இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 1) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 16-04-2024

Total Views: 25100

உனக்கென்றே உயிர் கொண்டேன் 1

அதிகாலை...

புல்லினங்கள் இறைத்தேடி பறக்க, ஆகாயம் செம்மை பூசி, செங்கதிர்களை மெல்ல புவியின் மீது பாய்ச்சிக்கொண்டிருந்தது.

வாசலில் கோலமிட்டு நிமிர்ந்த தனலட்சுமி... தான் போட்ட கோலத்தை ஒருமுறை திருப்தியாக பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைய, அவ்வீட்டின் மூத்த பெண்மணி அகிலாண்டம் பூஜையறைக்குள் நுழைந்தார்.

"தனம்..." அடுத்த நொடி தன்னுடைய கணீரென்ற குரலால் கத்தி அழைத்திருந்தார்.

அடுப்பில் கொதிக்க வைக்க ஏற்றிருந்த பாலினை இறக்கி கீழே வைத்த தனம் வேகமாக மாமியாரின் முன் வந்து நின்றார்.

"அத்தை..." அத்தனை பவ்யம் அவரது குரலிலும், உடல் மொழியிலும்.

"உனக்கு எத்தனைவாட்டி சொல்றது? நான் சாமி கும்பிட வந்தால், அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்கணும். இத்தனை வருசமாகியும் எப்போதான் கத்துக்கப்போறியோ?" என்று சிடுசிடுவென பேசியவர், "போ... போயி பூ பறிச்சிட்டு வா" என்றார். கிட்டத்தட்ட விரட்டினார்.

தனத்தினை பேசக்கூட அவர் விடவில்லை. தனம் ஏதோ சொல்ல வர,

"என்னையவே எதிர்த்து பேசறியா நீ? முதலில் சொன்னதை செய்" என்றார்.

தனம் தான் சொல்ல வருவதை சொல்ல முடியாது கைகளை பிசைந்துகொண்டு நிற்க...

"அம்மா" என்றழைப்போடு மாடியிறங்கி வந்தான் தமிழ் அமுதன்.

தன் அன்னை பதட்டத்தோடு பூஜையறை வாயிலில் நிற்பதை கண்டவன் வழக்கம்போல் அகிலாண்டம் ஆரம்பித்துவிட்டார் என்று கணித்து அங்கு சென்றான்.

"என்ன பாட்டி சத்தம்?"

தமிழின் குரல் கேட்டதும் திரும்பிய அகிலாண்டத்தின் முகத்தில் அத்தனை கனிவு.

"வாப்பா" என்று சிரித்த முகமாக அவனை பார்த்தவர், "வழக்கம்போலத்தான்... எதையும் உருப்படியா செய்யுறதே இல்லை" என்று தனத்தினை குறை கூறினார்.

தமிழ் தன்னுடைய அன்னையை ஏறிட,

தனம் வாய் திறக்க முயன்றது தான் தாமதம்...

"நான் உன்னை பூ பறிச்சிட்டு வர சொன்னேன்ல" என்று அதட்டலாக மொழிந்தார் அகிலாண்டம்.

"அதான் அங்கு இருக்கே பாட்டி" என்று தமிழ் உள்ளே சாமி பழங்கள் நிரம்பிய தட்டிற்கு அருகே கை காண்பிக்க...

"ஆமாம் இருக்கு. நான் தான் சரியா பார்க்கல" என்று கூறிய அகிலாண்டம், "இதை வாய் திறந்து சொல்றதுக்கு என்னடி?" என்றார் தனத்திடம்.

"நீங்க அவங்களை எங்கே சொல்ல விட்டிங்க பாட்டி?" எனக் கேட்ட தமிழ், "அவங்க கொடுக்கிற சத்தத்தில் பாதியாவது உங்களுக்கு கொடுக்க வராதாம்மா. அதட்டினால் அடங்கிடுவீங்களா?" என்று அகிலாண்டத்திற்கு கொட்டு வைத்ததோடு தன் தாயிடமும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

"பெரியவங்க தம்பி. என்னத்தானே பேசுறாங்க. விடுப்பா" என்றவர் சமையலறைக்குள் செல்ல, தன் பாட்டியை அழுத்தமாக பார்த்தவன், அன்னையின் பின்னே சென்றான்.

