இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 17-04-2024

Total Views: 23407

பாவை -12

நாட்கள் கடக்க டிசைனிங் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரியும் ரேஷ்மியை தன் தோழியாக்கிக் கொண்டாள் அஞ்சனா. இப்போது புதிதாக இஸ்கூட்டி ஒன்றை வாங்கியிருக்க தினமும் அதில் தான் வரப் போகவென்று இருந்தாள்.

அன்றொரு நாள் ஓய்வு நேரத்தில் ரேஷ்மியின் இருக்கைக்கு வந்தவளோ, “ஹாய் “ என்க,

“ஹாய் அஞ்சனா ? என்ன இந்த பக்கம் ?”

“சும்மா தான். இந்த வீக்கென்ட் எங்கையாவது போகலாமா ? டூ டேஸ் தொடர்ந்து லீவ் வருதுல” 

“சாரிப்பா. நான் என்னோட லவ்வர் கூட வெளியே போகலாம் பிளான் பண்ணிருக்கேன் “

“அப்படியா இட்ஸ் ஓகே நோ பிராபளம் “ என்றவள் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டுச் சென்றாள்.

‘ச்சே ! அப்படியே எங்கையாவது வெளியே கூட்டிட்டு போய் பேச்சு கொடுக்கலாம்ன்னு பார்த்தா, போச்சே ?’ புலம்பிக் கொண்டு தன் இருக்கைக்கு வந்தாள்.

சிறிது நேரம் செல்ல அவளின் அருகில் வந்த கைலாஷ், “அஞ்சனா, உன்னை சார் கூப்பிடுறாரு. புது பிராஜெட்க்கான கோடிங் பைல் எடுத்திட்டு வரச் சொன்னாரு “ என்கவே,

“ஓகே சார் “ என்றவள் அதனை எடுத்துக் கொண்டு அவரின் அறை நோக்கிச் சென்றாள்.

அனுமதி வாங்கி உள்ளே நுழைய, “வாங்க ! அஞ்சனா ? உட்காருங்க “ என்க,

‘இவர் என்ன என் பேரை கூட நியாபகம் வச்சிருக்காரு’ நினைத்துக் கொண்டு கையில் இருந்த கோப்பினைக் கொடுக்க, வாங்கிப் பார்த்தார்.

“பரவாயில்லை. எக்ஸ்பிரியன்ஸ் ஆளுங்க வேலை பார்த்தா எப்படி இருக்குமோ அதே மாதிரி இருக்கு உங்களோட பிரெசன்டேஷன் “ 

“தேங்க் யூ சார் “

“எல்லார் கூடவும் நல்லா பிரெண்லியா பழகுறதா கேள்விப்பட்டேன். நல்ல விசியம். அதே மாதிரியே என் கூடவும் நீங்க இருக்கலாம் “ என்க, ஒரு நொடி சந்தேகமாய்க் கண்டாள்.

“சார். அது என்னால முடியாது. நீங்க என்னோட பாஸ். மத்தவங்க நானும் ஒன்னா வொர்க் பண்ணுறோம். அதுனால என்னால ஈஸியா பழக முடியுது “

“நானும் இங்கே வேலை தான் பார்க்குறேன். நீங்க அப்படி நினைச்சிக்கலாம்ல “ என்க, அவன் ஏதோ முடிவோடு தான் இருக்கிறான் என்பது புரியவே, சரியென்றாள்.

“ஹாஸ்டல்ல தங்கியிருக்கீங்க தானே ?”

“ஆமா சார் “

“மேலிடத்துல சொல்லி பிளாட் எதுவும் அரேஞ்ச் பண்ணட்டா “

“நோ சார். அதெல்லாம் வேண்டாம். இருக்குற இடமே எனக்கு நல்லாதான் இருக்கு “ என்க,

“ஓகே. நைட் சிப்ட் உங்களுக்கு கொடுத்தா வேலைப் பார்க்க முடியுமா ?”

“கண்டிப்பா சார். இதுனால என்ன ? என்னால முடியும் “ 

“ஏகப்பட்ட பேர் எங்களுக்கு மட்டும் நைட் சிப்ட் தரேங்கன்னு கம்பிளைண்ட் பண்ணுறாங்க அதுனால தான் “ 

“சரிங்க சார். நான் போகலாமா ?”

“போகலாம், இது எல்லாமே சரியா தான் இருக்கு. டைப் பண்ணிருங்க “ என்க, வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். தன் இருப்பிடம் நோக்கி யோசனையோடு நடந்தாள்.

