இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--4 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 17-04-2024

Total Views: 34095

இதயம் 4

     வெளியில் செல்லும் போது கிளம்பத் தாமதமானால் தனியே வரக் கூடாது என்று ஜீவன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருந்ததால், அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தான் இருக்கும் இடத்தை அவனுக்குத் தெரியப்படுத்தினாள் மினி.


     என்ன தான் அனைத்தும் அவள் விருப்பம் என்று சொன்னாலும் சில விஷயங்களில் அவளுக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது ஜீவன், வதனி தம்பதியரால்.


     அது அடக்குமுறை, அவள் சுதந்திரத்தில் தலையிடுவது என்று நினைத்தால் தவறாகத் தெரியும். மாறாக அவள் பாதுகாப்பைக் குறித்த பயம் என்று நினைத்தால் சரியாகவே தெரியும். மினிக்கு ஜீவனின் அக்கறையும் சந்தோஷத்தையே கொடுத்தது.


     ஒருவரின் செயல்களை வைத்து அவர்களைக் கணிக்கும் மனிதர்கள் மத்தியில், அவர்களின் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை ஆராயும் அளவு திறமை கொண்டவள் மினி. கடின வார்த்தைகளுக்குப் பின்னால் அன்பும், அக்கறையும் இருக்குமானால் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்பவள் தான் அவள். அவள் வளர்ந்த விதம் தான் அவளுக்கு இதையெல்லாம் கற்றுக்கொடுத்திருந்தது.


     தன் செல்போனில் வந்து குதித்த மினி தற்போது இருக்கும் வீட்டு விலாசத்தைப் பார்த்து பலமாக அதிர்ந்தான் ஜீவன். இதயத்தோடு சேர்த்து மனமும் நடுங்கியது. பதற்றத்தை மறைத்துக்கொண்டு, விரைவில் வந்து சேர்வதாகச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியவனுக்கு, மரத்த புலன்கள் செயல்படத் துவங்க சற்று நேரம் பிடித்தது.


     “நீ செய்த துரோகத்துக்கு உனக்கு நான் கொடுத்த தண்டனை ரொம்ப அதிகம் தான் இல்ல மிஸ்டர் ஜீவன். ஆனாப் பாரேன், இப்படி ஒரு தண்டனைக்கு உன்னைத் தவிர வேறு யாரு தகுதியானவனா இருந்திட முடியும்.


     இதோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம், தப்பித்தவறிக் கூட இதுக்கு மேல் என்னைக்கும் என் கண்ணில் பட்டுடாதே. மீறிப் பட்டா இதை விட மோசமான தண்டனையைக் கொடுத்திடப் போறேன் டா துரோகி“ காதிற்குள் கேட்ட குரலை சமாளிக்க முடியவில்லை ஜீவனால். சில நிமிடங்கள் கழித்து தன்னைத் தானே சமாளித்துக்கொண்டு தேன்மொழியின் வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்தினான்.


     கரங்கள் நடுங்கியது சமாளித்தான். வியர்த்து வடிந்தது துடைத்துக் கொண்டான். உடல் தூக்கிப் போட தண்ணீர் குடித்து அதைச் சரி செய்தான். மன உணர்வுகளுடன் போராடி ஜெயித்து அரைமணி நேரத்தில் தேன்மொழியின் வீட்டிற்கு வந்து மினியையும் தன் காரில் ஏற்றி இருந்தான்.


     செல்லும் வழியில் மினியின் கண்கள் தானாக செஸ் வீட்டை நோக்கிச் செல்ல, மினி என்று சற்றே சத்தமாக அழைத்து அவள் கவனத்தைத் தன் பக்கம் இழுத்தவன், இதுவரை செய்யாத ஒரு செயலைச் செய்தான்.


     “நீ இந்த ஏரியாவுக்கு வந்ததை உன் அக்காகிட்ட சொல்லாதே மினி. அதோட கூடுமான வரை இங்கே வருவதைக் குறைச்சுக்கோ“ தன் தடுமாற்றத்தை அவள் கவனித்து விடக்கூடாதே என்பதற்காக முடிந்தவரை போராடிப் பார்த்தான் தான். ஆனால் மினிக்கு அவனிடம் தென்பட்ட வித்தியாசம் நன்றாகவே புலப்பட்டது.


