறது 

இவை அத்தனையும் நிர்வகிக்கும் பொறுப்பு ஒருவனுடைய கையில். அவன் நிரஞ்சன்.

நிரஞ்சன் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று விஸ்மயா சாம்ராஜ்ய இளவரசனாக இருந்தாலும், ஒவ்வொரு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் குழந்தைகள் விளையாட்டுப் பகுதிக்கு வந்து ஒரு மணிநேரம் அவர்களுடன் விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். 

"தீபா" என்றக் குரலின் அழைப்பிற்கினங்க, "சார்" என்று முன்னே வந்து நின்ற பெண்ணிடம், "ஒன்பது மணி வரைக்கும் நீங்க இருக்க வேண்டாம்; நீங்க எப்பவும் போல ஆறரை மணிக்கு கிளம்பிடுங்க, எதுவாக இருந்தாலும் மாதவனும் செல்வியும் பார்த்துப்பாங்க" என்று கூறியபடியே விளையாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் செயற்கை மண்ணிலிருந்து எழுந்து வந்தான் நிரஞ்சன்.

அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை வெளித் தடுப்பின் மேல் லேசாக சாய்ந்து நின்றபடி புன்சிரிப்புடன் கவனித்தான். அங்கிருக்கும் சில குழந்தைகள் உறுப்பினர்கள் அட்டை வாங்கி வாடிக்கையாக வருபவர்கள். அதனால் அந்த குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அவன் வேற்று மனிதனாக இல்லாமல் நன்றாகவே பழக்கமாகி போனவர்கள். சில பெற்றோர்கள் அவனை நம்பி குழந்தைகளை அவன் பொறுப்பில் விட்டுச் செல்வதும் அவ்வப்போது நடப்பதுண்டு. வேறு சில குழந்தைகளும் புது வரவாக அவர்களின் பெற்றொரோடு வந்து பொழுதைக் கழித்து கொண்டிருந்தார்கள். 

இன்னும் தன்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த தீபாவை திரும்பிப் பார்த்தான். பிறகு, குழந்தைகளிடம் டாடா காட்டிவிட்டு விலகி நடந்தான். 

"என்ன.. மணி அஞ்சு தானே ஆகப் போகுது. நான் உங்களை எப்பவும் கிளம்பும் நேரத்துக்கு தான் போகச் சொன்னேன். போங்க வேலையைப் பாருங்க" என்றான்.

"அதில்லை சார். எனக்கு நாளைக்கு லீவு வேணும். ஊரிலிருந்து என் கணவர் வந்திருக்கார். எனக்கும் டாக்டர் செக்கப் இருக்கு. அதான் லீவு.." என்று தயக்கமாக கேட்டாள் தீபா.

"ஓ.. நாளைக்கு திங்கட்கிழமை தானே.. சரி எடுத்துக்கோங்க.." என்றவன் மீண்டும் அவளிடம், "தீபா.. டெலிவரி தேதி என்னிக்கு,? இன்னும் எத்தனை மாசம் வேலைக்கு உங்களால் வர முடியும் என்று யோசித்துவிட்டு மாதவனிடம் பேசுங்க. எவ்வளவு நான் நீங்க விடுமுறையில் இருப்பீங்க என்பதை எல்லாம் மாதவனிடம் தெளிவா பேசிக் கொள்ளுங்க. அப்போது தான் உங்களுக்கு பதில் வேற ஆள் பற்றி முடிவு எடுக்க முடியும்" என்று அவளின் பதிலை எதிர்பாராமல் விளையாட்டுப் பகுதியை விட்டு வெளியே வந்தான். ஒவ்வொரு தளமாக சென்று தனது உதவியாளரோடு சுற்றிக் கவனித்தான்.

ஒரு மணிநேரம் கழித்து வணிக வளாகத்தின் தனிப்பட்ட பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஹோட்டலுக்குள் நுழைந்தான். பொது மக்கள் உபயோகிக்கும் வழியில் செல்லாது அவனுக்காகவும் குறிப்பிட்ட சில நபர்களுக்காகவும் உள்ள வழியில் நடந்தான்.

