இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 2) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 17-04-2024

Total Views: 23915

உனக்கென்றே உயிர் கொண்டேன் 2

ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் மொழிவெண்பா. அவளின் துயில் கலைப்பதற்கென்றே ஒலித்தது அலைப்பேசி.

யாரென்று தெரிந்தது போல் இமை திறக்காது அழைப்பினை ஏற்று காதில் வைத்தவள்,

"குட் மார்னிங்'ண்ணா" என்றிருந்தாள். அரை தூக்கத்தில்.

"இன்னும் எழுந்துக்கலையா அம்மு?"

"படிச்சிட்டு தூங்க லேட் நைட் ஆகிடுச்சுண்ணா. நீங்க எப்படியும் கரெக்ட் டைம் கால் பண்ணுவீங்களே! எழுந்துக்கலான்னு தூங்கிட்டு இருந்தேன்" என்று தன்னுடைய உடன் பிறப்பான அஸ்வினுக்கு பதில் வழங்கியவள் "இப்போ எழுந்தாச்சு" என்றுக் கூறினாள்.

"ம்ம்ம்" என்றவன் அடுத்து பேச விசயம் இருந்தும் எப்படி சொல்வதென்று தயங்கினான்.

"எதாவது சொல்லணுமா அண்ணா?" தமயனின் அமைதி புரிந்து அவளாகவே கேட்டிருந்தாள்.

"ஆமாம்டா" என்றவன்,

"நீயெப்போ ஊருக்கு வர?" எனக் கேட்டிருந்தான்.

"எக்ஸாம் ஸ்டார்ட் ஆகியிருக்குண்ணா. இப்போ எப்படி?" என்றவள் தற்போது தான் அங்கு வர முடியாது என்பதை மறைமுகமாக தெரிவித்து இருந்தாள்.

அஸ்வினின் மௌனம் நீடித்தது.

"என்னண்ணா ஏதாவது பிராப்ளமா தாத்தா கிட்ட நான் பேசணுமா?" அஸ்வின் இது போன்று எப்போதும் அவளிடம் பேசிட தடுமாறியது கிடையாது. அதனால் அவளாக யூகித்து ஒன்றை கேட்டிருந்தாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லடா. தாத்தா..." என்று சொல்ல முடியாது வார்த்தையை இழுத்தவனாக...

"தாத்தா எனக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்றாரு" என்றான்.

"ஓ சூப்பர் அண்ணா! பண்ணிக்கோங்க. உங்கள பாத்துக்க ஆள் வந்த மாதிரி இருக்கும் இல்ல!" ரொம்ப உற்சாகமாக துள்ளி குதித்து கூறினாள். 

"ஐயோ அம்மு உனக்கு புரியுதா இல்லையா? நான் எப்படி?" என்றவன் "நீ இருக்கும் போது... உனக்கு முன்னாடி, சரிவராது டா" என்றான். 

"ஹலோ அண்ணா இப்போதான் எனக்கு டிவெண்டி ஒன். இப்பவே என்ன கல்யாணம் பண்ணி துரத்தி விட்டுடலாம்னு பாக்குறீங்களா? பர்ஸ்ட் உங்களுக்கு கல்யாணம் ஆகட்டும். வீட்டுக்கு அண்ணி வரட்டும். உங்களையும் தாத்தாவையும் அவங்க நல்லா பார்த்துக்கட்டும். அவங்க கூட நானும் கொஞ்ச நாள் டைம் ஸ்பென்ட் பண்ணனும். அதுக்கு அப்புறம் தான் எனக்கு எல்லாம் ஓகேவா?" என்றாள்.

அஸ்வின் பதில் சொல்லாது இருக்க,

"எதுக்கு நீங்க இவ்ளோ கவலை படுறீங்க?" எனக் கேட்டவள் அவனது பதிலுக்காகக் காத்திருக்க...

"நான் என் மேரேஜ் பத்தி எல்லாம் நினைக்கவே இல்லடா அம்மு. இப்போ திடீர்னு இப்படி சொன்னா நான் என்ன சொல்ல? எனக்கு என்ன முடிவெடுக்கணும் தெரியல. நான் இன்னும் பிரிப்பேர் ஆகலடா" எனக் கூறினான்.

"இதில் பிரிப்பேர் ஆக என்ன இருக்கு?" எனக் கேட்டவள், "தாத்தா இப்போதானே பொண்ணு பார்க்கலாம் சொல்லி இருக்காங்க. மினிமம், அட்லீஸ்ட் மேக்சிமம் ஆறு மாதம் ஆகும். நீ கேட்ட ஸ்பேஸ் உங்களுக்கு கிடைக்குது தானேண்ணா! ஏன் வேணாம் சொல்றீங்க?" என்றாள்.

