இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-17 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 17-04-2024

Total Views: 35227

பயத்தில் வியர்த்து விறுவிறுக்க நடுக்கமாய் வீட்டுக்குள் நுழைந்த யாழினி முன்னறையில் அமர்ந்திருந்த யஷ்வந்தைக் கண்டு மேலும் நடுங்கித் தான் போனாள். அவனது அழுத்தமான உணர்வுகளற்ற முகத்துக்கு கீழே அவனவளின் அமைதியான பால் முகம், அவன் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

எச்சிலைக் கூட்டி விழுங்கிய யாழினி அவன் அருகே செல்ல, அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்தில் எந்த உணர்வையும் கண்டறிய முடியவில்லை. அண்ணனுக்கு பயந்து நடுங்கும் பெண்ணில்லை அவள். ஆனால் அர்ஷித் விஷயமென்று வந்துவிட்டாலே அவளுக்கு எங்கிருந்துதான் அத்தனை பயம் வந்துவிடுமோ?!

“சாப்டியா யாழி?” என்று சாதாரணமான குரலில் அவன் வினவ, தலையை இடவலமாய் திக்கி திக்கி அசைத்தாள். 

“சாப்பிட வச்சு அனுப்பிருப்பான்னு பார்த்தேன்” என்று நக்கலாய் யஷ்வந்த் கேட்க, 

“அ..அண்ணா.. நா..நான் இல்லை அ..அவர்” என்று தடுமாறினாள்.

“எதுக்கு இவ்வளவு திணறல்?” என்ற யஷ்வந்த், 

“உன்னை ஒருத்தன் வலுகட்டாயமா கூட்டிட்டு போற அளவு நீ வீக் இல்லை. அது நினைவிருக்கட்டும்” என்று கூற, கண்கள் கலங்க தலை குனிந்தாள். 

அவன் வரிகள் உணர்த்தியது என்னவோ? நீ அவ்வளவு பலவீனம் இல்லை. அப்படியிருக்க நீ அவன் வற்புறுத்தலுக்கு உடன்பட்டது உன்மனதை கூறுகிறது என்று அர்த்தமா? இல்லை நீ பலவீனம் அல்ல என்று நினைவு கூறுவதாய் அர்த்தமா?

“தாமரை க்கா” என்று யஷ்வந்த் கத்தி அழைக்க, அவன் தோளில் படுத்திருந்த அஞ்சனா தூக்கம் கலைந்து பதறி எழுந்தாள். 

அதில் ஒற்றை கண்மூடி, தன் இதழ் கடித்துக் கொண்டவன், 
“சாரி சனா..” என்க, யாழி அண்ணனை ஆச்சரியமாய் பார்த்தாள்.

‘தனக்கு நினைவு தெரிந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காகவே தவறு செய்வதை தவிர்த்து வரும் அண்ணனா இந்த சின்ன விடயத்திற்கு மனைவியிடம் மன்னிப்பு வேண்டுகின்றான்?’ என்று அவள் ஆச்சரியமாய் பார்க்க, முகம் சுருக்கி அவனை பார்த்த அஞ்சு சிறு தலையசைப்புடன் குனிந்து கொண்டாள்.

தன்னையே ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்தவன் தன் அழைப்புக்கிணங்க வந்த அவ்வீட்டு தலைமை சமையல் பணி செய்யும் பெண்மணியைக் கண்டான். 

“சாப்பிட்டுட்டு போ” என்று யஷ்வா கூற, சிறு தலையசைப்போடு சென்றாள்.

தன்னவளைத் திரும்பிப் பார்த்தவன் மனதில் குளித்து முடித்து அவளுக்கு உணவிட்ட பின்பு நடந்தவையே வலம் வந்தது.

 “யாரு உன்கிட்ட என்ன சொன்னாங்க?” என்று யஷ்வந்த் வினவ, ஒன்றும் புரியாமல், 

“என்னது மாமா?” என்றாள்.