ஹோட்டல் வரவேற்பறைக்குள் வந்து, மேல் தளத்தின் உள்ள அவனது பிரத்யேக தொகுப்பறைக்குள்(suite) நுழைந்தான்.

பின்னே வந்த தனது உதவியாளர் சுந்தர், "சார், அடுத்த வாரம் வேலைகள் பட்டியல் இது. உங்களோட அட்டவணையில் உள்ள அனைத்து விஷயங்களும் இருக்கு. ஆனால் இதில் இல்லாம திடீர்னு உங்களை சந்திக்க வேணும்னு கேட்டு சம்பூர்ணா நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்காங்க.." 

சுந்தர் பேசி முடிக்கும் முன்னரே, "இதுக்கு பதில் சொல்ல நான் வரணும்னா, நீங்க, காரியதரிசி டீம் எதுக்கு?" என்று புருவம் உயர்த்தி கேட்டான் நிரஞ்சன்.

"இல்ல சார் நான் அவங்களை ஈவெண்ட் பிளானிங் டிபார்ட்மெண்ட்க் கால் கனெக்ட் பண்றேன்னு சொன்னேன். ஆனா உங்களை தான் சந்திக்க வேண்டும் என்று சொன்னாங்க. அப்போதும் நான் நாளைக்கு முடியாதுன்னு மறுத்தும், அவங்க விடாப்பிடியாக உங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி, நீங்க அப்படியும் ஒத்துக்க முடியாதுன்னு சொன்னா, அவங்க பெயரை சொல்ல சொன்னாங்க" என்று சுந்தர் ஒரே மூச்சாக கூறவும், 

"அப்படியென்ன பெயர் அது? ம்ம்" என்று நிரஞ்சன் கேட்க, 

"கமலி ரங்கநாத் c/o நிரஞ்சன் விஷ்வேஷ்வர்" என்று சுந்தர் கூறியதும் தான் தாமதம், அப்போது தான் அருகிலிருந்த தண்ணீரை பருகியவன், சுந்தர் கூறியதைக் காதில் வாங்கியதும், தொண்டை அடைக்க, விழுங்கும் முன், தண்ணீரைத் துப்பிவிட்டான் நிரஞ்சன்.

பிறகு சில மணித்துளிகள் கழித்து, "நாளைக்கு சில அப்பையின்ட்மெண்ட அட்ஜஸ்ட் செஞ்சு, மிஸ் கமலி ரங்கநாத்-க்கு காலை பதினோரு மணிக்கு மீட்டிங் டைம் சொல்லிடுங்க சுந்தர்." என்று முடித்து வெளியே அனுப்பினான்.

வெளியே வந்த சுந்தருக்கு, யாரிந்த கமலி என்கிற கேள்வியே மனதினில் குடைந்தது. 

கமலி ரங்கநாத் c/o நிரஞ்சன் விஷ்வேஷ்வர் என்று தொலைப்பேசியில் கேட்கும் போதே அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

அப்பாயின்ட்மெண்ட் அனைத்தும் காரியதரிசி குழு கவனிக்க, ஆனால் இந்த கமலி நேரடியாக சுந்தருக்கே அழைத்திருந்தாள்.

'ஒருவேளை வருங்கால லேடி பாஸாக இருக்கக் கூடுமோ? C/o நிரஞ்சன் விஸ்வேஷ்வர் என்று வேறு கூறினார்களே! ஆ.. மண்டையே வெடிச்சிடும் போலிருக்கே..' என்று சுந்தரின் மனம் அல்லாடியது.

இவனது குழப்பம் எதுவும் அறியாமல் ஒன்பது மணி வரை அலுவலகத்தில் ஒரு காணொளி சந்திப்பில் இருந்தான் நிரஞ்சன். கூடவே காரியதரிசி அகல்யா குறிப்பெடுக்க, அப்போதும் சுந்தர் ஒரு நிலையில் இல்லை.

அன்றைய அலுவல்களை முடித்து நிரஞ்சன் வீடு வந்து சேர்ந்தான். அவனின் வரவுக்காக காத்திருந்தார்கள் அவனை பெற்றவர்கள்.