.......

"ஒன் சிங்கிள்... வேலிட் ரீசன் சொல்லுங்க. என்னை சொல்லக்கூடாது. எனக்காகன்னு நீங்க யோசித்தது எல்லாம் போதும். ட்வெண்ட்டி நயன் ஆகுது. இப்போ பண்ணிக்காமல் வேறெப்போ பண்ணுவாங்கண்ணா? இதில் நான் தாத்தாவுக்குத்தான் சப்போர்ட்" என்றாள்.

"அம்மு... பயமா இருக்குடா. உனக்கு எல்லாம் முடியட்டுமே!" என்ற அஸ்வினுக்கு வெண்பா தங்கை மட்டுமல்ல. அவனின் முதல் குழந்தை.

அஸ்வினுக்கும் வெண்பாவுக்கும் ஏழு வருட வித்தியாசம். வெண்பா பிறந்த சில மாதங்களிலேயே அப்போது ஊரின் கோவில் திருவிழாவில் நடந்த திடீர் தீ விபத்தில் அஸ்வினின் அன்னை மாட்டிக்கொள்ள, அவரை காப்பாற்ற சென்ற அவனின் தந்தையும் ஒன்றாக இறந்து போயினர். அதன் பின்னர் அவர்களுக்கு அனைத்தும் தாத்தா சண்முகம் என்றாகிட, வெண்பாவுக்கு யாதும் அஸ்வின் தான். அவனின்றி வெண்பா இருந்தது இல்லை. கல்லூரி படிப்பிற்காக மட்டுமே தங்கையை பிரிந்தது. 

வரப்போகிற பெண் தன்னோடு சேர்த்து தனது தங்கை மற்றும் தாத்தாவையும் அன்பாய் அரவணைத்து பார்த்துக்கொள்ள வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு அஸ்வினிடம். அது குறித்தே திருமணத்தில் அவனது சஞ்சலம்.

"பொண்ணு பார்ப்போம் அண்ணா. பேசிப்பாரு. உனக்கு பிடித்தால் தான் கல்யாணம். நிச்சயம் தாத்தா உன்னுடைய மனசுக்கு ஏத்த பொண்ணாதான் பார்த்திருப்பாரு" என்றவளுக்கு கல்லூரி செல்ல நேரமாகிறதென அஸ்வின் தான் அழைப்பை வைத்திருந்தான்.

மீண்டும் மாலையே தங்கைக்கு அழைத்து,

"நாளைக்கு பொண்ணு பார்க்க போகணுமாம்டா" என்றான் அதிர்வாய்.

"சூப்பர்'ண்ணா! போயிட்டு வாங்க" என்றவள், "அதுக்குள்ளவா?" என்று ஆச்சரியமாக வினவினாள்.

அஸ்வினிடமிருந்து அலைபேசியை பறித்த சண்முகம்,

"மூணு மாசமா பார்த்துகிட்டு இருக்கேன். நாலு நாள் முன்னதான் ஒரு பொண்ணு இவனுக்கு ஏத்த மாதிரி அமைஞ்சுது அம்மு. பொண்ணு வீட்டுல பேசிட்டு தான் காலையில இவன்கிட்ட சொன்னேன். பொண்ணு சென்னையில வேலை பாக்குதாம். இன்னைக்கு லீவுக்கு வருதாம். நாளைக்கு வந்து பார்க்க முடியுமான்னு சாயங்காலம் தான் போன் போட்டு கேட்டாங்க. நானும் சரின்னுட்டேன்" என்றவர், "ஏன் முன்னாடியே சொல்லல" என்று அவள் கேட்டதற்கு, "இவன் பிடி கொடுக்க மாட்டானே! அதான் ஏற்பாடு பண்ணிட்டு சொல்லலான்னு" என்றார்.

"ஏன் கல்யாணத்தையும் முடிச்சிட்டு சொல்ல வேண்டியது தானே" என்ற அஸ்வின் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சென்று இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

"நீயில்லாமல் அது முடியாதே" என்றவர் அவனின் முறைப்பை கண்டு கொள்ளாதவராக, "இனி இவன்கிட்ட நாளைக்கு அங்கு போயிட்டு வர வரைக்கும் பேசாத அம்மு. ஓவரா பண்ணுவான்" என்றார்.

