இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 19 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 17-04-2024

Total Views: 22210

“அண்ணி உங்களுக்கு இந்த கலர் நல்லா இருக்கும்…” என்று அக்சயா ஒரு புடவையை காட்ட

“ம்ம் நல்லா இருக்கு அச்சு… வைலட் கலர் எனக்கும் பிடிக்கும் தான்..” என்று அதை தன் மீது போட்டு காட்டினாள் அபிலாஷா.

“நல்லா இருக்கு அபி… ஆனா இன்னும் கொஞ்சம் பெரிய பார்டரா பார்க்கலாம் ரொம்ப சிம்பிளா இருக்கு.” பத்மாவதி சொல்ல பார்வதி வெறும் பார்வையாளராக அமர்ந்திருந்தார்.

அக்சயா கல்லூரியில் இருந்து வந்ததும் ஷாப்பிங் என்று சொல்ல உற்சாகமாக கிளம்பி விட்டாள். பார்வதி வர மறுக்க “ஒத்தப்படையா போகக்கூடாது வாங்க பார்வதி” என்று வற்புறுத்தி அழைத்து வந்தார் பத்மாவதி.

முதலில் அபிலாஷாவிற்கு புடவை எடுத்து விடலாம் என்று பார்க்க ‘விலையை பற்றி யோசிக்க வேண்டாம். இது பெண் வீட்டு முறையாக தாங்கள் செய்ய வேண்டியது.’ என்று பத்மாவதி சொல்லிட அக்சயா எடுத்து காட்டும் புடவை அனைத்தும் “சிறிய பார்டர் இன்னும் கொஞ்சம் டிசைன் ஜரிகை நிறைய இருக்கட்டும்..‌ இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியா பார்க்கலாம்.” என்று பத்மாவதி சிறந்ததில் சிறந்ததாக தேடிக் கொண்டு இருக்க

அபிலாஷாவோ நந்தனோடு போன முறை வந்த போது தன்னை அமர்த்தி அவன் தேர்ந்தெடுத்த விதத்தை மனதில் எண்ணி இன்றும் அவனோடு வந்திருக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

அவர்கள் பெண்ணிற்கு அவர்கள் எடுக்கிறார்கள் என்று பார்வதி அமைதி காக்க

“ஆன்டி நான் என்ன எடுத்தாலும் உங்களுக்கு பிடிக்கல… நீங்களே செலக்ட் பண்ணுங்க…” என்று அக்சயா சோர்வுற

“அச்சோ..‌ தப்பா எதுவும் எடுத்துக்காதேமா அக்சயா… அபி எங்களுக்கும் பொண்ணு மாதிரி தானே… வாழ்க்கையில ஒரு முறை தானே கல்யாணம் ரிசப்ஷன் இதெல்லாம் அதான்..” என்று பத்மாவதி விளக்கம் சொன்னவர்

“அபி..‌ உனக்கு பிடிச்சதே எடுமா…” என்று சொல்ல எடுத்து குவித்து வைத்திருந்த புடவைகளை ஆராய்ந்து அரக்கு வண்ணத்தில் ஒரு புடவையை எடுக்க அனைவருக்கும் அது பிடித்தது. 

“அபி அக்சயா ரெண்டு பேருக்கும் லெகங்கா எடுக்கலாம்.” என்று பத்மாவதி சொல்ல

“ஆன்டி அண்ணா எனக்கு சுடி ஒன்னு வாங்கி கொடுத்திருக்காரு. எனக்கு அது போதும்.” அக்சயா சொல்ல

“அச்சு… உன்னோட காலேஜ் பங்கஷனுக்காக நந்தன் வாங்கி கொடுத்தது தானே..‌ அது இருக்கட்டும். ஆனா ரிஷப்ஷன் அன்னைக்கு நீயும் லெகங்கா போட்டுக்கோ” என்று அபி வற்புறுத்தி ஒன்றை எடுத்து கொடுத்தாள்.

“வரமாட்டேன்” என்று சொன்ன நந்தனை வற்புறுத்தி ப்ரதீப் அழைத்துச் சென்று அவனுக்கு வேண்டிய உடைகள் எடுத்து தந்தான்.