"வா நிரஞ்சா... சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?" என்று கேட்ட அன்னையை பார்த்து மெலிதாக சிரித்தான்.

"வேணாம் ம்மா... நான் ஓட்டல்லையே சாப்டுட்டு தான் வரேன். நீங்க சாப்பிட்டாச்சா?" என்று விசாரித்தான்.

இருவரும் ஒரு சேர, ஆச்சு என்று பதிலளிக்கவும், நிரஞ்சன், தந்தையின் அருகில் சென்று அமர்ந்தான்.

"நிரஞ்சா, மிஸ்டர் ரங்கநாத் கூட எப்ப மீட்டிங் செட் பண்ணியிருக்க? ரிசார்ட் கட்டும் இடத்தோட உருவரைபடம் காட்டி அரசு ஒப்பந்தம் வாங்கினதைப் பற்றி சொல்லியாச்சா?" என்று வினவினார் விஸ்வேஷ்வர்.

"இன்னும் இல்லப்பா... மீட்டிங் செட் பண்ணேன் ஆனா அவர் வேற ஏதோ வேலையா இருக்கிறதா சொல்லி, ரெண்டு நாள் தள்ளி போட்டிருகாரு. எல்லாமே ஓரளவுக்கு நல்லா தான் போயிட்டு இருக்கு. ரெண்டு நாளில் மீட்டிங்கில் பேசி அவரோட ஒப்புதல், கையெழுத்து வந்ததும், அடுத்த கட்ட வேலையான முதலீடு பற்றி ஆயத்தமாகிடலாம்." என்று அலுவலக வேலையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கே வந்த தந்தை வழி பாட்டியான லீலாவதி, "மாயா நிஜந்தன் வந்தாச்சா?" என்று கேட்டார்.

"இல்ல அத்தை." என்றார் மாயா.

"நிரஞ்சன் கண்ணா.... நீயும் இப்ப தான் வந்தியா?"

"நான் வந்து கொஞ்ச நேரம் ஆச்சு பாட்டி."

"வர ஞாயிற்றுக்கிழமை நீயும் நானும் ஒரு இடத்துக்குப் போகனும். உனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகனும்... அதுக்கு தான் வேண்டுதல் செய்யப் போறோம்" என்றார் ஆவலாக.

வெறுமனே தலையாட்டலை சம்மதமாக தந்துவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான் நிரஞ்சன்.

அந்த முகம் தெரியாத பெண் யாரோ எவரோ என்று எண்ணினான். ஆனால் திருமணத்தைப் பற்றிய அவனது கோட்பாடு வேறு விதமாக இருக்க, அவனது பாட்டி அவனுக்கான வாழ்க்கைத்துணை பற்றி ஏற்கனவே சிந்தித்து வைத்துவிட்டார். இரவு நேரத்தில், சோர்வாக இருக்கும் இந்த நேரத்தில், எதற்கு வீண் வாக்குவாதம் என்று பாட்டியிடம் தலையாட்டிவிட்டு அவரின் பேச்சை ஒதுக்கி வைத்துவிட்டு உறக்கத்தை தழுவினான்.

அடுத்த நாள் வழக்கம் போல வணிக வளாகத்திற்கு வந்து சேர்ந்தான். அன்றாட வேலையாக ஒவ்வொரு இடமாக சுற்றி வந்தவன், மாலில் உள்ள அலுவலகத்திற்கு செல்லத் திரும்பினான். கட்டிடத்தின் உச்சியில், அவனது அலுவலகம் தனியாக வெளி ஆட்கள் யாரும் சட்டென கண்டுபிடிக்க முடியாத வகையில், அறியாத இடத்தில் அமைந்து இருந்தது. அவனது அலுவலகத்திலிருந்து அடுத்த கட்டிடமாக நட்சத்திர விடுதிக்கு செல்லவும் தனியே வழி இருந்தது. ஆதலால் மக்கள் பயன்படுத்தும் வழியை அவன் உபயோகிக்காமல் இரு வளாகத்தையும் சுற்றி வந்து நிர்வகிக்க ஏதுவாக இருக்கும்.

