இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 16-04-2024

Total Views: 24871

செந்தூரா 13


நேரம் காலம் இன்றி செந்தூரன் அந்த அறையிலேயே வயிறு முட்ட குடிப்பதும் போதையில் அப்படியே உறங்குவதுமாக இருந்தான். அவனின் போன் அடிக்கடி அலறிக் கொண்டே இருந்தது. செந்தூரனின் குடும்பத்தார் தான் மாற்றி மாற்றி அழைக்கிறார்கள் என்று தெரிந்தும் கவினும் அதை ஏற்கவில்லை. அவனுக்குமே அவர்கள் மேல் கோபம் இருந்தது.


ஆனால் அந்த பெண் தாரா தான் அந்த சித்தார்த்தை விரும்புவதாக சொல்கிறாளே? நண்பன் தான் அளவுக்கு அதிகமாக அவளை நம்பி விட்டானோ? என்று யோசனையுடனே இருந்தான்.


அப்படியே நான்கு நாட்கள் கடந்திருந்தது. செந்தூரனின் அப்பா அவர்கள் தங்கியிருந்த ஓட்டலை கண்டுபிடித்து நேராகவே வந்து விட்டிருந்தார். மகனின் நிலையை பார்த்து கலங்கி போய் நின்றார். கவினிடம் காரின் சாவியை கொடுத்து, “இது செந்தூரனுக்காக வாங்கி வைத்தது, அவனை எப்படியாவது சமாதானம் செய்து வீட்டிற்கு கூட்டிட்டு வாப்பா. நாளை மறுநாள் கல்யாணம். அவன் வரலைனா நல்லா இருக்காது.


அன்னிக்கு நடந்த பிரச்சனையை மாப்பிள்ளை வீட்டார் பார்த்து விட்டதால் இவனைப் பற்றியே விசாரிச்சுட்டு இருக்காங்க. இவன் கல்யாணத்தில் கலந்துக்கிட்டால் நல்லா இருக்கும்” என்றார் கதிரேசன்.


“என்னப்பா சொல்றீங்க? இத்தனை நடந்தும் அவனை கல்யாணத்துக்கு வேற வரச்சொல்றீங்க? விட்டால் எங்கிருந்தாலும் வாழ்கனு அவனை பாட்டு பாட சொல்வீங்க போல இருக்கே” என்றான் கவின் வெடுக்கென்று


“தப்பு தான் என்னப்பா செய்யறது? கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு இனி அதைப்பற்றி பேசி பயனில்லை. இவன் இங்கே வராமல் இருந்து இருந்தால் தெரியாது. இப்போது ஒரே ஊரில் இருந்துக் கொண்டு கல்யாணத்திற்கு வரலைனா நல்லா இருக்காது. அவனை எப்படியாவது சமாதானம் செய்து கல்யாணத்திற்கு கூட்டிட்டு வாப்பா” என்றார் கதிரேசன்.


“என்னால முடியாது, அவன் கல்யாணத்துக்கெல்லாம் வரமாட்டான்” என்றான் கவின் திட்டவட்டமாக.


“நான் வர்றேன்” என்றான் செந்தூரன். தூங்கி கொண்டிருந்தவன் எப்போது எழுந்து அமர்ந்தான் என்று கவின் அவனை கேள்வியாக பார்த்தான். செந்தூரன் சுவற்றின் மேல் சாய்ந்து தன் இருகால்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு அமர்ந்திருந்த விதத்தில் அவன் எல்லாவற்றையும் கேட்டிருக்கிறான் என்று புரிந்தது.


“என்ன சொல்றேன்னு புரிஞ்சு தான் சொல்றியா மித்ரா?” என்றான் கவின் கண்டிக்கும் குரலில்.


ஆமாம் என்பது போல தலையாட்டியவன், “தாராவை யாரும் கட்டாயம் செய்யவில்லை. அவளின் விருப்பத்தின் பேரில் தானே இந்த திருமணம் நடக்கிறது? அப்போ அவளோட விருப்பம் தான் என் விருப்பமும். நான் குளிச்சிட்டு வந்து கல்யாண வேலைகளை பார்க்க வருகிறேன் அப்பா” என்றான் கதிரேசனை பார்த்து.


இத்தனை எளிதாக மகன் மனம் மாறுவான் என்று சற்றும் எதிர்பார்க்காத கதிரேசன் ஆச்சரியத்தின் உச்சிக்கே போனார். “ரொம்ப ரொம்ப சந்தோஷம் செந்தூரா. எனக்கு தெரியும் நீ தாராவின் விருப்பத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்னு. இந்த கல்யாணம் முடியட்டும் உனக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து உடனே திருமணம் செய்து வைக்கிறேன்” என்றவரை பார்த்து கண்களை எட்டாத சிரிப்பொன்றை உதிர்த்தான்.