மறுநாள் அக்சயா கல்லூரிக்கு சென்றிட அலுவலகம் கிளம்பி வந்த நந்தனை “நந்தா… அபியும் ஆஃபிஸ் போகனும் னு சொன்னா ப்பா கொஞ்சம் கொண்டு போய் ட்ராப் பண்ணிட்டு போ…” பார்வதி சொல்ல

“சரி ம்மா ஏற்கனவே லாஷா சொல்லிட்டா நானே கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வரேன்.” நந்தன் சொல்ல அபிநந்தன் அபிலாஷா இருவருக்கும் தனித்தனியாக மதிய உணவு கட்டிக் கொடுத்தார் பார்வதி.

இருவரும் பைக்கில் செல்ல வழக்கம் போல பூக்கடையில் நிறுத்தி முழம் கணக்கில் மல்லிப்பூ வாங்கி அவளின் கையில் கொடுக்க புன்னகையோடு வாங்கிக் கொண்டாள்.

நாட்கள் ஓட மோகன்ராம் ப்ரதீப் இருவரும் தங்கள் வீட்டு நிகழ்வு போல ஓடி ஆடி வேலை செய்ய அபிநந்தன் வீட்டில் வழக்கம் போலவே நகர்ந்தது. நந்தன் அலுவலகம் சென்று வர அக்சயா கல்லூரி சென்று வர ஏதாவது முக்கிய வேலை இருந்தால் மட்டுமே அலுவலகம் சென்று வரும் அபிலாஷா மற்ற நேரங்களில் சமையல் செய்வது துணி தைப்பது மற்ற வீட்டு வேலைகள் கற்றுக் கொள்வது என்று எப்பொழுதும் பார்வதி பின்னாலேயே சுற்றி வந்தாள். அவரும் அக்சயாவை போல தன் மகளாக கருதி அனைத்தும் சிரிப்போடு சொல்லி கொடுப்பார். 

ஏதாவது ஒரு உணவு அபி சமைத்து நன்றாக வந்துவிட்டால் அக்கம் பக்கத்து வீட்டுகளுக்கு எல்லாம் சிறு கிண்ணத்தில் கொண்டு சென்று கொடுத்து “என் மருமகள் செய்தா எப்படி இருக்கு?” என்று கேட்பார்.

ஆனால் கொஞ்சம் சொதப்பலாக வந்துவிட்டால் தன் பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் மறைத்திடுவார். இந்த தாயன்பில் அபிலாஷா நெக்குருகி போயிருந்தாள்.

நந்தனை விட அவனின் அன்னையோடு அவ்வளவு ஒன்றிப் போய்விட்டாள் அபிலாஷா.

இந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பு சற்று தயக்கத்துடன் அபிநந்தன் அருகில் வந்து அமர்ந்தாள் அபிலாஷா.

“என்ன லாஷா ஏதாவது பேசனுமா?” என்று அவன் கேட்க

“அது வந்து நந்தன்… எனக்கு என்ன தேவையோ அதை நீங்க பார்த்து பார்த்து செய்றீங்க.. பட் எனக்கு ஒரு ஆசை… என் அம்மா என் கூட இருக்க முடியல ஆனா அவங்க ஆசீர்வாதம் எனக்கு இருக்கனும். ஐ மீன் அம்மாவோட ஜூவல்ஸ் நான் பங்க்ஷன் அப்போ போட்டுக்க விரும்பறேன்… ஆனா உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம் நந்தன்..” என்று சொல்ல மெல்லிய புன்னகை தந்தவன்

“இதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம் லாஷா…  உன் அம்மாவோட ஜூவல்ஸ் தானே போட்டுக்கோ அவ்வளவு தானே…” என்று அவன் சாதாரணமாக சொல்ல

“அது இல்ல அந்த நகை எல்லாம் அங்க… அந்த வீட்ல இருக்கு நந்தன்…” என்று தன் தயக்கத்தின் காரணத்தை உணர்த்த சற்று யோசித்த அபிநந்தன்