அன்றும் அலுவலகம் செல்ல, மின்தூக்கி பொத்தானை அழித்துவிட்டு காத்திருந்தவன் தோளில் அப்போது சிறு அடி ஒன்று விழாவும் திடுக்கிட்டுத் திரும்பினான் நிரஞ்சன்.

அங்கே அவனுக்குப் பின்னாடி அவனது தம்பி நிஜந்தன் புன்சிரிப்போடு நின்றிருந்தான்.

"ஹாய் ப்ரோ" என்று கூறவும்,

"நேத்து நைட்டு எப்படா வீட்டுக்கு வந்த?"

"ரொம்ப லேட்டா ஆச்சா.... அதனாலே நம்ம ஹோட்டல்ல தங்கிட்டேன்... இப்ப கூட ஒரு வேலை இருக்கு... அதான் சீக்கிரம் எந்திரிச்சுட்டேன்."

"புராஜக்ட் புரோபோசல் என்னாச்சு?"

"ப்ரோ... எப்ப பாரு வேலையா?  கொஞ்சம் வாழ்க்கையை வாழ கத்துக்கோ மேன்!" என்று தம்பி கூறவும்,

"நீ மாறவே மாட்டியா? எனக்கு நாளைக்கு காலையில புராஜக்ட் புரோபோசல் என் டேபிளில் ரெடியா இருக்கணும்" என்று விரல் நீட்டி எச்சரித்தான் தமையன்.

"ஊப்ஸ்... அண்ணா..."

"யாரு அண்ணா? இங்க உனக்கு நான் பாஸ். நீ ஒழுங்கா புரோபோசலை தரலைன்னா உனக்கு பதிலா உன் பதவியில் இன்னொருவர் வேலை பார்ப்பாங்க... எப்படி வசதி?"

"ஓகே பாஸ்... நான் தந்திடறேன்... சரி கேட்கிறேன்னு கோவப்படாதே... இந்த வயசுல, பொண்ணுங்க கூட டைம்மை என்ஜாய் பண்றதை விட்டுட்டு எப்ப பாரு குழந்தையோட குழந்தையா விளையாடிட்டு இருக்கியே!! உனக்கு உண்மையாவே வயசு இருபத்தி ஒன்பது தானா?" என்று வினவினான்.

அவ்வாறு கேட்ட தம்பியை முறைத்தான் நிரஞ்சன். "குழந்தைகளுடன் விளையாடி, அவர்களை போல பொம்மைகளை வைத்து விளையாடும் போது என்னால பல விஷயங்களை எதிர்கொள்ள முடிவதாக தோணுது.  நீயும் வேணும்னா வந்து விளையாடிப் பாரு. உனக்கே புரியும்.

மன அழுத்த நிவாரணம், சமூக தொடர்பு, படைப்பாற்றல் மற்றும் கற்பனை மற்றும் விளையாட்டுத்தனமான உணர்வு ஆகியவை உண்டானால், இந்த விஸ்மயாவை இன்னும் திறம்பட செயலாற்றி, பல புது விதமான உத்திகளை கற்பனைகளை சாத்தியப் படுத்த முடியும்.

"ஆள விடுப்பா..." என்று கும்பிட்டுப் போனான் நிஜந்தன். பேசிக் கொண்டே நிரஞ்சனின் அலுவலகம் வந்தார்கள் இருவரும். நிரஞ்சன் வந்ததும் உடனே தன் உதவியாளர் மற்றும் காரியதரிசி குழுவோடு மீட்டிங் சென்றுவிட, நிஜந்தன் தன் அண்ணனின் பிசினஸ் கார்டு ஒன்றை எடுத்துக் கொண்டுச் சென்றான்.

"ஹாய்" என்று ஒரு பெண் குரல் ஹோட்டலில் உள்ள உணவு அறையில் குதூகலமாக ஒலித்தது. அதற்கு பதில் கூறும் விதமாக "ஹாய்" என்று ஆண் குரலும் உரைத்தது.