     “ஏன் அத்தான் அப்படி“ இத்தனை நாள் வழக்கத்தில் தயக்கமில்லாமல் கேட்டாள். “சொன்னா சரின்னு கேட்கணும் மினி. கேள்வி மேல் கேள்வி கேட்டு சாவடிக்காதே“ சற்றே குரலுயர்த்த மினி தன்னால் அமைதியானாள்.


     வீட்டிற்கு வந்து இறங்கியதும், “ஒருத்தர் மேல் உள்ள கோபத்தை இன்னொருத்தர் மேல் காட்டுவது சகித்துக்கொள்ளக் கூடியது இல்லன்னு நீங்க தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தீங்க. இப்ப நீங்களே அதைப் பண்றீங்க. இப்ப நான் என்ன பண்றது, நம்ம அத்தான் தானே என்று பொறுத்துப் போவதா இல்லை எதிர்த்து நின்று சண்டை போடுவதா?“ நேரடியாகவே கேட்டாள்.


     “என் தப்பு தான் மினி. நான் அப்படி சொல்லி இருக்கக்கூடாது தான், மன்னிச்சிடு“ என்றுவிட்டு அவள் முகம் கூட பார்க்காமல் விறுவிறுவென அங்கிருந்து சென்றான் ஜீவன்.


     அவனுடைய வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளைப் பார்த்த பின்னர் கூட தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த வதனியின் செயலில் சிறிதும் மாற்றம் என்பது இல்லாமல் இருக்க, “அத்தான் ஏதோ மனக்கஷ்டத்தில் இருக்கார் போலக்கா. நீ கொஞ்சம் அவரை என்னன்னு பாரு“ எடுத்துக்கொடுத்தாள் மினி.


     “அவருக்கு என்கிட்ட சொல்லத் தோணும் போது அவரா வந்து சொல்வார் மினி“ நடந்தது ஒன்றும் பெரிய விஷயமே இல்லையே என்பது போல் நடந்து கொண்ட தமக்கையை வித்தியாசமாகப் பார்த்தாள் மினி.


     வழக்கம் போல் தங்கையின் முகத்தை வைத்தே அவள் கேள்விகளைப் புரிந்து கொண்ட தமக்கை அவளை அழைத்து தன் அருகே அமர வைத்து, “கோபம், எரிச்சல், விரக்தி எல்லா மனிதர்களுக்கும் வரக்கூடிய ஒன்று தான். அப்படியான நேரத்தில் அவங்களுக்கான இடைவெளியைக் கொடுக்காமல் பாசத்தைக் காட்டுறேன், அவங்களுக்குச் சமாதானம் சொல்றேன் என்று நாம பக்கத்தில் போனால், அவங்களுக்குள் இருக்கும் அந்த நெகட்டிவ் உணர்வுகள் எல்லாம் நம்ம மேல் தான் பாயும். அதனால் மனக்கஷ்டம் உருவாகி, உறவுகளுக்குள் பிரச்சனை உண்டாகும். கஷ்டம் வரும் என்று தெரிந்தும் எதுக்காக ஒரு விஷயத்தைச் செய்யணும் சொல்லு.


     கொஞ்ச நேரம் போனதும் அவரே சரியாகிடுவார். ஒருவேளை பிரச்சனை பெரிதா இருந்து, தனி ஒரு ஆளா அவரால் எதையும் சரி பண்ண முடியாதுன்னு தோன்றினால் அவரே என்னைத் தேடி வந்து, இதுதான் விஷயம் என்று சொல்லுவார்.


     அப்படி அவரா என்கிட்ட வரும் நேரம், இப்ப அவருக்குள் இருக்கும் தேவையில்லாத உணர்வுகள் எல்லாம் வடிஞ்சு போய் இருக்கும். கொஞ்ச நேரம் தள்ளி இருப்பதால் பிரச்சனையைத் தடுக்கலாம் என்றால் தப்பில்லையே“ என்றுவிட்டு ஜீவனுக்காக டீ தயாரிக்கச் சென்றாள் வதனி.