“சரி..‌ நாளைக்கு நானும் வரேன்… ரெண்டு பேரும் சேர்ந்து போயே எடுத்திட்டு வரலாம்.” என்று சொல்லிட 

“ரொம்ப தேங்க்ஸ் நந்தன்… பட் அங்க இருக்கிறவங்க எதுவும் பேசினா… ம்ம்… பேச மாட்டாங்க. ஆனா வேணும்னே வம்பிழுக்க ஏதாவது பேசுனா நீங்க எதையும் மனசுல வைச்சுக்காதீங்க நந்தன்..” என்று வேண்டுகோள் வைக்க

“ம்ம் சரி…” என்று புன்னகையோடு சொல்ல அவன் தோளில் சாய்ந்து கொள்ள அவனும் அணைத்துக் கொண்டு உறிங்கிப் போயினர்.


“டேய் முகில்… ஏன்டா இப்போ இவ்வளவு கோபமா முகத்தை தூக்கி வைச்சிட்டு இருக்க? ஏங்க… நீங்களாவது என்ன ஏதுன்னு கேளுங்க..” என்று புலம்பாக புலம்பிக் கொண்டு இருந்தார் சுகந்தி அபியின் அத்தை..

“டேய் முகில்… என்னடா இப்போ அந்த அபி போனா என்ன அதான் இந்த சொத்தை சுகபோகமா அனுபவிக்க வாய்ப்பு கிடைச்சிருச்சே.. அவளை விட இன்னும் பணக்கார பொண்ணா பார்த்து உனக்கு கட்டி வைக்கிறேன் டா…” மகனுக்கு ஆறுதல் சொல்வது போல கிருபாகரன் சொல்ல

“ம்ம் கிழிச்சீங்க…” என்று முகில் சீறலாக கூற இருவருமே அதிர்ந்து பார்க்க

“இத்தனை வருஷம் நீங்க எல்லாரும் வளர்த்த பொண்ணு உங்க பேச்சை கேட்கலை… இதுல இதை விட பெரிய சம்பந்தம் தேடி பிடிக்க போறீங்களா?” என்று எகத்தாளமாக கேட்க

“டேய் என்னடா இப்படி பேசுற?” சுகந்தி அதிர்ச்சி மாறாமல் கேட்க

“அம்மா அமைதியா இரு… இல்ல இன்னும் ஏதாவது மரியாதை குறைவா பேசிடுவேன். உன்கிட்ட என்ன சொல்லிட்டு நான் கொல்கத்தா போனேன் ம்மா… ம்ம்… உன் சின்ன அண்ணா அண்ணியை கன்வீன்ஸ் பண்ணி அவங்களும் என்னை அபிக்கு மாப்பிள்ளையா சொல்ற மாதிரி ஏற்பாடு பண்ணி வை னு சொன்னா நீயும் உன் நாத்தனார் ரூபவதியும் நீயா நானா சண்டை போட்டு இப்போ அபி வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா… 

இப்போ அவளுக்கு ரிசப்ஷன் ஏற்பாடாகி இருக்கு கிளம்பு னு என்கிட்டயே சொல்றீங்க? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?” தாய் தந்தையை நார் நாராக கிழித்து தொங்க விட

“டேய் அவ போனா என்னடா அதான் சொத்து அப்படியே தானே இருக்கு. இவ்வளவு சொத்தும் உன் அம்மாக்கும் உன் மாமாவுக்கும் பாதி பாதி தானே டா உன் மாமாவை ஏமாத்தி முழு சொத்தை எப்படி அபகரிக்கிறதுன்னு யோசிக்கலாம்…” என்று சொத்திலேயே குறியாக கிருபாகரன் பேச

“அப்பா…” என்று பல்லை கடித்தான். “அப்பா.. எப்போ பாரு சொத்து சொத்து னு… யாருக்கு வேணும் இந்த சொத்து… நான் நினைச்சா இதை விட பத்து மடங்கு அதிகமா சம்பாதிப்பேன். அதுக்கான முயற்சில தான் இப்போ டெல்லி மும்பை கல்கத்தா னு சுத்திட்டு இருக்கேன். எனக்கு தேவை அபி ப்பா..‌ அவளோட அழகு…