"பொண்ணு டீட்டெயில்ஸ் எல்லாம் ஓகேவா தாத்தா. அண்ணாக்கு செட் ஆகுமா?" அண்ணனின் மீதுள்ள அக்கறையில் தெரிந்துகொள்ள நினைத்தாள்.

பெண்ணின் பெயர், படிப்பு, தந்தையின் பெயர், அவர் என்ன செய்கிறாரென மேலோட்டமாக சொல்லியவர்,

"பொண்ணு போட்டோ அனுப்பட்டுமா அம்மு?" எனக் கேட்டிருந்தார்.

"அண்ணா நாளைக்கு பார்க்கட்டும் தாத்தா. அவங்களுக்கு பிடிச்சதுன்னா, நான் போட்டோ பார்க்கிறேன்" என்றுவிட்டாள்.

"சரிடாம்மா. நேரத்துல சாப்பிட்டு படு" என்றவர் அலைபேசியை வைத்துவிட்டு பேரனின் அருகில் வந்து அமர்ந்தார்.

உம்மென்று இருந்த அஸ்வின், அவர் அருகில் அமர்ந்ததும் அவரது மடியில் தலை சாய்த்து நீள்விருக்கையிலேயே உடலை குறுக்கி படுத்துக்கொண்டான்.

பேரனின் முன்னுச்சி கேசம் கோதியவர்,

"நீ நினைத்து பயப்படுற அளவுக்கு எதுவும் ஆகாது அப்பு. தங்கமான பொண்ணு. நான் விசாரிச்சிட்டேன். நீதான் நாளைக்கு நேரில் பார்க்கப்போறியே... முடிவு பண்ணிக்கோ" என்றார்.

"உங்களையும் அம்முவையும் புது சொந்தத்துக்காக என்னால் விட்டுக்கொடுக்க முடியாது தாத்தா" என்றவனின் குரலில் கரகரப்பு.

"அட லூசுப் பயலே! நடக்கிறதுக்கு முன்னாடியே அதை நினைத்து கவலைப்படுவாங்களா? எல்லாம் நல்லதாவே நடக்கும். மனசை போட்டு உழட்டிக்காம நல்லா தூங்கு. அப்போதான் நாளைக்கு முகம் பார்க்க நல்லாயிருக்கும்" என்றவர் அஸ்வினிடம் பெண்ணை பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்ட பின்னரே அவனை உறங்க அனுப்பி வைத்தார்.

அஸ்வின் தன்னுடைய திருமணத்தை பற்றியெல்லாம் யோசித்துக்கூட கிடையாது. தங்கையும் தாத்தாவையும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்கிற எண்ணம் மட்டுமே அவனிடம். எப்போதும். தங்கையை விட்டு இருக்க முடியாது என்பதற்காக கோயம்புத்தூரிலே கல்லூரி படிப்பை முடித்தவன், தன் தாத்தா துவங்கி நடத்தி வந்த சணல் ஆலையை கையில் எடுத்துக்கொண்டான். பல ஏக்கரில் தென்னந்தோப்புகள் இருந்திட, தேங்காய் பதப்படுத்தும் ஆலை ஒன்றையும் துவங்கி, தேங்காவை மூலப்பொருட்களாகக் கொண்டு செய்யப்படும் அனைத்து வகை பொருட்களையும் தயாரிக்க ஆரம்பித்தான். இப்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. வீடு, தொழில் என்று மட்டுமே இருந்தவனுக்கு இன்று தான் முதன் முதலில், அதுவும் சண்முகம் சொல்லிய பின்னர் தான் திருமணம் என்கிற பகுதியே நினைவிற்கு வந்தது.

சண்முகம் மற்றும் வெண்பா கூறியவற்றோடு பலதும் யோசித்தவன் அவனை அறியாது உறங்கிப்போனான்.

*******

தமிழ் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பூர்விக்காகக் காத்திருந்தான்.

பூர்வி ஊட்டியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் எச்.ஆர் ஆக வேலை செய்கிறாள்.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி மூன்று மணி நேரம் முப்பது நிமிட பயணம் என்பதால் அங்கேயே தோழியுடன் தனி வீடு எடுத்து தங்கியிருக்கிறாள்.

பூர்வி மேல் படிப்பும் முடித்து வேலைக்கு செல்கிறேனென்று சொல்லிட அகிலாண்டம் வேண்டாமென மறுத்தார்.

தேவராஜ் அதனை கண்டுகொள்ளவே இல்லை.