“யாரும் உன்கிட்ட ஏதும் தேவையில்லாம பேசினாங்களா சனா? எதுக்கு நான் லூசா லூசானு அத்தனை முறை கேட்ட?” என்று வினவ, 

சடுதியில் அவள் முகம் மாறியது. ஆனால் இம்முறை கலக்கத்தைத் தாண்டிய கண்ணீர் இல்லை. ஒருவித தெளிவான முகபாவனையுடன், 

“யாருனு தெரியலை மாமா. காலேஜ்ல வெளியே அஜுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். மீனுகிட்ட ஏதோ புக் தரணும்னு போனான். அப்ப யாரோ ஒருத்தங்க வந்து என்கிட்ட என்னென்னமோ பேசினாங்க. நான்..நான் லூசு.. உ..உங்களுக்கு செட்டாக மாட்டேன்னு சொல்லிட்டு போனாங்க” என்று கூறியவள், கலக்கமாய் அவனை ஏறிட்டாள்.

'நான் உனக்கு பொருத்தமில்லையா?’ என்ற கேள்வி அதில் தொக்கி நிற்பதை உணர்ந்தவன்,

 “யாரோ ஏதோ சொன்னா அதை நீ அப்படியே எடுத்துப்பியா சனா? உனக்கு சுயமா யோசிக்க தெரியாதா? கிணத்துல குதினு சொன்னா போய் குதிச்சுடுவியா என்ன? அதுபோல தானே இதுவும்? யாரோ ஒருத்தி உன்னை லூசுனு சொல்லிருக்கானு நீயும் அதை மனசுக்குள்ளயே வச்சுட்டு இருந்திருக்க. ஒன்னு, யோசிச்சு அப்படியெல்லாம் இல்லைனு அந்த விஷயத்தை தூக்கி போட்டிருக்கணும். இல்லை என்கிட்ட சொல்லிருக்கணும்” என்று கூறினான். 

அவன் குரலை உயர்த்தவில்லை, பார்வையில் கோபமில்லை, கண்களில் ரௌத்திரமில்லை. ஆனால் அந்த வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அவளுக்கு அவளுடைய செயலில் ஏதோ தவறுள்ளது என்று உணர்த்தியது.

“சாரி மாமா..” என்று மெல்லொலியில் கூறியவள், 

“இனிமே யோசிக்குறேன்” என்று அவனை சமாதானம் செய்ய வேண்டி உடனே இந்த வரிகளையும் கூற, 

லேசாய் இதழ் வளைத்து புன்னகைத்தவன் அவளுக்குத் தட்டிக் கொடுத்தான்.

அந்த நினைவிலிருந்து மீண்டவன் மனமெங்கும் அது யாராக இருக்கும் என்ற எண்ணம் மட்டுமே! 

யாரோ அஞ்சனாவின் அப்பாவித்தனத்தை பயன்படுத்துகின்றனர் என்னும் பட்சத்தில் அவளை அனாவசியமான மனக் கஷ்டங்களைக் கொடுக்கும் வார்த்தைகளை எதிர்க்கப் பக்குவப்படுத்த வேண்டும் என்ற அத்தியாவசியத்தை உணர்ந்தான்.

பரபரப்பும், இனிமையும் கலந்து அமைதியாய் மூன்று மாதங்கள் கடந்தன..

யஷ்வந்த் வீடே கலை கட்டிக் கொண்டிருந்தது.. பின்னே! அவர்கள் வீட்டு செல்ல இளவரசி வந்துவிட்டாள் அல்லவா?!

“யமு ம்மா.. உங்க குட்டி வாண்டு அழைப்ப ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றபடி யமுனாவை கட்டியணைத்தவள், 

“யாதவ் அண்ணா.. இன்னும் யது குட்டிக்கு என்னை அத்தைனு கூப்பிட சொல்லி தான் ஆர்டர் போட்டு வச்சுருக்கீங்களா?” என்று கேட்டு யதுநந்தனை தூக்கிக் கொண்டு, 
“மது பேப்னு கூப்பிடுடா குட்டி” என்றாள்.

அக்ஷரா அதில் சிரித்துக் கொள்ள, “அண்ணியாரே உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் அண்ணியாரே” என்று அவளை கட்டியணைத்துக் கொண்டவள், யாழி உள்ளே நுழைவதைக் கண்டு ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.

அவளைக் கண்டு இன்பமாய் அதிர்ந்த யாழி, “ம..மது” என்க, “மதுவே தான் யாழிக்கா” என்று கண்ணீரோடு அவளை மேலும் இறுக அணைத்தாள். 