"காபி கலக்கவா தமிழு?"

கேட்ட தனத்தை கையால் விலக்கியவன், தானே தம்ளரை எடுத்து சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து பாலினை ஊற்றி ஆற்றி, தனத்தின் முன் நீட்டினான்.

"தமிழு." அவரின் கண்கள் பனித்தது.

"முதலில் இதை குடிங்க. இதுக்கு அப்புறம் தண்ணி குடிக்கக்கூட நேரமிருக்காது. நாலு நாலரைக்கு எழும்புறீங்க. ஆளுங்க இருந்தாலும் எல்லா வேலையும் ஒத்தையில நின்னு செய்யுறீங்க. எல்லாருக்கும் வேண்டியதை பார்த்து பார்த்து செய்றீங்க. ஆனால் உங்களுக்குன்னு எதையும் பார்க்கமாட்டிங்க. ஏன்'ம்மா? நிறைய சொல்லி பார்த்துட்டேன் ம்மா. கொஞ்சம் நிமிர்ந்து தான் நில்லுங்களேன்" என்றான். ஆதங்கமாக.

"நம்ம வீட்டு ஆளுங்க தானே கண்ணு. செய்யுறதுல எனக்கு சந்தோஷம் தான். பெரியவங்க பேசுறதுக்குலாம் வருத்தப்படக் கூடாது" என்று மகன் கொடுத்த காபியை பருகியவர், அவனுக்கும் கலந்து கொடுத்தார்.

"சுயமரியாதை ரொம்ப முக்கியம் ம்மா. அதை அப்பாவுக்காகவும் விட்டு கொடுக்காதீங்க. உங்க மரியாதையில் தான் என் கௌரவம் இருக்கு. அதே தான் பிள்ளைங்க வளர்ப்பில் பெத்தவங்க மரியாதை அடங்கியிருக்க மாதிரி" என்றவனாக, "ஆலைக்கு போயிட்டு வரேன். நான் வரதுக்குள்ள நீங்க சாப்பிட்டிருக்கணும்" எனக்கூறி வெளியேறியவனின் எதிரே வந்தாள் வர்ஷினி.

"ஹாய் அத்தான்" என்றவள், "அத்தை டீ" என்று சமையலறை நோக்கி குரல் கொடுத்தாள்.

"ஏன் உன்னால் போட்டுக்க முடியாதா?" எனக் கேட்டவனின் கண்களில் அத்தனை எரிச்சல்.

அவள் அவனை இடித்து விடுவதைப்போல் நெருங்கி நிற்க, இரண்டடி தள்ளி சென்றான்.

"எனக்கு போடத் தெரியாது அத்தான்" என்றவள், "அதான் போட்டுக்கொடுக்க ஆளிருக்கே" என்று தனம் கொண்டு வந்து கொடுத்த தம்ளரை கையில் வாங்கிட... தமிழ் தனத்தை ஆயாசமாக பார்த்து வைத்தான்.

"சரி எப்போ தான் அந்த ரெண்டு பேப்பரையும் க்ளியர் பண்ணப்போற?"

தமிழ் கேட்டதும் அசடு வழிந்தவளாக சிரித்துக்கொண்டே நழுவினாள்.

"படிப்பு முடிஞ்சு ஒரு வருசம் ஆகப்போவுது. இன்னும் அரியர்ஸ் க்ளியர் பண்ணாமல் வீட்டை சுத்தி வரதுக்கு, அம்மாகிட்ட சமையலாவது கத்துக்க" என்றவன் சலிப்பாக இரு பக்கமும் தலையை அசைத்து வெளியேறிவிட்டான்.

தோப்பிற்கு சென்றிருந்த தேவராஜ் வீட்டிற்குள் நுழைய அவரிடம் தீபம் ஒளிர்ந்த தட்டினை நீட்டினார் அகிலாண்டம். 