"வெளியுலகம் தெரியணுமென்றால் அவளுக்குன்னு சில அனுபவங்கள் வேணும்மா. அது அவள் வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும்" என்று அகிலாண்டத்தின் வாயினை அடைத்துவிட்டார்.

தேவராஜிடம் ஆண் பிள்ளை பெண் பிள்ளை என்கிற வேறுபாடு எப்போதும் கிடையாது. அவர்களின் நியாயமான ஆசைகளை தந்தையாக நிறைவேற்றி வைத்திடவே விருப்பம் கொள்வார்.

தமிழுக்கு விரும்பி படித்த படிப்பாக இருந்தாலும், இயற்கையோடு அமைதியான சூழலில் வேலை பார்த்திடவே விருப்பம். ஆதால் தங்களின் எஸ்டேட் பொறுப்பை கையிலெடுத்துக் கொள்கிறேன் என்றதும் எவ்வித தடையும் விதிக்காது முழு சுதந்திரம் கொடுத்து தான் விலகிக்கொண்டார்.

மகன் தன்னைவிடவே மிகுந்த பொறுப்புடன் தொழிலை வளர்ச்சியில் கொண்டு செல்வதில் தேவராஜுக்கு அத்தனை பெருமை.

"பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து நீயெதுக்கு தேயிலை தோட்டம், கிழங்கு வயலுன்னு வெயிலில் இருக்க நினைக்கிற? நாள்பூறா ஏசி போட்ட ரூமில் இருக்கும் வேலைக்கு போகலாம்ல" என்று அகிலாண்டம் தன் அதிருப்தியை வெளிப்படுத்த...

"பெரிய படிப்பு படித்தது என்னுடைய அறிவு வளர்ச்சிக்குத்தான். உலகம் எப்படின்னு பகுத்தறியத்தான். வேலைக்காக இல்லை" என்றவன், "மெஷின் வாழ்க்கை" எனக்கு ஒத்துவராது" என்று அப்பேச்சிற்கே முற்றுப்புள்ளி வைத்திருந்தான்.

"உன் பசங்க ரெண்டு பேருக்கும் ரொம்பத்தான் இடம் கொடுக்கிற ராஜூ. என்னை மதிக்கவே மாட்டேங்குதுங்க" என்று அங்கலாய்ப்பாக மொழிந்த அன்னைக்கு தேவராஜிடம் புன்னகை மட்டுமே பதிலாக.

பிள்ளைகளை கைக்குள்ளே வைத்திருப்பதை விட, நான் கை கொடுக்கிறேன்... உனக்கான பாதையை நீயே உருவாக்கிக்கொள் என்று சுதந்திரம் அளிப்பதே அவர்களின் மீது பெற்றோருக்கு இருக்கும் அதிகபட்ச உரிமை என்று எண்ணம் கொண்டவருக்கு தன்னிரு பிள்ளைகளையும் நல்லமுறையில் வளர்த்திருப்பதில் தந்தையாய் அத்தனை மகிழ்வு.

அவரிடம் பிள்ளைகளின் விருப்பத்திற்கே முதலில் முன்னுரிமை.

அதனாலேயே இருபத்தி ஏழு வயதாகியும் பூர்வியின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து திருமணம் செய்யாது இருக்கிறார்.

அகிலாண்டம் தான் புலம்பிக்கொண்டு இருப்பார்.

"அவள் வயசு பொண்ணுங்களாம் அம்மாவகிட்டாலுங்க... இவள் வயித்துல என் கொள்ளு பேரனை பாரத்துப்புடலான்னு நினைச்சா என் ஆசை நிறைவேறாது போலவே" என்ற பாட்டை வார்த்தை மாறாது தினமும் சொல்லிடுவார்.

"இத்தனை வயதிற்கு மேல் திருமணம் செய்யாது இருந்தால் சரி இருக்காதுங்க" என்று தனம் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகே பூர்வியிடம் பேசி, அவள் ஒப்புதல் பெற்ற பின்னரே மாப்பிளை பார்க்கத் தொடங்கினார்.

அவள் விடுமுறைக்காக ஊருக்கு வரும் சமயம் நல்ல பையனின் விபரம் கிடைக்க, பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்துவிட்டார்.

"ஹாய் தமிழ்?"

கல் பெஞ்சில் அமர்ந்து அலைப்பேசியின் திரையை மேலுயர்த்திக் கொண்டிருந்தவன் தன் பெயர் விளிப்பில் யாரென்று பார்த்தான்.