அத்தனை பேரிலும் மது மிகவும் நெருங்கியிருப்பது யாழியுடன் தான். ‘யாழிக்கா யாழிக்கா யாழிக்கா' என்று சிறுவயது முதல் அவள் பின்னாலேயே சுற்றி வந்த சின்ன சிட்டாயிற்றே அவள்!

மதுவின் கன்னத்தில் முத்தமிட்ட யாழி அவள் கண்ணீர் துடித்து, “மிஸ்ட் யூ லாட் மதுமா” என்க,

 “நான் மட்டும்? உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று கூறினாள்.

இந்த பாசப் போராட்டம் முடியவே யஷ்வந்தை அணைத்துக் கொண்டவள், “யஷு அண்ணாவை தான் அடிக்கடி பார்க்க முடிஞ்சுடும்” என்க, 

மெல்லிய புன்னகையுடன் அவள் முதுகை தட்டிக் கொடுத்தான்.

அவனிடமிருந்து பிரித்தவள், “அண்ணி எங்க அண்ணா?” என்க,

 “ஃப்ரண்ட் பர்த்டே பார்டிக்கு போயிருக்காடா” என்றான். 

“ஓ..ஓகே ஓகே அண்ணா” என்றவள் குதூகலமாய் வீட்டில் பணி புரிவோரிடம் சென்று பேசி வந்தாள்.

அதற்குள் அங்கு மீனுவின் பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு அர்ஜுனுடன் வீடு வந்தாள் அஞ்சனா. வாசலோடு கிளம்ப இருந்தவனையும் உள்ளே இழுத்துக் கொண்டு வந்தவள் நடுக் கூடத்தில் கேட்ட சத்தம் கேட்டு குழம்பினாள்.

‘இவ்வீட்டில் தான் இருந்தால் தான் இத்தனை சத்தம் இருக்கும் எனும்போது யாரு அது தனக்கு இணையாக கலகலப்பது?’ என்ற எண்ணத்துடன் வந்தவள் மதுமஹதியை அங்கு சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

'அட இவங்க மூனு மாசத்துல வந்துடுறதா சொன்னாங்கள்ல? ஏன் இவங்க வராங்கனு மாமா சொல்லவே இல்லை’ என்றபடி செல்ல, பேசிக் கொண்டிருந்த மது அஞ்சனாவைக் கண்டு துள்ளிக் கொண்டு வந்து அவளை “அண்ணி” என்று அணைத்துக் கொண்டாள்.

அமேரிக்காவில் அவளுடன் அவ்வளவு ஒட்டுதலாய் பேசவில்லை என்றாலும் இந்தியா வந்த பிறகு யாழினி உபயத்தால் அடிக்கடி அலைபேசியில் பேசி சற்று ஒட்டுதலைக் கொண்டு வந்திருந்தாள். 

“ஹாய் மது” என்று தானும் அணைத்துக் கொண்டவள், “நீங்க இன்னிக்கு வரீங்கனு யாருமே சொல்லவே இல்லையே” என்று கூற, 

“நான் தான் யாருக்குமே சொல்லலை.. சர்ப்பிரைஸா வந்தேனே” என்றவள், 

“என்னை வாங்க போங்கனு சொல்ல வேணாம்னு சொன்னேன் தானே? உங்களவிட ரெண்டு வயசு சின்ன பொண்ணு நான்” என்றாள்.

அதில் சிரித்துக் கொண்ட அஞ்சு, அர்ஜுனைப் பார்த்து, 

“அஜு.. இவங்.. இவ மது” என்று கூறிவிட்டு மதுவிடம்,

 “இவன் அர்ஜுன். என் ட்வின் ப்ரதர்” என்றாள். 

“ஓ நீங்க ட்வின்ஸ்ல?” என்று உற்சாகமாய் கூறியவள் அர்ஜுனிடம் கரம் நீட்டி, 

“நான் மதுமஹதி. இந்த Y.K குடும்பத்தோட கடைக்குட்டி” என்று கூறினாள்.

அந்த வீட்டில் கடைசியாக ஒரு செல்ல இளவரசி இருக்கின்றாள் என்பதை வரை தெரிந்திருந்தமையால் ஆச்சரியம் இன்றி, தன் கரம் நீட்டி குலுக்கியவன், “அர்ஜுன்” என்றான்.

