இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 18 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 16-04-2024

Total Views: 13189

காதலொன்று கண்டேன்!

தேடல்  18

அவனுக்காக..


இதழ் நிறைத்த சிரிப்புடன் "கார்த்திக் தான்..அதுல என்ன டவுட்..?" என்ற படி தட்டச்சு செய்திட அதற்கு என்ன எமோஜியை சேர்க்கவென்று குழம்பி போனான் பையன்,ஒரு நொடி.

"சன் க்ளாஸ் போட்டு  ஒதடு வளச்சு சிரிக்குற எமோஜிய அனுப்பு டா பாப்புக்குட்டி.." பின்னிருந்து எட்டிப் பார்த்த தாயுமானவர் சொல்ல பையனுக்கு ஒரு நொடி உடல் அதிர்ந்தது.

"ப்பாஆஆஆ" அலைபேசியை தூக்கிப் பிடித்த படி தந்தையின் புறம் திரும்ப இரு கரங்களையும் பின்னே கட்டிக் கொண்டு கொஞ்சம் முன்னே சரிந்து காலை ஆட்டிய படி வில்லன் தோரணையில் நின்றிருந்தார்,மனிதர்.

"பயந்துட்டியா பாப்புக்குட்டீ..? உன் லவ்வரோட மெஸேஜ் பண்றத பாக்கறேன்னு..?" அதே தோரணையில் கேட்க உறுத்து விழித்தன,பையனின் விழிகள்.

"கெத்து காட்றதுக்கு தான் இப்டி நின்னுகிட்டு இருக்கியா பா..? வெத்து மாதிரி இருக்க..?"

"கெத்துன்னாலும் சரி வெத்துன்னாலும் சரி.?மொதல்ல பாயின்டுக்கு வா..என் மருமக பேர் என்ன..?"

"எதே மருமகளா..? நட்டு கழண்டுருச்சாப்பா ஒனக்கு..?"

"பின்ன சிரிச்சு சிரிச்சு மெஸேஜ் பண்ற..அப்போ லவ்வர் தான..உன் லவ்வர்னா எனக்கு மருமக தான.." கண்டுபிடித்து விட்ட பெருமையுடன் அவர் கேட்க அப்படியே இழுத்து தன்னருகில் இருந்த கதிரையில் அமர வைத்தான்,அவரை.

"லவ்வரும் இல்ல..ஒன்னும் இல்ல..இது எங்க ஆபிஸ்ல வேல பாக்கற பொண்ணு.."

"உன் ஆபிஸ்ல எத்தனயோ பொண்ணுங்க வேல பாக்கறாங்கல..எதுக்கு இந்த பொண்ணு கூட மட்டும் சேட் பண்ற பாப்புக்குட்டி.."சந்தேகமாய் கேட்க நீண்டிருந்த நரை மீசையை பிடித்திழுத்தான்,சற்றே வலிக்குமாறு.

"பாப்புக்குட்டி..வர வர ரொம்ப ஓவரா போற நீ..அப்பாங்குற மரியாதயே இல்ல.."

"நீ இப்டி பேசுனா எப்டி டாடி மரியாத வரும்..? லவ்வரு கிவ்வருன்னு கிட்டு.."

"அப்போ லவ்வர் இல்லயாடா..?"

"ம்ஹும்..அந்தப் பொண்ணு ஒரு கொழந்த மாதிரி பா..நானும் வந்த நாள்ல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன்..அவ மத்தவங்க மாதிரி இல்லபா..உனக்கொன்னு தெர்யுமா..? அவ என்ன பாத்தப்போ நீ என்ன எந்த வித அறுவறுப்பும் இல்லாம நார்மலா பாப்பியே அது மாதிரி தான் பா இருந்துச்சு..."

"...................."

"ஏதாச்சும் கிறுக்குத்தனம் பண்ணிட்டே இருப்பா..மத்தவங்க தன்ன பத்தி என்ன நெனச்சுக்குவாங்கன்னு கொஞ்சம் கூட கவல பட்றத நா பாத்ததே இல்ல..மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல இவ..ஏதோ டிபரன்டா..பாப்பான்னு கூப்ட தோணுச்சு.." என்றவனின் விழிகளில் காதலையும் ஈர்ப்பையும் தேடித் தோற்றுப் போனார்,மனிதர்.