தொட்டு வணங்கியவர், "லட்சுமி" என்றழைக்க... கையில் நீராகாரம் அடங்கிய குவளையுடன் வந்தார் தனம்.

"முகம் சோர்வா இருக்கு. வேலை முடியலையா?" பரிவுடன் கேட்டவர் குவளையை வாங்கி பருகினார்.

"அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. பாப்பா வருதுல... அதான் பிடிச்சதா செய்யுறேன். மத்த வேலையெல்லாம் செய்யத்தான் ஆளுங்க இருக்கே" என்றவர் சென்றிட...

"ரொம்பத்தான் அவளை தாங்குற நீ?" என்றார் அகிலாண்டம்.

"நான் தாங்காமல் யாரு தாங்குவாம்மா? அப்பா இருக்கும்போது உங்களை தாங்கலையா?" எனக் கேட்ட தேவராஜ் குவளையை எடுத்துச்சென்று தானே கழுவி வைத்துவிட்டுச் சென்றார்.

பார்த்த அகிலாண்டத்திற்கு எள்ளும் கொள்ளும் வெடித்தது.

பின்னே தான் என்னதான் அதிகாரம் செய்தாலும், மகனும், பேரனும் தனத்தை தாங்குவதில் அவருக்கு அத்தனை ஆதங்கம். அவர் மகள் வாழாத வாழ்வு தனத்திற்கு கிடைத்துவிட்டதே என்கிற பொறாமை. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக.

அகிலாண்டத்திற்கு இரு மக்கள். தேவராஜ் மற்றும் தெய்வானை. அப்போதே நல்ல வசதி. மேட்டுபாளையத்தில் அகிலாண்டத்தின் குடும்பத்தை தெரியாதவர்கள் யாருமில்லை. தேயிலை எஸ்டேட், கிழங்குகள் சுத்திகரிப்பு ஆலையென பிரபலம்.

தெய்வானையின் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க அமைந்தவர் தான் சுடர்மணி. அவரின் தங்கை தனலட்சுமி. ஓரளவு வசதி மிக்கவரே, சுடர்மணியின் தந்தை கந்தன்.

மணியை பார்க்க சென்ற இடத்தில் தனலட்சுமியை பிடித்துவிட பெண் எடுத்து பெண் கொடுத்தனர்.

இரு ஜோடிகளின் திருமண வாழ்வும் நன்றாகவே சென்றது. தெய்வானைக்கு குழந்தை தங்காது கலைந்து கொண்டே இருக்க... தனத்திற்கு இரு பிள்ளைகள் பிறந்துவிட்டனர்.

மூத்த மகள் பூர்வி. இரண்டாவது தமிழ் அமுதன்.

அதில் தெய்வானைக்கு தனத்தின் மீது பொறாமை. அந்த பொறாமை சில நாட்களில் வன்மமாகவும், மாறிட அகிலாண்டத்திடம் தன் குறையை சொல்லி ஆறுதல் தேடுகிறேன் என்கிற பெயரில், தனத்திற்கு எதிராக தூபம் போட...

'தான் பார்த்து கட்டி வைத்தவள் சந்தோஷமாக இருந்திட, தன் மகள் அப்படி வாழவில்லையே' என்று தன்மை மீது சிறுக சிறுக கோபத்தை வளர்த்துக் கொண்டார் அகிலாண்டம். 

அதுமுதல் தனத்திடம் சாதாரணமாக பேசுவதைக்கூட அதிகாரமாக, அதட்டலாகாக் காட்டத் துவங்கியிருந்தார்.

தேவராஜ் எவ்வளவோ கண்டித்தும் அவரிடம் மாற்றமில்லை. முடிந்தளவு மனைவிக்கு திடமளித்த ஆதரவாக இருந்தார். தனக்காக அன்னையிடமே வாதிடும் கணவருக்காக தனம் அகிலாண்டத்தின் பேச்சுக்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளத் துவங்கிவிட்டார்.

தமிழுக்கு நான்கு வயது இருக்கும்போது தெய்வானையும் கரு தரித்தார்.

