இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...29 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 17-04-2024

Total Views: 31312

முகிலனும் மீராவும் மதிய உணவை முடித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பி இருந்தனர். இப்போ வந்துடுவேன் என்று சொல்லிச் சென்ற தரணி இன்னும் வந்திருக்கவில்லை. எப்பொழுதோ தயாராகி வழியை பார்த்தபடி வீடு முழுக்க சுற்றி வந்து கொண்டிருந்தாள் பூச்செண்டு.


‘ஏன் இவ்வளவு நேரம்…? எப்போ இருந்து வெயிட் பண்றது…? ஒருவேளை என்மேல இருக்கிற கோபத்தில ஆபீஸ்க்கே கிளம்பி போயிட்டாரோ…’ சந்தேகத்துடன் முகிலனுக்கு அழைத்தாள்.


“மாமா… அவர் இன்னும் வீட்டுக்கு வரவே இல்ல… அங்கேதான் இருக்கிறாரா…? வரலேன்னாவது கூப்பிட்டு சொல்லலாமே… ஓவரா பண்றாரு…” எரிச்சலுடன் பேசினாள்.


“இல்லடி... அவன் இங்கே வரலையே… நீங்க ரெண்டு பேரும் கிளம்பி போய் இருப்பீங்கன்னு நினைச்சேன்…”


“அப்படின்னா அந்த விசித்திராவோட கை கோர்த்துக்கிட்டே மைசூருக்கே போயிட்டாரோ… என்னை சீண்டி பாக்குறதுக்கு அடுத்து ஆயுதமா இருந்தா…?”


“உளறாதடி… அந்த பொண்ணு எவ்வளவு நல்ல டைப்… நீயே நேர்ல பார்த்தியே… என்கிட்ட வம்பளக்கிறதுக்கு பதிலா அவனுக்கு நீயே கூப்பிட்டுப் பாரேன்… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ரெண்டு பேருக்கும் புரோக்கர் வேலை பார்த்து தொலையட்டும்…” சலித்துக் கொண்டான் முகிலன்.


“ஏன் மாமா அசிங்கமா பேசுற…? உன் பிரண்டு மேல உனக்கு அக்கறை இல்லையா…?”


“முதல்ல உனக்கு உன் புருஷன்மேல அக்கறை இருக்கணும்டி… நீ வை… நான் அவன்கூட பேசுறேன்…” எரிச்சலாய் சொன்னவன் இணைப்பை துண்டித்து இருந்தான். அதன்பின் அவனிடம் இருந்தும் எந்த அழைப்புகளும் இல்லை. பொறுமை இழந்து மீண்டும் அழைத்தாள்… முழு‌ ரிங் போய் கட்டானது.


‘ப்ச்… இந்த முனி ஏன் இப்படி பண்ணது…?’ வேறு வழியின்றி தரணிக்கு அழைத்தாள்… சுவிட்ச் ஆஃப் என்று வந்தது… இருவருக்கும் மாற்றி மாற்றி முயற்சித்தும் தொடர்ந்து தோல்வியே.


‘என்னதான் ஆச்சு…? ஏன் இப்படி பண்றாங்க ரெண்டு பேரும்…?’ கோபம் தலை தூக்க மீராவிற்கு அழைத்தாள்.


“அவசரமான வேலை இருக்கிறதா சொல்லி முகி கொஞ்சம் முன்னாடிதான் கிளம்பிப் போனார் பூச்செண்டு…”


“நான் போன் பண்ணினா மாமா போனே எடுக்க மாட்டேங்குதுக்கா…” மெலிதான உதறல் தோன்றியது.


“வண்டியில போயிட்டு இருந்திருப்பார்…”


“மாமுவோட போனும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது…” கலக்கமாய் கூறினாள்.


“இப்போதானே முகி என்கூட பேசினார்…”


“நா..நான் முனி மா..மாமாவை சொல்லல… அ..அவர்…” தடுமாற்றமாய் கூற மீராவிடமிருந்து சிரிப்பு சத்தம்.


“பார்றா… இப்படியெல்லாம் ஆசையா கூப்பிடத் தெரியுது… ஆனா நேர்ல ரெண்டு பேரும் எலியும் பூனையும் மாதிரி ஆக்ட் கொடுக்க வேண்டியது. உங்க ஆக்டிங் எல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா…? ரெண்டு பேரும் கள்ளத்தனமா ஒருத்தர ஒருத்தர் ரசிச்சு சைட் அடிக்கிறதை நாங்களும் பார்த்துட்டுதான் இருக்கோம்… உன் மாமுகிட்ட இனிமேலாவது கோபம் இல்லாம நடந்துக்கப் பாரு…” மீரா கூற கலக்கத்தை தாண்டி வெட்கத்துடன் தானும் சிரித்தாள் பூச்செண்டு.