“நீங்க போங்க, நான் ரெடியாயிட்டு வருகிறேன்” என்றான் செந்தூரன். அவர் சென்ற பின்பும் கவின் நண்பனை முறைத்துக் கொண்டே நின்றிருந்தான். அதை கண்டுக் கொள்ளாதவன் போல குளிக்கச் சென்றான் செந்தூரமித்ரன்.


அவன் குளித்து வந்ததும் கவின் குளியலறைக்குள் சென்றான். வெளியே வரும்போது செந்தூரமித்ரன் யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான், அவன் கண்களில் ஒரு குரூரம் தெரிந்தது. அவன் அருகில் சென்று “என்ன மச்சி?” என்று அவன் தோள்களை ஆதரவாக பற்றினான் கவின்.


“ஒண்ணுமில்லைடா, அங்கே கல்யாண வேலை நிறைய இருக்காம், வா சீக்கிரம் போகலாம்” என்றவனை விளங்கா பார்வை பார்த்தான் கவின்.


அதற்கு பிறகு செந்தூரன் கவினுடன் சாரதாவின் வீட்டை அடைந்து எதுவுமே நடக்காதது போல எல்லா வேலையையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்தான். ஆனால் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை.


“அண்ணா” என்று தயங்கியபடி வந்த காயத்ரியிடம் பேசாதே என்று மட்டும் கைகளை உயர்த்திக் காட்டினான். அவன் அவர்களிடம் பேசாவிட்டாலும் நடந்ததை பெரிதுபடுத்தாமல் திருமண வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதே பெரிது என்று அனைவரும் அமைதியாகி விட்டனர்.


பெரிதாக பிரச்சனை செய்வான் என்று எதிர்பார்த்திருந்த சுபாஷும் கூட ஆச்சரியமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டிற்கு எதிரில் பந்தல் போடுவதிலிருந்து கல்யாண மண்டபத்திற்கு பந்தல் போடுவது, அலங்காரம் செய்வது என அனைத்தையும் தானான முன் வந்து செய்ய தொடங்கினான்.


கவினுக்கு அவன் செய்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவனே வேலை செய்யும் போது என்ன செய்வது என்பதால், நண்பனுடன் சேர்ந்து திருமண வேலைகளை பார்க்கத் தொடங்கினான்.


மறுநாள் மாலை ரிசப்ஷனுக்கு அனைவரும் தயாராகி கொண்டிருந்தார்கள். செந்தூரன் கதிரேசனிடம் வந்து, “திருமணத்திற்கு என்ன சீர் செய்ய போகிறீர்கள்?” என்று கேட்டான். கதிரேசன் ஒரு பெரிய காசுமாலையை எடுத்து காட்டினார். 


“என்னப்பா இது? உங்க அம்மாவோடதா? இந்த பழைய மாடலை தாரா எப்படி போடுவாள்?” என்றவன், “தாரா” என்று சத்தமாக அழைத்தான்.


மெல்ல அவன் எதிரில் வந்து நின்றவளை மேலிருந்து கீழாக பார்த்து, “என்ன இது ரிசப்ஷனுக்கு இவ்வளவு டல்லா ரெடியாயிருக்கே, கல்யாணப்பொண்ணு மாதிரியா இருக்கே?” என்றவன்,


“சரி கிளம்பு பியூட்டி பார்லர் போய் ரெடியாயிட்டு, அப்படியே இந்த காசுமாலையையும் மாத்திட்டு வந்திடுவோம்” என்றான்.


தாரா தயக்கத்துடன் தன் பெற்றோரை பார்க்கவும், “போய் வா தாரிகா, உன் மாமா தானே கூப்பிடுறார், அப்படியே சித்தார்த்தோட தங்கை வனிதாவை துணைக்கு அழைச்சிட்டு போ” என்றார் சுபாஷ்.


தாரிகாவிற்கு மணப்பெண் தோழியாக இருப்பதற்காக வந்திருந்த வனிதா முன்னே வந்தாள். “வாங்க அண்ணி போகலாம், நான் முன்னாடியே சொன்னேன் தானே. உங்க முகமே டல்லா இருக்குனு. பாருங்க, அந்த அண்ணனும் அதையே சொல்றாரு” என்றாள். 