சுடர்மணி திருமணம் ஆன முதலே தெய்வானையை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டார். காத்திருந்து மனைவி உண்டாகியிருக்கிறாள் என்றதும் நிலத்தில் கால் படவிடாது அனைத்தும் தானே செய்தார். அதில் எல்லாம் தெய்வானைக்கு கர்வம் தான்.

மகளை பார்த்துக்கொள்ள வேண்டுமென யார் சொல்வதையும் கேட்காது ஐந்தாம் மாதமே சீமந்தம் வைத்து தெய்வானையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.

தெய்வானைக்கு சகலமும் தனம் தான் செய்தார். அகிலாண்டம் செய்ய வைத்தார். அண்ணி என்கிற பாசத்திற்காக அவர்கள் தன்னை கீழிறங்கி நடத்துகிறார்கள் என்பதை பொருட்படுத்தாது சின்ன முகச்சுழிப்பும் இன்றி சந்தோஷமாகவே தனம் செய்தார். தெய்வானையின் வயிற்றில் வளருவது அவரின் அண்ணன் பிள்ளையாயிற்றே! விட்டுவிடுவாரா?

மணி தினமும் வந்து தெய்வானையை பார்த்துவிட்டுச் செல்வார்.

தெய்வானைக்கு ஒன்பதாவது மாத துவக்கம்.

முகம் சோர்ந்து நலுங்கிய உடையுடன் மணி தேவராஜின் வீடு வந்திருந்தார்.

"என்னாச்சு மச்சான்?" என்று தேவராஜ் கேட்டிட...

தலையில் அடித்துக்கொண்டு அழுதார் மணி.

"மோசம் போயிட்டேன் மாப்பிள்ளை. மோசம் போயிட்டேன். தொழிலில் கூட்டு வச்சிருந்தவன் மொத்தமா ஏமாத்திட்டான். கடனையும் நான் கட்டுற சூழல்" என்று கதறினார்.

தேவராஜ் கடனையெல்லாம் தான் அடைத்து, புதிய தொழில் துவங்கிட பணம் தருவதாகக் கூறிட, மணி மறுத்துவிட்டார்.

மணிக்கு பணத்திற்கு முன்பு சுயமரியாதையும், தன்மானமும் பெரிதாகப்பட்டது.

தெய்வானை எவ்வளவோ எடுத்துக் கூறியும், பணம் வாங்க நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். அதில் தெய்வானைக்கு ஆத்திரம். கணவனை முதல்முறை பிடிக்காமல் போனது.

ஒரு வாரம் கழித்து தெய்வானையை பார்க்க வந்திருந்த மணி, கடனையெல்லாம் அடைத்துவிட்டதாக தெரிவிக்க... தெய்வானை கேட்டுக்கொண்டாரே தவிர எப்படியென்று கேட்கவில்லை. இருப்பினும் மணியே கூறினார்.

"எல்லாம் வித்துட்டேன். வீடு, நிலம் எல்லாம்" என்றார்.

தெய்வானை மணியை உஷ்ணமாக ஏறிட்டார். சில நொடிகளே. முகத்தை திருப்பிக் கொண்டார்.

"மிச்ச பணம் வைத்து குத்தகைக்கு நிலம் எடுத்திருக்கேன். கொஞ்ச நாளில் எல்லாம் சரி செய்திடுவேன்" என்றார்.

மணி அங்கிருந்த வரை தெய்வானை ஒரு வார்த்தை பேசவில்லை.

வர்ஷினி பிறந்து ஏழு மாதங்கள் முடிந்ததும் மணி அழைத்து தெய்வானை போக மறுத்துவிட்டார். தேவராஜ் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதுவரை மணியிடம் தெய்வானை பேசவுமில்லை.

தேவராஜால் ஒரு கட்டத்திற்கு மேல் தெய்வானையிடம் பேச முடியவில்லை. அகிலாண்டமும் தெய்வானைக்கு துணை நின்றிட யாராலும் ஒன்றும் செய்ய முடியாது போனது.