‘இவரோட பேச்சு, நடவடிக்கை, பார்க்குற பார்வை எதுவுமே சரியில்லையே ? இதோட ரெண்டு மூனு தடவை பேசிருக்கேன். அப்பவும் இப்படி தான் பேசுறாரே ? என்னவா இருக்கும் ? நைட் சிப்ட்டா. அக்காவுக்கும் இப்படி தானே சொன்னாங்க. ஒரு வேலை ராத்திரி நேரம் வேலைப் பார்க்கும் போது கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கலாம்ல’ நினைத்துக் கொண்டே நடந்து வர, வழக்கம் போல் முன்னே வந்த நந்தனின் மீது மோதினாள்.

சரியாக அவனின் நெஞ்சிலே அஞ்சனாவின் முகம் பதிந்து சட்டென மீண்டு பின் வாங்கியது.

“ஹே, பார்த்து வர “ கத்திக் கொண்டிருந்தவனின் அதரங்கள் அப்படியே நிமிர்ந்த அஞ்சனாவைப் பார்த்து நின்றது.

“நீ தானா ?” கேசுவலாக கூற, முதல் முறை அப்போது தான் அந்த அலுவலகத்தில் அவன் ஒருவன் இருக்கிறான் என்பதையேக் கண்டாள்.

‘ஏதோ தன்னை தெரிந்தவன் போல் நீ தானா என்கிறானா ?’ நினைக்க,

“ஹாய், அஞ்சனா ?” நந்தனின் அருகில் இருந்த அவனின் நண்பன் கேசவன் கூறி அவளின் நினைவினை கலைத்தான்.

‘தன் நண்பனுக்கு இவளை முன்னவே தெரியுமா ?’ அதிர்ச்சியில் நந்தன் காண,

“ஹாய் கேசவ். என்ன இந்த வழியா வரீங்க ?” சாதாரணமாக கேட்டாள்.

“கேண்டீன் போறோம் “ என்றவனோ தன் நண்பனைக் காண, நந்தனின் பார்வையோ இவர்கள் இருவரையும் தான் கண்டது.

“இவன் என்னோட பிரெண்ட் நந்தன். நந்தா இவ நெட்வொர்க் டீம் அஞ்சனா “ என்று இருவரையும் அறிமுகப்படுத்த, புன்னகைத்துக் கொண்டனர்.

“சாரிங்க ஏதோ யோசனையில இடிச்சிட்டேன் “

“எப்பவுமே நீங்க அதை தானே பண்ணுறீங்க ?” என்கவே, குழப்பமோடுக் கண்டாள்.

“எனிவே இதே மாதிரி மத்தவங்க மேல இடிக்காம இருந்தா சரி. இனி நேரா முன்னே தரையைப் பார்த்து நடங்க. எதையும் யோசிக்காம ?” என்றவனோ அவளைத் தாண்டிச் செல்ல, கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள் அஞ்சனா.

“சாரி அஞ்சனா. அவன் எப்பவுமே அப்படி தான். அவனுக்கு பொண்ணுங்களை சுத்தமா பிடிக்காது “

“கொரில்லா குரங்கு மாதிரி இருக்காரு. ஏதோ தெரியாம இடிச்சதுக்கு இப்படியா பிஹேவ் பண்ணுறது. இப்படி இறுக்கமா இருக்குறவங்க கூட இருந்தா நீங்களும் அப்படி தான் ஆகணும் “

“அது என்னவோ உண்மை தான் அஞ்சனா “ என்று சலிப்போடு அவனும் கூற, இளநகை சிந்தினாள்.

நடந்துச் சென்ற நந்தன் திரும்ப, “சரி அப்பறம் பார்க்கலாம். கத்த ஆரம்பிடிச்சிருவான் “ என்றவாறு கையசைத்துக் கொண்டு தோழனின் அருகில் வந்தான்.

“உனக்கு எப்படிடா இவளை தெரியும் ? பார்த்தாலே பைத்தியக்காரி மாதிரி இருக்கா “ என்க,

“இல்லையே ? செம்ம பிகரா தானே இருக்கா. இங்கையே ஏகப்பட்ட பேர் அவளை சைட் அடிக்கிறாங்க. ஏன் அதுல நானும் தான் ஒருத்தன் “ என்றதும், திரும்பி நண்பனைக் கண்டு அக்னிப்பார்வை வீசினான். 