“அக்கா… நீ..நீங்களும் ரெண்டு பேருக்கும் ட்ரை பண்ணி பாருங்க… கொஞ்சம் பதட்டமா இருக்கு…”


“ஏய்… பயப்படாத… அண்ணா சார்ஜ் போடாம விட்டிருப்பார்… நான் முகிகிட்ட பேசிப் பார்க்கிறேன்…”


அதன்பின் நொடிகளும் நிமிடங்களும் நகர்ந்து கொண்டிருக்க விரல்களில் உள்ள நகங்களை கடித்து முடித்து சதைவரை கடிக்கத் தொடங்கி இருந்தாள் பூச்செண்டு. கண்கள் அடிக்கடி கலங்கிக் கொண்டிருந்தன. அடுத்தடுத்து அழைத்து மீராவும் அழைப்பை ஏற்கவில்லையே… மூவருக்கும் மாற்றி மாற்றி அழைத்து ஓய்ந்தே போனாள்.


“ஏன் மூணு பேருமே இப்படி பண்றீங்க…? என்னதான் ஆச்சு…? நான் இங்கே துடிச்சிட்டு இருக்கிறது யாருக்குமே புரியலையா…? மாமு… எங்கே போனீங்க…? மாமாவும் மீராக்காவும் ஏன் ஃபோனையே எடுக்க மாட்டேங்கறாங்க…? நான் என்ன பண்ணட்டும்…?” வாய்விட்டு புலம்பியவள் அழத் தொடங்கினாள்.


“பூச்செண்டு… என்னடா இன்னைக்கு வீட்டு பக்கம் வரவே இல்ல... தரணி பிரண்டு வந்துட்டு போயாச்சா…?” வழக்கமான அன்பான வார்த்தைகளுடன் வீட்டிற்குள் நுழைந்தார் பக்கத்து பிளாட் சுந்தரி.


“சுந்தரிம்மா…” வேகமாய் ஓடிச் சென்று அவர் கரங்களைப் பற்றிக் கொண்டாள். அவரை கண்டவுடன் கடகடவென கண்களில் கண்ணீர் வடிந்தது.


“என்னடா ஆச்சு…? ஏன் அழற…?” பதறினார் சுந்தரி.


அவள் விபரம் கூற “பயப்படாத தங்கம்… அதெல்லாம் ஒன்னும் இருக்காது…. ஆபீஸ்ல ரொம்ப முக்கியமான வேலை இருந்தா போனை சைலன்ட்ல போட்டு வச்சுருவாங்க… இல்லைன்னா மீட்டிங் போயிருப்பாங்க…” அவள் கண்ணீர் துடைத்து ஆறுதல் கூறினார்.


“என் மாமுவோட போன் சுவிட்ச் ஆஃப்னே வருது… ஆபீஸ்லயும் அவர் இல்ல… விசித்திரா அக்காவை ட்ராப் பண்ண காலையிலேயே போயிட்டார்… எவ்வளவு நேரமாச்சு பாருங்க… எ..எனக்கு ரொ..ரொம்ப ப..பயமா இருக்கு சுந்தரிம்மா…” அவர் தோளில் சாய்ந்து கேவி கேவி அழ ஆரம்பித்தாள்.


அவளை சமாதானப்படுத்தியபடியே சோபாவில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டார் சுந்தரி. தானும் தன் பங்குக்கு மூவருக்குமே அழைத்துப் பார்த்தார்… தரணியின் போன் ஸ்விட்ச் ஆஃப் மற்ற இருவரும் அழைப்பை ஏற்கவில்லை. சிறிது நேரத்தில் மீரா வீட்டிற்கு வந்திருந்தாள்… முகம் பேய் அறைந்தது போல் இருந்தது.


“அ..அக்கா…” வேகமாய் அவளிடம் ஓடிச் சென்றாள் பூச்செண்டு.


“எத்தனை தடவை போன் பண்றது…? ஏன் எடுக்கவே இல்ல…? எ..என்ன இ..இப்போ சம்பந்தமில்லாம வ..வந்திருக்கீங்க… மா..மாமா எங்கே…? மா..மாமு எங்கே…?’ தொடர் கேள்விகளுடன் கண்கள் அவளைத் தாண்டி வெளியே ஆர்வமாய் பயணித்தன.