     இந்த முறை வதனியின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை மின்மினியால். காயம் பட்ட நேரத்தை விடுத்து, முழுதாக ஆறிப்போன பிறகு மருந்து போடுவதில் என்ன பிரயோஜனம்.


     கவலையில் இருக்கும் போது, இந்த துயரமான காலத்தில் நீ தனியாக இல்லை, நான் உன்னுடன் உன் அருகில் இருக்கிறேன் என்று அருகே போய் நிற்காத உறவு வேறு எதற்கும் அருகே வந்து நிற்பதில் என்ன பயன் என்று தோன்றினாலும் இதில் தன்னால் ஆகக் கூடிய செயல் என்று எதுவும் இல்லாததால் அமைதியாகத் தன் அறை சென்றுவிட்டாள்.


     அதே சமயத்தில் சதுரங்க இல்லத்தில், “சாணக்கியா சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா? நீ இப்ப இருக்கும் நிலைக்கு குறைந்தபட்சம் நான்கு மாசமாவது பெட் ரெஸ்ட் இருக்கணும். கை, கால் அதிகம் அசைக்கக் கூடாது. உன்னைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்க கண்டிப்பா யாராவது ஒருத்தர் வேணும். நானே தினமும் வந்து உன்னைப் பார்த்துக்க முடியாது. சொன்னாப் புரிஞ்சுக்கோ“ கிட்டத்தட்ட கெஞ்சினான் எழில்.


      “அதுக்காக லேடி நர்ஸ் தான் கிடைச்சாங்களா உனக்கு“ உச்ச தொணியில் கத்தினான் சாணக்கியன். இந்த சத்தத்திலே வெளியே காத்திருந்த பெண் துண்டைக் காணும் துணியைக் காணும் என்று சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து சென்றிருந்தாள்.


     தன் மகனின் வீட்டில் இருந்து பேயைப் பார்த்தது பதறிக்கொண்டு ஓடிவரும் பெண்ணைப் பார்த்து புருவம் சுருக்கியவாறு அறைக்குள் வந்தார் அரசன்.


     “இன்னும் எத்தனை நாளுக்குத் தான் பார்க்கும் எல்லாப் பொண்ணுங்க மேலும் இப்படி வன்மத்தைக் கொட்டிக்கிட்டு இருக்கப் போற. நர்ஸ் எல்லாம் இன்னொரு அம்மா மாதிரி. அவங்களைத் தப்பா நினைக்காதே. மறந்து போச்சா என்ன, உன் நிலா கூட ஒரு நர்ஸ் தான்“ சரியான நேரத்தில் சரியானவளை நினைவு படுத்தி சாணக்கியனின் கோபத்தைக் குறைக்கப் பார்த்தான் எழில்.


     நிலா என்ற பெயரைக் கேட்டதும் சாணக்கியனின் கண்கள் தானாக அவனுக்கு வலப்பக்கம் திரும்பிப் பார்க்க அங்கே அழகே உருவமாக நிழற்படமாக வீற்றிருந்தாள் நிலா.


     நிலாவில்கூட மேடு பள்ளத்தோடு கூடிய களங்கம் இருக்கலாம். ஆனால் பெயருக்குக் கூட மாசு மரு இல்லாத தேவதைப் பெண் அவள். சாணக்கியனின் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் என்று அவளைச் சொல்லலாம்.


     சிலர் செய்த சதியின் விளைவால் அவள் அவளுடைய சாணக்கியனை விட்டு நிரந்தரமாக நீங்கிப்போனாள். அந்த நினைவும் அதற்குக் காரணமானவர்களின் முகமும் நினைவு வர, வெடிக்கும் எரிமலை போல் பொங்கி வரும் கோபத்தை கண்கள் மூடி நிதானித்தான் இல்லை நிதானிக்க முயற்சித்தான் அந்த ஆண்மகன்.


     “எதுக்காக கஷ்டப்படுற எழில். அவன் காட்டுமரம், அவனைத் தோப்பாக்க நினைச்சா அதை விட முட்டாள்தனம் வேற எதுவும் இல்லை“ என்றபடி மகனின் அருகே வந்து அமர்ந்தார் அரசன்.