வனிதா பதினெட்டின் தொடக்கத்தில் இருப்பால் போலும். செந்தூரன் இந்த வீட்டை விட்டு சென்ற போது தாரா எப்படி இருந்தாளோ, அதே மாதிரி இருந்தாள். தாராவை பற்றிய உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான் செந்தூரன்.


தாரா மேலும் தயக்கமாக செந்தூரனை பார்த்திருக்க “சரி உனக்கு இஷ்டமில்லைனா பரவாயில்லை விடு. கவின் வா நாம கிளம்பலாம்” என்றான் செந்தூரன்.


“நான் வர்றேன் மாமா” என்றாள் சட்டென்று. “சரி நான் காரில் இருக்கேன் நீ அந்த பெண் வனிதாவை அழைச்சிட்டு வா” என்றவன் காரை நோக்கிச் சென்றான்.


செந்தூரன் காரை செலுத்த கவின் முன் இருக்கையில் அமர்ந்தான், தாராவும் வனிதாவும் பின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டதும், நேராக ஒரு பெரிய நகைக்கடையின் முன்னே வண்டியை நிறுத்தினான்.


உள்ளே சென்றதும் “நீங்க இரண்டு பேரும் இப்போ டிரெண்டிங்கா இருக்கிற மாதிரி டிசைனை செலக்ட் பண்ணுங்க, நான் இதோ வருகிறேன். கவின் இவங்களுக்கு துணையாக இருடா” என்றான் செந்தூரன்.


கவினுக்கு அவன் செயல் ஒன்றுமே விளங்கவில்லை. நண்பனை முறைத்தபடி நின்றிருந்தான். தாராவிற்கு நொடிக்கொருமுறை போன் செய்தார் சுபாஷ், “ஆமாம்பா ஆன்டிக் நகை செட்டை பார்த்திட்டு இருக்கோம், மாமா எங்கேயோ வேலையாக போயிருக்கு, பக்கத்திலேயே பார்லர் இருக்கு முடிச்சிட்டு அரைமணிநேரத்தில் வந்திடுறோம்” என்றாள் தாரா.


அவர்கள் நகையை செலக்ட் செய்து முடிக்கும் வரை செந்தூரன் வரவே இல்லை. நேராக பணம் செலுத்தும் இடத்தில் நின்றுக் கொண்டு இவர்களை அழைத்தான், “இவங்க எடுத்த நகைகளுக்கு எவ்வளவு ஆச்சு” என்று கேட்டவன் தன் பாக்கெட்டிலிருந்த கார்டை அவரிடம் நீட்டினான்.


பணத்தை செலுத்தியதும், “பக்கத்தில் ஜூஸ், ஐஸ் எல்லாம் சாப்பிடறமாதிரி கடை இருக்கு, ரிசப்ஷனில் நிற்க தொடங்கிட்டால் அப்புறம் ரெஸ்ட் எடுக்க நேரம் இருக்காது, டயர்டா இருக்கும், இப்பவே எதாவது சாப்பிட்டு போகலாமா தாரா” என்றான். அவள் பதில் சொல்வதற்குள், “சரி அண்ணா” என்றிருந்தாள் வனிதா.


அவளின் ஆசையை தடுக்க நினைக்காமல், தாராவும் சம்மதமாக தலையை ஆட்டினாள். 


நால்வரும் எதிரெதிரே அமர்ந்து குளிர்பானங்களை அருந்த தொடங்கினர். செந்தூரனுக்கு போன் வரவும் கையிலிருந்த குளிர்பானத்துடன் பேசிக்கொண்டே எழுந்தான். அப்படியே கால் அந்த மேஜையில் இடித்துக் கொள்ள அந்த குளிர்பானத்தை வனிதாவின் மேல் மொத்தமாக அபிஷேகம் செய்திருந்தான்.


எத்தனை நல்ல விலையுயர்ந்த டிரஸ், இப்படி பாழாகி விட்டதே, இனி எந்த உடையை தேர்ந்தெடுத்து அதை எப்போது ரிசப்ஷனுக்கு உடுத்தி தயாராகுவாள்? வனிதா அழவே ஆரம்பித்து விட்டாள். 


“ரியலி சாரிம்மா, தெரியாமல் மேலே கொட்டிட்டேன். கவலைப்படாதே, கவின் கூட போய், அதோ எதிரில்  இருக்கிற அந்த பெரிய துணிக்கடையில் உனக்கு பிடித்த டிரஸ்ஸை எடுத்துக்கோ, அங்கேயே டிரஸ் பண்ணிட்டு வா. நான் பக்கத்தில் இருக்கிற பியூட்டிபார்லரில் தாராவை அழைச்சிட்டுப் போய் மேக்கப் செய்ய வைக்கிறேன். 