"அப்பா தப்பா பாக்காத..அவ எனக்கு கொழந்த மாதிரி.." பையன் சொன்னதன் காரணமே தனக்கு காதல் இல்லை என்பதை நிருபீக்க.ஆனால்,காதலில் தாய்மை இருப்பது ஏனோ அந்த நொடி அவனின் சிந்தனைக்கு வரவில்லை.உதித்திருக்கும் இந்த தாய்மை உணர்வு தான் அவன் காதலின் முகவுரை என்பதை அறியவில்லை,பையனவன்.

"அது மட்டுல்ல பா..இன்னிக்கி யாதவ் என் மேல சூடா காபிய ஊத்த வந்தான்.."

"பாப்புக்குட்டி என்னடா சொல்ற..சூடா ஏதாச்சும் பட்டா உனக்கு இன்னும் வலிச்சிருக்குமே டா..எறிஞ்சு தள்ளியிருக்கும் டா.." கலக்கத்துடன் வந்து பையனின் முகத்தை ஆராய தந்தையின் மனநிலை அறியாதவனா அவன்..?

"ப்பாஆஆஆஆ..அப்டி ஒன்னும் இல்ல பா..காபிய ஊத்த தான் வந்தான்..ஆனா அப்டி ஏதும் நடக்கல..நானே ஒரு நிமிஷம் ஸ்டன் ஆகி நின்னுட்டேன்..இவ பட்டுன்னு நடுவுல குதிச்சிட்டா..அவ கன்னத்துல காபி தெறிச்சுருச்சு..ஏன் குதிச்சன்னு கேட்டேன்..தெரிலன்னு மண்டய மண்டய ஆட்டிட்டு பொய்ட்டா..கோபமா வந்துச்சு..ஆனா அவ கிட்ட அத காட்டவும் மனசு வர்ல..என்ன பொண்ணோ..ஆனா வித்யாசமான பொண்ணு.." சிலாகித்த படி பையன் கூற தந்தைக்கு அது சாதாரணமாய் எடுத்துக் கொள்ள இயலவில்லை.

"ஏன்னு தெரில..அவ கூட ப்ரெண்ட்ஷிப் வச்சுகிட்டா நல்லாருக்கும்னு தோணுது..நல்ல பொண்ணு பா..ரொம்ப நல்ல பொண்ணு.." என்றிட மகனின் விழிகளில் ஒரு ஏக்கம் விரவிப் பரவுவதை கண்டவரின் மனமோ கனத்துப் போனது,வெகுவாய்.

தந்தையின் வலி நிறைந்த பார்வை அவனுக்கு எதையோ உணர்த்த முயன்று தோற்க புருவம் சுருக்கிப் பார்த்தவனின் விழிகளில் சிக்கிக் கொள்ளாது வெளியேறி  வந்தவரோ நேரே சென்று நின்றது,பூஜையறையின் முன் தான்.

நேர்த்தியாய் வைக்கப்பட்டிருந்த சாமி படங்களை பார்த்தவருக்கு கண்கள் பணிக்க அனுமதியின்றியே மேலேறி கூப்பி நின்றன,கரங்கள்.

"பாப்புகுட்டி சின்ன வயசுல இருந்து கஷ்டத்த தான் பாத்து வளந்துருக்கான்..சின்ன வயசுலே அம்மா இல்ல..வளந்ததுக்கு அப்றமா இந்த வியாதி..அவன் ரொம்ப அடி வாங்கிட்டான்..அவன் இந்த பொண்ண பத்தி சொல்லும் போதும் கண்ணுல எதுவும் இல்லன்னாலும் என்னால சாதாரணமா எடுத்துக்க முடியல.."

"அந்த பொண்ணு தான் என்னோட பாப்புகுட்டிக்கு பொருத்தமானவளா இருப்பான்னு மனசு அடிச்சிக்கிது..ஏன்னு தெரியல..பெத்த அப்பன் எனக்கு அப்டி தான் தோணுது..அவன் வாழ்க்க நல்லா இருக்கனும்..அவனுக்கும் இந்த பொண்ண புடிச்சிப் போகனும்..எப்டியாவது அந்த பொண்ண என்னோட பாப்புக்குட்டி வாழ்க்கைல சேத்துரு சாமி.." மனமுருகி வேண்டியவரோ வெளியே வந்து பார்த்திட உணவு மேசையில் தாளமிட்ட படி அமர்ந்திருந்தான்,பையன்.