"யார் யாரோ சொகுசா வாழும் போது எம் பொண்ணு மட்டும் அந்த வாடகை வீட்டுல கஷ்டப்படனுமா?" என்று அகிலாண்டம் கேட்டதற்கு,

"அதுதான் இப்போ கொஞ்சம் கொஞ்சமா மேல வர ஆரம்பிச்சிட்டாரே! இன்னும் ரெண்டு வருஷத்துல விட்டதெல்லாம் பிடிச்சிடுவாறு" என்று தேவராஜ் எவ்வளவோ மன்றாடினார். இரு பெண்களிடமும் பயனற்று போனது.

"புருஷன் நல்லாயிருக்கும் நேரத்தைவிட இப்படி கஷ்டப்படும் நேரம் தான் துணையா கூட நிக்கணும் தெய்வானை" என்று தேவராஜ் பொறுமையாக எடுத்துசொல்ல...

"என்னால் அந்தாளு கூட போயி வயலு சேறுன்னு கஷ்டப்பட முடியாது" என்று முடிவாக சொல்லிவிட்டார்.

மணிக்கு வெறுத்துவிட்டது.

"விடுங்க மாப்பிள்ளை. இங்க தானே இருக்கிறாள். வருவாள்" என்ற மணி தினமும் வந்து பிள்ளையை பார்ப்பதோடு தெய்வானையிடம் தன் உரிமையை நிறுத்திக்கொண்டார்.

அவருக்கு அந்நேரம் மட்டுமன்றி இன்றளவும் ஆதரவாக நானிருக்கிறேன் என்று இருப்பது தேவராஜும், தமிழும் தான்.

அகிலாண்டாத்தை மீறி தனத்தால் தன் அண்ணனுக்கென்று எதுவும் செய்ய முடியவில்லை.

"நான் மாமாவை பார்த்துக்கிறேன் ம்மா." சிறு வயதில் தனத்தின் கண்ணீர் தாங்காது தமிழ் கூறியிருந்தான். இன்றுவரை அதனை காப்பாற்றி வருகிறான்.

சில நாட்கள் அவருடனே தங்கியும் கொள்வான். பள்ளி விடுமுறை நாட்களில் பூர்வியும் தமிழுடன் சென்றிடுவாள். மணிக்கு இருவரும் தங்களை அறியாது நிம்மதியை அளிக்க, அவருக்கு இருவரும் உலகமாகப்போயினர். வர்ஷினி கூட அந்தளவிற்கு ஒட்டுதல் கிடையாது.

மணி சில வருடங்களிலேயே தன் நிலையை பெருமளவு உயர்த்திக்கொண்டார். ஆனால் அவருக்கு தெய்வானையை அழைக்க வேண்டுமென்று தோன்றவில்லை. பணம், சொத்திற்கு முன்பு தன்னுடைய திருமண வாழ்வு தோற்றுவிட்டதாக விரக்தி அடைந்தவரிடம் தெய்வானையின் தரம் இறங்கித்தான் போயிற்று.

தெய்வானைக்கும்... ஒரு வேலையும் செய்யாது, இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேவை செய்ய ஆளிருக்க தாய் வீடே சொர்க்கமாக இருந்தது. இங்கேயே மொத்தமாக நிரந்தரமாக தங்கிவிட்டார்.

இப்போதும் மணி மகளை பார்க்க அவ்வப்போது வந்தாலும் தெய்வானையின் முகம் பார்த்திட மாட்டார்.

தனமும் தாங்க முடியாது தெய்வானையிடம் தன்னுடைய அண்ணனுக்காக பேசியிருக்கிறார். அன்று தெய்வானை தனத்தை பேசிய பேச்செல்லாம் காதில் வாங்கிட முடியாதவை.

அந்த பேச்சு வார்த்தையின் இறுதியில், "வேணுன்னா உன் அண்ணனுக்கு ரெண்டாம் கல்யாணம் செய்து வைத்திடேன்" என்று முகத்தில் எவ்வித பாவனையுமின்றி தெய்வானை சொல்லிட தனத்திற்கு இப்படியும் ஒரு பேண்ணா என்று தான் நினைக்கத் தோன்றியது.