அவனின் பள்ளி வயது தோழன். ஒரே ஊர் தான். இப்படி அடிக்கடி பார்க்கும் நேரங்களில் பேசிக்கொள்வது மட்டுமல்ல. தமிழுக்கு அவ்வூரிலிருக்கும் உற்ற நண்பனும் மகேஷ் மட்டுமே!

"என்னடா இங்க உட்கார்ந்திருக்க, யாருக்கு வெயிட்டிங்?" எனக் கேட்ட மகேஷ் அவனருகில் வந்து அமர்ந்தான்.

அலைப்பேசியை சட்டை பையில் வைத்தவன்,

"பூர்வி வறா(ள்)" என்றான்.

"ம்ம்ம்... அக்காக்கு எப்போ கல்யாணம்?" 

"இன்னும் கொஞ்ச நாளில் நடந்திடும்" என்ற தமிழ், "நீயென்ன இங்க?" எனக் கேட்டான்.

"என் வீடு இந்தப்பக்கம் தான் மறந்துப்போச்சா?"

"அது தெரியுது. ஸ்டேஷன் பார்க்கில் வந்திருக்கியேன்னு கேட்டேன்டா" என்ற தமிழ் மற்ற மகேஷின் பேச்சு பலவற்றை தொட்டு மீள,

"அக்காக்கு முடிந்தால் உனக்குத்தான். இனியாவது சொல்ல பாரு" என்றான் மகேஷ்.

தமிழிடம் விரிந்த புன்னகை.

"எப்போ சொன்னாலும் சிரிச்சே சரிகட்டிடு. பதில் சொல்லிடாத" என்ற மகேஷ், "பார்த்துடா டிராக் என்கேஜ்ட் ஆகிடப்போகுது" என்றான்.

"அதற்கு சான்ஸே இல்லை மச்சான்" என்று மகேஷின் தோளில் தமிழ் அடி ஒன்றை வைத்திட ரயில் வரும் அறிவிப்பு ஒலித்தது.

சில நொடிகளில் ரயில் வந்து நின்றிட, அதிலிருந்து பூர்வி இறங்கினாள்.

தன் தம்பியை கண்டதும் கண்கள் மின்ன அருகில் வந்தவள் இடையோடு கையிட்டு பக்கவாட்டகா அணைத்து விடுத்தவள்... 

மகேஷை கண்டு இதழ் விரித்தாள்.

"ஹாய் மகேஷ். எப்படி இருக்க?"

"நல்லாயிருக்கேன் க்கா. நீங்க?"

"சூப்பரா இருக்கேன்" என்றவள், "பசிக்குது தமிழ்" என்றிட, "சரிடா பார்க்கலாம். அப்புறம் வீட்டுக்கு வா" என்று சொல்லி மகேஷிடமிருந்து விடைபெற்று தமக்கையை கூட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

"ஸ்நாக்ஸ் எதுவும் வச்சிக்கலையா?"

தன்னுடைய இருசக்கர வாகனத்தின் முன் பூர்வி கொண்டு வந்திருந்த சிறு பையினை வைத்தவனாக உட்கார்ந்தவன் பூர்வி தனக்கு பின்னால் அமர்ந்ததும் வினவினான்.

"நாலு மணி நேர ட்ராவலுக்கு சிப்ஸ் எங்கிருந்துடா போதும்?" என்றவளிடம் வண்டியின் முன்னிருந்த உறையிலிருந்து தேங்காய் வகை பட்டர் பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை எடுத்து கொடுத்தான்.

"வாவ்... தேன்க்ஸ் டா" என்றவள் அதில் ஒன்றை எடுத்து சுவைக்க, தமிழ் வண்டியை முடுக்கினான்.

"சான்ஸே இல்லைடா தம்பி. இந்த பிஸ்கெட் மட்டும் எப்படி இம்புட்டு டேஸ்டுன்னு" என்றவள் கண்கள் மூடி அதன் சுவையை உள்வாங்கி சிலாகித்தவளாக சொல்லிட தமிழிடம் அர்த்தமான புன்னகை.

அந்த வகை பிஸ்கெட் மார்க்கெட்டில் வருகை புரிந்த நாளிலிருந்து பூர்விக்கு அதன் ருசியின் மீது அலாதி பிரியம்.

"உனக்கு வேணுமா?"

"வேண்டாம்" என்றவன், "அந்த பிஸ்கெட் ஓனரே உனக்கு சொந்தமாகப் போறாரு" என்றான்.

"என்ன சொல்ற? புரியலடா!"