“முதல்ல பதட்டப்படாம வந்து உட்காரு… வா…” அவளை அழைத்துச் சென்று அமர வைத்தாள். சுந்தரியும் குழப்பமாகத்தான் மீராவை பார்த்துக் கொண்டிருந்தார்.


“மா..மாமா கூட பேசினீங்களா…?”


“ம்…வந்துட்டு இருக்கார்…” உள்ளிறங்கிய குரலுடன் பதிலளித்தாள் மீரா.


“நான் போன் பண்ணினா மட்டும் ஏன் எடுக்கவே இல்ல…?” சீற்றத்துடன் கேட்க அருகில் இருந்த மேஜையில் இருந்து தண்ணீரை ஒரு குவளையில் மாற்றி பூச்செண்டின் கையில் கொடுத்து பருகச் செய்தாள்.


“மா..மாமு…?” பதட்டமாய் கேட்க “அ..அது அ..அண்ணாவுக்கு ஒ..ஒரு ஆ..ஆக்ஸிடென்…” மீரா முழுதாக கூறி முடிக்கவில்லை பூச்செண்டின் கையில் இருந்த குவளை டமார் என கீழே விழுந்து உருண்டது. 


“எ..என்ன… என்ன… ஆ..ஆக்ஸிடென்ட்டா… ஆஆஆ… அய்யோ… மாமுவுக்கா…? அய்யோ…” சத்தமிட்டு கதறியபடி மடிந்து தரையில் அமர்ந்தாள் பூச்செண்டு. சுந்தரியும் மீராவும் ஆளுக்கு ஒரு பக்கமாக அவளிடம் ஓடி சமாதானம் செய்ய “இ..இல்ல… இல்ல… என் மாமுவை நா..நான் பா..பாக்கணும்… இ..இப்பவே பா..பாக்…” வெட்டி வந்த வார்த்தைகளுடன் கத்தி கதறினாள்.


“பூச்செண்டு… நான் சொல்றதை கொஞ்சம் கேளு… அண்ணாவுக்கு ஒன்னும் இல்ல… சின்ன காயம்தான்… முகி அண்ணாவை வீட்டுக்குதான் கூட்டிட்டு வந்துட்டு இருக்கார்… உன்கிட்ட சொன்னா நீ ரொம்ப பதட்டப்படுவேன்னு தான் உன் காலை அட்டென்ட் பண்ணல… ஹாஸ்பிடல் போயிட்டு இப்ப வீட்டுக்குதான் வந்துட்டு இருக்காங்க ரெண்டு பேரும்…” அவள் முதுகை வருடியபடி அவளை அமைதிப்படுத்த முயன்றாள் மீரா.


“அ..அக்கா நீ..நீங்க சொல்றது நி..நிஜம்தானே… மாமுக்கு ஒ..ஒன்னும் இல்லையே… எ..என்னை ஏமாத்திடாதீங்கக்கா… எ..என்னால தா..தாங்க முடியாது… அ..அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா செத்தே போயிடுவேன்…. உ..உயிரோடவே இருக்க மாட்டேன்…”


எந்நேரமும் விளையாட்டும் குறும்புத்தனமும் வேடிக்கையுமாக சுற்றிவரும் சுட்டிப்பெண் தற்போது கத்தி கதறி சத்தமிட்டு அழுததில் பெண்கள் இருவருமே கலங்கிப் போயினர். 


“ஏன்டா இப்படி எல்லாம் பேசுற…? அண்ணாவுக்கு ஒண்ணும் இல்ல… நானே அவர் கூட பேசினேன்…” சொன்ன மீராவை நம்பாத பார்வை பார்த்தாள் பூச்செண்டு.


“அ..அப்போ மு..முனிக்கு போன் பண்ணுங்க...‌ நா..நான் மாமுகூட பே..பேசணும்…” மீராவின் தோளைப் பற்றி உலுக்கினாள். 


“இப்போ வந்துடுவாங்கடா…”


“இ..இல்ல நா..நான் பே..பேசணும்…” தலையை இடவலமாய் ஆட்டி சிறு குழந்தைபோல் அடம்பிடித்து அழுது கொண்டிருந்தாள்.


“அம்மு…” முகிலனின் குரல் வாசலில்… விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்… கலக்கத்துடன் அலைப்புற்று சுழன்ற கண்கள் முகிலனின் பின்னே வந்து நின்ற தரணியை பார்த்தன… அடுத்த நொடி “மா..மாமுஊஊ…” சத்தமிட்டபடி ஓடி தரணியை இறுக்கமாய் தாவி அணைத்துக் கொண்டாள். தாயை பிரிந்து துடித்து கதறும் குழந்தை மீண்டும் தாயின் முகம் பார்த்தபின் மகிழ்ச்சியிலும் வேதனையிலும் வேகம் கூட்டி இன்னும் அதிகமாய் அழுமே அதுபோல் அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டு சத்தமிட்டு அழுதாள். 