அதில் புன்னகைத்துக் கொண்டவள் தன் அண்ணியையும் இழுத்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்து பேச்சு வளர்க்க, அவளது கலகலப்பான பேச்சு அஞ்சனாவை கவர அத்தனை நேரமெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. அர்ஜுனும் அமைதியாய் அங்கே அமர்ந்து கொள்ள, அவனுக்கு அசௌகரியமான அமைதியை கொடுக்காமல் அவனையும் அவ்வப்போது பேச்சில் இழுத்துக் கொண்டிருந்தாள் சின்னவள்.

சில நிமிடங்களில் நேரம் ஆனதைக் கண்டவன் அனைவரிடமும் கூறிக் கொண்டு புறப்பட, அன்றைய இரவு உணவை சின்னவளின் வருகை தந்த மகிழ்வோட தடபுடலாய் முடித்தனர்.

மறுநாள் காலை தங்கள் அறை பால்கனியில் அமைதியாய் வானத்தை வெறித்தபடி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள் யாழினி. அவள் மனதில் அர்ஷித்தை தவிர வேறு யார் இருந்து அந்த மனசஞ்சலமான அமைதியை கொடுத்திருக்க முடியும்?

வெகு நாட்களுக்குப் பிறகு தங்கள் அறையில் தூங்கியதில் நிம்மதியாய் உறங்கி கண் விழித்த மது கண்டது ஊஞ்சலில் அழகிய பொம்மையாய் அமைதியோடு அமர்ந்திருக்கும் யாழினியை தான்.

படித்து முடித்துவிட்டாள்.. இன்னும் சில நாட்களில் யுவனா இன்டஸ்ட்ரீஸில் ஏதோ ஒரு பிரிவை அவள் கையில் நிச்சயம் அண்ணாக்கள் ஒப்படைப்பர் என்பது திண்ணம். ஆனால் தனது அக்காவின் முகத்தில் சில காலமாகவே குடியிருக்கும் அந்த கண்களுக்குப் புலப்படாத படபடப்பு, சின்னவளின் சிந்தைக்குந் தெரிந்தது.

அமைதியாய் அவள் அருகே சென்றவள் தனது இருப்பை உணராது அமர்ந்திருக்கும் அக்காவின் முன் வந்து அமர, அந்த அரவத்தில் மெல்லிய திடுக்கிடலோடு திரும்பினாள்.

“என்னக்கா?” என்று மது வினவ, லேசாய் சிரித்து, 

“என்ன வாண்டு.. அதுக்குள்ள எழுந்துட்ட? காலேஜ் அடுத்த வாரத்துலருந்து போகணும். இப்பவே நல்லா தூங்கிங்கோ” என்று கூறினாள்.

“ம்ம் அது இருக்கட்டும்.. நீ ஏன் ஒருமாதிரி இருக்க யாழி க்கா?” என்று மது வினவ, 

சற்றே திணறியவள் பின் தெளிவான முக பாவத்துடன், “அப்படிலாம் இல்லைடா” என்றாள். 

“நடிக்காத யாழி க்கா” என்றவள் சிறு இடைவெளிக்குப் பின், “அர்ஷித் மாமா இன்னும் உன்னை லவ் பண்றாரா க்கா?” என்று கேட்டாள்.

'அட கொடுமையே.. உனக்கும் தெரிஞ்சு போச்சா?’ என்று எண்ணியவள், மெல்ல தலையை குனிய,

 “மாமா ரொம்ப நல்லவர் க்கா” என்று கூறினாள்.

 “அவங்க கெட்டவங்கனுலாம் நான் சொல்லலை மது. எனக்கு ப்..ப..பிடிக்கலை.. இது சரியா வராது” என்று யாழி கூற, 

அக்காவையே பார்த்தவள், “யஷ்வா அண்ணாக்கும் மாமாக்கு ஆகாதுனு பிடிக்கலைனு சொல்றியா யாழி க்கா?” என்றாள்.

இப்படி உண்மையை பட்டென அவள் கேட்பாளென எதிர்பாராத யாழினி திணறலாய் ஏறிட,

 “என்ன க்கா?” என்றாள்.