மறுநாள் அலுவலகத்தில் தன்னிடத்தில் அமர்ந்து இருந்தவளின் முகத்தில் பெரும் யோசனை படர்ந்திருக்க கார்த்திக் வந்ததை கூட உணரவில்லை,சிந்தனையின் தீவிரத்தில்.

பையனுக்கும் அவளின் சிந்தனை முகம் கண்டு ஒரு விதமாய் புருவம் சுருங்கிட தன் இருக்கையில் அமர்ந்தவனுக்கு வேலை நேரம் துவங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கவே அவளிடம் பேச வேண்டும் என்கின்ற எண்ணம்.ஏன் என்று கேட்டால் அவளைப் போல் தோன்றியது என்று தான் சொல்வான்.அது தானே உண்மையும் கூட.

"யாழினி.."பையன் அழைக்க அதை கூட உணர முடியாமல் அவள் சிந்தனை.

"யாழினீஈஈஈஈ" அழுத்தமான சத்தமான அழைப்பில் "ஆ..நா தான்.."பதறிக் கொண்டு அவன் புறம் திரும்பிட அவளின் வெளிறிய முகம் கண்டு தோன்றிய புன்னகையை இதழ்களுக்குள் அடக்கிக் கொண்டான்,பையன்.

"சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

"தேங்க்ஸ்.." காரணமின்றி அவன் சொல்ல அதன் காரணத்தை தேடிப் பிடிக்க அவளுக்கு ஒரு நிமிடம் தேவைப்பட்டது.

"ஐயோ பரவால சார்.." இதழ் நிறைந்த புன்னகையுடன் அவள் திரும்பிட வேறேதுவும் பேசுவாள் என நினைத்தவனுக்கு பெரும் ஏமாற்றம்.அவனுக்கும் பேசாமல் இருக்கத் தோன்றவில்லை.

"யாழினி.."

"சார்ர்ர்ர்ர்.." கேட்டவாறே அவன் புறம் திரும்பியிருந்தாள்,அவள்.

"உங்க வீடு எங்க இருக்கு..?" அவன் கேட்க கையை கிள்ளிப் பார்த்தன,அவளின் விரல்கள்.

"அட நெஜமா தான் பேசறாரு.." தனக்குத் தானே சொல்லிக் கொண்டு நிமிர அவளை ஆராயும் பார்வையுடன் உரசிக் கொண்டிருந்தன,அவன் விழிகள்.

"இ..இங்க பக்கத்துல தான் சார்.." பையனின் பார்வையில் திணறல் எடுக்க அசடு வழிய சிரித்த படி சொல்லி முடித்தாலும் அவன் பார்வையில் மாற்றம் இல்லை.

"பக்கத்துலன்னா..?"

"பஸ்ல போனா பதினஞ்சு நிமிஷம் எடுக்கும்.."

"ம்ம்ம்ம்ம்ம்.." என்றிட தோழனை புருவம் சுருக்கிப் பார்த்தவாறே அவர்களின் அருகில் வந்தான்,அஜய்.தந்தைக்கு மட்டுமல்ல தோழனானவனுக்கும் பையனின் நடத்தை வித்தியாசமாய்த் தான் இருந்தது.

"கார்த்தி.."

"வா மச்சான்.." அவன் அழைத்திடும் முன்னே அஜய்யை பார்த்து புன்னகைத்தவளோ மறு புறம் திரும்பி தன் வேலையில் ஆழ்ந்திட பையனவனுக்குள் தான் சிறு ஏமாற்றம்.

"என்னடா புதுசா வயசுப் பொண்ணுங்க கூட எல்லாம் பேசற..நீ பேசற ஆள் கெடயாதே.." பையனின் காதுகளுக்குள் கிசுகிசுக்க அவனின் விழிகளில் முறைப்பின் ரேகைகள் படர்ந்தது.

"யாரு..இந்த பொண்ணு..வயசுப் பொண்ணா..கொழந்தடா..பாப்பா மாதிரி இருக்கா..அதப் போய் வயசுப் பொண்ணுன்னு சொல்ற.."

"எதே..பாப்பா வா..?" சற்றே அதிர்வுடன் கேட்க  மேலும் கீழும் ஆடிய தோழனின் சிரசே அவனுக்குள் பிரளயத்தை தூண்டி விட்டிருந்தது.