“வெட்கமாயில்லை “

“இதுல என்னடா வெட்கம். பார்க்குறதுக்கு தானே இவளுக எல்லாம் இருக்காங்க “ 

“அதுக்காக. பிரெண்ட்டுன்னு சொல்லிட்டு சைட் அடிச்சிக்கிட்டு சுத்துவையா “ என்றவாறு இருவருக்கும் சேர்ந்து இரண்டு காபியை வாங்கினர்.

“நான் எங்கடா அவளை பிரெண்டடுன்னு சொன்னேன். இப்போ கூட உன் கிட்ட அப்படி சொன்னதா நியாபகம் இல்லையே ?” என்க, அதன் பின் தான் யோசித்துப் பார்த்தான்.

“எப்படியோடா. நீ பண்ணுறது தப்பு அவ்வளோ தான் சொல்லிட்டேன் “

“தப்பா ? என்னடா சொல்லுறா ? நான் என்னை உன் லவ்வரையா காதலிச்சேன். ப்ரீயா யாருமே பட்டா போடாத பொண்ணு தானேடா “ என்க,

“சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டையா ? உன்னால அவளுக்கு எதுவும் பிரச்சனை வந்திராம ?”

“உனக்கு ஏன் இந்த அக்கறை ? ஒரு வேலை நீயும் ரூட் விடுறையா என்ன ?” என்கவே, நிமிர்ந்துப் பார்த்து புருவங்கள் மேலே எழ முறைத்தான்.

“உன்னை பத்தி தெரிஞ்சும் இப்படி கேட்டது தப்பு தான். அதுக்காக இப்படி முறைச்சே எரிச்சிராதே ? டேய், இந்த வாழ்க்கை திரும்ப கிடைக்காதுடா. என்ஜாய் பண்ணு மச்சான். சும்மா பொண்ணுங்களைப் பார்த்தாலே விலகிப் போய் அனுமான் பக்தன் மாதிரி இருக்காதே “

“எனக்கு அட்வைஸ் பண்ணுறியா ? நீ என்ன சொன்னாலும் நான் கேட்கப் போறதில்லை. சேர்த்து பில் பே பண்ணிட்டு வா “ என்றவனோ எழுந்துச் சென்றான்.

‘ராமா ! ராமா ! அஞ்சனா சொன்னது சரி தான். இவனைப் போய் நட்பாக்குனேன் பாரு எல்லாம் என்னை சொல்லணும்’ புலம்பிக் கொண்டே பணத்தினை கட்டிவிட்டு அங்கிருந்துச் சென்றான்.

தன் இருப்பிடம் நோக்கி வந்துக் கொண்டிருந்த நந்தனின் நினைப்பு முழுவதும் நண்பன் கூறியதில் தான் இருந்தது. அவனையும் அறியாது பார்வையோ முதல் முறையாக நெட்வொர்க் துறை நோக்கிச் சென்றது.

அங்கே அவளோ கணிப்பொறியில் மட்டுமே கண்ணாக இருந்து அதிதீவிரமாக வேலைப் பார்க்கவே, மெல்லிய விரல்கள் காதோரம் முடியை கோதிக் கொண்டதைக் கண்டான்.

சட்டென தலையை சிலுப்பிக் கொண்டவனோ, ‘ அடேய், நீ என்னடா பண்ணுறே ? அன்னைக்கு என்னடானா அவ பேசுறதை கேட்க மெல்ல நடந்து வந்தே ? தெரிஞ்சோ தெரியாமலோ எப்படியோ ஆனா வந்து உன் மேலையே இடிச்சிருக்கா. நீ என்னடானா சாதாரணமா எடுத்துக்கிட்டே. சரியில்லைடா நந்தா சரியில்லை ‘ தனக்குத் தானே கூறிக் கொண்டு இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அதன் பின் நாட்கள் செல்ல அவளோ நந்தன் என்ற ஒருவனை நினைவிலே வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதற்கு மாறாய் நந்தனின் விழிகள் காரணமின்றி மற்றவர்கள் அறியாது அஞ்சனாவைச் சுற்றி வந்தது.

தான் பார்க்கும் நேரங்களில் பல நேரங்கள் யாராவது ஒருவன் அவளிடம் பேச, கன்னியமாக நடந்துக் கொள்ளும் அவளின் செயலைக் கண்டான்.