அவள் பாய்ந்து ஓடி வந்து நின்று இண்டு இடுக்கு இடைவெளி விடாமல் அழுத்தமாய் கட்டிக்கொண்ட அணைப்பில் சில நொடிகள் உறைந்து நின்றான் தரணி. “மாமு… மாமுஊஊ…” அவன் நெஞ்சில் முட்டி அழ உறைந்த சிலை மெல்ல உருகியது.


“எ..என்னாச்சு…? எ. எப்படி…?” தேம்பலுடன் கேட்டபடியே வேகமாய் அவனிடமிருந்து விலகி அவனை நீவி ஆராய்ந்தாள். அவளது கதறல் அவன் மேல் கொண்ட காதலைச் சொல்லியது… அந்த கண்ணீர் அதன் ஆழத்தைச் சொல்லியது… அவளது தவிப்பும் துடிப்பும் அவன்மேல் அவள் கொண்டுள்ள நெருக்கமான பிணைப்பைச் சொல்லியது… அமைதியாய் அவளையே பார்த்தபடி நின்றான் தரணி.


“கா..காயம்… காயம் எங்கே…?” பதட்டமாய் கேட்டவளிடம் தன்னிச்சையாய் முழங்கையை மடக்கி காட்டினான். நன்றாக சிராய்ந்து சிவந்திருந்தது… ரத்தக்கீறலில் மருந்து போடப்பட்டிருந்தது… அவன் கையைப் பிடித்துக் கொண்டு உதடு பிதுக்கி இன்னும் அழுதாள்.


“ஏ… ஏய்… பொக்கே… எ..எனக்கு ஒ..ஒன்னும் இல்ல… அழாத… அழாதடி…” அவளது அன்பின் வெளிப்பாட்டில் உள்ளம் நெகிழ்ந்து வார்த்தை தடுமாற அவள் கன்னத்தில் கை பதிக்க அந்த கையில் கன்னத்தை அழுத்திக் கொண்டவள் “இன்னும் வேற காயம் இருக்கா…?” கண்கள் அவன் உடல் முழுக்க சுழன்று ஆராய்ந்தன. அவன் இல்லை என்று தலையசைக்க “எ..என்னை ரொ..ரொம்ப பயமுறுத்திட்டீங்க மாமு…” கண்ணீர் வழிய சொன்னவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.


மற்ற மூவரும் நெகிழ்ச்சியுடன் அவர்களை ஆனந்தமாய் பார்த்துக் கொண்டிருந்தனர். சுற்றம் மறந்து சூழல் மறந்து இருவரும் இறுக்கி அணைத்து உருகி நின்றிருக்க “மீரா… அவன் இன்னும் சாப்பிடல… அவனுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வா…” முகிலனின் குரலில் வேகமாய் விலகினாள் பூச்செண்டு.


“நா..நான் எடுத்துட்டு வரேன்…” கண்களை துடைத்துக் கொண்டே சமையலறைக்குள் ஓடினாள்.


“என்ன தரணி… கவனமா இருக்கிறது இல்லையா…? எப்படி ஆச்சு..?” கவலையாய் கேட்டார் சுந்தரி. முகிலனுன் தரணியும் சோபாவில் வந்து அமர்ந்தனர்.


“விசித்ராவை டிராப் பண்ணிட்டு ஆபீஸ் வேலையா ஒரு கிளையண்டையும் பார்த்துட்டு ரிட்டர்ன் வந்துட்டு இருக்கும்போது டர்னிங்ல டக்குனு ஒரு கார் திரும்பிடுச்சு ஆன்ட்டி… சமாளிச்சு வண்டியை பிரேக் போட்டும் கண்ட்ரோல் பண்ண முடியாம இழுத்துட்டுப் போய் விழுந்துட்டேன். அதனாலதான் கை காயமாயிடுச்சு… விழுந்து வேகத்துல போனும் உடைஞ்சிடுச்சு… தப்பு கார்க்காரன் மேலதான்.. கால்ல விழாத குறையா மன்னிப்பு கேட்டான்… அவன் போன்ல இருந்துதான் முகிலுக்கு கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன்… பூச்செண்டு ரொம்ப பயந்து போயிடுவானு தான் அவகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன்…” அவன் விளக்கங்களை எல்லாம் காதில் கேட்டபடியே உணவுடன் அவன் அருகில் வந்து அமர்ந்தாள் பூச்செண்டு.