"எதுக்கு என்னை இங்க வர சொன்னீங்க...?" என்று அவள் கேட்கவும்,

"வேற எதுக்கு? பழகிப் பார்த்து ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கதான்" என்று விஷமமான புன்னகையுடன் அவன் கூற,

"யூ நாட்டி... போன வாரம் பார்த்து பேசி, நேத்து லவ் சொல்லிட்டு இன்னிக்கு பழகப் போறோமா? பழக வேற எங்கேயாவது போகலாமே? பக்கத்திலேயே மால் இருக்கே... அங்க போகலாம்.."

"பப்ளிக் பிளேஸ் கூட்டமா இருக்கும்... நமக்கு பிரைவசி கிடைக்காது. நாம தான் லவ் பண்றோமே. அப்புறம் என்கூட இருக்க என்ன பயம்?" என்றான் அவன்.

"ச்சே ச்சே... பயம் இல்ல. யாராவது பார்த்துட்டா பிரச்சனை ஆகிடும்"

"டார்லிங். நீயும் நானும் ஒருநாள் கல்யாணம் பண்ண போறோம்.. இப்ப லவ் பண்ண போறோம் அவ்வளவுதான் ரிலாக்ஸ்... இங்க உனக்கு பயமா இருந்தா ஓகே விடு... எனக்கு இங்க ரூம் கூட இருக்கு. நாம அங்க போயிடலாம்" என்று அவள் எதுவும் கூறும் முன், அவள் கையைப் பற்றி தோளோடு அணைத்துக் கொண்டு கூட்டிச் சென்றான்.

ரூம் கார்டை வாங்கிக் கொண்டு இருவரும் குறிப்பிட்ட அறைக்குச் செல்ல, அவளுக்கு உள்ளே கிலி பிடித்தது. 'உடும்பு பிடியாக இருக்கிறதே' என்று மனதினுள் புலம்பினாள் அவள்.

அறைக்குச் சென்றதும், அவளை கட்டிப்பிடிக்க வந்தவனை அவன் நெஞ்சின் மீது கையை அழுத்தி வைத்து தடுத்து நிறுத்தினாள்.

"டார்லிங்?" என்று கொஞ்சலாக மொழிந்தவனை, மந்தகாசப் புன்னகையோடு எதிர்கொண்டாள்.

"பே... பேபி" என்று நாக்கு குழரலை முயன்று வரவழைத்த தைரியத்தோடு நிறுத்தினாள். உள்ளுக்குள், 'இவனெல்லாம் பேபியா?!' என்று பரிகாசம் செய்தாள்.

"நான் பாத்ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன். வெயிட் பண்ணு பேபி" என்று இதழை வளைத்து சிரித்தாள்.

அவசரமாக பாத்ரூம் சென்றவள், "சீக்கிரம் வாங்க... ரூம் நம்பர் 305!" என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அங்கேயே காத்திருந்தாள்.

ஐந்து நிமிடம் அறைக்குள் காத்திருந்தான். அதற்கு பிறகு பாத்ரூம் கதவை தட்டி, தான் பொறுமை இழந்ததைக் காட்டினான்.

"ஒரு நிமிஷம்" என்று குரல் கொடுத்தாள்.

"நான் ரொம்ப ஆவலா இருக்கேன்... வெயிட்டிங் டு ரூல் யூ" என்று அவன் ஒரு மாதிரிபட்டக் குரலில் பேசினான் அவன்.

இதற்கு மேல் அறைக்குள் செல்லவில்லை என்றால், அவன் உள்ளே வந்துவிடுவான் என்று எண்ணிய அவள் பாத்ரூம் விட்டு வெளியே வந்தாள்.

நிரஞ்சன் மால் அலுவலகத்தை விட்டு ஹோட்டல் அலுவலகம் வர வேண்டி, பிரத்தியேக வழியில் நடந்துச் சென்றான். ஹோட்டல் ரிசப்ஷன் பகுதியில் இருந்து கிட்சென் பகுதிக்கு செல்ல எத்தனித்தவனை, "அண்ணா" என்றக் குரல் தடுத்து நிறுத்தியது.