     “வந்துட்டாருப்பா உலகத்திலே இல்லாத தகப்பன். மகன் தப்பு பண்ணா எடுத்து சொல்லி திருத்தணும். அதைவிட்டுட்டு இப்படி ஆமாம் சாமி போடும் தகப்பனை இப்ப தான் முதன் முதலில் பார்க்கிறேன். அவன் இப்படி இருப்பதற்கு நீங்க தான் முக்கியக் காரணம்“ அரசனைக் கடிந்தான் எழில்.


     “இந்த ஜென்மத்தில் என் பையனோட வாழ்க்கை இப்படித்தான். அவனுக்கு நல்லது பண்றேன்னு அவன்கிட்ட இருக்கும் கொஞ்ச நிம்மதியை பறிச்சிடாதே டா கண்ணா. என் பையனை மறுபடியும் எல்லாம் இழந்த நிலையில் என்னால் பார்க்க முடியாது“ அரசனின் வார்த்தைகள் எழிலைப் பலமாகத் தாக்க அத்தோடு அமைதியானவன் தான் அதற்குப் பிறகு சாப்பிடக் கூட வாய் திறக்கவில்லை.


     “அப்பா நர்ஸ் எல்லாம் வேண்டாம். உடம்பு சரியாகும் வரை நீங்க என்கூட இருங்க“ என்ற மகனின் வேண்டுதலை தலையாட்டி ஏற்றுக்கொண்டார் மனிதர்.


     மாத்திரையின் உதவியால் அவன் நன்றாக உறங்கியதும் எழிலைத் தனியே அழைத்து வந்த அரசன் மகனின் விபத்துக்கான காரணத்தைக் கேட்க, “என்ன பையனைப் பெத்து வைச்சிருக்கீங்க. வலிக்க வலிக்க இவனை அடிச்சவங்க எல்லோரும் நல்லா சந்தோஷமா இருக்கும் போது இவன் பைத்தியக்காரன் மாதிரி கடந்த காலத்திலே கிடந்து கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான்.


     அந்த ஜீவனை அவன் குடும்பத்தோட வழியில் எங்கேயோ பார்த்து இருக்கான் போல. அந்தக் கோபத்தை வண்டியோட வேகத்தில் காட்டி இருக்கான்.


     நாம மனுஷங்க, அவன் நிலைமை புரிஞ்சு அனுசரிச்சுப் போவோம். ஆனா அது மிஷின் தானே, அது நம்மைப் புரிஞ்சுக்காது நாம தான் அதைப் புரிஞ்சுக்கணும். இவன் புரிஞ்சுக்காம போனதின் பலன் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டோட காம்பவுண்ட் சுவர் மேல் மோதிடுச்சு.


     நல்லவேளை இவனோட இந்தப் பைத்தியக்காரத்தனத் தனத்தால் யாருக்கும் எந்த ஆபத்தும் வரல“ எனப் பெருமூச்சு விட்டான் எழில். அதைக் கேட்ட தந்தைக்குத் தன்னால் வந்தது பெருமூச்சு.


     “தினமும் தான் விடியல் வருது. ஆனால் இவன் வாழ்க்கைக்கு ஒரு விடியல் வரவே வராது போல“ ஒற்றைப் புலம்பலில் தன் துக்கத்தை இறக்கி வைத்துவிட்டு நகர்ந்தார் அவர்.


     அன்று இரவு முழுக்க ஜீவனுக்கு உறக்கம் வரவில்லை. சாணக்கியன் இருந்த வீட்டைப் பார்த்ததற்கே பழைய நினைவுகளில் அத்தனை தூரம் வருந்தியவனை, சற்று நேரத்துக்கு முன்னால் கிடைத்த விபத்து செய்தி இன்னமும் தான் வேதனைக்கு உள்ளாக்கியது.


     எப்படியான நண்பர்கள் தாங்கள் இருவரும், இன்று ஆகச்சிறந்த எதிரிகளாக உருமாறி நிற்பதை என்னவென்று சொல்வது என்று விதியை நொந்தபடி உருண்டு கொண்டிருந்தான். இரட்டைக் குழந்தைகளில் பாரி அவனுடன் இருக்க, சபரி மினியுடன் படுத்திருந்தான். மகிழ்வதனி தாய் வதனியோடு இன்னொரு அறையில் இருந்தாள்.