“அதுக்காக மணிக்கணக்கா பதட்டத்திலேயே வச்சிருப்பீங்களா… மாமா போன்ல இருந்து ஒரு வார்த்தை பேசி இருக்கலாமே… இந்த முனி அதைவிட… ஒரு காலையும் அட்டென்ட் பண்ணல… என் உணர்வுகளோட எல்லாரும் விளையாடி பாத்துட்டீங்க… ஒவ்வொரு நிமிஷமும் செத்துப் பிழைச்சது எனக்குதானே தெரியும்…” மீண்டும் கண்களில் கண்ணீர் திரையிட பேசியவளை காதல் பொங்க பார்த்தான் தரணி.


சாதத்தை குழம்புடன் பிசைந்து அவன் வாயருகில் கொண்டு செல்ல அதிர்ந்து விழித்தவனை “வாயைத் திறங்க…” என்று ஒரு அதட்டு போட தன்னிச்சையாய் வாயை திறந்தான். மீராவிடம் கண் ஜாடை செய்து தங்களது அறைக்குள் முகிலன் நுழைந்து கொள்ள அவளும் பின்தொடர்ந்து உள்ளே நுழைந்திருந்தாள். சுந்தரியும் நாசூக்காக வெளியேறியிருந்தார்.


“எப்போ பார்த்தாலும் பிளைட் ஓட்ற நினைப்பிலேயே வண்டியை ஓட்றது காரை ஓட்றது…” புலம்பியபடியே அடுத்த கவளத்தை அவன் வாயில் திணித்தாள்.


“வீட்ல பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கான்னு கொஞ்சமாவது நெனப்பு வேணும்…” அடுத்த கவளம் திணிக்கப்பட்டது.


“இனி வண்டியை ஓவர் ஸ்பீட்ல ஓட்டிப் பாருங்க… இடுப்பை ஒடிச்சு வீட்ல போடுறேன்…” பல்லைக் கடித்து உறுமியபடியே மற்றும் ஒரு வாய். 


இதழில் தேங்கிய புன்னகையுடன் அவள் பேச்சுக்களை ரசித்தபடியே அவள் கையால் ஊட்டும் உணவை ரசித்து உண்டான் தரணி.


“போதும்…”


“கொஞ்சம் ரசம் ஊத்தி எடுத்துட்டு வரேன்…”


“ம்ஹூம்… வயிறு நிறைஞ்சிடுச்சு…”


“அதெல்லாம் பத்தாது… உங்களுக்கு பிடிச்ச பூண்டு ரசம் வெச்சிருக்கேன்… கொஞ்சமா போட்டு எடுத்துட்டு வரேன்…” சொன்னபடியே எழுந்து நகர முயன்றவளின் கரத்தை அழுத்தமாய் பற்றி நிறுத்தி இருந்தான் தரணி.


“போதும்டி…” உரிமையுடன் கூறி அவளை பார்த்து புன்னகைத்தவன் அவளை சட்டென இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.


“எ..என்ன ப..பண்றீங்க…?” நெளிந்தாள்.


அவள் கையில் இருந்த காலியான உணவுத் தட்டினை வாங்கி அருகில் உள்ள டீப்பாயில் வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரால் தானே அவள் கையை கழுவி அவள் இடுப்போடு பிடித்து தன்புறம் திருப்பி அமர்த்திக் கொண்டான்.


“ரொம்ப பயந்துட்டியாடி பொண்டாட்டி…” காதல் வழியும் கண்களுடன் அவள் முகத்தை கையில் ஏந்தியபடி கேட்க ஆம் என்று தலையசைத்தவளின் கண்கள் மீண்டும் கலங்கின.


தனக்காக ஒருத்தி… தன்மேல் கொண்ட அன்பால் காதலால் கண்ணீர் விடுவது இதயம் முழுக்க பூமழையை கொட்டி தீர்த்தது போல்… கர்வமாய் காதலாய் அவள் கண்களில் மென்மையாய் முத்தமிட்டு நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான். முத்தமிட்ட குறுகுறுப்பு அவன் இதழில்… முத்தம் பெற்ற சிலிர்ப்பு அவள் உடலில்… உடைந்து வெளிவந்த காதலில் உள்ளம் உருகி லயித்து அமர்ந்திருந்தனர் இருவரும்.


Leave a comment


Comments


Related Post