 “அப்படிலாம் இல்லை மது. எனக்கு நிஜமாவே அவர் மேல எந்த உணர்வும் இல்லை. இது தேவையில்லாத வேலை. யாரையும் நம்பி இந்த விஷயத்துல முடிவெடுக்க நான் விரும்பலை. நான் பாட்டுக்கு என் வழில போறேன்.. எனக்கு இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் ஆகாது” என்று படபடப்பாய் கூறி எழுந்து சென்றாள்.

'ம்ம்.. ரைட்டு.. இது எங்க முடியப்போகுதோ?’ என்று நினைத்துக் கொண்ட மதுவும் தனது காலைப் பணியை துவங்கினாள்.

 சிறியவள் தானே இவளென்ன கண்டுகொள்ளப் போகிறாள் என்று மெத்தனமாக எண்ணிய யாழினி சிறு வயதிலேயே அவள் வெகுவாய் பக்குவப்பட்டதை மறந்து போனாள் போலும்.

ஐந்து வயதில் பெற்றோரின் இறப்பு, தன்னை வைத்து குடும்பத்திற்குள் சண்டை என கண்டு வந்தவள் தன்னால் யாரும் மனம் நோகும்படி நடந்திடக் கூடாது என்பதில் அத்தனை தெளிவாய் சிந்தித்து பக்குவத்தோடு பழகினாள். அவள் வாழ்வில் அவள் இழந்தவைகள் அவளுக்குக் கொடுத்த பாடமே எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனை அவளுக்குக் கொடுத்திருந்தது. இவையேதும் சிந்திக்காமல் இருந்த யாழினிக்கு அவளது ஒற்றை கேள்வி அனைத்தையும் நினைவூட்டிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

அழகாய் கடந்த ஒரு வாரத்தில் இதோ அவ்வீட்டு இளவரசியும் சின்ன மகாராணியும் கல்லூரிக்கு தயாராய் வந்தனர்.

 “அடடே.. ரெண்டு பேரும் ஒரே காலேஜ் ஒரே டிபார்ட்மெண்ட்.. கலக்கல் தான்” என்று யாழினி கூற இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு புன்னகைத்துக் கொண்டனர்.

காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்ப தயாராய் இருவரும் வர, அர்ஜுன் வந்தான். அர்ஜுனைப் பார்த்தப் பிறகுதான் அஞ்சனாவுக்கு அந்த ஒரு விடயம் நினைவுக்கு வந்தது. சுற்றி முற்றி அவள் பார்வையால் அவளவனைத் தேட, 

“யாரை தேடுறீங்க அண்ணி?” என்று மது கேட்டாள்.

“யஷு மாமா..” என்று அவள் கூற, 

“அண்ணா மாடிக்கு போனாங்க” என்று மது கூற,

 “ஓ ஓகேடா” என்றவள், 

“அஜு ஃபைவ் மினிட்ஸ்” என்றுவிட்டு மாடிக்குச் சென்றாள். 

அறைக்குள் அவள் நுழையவும் தன் வேலையறையிலிருந்து வெளியே வந்தவன், 

“சனா நீ இன்னும் கிளம்பல?” என்று கேட்டான்.

“மாமா ஒன்னு கேட்கனும்” என்று அவள் கூற, 

“கிளம்பும் போதுதான் உனக்கு எல்லாம் தோனும். சொல்லு” என்றான்.

 “இல்ல மாமா ஒரு கோர்ஸ் படிக்கலாமானு கேட்க வந்தேன். எக்ஸ்ட்ரா கோர்ஸ் போல காலேஜ்ல இப்ப வந்திருக்காம். மீனு ஆன்லைன்ல பார்த்து அனுப்பிவிட்டா. டிசைனிங்க, டிஜிடல் டிசைனிங், பிராண்டிங், மார்கெட்டிங் எல்லாமே ஒரு லிமிடட் கோர்ஸ் போல சொல்லி தருவாங்களாம். வன் இயர் கோர்ஸ் தான். சர்டிஃபிகேட்டும் உண்டு” என்றவள் கட்டணத்தொகையையும் கூற, 

“சரி இதுல என்கிட்ட என்ன கேட்கணும்?” என்று கேட்டான்.