‘இந்த காலத்துல இப்படியொரு பிள்ளையா ?’ என்பார்களே அப்படி தான் அஞ்சனா நந்தனின் விழிகளுக்கு தென்பட்டாள். செயற்கை அழகே இல்லாது இயற்கை அழுகு மட்டுமே கொண்டவளாக இருந்தாள். அதை விட அனைவரிடமும் சிரித்து, கிண்டலடித்து சகஜமாக பேசினாலும் நெருக்கமில்லாது, தன் பக்கம் ஆண்களை இழுக்க வசீகரிப்பது இப்படி எதுவும் அவளிடம் இல்லை என்பதை அவன் பார்த்த சில நாட்களிலே கண்டுக் கொண்டான்.

அதனால் தான் என்னவோ அவளைச் சுற்றி அனைவரும் வருகிறார்கள் போல். அவளோ அதனை கருத்தில் கொள்ளாது எதை நோக்கியோ  பயணிப்பதுப் புரிந்தது.

“ஹாய் கைய்ஸ். நைட் சிப்ட் சில ஆட்களை சேர்த்திருக்கோம். அல்ரெடி வேலை பார்த்தவங்க பகல் சிப்ட் மாறுனாங்க. யார் நேம் எல்லாம் இருக்குன்னு மெயில் வரும் செக் பண்ணிக்கோங்க “ என்று ஒலிபெருக்கியில் செய்தி வரவே, அனைவரும் அதை தான் பார்த்தனர்.

‘எப்படியும் தனக்கு வேலை மாறத் தான் போகிறது ‘ என்பதை முதலிலே அறிந்த அஞ்சனா அதனைப் பார்க்க, நினைத்தது போல் வந்திருந்தது.

ரேஷ்மியின் பெயர் அவளின் துறையில் வந்திருக்கிறதா என்று தேட அவள் நினைத்ததுப் போன்றே வந்திருக்கவே, இது எதிர்பாராத கடவுள் கொடுத்த உதவியாக நினைத்தாள்.

மறுநாளிருந்து ஒரு சிலர் இரவு நேர பணிக்கு வந்திருக்க, முதல் நாளே ரேஷ்மியோடு சேர்ந்துக் கொண்டாள் அஞ்சனா.

“ஹாய் ரேஷ்மி “

“ஹே, சொல்லவேயில்லை. உனக்கும் நைட் சிப்ட் தானா ?”

“ஆமா. ஒரு மாசத்துக்கு இனிமே இப்படி தான். அப்பறம் லவ் எல்லாம் எப்படிப் போகுது ?” காபி அருந்திக் கொண்டே இருவரும் பேச, 

“எனக்கு நைட் சிப்ட் வச்சாலே அவனுக்கு சுத்தமா பிடிக்காது “

“ஏன் ? அப்போ இதுக்கு முன்னாடி இப்படி வொர்க் பண்ணிருக்கையா ?”

“அடிக்கடி. இப்படி சிப்ட் மாறும். நைட் டைம் தான் அவன் கொஞ்சம் பிரீயா இருப்பான். அந்த நேரம் நான் இங்கே வேலையில இருந்தா எங்களால பேச முடியாது. இதுனால எங்களுக்கு அடிக்கடி பிரச்சனை வரும் “

“புரிஞ்சிக்க முயற்சி பண்ண வை “

“எங்க சொன்னா கேட்டா தானே ? நீ போய் உங்க சார் கிட்ட சொல்லி பகல்ல போட சொல்லுன்னு என் கிட்ட தான் சண்டை போடுவான். கிடைக்குற கொஞ்சம் நேரம் அவன் கிட்ட பேசிட்டு வரேன் “ என்கவே, விலகிக் கொண்டாள் அஞ்சனா.

புதிதாக வேலைக்கு வந்த இவளுக்கு எங்கே நைட் சிப்ட் இருக்க போகிறது என்ற நினைப்பில் இருந்த நந்தனுக்கு அன்றைய வேலை முடிந்து கிளம்பும் போது தான் அவளைக் கண்டான்.

‘இவளுக்கு என்ன நைட் சிப்ட் போட்டிருக்காங்க ‘ யோசனையோடு இஸ்கூட்டியை எடுப்பவளைக் காண, யாரோ தன்னைப் பார்ப்பது போல் உணர்ந்தாள்.

சட்டென திரும்பி சுற்றிக் காண, வேலை முடிந்து அவரவர் பைக்கை எடுத்துக் கொண்டிருக்க அதில் ஒருவனாய் நந்தனும் ஹெல்மட்டை போட்டுக் கொண்டு எடுத்தான்.