விரக்தியாக புன்னகைத்தவர் அதன் பிறகு தன் அண்ணனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டதே இல்லை.

மணிக்கு இரண்டாம் திருமணமென்றாலாவது தெய்வானை அவருடன் சொல்வாளென்று தேவராஜன் போட்ட திட்டம் வீணென்று தான் ஆனது. அப்போதும் அசராது தாய் வீட்டுலே தான் இருந்தார் தெய்வானை.

அனைவருக்கும் சுத்தமாக வெறுத்துவிட்டிருந்தது.

பழையதை நினைத்த நொடி அகிலாண்டத்திடம் பெருமூச்சு மட்டுமே! அவரின் மகள் வாழ்வு வீணாகிவிட்டதே என்று வருத்துபவருக்கு தானும் ஒரு காரணமென்று புரியவில்லையா என்ன?

மணி அத்தனை நல்லவர் என்ற நிலையில்... அன்றே திட்டி அடித்தாவது அனுப்பி வைத்திருக்க வேண்டும். மகளின் வசதியான வாழ்வுக்காக மண வாழ்வை தன்னை அறியாது முடிவுக்கு கொண்டுவந்து விட்டார்.

அகிலாண்டத்திற்கு எப்போதாவது எழும் இந்த சிறு கவலை கூட தெய்வானையிடம் இன்றளவும் கிடையாது.

திருமணத்திற்கு பின் புகுந்த வீட்டு துணை இல்லையென்றால் பிறந்த வீட்டில் மதிப்பிருக்காது எனும் கூற்று தெய்வானை விசயத்தில் வேறு விதமாக அமைந்துவிட்டது.

அகிலாண்டம் தனத்திடம் காட்டும் முகத்தை மகளிடம் காட்டியிருந்தால் என்றோ புருஷன் முக்கியமென்று சென்றிருப்பாரோ என்னவோ? தெய்வானைக்கு அனைத்தும் செய்ய தனமிருந்திட அவருக்கு வேறென்ன கவலை.

மணி ஒன்பது அடிக்க மெல்ல தன்னுடைய அறையிலிருந்து பருத்த உடலை அசைத்து வெளியில் வந்தார் தெய்வானை.

நேராக உணவு மேசைக்குத்தான் சென்றார்.

அகிலாண்டம் உண்டு முடித்து அமர்ந்திருந்தார். மகளுக்காக.

"தனம்." உரக்க அழைத்தார் தெய்வானை.

தெய்வானை வேகமாக வர, அங்கு வந்த தேவராஜ் மனைவியை பிடித்து நிறுத்தி...

"என்ன அவசரம் லட்சுமி? மெதுவா வா" என்று தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.

தனம் தேவராஜுக்கும் தெய்வானைக்கும் தட்டினை வைக்க...

"நான் வச்சிக்கமாட்டனா லட்சுமி" என்ற தேவராஜ், "எல்லாருக்கும் பழக்க படுத்திவிட்டதே நீதான்" என்று தன் தங்கையை பார்த்தபடி தன்னுடைய தட்டில் உணவினை தானே வைத்துக்கொண்டார்.

"என்னண்ணா ஜாடை பேசுற மாதிரி இருக்கு?" தெய்வானை கணீரென்று கேட்க,

"நான் நேராவே சொல்லுறேன்... தட்டில் போட்டு உனக்கு சாப்பிடத் தெரியாதா? வேலையா இருக்கவளை அதிகாரமா கூப்பிடுற? உன்கிட்ட பலமுறை சொல்லிட்டேன். அவள் உனக்கு அண்ணி. இந்த வீட்டோட தலைவி" என்றார். தெய்வானையின் மூக்கு உடையும் விதமாக.

"அவ தலைவின்னா அப்போ நான் யாருடா? எம் மவளுக்கு செய்யுறதுல உன் பொண்டாட்டி என்ன தேய்ஞ்சுப் போறாளா?" அகிலாண்டம் கை ஆட்டி கேட்க,

"ஆமாம் தேய்ந்து தான் போறாங்க" என்று குரல் வந்தது தமிழிடமிருந்து.