அவன் கேள்வியும் அந்த பார்வையும் அவளுக்கு என்ன உணர்த்தியதோ? சில நொடிகள் அமைதி காத்தவள், 

“எனக்கு அது படிக்கனும். ஃபீஸ் கட்டிடுங்க” என்று கூறி, “பை மாமா” என்றுவிட்டு ஓடினாள்.

அந்த நொடி, அந்த ஒரு நொடி அந்த ஆறடி ஆண்மகன் அதிர்ந்து தான் நின்றான். கீழே வந்தவள் அர்ஜுனுடன் புறப்பட, மது யாழினியுடன் புறப்பட்டாள்.

கல்லூரிக்கு வந்தவுடன் மீனாவைப் பார்த்து நினைவு பெற்ற அஞ்சு,

 “ஏ அஜு மீனு அனுப்பின அந்த எக்ஸ்ட்ரா கோர்ஸ்ல நான் சேரப்போறேன் நீ சேரப்போறியா?” என்று கேட்க, ஆடவன் அவளை அதிர்ந்து பார்த்தான். 

எப்போதும் ‘நீ சேருவியா அஜு? நான் சேரவா அஜு?’ என்று தன்னிடம் கேட்டு முடிவெடுப்பவள் முதன்முறை தானாக முடிவெடுத்து தன்னிடம் கூறுவது அவனுக்கு சொல்லொன்னா மகிழ்வை தந்தது. 

அவன் முகம் காட்டிய ஆச்சரியம் கண்டு உள்ளுக்குள் குழம்பிய அஞ்சனா, “அஜு..” என்க, 

“நி.. நீ சேரப்போறியா அஞ்சு? எப்போ முடிவ பண்ண?” என்று கேட்டான். 

“காலைல தான் அஜு. யஷு மாமாகிட்ட ஃபீஸ் கட்ட சொல்லி கேட்க தான் மாடிக்கு திரும்ப போனேன்” என்றாள்.

அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை அவளது செயலை.. ஆச்சரியமாய் பார்த்தவன் அவளை சீண்டும் பொருட்டு

 “நான் சேரலை அஞ்சு..” என்க,

 “ஏன் அஜு? நீயும் வா. இந்த கோர்ஸ்ல நிறைய பெனிஃபிட்ஸ் இருக்கு. நான் மீனு அனுப்பினதை படிச்சு பார்த்தேன். வன் இயர் தான். கிளாஸஸ் கூட கம்மி தான். சர்டிபிகேட்டும் அந்த கம்பெனியே ப்ரொவைட் பண்றாங்க” என்று அவனுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“சரி அஞ்சு.. இருக்கட்டுமே.. நான் வரலைனு சொன்னா நீ போகமாட்டியா? உனக்கு பிடிச்சா நீ படி” என்று அர்ஜுன் கூற,

 “என்ன அஜு இப்படி சொல்ற?” என்று நொந்து கொண்டாள். அவள் விழிகள் இங்குமங்கும் அலைபாய்ந்தது. 

'அஞ்சு நீ சுயமா முடிவெடுக்க பழகனும், கொஞ்சம் சுயமா யோசி சனா. யார் என்ன சொன்னாலும் டௌன் ஆயிடுவியா? லூசு தானே நீ? உன்னைலாம் மிஞ்சிப் போனா இன்னும் கொஞ்ச மாசம் வச்சுட்டு கழட்டிதான் விடபோறாரு’ என்று பல வாக்கியங்கள் அவள் காதுகளில் விடாமல் ஒலித்தது.

கண்களை அழுந்த மூடித் திறந்தவள், “நான் படிக்கனும் அஜு இது. ரொம்ப நல்ல கோர்ஸ். நீ வர்றனா யோசிச்சு சொல்லு” என்றுவிட்டு மீனாவைத் தேடி சென்றாள். 

அவளையே ஆச்சரியமான புன்னகையுடன் பார்த்தவன், ‘பாப்பா.. யூ நெய்ல்ட் இட்’ என்று மனதோடு கூறிக் கொண்டு அவள் பின்னே ஓடி, 

“பாப்பா நானும் வரேன்” என்றான்.

அதில் உண்மையான சந்தோஷத்துடன் புன்னகைத்தவள், “தேங்ஸ்டா” என்றுவிட்டு மீனாவையும் அழைத்துக் கொண்டு அதற்கு பதிவு செய்தாள்.


Leave a comment


Comments


Related Post