குரல் வந்த திசையில் திரும்பியவனை எதிர்கொண்டவள் லாவண்யா. நிரஞ்சனின் தங்கை.

"லாவன்.. நீ காலேஜ் போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க? பங்க் பண்ணிட்டியா?" என்று மிரட்டல் தொனிக்க வினவினான்.

"அச்சோ அண்ணா.... அதெல்லாம் அப்புறமா சொல்றேன்... முதல்ல இவங்க எந்த ரூம்ல இருக்காங்கன்னு ரிசப்ஷன்ல கேட்டு சொல்லு? அவசரம்!!" என்றாள் லாவண்யா ஒரு பெண்ணின் போட்டோவை காட்டி!.

லாவண்யா கூடவே ஒரு இளம்பெண்ணும், ஆடவனும் நின்றிருந்தார்கள். அந்த பெண்ணின் முகத்தில் பதட்டமும் பயமும் குடிக் கொண்டிருந்தது. 

"கஸ்டமர்கள் விவரம் உனக்கு எதுக்கு லாவன்? அது தப்பும் கூட!!" என்றான் நிரஞ்சன்.

"அண்ணா பிளீஸ் அண்ணா.... இதில் இரண்டு பொண்ணுங்க வாழ்க்கை அடங்கியிருக்கு... ரூல்ஸ் பேசாம நம்பர் சொல்லு" என்றாள் பதட்டத்துடன்.

"லாவண்யா புரிஞ்சுக்க ட்ரை பண்ணு"

அப்போது அவளின் ஃபோன் ஒலியெழுப்ப, அதை படித்ததும், "அண்ணா மாஸ்டர் கீ தர போறியா இல்லையா நீ?" என்றவள், தன்னருகே இருந்த பெண்ணிடமும், "பயப்படாதே... ரூம் நம்பர் தெரிஞ்சுடுச்சு" என்றாள்.

அதற்கு மேல் என்ன ஏது என்று கேட்காமல், நேரே 305வது ரூம் சென்றார்கள்.

அறையில் இருந்த பெண், பாத்ரூம் விட்டு வெளியே வந்து நின்றதும், அவளோடு இருந்த இளைஞன் அவளை தாவி பிடிக்க, அவளோ பிடிக்கொடுக்காமல் நழுவினாள். அப்படி நழுவி நகர்ந்தவள் தடுமாறி படுக்கையில் குப்புற விழுந்தாள்.

"ஆடு புலி ஆட்டம் நல்லா தான் இருக்கு" என்றவனும் படுக்கையில் விழ, அவள் உருண்டு எழுந்தாள்.

"எதுக்கு அவசரம்? நான் கொஞ்ச பேசணும்? என்றாள்.

"பேச்சுக்கு என்ன வேலை இருக்கு?" என்றவன் அவனது மேல் சட்டையை கழட்டி எறிந்தான். அப்போது அவனை சோதிக்கும் விதமாகவும், அவளை நிம்மதியுற செய்யும் விதமாகவும், அறையின் கதவு தட்டப்பட்டது.

வெளியே பொறுத்திருந்து பார்த்தவர்கள், கதவு திறக்கப்படவில்லை என்றதும், நிரஞ்சன் கையிலிருந்த மாஸ்டர் கீ வைத்து கதவை திறந்தாள் லாவண்யா.

கதவை திறந்ததும், எழுந்து பாத்ரூம் நோக்கி ஓடினாள் அப்பெண். வந்தவர்கள் ரூம் சர்வீஸ் என்று எண்ணியவனுக்கு பெருத்த இடி.! ஏனென்றால் லாவண்யா உடன் வந்த பெண் அவனுக்கு நிச்சயித்த பெண் ஜனனி.

"ஜனனி... நீ இங்க என்ன பண்ற?" 

"அவளோட நிச்சயம் பண்ணிட்டு இங்க வேற ஒரு பொண்ணு கூட கூத்து அடிச்சிட்டு இருக்க? உனக்கு வெக்கமாயில்லையா?" என்று ஓங்கி அறைந்தாள் லாவண்யா.


Leave a comment


Comments


Related Post