"நாம கூட இந்த பொண்ண பாக்கும் போது கொழந்த மாதிரி இருக்குன்னு நெனச்சோம்..ஆனா இவன் பாப்பா ன்னு செல்லப் பேர் வேற வச்சிட்டு சுத்தறான்..சம்திங் ராங்.." தன்பாட்டில் எண்ணியவனுக்கு தோழனின் இந்த மாற்றம் சிறு நெகிழ்ச்சியை தந்திடவும் மறந்திடவில்லை.

              ●●●●●●●●●

அலுவலக நேரம் முடிய வாயிலுக்கு வந்தவளோ  வண்டியை கிளப்பிக் கொண்டிருந்த கார்த்திக்கை கண்டதும் சிறு புன்னகை பூக்க கிளம்ப முயன்றவனுக்கும் அவளிடம் பேசாமல் செல்ல முடியவில்லை.ஏதோ ஒன்று மனதை உந்திக் கொண்டிருந்தது,உள்ளுக்குள்.

காரை அவளருகே கொண்டு நிறுத்திட பக்கத்தில் அமர்ந்து இருந்த அஜய்யின் சந்தேகம் இன்னும் வலுப்பெற்றது.

"வாங்க யாழினி வீட்ல ட்ராப் பண்றேன்.." கேட்ட தொனியில் வெறும் வேண்டுகோளா இல்லை கட்டளையா..?
தோழனுக்கும் சரி அவளுக்கும் சரி சட்டென பிரித்தறிய முடியவில்லை.

திடுமென கேட்ட கேள்வியில் யாழினிக்கு சங்கடமாக அவளோ தன்னருகே நின்றிருந்த ருத்ராவின் முகத்தை பார்த்திட ருத்ராவின் முகமோ அதிர்வில் வெளிறிக் கிடந்தது.

"யாழினி.."

"இல்ல சார்..நீங்க போங்க..பஸ்ஸுல வர்ரோம் நாங்க..இப்ப பஸ்ஸு வந்துரும்.." தன்மையாய் அவள் சொல்ல கேட்கும் எண்ணத்தில் பையன் இல்லை போலும்.

"என் வீடு அந்த வழில தான் இருக்கு..அதனால எந்த ப்ராப்ளமும் இல்ல..உங்க ப்ரெண்ட் ஹாஸ்டலும் பக்கத்துல தான இருக்கு..உங்க வீட்டுக்கிட்ட தான எறங்கிக்குவாங்க..அவங்களயும் வர சொல்லுங்க.."படபடவென அவன் பேச பேசுவது கார்த்திக் தானா என உறைந்தும் போனாள்,அவள்.

"நெஜமாவே இது கார்த்திக் சார் தானா..?" ருத்ரா அவளின் காதருகே குனிந்து கேட்டிட எச்சிலை விழுங்கிக் கொண்டு ஆமென்பதாய் தலையசைத்தவளுக்கு அவனுடன் செல்வதற்கு மனம் ஒப்பவில்லை.

இரவுகளில் நினைவுகளும் கனவுகளும் அவனைச் சுற்றியே வட்டமிட பையனிடம் இருந்து விலக அவனோ இன்னும் நெருங்கி அல்லவா வருகிறான்..?

"வாங்க யாழினி.." பையன் அழைத்திட அந்த விழிகளைக் கண்ட பின் அவளாலும் மறுக்க முடியவில்லை.
ருத்ராவையும் இழுத்துக் கொண்டு பின்னிருக்கையில் அமர மிதமான வேகத்தில் கிளம்பியது,வண்டி.

"இவன் நடவடிக்கயே சரியில்லயே.." என்றவனின் பார்வை தோழனைப் பார்த்திட அவனின் கவனம் முழுக்க பாதையில் தான் நின்றிருந்தது.

"கண்ணாடி வழியா பின்னாடி இருக்குற பொண்ணப் பாத்தான்னா லவ் னு நெனச்சிக்கலாம்..இது ஒன்னுமே பண்ணாம இருக்கானே..புரிஞ்சிக்க முடிலியே.." சலித்த தோழனுக்கு வெளிறிய முகத்துடன் பின்னே அமர்ந்து வந்த யாழினியின் முகம் கண்ணாடி வழியே தெரிய தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

"நீ எதுக்குடி பேயறஞ்ச மாதிரி இருக்க.."

"சும்மா தான் ருத்ரா.."

"ரெண்டு பேரும் ஹஸ்கி வாய்ஸ்ல என்ன பேசிக்கறீங்க..?" இருவரும் கிசுகிசுப்பது கண்டு அஜய் சத்தமாக கேட்டு விட யாழினிக்கு புரையேறி விட்டது.