நீ டிரஸ் பண்ணிட்டு வந்ததும், நீயும் அந்த பார்லரிலேயே மேக்கப் போட்டுக்க, சரிதானே” என்றான் செந்தூரன் சமாதானமாக.


என்ன புது டிரஸ் எடுத்துக் கொண்டு மேக்கப் செய்தும் கொள்ளலாமா? என்றவுடன் வனிதாவின் கண்களில் மின்னல். அப்படியே அழுகையை நிறுத்தி விட்டு, “சரி அண்ணா அப்படியே செய்யலாம், தெரியாமல் நடந்ததுக்கு நீங்க என்ன செய்வீங்க பாவம்” என்றாள் வனிதா.


“உனக்கு ஓகேவா வனி? எதுவும் பிரச்சனை இல்லையே? நீ இந்த கவின் அண்ணா கூட போறியா? இல்ல நானும் வரட்டுமா? நான் வந்தால் ரிஷப்ஷனுக்கு இன்னும் நேரம் ஆகுமேனு பார்க்கிறேன்” என்றாள் தாரா கவலையாக.


“இல்ல அண்ணி, நான் பார்த்துக்கிறேன் நீங்க முதலில் தயாராகுங்க, நான் பின்னாடி கூட வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன்” என்று சொல்லி விட்டு கவினுடன் நடந்தாள் வனிதா.


செந்தூரன் தாராவை பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றான். தன் கைப்பையையும் மொபைலையும் செந்தூரனிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் தாரா. அரை மணி நேரத்தில் ஓரளவிற்கு ஒப்பனை முடிந்திருக்க, “போதும்” என்றான் செந்தூரன்.


கேள்வியாக பார்த்த தாராவிடம், “நேரம் ஆயிட்டு இருக்கு, சீக்கிரம் மண்டபத்துக்கு அழைச்சிட்டு வரும்படி உன் அப்பாவும் என் அப்பாவும் போன் செய்துட்டே இருக்காங்க” என்றான்.


“ஆனால் இன்னும் வனிதா வரலையே மாமா” என்றாள் தாரா. “அவளா மணப்பெண்? அவள் கொஞ்சம் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை, நான் அவளை டாக்சியில் கூட்டிட்டு வரும்படி கவினுக்கு சொல்றேன், நீ கிளம்பு” என்றான்.

 

அவன் சொல்வதும் சரி என்று தோன்ற அவனோடு சென்று காரில் ஏறினாள் தாரா. அவள் காரில் ஏறியதும் அவளை சீட் பெல்ட் போடச் சொல்லி காரை வேகமாக செலுத்தினான். “எதுக்கு மாமா இவ்வளவு வேகமாக போறீங்க? நேரம் இருக்கு மெதுவாகவே போங்க. ஆமாம் என்னோட கைப்பையும் மொபைலும் எங்கே மாமா?” என்றாள்.


“அதுவா அது அந்த பியூட்டி பார்லரோட குப்பைத் தொட்டியில் இருக்கு” என்றான் விட்டேற்றியாக


“சும்மா விளையாடதீங்க மாமா, அப்பா நொடிக்கொருமுறை போன் செய்துட்டே இருப்பாரு, நான் போன் எடுக்கலைனா பயந்திடுவாரு, முதலில் விளையாடாமல் போனை கொடுங்க” என்றாள்.


“ஏன் நொடிக்கொருதரம் போன் செய்யறார் உங்க அப்பா? எதுக்கு பயப்படுறாரு?” என்றான் அவள் பக்கமாக திரும்பி ஒற்றை புருவத்தை உயர்த்தி.


அதற்கு என்ன சொல்வது என்று புரியாமல் உதட்டை கடித்தபடி அவனையே பார்த்தாள்.


“ஓ நான் உன்னை எங்காவது கடத்திட்டு போயிடுவேன்னு பயப்படுறாரா?” என்று சத்தமாக சிரித்தான்.


“மாமா” என்றாள் அதிர்ச்சியாக, “அப்படி பயப்படுறவரு என்னை நம்பி உன்னை என்னோடு அனுப்பலாமா சொல்லு?” என்று சொல்லி மீண்டும் சத்தமாக சிரித்தான்.


அவன் சிரிப்பில் உயிர்ப்பு இல்லை வஞ்சம் மட்டுமே இருந்தது.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post