வீட்டுக்கு வந்த நந்தன் குளித்து முடித்து படுக்கப் போக, அவனின் கைபேசி ஓசை எழுப்பியது.

கேசவனிடமிருந்து அழைப்பு வரவே, “சொல்லுடா மச்சான். ஆபிஸ் போயாச்சா ?” எடுத்ததும் கேட்க, 

“வந்துட்டேன்டா. மச்சான் அஞ்சனாவைக் காணோம்டா “ என்க, சட்டென எழுந்த சிரிப்பை உள்ளுக்குள் அடக்கிக் கண்டான்.

இனி தான் இவனால் அவளைக் காண முடியாதே ? ஏனோ மனம் குளிர ஒரு வித இதமாய் உணர்வதை அறிந்தான்.

“அதுக்கு நான் என்ன பண்ண ? “

“நைட் சிப்ட் போட்டாங்க போல. ரெண்டு நாள்லா ஆளைக் காணோம். நைட் எதுவும் நீ பார்த்தையாடா ?” என்க,

“எனக்கு அதான் வேலைப் பாரு. ராத்திரி முழுக்க வேலை பார்த்து தூங்கப் போனா இப்படி போனை போட்டு உசுரை வாங்குற. வைடா முதல்ல “ கத்தவே,

“டேய், டேய் வச்சிராதே ! என் மச்சான் தானே நீ ?”

“ஏய் நான் உன் பிரெண்ட். ஏதோ உன் தங்கச்சியை கல்யாணம் பண்ண மாதிரி மச்சான்னு சொல்லுற “

“ஏதோ ஒன்னுடா. எனக்காக இன்னைக்கு அவ நைட் சிப்ட் வராலா பாருடா “

“என்ன உனக்கு அவ மேல அவ்வளோ அக்கறை ? சைட் அடிக்கிற சரி. அதுக்காக இப்படியாடா ? ஏதோ அவளோட பாதுகாப்பு நீ தான் முழு பொறுப்பு மாதிரிக் கேட்குற ?”

“சொன்னாலும் சொல்லாட்டியும் அவ மேல எனக்கு எப்பவும் ஒரு நல்ல எண்ணம் இருக்கு. அழகு இருக்குற இடத்துல ஆபத்து இருக்கும். அதுனால தான் கேட்டேன். உனக்கு தான் நம்ம சென்னையைப் பத்தி தெரியும்ல. அவ இவ்வளோ பெரிய சிட்டில தனியா இருக்காடா “

“என்ன சொல்லுற நீ ? அவளோட பேரெண்ட்ஸ் எங்கே ?”

“அவ ஒரு அனாதைடா. இப்போ கூட ஹாஸ்டல்ல தங்கியிருக்கா ? இதை தெரிஞ்சி அவளை மிஸ்பிகேவ் பண்ண பல பேர் சுத்துக்கிட்டு திரியுறாங்க “ என்க, கேட்டதுமே அந்த பலரின் மீது சினத்தைக் கக்கினான்.

அஞ்சனாவிற்கு யாருமில்லை என்பதைக் கேட்ட நந்தனால் அதனை ஜீரணிக்கவே முடியவில்லை.

“உண்மையாடா சொல்லுற ?”

“ஆமாடா. ஒரு தடவை அவளைப் பத்தி அவளோட பிரெண்ட் கிட்ட பேசும் போது கேட்டேன். இப்போ வேற ரெண்டு நாள்லா ஆபிஸ் வரலையா ? அதான் எதுவும் பிரச்சனை இருக்குமோன்னு. “

“அதெல்லாம் ஒன்னுமில்லை. நேத்து நைட் அவளை மாதிரி தான் ஒரு பொண்ணை பார்த்தேன் “

“கன்பார்ம் பண்ணிச் சொல்லுடா “ என்கவே, சரியெனக் கூறி கைபேசியை வைத்தான்.

அதன் பின் எங்கே நந்தனால் நிம்மதியாக தூங்க முடியும். இரவு அவளை மீண்டும் காணும் நேரத்திற்காக அப்போதே காத்திருக்க ஆரம்பித்தான். ஏனோ அவனின் மனம் அவளுக்கு துணையாக இரு என்றே கூற நித்திரையைத் தொலைத்தான்.

நந்தனின் மனதில் தோன்றும் இந்த எண்ணங்கள் எல்லாம் என்ன என்பதை அவனால் முழுதாக கண்டறிய முடியவில்லை.

தொடரும்...

தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Leave a comment


Comments


Related Post