"ஒன்..ஒன்னுல்ல சார்.." என்ற படி தண்ணீரை பருகி விட்டு நிமிர பின்னே திரும்பி அவளை முறைத்துக் கொண்டிருந்தான்,அஜய்.

"தோ மா..இந்த டெரர் பீஸு தான் உனக்கு சார்..நா கெடயாது..என் பேர சொல்லி கூப்டுமா"

"சரிண்ணா.." அவள் சொல்லவே அவனிதழ்களில் புன்னகை பூத்தது.

அதன் பின் யாரும் எதுவும் பேசவில்லை.அவரவர் சிந்தனையில் மூழ்கியிருக்க அதிகமாய் அவஸ்தைக்கு ஆளானது என்னவோ,யாழினி தான்.

கார்த்திக் தன் அருகில் இருக்கிறான் என்பதே அவளை மீள முடியா சுழலுக்குள் இழுத்துக் கொள்வது போன்ற பிரம்மை.

அவனை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ள..
அவன் உணர்ந்திரா தாய்மையை  திகட்ட திகட்ட அள்ளிக்கொடுக்க..
அவன் காணாத உலகுக்குள் கை பிடித்து அழைத்துச் செல்ல..
அவன் சுமக்கும் வலிகளின் பாரத்தில் கொஞ்சமேனும் தன் தோளில் ஏற்றுக் கொள்ள..
அவனைத் தேடி வரும் காயங்களை அண்ட விடாமல் அரணாய் நின்று கொள்ள..
அவன் உதிர்க்கும் கண்ணீர்த்துளிகளின் கறையை துடைத்து விட..
அவனை அவனாகவே இருக்க வைத்து அழகு பார்க்க..
அவள் நேசத்தில் அவனை கரைத்து உருகச் செய்ய..
அவளுக்கு ஆசை..
ம்ஹும் பேராசை.

அவளுக்கும் தன் உணர்வுகள் புரியத் தான் செய்கிறது.புரிந்து கொண்ட மனமும் தடுமாறித் தான் நிற்கிறது.

இருந்தாலும் அந்த உணர்வுகளை தகர்த்தெறியும் முனைப்புடன் இருப்பவளுக்கு அவளிதயத்தை அவனுக்கான காதலின் ஆணிவேர்கள் தன் இதயத்தின் அடி ஆழத்திலும் ஊடுருவி உயிரில் உறைந்து நிற்பது தெரிந்திடும் வாய்ப்பில்லை.

அவள் வீட்டிற்கு சற்றுத் தள்ளி வண்டியை நிறுத்திட இறங்கியவளோ நேரே சென்று நின்றது,அவனருகே தான்.

"என்ன யாழினி..?" கண்ணாடி வழியே வெளியே குனிந்திருந்தவளிடம் கேட்க ஒரு தடவை அவளுக்கு தொண்டைக் குழி ஏறி இறங்கியது.

"நீ...நீங்க என் கூ..கூட ப்ரெண்டா இருக்கீங்களா சார்..?" பதட்டத்தை மறைத்து அவள் கேட்டிட பையனின் முகத்தில் மெல்லிய அதிர்வலைகள் பரவிற்று.

"சார்ர்ர்ர்ர்.."

"ஓகே கண்டிப்பா.." சிறு புன்னகையுடன் அவன் மொழிந்திடவே அவளிடம் இருந்து ஆசுவாசப் பெருமூச்சொன்று.

"சார்,என் கூட நார்மலா பேசுனா தான் ப்ரெண்ட்னு அர்த்தம்.." நட்பு என்று அவன் கொடுத்த அங்கீகாரமோ என்னவோ அவளை உரிமையாய் பேச வைத்திட்டது.

"அதுக்கென்ன பேசிட்டா போச்சு.." ஒற்றைக் கண் சிமிட்டி பையன் சொல்ல ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனாள்,காதல் கொண்டவள்.

பிரித்தறிந்து சொல்ல முடியா உணர்வுடன் அவனும்..
பிரித்தறிந்தும் சொல்ல முடியா உணர்வுடன் அவளும்..

காதல் தேடலில் முடிவுரை ஆகுமா..?
தேடல் காதலின் முகவுரை ஆகுமா..?

தேடல் நீளும்.

2024.04.15


Leave a comment


Comments


Related Post