"புரிஞ்சிடும்." வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் கூறினான்.

"என்னவோ சொல்ற" என்று இறங்கியவள், "அந்த அல்டாப்பு வீட்டில் இருக்கா?" என்று வீட்டிற்குள் பார்த்தபடி கேட்டாள்.

"வீட்டில் இல்லாமல் வேறெங்க இருப்பாங்க. அம்மாவுக்கு எதாவது வேலை வைத்தபடி நாட்டாமை பண்ணிக்கிட்டு இருக்கும்" என்றவன், "எல்லாம் மாமாவுக்காக பார்க்க வேண்டியதா இருக்கு" என்றவனிடம் மிதமிஞ்சிய கடுப்பு.

"சரி விடுடா..." என்ற பூர்வி தம்பியின் தோள் தட்டி உள்ளே செல்ல... தமிழ் வண்டியை நிறுத்திவிட்டு அவளின் பின் சென்றான்.

பூர்வி நேராக தன் அன்னையை தேடித்தான் சென்றாள்.

"நான் இங்கொருத்தி குத்து கல்லாட்டம் உட்கார்ந்திருக்கேன். என்னை கண்டுகிறாளா பாரு. எப்படியிருக்கீங்கன்னு ஒரு வார்த்தை கேட்டிருந்தால் என்ன?" என்று முகவாயினை அகிலாண்டம் தன் தோளில் வெட்டி இடிக்க...

"குத்து கல்லு தானே உட்கார்ந்திருக்குன்னு நினைச்சிட்டாங்க போல" என்று அவருக்கு எதிரே அமர்ந்தான் தமிழ்.

'இவனை கவனிக்கமா விட்டுட்டோமே' என்று மனதில் முனங்கிய அகிலாண்டம், "இந்நேரத்துக்கு வந்திருக்க ராசா?" என்று அவனை பார்த்தார்.

"என் வீடு நான் எப்போ வரேன், போறன்னு யாருக்கிட்ட சொல்லணுமாக்கும்" என்றவன் தோரணையில் அகிலாண்டம் வாயினை மூடிக்கொண்டார்.

அப்போது அறைக்குள்ளிருந்து வெளியில் வந்த தேவராஜ்,

"பாப்பா வந்தாச்சா தமிழு?" எனக் கேட்டபடி அவனருகில் கதிரையில் அமர்ந்தார்.

"ம்ம் ப்பா."

"பையன் போட்டோ காட்டினியா தம்பி? பிடிச்சிருக்காமா?" மகளின் மனம் அறிந்திட நினைத்தார்.

"இன்னும் அதைப்பத்தின பேச்சில்லை ப்பா. நைட் கேட்கிறேன்" என்ற தமிழ், "எப்படியும் நாளைக்கு நேரில் பார்க்கத்தானே போறாங்க" என்றான்.

இருவரின் பேச்சினையும் கவனித்த அகிலாண்டம்,

"அவள் என்னா சொல்றது? பையன் நல்ல வசதி. பெத்தவங்க கிடையாது. நம்ம பொண்ணுக்கு மாமனார் மாமியார் பிக்கல் இருக்காது. ஒரே தங்கச்சி தான். அவளும் சீக்கிரம் வேற வீட்டுக்கு போயிடுவாள். இருக்கிறது ஒரு தாத்தன். அந்த கிழமும் போயி சேர்ந்திடும். அப்புறம் என்ன... என் பேத்தி தான் அங்க ராணி" என்றவர், "இதையே பேசி முடிச்சிடு" என்று மகனிடம் கட்டளையாகக் கூறினார்.

அவரின் பேச்சு இருவருக்கும் ஒவ்வாமையை கொடுத்தது.

"உன் பொண்ணு ஏன் இப்படி இருக்கான்னு இப்போ தான் புரியுது" என்ற தேவராஜ் முகம் சுளித்தவராக அங்கிருந்து எழுந்து சென்றார்.

தேவராஜ் சென்றது தனம் மற்றும் பூர்வி இருந்த வீட்டின் பின்னிருக்கும் தோட்டத்திற்கு. 

அன்னையிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டே பூக்களை பறித்துக்கொண்டிருந்த பூர்வி தந்தையை கண்டதும் ஓடிவந்து அணைத்துக்கொண்டாள்.

தமிழும் அங்கு வர, அந்நேரம் பாசமிகுந்தவர்களின் சந்தோஷ கணங்களாக நகர்ந்தது.


    


Leave a comment


Comments


Related Post