     உறங்கும் குழந்தையின் முகத்தை ஆசையோடு வருடிய ஜீவனின் கரங்கள் அதன் முகத்தை நெருங்கிய வேளையில் அப்படியே நின்றன. “நீ வளர்ந்த பிறகு அப்பா செய்த பாவத்தைப் பத்தி உனக்குக் கட்டாயம் சொல்லுவேன். அப்ப நீ இந்த அப்பாவை வெறுத்திடக்கூடாது டா கண்ணா“ மானசீகமாக பேசியவன் உறங்கும் குழந்தை என்றும் பாராமல் அவனைத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.


     அடுத்த அறையில் வதனியும் உறங்காமல் தான் இருந்தாள். அவள் மனம் அமைதியைத் தேடி பேயாய் அலையும் நேரம் மட்டும் தனியே வந்துவிடுவாள். ஜீவனும் அவளுக்கான இடைவெளியைக் கொடுத்து ஒதுங்கிவிடுவான்.


     விடியும் நாள் வதனியின் தோழி நிலாவின் பிறந்தநாள். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னால் இதே நாள் நடந்த ஒரு பெரிய பிரச்சனையில் மனதளவில் அவளைக் கொன்று போட்டு திரும்பிக் கூடப் பாராமல் வந்த அன்று தான் அவளைக் கடைசியாகப் பார்த்தது.


     மனம் நொந்து போன நிலா தன் உயிரானவனை தனியாக விட்டுச் சென்ற இறுதி முடிவைப் பற்றிக் கேள்விப்பட்ட தினத்தில் இருந்து இன்றுவரை அவளை எண்ணி இரத்தக்கண்ணீர் வடிப்பதை சற்றும் நிறுத்தவில்லை வதனியின் இதயம்.


     வருடங்கள் கடந்த பின்னும் நிலாவையோ இல்லை அவளின்  பிறந்தநாளையோ வதனி என்றுமே மறந்தது இல்லை. சாகும் வரை அவளால் மறக்கவும் முடியாது. இப்போதைய நேரத்திற்கு நிலா இல்லாமல் சாணக்கியன் படும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் தானும் ஒரு காரணம் என்று புரிந்தாலும், அவனுக்காக வருத்தப்பட முடியவில்லை அவளால். தான் செய்த எதுவும் தவறில்லை, சூழ்நிலையின் காரணமாக நடந்தது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.


     இரவு பன்னிரண்டு மணி, அசைத்தாலே உயிர் போகும் அளவு வலி கொடுத்த காலை நிலத்தில் ஊன்றி மெதுவாக நிலாவின் புகைப்படம் அருகே வந்தான் சாணக்கியன்.


     “என்னோட இந்த முடிவுக்கு முழுக்க முழுக்க நீயும், உன்னோட நடத்தையும் மட்டும் தான் காரணம். உன்னோட நிழல் கூட என்மேல் படக்கூடாது என்பதற்காகத் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்“ என்ற நிலாவின் கடைசி வார்த்தைகள் அவன் காதிற்குள் சங்கில் கேட்கும் கடல் ஓதங்களைப் போல் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது.


     “நீ இப்படிச் செய்திருக்க கூடாது நிலா. என் மேல் உனக்குத் துளி அன்பு இருந்திருந்தால் கூட என்னை நம்பி இருப்ப, அந்தக் கஷ்டமான காலத்தில் என் கூட இருந்திருப்ப. ஆனா நீ பண்ண காரியம், நான் அனுபவிச்ச துரோகத்தை விட உன்னோட முடிவு தான் என்னை அனுதினமும் நரகக்குழிக்குள் தள்ளுது. என்னை நினைச்சா எனக்கே பாவமா இருக்கு நிலா.


     சுயபச்சாதாபம் என்னைக் கொல்லாம கொன்னுக்கிட்டு இருக்கு. இப்படியான தண்டனையை என்னைத் தனியா அனுபவிக்க விட்டதுக்குப் பதில் என்னைக் கொன்னுட்டு போய் இருக்கலாம் நீ“ புகைப்படத்தைக் கட்டிக்கொண்டு அழுதவன் கால் வலிதாங்க முடியாமல் அப்படியே அங்கேயே மயங்கி விழுந்தான்.  




Leave a comment


Comments


Related Post