என் பார்வைக்கு கட்டுப் பட்டு பல பெண்கள் விழுந்து கிடக்கப்போ என்கிட்டயே அடங்காத அந்த திமிரு… அதை நான் அடக்கி அவளை ஆளனும்… அப்போ தான் நான் ஆம்பளையா பொறந்ததுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.” என்று கூறியவன் விழிகள் வெறியில் ஜொலிக்க

“அதான் கல்யாணம் ஆகிடுச்சே டா..” என்று இழுத்த சுகந்தியை முறைத்தவன்

“கல்யாணம் ஆனா விட்டுடுவேனா? இந்த ஜென்மத்துல அந்த அபியை எனக்கு சொந்தமாக்காம விட மாட்டேன்.” என்று வில்லத்தனமாக சிரிக்க வாசலில் ஒரு பைக் வந்து நின்றது.

அபிநந்தன் மற்றும் அபிலாஷா வீட்டு வாசலில் வந்து இறங்க “வா அபி…” என்று அழைத்த சுரேந்தர் ரூபவதி முகம் சிரிப்பை காட்டினாலும் உள்ளுக்குள் எதற்கு வந்தாள் என்று உறுத்தல் இருக்கவே செய்ய

“நான் மட்டும் தனியா வரலை சித்தப்பா சித்தி..” என்று புன்னகை மாறாமல் என் கணவனையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்று உத்தரவிடுவது போல கூற

“ஆ… வாங்க” என்றனர் பொதுவாக…

பைக் சத்தம் கேட்டு பேச்சை நிறுத்தி விட்டு முகில் தன் அறையில் இருந்து வர அவன் பின்னாலேயே அவனின் பெற்றோர்களும் வர

“வாங்க தம்பி… வா அபி” என்று பாசாங்கு சிரிப்போடு வரவேற்றார் சுகந்தி ஏற்கனவே அபியின் பேச்சை கேட்டு விட்டதால்…

“வாங்க மிஸ்டர் அண்ட் மிஸ்…ஸஸ் அபி” என்று முகில் இழுவையாக வஞ்சத்தை மறைத்து வரவேற்க

“ஹேய் முகில் எப்போ வந்தே? மீட் மை ஹஸ்பண்ட்… அண்ட் நந்தன்! இவன் முகில் சுகந்தி அத்தை பையன்…” என்று அவனின் குணம் தனக்கு தெரிந்தாலும் கணவனிடம் காட்டிக் கொள்ள விரும்பாமல் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தாள் அபிலாஷா.

அபிநந்தன் சிநேகமாக சிரித்தாலும் முகில் கண்களில் ஏதோ கள்ளம் இருப்பதை அறிந்து கொண்டான்.

“என்ன அபி அன்னைக்கு கூப்பிட்டப்போ அதுதான் உன் வீடு னு பேசுன… இன்னைக்கு திடீர்னு வந்திருக்க?” சுகந்தி கேட்க

“பங்ஷனுக்கு அம்மா நகைகள் போட்டுக்க ஆசைப்பட்டேன் அத்தை… அதான் நந்தன் என்னை கூட்டிட்டு வந்தாரு.” அபி பதில் சொல்ல

“ம்கூம்… உன் வீடு உன் பணம் உன் நகை… நாங்க கேட்க என்ன உரிமை இருக்கு?” என்று ரூபவதி சாதாரணம் போல சொல்ல

“எனக்கு வீடு சொத்து பணம் இதெல்லாம் முக்கியமே இல்ல சித்தி… அதெல்லாம் அம்மாவோட ஜூவல்ஸ் அதை போட்டுக்கிட்டா அவங்களோட ப்ளஸிங்க்ஸ் கிடைச்ச மாதிரி…” என்று புன்னகையோடு கூறி விட்டு

“வாங்க நந்தன்” என்று தன் கணவனை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்று தனக்கு வேண்டியவைகளை எடுத்துக் கொண்டு வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி இருந்தாள் அபிலாஷா.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post