ஏற்கனவே கணவனின் பேச்சில் என்ன நடக்குமோ என்று கலங்கி நின்றிருந்த தனம், மகனும் வந்துவிட்டான் என்றதும் கைகளை பிசைந்துகொண்டு தவித்து நின்றார்.

தனம் பொறுமையாக செல்வதால் மட்டுமே குடும்பம் அமைதியாக இருக்கிறது. அவ்வப்போது அந்த அமைதியை குலைக்க தெய்வானையும் அகிலாண்டமும் இப்படி ஏதும் செய்யும்போது தனம் தன் பார்வையாலே கெஞ்சி கணவரையும் மகனையும் கட்டுப்படுத்திடுவார்.

"என்னப்பா எங்க அண்ணன் போதாதுன்னு இப்போ நீ சப்போர்ட்டுக்கு வறியா?"

"ஆமாம் அத்தை அவங்க என் அம்மா. அப்போ வந்து தானே ஆகணும்" என்ற தமிழ்,

"கிச்சன் வேலைக்குத்தான் ரெண்டு பேரு இருக்காங்களே! அவங்களை கூப்பிட்டு சாப்பாடு போட்டுக்க முடியாதா?" என அத்தனை காட்டமாகக் கேட்டிருந்தான்.

"என்னது... வேலைக்காரி கையால நான் சாப்பிடணுமா?" என்று ஆங்காரமாக வினவினார் வசந்தி.

"ஏன் அவங்க கையால் சாப்பிட்டால் என்ன இப்போ? தொண்டைக்குள் இறங்க மாட்டேங்குதா?" எனக் கேட்டவன், "அப்போ உங்களுக்கு கையிருக்கே போட்டு சாப்பிட வேண்டியது தானே?" என்றான்.

இதுவே பேசியது தேவராஜ் என்றால் தெய்வானை உடனுக்குடன் பதில் கொடுத்திருப்பார். ஆனால் தமிழிடம் அது முடியாதே!

தெய்வானை தன் மகள் வர்ஷினியை தமிழுக்கு முடிக்க எண்ணம் கொண்டுள்ளார். ஆதலால் எந்தவொரு இடத்திலும் அவனை பகைத்துக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை.

மனதில் பொருமியவராக அவர் இருக்க...

"இனி என் அம்மாவுக்கு நீங்க எதாவது வேலை ஏவுவதை பார்த்தேன்" என்று விரல் நீட்டி எச்சரித்தவன்,

"முதலில் கூப்பிட்ட குரலுக்கு ஓடி போயி நிற்பதை முதலில் நீங்க நிறுத்துங்க" என்றான், தனத்திடம்.

"கொஞ்சமாவது அவங்களுக்கு அண்ணி மாதிரி நடந்துகிட்டு இருந்திருந்தீங்கன்னா அவங்க எப்பவோ என் மாமாவோட வாழ போயிருப்பாங்க" என்று தன் அன்னைக்கும் கொட்டு வைத்தான்.

நடப்பதை கவனித்தபடி தேவராஜ் தன்னுடைய உணவில் கண்ணாக இருக்க...

"அவன் என்ன பேச்சு பேசுறான். உன் பொண்டாட்டியை என் மகளை கொடுமைப்படுத்த சொல்றான் டா. நீ என்னன்னா கேட்டுகிட்டு உட்கார்ந்திருக்க. அவனை எங்கையாவது அடக்குறியா நீ?" எனக் கேட்டார் அகிலாண்டம்.

"தமிழ் எதுவும் தப்பா பேசிடலையே" என்ற தேவராஜ் எழுந்து கை கழுவ சென்றிட... அகிலாண்டமும், தெய்வானையும் ஒருவரையொருவர் அர்த்தமாக பார்த்துக்கொண்டனர்.










Leave a comment


Comments 1

  • M Mathi
  • 1 month ago

    Nice

  • P PMKK024 @Writer
  • 1 month ago

    Thank you sis


    Related Post